கூகுளின் உயிரியல் அறிவியல் (Life Sciences) பிரிவான Verily, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கலிஃபோர்னியா & ஃப்ளோரிடா மாநிலங்களில் சுமார் 3.2 கோடி (32 மில்லியன்) வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்களை வெளியிட அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA)யிடம் அனுமதி கோரியுள்ளது. இந்தத் திட்டம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை 2026 ஜூன் மாத தொடக்கம் வரை பதிவு செய்யலாம் என்றும் போட்டிருந்தார்கள்.
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், ஜிகா, சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் , வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம்.
Aedes aegypti என்ற இனத்தைச் சேர்ந்த ஆண் கொசுக்களின் உடலில் உள்ள Wolbachia எனப்படும் இயற்கையாகக் காணப்படும் பாக்டீரியா பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிவதை தடுக்கும் ஆற்றல் கொண்டதால் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இதேபோன்ற சோதனைகள் ஏற்கனவே சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டு கொசுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவுகளைக் காட்டியுள்ளதாகவும் இது அமெரிக்காவில் இதுவரை முன்மொழியப்பட்ட மிகப்பெரிய கொசுக்கட்டுப்பாட்டு சோதனைகளில் ஒன்றாக அமைவதாகவும் கூகுள் கூறுகிறது.
வேடிக்கை என்னவென்றால் ஆண் கொசுக்கள் கடிக்காதாம். பெண் கொசுக்கள் தான் நம்மை அன்பாக விசாரிக்குதாம். என்ன கொடுமைடா மாதவா!
பேசாம மொக்க, மொக்க கொசுக்கள் இருக்குற கும்பகோணம், மதுரை பக்கத்துல இந்த ஆராய்ச்சியை பண்ண சொல்லணும் நம்ம சுந்தர் பிச்சையை.
அதுவும் மதுரையில ஆறு மணிக்கு கதவை சாத்தினா அது வேற வீட்டுக்குப் போயிடும்ங்கிற ஐதீகம்ல்லாம் இருக்கு. அதுவும் அப்படித்தான் வராம ராத்திரி தூங்கறப்ப காதுல வந்து 'கொய்ங்ங்ங்ங்ங்ங்ங்'னு கத்திட்டு ஊசி குத்தினா மாதிரி குத்திட்டு அந்த இடம் கொப்புளம் மாதிரி வீங்கி... இப்படி கைநிறைய வீர புண்களோட வண்டிய பிடிச்சு ஊருக்கு வந்து சேர்ந்தா போதும்னு...
மேல்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். வகுப்பிற்குத் திடீரென வேறு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த பெண்ணை அறிமுகப்படுத்தினார்கள். இடைவேளையின் போது அவள் பெயர், முன்பு படித்த பள்ளி, அவளுடைய மதிப்பெண்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம் உள்ளூர் தாதாவான நாங்கள். நமக்குப் போட்டியாக வர மாட்டாள் என்ற அற்ப சந்தோஷம். வகுப்பறையில் மாணவிகளின் உயரத்தை வைத்துதான் முதல், இரண்டாம் வரிசை என்று அமர வைப்பார்கள். அவளோ குட்டியாக இருந்தாள். அவள் உயரத்தில் இருந்த மாலதியுடன் அமர்ந்து கொண்டாள்.
இரண்டாம் நாள் "அவளும் சௌராஷ்டிரா பொண்ணு தான்" என்றாள் மாலதி. "அப்படியா? ஒரு இனிஷியல் தானே வச்சிருக்கா?"
வீட்டுக்குச் சென்றவுடன் அம்மாவிடம், "எப்படிம்மா சௌராஷ்ட்ரா பொண்ணு ஒரு இன்ஷியலோட இருக்க முடியும்?"
எங்கள் சமூகத்தில் அனைவரும் இனிஷியலில் குடும்பப் பெயரின் முதல் எழுத்தையும் அப்பாவின் முதல் எழுத்தையும் வைத்திருப்போம் என்று நினைத்திருந்தேன். இவள் மதுரைக்காரி இல்லையோ?
அடுத்த நாள் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே அவளிடம் "அது என்ன உனக்கு மட்டும் ஒரு இனிஷியல் தான் இருக்கு?"
"அது எங்க அப்பா பேரோட முதல் எழுத்து" என்றாள்.
"ஏன் வீட்டுப் பேர் வச்சுக்கல?"
"தெரியல."
"உங்க வீட்டுப் பேர் என்ன? வீடு எங்க இருக்கு?"
அவளும் கூற, அதை நானும் அப்படியே அம்மாவிடம் ஒப்பிக்க, "ஓ! விளக்குதூண்ல இருக்குற தொப்பே (வீட்டுப்பெயர்) ராமலிங்கு தா (ராமலிங்கம் அண்ணன்) பெடி(மகள்) யா?"
அவ்வளவு தான். அவள் வீட்டுப் பெயரைச் சொன்னவுடன் முழு ஜாதகமும் தெரிந்து விட்டது. எங்கள் சமூகத்தில் அப்படி, இப்படி என்று சுற்றி வளைத்துத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். பாட்டி வீட்டிற்குத் தெரிந்த குடும்பம். அவளின் அப்பாவிற்கு மாமாக்கள் வயது. அவளின் அம்மா, என் அம்மாவுடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர். தம்பி, என் தம்பிகளின் வயது. நண்பனும் கூட! எல்லாம் தெரிந்த பிறகு அவளுடன் பழகுவதில் சிரமம் இருக்கவில்லை.
வகுப்பில் கமல், ரஜினி ரசிகைகள் என இரண்டு கோஷ்டி. இவள் ரஜினி ரசிகை என்றவுடன் நாங்கள் கொஞ்சம் விலகிக்கொண்டோம். ஆனால் படத்தை கதையாகச் சொல்வதில் கில்லாடி.
முதல் தேர்வு முடிந்தது. ஒவ்வொரு ஆசிரியரும் தாள்களை நீட்ட எதிர்பார்த்த மதிப்பெண்கள் தான். அதனால் ஏமாற்றமில்லை. வேதியியல் பாடம் எடுத்த கமலா டீச்சர் தாளை நீட்டும் பொழுது வகுப்பு முடிந்தவுடன் வந்து பார் என்று சொல்லவும் தான் எங்கேயோ இடித்தது. அவரைப் பார்க்கச் சென்றால், "நேற்று வந்த பொண்ணு உன்னைய விட மார்க் கூட வாங்கியிருக்கா. வேற ஸ்கூல்ல இருந்து வந்த பொண்ணுட்ட இப்படி தோத்து போயிருக்க. அவ்வளவு தானா?"
சும்மாவே ஆடுவேன். இப்ப சலங்கைய வேற கட்டி விட்டுட்டாங்களா? அவ்வளவு தான். இனிமே தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்க போறன்னு மனசுல வரிஞ்சு கட்டிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் முதல் மூன்று ரேங்க்குக்குள் வர விடக்கூடாது. இன்னொன்று கெமிஸ்ட்ரி பாடத்தில் முதலாவதாக நான் மட்டுமே இருக்க வேண்டும். கங்கணம் கட்டிக் கொண்டு படித்தேன். எனக்கும் அவளுக்கும் கடுமையான போட்டி. அவளுக்கும் வேதியியல் பாடம் ரொம்ப இஷ்டம் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் கடைசி வரை முதலிடத்தை விட்டுக் கொடுக்கவேயில்லை. என்னுடைய நெருங்கிய வட்டத்திற்குள்ளும் அவள் வரவில்லை.
பின், வெவ்வேறு கல்லூரிகளுக்குச் சென்று விட்டோம். பாட்டி, பெரியம்மா வீடுகளுக்குச் செல்லும் பொழுது பார்த்து ஒரு ஹாய். எப்படி இருக்க? என்று குசலம் விசாரிப்பதோடு சரி.
காலங்கள் உருண்டோட, ஈஷ்வருடன் நிச்சயம் ஆனபிறகு, தன்னுடைய நண்பனும் மாமா மகனுமான குட்டி என்ற வெங்கடேஷை அறிமுகம் செய்து வைக்கப் போவதாக கூறினார். அவரும் அவருக்கு நிச்சயித்த பெண்ணை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க அழைத்து வந்தார். பார்றா! R.ஆஷா! எனக்கு நல்லா தெரியுமே! ஆம்! அது தான் அவளது பெயர்.
விதி மீண்டும் உறவாக எங்களை இணைத்தது. எங்களுடைய திருமணம் நடந்து முடிந்த இரு மாதங்களில் அவர்களுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் சென்னையில். நாங்கள் மதுரையில்.
ஒரு முறை சென்னைக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது தான் மாமா, மாமி, ஆஷா, குட்டி dha, அவருடைய அண்ணன், அண்ணி எல்லோரையும் சந்தித்தேன். மாமா நன்றாகப் பேசினார். மாமியாரின் மேல் பாசமாக இருந்திருப்பார் போல. பழைய நினைவுகள், நிறைய விஷயங்கள் என்று ஈஷ்வருடன் பேசினார். மாமி மிக கட்டுக்கோப்பான பழங்காலத்துப் பெண்மணி. ஈஷ்வருக்கு அம்மாவின் உடன்பிறந்தவரின் மனைவி உறவு மட்டுமல்ல அப்பா வழியில்உடன்பிறந்த அக்காவின் பெண் என்பதால் இரு பக்க உறவுகள். மிகவும் பாசமாக இருந்தார்.
நாங்கள் இருவரும் இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பில் இல்லாது தனித்திருந்ததால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆச்சர்யமாக இருந்தது! அங்கே மருமகள்கள் சமைக்க, பூஜைக்குப் பிறகு ஆண்கள் முதலில் சாப்பிட, பிறகு தான் பெண்கள் சாப்பிடவேண்டும். எனக்கும் ஈஷ்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மாமி சொன்னது தான் அங்கு சட்டம் என்று மட்டும் புரிந்தது.
அவர்களுக்கும் புரிந்திருக்காது. எப்ப பாரு லதா, இங்க வா. உட்காரு. சாப்பிடு என்று ஈஷ்வர் அழைக்கும்போது அங்கே நிலவிய மெளனத்தைப் புரிந்து கொண்டு நான் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.
"இங்க இப்படித்தான்" என்றாள் ஆஷா, மிகவும் செல்லமாக வளர்ந்த பெண்.
நிறைய பேசினோம் அன்று.
வருடங்கள் உருண்டோட,
ஒவ்வொருமுறை மதுரைக்குச் செல்லும் பொழுது மாமியைப் பார்த்துப் பேசி ஆசீர்வாதம் பெற்று வருவதுண்டு. 90 வயது என்று சொல்ல முடியாதபடி நன்றாகத்தான் இருந்தார், ஒரே நாளில் ஐந்து பேரை காலன் அழைத்துச் செல்லும் வரை. மதுரை அருகே அவர்கள் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகும் வரை. இறந்தவர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். ஒரே நேரத்தில் மூன்று குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து நிற்பது என்பது கொடுமை.
இன்று ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்து வழியனுப்பும் நாள் என்று ஊரிலிருந்து அழைத்தார்கள். எத்தனையெத்தனை கனவுகளுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது? அவ்வளவு தானா இந்த வாழ்க்கை? யோசிக்க, யோசிக்க துன்பமே மிஞ்சுகிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அந்த வேலன் தான் துணையாக இருக்க வேண்டும்.
