Showing posts with label சித்திரைத் திருவிழா. Show all posts
Showing posts with label சித்திரைத் திருவிழா. Show all posts

Tuesday, April 21, 2020

சித்திரைத் திருவிழா


ஏப்ரல் மாதம் அனலாய் கொதித்தாலும், தண்ணீர் திண்டாட்டம் வாட்டி வதைத்தாலும் திருவிழா உற்சாகத்தில் ‘கலகல’வென்றிருக்கும் மதுரை. பத்து நாட்கள் நகர வீதிகளில் தினம் ஓரு வாகனத்தில் மதுரை மல்லி, பிச்சிப்பூ, தாழம்பூ, மனோரஞ்சிதம், முல்லைப்பூ, பன்னீர் பூக்கள் மணமணக்க, மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அலங்காரங்களில் மதுரை அன்னை அவள் வலம் வரும் அழகே அழகு!



யானை, ஒட்டகம், காளையைக் கண்டதும் குழந்தைகள் ஆர்ப்பரிக்க, முரசு சத்தம் சொல்லாமல் சொல்லி விடும் பவனி வரும் உற்சவ மூர்த்திகளையும் உலகை ரட்சிக்கும் அம்மையப்பன் வரவினையும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தாத்பர்யம். மக்கள் திரளாக வந்து இறைவனை ரசிக்கும் திருவிழா. அனைவர் முகங்களும் உற்சாகம் ததும்ப அடுத்த நாள் அலங்காரம், வாகனம், விசேஷம் பேசி கலைந்து செல்வர். அம்மன் வலம்வரும் வீதிகள் ஒளி வெள்ளத்தில் ஜெகஜோதியாக ஜொலிக்க, அலை கடலென திரளும் மக்கள் கூட்டம் காண்பவர் அதிசயிக்க, மதுரை மக்கள் அனுபவிக்கும் திவ்ய திருவிழா நாட்கள்!

பட்டத்து ராணியாக கோலோச்சி வலம் வருகையில் மதுரைப் பெண்கள் அனைவருக்கும் பெருமிதம்🙂 அன்னை அவள் திருமண நாளை தத்தம் வீட்டுத்திருமணமாக பாவித்து மக்கள் கொண்டாடுவதே அழகு. அன்றிரவு பூப்பல்க்கில் மணமணக்க பவனி வரும் அழகிக்காக தவமாக காத்திருக்கும் மக்கள்...அனுபவித்தவர்களுக்கே புரியும் உணர்வு அது.


முத்தாய்ப்பாக அடுத்த நாள் காலையில் தேரோடும் வீதிகளில் கேட்கும் “ஹர ஹர சங்கர” கோஷமும், உருண்டு வரும் பிரம்மாண்டமான தேர்களும்... சிவ சிவா! என்ன தவம் செய்தனை இம்மண்ணில் பிறந்ததற்கு!

திருப்பரங்குன்றத்து முருகனும் வீடு திரும்ப, அழகர்மலையில் கோவிந்தா கோஷத்துடன் நாமம் போட்ட பெரிய விசிறிகளுடனும் உண்டியல்களுடனும் எம்பெருமான் மதுரை நோக்கி வர, வழியெங்கும் கோலாகலமான வரவேற்பு தான்! மதுரையைச் சுற்றி இருக்கும் கிராம மக்களும் சேர்ந்து கொண்டாடும் இனியதொரு வைபவம்!


தல்லாகுளத்தில் பெருமாளின் எதிர்சேவை! இரவு தங்கி விடிகாலையில் மதுரை நோக்கிப் பயணம். இந்த வருடம் என்ன வண்ண பட்டுடுத்தி வருவாரோ? குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் குளிர்விப்பதற்காக அவருடைய பக்தர்கள் வேடமிட்டு தண்ணீர் பீய்ச்ச , வீரராகவப் பெருமாள் வரவேற்க, ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து வந்த அழகு மாலையைச் சூடி வைகை ஆற்று மண்டபங்களில் அவன் எழுந்தருள... இனிப்பான வெல்லமும் சுக்கும் கலந்த எளிய நைவேத்தியத்தை நாமம் போட்ட சொம்பில் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என உளமுருகி வேண்டாத மனமும் உண்டோ?


தங்கை மீனாட்சியின் திருமணம் முடிந்த சேதி கேட்டு வழியிலே திரும்பி வண்டியூரில் இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்கள் பூண்டு பக்தர்களுக்கு காட்சி தந்து மறுநாள் கள்ளழகர் வேடத்தில் அழகர் மலைக்குத் திரும்பிச் செல்லும் சுந்தரராஜப் பெருமாளை அன்புடன் வழியனுப்பும் நாட்கள் தான் எத்தனை இனிமையானவை!

தொலைதூர தேசத்தில் இருந்தாலும் இணையத்தில் வரும் படங்களும் வீடியோக்களும் அதே உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தன. இவ்வருடம் திருவிழா தடைபட்டது மிக வருத்தமாக இருந்தாலும் அடுத்த வருடம் இதற்கும் சேர்த்து கொண்டாடி விடுவார்கள் எம்மக்கள்.

அனைவருக்கும் சித்திரைத் திருவிழா வாழ்த்துகள்! அவரவர் வீட்டில் அம்மையப்பனையும், பெருமாளையும் வணங்கி மகிழ்வோம் 🙂

படங்கள்: இணைய உபயம்🙏🙏🙏

Wednesday, April 24, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி திருத்தேர் ஊர்வலம்

மீனாக்ஷி அம்மன் கோவில் தேர் விளக்குத்தூண் அருகில் இருக்கும் தேர்முட்டியில் தான் நின்று கொண்டிருக்கும். பார்த்தாலே பிரமாண்டமாக இருக்கும் இந்த தேர் அழகான வேலைப்பாட்டுடன் பெரிய சக்கரங்களுடன் இந்த திருநாளுக்காகவே காத்திருக்கும். திருவிழா நேரம் நெருங்க நெருங்க இந்த தேரை சுத்தம் செய்து சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் மக்கள் கூட்டம், அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதை காண விரைந்தோடிக் கொண்டிருக்கும்.

