Friday, April 26, 2024

ரங்கஸ்தலம்



தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்கள் தமிழ்நாட்டிலேயே அத்தனை இருக்கிறது! சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது தம்பி குடும்பத்தினருடன் 'ரங்கதஸ்தலம்' செல்லும் வாய்ப்பு கிட்டியது. பெங்களூரிலிருந்து 60கிமீ தொலைவில் உள்ள திப்பேனஹள்ளியில் பள்ளிகொண்ட அரங்கனின் 'ரங்கஸ்தலா கோவில்' இருக்கிறது.

 நான்கரை அடியில் ஒரே சாளக்கிராம கல்லில் செய்த கன்னங்கரிய பெருமாள் வசீகரிக்கிறார். சுதந்திர தின விடுமுறை என்பதாலோ என்னவோ திவ்யமான அலங்காரம்! காண கண்கோடி வேண்டும்! ஓரளவிற்கு கூட்டமும் இருந்தது. 'சிறப்புத் தரிசனம், லொட்டு லொசுக்கு' என்று தமிழ்நாட்டுக் கோவில்களைப் போல பணத்தைப் பிடுங்கவில்லை. சுத்தமாக, பளிச்சென்று இருந்தது வளாகம். தூண்களில் செதுக்கியிருந்த சிற்பங்கள் எல்லாம் அத்தனை அழகு.



ஒருமுறை திருச்சி ஸ்ரீரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தோம். அப்பொழுது அவர்கள், ஒரே நாளில் ஸ்ரீரங்கப்பட்டினம், ஷிம்ஷா, ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கனை வழிபடுவது நல்லது என்று காலையில் கிளம்பி கர்நாடகாவில் இருக்கும் இரண்டு கோவில்களில் தரிசனத்தை முடித்து விட்டு அங்கே வந்திருந்தார்கள். அப்படியெல்லாம் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது!
 

ரங்கஸ்தலா கோவிலுக்குச் சென்று வந்த பிறகு தான் தெரிந்தது அந்த மூன்று கோவில்களுடன் நான்காவதாக ரங்கஸ்தலா கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு வந்தால் மோட்சம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. அதனால் தான் ரங்கஸ்தலாவில் ‘மோக்ஷ ரங்கநாதர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் (கர்நாடகா) ஆதி ரங்கமாகவும், ஷிம்ஷாவில் (கர்நாடகா) மத்திய ரங்கமாகவும், ஸ்ரீரங்கத்தில் (தமிழ்நாடு) அந்திய ரங்கமாகவும் உள்ளது. இந்த மூன்று கோவில்களையும் ஒரே நாளில் விடியற்காலை முதல் சாயங்காலம் வரை தரிசனம் செய்வதை 'திரிரங்க தரிசனம்' என்கிறார்கள். ரங்கஸ்தலா ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவில் 'திரிரங்க' தரிசனத்தின் தொடர்ச்சியாகும்.


வசதிகள் இல்லாத பழங்காலத்தில் ஒரே நாளில் மூன்று கோவில்களுக்கும் சென்று வருவதென்பது நிச்சயம் சாத்தியப்பட்டிருக்காது. ஆனாலும் கோவில்களுக்குச் சென்று வருவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இதற்கு முன் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குச் சென்று வந்திருக்கிறேன். அங்குள்ள தூண்கள் ஹொய்சால கட்டிடக்கலையைச் சார்ந்தவையாகவும் ரங்கஸ்தலத்தில் விஜயநகர கட்டிடக்கலையைச் சார்ந்தவையாகவும் இருக்கிறது.





No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...