பிப்ரவரி 10ஆந் தேதி வரை அமெரிக்காவில் நடைப்பயயணம் மேற்கொண்ட துறவிகளும் அவர்களுடைய செல்லப்பிராணி 'அலோகா'வும் சமூகவலைதளங்களில் மக்களுடைய சிறப்பான ஆதரவைப் பெற்றிருந்தனர். கடந்த சில வாரங்களாக ஒரு குட்டிக்குரங்கு வலம் வந்து கொண்டிருக்கிறது. என்னாச்சோ? ஏதோச்சா ? என்று மக்கள் விடிய, விடிய அதன் க்ஷேமத்தை எண்ணி பதிவுகள் போட, ஜப்பானில் இருந்து மக்களும் அக்குரங்கைப் பற்றின தகவல்களைத்தர, நமக்கு எப்படியோ பொழுது போய்விடுகிறது.
அதாகப்பட்டது, ஜப்பான் நாட்டின் சிபா மாகாணத்தில் உள்ள Ichikawa City Zoo and Botanical Garden விலங்குக் காட்சிச்சாலையில் சமீபத்தில் பிறந்த குட்டிக் குரங்கு தான் பாஞ்சி. ஜப்பானின் குளிர்ந்த மலைப்பகுதிகளில் வாழும் Japanese macaque இனத்தைச் சேர்ந்த பனிக்குரங்கு. ஆனால் பாஞ்சியின் வாழ்க்கை பிறந்த முதல் நொடியில் இருந்து சாதாரணமாக அமையவில்லை. பாஞ்சி பிறந்த சில நேரங்களிலேயே அவன் தாயால் கைவிடப்பட்டான். குரங்குகளின் உலகில் இது அரிதான சம்பவம். தாயின் மார்பில் ஒட்டிக்கொண்டு பாதுகாப்பு பெற வேண்டிய வயதில் பாஞ்சி தனிமையில் இருந்தான். பெரிய குரங்குகள் தாக்கவும் விலங்குக் காட்சிச்சாலையின் பராமரிப்பாளர்கள் அவனை உடனே காப்பாற்றினர். பாட்டிலில் பால் ஊட்டி, இரவும் பகலும் கவனித்துக் கொண்டனர். தனிமையில் வாடிய பாஞ்சி அடிக்கடி அழுதான். தாயின் உடல் வெப்பம் இல்லாத வெறுமையை உணர்ந்தான். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக பராமரிப்பாளர்கள் ஒரு மென்மையான சிறிய ஆரங்குட்டான் பொம்மையைக் கொடுத்தனர்.
அதை அவன் இறுக்கமாகத் தழுவிக் கொண்டான். அது வெறும் பொம்மை இல்லை. அவனுக்கு அது தாயின் மார்பு. பாதுகாப்பு. ஆறுதல்.எல்லாமே.
அவன் தூங்கும்போதும் அதையே பற்றிக் கொண்டிருந்தான். நடக்கும்போதும் அதை எடுத்துச் சென்றான். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும் உலகம் முழுவதும் மக்கள் மனம் உருகினர்.
ஒரு சிறு குரங்கு, ஒரு பொம்மையை தழுவி அமைதியைத் தேடும் காட்சி மனிதர்களின் இதயத்தை ஆழமாகத் தொட்டது. பாஞ்சியின் வீடியோக்கள் வைரலானபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவனைப் பார்க்க விலங்குக் காட்சிச்சாலைக்கு வந்தனர். பலர் அவனுக்காக வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள், ஊக்கச் செய்திகள் அனுப்பினர்.
மனிதர்களால் வளர்க்கப்பட்ட குட்டிகள், தங்கள் இனத்தவருடன் பழக சற்றுக் காலம் எடுத்துக்கொள்வது இயல்பு. பாஞ்சியும் அதைப் போலவே மெதுவாக மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கினான். முதலில் அவனை ஒரு பொருட்டாக குரங்குகள் கூட்டம் மதிக்கவில்லை. அவனைத் துன்புறுத்த, வேகமாக ஓடி வந்து பொம்மையிடம் தஞ்சம் புக, இப்படியே பல நாட்கள் சென்றது. இறுதியில் ஒரு குரங்கு அவனுக்குத் தாயாக அரவணைத்துக் கொள்ள எல்லாம் சுபம். மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட... இன்றும் அவனைப் பற்றின படச் செய்திகளுடன் தான் நாட்கள் நகர்கிறது.
அவன் மெதுவாக சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிக் கொண்டிருக்கிறான்.
அவன் ஒரு சாதாரண குரங்கு அல்ல. "பாசம் இன்றி எந்த உயிரும் முழுமையில்லை" என்ற உண்மையை உலகுக்குக் கூறும் ஓர் உயிர்.
பாஞ்சியின் கதை ஒரு விலங்கு சம்பவம் மட்டுமல்ல. அது மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குழந்தை பிறக்கும் போது அது தாயை முழுமையாக சார்ந்திருக்கும். தாயின் தொடுதல் பாதுகாப்பை உருவாக்கும். பாசமின்றி வளர்ச்சி முழுமையடையாது. தனிமை உயிரை சிதைக்கும். ஒரு சிறிய ஆறுதல் கூட வாழ்க்கையை தாங்கும் வலிமை தரும்.
அதனால் தான் பொம்மை கூட அவனுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தந்ததால் தான் யாரையும் தொடவிடாமல் தூக்கிக் கொண்டு அலைகிறான்.
மனிதர்களும் அப்படித்தானே?
நாம் அனைவரும் ஏதோ ஒன்றைத் தழுவி வாழ்கிறோம். அது நமக்கு "நீ தனியாக இல்லை" என்று உணர்த்துகிறது.
பாஞ்சி இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய பயணம் தொடர்கிறது. ஆனால் அவன் ஏற்கனவே உலகுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்துவிட்டான்:
உறவு இல்லாமல் உயிர் இல்லை. பாசம் இல்லாமல் பாதுகாப்பு இல்லை. தொடுதல் இல்லாமல் நம்பிக்கை இல்லை.
ஒரு சிறு குரங்கு , ஒரு மென்மையான பொம்மை , ஒரு உலகளாவிய உண்மை, கூத்தாடுகிறது இணையம்.
"Education is the key to the development of a society."
பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர கல்வி அவசியம். அவர் மனதில் 25 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணம் நனவாகி 'AIM for Seva' என்ற அமைப்பாக உருவெடுத்தது. மலைவாழ் மக்களின் குழந்தைகள் தினமும் நான்கு மைல்கள் நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய சூழலை அறிந்து அவர்களுக்கு உதவ, பள்ளிகளுக்கு அருகிலேயே 'சத்ராலயா' எனும் இலவச தங்கும் இடங்கள் கட்டப்பட்டது. கூடவே, ஆரோக்கிய உணவும், உடைகளும், பாதுகாப்பான சூழலும், மருத்துவ வசதிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.
2001ல் முதன்முதலாக மாணவர்களுக்கான தங்குமிடம் ஒன்று தமிழ்நாட்டில் அணைக்கட்டி மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்காக ஒன்று என்று விரைவில் வளர்ந்து தற்பொழுது 95 உறைவிடப் பள்ளிகள் 17 மாநிலங்களில் உருவாகியுள்ளது. 3000 கிராமங்களில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நான்கு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 2002ல் இருந்து AIM for Seva அறக்கட்டளை வாயிலாக ஒன்பது பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உருவாகியுள்ளது. கிண்டர்கார்ட்டன் முதல் இங்கு படிக்கும் 5000 மாணவர்களுக்கு அரசு பாடத்திட்டங்களுடன் வாழ்க்கையில் முன்னேறவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவும் வழிவகைகளும் கற்றுத்தரப்படுவது சிறப்பு.
நகர்ப்புற மாணவர்களைப் போலவே கிராமங்களில், தொலைதூரங்களில் வசிக்கும் வசதியற்ற மாணவர்களுக்கும் கல்வியை அளித்து நாட்டை முன்னேற்றுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
25 வருடங்களில் 2 கோடி கிராமப்புற மக்களை அடைந்துள்ள இந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் 10,000 மாணவர்கள், 65,000 மருத்துவ பயனாளர்கள் உதவிகளைப் பெறுகிறார்கள். கிராமப்புற பஞ்சாயத்து, உள்ளூர் பள்ளிகள் மூலம் உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுடைய பாதுகாப்பு, உணவு, உறைவிடம், கல்விக்கு உத்தரவாதம் அளித்து குடும்பச்சூழ்நிலையில் வளர்த்து வருகிறார்கள்.
பள்ளிப் பாடங்களுடன், நடனம், நாட்டியம், இசை, விளையாட்டு, ஓவியம், கைத்தொழில் என்று மாணவர்களின் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் சிறப்புப் பாடங்களும் அளிக்கப்படுகின்றன. பெற்றோரைப் போல ஆசிரியர்கள் வழிநடத்தி, மரியாதை, பொறுப்பு, அன்பு போன்ற நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
உள்ளூர் திருவிழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள், சமுதாய கூடங்களில் பங்குகொள்ள வைத்து கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர் இந்த அமைப்பினர். இங்குக் கற்க வந்தவர்கள் பலரும் படித்து முடித்து பணிபுரிந்து அவர்களுடைய சமுதாயத்தில் முன்மாதிரியாக வலம் வருகிறார்கள்.
"ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் தேர் நகரும்" என்பது போல ஒரு இயக்கம் உருவாக பல நல்ல உள்ளங்களின் நேரமும் நன்கொடைகளும் அவசியம். சுவாமிஜியின் கனவு சாத்தியமாக அவர் வேண்டிக்கொண்டபடி மக்களும் தாராளமாக உதவி வருகிறார்கள்.
ஒரு குழந்தையின் படிப்பிற்கும் பராமரிப்பிற்கும் ஆண்டுக்கு $500 செலவாகிறது. மாதந்தோறும் $40 சேமித்தால் கூட, ஒரு மாணவனுக்குக் கல்வி வழங்க முடியும். ஆல்பனி சாப்டர் 200 குழந்தைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 150 மாணவர்களுக்கான பணத்தேவையை அன்றே மக்கள் நன்கொடையாக வழங்கிவிட்டனர்.
நன்கொடையாளர்களைப் பாராட்டும் வண்ணம், நடன, நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் வருடம் ஒரு முறை தேர்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுகின்றன. இந்த வருடம், 'ஓம் நமோ நாராயணாய'(அக்ரே பஷ்யாமி), "என் முன் இருக்கும் தெய்வம்" என்ற தலைப்பில் அருமையான நடன நிகழ்ச்சி திருமதி.அனிதா குஹா அவர்களின் குழுவினரால் அரங்கேறியது. ஸ்ரீ.துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்பஷ்டமாக விவரிக்க, டாக்டர்.ராஜ்குமார் பாரதி இசையில் அருமையான லைட்டிங், சவுண்ட் உடன் கூட்டம் முழுவதும் தன்னை மறந்து ரசிக்க, மெய்சிலிர்க்கும் அனுபவம்!
பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் பரவசம் கொள்ளும் மனது இந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஒன்றிப்போனது மட்டுமன்றி தமிழ், மலையாளம் என்று இசையும், பாடல்களும் கலந்து கொடுத்தது அருமை. நாராயண பட்டாதிரியின் குருவாயூரப்பனைப் போற்றிப் புகழும் பாடல்கள் வாயிலாக விஷ்ணுவின் அவதாரங்களைக் காட்சிகளாக்கி இறுதியில் பரம்பொருளின் அவதாரத்தைப் பார்த்ததும் பரவசம் அடையாதவர்களே இல்லை. சிலப்பதிகாரம், திருப்பாவையிலிருந்தும் பாடல்களைக் கேட்க இனிமை.
