Sunday, September 1, 2019

பெத்த மனம் பித்து



வருடங்கள் உருண்டோடி விட்டது! கைகளில் ஏந்திய நாள் முதல் பள்ளிப்படிப்பு முடியும் வரை எத்தனை சீண்டல்கள், கேலி கிண்டல்கள், கோபங்கள், சிரிப்புகள், செல்ல சண்டை சச்சரவுகள்! ஒவ்வொரு வயதையும் தன் குழந்தைத்தனத்தால் எங்களை மட்டுமல்ல அவன் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கவர்ந்திருந்தான் சுப்பிரமணி. பிறந்த சில மாதங்களில் அவனால் ஏற்பட்ட மனவேதனை மறக்க நினைக்கையில் பதினாறாவது வயதில் உயிர் பயத்தையும் கூட்டி இன்று வரை அவனைப் பற்றிய சிந்தனையே என்றும் எந்நாளும் எந்நேரமும்! அம்மாவுக்கு உன்னைய விட என்னைய தான் நிறையப் பிடிக்கும் என்று அக்காவைச் சீண்டுவதிலிருந்து நான் பொறுப்புள்ளவனா இருப்பேன். நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியபடியே அந்த நாளும் வந்தே விட்டது!

அமெரிக்காவில் பெரும்பான்மையான மாணவர்கள் கல்லூரிப் படிப்பிற்காக வீட்டை விட்டு செல்லும் நிலை தான். மேல்நிலைப்பள்ளி முடிக்கும் பொழுதே அவர்களின் தன்னம்பிக்கையும் சுயமாக முடிவெடுக்கும் திறமையும் கூடி விடுகிறது.அவன் கல்லூரிக்குச் செல்லும் நாளை எண்ணி மனம் விரும்பினாலும் என்னை விட்டுத் தூரச் சென்று விடுவான் என்ற வாதை தான் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தது. ஷாப்பிங் எல்லாம் முடிந்ததா?
என்று அக்கா கேட்கும் பொழுது கூட அம்மா பார்த்துக் கொள்வாள் என்ற பதிலில், என்னம்மா இவன் இன்னமும் இப்படியே இருக்கிறான்? கடைசி நாள் வரை நண்பர்களுடன் விளையாடுவதிலும் வெளியில் சென்று சாப்பிடுவதிலும் நாளை கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே என்ற சிறு பதட்டம் கூட இல்லாமல் நான் தான் அதிக படபடப்புடன் இருந்தேன்.

கிடைக்கும் நேரங்களில் அவன் செய்த சேட்டைகளைச் சொல்லிக் குதூகலித்து அவன் இல்லாத வெறுமையான நாட்களை எப்படி கடக்கப் போகிறேனோ... வருந்தும் பொழுது ஜாஸ் கிளாசிக்கல் மியூசிக் கேளும்மா. அமைதியாயிடுவ. நாய்க்குட்டி வாங்கிக் கொடுக்கவா? பிஸியா இருக்கலாம். ஜிம்முக்குப் போய் நல்லா ஃபிட்டா இரும்மா, உனக்குப் பிடிச்ச விஷயங்களைப் பண்ணு. அப்பாவும் நீயும் நல்லா டூர் போங்க... சொல்லிக்கொண்டே போனான். எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டான்? மகள் கல்லூரிக்குப் போன பொழுது இதே போல் வருந்தினாலும் இவன் எவ்வளவு ஆறுதலாக இருந்தான். இப்பொழுது இருவரும் இல்லாத வாழ்க்கையை நினைக்கவே பயமாகவும் வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறதே!

