Tuesday, April 30, 2024

சந்தேஷ்காலி வழக்கு


மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு கிராமம் சந்தேஷ்காலி. அம்மாநில முதல்வரான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜஹான் ஷேக். பல கோடி நியாயவிலைக்கடை விநியோக ஊழல் விசாரணைக்காக ஜனவரி 5, 2024 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள்  ஷாஜஹானின் வீட்டில் சோதனை நடத்த முயன்ற பொழுது உள்ளூர் ஷாஜகானின் ஆட்கள் அமலாக்க அதிகாரிகளை வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்தது மட்டுமல்லாமல் தாக்கியிமுள்ளனர். எங்கேயோ கேட்டது போல இருக்கிறதல்லவா?

ஆம். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்ததாக தற்போதைய முதல்வர் சுடாலினால் முன்பு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை செய்ய செந்தில் பாலாஜி வீட்டிற்குச் சென்ற அரசு அதிகாரிகளையும் அதிலும் ஒரு பெண் அதிகாரியை திமுக குண்டர்கள் தாக்கியது நினைவிற்கு வருகிறது தானே? மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா? எப்படியோ மத்திய அரசு அதிகாரிகள் குண்டர்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி சிறையிலிருந்தாலும் கரூரில் ஜோதிமணிக்காக பரிந்துரைத்தார் என்று செய்திகளில் உலா வந்ததே அது போலவே தலைமறைவாக இருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்கள் ஷாஜகானின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குவதாக அவரது கூட்டாளிகள் கூறியுள்ளனர். அது வரையில் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதாவது மாநில காவல்துறைக்கு. இதுவும் செந்தில் பாலாஜி தம்பியை இன்று வரையில் கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை கைகட்டி நிற்பது போலவே இருக்கிறதல்லவா? ஊழல் வழக்குத் தொடுத்த சுடாலினோ செந்தில் பாலாஜி பத்தரை மாத்துத்தங்கம் என்று வக்காலத்து வாங்குகிறார். எப்படி இருக்கிறது இவர்களின் இரட்டை வேடம்?

இச்சம்பவத்திற்குப் பிறகு ஏராளமான உள்ளூர் பெண்கள், ஷாஜஹானும் அவரது ஆட்களும் தங்கள் நிலத்தை இறால் வளர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக அபகரித்து, பல ஆண்டுகளாகச் சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷாஜகான் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் கூற முன்வந்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இளம்பெண்களைக் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததையும் பல நாட்கள் அவர்களைச் சிறைபிடித்து வைத்திருந்ததையும் கூறியிருக்கிறார்கள். ஷாஜகானை குற்றம் சாட்டுவது மட்டுமல்லாமல், அவரது நெருங்கிய கூட்டாளிகளும் மற்ற டிஎம்சி தலைவர்களும் உத்தம் சர்தார், ஷிபாபிரசாத் ஹஸ்ரா ஆகியோரும் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

கணவன், தமையன், தந்தை என்று ஆண்களால் தங்கள் பெண்களைக் காக்க முடியாமலும் குண்டர்களை எதிர்கொள்ள வழியில்லாமல் பலரும் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஷாஜஹான், ஷிபாபிரசாத் ஹஸ்ராவை உடனடியாகக் கைது செய்யக் கோரி பெண்கள் மூங்கில் குச்சிகள், துடைப்பம் ஏந்தி உள்ளூர் காவல் நிலையங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். பிப்ரவரி மாதத்தில் உள்ளூர் கிராம மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்த நிலத்தில் கட்டப்பட்ட மூன்று கோழிப்பண்ணைகளைப் போராட்டப் பெண்கள் தீ வைத்து எரித்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இவை ஹஸ்ராவுக்கு சொந்தமானது.

இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் பங்கு கொள்ள, ஆளும் கட்சிக்கு நிர்பந்தங்கள் கூடியது. பிஜேபி, சிபி(ஐஎம்), காங்கிரஸ் ஆகியவை "ஆளும் டிஎம்சி நிர்வாகம் ஷாஜகானுக்கும் அவரது ஆட்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருவதாக" குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் டிஎம்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஷாஜகானைத் தவறாகக் கட்டமைக்கப்பதாகக் கூறினர் வழக்கம் போல.