ஆடாமல் அசையாமல் நின்ற குருவாயூரப்பன், ருத்ர தாண்டவம் ஆடிய பரமசிவன், வராகமூர்த்தி, ஆக்ரோஷ நரசிம்மர் ,வாசுகி தலையில் நர்த்தனம் ஆடிய கிருஷ்ணன், பாற்கடலைக் கடைந்த அசுரர்கள் தேவர்கள், அசுரர்களை மட்டுமா கவர்ந்தாள் அந்த மஹாலக்ஷ்மி? அடடா! சொல்லிக்கொண்டே போகலாம் நடனமாடியவர்களைப் பற்றி! பட்டாதிரியாக நடித்தவர் ஏற்கெனவே ராம சரிதம் நிகழ்ச்சியில் அனுமனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மிகவும் ஆத்மார்த்தமாக அனுபவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் பாராட்டுகள்.
அங்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவை வழங்கி அசத்திய குழுவினருக்கும் உதவிய நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்!
எத்தனை நாட்கள் தான் நாமும் சமுதாயத்திடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பது? நாமும் பதிலுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதுதானே முறை? இந்த எண்ணம் அனைவரின் மனதில் தோன்றி விட்டால் கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றலாம்.
'ஜீ' தொலைக்காட்சியின் ‘சரிகமப’ பாட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்காந்த் நினைவாக அவர் படத்தில் வந்த பாடல்களைப் போட்டியாளார்கள் பாடுகிறார்கள். இவருடைய படங்களும் சரி, பாடல்களும் சரி மதுரையில் அத்தனை பிரபலமாக பட்டி தொட்டிகளில் ஒலித்துக் கொண்டிருந்த காலமும் இருந்தது.
மதுரையிலிருந்து விஜய்காந்த், பாண்டியன், வடிவேலு வரிசையில் பிரபலமாகி அரசியலுக்குள்ளும் நுழைந்து ஜெயாம்மாவை எதிர்த்தவர். அவரை நேர்மையுடன் எதிர்த்த ஒரே அரசியல்வாதி என்று கூட கூறலாம். மற்ற திராவிடக்கட்சியினர் வாலைச் சுருட்டி இருக்குமிடம் தெரியாமல் பதுங்கி இருந்தனர். அன்னாரின் அரசியல் வளர்ச்சியை வெறுத்த சில்லரைகள் அவரை எத்தனைக்கெத்தனை கேவலப்படுத்த முடியுமோ அத்தனை கேவலப்படுத்தியது வரலாறு.
தேச பக்திப் படங்களாகாட்டும், புரட்சிப் படங்கள் ஆகட்டும் சிவந்த கண்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட காட்சிகளுக்காகவே பிரபலமானவர். கடைசிக்காலத்தில் அவரை கோமாளியாக்கி விட்டார்கள். பாவம்!
அவர் அரசியலில் நிலைத்து இருந்திருந்தால் மாற்றுக்கட்சியாக இருந்திருக்கலாம். ஆனால் சில்லரையைச் சிதற விடுபவர்கள் விட்டுவிடுவார்களா? இறந்தபிறகு ‘கருப்புத்தங்கம்’ என்று புகழ்பாடுகிறார்கள். உண்மையிலேயே மனித குணங்களுடன் இருந்திருக்கிறார். அவர் படங்களை அதிகம் பார்த்ததில்லை என்றாலும் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அதுவும் இசைஞானி உச்சத்தில் இருந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள்!
போட்டியாளார்கள் மகிழன், முகேஷ், அமன், சௌம்யா அருமையாகப் பாடி கோல்டன் ஷவர் வாங்கினார்கள். இன்னும் எனக்கு மிகவும் பிடித்த விஜய்காந்த் படப்பாடலை யாரும் பாடவில்லை. நாளை யாராவது ஒருவர் பாடுவார்கள் என்று காத்திருக்கிறேன்.
கிடாரும் புல்லாங்குழலும் தான் இளையராஜாவின் பாடல்களில் தனித்துக் கேட்கும். அத்தனை சுகம்
அது சரி. இப்ப கீர்த்தி சுரேஷ் பாடலைன்னு யார் அழுதா? கொடுமைடா சாமி
நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் நாம், நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய பலன்களைப் பொறுத்தே அமைகிறது. முற்பிறவிப்பலனைத் தான் 'கர்ம வினை' என்கிறோம். "கர்மாவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் கர்மாவே வாழ்வு என்றாகிறது. கர்மன் எல்லார் மனங்களின் உள்ளடுக்குகளிலும் எளிதாக நுழைந்து வெளியேறுகிறது" என்பதாகச் செல்கிறது இந்தப் புதினம்.
கதையின் காலகட்டம் விடுதலை பெறுவதற்கு முன்பு என்பதால் அதன் தொடர்பில் பல காட்சிகள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த சாதி அவலம். ஈவேராவைத் தெரிந்து வைத்திருந்த பிராமணனுக்கு சமூக நீதியை நிலைநாட்டப் போராடிய 'நாராயண குரு'வைத் தெரிந்திருக்கவில்லை என்ற போராளியின் எள்ளல். அனைத்துச் சாதியினரும் இணைந்து பள்ளிகள் துவங்க எடுக்கும் முயற்சிகள். நாட்டின் விடுதலைக்காகத் தலைமறைவு வாழ்க்கையில் நேதாஜி படையினர். காந்தியைப் போற்றுபவர்கள். செல்வந்தர்களின் பாலியல் அத்துமீறல்கள். பழிபாவங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்வதாலும் வட்டார மொழி வழக்கின் சம்பாஷணைகளாலும் வாசிக்க மிகச் சுவாரசியமாக இருக்கிறது.
கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். திடீரென்று இது எந்த ராவ் என்று குழம்பிவிடுகிறது :) கடைசி பாகத்தில் தான் மர்ம முடிச்சுகள் விலகி பலவும் புரிகிறது. "நல்லா கொடுக்கிறாங்கய்யா டீடெயில்ஸு" என பல இடங்களில் தோன்றினாலும் எப்படி இப்படி எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. தற்பொழுது புழக்கத்தில் இல்லாத ப்ளெஷர் கார், பட்டணம் பொடி, ட்ரங்க் பெட்டி, சாணார்ப் பையன் போன்ற வார்த்தைகளை வாசிக்கையில் இந்த தலைமுறைக்குப் புரியுமா என்று யோசித்தேன்.
கன்னி தெய்வத்தை வணங்கி வந்த வீட்டில் தீய செயல்கள் தொடங்கும் வேளையில் அடுத்த சந்ததியினர் அதன் பாரத்தைச் சுமக்கத் தொடங்கிவிடுகிறார்கள் என்று கர்மாவைத் தீர்மானிக்கும் கர்மன் கூறுவதாக எழுதியுள்ளார் ஆசிரியர். கெடுதல்களைச் செய்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றினாலும் அவர்களும் ஒரு காலகட்டத்தில் அலைக்கழிக்கப்படுவார்கள். அவர்களின் தீய செயல்களால் அடுத்தடுத்த தலைமுறையில் எந்தத் தவறும், கெடுதலும் செய்யாதவர்கள் கூட துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. வாசிப்போரை ஒருகணம் நிறுத்தி யோசிக்க வைக்கிறது.
ஒரே நாளில் 'கர்மன்' புதினத்தை வாசித்து முடித்தேன். என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு புத்தகத்தை வாசித்து பிடித்து விட்டால் அதை முடிக்கும் வரை வேறு வேலைகளில் கவனம் செலுத்த மாட்டேன். அப்படித்தான் இந்த நாவலை வாசிக்கும் பொழுதும் நடந்தது. ஆசிரியர் ஹரன் பிரசன்னா இதற்கு முன்பு எழுதிய 'மாயப் பெரு நதி' புதினமும் நல்லதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. இதுவும் அப்படியே.
சோலில் (Seoul) இருந்த முதல் இரு நாட்களுமே இனிமையான அனுபவத்தைக் கொடுத்திருந்தாலும் மூன்றாவது நாளன்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அதிபர் மீதான தீர்ப்பிற்காக நாங்களும் காத்திருந்தோம். சப்வே-க்களை மாலை வரை மூடி விட்டிருந்தார்கள். மெதுவாக வெளியில் கிளம்பலாம் என்று காலை உணவை முடித்து விட்டு பத்துமணிவாக்கில் நடையை ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த தெருப்பகுதியில் கடைகள் மூடி ‘வெறிச்சென்று’ இருந்தது. மேகமூட்டம் வேறு.
“எனக்கென்ன மனக்கவலை” என்று சுற்றுலாவினர் கூட்டம் கைகளில் குடைகளோடு கிளம்பிவிட்டிருந்தார்கள். உணவுக்கடைகள் சில திறந்து வியாபாரமும் கனஜோராக நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள இரு கட்சியினரும் கொடிகளுடன் இறங்கிக் கொண்டிருக்க, கலவரங்களை எதிர்பார்த்து காவல்படையினர் கூட்டம் வேறு. காட்சிகள் எல்லாம் மிரட்டலாகத்தான் இருந்தது! அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து என்ன தான் நடக்கிறது? பார்த்து விட்டு வரலாம் என்று கவனமாக மூன்று தெருக்களைக் கடந்தால் பெரிய மேடையில் கட்சித்தலைவர்கள் போலிருந்தவர்கள் வீராவேசமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தென்கொரிய கொடியுடன் அமெரிக்க கொடியும் இருக்கவே அவர்கள் எந்தக் கட்சியினர் என்று புரிந்து விட்டது.
தெருமுனை கட்சிக்கூட்டம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டிருந்தாலும் நீதிமன்றத்திற்கு அருகில் இருந்ததால் தீர்ப்பு வந்தவுடன் எந்நேரமும் கலவரம் நடக்கலாம் போன்றதொரு பதட்டம் நிலவியதை உணர முடிந்தது. எதற்கு வம்பு என்று உடனே எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தோம். வானளாவி நிற்கும் நகரின் அழகிய கட்டடங்களை வேடிக்கை பார்த்தபடி அமைதியான தெருக்களைக் கடந்து ‘யோங்டோங்’ பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.
உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகள், கே-ஃபேஷன் பொட்டிக்குகள், யூனிக்லோ, ஜாரா, எச் & எம்,கே-பியூட்டி & ஸ்கின்கேர், கே-பாப் பொருட்கள், பாரம்பரிய சிற்றுண்டிகள், பாத்திரங்கள் விற்கும் பிரபலமான கடைகள் நிரம்பிய தெருக்கள் என அது ஒரு மாய உலகமாக இருக்கிறது! ஷாப்பிங் செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற பகுதி அது. அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. நகரின் மறுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் கட்சிக்கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாத புது உலகமாக ‘துறுதுறு’ வென்று இருந்தது.
அந்நாட்டுப் பெண்கள் சருமத்தைப் பராமரிக்க நிறைய மெனக்கெடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் விதவிதமான க்ரீம்கள்(தூங்குவதற்கு முன், பின், காலை, மாலை, வெளியில் செல்லும் பொழுது, இளம்பெண்களுக்கு, வயதான பெண்களுக்கு என்று டிசைன் டிசைனாக) விற்கும் கடைகள், முகத்திருத்தம் செய்யும் கிளினிக்குகள் என்று வரிசையாக இருந்தன. யாருக்குத்தான் தன்னை அழகுபடுத்திக்கொள்ள ஆசை இருக்காது? ஆனால், கொரியர்களுக்கு அதிகம் போல! சுற்றுலாவினரைக் குறிவைத்து அழைக்கிறார்கள். வெளிநாட்டினருக்குச் சிறப்பு சலுகைகளும் இருக்கின்றன. கடைகளில் கூட பெண்கள் தான் அதிகம் வேலை செய்கிறார்கள். எப்படித்தான் இந்தப் பெண்களின் முகங்கள் இப்படி ‘பளிச்சென்று’ சுருக்கங்களே இல்லாமல் ‘மொழுமொழுவென்று’ இருக்கிறதோ! ஏங்க வைத்து எப்படியோ பைகள் நிறைய வாங்க வைத்துவிடுகிறார்கள் அம்மணிகள்
அதுபோலவே, நிறைய வகை தின்பண்டங்களை வண்ண வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். பெரிய கடைகளை விரித்து சகட்டுமேனிக்கு விற்பதை வாங்குவதும் சுற்றுலாவினரே! அம்மாடி!எதை வாங்குவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தோம். இதற்காகவே இரண்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும் போல!