ஏதோ சமீபகாலத்தில் தான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் சேருவதற்கான படிவங்களையும், பெற்றோர்களின் வேலை, சம்பளம் இன்ன பிற ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு முதன்முதலாக சுப்பிரமணி படிக்கவிருக்கும் பள்ளிக்குச் சென்றோம். ஒவ்வொரு குழந்தையையும் தனியே அழைத்துக் கொண்டு சென்றார்கள். சுப்பிரமணியின் பெயரை அழைத்தவுடன் சமர்த்தா பேசிட்டு வாடா என்று அனுப்பி விட்டுக் காத்திருந்தோம். டே கேர், ப்ரீ ஸ்கூல் சென்று வந்ததால் எளிதில் யாரிடமும் பழகுவதிலும் பேசுவதிலும் பிரச்சினைகள் இருந்ததில்லை. அவனை அழைத்துச் சென்ற ஆசிரியை ஐந்து வயதுக் குழந்தையிடம் எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்து, நன்றாக வரைகிறான் என்று அவன் வரைந்திருந்த தாமஸ் தி டேங்க் என்ஜின் படத்தை எங்களிடம் கொடுத்தார். நல்ல ஓவியராக வருவான். நன்றாகத் தெளிவாகப் பேசுகிறான். பள்ளி திறக்கும் நாளைச் சொல்லி விட்டு மற்ற தகவல்கள் பள்ளியிலிருந்து வரும் என்று கூறி விட்டு பை என்று குழந்தையிடம் சிரித்த முகமாகப் பேசி விட்டுச் சென்றார். முகத்தில் கடுமை இல்லை. பெற்றோரையோ குழந்தையோ மிரட்டும் தொனியில்லை. எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ என்ற ஐயம் இல்லை. பள்ளிக்குச் செல்ல ஆசையுடன் காத்திருந்தான். காத்திருந்தோம்.

அவன் வயது சுட்டிப்பையன்களுடன் இனிமையாகக் கழிந்தது அவனுடைய கிண்டர்கார்ட்டன்! சேட்டை சேட்டை அவ்வளவு சேட்டை! சிரித்துக் கொண்டே வகுப்பறையில் அடித்த லூட்டிகளைக் கேட்க ஆனந்தமாக இருக்கும்.

ஒன்றாம் வகுப்பில் அப்பொழுது தான் கல்லூரி முடித்து வந்த இளம் ஆசிரியரிடம் பேச சுப்பிரமணிக்கு அப்படியொரு கூச்சம். கவலைப்படாதீர்கள்! நீங்கள் நிறுத்தச் சொல்கிற வரை பேசும் காலமும் வரும் என்று சொல்லி இருந்தேன். Facts Vs Opinions பற்றி வகுப்பெடுத்தவரிடம்

All schools have doors is a fact.
Ms.Albanese is beautiful is an opinion

என்று எழுதியதை அவர் பள்ளி முழுவதும் ஆசிரியர்களிடம் காண்பித்து, நான் சுப்பிரமணியை அழைத்து வரச் சென்ற பொழுது கண்ணீர் வர சிரித்துக் கொண்டே சொன்ன அதே நாளில் பள்ளியில் பிரபலமாகியிருந்தான். எங்கிருந்து தான் இப்படியெல்லாம் இவனுக்கு யோசனைகள் வருகிறதோ...

பள்ளியில் நடக்கும் பிரத்தியேக தின கொண்டாட்டங்களில் அவனுக்குத் தெரியாமல் வகுப்பு ஆசிரியருக்கு உதவி செய்யச் சென்றால் அவன் நண்பர்களிடம் 'மை மாம் இஸ் ஹியர்' என்று அறிமுகப்படுத்தி ஆனந்திப்பான். எப்படிம்மா வந்தே? என்கிட்டே சொல்லவே இல்லை? அன்று முழுவதும் குஷியாக வளைய வருவான்.

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பிறகு அதில் மூழ்கி வகுப்புகளுக்குத் தாமதமாகச் செல்வது, வீட்டிற்குச் செல்லும் பேருந்தைத் தவற விடுவது, சண்டைன்னு வந்துட்டா களத்தில் இறங்க... பள்ளித்தலைமை ஆசிரியருடன் இவனுக்காக நாங்கள் சண்டை போட்டு ஆரம்பப்பள்ளி நாட்கள் அதகளமாக தான் சென்றது. அவனுடைய நண்பர்கள் அனைவரும் ஒத்த குணமுள்ள வால் பையன்கள்.