"அவ்வளவு நல்லவன் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும்?"

பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்துப் பேசிய மேற்கு வங்காள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், "இந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் அதிர்ச்சியைத் தருகிறது. பார்த்திருக்கக்கூடாத காட்சிகளையும் கேட்கவே கூடாத வருந்தத்தக்க பல விஷயங்களையும் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானதாகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல்கள் ஒரு சிவில் சமூகத்திற்கு அவமானம்" என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சகத்திற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், சந்தேஷ்காலியில் "ரவுடிஅமைப்புகளுடன்" கைகோர்த்து செயல்படுவதற்காக காவல் துறையைக் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விசாரிக்கச் சிறப்பு அதிரடிப் படை அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கேட்டுள்ளதாகவும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பிறகு தான் பிப்ரவரி 29 அன்று 55 நாட்கள் தலைமறைவு நாடகம் முடிந்து ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இதற்குக் காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக" கூறியுள்ளார். அதுவும் ஆளுநர் சந்தேஷ்காலிக்கு சென்று அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்த நாளில் பானர்ஜியின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி மக்களிடம் இருந்து தங்களுக்கு நான்கு புகார்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், அவர்களில் யாரும் பாலியல் துன்புறுத்தல், வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடவில்லை என்றும் பாரிஷத் காவல்துறை கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் ஊருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஊருக்குள் செல்ல முயன்ற பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் சுகந்தா மஜும்தார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மாநில மகளிர் ஆணையத்தின் குழு சந்தேஷ்காலிக்கு வந்து உள்ளூர் பெண்களிடம் பேசி முதல்வர் அலுவலகத்திற்கு (CMO) அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சந்தேஷ்காலி சம்பவங்கள் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் கீழ் 10 பேர் கொண்ட குழுவை மாநில நிர்வாகம் அமைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் எஸ்சி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான தேசிய ஆணையம் (NCSC) பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்றிருக்கிறது. குழுவின் தலைவர் அருண் ஹல்டர் தலைமையிலான குழுவினர் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபுர்பா சின்ஹா ரே, சந்தேஷ்காலியின் உள்ளூர் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பழங்குடியினரின் நிலம் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டார். ஷாஜஹான் ஷேக் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தேஷ்காலி வழக்கில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 10 அன்று உத்தரவிட்டுள்ளது.

அதை எதிர்த்து மாநில அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் பிரமுகர் ஷாஜஹான் வழக்கில் “சில தனிநபரின் நலன்களைப் பாதுகாக்கும் மனுதாரராக மாநில அரசு ஏன் முன் வர வேண்டும்” என்று மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி அரசிடம் கேட்டுள்ளது. "மாநில அரசு முழு நடவடிக்கை எடுத்தும் மக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் உள்ளன. இது நியாயமற்றது" என்று மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கூறியுள்ளார். விவரங்கள் சேகரிக்க சில நாட்கள் அவகாசம் கேட்ட அரசு வழக்கறிஞருக்குச் சாதகமாக பெஞ்ச் விசாரணையை "விடுமுறை வரை" ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது நீதிமன்றம். ஜூலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காகக் குரல் கொடுப்போம் என்று வேஷம் போடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இப்பொழுது கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு மக்களின் நலன் முக்கியமல்ல. அரசியல் செய்வது ஒன்றே குறிக்கோள். அவர்கள் பின்னால் சென்று கோஷம் போடுபவர்களின் நிலைமை தான் பாவம். பாஜக ஆளும் 'மணிப்பூர்' என்றவுடன் கொந்தளித்த கனிமொழி, காந்தி வகையறாக்களும் திருமாவளவன் கும்பலும் இப்பொழுது வாய் பொத்தி நிற்பதன் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் 'இண்டி' கூட்டணியின் அராஜக அரசியல் விளங்கும். 


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...