அந்தத் தெருவைக் கடந்து மூன்று மாடிக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றாள் என் செல்லம். கொரியன் தொடர்களில் எனக்குப் பிடித்தது பெண்கள் அணியும் காதணிகள். சிறிதாக இருந்தாலும் அத்தனை அழகாக இருக்கும். பார்க்கும் பொழுதெல்லாம் இதற்காகவே கொரியா செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அவளும் அதை நினைவில் வைத்திருந்து அழைத்துச் சென்ற இடம் தான் ‘NYUNYU’. மலிவுவிலை ஃபேஷன் அணிகலன்கள் விற்கும் கடை! அவ்வளவு தான் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு எதை வாங்குவது எதை விடுப்பது என்று தெரியாமல் பிடித்ததை கூடைகளில் போட்டுக் கொண்டே வந்தோம். ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றியவுடன் அமர்ந்து என்னென்ன வாங்கியிருக்கிறோம் என்று இருவரும் பார்த்துக் கொண்ட பொழுது, “அம்மா, எனக்கு இது பிடிச்சிருக்கு என்று என் கூடையில் இருந்த சில காதணிகளை அவள் கூடையில் மாற்றிக்கொண்டாள் இருவரும் ஒரே மாதிரியான காதணிகளை நிறைய வாங்கியிருந்தோம் அடுத்த தளத்தில் கைப்பைகள், க்ளிப்புகள், தொப்பிகள், கழுத்து செயின்கள், ஆடைகள் என்று எனக்கு அத்தனை ஆர்வமில்லாத பகுதி. அதற்கும் மேல் தளத்தில் தான் பில் போடும் கவுண்டர் இருந்தது. காத்திருந்த நீண்ட வரிசையில் நாங்களும் ஐக்கியமானோம்.
அங்கிருந்து நடந்து நடந்து பல தெருக்களில் இருந்த கடைகளைப் பார்ப்பதும் உள்ளே நுழைவதும் வாங்குவதுமாய் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரங்கள் போனதே தெரியவில்லை. கால்கள் கெஞ்ச, பசிக்க வேறு ஆரம்பித்து விட்டது. என் முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டவளாக, அருகில் இருந்த மசாஜ் நிலையத்திற்குச் சென்று ஒரு மணிநேரத்திற்கு நன்றாகக் கால் மசாஜ் செய்து கொண்டோம். சுகமாக இருந்தது. விட்டால் அங்கேயே தூங்கியிருப்பேன். டிப்ஸ் கலாச்சாரம் இல்லை. ஆனால் கொடுத்தால் வாங்கிக் கொண்டு சிரித்துக்கொண்டே தலைகுனிந்து “கம்சாமிதா” சொல்கிறார்கள்.
கடைகளில் ஈரக் குடைகளை உலர்த்த, கொண்டு செல்லும் தேநீர்க் கப்புகளை வைக்க என்று தனித்தனி இடங்கள் இருக்கிறது. நல்ல ஐடியா! அமெரிக்காவில் கூட இப்படியெல்லாம் கிடையாது.
சியோலின் நவீன வாழ்க்கை முறை, ஷாப்பிங் மோகம், அழகு கலாச்சாரம், உணவு என அனைத்தும் ஒன்றிணைந்த இடம் மியோங்டாங். மாலையில் உணவுச் சந்தையாக அவதாரமெடுக்கிறது. ஆக, கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. இது ஒரு சந்தைத் தெரு மட்டுமல்ல, கொரியாவிற்குச் செல்லும் ஒவ்வொரு பயணியும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய இடமும் கூட!
அங்கிருந்து எனக்குப் பிடித்த ‘Bibimbap’ உணவைச் சுவைக்க மிஷெலின் ஸ்டார் வாங்கிய ‘Mokmyeoksanbang’ உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள் மகளரசி. மணி நான்கு என்பதால் கூட்டம் இல்லை. உள்ளே நுழையுமுன் கியோஸ்க்கில் ஆர்டர் செய்து விட்டால் போதும். உள்ளே சென்றதும் அமர வைத்து விட்டு டீ எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார் சர்வர்
முதன்முதலில் Bibimbap சாப்பிடப் போகிறேன். ஏழு வகையான சமைத்த கீரை, காளான்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் சோறு. எல்லாவற்றையும் கலந்து gochujang மிளகாய் சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால் ‘ஜிவ்வ்வ்’வென்று இருக்கிறது. எளிமையான சுவையான உணவு. இறைச்சி வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். பாதி வெந்த முட்டை வேண்டுமென்றால் அதுவும் சேர்த்துச் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் யம்மி யம்மி யம்மி உணவை அழகாக சிறுசிறு கிண்ணங்களில் வைத்துப் பரிமாறி ஒரு கலையாக கொண்டாடி உண்பது எத்தனை அழகு! இப்படி உட்கார வைத்துச் சமைத்துப் போட்டால் சைஸ் 0 ஆகிவிடலாம். எனக்கில்ல எனக்கில்ல… ‘Bon Appetit,YourMajesty’, ‘Tastefully Yours’ தொடர்களில் கூட இந்த உணவைக் காண்பித்தார்கள்
ஷாப்பிங் செய்தாயிற்று. வயிறும் நிறைந்து விட்டது. இனி விடுதிக்குத் திரும்பி பைகளை வைத்து விட்டு ‘Songpa District’ல் மக்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்று பார்க்க ஆசை. சியோலின் தென்பகுதி இது. விடுதியிலிருந்து பொடிநடையாக சப்வே சென்று அங்கிருந்து ஒரு மணி நேர ரயில் பயணம். அப்பொழுதே மாலை 5 ஆகிவிட்டிருந்தது. களைத்த முகத்துடன் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் கூட்டம். மனம் மீண்டும் நியூயார்க் நகர சப்வே காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்தது.
ஆண்கள் அனைவருக்கும் தலைநிறைய முடி. இங்கு தலைக்கு மை அடிக்காமல் சால்ட் அன்ட் பெப்பர் ‘தல’ ரசிகர்கள் அதிகம் போல! பற்களுக்கு கிளிப் மாட்டும் அமெரிக்க கலாச்சாரம் கூட அதிகம் காணவில்லை. ஒருவகையில் இயற்கையாகவே தெரிந்தார்கள். பெண்கள் மட்டும் தோல் மினுமினுக்க கிரீம்கள் போட்டிருப்பது தெரிந்தது. வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் காலியாக இருந்தாலும் யாரும் அமரவில்லை.
வடக்கு தெற்காக சியோலில் ‘ஹான்’ ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அதைச்சுற்றி குடியிருப்புகள், பூங்காக்கள் என்று சுற்றிப்பார்க்க நல்ல இடமாகத் தெரிந்தது. பல கொரியன் தொடர்களிலும் பார்த்த ஞாபகம். வழியில் இரண்டு பல்கலைக்கழக நிறுத்தங்களில் காளையர், கன்னியர் கூட்டம்! அமெரிக்கன் பிராண்ட் ஷூக்கள், நார்த்ஃபேஸ் ஜாக்கெட்கள், ஐபோன் பிரபலமாக இருக்கிறது. இங்கு நாங்கள் கொரியன் தொடர்களை ஆங்கில சப்டைட்டிலோடு பார்ப்பது போல, அமெரிக்கன் தொடர்களை சிலர் கொரியன் சப்டைட்டிலில் பார்த்துக் கொண்டு அவரவர் உலகத்தில் பயணிகள். அதிக உயரம் இல்லாத மக்கள். கலர்கலராக தலைக்கு வண்ணம் அடிக்காத, இடுப்புக்கு கீழே பேன்ட் சரிந்து போகாத, உரக்க பேசி, ஆடிக்கொண்டிராமல் அமைதியோ அமைதியாக பயணிக்கிறார்கள். கே-பாப் பாதிப்பை சில ரசிகர்களிடம் காண முடிந்தது. என்ன? இறுக்கமாக உடை அணிவது அங்கு நாகரிகம் இல்லை போல. லூசாக அவர்கள் அளவுக்கு மீறிய சைசில் அணிந்திருந்தாலும் கண்ணியமாக மிக நேர்த்தியாக உடையணிந்த பெண்களைக் காண முடிந்தது.
நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் மொத்த மக்களும் அங்கே இறங்குவது போல பெருங்கூட்டம் இறங்கியது. சாலை முழுவதும் மக்கள் கூட்டம். உயரமான வெள்ளை நிற அடுக்குமாடி குடியிருப்புகள்! அங்குமிங்குமாய் குழந்தைகளுடன் சில குடும்பங்கள். இப்பொழுதுதான் குடும்பங்களைக் காண முடிந்தது!
இங்குதான் பிரபலமான ‘Seokchon Lake’, ‘Lotte World Tower’, புராதன இடங்களும் உள்ளன. முதலில் ஏரியைச் சுற்றி இருக்கும் ‘cherry blossoms’ பார்த்து விட்டு வரலாம் என்று அங்கே கிளம்பினோம். சில வாரங்கள் மட்டுமே இந்த மலர்கள் பூத்துக்குலுங்கும் அழகைக் காண முடியும் என்பதால் வார நாள் என்றாலும் நல்ல கூட்டம். பாதுகாப்பிற்கு காவலர்களும் அங்கிருந்தனர். கைகளைக் கோர்த்துக் கொண்டு இளமையான கூட்டம்! வெள்ளை, பிங்க் செர்ரி மரங்களுக்கு கீழே நின்று கொண்டு கன்னத்தை கைகளால் தாங்கியபடி, அன்பைச் சொல்லும் விதமாக இருவிரல்களை நீட்டிக் கொண்டு படங்கள் எடுக்கும் பெருங்கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி ரம்மியமான ஏரியைச் சுற்றி வந்தோம்.
கலைநிகழ்ச்சிகளும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள். இசைக்கு மொழியேது? தொடர்களின் பின்னணியில் வரும் இசையைக் கேட்பது போல இனிமையாக இருந்தது. சிறிது நேரம் அதையும் ரசித்து விட்டு வெளியேறினோம். மெல்ல இருள் கவிழ, விளக்குகள் மின்ன வானளாவிய ‘Lotte World Tower’கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டே மீண்டும் ரயிலேறி ‘Hongdae’ பகுதிக்கு வந்தால் தள்ளுவண்டிகளில் மணக்கமணக்க உணவுகள். இப்பொழுது தான் கொரியன் உணவுகள் சாப்பிட தெரிந்து விட்டதே! நொறுக்கிக் கொண்டே தெரு வலம் சென்றோம்.
இங்கும் வாங்குவதற்கு ஏகப்பட்ட தரமான ஆடைகள், பொருட்கள் இருக்கிறது. நல்ல கூட்டம். ‘ஜிகுஜிகு’வென ஜொலிக்கும் கட்டிடங்கள். சாலைகளில் போக்குவரத்து என்று ‘ஜேஜே’ என்றிருக்கிறது. சில மணிநேரங்கள் போனதே தெரியவில்லை. ரயிலைப் பிடிக்க நுழைந்தால் அத்தனை உயரமான 60 டிகிரி கோணத்தில் subway escalator பார்த்ததே இல்லை!