நடுநிலைப்பள்ளிக்குச் சென்ற பிறகு வாசிப்பில் நாட்டம் குறைய ஆரம்பித்தது. ஏனோ தானோவென்று தான் படிப்பும். மேல்நிலைப்பள்ளியில் எப்படி இருப்பானோ என்ற கவலை அப்பொழுதே வந்து விட்டது.
மேல்நிலைப்பள்ளியிலும் படிப்பைத்தவிர எல்லாமும் பிடித்திருந்தது. ஜாஸ் இசையில் நாட்டம் கொள்ள, விளையாட்டிலும் ஆர்வம் அதிகமானது. படிக்கிறதிலையும் கவனமா இருடா என்று சொன்னது வருடக்கடைசியில் தான் உறைத்தது அவனுக்கு. மொத்தமாக அட்வான்ஸ்டு பாடங்கள் நான்கை எடுத்து எங்களையும் திணறடித்தான். இதில் கல்லூரி சேர்வதற்கான SAT தேர்வுகளும் வந்து சேர... கவலையே படாமல் வெளிமாநிலங்கள் சென்று படிக்க மாட்டேன். இந்த மதிப்பெண்கள் போதும் என்று நிம்மதியாக இருந்தான். என்னுடைய வற்புறுத்தலுக்காகப் போனால் போகிறதென்று ஒரே ஒரு கல்லூரியைப் பார்க்கச் சென்றோம். அங்கும் நான் தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். கடனுக்கே என்று வந்தான். இந்த கல்லூரி அந்த கல்லூரி என்று விண்ணப்பிக்காமல் இது போதும் என்று அவன் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் இரண்டு மட்டுமே. இவனுக்குப் பிடித்த கல்லூரியில் கிடைத்து விட்ட செய்தி அறிந்த நாளிலிருந்து ஹாப்பி...இன்று முதல் ஹாப்பி மனநிலை தான்!

தேர்வுகள் முடிந்து விட்டது. இனி பள்ளிக்குச் செல்ல தேவையில்லை என்று நன்றாகத் தூங்கியும் நண்பர்களுடன் பொழுதையும் கழித்துக் கொண்டிருந்தான். பள்ளி மூட இரண்டே நாட்கள் இருந்த நிலையில் அவனுடைய ஆங்கில பேராசிரியரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு. உங்கள் மகன் இன்னும் ப்ராஜெக்ட் ஒர்க் முடிக்கவில்லை. அவனைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வந்ததே கோபம்! தூங்கிக் கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பினால் நான் அனுப்பி விட்டேன் என்றான். இல்லை இதோ அனுப்பி விடுகிறேன் என்று அப்பொழுது தான் எழுத ஆரம்பித்தான். கோபம் வந்தாலும் என்ன செய்ய முடிகிறது? தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர. அறிவுரை கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறானே எப்படித்தான் கல்லூரியில் குப்பை கொட்டப் போகிறானோ? இன்னும் ஒரு வாரத்தில் பட்டமளிப்பு விழா. மதிப்பெண் குறைந்தால் என்ன ஆகுமோ என்ற கவலை எனக்கு. வழக்கம் போல்... எனக்கென்ன மனக்கவலை. என் தாய்க்கன்றோ தினம்தினம் என் கவலை மனநிலையில் சுப்பிரமணி.