நாங்கள் தங்கியிருந்த விடுதிஅருகே இரவு உணவுக்கடைகளில் ஜோராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. எங்களுக்குப் பிடித்த ஷ்ரிம்ப் டம்ப்ளிங்ஸ் வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றோம். அன்றைய இனிமையான நாளை அசைபோட்டபடி வாங்கிய பொருட்களை பெட்டிகளில் எடுத்து வைத்தாயிற்று. நாளை ஓரிரு பகுதிகளுக்குச் சென்று விட்டால் சியோல் பயணம் முடிந்து விடும். என்ன? மழை நாள். சரி! சியோல் தெருக்களை மழையில் பார்த்தமாதிரியும் ஆச்சு என்று மறுநாள் எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு 10 மணிக்கு எங்கள் பயணம் ஆரம்பித்து விட்டது. விடுதியிலேயே இரு பெரிய குடைகளைக் கொடுத்து விட்டார்கள். அப்புறமென்ன?
முதலில் நாங்கள் சென்றது ‘ஹனோக் வில்லேஜ்’ல் இருக்கும் பிரபலமான ‘சால்ட் பிரட்’ கடைக்கு. “ரொம்ப ஃபேமஸ் இங்கே” என்று மகள் அழைத்துச் சென்ற கடையின் முன் குடைகளைப் பிடித்துக் கொண்டு நீண்ட வரிசை காத்திருந்தது. நாங்களும் ஐக்கியமானோம். ஒரு பாக்கெட்டில் நான்கு fluffy சால்ட் பிரட் கொடுக்கிறார்கள். ஜப்பானியர் உணவு போல. எனக்கென்னவோ croissantன் கொரியன் உடன்பிறப்பு போல தெரிந்தது. வெண்ணெயில் செய்த பதார்த்தம். மேலே உப்பு வேற தூவி, கமகம வாசனையுடன் வாயிலே வைத்தவுடன் கரைந்து போகிறது. யம் யம் யம். அங்கு செல்கிறவர்கள் தவறவிடக்கூடாது.
அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தோம். விடுவானேன்? உள்ளே சென்று பார்த்தோம். நன்றாகத்தான் இருந்தது. விலை அதிகமோ?? இது, அது என்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் எதையாவது வாங்கத் தோன்றிவிடும். கம்சாமிதா சொல்லி விடு ஜுட்.
அங்கிருந்து பல குறுகிய, சுத்தமான தெருக்களைச் சுற்றி வெவ்வேறு கடைகளில் ஏறி இறங்கி கடைசியில் ஒரு சந்தைக்குள் நுழைந்தால் ஆஹா! அது ஒரு தனி உலகமாக அல்லவா இருக்கிறது? அழகாக சாம்பிள்கள் கொடுத்து வாங்க வைத்து விட்டார்கள். நம் ஊரில் கிடைப்பது போலவே கடலை, பொரி, வெல்லம்/சர்க்கரை, எள் சேர்த்த பதார்த்தங்கள். அதிக இனிப்பு இல்லை ஆனால் சுவையாக இருந்தது.
சந்தையில் விதவிதமான மீன்களை வைத்திருந்தார்கள். நாம் கேட்கும் மீனை சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் தாய்லாந்தைப் போல உணவில் fish sauce சேர்த்து குமட்டும் வாசனை எல்லாம் இங்கில்லை. இவர்களுடைய உணவு பெரும்பாலும் நிறைய கீரை வகைகளுடன் பொரித்த இறைச்சி, மீன் வகைகள் இல்லையென்றால் சூப்பில் கொதிக்க கொதிக்க டம்ப்ளிங்ஸ் தான். கருவாடும் விற்கிறார்கள்! பாத்திரங்கள், கார்ன் ஹஸ்க்கில் செய்த மிருதுவான பெட்ஷீட்கள் விற்கும் கடைகளுக்குள் நுழைந்தால் வாங்காமல் வரமுடியாது. பெட்டியில் எடுத்துச் செல்வதற்குத் தோதாக பிரத்தியேகமாக சுருட்டி கொடுக்கிறார்கள். நாங்களும் வாங்கிக் கொண்டோம். வியாபாரிகள் அனைவரும் சினேகமாக இருக்கிறார்கள்.
அப்படியே சந்தையின் மறுபக்கத்தில் இருக்கும் உணவுச் சந்தைக்குள் நுழைந்தால் ஒவ்வொரு கடையைச் சுற்றிலும் இருக்கைகள் போடப்பட்டு சுடச்சுட அங்கேயே அமர்ந்து சாப்பிட முடிகிறது. வெறும் இரண்டு குச்சிகளை வைத்து சாப்பிட்டு முடித்து விடுவதால் ஈரமோ, குப்பைகளோ இல்லை. வெறும் கோப்பைகள், தட்டுகள், சிறு கரண்டிகள், குச்சிகள், வாய் துடைத்துக் கொள்ள டிஸ்ஸு பேப்பர்கள். அவ்வளவு தான். பெரிய பெரிய அண்டாக்களில் சூப் கொதித்துக் கொண்டிருக்க, அரிசி மாவில் செய்த நூடுல்ஸ் நம் கண் முன்னே செய்யும் நெட்ஃபிளிக்ஸ் பிரபலமான பாட்டியின் கடைமுன் அத்தனை நீண்ட வரிசை! கைகளில் கேமராக்களுடன் காத்திருந்த கூட்டத்தில் சேர்ந்து நின்று கொண்டோம். 10 நிமிடங்களில் இருக்கைகள் கிடைக்க, சாப்பிட்டு முடித்தோம். நல்ல கூட்டம்!
பல கடைகளைக் கடந்து வாசலுக்கு வர, அங்கே கொரியன் டோனட்ஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதுவும் சுடச்சுட. விடுவோமா? ஆறு மணிக்கு விடுதியை அடைந்து வாங்கிய பொருட்களை பெட்டிகளில் நிரப்பிக் கொண்டோம். பேசாமல் இன்னொரு பெட்டியை வாங்கி நிறைய ஷாப்பிங் செய்திருக்கலாம் தான். ஆசைக்கு அளவேது?
இரவு 8.30வாக்கில் கடைசியாக ஒருமுறை தெரு உணவுகளை சுவைக்க ஆசைப்பட்டு ஹான் அறிமுகப்படுத்திய அத்தனை இனிப்பு பண்டங்களையும் வாங்கிச் சாப்பிட்டோம். கூடவே ஷ்ரிம்ப் டம்ப்ளிங்ஸ்ம். நன்றாக சாப்பிட்டு விட்டு நாட்கள் சென்றதே தெரியாமல் ஊர்களைச் சுற்றியதை எண்ணி கனவை நனவாக்கிய மகளுக்கு நன்றி கூறிவிட்டு, மறுநாள் விமானநிலையம் செல்ல காலை 5.30மணிக்கு வண்டியை விடுதியின் மூலம் புக் செய்து கொண்டோம்.
மதுரையைப் போலல்லாது சியோல் சாலைகள் ஐந்து மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டு விடுகிறது. மெல்ல மெல்ல இருள் விலக, போக்குவரத்தும் கூடியது. பை,பை சியோல் என்று அடுக்குமாடி கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டே இன்சியான் பன்னாட்டு விமானநிலையம் நோக்கிய பயணம் ஆரம்பித்தது. சியோலில் இருந்து 30மைல் தொலைவில் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் நன்றாகவே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்தில் வழியில் அழகான காடுகளும் காட்சிகளும் இனிமையான நினைவுகளும் கூடவே பயணித்தது.
காலை 9.30க்கு விமானத்தில் ஏறியாயிற்று. அணிவதற்கு காலணிகள் கொடுத்தார்கள்! அருகில் அமர்ந்திருந்த ஃபிலிப்பினோ தம்பதிகளில் கணவர் மனைவியைவிட இளமையானவராகத் தெரிந்தார். புறப்பட்ட ஒருமணிநேரத்தில் சூப்பர் சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு எப்படித் தூங்கிப்போனேன் என்றே தெரியவில்லை. ஏதோ வாசம் வருவது போல இருந்தது. பனினி என்று ஒரு ஸ்னாக்ஸ். ப்ரெட்டில் சீஸ், காய்கறிகள் வைத்து சிற்றுணவு. ஐந்து மணிநேரங்கள் கழித்து காலைஉணவு. அதுவும் சுவையாக இருந்தது.
நியூயார்க்கிலிருந்து செல்லும் பொழுது 14 மணிநேரங்கள் என்றால் திரும்பி வரும்பொழுது எதிர்திசையில் காற்றை எதிர்த்து வர, கூடுதல் ஒரு மணிநேரம். கனடா மீது பறக்கும் பொழுது மழைமேகங்கள் முட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தது. இத்தனை குலுக்கலான விமான பயணத்தை இதுவரை நான் பார்த்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில்விமானம் மேலேறுவதும் தடாலென்று கீழிறங்குவதும், இருக்கைகள் இடமும் வலமுமாய் ஆடிச் சறுக்குவதுமாய் குலுங்கி குலுங்கி எந்நேரம் என்னாகுமோ என்ற பீதியைக் கிளப்பிவிட்டது. இதுவரையில் இப்படியான வான்பயண அனுபவம் இல்லாததால் கவலையும் பயமும் வந்து விட்டது. என் அருகில் அமர்ந்திருந்த பெண் வேறு வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள். விமானம் ‘சடக்’கென்று மேலெழும்ப, வயிற்றை பிரட்டி எடுக்க, மொத்த பயணிகளும் ‘ஆஆஆ’வென்று அலற, ஒருகட்டத்தில் அவ்வளவுதான் என்று சொல்லுமளவிற்கு ஆட்டம். மேகத்திற்குள் மாட்டிக்கொண்டு விட்டோம் போலிருக்கு. முதலில் அழுகை. பின் வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் என்று சமாதானப்படுத்திக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ம்ருத்யுஞ்சய மந்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டே வந்தேன். சில பல நிமிடங்களுக்குப் பிறகு கண்டத்திலிருந்து தப்பியது போல விமானம் இயல்பு நிலைக்குத் திரும்ப, அனைவரும் கைதட்டினார்கள். ‘கண்ல மரண பயத்தைக் காமிச்சிட்டியே பரமா’. பத்திரமாக நியூயார்க் விமானநிலையத்தில் இறங்க, மகனைப் பார்த்ததும் நிம்மதியாக இருந்தது.
சியோல் தந்த இனிமையான அனுபவத்துடன் ‘அந்த சில நொடிகள்’ விமான ஆட்டம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாகி விட்டது.
பல விஷயங்களை இந்தப்பயணத்தில் கற்றுக் கொண்டாலும், முக்கியமாக ‘சியோல்’ என்பதை ‘சோல்’ என்று தான் உச்சரிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். மொத்தத்தில் ‘சோல்’ பயணம் மனதிற்கு இனிமையான, மிக நெருக்கமான வாழ்நாள் அனுபவம்.
***
பொறுமையாக பயணக்கட்டுரைகளை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் ‘கம்சாமிதா’
கோடை முடிந்து குளிர் வலம் வரும் நேரம் விநாயகர் பூஜையுடன் திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். ஆல்பனி இந்துக்கோவிலில் பத்துநாட்கள் விமரிசையாக விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடைபெறும். பத்துநாட்கள் இரவும் கோவிலில் பிரசாதம் என்ற பெயரில் சிறப்பு விருந்துகளும் உண்டு. பத்தாவது நாளில் அவரை கோலாகலமாக வழியனுப்பிய பிறகு புரட்டாசியும் பிறக்க, சனிக்கிழமைகளில் பெருமாள் பூஜைகளும் பிரசாதங்களும் என்று இனிமையாகக் கழியும். நண்பர் வீட்டில் மதுரையில் 'தசல்' கொண்டாடுவது போலவே அவர்கள் 'பிக்ஷை' கேட்க, நாங்கள் அரிசி வழங்கி அதில் சமைத்த உணவைப் பெருமாளுக்குப் படைத்து வணங்குவோம்.
ஒவ்வொரு வருடமும் கொலு வைக்கும் நண்பர்கள் அன்போடு அழைக்க நாங்களும் விரும்பிச் சென்று பார்த்து விட்டு வருவோம். கண்ணுக்கும் மனதிற்கும் மட்டுமில்லாமல் வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான் எங்களுக்கு. வேலைக்குச் சென்று வருவதோடு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு வருடங்கள்தோறும் படிகள், கொலுப்பொம்மைகளைப் பாதுகாத்து, கொலு நேரத்தில் அவற்றை அழகுபடுத்தி, வீட்டிற்கு மக்களை அழைத்து, உணவும் அளிப்பது எத்தனை சிரமமான விஷயம்? ஆனாலும் பாரம்பரியமாகக் கொண்டாடும் விழாவைத் தொடர்ந்து அயல்நாடுகளில் சிறப்புறச் செய்து வருபவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். பெண்கள் அனைவரும் பட்டுச்சேலை, நகைகள் சகிதம் உலா வரும் அழகே அழகு!
இந்த வருடம் கோவிலிலும் மிகச்சிறப்பாக நவராத்திரி கொண்டாடப்பட்டது. தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்க, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். இந்த வருடம் கூடவே பக்தர்களுக்குத் தினமும் பிரசாதம் வழங்கி அசத்தி விட்டார்கள்! தன்னார்வலர்கள் உதவியுடன் தான் அனைத்தும் சாத்தியமாயிற்று.
மதுரையில் கொலுவைப் பார்க்க கோவில் கோவிலாகச் சென்றது எப்பொழுதும் நினைவிற்கு வரும். அத்தகைய ஏக்கங்களைப் போக்குவதே கோவில், நண்பர்கள் வீட்டுக் கொலுக்கள் தான். அபிராமி! அபிராமி!
இப்பொழுது இலையுதிர்காலம் ஆரம்பித்து நியூயார்க், அருகிலுள்ள நியூஇங்கிலாந்து மாநிலங்கள் வண்ண ஓவியமாகக் காட்சி தருவதைக் கொண்டாடும் பருவம்.
கோடையில் தகித்தவன் இப்பொழுது சுகமாய், அழகாய், குளிர்ச்சியாய் வசீகரிக்கிறான். இனி வெயில் குறைந்து இலைகள் மலர்களாக வண்ணங்களைச் சுமந்து மரங்களை அலங்கரிக்கும். வீசும் காற்றில் அலையாடி மண்சேரும். வாழ்க்கையைப் போலவே!
குளிர் சாமரம் வீச, பகல் குறைய மாற்றத்திற்குத் தயாராகும் உடலும் மனதும்!
நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தில். தற்போது வாழும் மாநிலத்தில் எனக்குப் பிடித்த நகரமும் அப்படித்தான் என்றால் சென்ற இடத்திலும் கூடவா? இரவில் உயிர்ப்புடன் இருந்த சியோல் நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆவலுடன் அதிகாலையிலேயே எழுந்து தயாரானோம். தங்கியிருந்த விடுதியில் காலை உணவு 9.30 மணி வரை மட்டுமே பரிமாறப்படும் என்பதால் 'டான்' என்று ஏழரை மணிக்கே ஆஜராகி விட்டோம். பெரிய எழுத்துகளில் "உணவை வீணாக்காதீர்கள்" என்று போட்டிருந்தார்கள். சாலட், வேகவைத்த முட்டை, பழங்கள், பிரட், ஜாம், பட்டர், பழரசம், காஃபி, டீ என்று எளிமையான காலைச் சாப்பாடு. அத்தனை சுவையாக இருந்தது. அமெரிக்க விடுதிகள் இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
'ஜெஜூ' தீவில் எங்களைத் தவிர மற்றவர்கள் உள்ளூர் ஆட்கள். இங்கோ, அனைவருமே சுற்றுலாவினர் தான். பெரும்பாலும் மேலை நாட்டினர். இங்கும் நாங்கள் இருவர் மட்டும் தனித்துத் தெரிந்தோம். வந்தவர்கள் அனைவரும் தேவையானதை மட்டுமே தட்டில் வைத்துக் கொண்டு மிச்சம் வைக்காமல் சாப்பிட்டார்கள். வயதான தம்பதியர் பழங்கள், காய்கறிகளை அழகாக நறுக்கி வைத்துக் கொண்டே இருந்தார்கள். கொரியன் மொழியில் வணக்கம் வைத்தவுடன் அங்கிருந்தவர்கள் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். மேலை நாட்டினர் சிலர் சரளமாக கொரியன் மொழியில் பேசுவதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! நன்றி சொல்லி சப்வே ஸ்டேஷன் செல்ல வெளியில் வந்தால் ஏப்ரல் மாத 'ஜில்ல்ல்ல்ல்ல்' குளிர் கன்னத்தை முத்தமிட்டுச் சென்றது.
ரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஏறியவர்கள் பெரும்பாலும் அரண்மனை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு ஓடினார்கள். நாங்களும் சேர்ந்துகொண்டோம். அன்று முதலில் நாங்கள் சென்ற இடம், நகரின் மையத்தில் இருக்கும் பிரபலமான 'சாங்க்டியோக்குங்' அரண்மனை(Changdeokgung Palace). அருகே செல்ல செல்ல கூட்டம்! அய்யோடி! இத்தனை கூட்டமா? அங்கே வாடகைக்கு விற்கும் ராஜ பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு சுற்றுலாவினர் ராஜா, ராணியாக வலம் வந்துகொண்டிருந்ததைப் பார்க்க கொள்ளை அழகு. என்ன? கடைக்குச் செல்ல, உடை மாற்றிக்கொண்டு வர நேரமாகி விடும். அப்பொழுதே மணி 9.15. இன்னும் பதினைந்து நிமிடத்தில் 'change of guards' நிகழ்ச்சி ஆரம்பித்துவிடும் என்று எங்கள் ஆசையை ஒத்தி வைத்துவிட்டோம். மகளுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்😒
உள்ளே செல்ல அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு நுழைந்தால்,வாவ்! தொடர்களிலும் படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பிரம்மாண்ட அரண்மனை. பார்க்கும் எவரையும் வசீகரிக்கும் கொள்ளை அழகு! அதன் அதிசயமான கட்டிடக்கலைக்காக யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் இடம்பெற்றுள்ளது. தென்கொரியாவில் இருக்கும் ஐந்து பிரபலமான அரண்மனைகளுள் மிகவும் அழகான அரண்மனை என்றும் அறிந்துகொண்டோம்.
கால்கடுக்க நின்று சாங்க்தெகுங் அரண்மனையில் காவலர்களின் மாற்றத்தைக் கண்டது கனவுலகம் போல் இருந்தது! ஓடோடி வரும் குதிரைகள், ஆயுதங்களைச் சுமந்த வீரர்கள், வண்ணமயமான உடைகள், கட்டுக்கோப்பான நடைமுறைகள், பாரம்பரிய ஆயுதங்கள், இசை என்று ஒரு விழாவைப் போல காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடமையாக அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நின்றதில் அப்பொழுதே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் உள்ளே சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கப் பார்க்க இன்பம். ஆசிய ஓவியங்களில் மரங்கள் கொஞ்சம் வித்தியாசமாக கிளைகள் வளைந்து இலைகள் நெருக்கமாக இல்லாமல் தனித்துவத்துடன் இருக்கும். அப்படிப்பட்ட மரங்களைப் பார்த்தோம். செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்களின் கீழே நின்று கொண்டு படங்களை எடுக்கக் காத்திருந்தது ஒரு கூட்டம். தோட்டங்களும், குளங்களும், விசாலமான மண்டபங்களும் என்று ஒவ்வொரு இடமும் இயற்கையோடு இணைந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்சியளித்தது! நுழைவாயில் மர கோபுரங்களில் சிறிய அளவில் கையால் செதுக்கிய வண்ணமயமான சிற்பங்கள் கவர்கிறது! எத்தனை சிற்பங்கள் இருக்கின்றனவோ அத்தனை சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது அந்த மண்டபங்கள் என்றும் தெரிந்து கொண்டோம். கன்பியூசியஸ் தத்துவத்தைப் பின்பற்றிய ஜோசன் வம்சத்தின் முக்கிய அரண்மனையாக இருந்திருப்பதால் பல்வேறு அரச நிகழ்வுகள், கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேறியுள்ளன.
அரச குடும்பத்தினர் இப்படி நடந்து நடந்தே பொழுதைக் கழித்திருப்பார்கள் போலிருக்கிறது! ஏற்றமும் இறக்கமுமாய் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் இது முடியுமோ என்று சந்தேகமாகவும் இருந்தது! அத்தனை பெரிய அரண்மனை நகரின் மையத்தில் மலைப்பின்புலத்தோடு இருக்க, புதிய கட்டிடங்கள் வாசலின் அருகாமையில் வளர்ந்து நிற்கின்றன. தொன்மையும் புதிதுமாய் இரு வேறு காலகட்டத்தில் பயணிக்க வைத்து அதன் வரலாற்றைச் சாற்றி நிற்கிறது. மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பொறாமையாக இருந்தது. இவர்கள் எல்லாம் இந்தியா வந்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஆக்ராவைப் போல அழுக்கான ஊரைப் பார்க்கவே முடியாது. உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலுக்குச் செல்லும் வழியெங்கும் குப்பைக்கிடங்குகள். யமுனா நதியோ...ஹ்ம்ம்😞 இப்படி நினைவுகள் முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டே இருந்தன.
அரண்மனையின் ஒவ்வொரு மண்டபத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தனிக்கட்டுரையாகி விடும். (பிரபலமான கொரியன் தொடர்கள் பலவும் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. கூகிளாண்டவரிடம் கேட்டால் பட்டியலைக் கொடுப்பார். பார்த்து மகிழுங்கள்😜 )
அரண்மனையை விட்டு வெளியே வந்தால் ஓங்கி உயர்ந்த அலுவலக கட்டிடங்கள் புதிய நகரத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்தபடி க்வாங்ஹ்வாமுன்சதுக்கத்திற்கு ( Gwanghwamun Square) வந்தடைந்தோம். விசாலமான, சுத்தமான சாலை!பெரிய பெரிய விளம்பர பலகைகளில் வசீகரித்துக் கொண்டிருந்தார்கள் அழகான 'சிக்' மாடல்கள்!
சதுக்கத்தின் மையப் பகுதியில் ஜோசன் வம்சத்தின் நான்காவது அரசர் கிங் செஜோங்-கின் மிகப்பெரிய உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த அரசராக மட்டுமில்லாமல் 'ஹாங்குல்' என்றழைக்கப்படும் கொரிய எழுத்துத்தொகுப்பை உருவாக்கியதற்காகவும் புகழ்பெற்றவர். அவர் கண்டுபிடிக்கும் வரையில் கொரியன்களுக்கு எழுத்து வடிவம் தெரியாதாம்! எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா? அமர்ந்த நிலையில் ஒரு கையை உயர்த்தி மற்ற கையில் புத்தகம் வைத்துள்ள சிலையைச் சுற்றி அறிவியல், தொழில்நுட்பத்தில் அவர் செய்த பங்களிப்புகளை விவரித்துள்ளனர். சாலையோர அழகான நீரூற்று கோடையில் இதமாக இருக்கும். இப்பொழுது அனைவரும் கவனமாக அதைக் கடந்து சென்றனர்.