பள்ளிபடிப்பு முடியும் வரை வீட்டுப்பாடங்கள் ஒழுங்காக செய்கிறானா, தேர்வுகளில் மதிப்பெண்களை தக்க வைத்துக் கொள்கிறானா என்று உடனுக்குடன் பள்ளி ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அவனைக் கண்காணிக்க முடிந்தது. இனி கல்லூரியில் என்ன நடக்கிறதென்று சுப்பிரமணி சொன்னால் தான் உண்டு. மாணவர்களுக்குத் தங்கள் படிப்பில் அக்கறை வரவேண்டும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பும் வர வேண்டும் என்பதற்காக கல்லூரியில் பெற்றோர்களின் தலையீட்டை விரும்புவதில்லை. மாணவர்களும் தங்கள் கடமையை உணர்ந்து நடந்தாலும் அவர்களின் கல்லூரிப்படிப்பு முடியும் வரை பெற்றோர்களுக்கு படபடப்பு தான்!

கல்லூரிக்குக் கிளம்பும் நாளில் கவலை, அச்சம், அழுகையென குழப்பமான மனநிலை எனக்கு. அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொருட்களை அடுக்கி வைத்து விட்டு பத்திரமா இருடா. நேரத்துக்குச் சாப்பிடு. ஒழுங்கா வகுப்புகளுக்குப் போ, உடம்ப பத்திரமா பார்த்துக்க ...சொல்லி முடிப்பதற்குள்... அவனும் அழுகையைக் கட்டுப்படுத்த சிரமப்பட...தினமும் ஃபேஸ்டைம் செய்கிறேன் கவலைப்படாதேம்மா என்ற ஒற்றை ஆறுதலில் தான் இனி எல்லாம். பதினெட்டு வருடமாகப் பொத்தி பொத்தி வளர்த்த குழந்தையைத் தனியே தவிக்க விட்டுவிட்டு வந்த மனவருத்தத்துடனும் கண்ணீருடனும் வீட்டிற்குத் திரும்பினோம்.

மகளும் மகனும் இல்லாத வீடு வெறிச்சோடி சோகையாய்! வாழ்க்கையில் முதன்முதலாக ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்ந்தோம் நானும் கணவரும்!

வகுப்புகள், தேர்வுகள், நண்பர்களென இனி நாட்கள் வெகு விரைவாகச் சென்று விடும் அவனுக்கு! நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்றும் சின்ன பையன் இல்லை. வகுப்புகள் ஆரம்பித்து அவனுக்கென்று நண்பர்கள் வந்தால் எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதே என்று இவர் சொன்னாலும் குழந்தைகள் வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டே நகரும் எதிர்வரும் நாட்கள்.

கல்லூரிக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளை வழியனுப்பும் பெற்றோருக்கு ஆகஸ்ட் மாத இறுதி நாட்கள் மிகவும் உணர்ச்சிகரமான மாதம். நல்ல நண்பர்கள் அமைய, ஒரே அறையில் தங்கி இருப்பவருடன் அணுக்கமாக , சுயமாக எடுக்கும் முடிவுகள் சரியானதாக, ஒழுங்காக வகுப்புகளுக்குச் செல்ல, தேர்வுகள் நல்ல முறையில் எழுத, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே ... நீண்டு கொண்டே செல்லும் கேள்விகள் பெற்றோரை அலைக்கழிப்பது போல, புதுச்சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்ள மாணவ, மாணவிகளுக்குள்ளும் போராட்டங்கள் இருக்கும். பலரும் முதன்முறையாக வீட்டை விட்டுத் தனியாக வந்தவர்களாகவே இருப்பார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கடக்க வேண்டிய பருவம்! மகள் கல்லூரிக்குச் சென்ற நாளில் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். அவளின் வழிக்காட்டுதலில் சுப்பிரமணிக்குச் சிரமங்கள் குறைவு தான் என்றாலும் அவன் தனித்திருந்து எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை நல்ல முறையில் கடந்து வர வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு என்ன பிரார்த்தனை இருந்து விட முடியும்?

சிறகுகளின் அரவணைப்பில்
ஆனந்தித்திருந்தவர்கள்
புதுசிறகு முளைத்து
பறந்து செல்கையில்
கனத்துத்தான் போகிறது
கூடுதிரும்புதலுக்கான
காத்திருப்புகளே
இனி
இயல்பாகிப்போகும்ம்ம்ம்



ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...