சதுக்கத்தின் வட பகுதியில் அட்மிரல் ஈசுன்-சின் வாள் பிடித்து நின்ற நிலையில் இருக்கும் பெரிய சிலை இருக்கிறது. சிலையின் அடித்தளத்தில் இரும்புக் கப்பல் (Turtle Ship) மாடல் வைக்கப்பட்டுள்ளது. கொரியர்களின் நீண்ட நெடிய ரண வரலாற்றிற்கு ஜப்பான் காரணம் என்பதை உலகறியும். அவர்களிடமிருந்து மீண்டு வர மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி நாட்டுப்பற்றுக் கொண்ட படைத்தலைவராக அரசிற்கும் உறுதுணையாக இருந்தவர் என்பதால் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார். கொரியன் தொடர்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தச் சிலைகளின் பரிச்சயம் நிச்சயம் இருக்கும்.
அங்கிருந்து தென் கொரியாவின் பெரிய புத்தகக் கடை, 'கியோபோ புக் சென்டர்' எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சென்றோம். அரண்மனை, க்வாங்ஹ்வாமுன் சதுக்கம் என்று கால்கடுக்க சுற்றியபிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள சிறந்த இடமும் கூட. விசாலமான அடுக்குமாடி கட்டிடம்! ஆங்கில, கொரிய புத்தகங்கள் என்று நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தார்கள். புத்தகம் வாங்க வந்தவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும், வாசிக்க வந்தவர்களுமாய் சிறு கூட்டம். அங்கேயே அமர்ந்து வாசிக்கும் வகையில் அமைதியான இடங்களும் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள் நடக்கும் அரங்குகளும் இருந்தது. பலரும் அங்கே இருந்த காபிக்கடையில் உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு புத்தகத்தில் மூழ்கியிருந்தார்கள். அங்குமிங்கும் சென்றபடி ரோபோ ஒன்று உணவுகளை எடுத்துக்கொண்டு காத்திருந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. வேறு சில தளங்களில் எழுத்துச் சம்பந்தமான பரிசுப்பொருட்கள், பேப்பர், பேனா, ஓவியங்கள் வரைய தேவையானவை என்று அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை! ஒரு தளம் முழுவதும் செடிகள், கொடிகள் என்று இயற்கையாக 'ஜில்'லென்று இருந்தது.
இரண்டு மணிநேரங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை. கும்பல் கும்பலாக அலுவலக கட்டிடங்களுக்கருகே புகைப்பிடிப்பவர்கள் கூட்டம். அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு கட்டிடம் வழியாக நுழைந்தால் தரைதளத்தில் ஒரே உணவகக் கடைகள்தான்! பெயர் புரியாவிட்டாலும் படங்களை வைத்து என்ன உணவு என்று ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
சாலையில் உள்ளூர் தயாரிப்பான ஹ்யுண்டாய் கார்களும், சரக்கு வண்டிகளும், கியா தயாரிப்பு வாகனங்களும் தான். வெகு அரிதாக மற்ற வண்டிகள். ஜப்பான் தயாரிப்புகள் ஒன்று கூட கண்ணில் படவில்லை! உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் போல! நல்ல திட்டம் தான். மதிய நேரம் என்பதால் ஐஸ்பெட்டியில் உணவை வைத்துக்கொண்டு வயதான பெண்கள் பலரும் விற்றுக்கொண்டிருந்தார்கள். 'பிங்க்' வண்ண பேருந்தைப் பார்த்ததும் தமிழக அரசின் மகளிர் பேருந்து தான் நினைவிற்கு வந்தது. ஆக...
நம்மூர் கேரளா மாதிரி சியோலில் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போல! காவல்துறையினரை பல இடங்களில் காண முடிந்தது. வயதான ஆண்களும் பெண்களும் கொடிகளை ஏந்திக்கொண்டு எதையோ சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்கள். அன்றைய பிரதம மந்திரி வலதுசாரி ஹான் டக் சூ வின் ஆதரவாளர்கள். அவர் மீதான வழக்கின் தீர்ப்பு மறுநாள் வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக தண்டனை வழங்கக்கூடாது என்ற போராட்டத்தில் அமெரிக்க கொடிகள்! இவர்கள் ட்ரம்ப் அபிமானிகள்! அப்ப சரி!
இப்படி ஒரு மணிநேரம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி பாரம்பரிய கொரிய கலாச்சாரத்துக்காக புகழ்பெற்ற இன்சாடோங் தெரு (Insadong Street)விற்கு வந்து சேர்ந்தோம். இங்கு பழைய பொருட்களை விற்கும் கடைகள் , கலைக்கூடங்கள், பாரம்பரிய முறைப்படி தேநீர் சுவைக்க, தெரு உணவுக்கடைகள் என்று ஒவ்வொரு கடையையும் அலசி ஆராய்ந்து பசிக்கவே, அருகில் இருந்த GS25 (கொரியன் 7-11 கடை)க்குச் சென்று நூடுல்ஸ் வாங்கி அங்கேயே சூடுபண்ணி சாப்பிட்டோம். குறைந்த விலையில் எளிமையான அவசரடி உணவு. செம காரம்😰
சாப்பிட்டு விட்டு இன்சாடோங் பகுதியில் கலைக்கும் கைவினைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ச்சம்ஜிகில் (Ssamzigil) க்குள் நுழைந்தால் அது வேறு உலகமாக இருக்கிறது ! நகைகள், நினைவுப் பொருட்கள், கொரிய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள் வரிசையாக இருக்கிறது. நடுவே இனிப்பு அரிசி கேக், ஹொட்டோக் போன்ற கொரிய தெரு உணவுகளின் வாசனை வேறு. சுவர்களில் வண்ணமயமான ஓவியங்களும் கலை அலங்காரங்களும் ஒவ்வொரு மூலையையும் புகைப்படம் எடுக்கத் தூண்டியது. ஷாப்பிங் செய்ய பிடிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்கும் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் போல இருந்தது! கலை, கலாச்சாரம், பாரம்பரியம், நவீனம் எல்லாம் இணைந்த ஒரு அனுபவம். நிமிடங்களில் caricature படங்களை வரைந்து கொடுக்கிறார்கள். நியூயார்க்கிலும் நானும் மகளும் சேர்ந்து அப்படி ஒரு படத்தை பல வருடங்களுக்கு முன்பு வரைய வைத்து வாங்கியிருக்கிறோம். இங்கும் அப்படியே செய்து கொண்டோம்.
அங்கிருந்து 'இன்சாடோங் ஹனோக்' கிராமம் வழியாக நடப்பது, பழைய சியோலை நவீன அழகுடன் சேர்த்து வைத்திருக்கும் ஒரு சிறிய உலகுக்குள் அடியெடுத்து வைப்பது போல இருந்தது. குறுகிய சாலைகளின் இருபுறமும் அழகாகப் பாதுகாக்கப்பட்ட ஹனோக் வீடுகள்! இவை இன்று சூடான தேநீர் குடிக்கச் சிறந்த கஃபேகளாகவும், ஆடைகள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளாகவும் மாறியுள்ளன. பாரம்பரியமும் புதுமையும் கலந்த அந்தச் சூழலில், வீடுகளைப் பார்ப்பதா, கடைகளைப் பார்ப்பதா? நூறு வருட பழமையான முற்றத்தில் அமர்ந்து தேநீர் பருகுவதும் இன்பமாக இருந்தது.
குறுகிய தெருக்களில் விதவிதமான உணவுக்கடைகள். பலரும் வரிசையில் காத்திருந்தார்கள். எல்லாவற்றையும் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று ஆசை. அப்போதைக்குப் பார்த்து வைத்துக் கொண்டோம். சலிக்காமல் சுற்றி வர அத்தனை கடைகள் இருக்கின்றன. நேரம் போனதே தெரியவில்லை. எத்தனை கடைகள் இருந்தும் தெருவில் இம்மியளவு கூட குப்பை இல்லை. ஏன் குப்பைத்தொட்டியைக் கூட பார்க்கவில்லை! அதிசயித்தபடி சாலைக்கு வந்தால் எதிர்ச்சந்தில் விடுதி! அடடே! எப்படியோ அரண்மனையிலிருந்து நடந்தே விடுதிக்கு வந்து சேர்ந்து விட்டோம். மொத்தம் 13,000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம்!
ஒரு மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு 4.30 மணிக்குப் புறப்பட்டு மீண்டும் ரயிலைப் பிடித்து உணவுச்சுற்றுலா வழிகாட்டி சொன்ன இடத்திற்குச் சென்று காத்திருந்தோம். சப்-வேயில் எந்தப் பக்கம் செல்வது என்று குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்த பொழுது நம்ம ஊர் ஆள் மாதிரி இருக்காரே என்று ஒருவரிடம் கேட்க, சிரித்துக் கொண்டே வழியைக் கூறி, எங்கிருந்து வருகிறோம் என்று எங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். டெல்லிக்காரர். பத்து வருடங்களாக இருக்கிறாராம். ஆகா!
சரியாக ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார் உணவுச்சுற்றுலா வழிகாட்டி, ஹான். எங்களை அடையாளம் கண்டு கொண்டு அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும் என்றும் குலாப்ஜாமூன், தந்தூரி சிக்கன் பிடித்த உணவுகள் என்று ஒரு வழிகாட்டி எப்படி பேசுவாரோ அப்படி பேசிக்கொண்டே இருந்தார். ஆள் பார்க்க 25 வயது என்று சொல்லலாம். 37 என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். வாரம் ஒருமுறை உண்ணாவிரதம் இருப்பதால் தான் இளமையோடு இருப்பதாக அவரே சொல்லிக்கொண்டார். எனக்கென்னவோ, இந்த கொரியன்கள் இயற்கையாகவே பல நாட்களுக்கு இளமைத்தோற்றத்துடன் இருக்கும் வரம் பெற்றிருப்பதாக தோன்றிற்று. "என்னைப் பார்த்தால் 'ஸ்குயிட் கேம்' ஹீரோ போல தெரியவில்லையா? பலரும் அப்படித்தான் சொல்வார்கள்" என்று பெருமையாக பீத்திக்கொண்டார்😊நான் பார்த்த பல கொரியர்கள் தொடரில் வருபவர்கள் போலத்தான் இருந்தார்கள்!
எங்களுடன் குவைத்தில் இருந்து வந்த நான்கு பெண்களும் இணைந்து கொண்டனர். இருவர் மட்டும் தலையை மூடியபடி இருந்தார்கள். தங்களை 'foodie' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் எதையும் விரும்பிச் சாப்பிடாமல் வீடியோ எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அங்கிருந்து தெரிந்த 'சியோல் டவரை' காண்பித்து சுற்றுலாவை ஆரம்பித்த ஹான், பாலத்தின் மீதேறி பின் இறங்கி நெரிசலான சியோல் நகரின் சொங்க்யேச்சியான் ஓடை செல்லும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இயற்கை ஓடையாக இருந்தது காலப்போக்கில் நகரமயமாக்கல், தொழிற்சாலை, சாலை கட்டுமானங்கள் காரணமாக கழிவுநீரும் மாசுபட்ட நீராகவும் மாறியிருக்கிறது. கான்கிரீட் மறைவுக்குக் கீழே மறைந்திருந்த ஓடையை 2003ஆம் ஆண்டில் நகராட்சி முதல்வர் லீ மியாங்-பாக் புதுப்பித்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் கான்கிரீட்டை அகற்றி, நீரை சுத்தம் செய்து, இயற்கை ஓட்டத்தை மீட்டுள்ளனர். 2005ல் சொங்க்யேச்சியான் மீண்டும் தெளிந்த, அழகான நகர ஓடையாக மாறி, இன்று, நடக்க, ஓய்வெடுக்க, புகைப்படம் எடுக்க சிறந்த இடமாக பிரபலமாகியுள்ளது என்று விளக்கினார்.
அது எப்படி லண்டனில் நாறிக்கிடந்த தேம்ஸ் ஆற்றைச் சுத்தப்படுத்த முடிகிறது? இதோ 11 கி.மீ. நீளமுள்ள ஓடையை இரு வருடங்களில் சுத்தம் செய்து அழகாக்கி இருக்கிறார்கள். சமயங்களில் மீன்களும் நீந்திச் செல்லும் என்று கேட்க, சென்னை கூவம் என்ன பாவம் செய்தது? அதற்காக நிதியை ஒதுக்கியும் முதலை சாப்பிட்டு விட்டது என்று தலைமுறை தலைமுறையாக ஏப்பம் விடும் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குச் சென்று சைக்கிள் ஒட்டி என்ன பயன்? நமக்கு வாய்த்தவர்கள்...ஹ்ம்ம்😡
தெளிந்த நீர் ஓடும் பாதையில் நடந்துசெல்லும் போது, கல் பாலங்களும் கலை அலங்கரித்த சுவர்களும் நகரின் சத்தத்தை மறக்கவைக்கின்றன. இரவு நேரத்தில் விளக்குகள் நீரில் பிரதிபலிக்கும் காட்சி, சியோலின் அழகை சாந்தமாக ரசிக்கச் சிறந்த இடமாக்கியுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் சூரிய அஸ்தமனத்தின் அழகை ரசித்தவாறே 'டோங்டேமூன்' சந்தைக்குள் நுழைந்தோம். இங்கு சந்தை என்றால் அனைத்து வித உணவு வகைகளும் இரவு வரை கிடைக்கிறது. பல்பொருள் அங்காடிகளும் இருக்கின்றன.
சாலையோரக்கடையில் சுடச்சுட 'baked baffle ' சுவைத்தோம். யம்ம்ம்ம். "கொஞ்சம் தான் சாப்பிடணும். இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம்." இங்குள்ள பல கடைகளும் நெட்ஃபிளிக்ஸ் பிரபலமாம். எழுதி வைத்திருக்கிறார்கள். கேமராவும் கையுமாக யூடியூப், இன்ஸ்டா மக்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் எடுத்துக் கொண்டேன். குறுகிய தெரு வழியாக கொஞ்சம் அழுக்கான உணவகத்திற்குச் சென்றோம். ஆனால் நம்மூர் அழுக்கல்ல. பாத்திரங்கள் சிதறியபடி இருக்க, கைடு கொரியனில் ஏதோ சொல்ல, உடனே அடுப்பு பற்ற வைத்து நிமிடங்களில் வந்து விட்டது Tofuவும், கிம்ச்சியும். இத்தனை சுவையான, மெத்துமெத்தென்ற வறுத்த Tofu, பன்னீர் போல சுவையாக. அதனுடன் கிம்ச்சி. ஆகா! இதைச் சாப்பிட்டே வயிறு நிரம்பி விடும் போலிருக்கே! போதும்! என்று அடுத்த இடத்திற்கு கிளம்பிவிட்டோம்.
Bungeoppang , மீன் வடிவத்தில் ஒரு இனிப்பு வகை. ஜப்பானியர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாவில் இனிப்பான ரெட் பீன் பேஸ்ட்டை வைத்து வேகவைத்து செய்யப்படும் பண்டம். மிகவும் பிடித்து விட்டது. எது தான் பிடிக்கவில்லை எங்களுக்கு? அப்படியே வேறு திசையில் நடந்து கொரியாவின் பழமையான சந்தைகளில் ஒன்றான 'க்வாங்ஜாங்' சந்தைக்கு வந்து சேர்ந்தோம். சாலை உணவுகளின் சொர்க்கம் அது! அத்தனை உணவுக்கடைகள்! எங்கும் கூட்டம். பிரபலமான உணவுக்கடைகளில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்கிறார்கள்.
பெரும்பாலும் பெண்கள் தான் கடைகளில் வேலை செய்கிறார்கள். "ஜப்பானுடன் போரிட வீட்டு ஆண்கள் சென்று விட, குடும்பப் பொறுப்புகள் முழுவதும் பெண்களுக்கு வந்துவிட அப்படியே தொடர்கிறது. என்ன? இந்தக் காலத்துப் பெண்கள் தான் ஆண்களை மதிப்பதில்லை. தனித்து வாழ விரும்புகிறார்கள்" என்று அக்மார்க் ஆணாதிக்கவாதியாகப் பேசினார் ஹான்.
உருகி உருகி காதலிக்கும் ஆண்களைத் தான் தொடர்களில் காண்பிக்கிறார்கள். உண்மையில் கொரியன்களும் ஆணாதிக்க சமூகத்தினர் தான். ஆசியா முழுவதும் அப்படித்தான் போல! ஒருவேளை இன்றைய தலைமுறையினர் மாறியிருக்கிறார்களோ என்னவோ?
உணவகங்களில் தேனீக்களைப் போல சுறுசுறுப்புடன் வயதான பெண்களும் வேலை செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது! ஆரோக்கியமாக இருக்கிறார்கள்! அங்கு தான் Bindaetteok (Mung Bean Pancake), பருப்பு மாவு, காய்கறிகள், கிம்ச்சி சேர்த்து செய்த காரமான கொரிய பான்கேக்கை முதன்முதலில் பார்த்து "அப்படியே சாப்பிடுவேனே" என்று அதையும் விட்டுவைக்கவில்லை.
அதற்குப் பிறகு நன்றாக சந்தையைச் சுற்றிக் காண்பித்து ஒரு தள்ளுவண்டி கடைக்கு அழைத்துச் சென்றார். முதன்முறையாக glass noodle, tuna kimbab, mini kimbab,கிம்ச்சி pancake, black bean noodle( jja-pa ghe-tti) ஒன்று விடாமல் "இதுவே எனக்குப் போதும்" என்று எல்லாவற்றையும் சாப்பிட்டோம். 'சூஷி' என்று சொல்வதைத்தான் இவர்கள் 'கிம்பாப்' என்கிறார்கள். நிறைய ஜப்பானிய உணவுகள் பெயரையும் சுவையையும் கொஞ்சம் மாற்றி இருப்பதாக ஹான் கூறினார். அந்தக் குவைத் பெண்கள் உணவைக் கிண்டினார்கள். ஒரு பெண் மட்டும் சுவைத்துப் பார்த்தார். "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் லதா" எத்தனை தொடர்களில் பார்த்து ஜொள்ளு விட்டிருப்பேன். சாப்பிடக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடுவேனா? யம்யம்யம்😋நாங்கள் ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து ஹான்-க்கும் ஒரே சந்தோஷம்.
"வயித்துல இன்னும் கொஞ்சம் இடம் வச்சுக்கோங்க. கடைசியாக ஒரு இனிப்பு பண்டத்துடன் இந்த டூரை முடித்துக் கொள்ளலாம்" என்றவுடன் அடடா! இன்னும் ஒரு ஐட்டம் இருக்கா? என்று கிளம்பினோம். மறுநாள் அந்நாட்டுப் பிரதமர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளிவருவதை முன்னிட்டு உணவகங்களைத் தவிர மற்ற கடைகளைச் சீக்கிரமே மூடிக்கொண்டிருந்தார்கள்.
வெளியே சுடச்சுட Hotteok (ஹோட்டோக்) – கொரிய இனிப்பு ரொட்டி விற்கும் பிரபலமான சாலையோரக்கடைக்கு வந்தால் செம இலவங்கப்பட்டை வாசம்! வாசமே ஒருவித குதூகலத்தைத் தரும். மாவுக்குள் சர்க்கரை, சின்னமன் பவுடர் சேர்த்து பூரி மாதிரி தட்டி சூடான கல்லில் போட்டு நிறைய எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று கொடுக்க, சூடு ஆறட்டும் என்று காத்திருந்து உண்டோம். ஆகா! என்ன சுவை! அடடா!
இரண்டு மணிநேரங்கள் விதவிதமான உணவு வகைகளை ருசிபார்த்ததுடன் எப்படிச் சாப்பிட வேண்டும், அதில் என்னென்ன இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டோம். நல்ல கைடு. பட்டப்படிப்பு படித்து கொரியாவில் பணிச்சுமை தாளாமல் ஆஸ்திரேலியாவில் நான்கு வருடங்கள் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்பி தற்போது சுற்றுலா வழிகாட்டியாக இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். நல்ல ஐடியாவாக இருக்கிறதே! பேசாமல் நானும் பெட்டியை கட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பி இந்த மாதிரி வேலை செய்யலாம் போலயே😄 நமக்குத் தான் சோறு கண்ட இடம் சொர்க்கமாச்சே😁
"நாளை எங்கும் ஊர் சுற்றாமல் பத்திரமாக இருங்கள். பயங்கரமான அடிதடி இருக்கும்" என்று பயமுறுத்திவிட்டு விடைபெற்றார் ஹான். அங்கிருந்து ரயிலைப் பிடித்து விடுதி அருகே இருக்கும் சப்வே வந்து சேரும் பொழுது மணி 7.45. குறுகிய தெருக்களில் வரிசையாக உணவகங்கள். எல்லா இடத்திலும் மக்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் ஏதாவது அசாம்பாவிதம் நடக்கலாம் என்று முன்கூட்டியே அங்கும் பல உணவகங்களை மூடிவிட்டிருந்தார்கள். முதல் நாள் இரவு குழுமியிருந்த கூட்டம் அன்று இல்லை. நேரத்திற்கு வீடு போய் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கு. திராவிட ஆட்சியில் நாம் பார்க்காத அடிதடிகளா? ஆனால் கொரியாவில் அப்படியெல்லாம் இருக்கும் என்பதை நம்பமுடியவில்லை தான்.
உண்ட மயக்கம். காலையிலிருந்து நடையோ நடை. 22000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம். நிறைய உணவுகளையும் ருசித்திருந்தோம். சியோல் நகரம் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெஜூ தீவில் மனிதர்களின் நடமாட்டம் எத்தனை குறைவாக இருந்ததோ அதற்கு நேர்பதமாக இருந்தது சியோல். எங்கும் மக்கள் கூட்டம். தெருக்களில் புகையைக் கக்கிக்கொண்டே புழுதி பறக்கச் செல்லும் வாகனங்கள் குறைவு. பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சாலைகளில் போக்குவரத்திற்குப் பஞ்சமில்லை. மக்கள் சாலை விதிகளை மதித்து நடக்கிறார்கள். போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் காவலர்களும் அதிகம் தென்பட்டனர். சுற்றுலாவினர் , உள்ளூர் மக்கள் என்று இரவு வரை பயமில்லாமல் சென்று வரும் நகரம் உணவுப்பிரியர்களுக்கும் ஷாப்பிங் செய்பவர்களுக்கும் உகந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனக்குப் பிடித்த நகரப் பட்டியலில் சியோலும் சேர்ந்து விட்டது.
அன்றைய நாளின் இனிய அனுபவத்தை அசை போட்டவாறே அடுத்த நாள் பயணத்தைத் திட்டமிட்டுத் தூங்கி விட்டோம்.