நாங்களும் காலையில் எழுந்திருந்து கூட்டத்தோடு கூட்டமாக போக, வெடிச் சத்தம், முரசு சத்தம் கேட்டவுடன் இன்னும் நடையை விரைவுப்படுத்த, ஆடி அசைந்து வரும் அந்த பிரமாண்டமான தேர் பார்க்கும் எவரையும் வசீகரிக்கும். வாழை மரங்கள் இருபுறமும் கட்டி, தென்னை ஓலைகளால் செய்த மாலைகளும் துணிகளால் செய்த சிவப்பு நிற தோரணங்களும், மணிகளும், தேரை இழுக்க பெரிய வடங்களும், அதை இழுக்கும் மாணவர்கள்,பெரியவர்கள்,குழந்தைகள் என்று கூட்டமும், பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

தேரின் உச்சியில் படப்படத்துக் கொண்டிருக்கும் கொடியும், கால்களை தூக்கிக் கொண்டு இருக்கும் வெள்ளைக் குதிரைகளும், ஒருவர் சாமரம் வீசிக் கொண்டே வர, ஒருவர் மைக்கில் கூட்டத்தை எச்சரிக்கை செய்து கொண்டே வர, அழகு தேவதையாய் தேரில் அம்மன் வரும் அழகையும், இன்னொரு தேரில் அம்மன், சொக்கநாதருடன் தம்பதி சமேதரராக வலம் வரும் காட்சியும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
தேரைக் காண தெற்குமாசி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதும். மாடிகளில், தெரிந்தவர்கள் வீட்டு வாசல்களில் என்று எங்கும் மக்கள் கூட்டம் 'ஜேஜே' என்றிருக்கும். தேர் வரும் வழியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும். மின்சார வயர்கள் கூட மேலே தூக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமால் சென்று கொண்டிருக்கும் தேர் திடீரென்று கூச்சலுடன் நின்று விடும். அதை மீண்டும் இழுத்துப் போவதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனாலும் என்ன, ஆடி அசைந்து வரும் தேரை பார்த்த திருப்தியில் வரும் வழியில் பந்தலில் நீர் மோரோ, பானகமோ குடித்து விட்டு, சில இடங்களில் பொங்கலும் கொடுப்பார்கள் அதையும் வாங்கி சாப்பிட்டு விட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் நாளை எதிர்பார்த்து வீடு திரும்பும் கூட்டம் :)

மதுரை மக்களுக்கு திருவிழாக் கொண்டாட்டம் என்றால் கேட்கவா வேண்டும்?

Tuesday, April 23, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி திருக்கல்யாணம்

மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாண நாளன்று திருமணமான பெண்கள் அனைவரும் புதுப்புடவையையோ அல்லது நல்ல உடையையோ அணிந்து கொண்டு வீட்டில் பூஜை செய்து விட்டு தங்கள் தாலிக்கயிறையையும் மாற்றிக் கொள்வார்கள். பல பெண்களும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்வார்கள். பலரும் அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று அம்மனின் திருமணத்தை நேரில் தரிசனம் செய்து விட்டு அம்மனின் ஆசி பெற்று வருவார்கள். சிலர் விருந்தும் சாப்பிட்டு விட்டு மனம்,வயிறு நிறைய திரும்புவார்கள். இப்பொழுது நேரிடையாகவே ஒளிப்பரப்பு செய்து விடுவதால் போக முடியாதவர்களுக்கும் நேரில் சென்று பார்த்த திருப்தி! என்ன மின்துறை தான் மனது வைக்க வேண்டும்!

அன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மனையும், சிவபெருமானுடன் இணைந்து வரும் கோலத்தையும் பார்க்க கூடும் கூட்டம் இருக்கே!!!

மாலை ஏழு மணியிலிருந்தே சேரும் கூட்டம் நேரம் ஆகஆக நகரக் கூட இடமில்லாமல் பிதுங்கி வழியும். இடி மன்னர்களிடம் இருந்தும் பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்தும் தங்களை பாதுக்காத்துக் கொண்டே கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள், வெடி சத்தம் கேட்டவுடன் ஒரு தள்ளுமுள்ளுடன் அம்மனை எதிர் நோக்க, போலீஸ் பந்தோபஸ்காரர்களும் திமிரும் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருப்பார்கள்.

முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாக பவனி வர, விநாயகர், முருகன், பின்பு வரும் மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித பூக்கள் வாசம் அந்த இடத்தையே மணக்க வைக்க, சிவபெருமானுடன் வரும் அன்னையை, தம்பதி சகிதமாய் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு மனமுருகி வணங்க, அடுத்து, அழகு பூப்பல்லக்கு ஆடி அசைந்து வர, அனைவரும் பயபக்தியுடன் இரு கைகூப்பி வணங்க, சர்வ அலங்கார அன்னையை பார்க்க எட்டி எட்டி பார்க்கும் கூட்டம், இன்னவென்று சொல்ல முடியாத பக்தி பரவசத்துடன் இருக்கும் கூட்டம், காண கண் கோடி வேண்டும்.


மெதுவாக அம்மனின் அழகுப் பூப்பல்லக்கு பார்த்த திருப்தியுடன் மறுநாள் காலை வரவிருக்கும் திருத்தேரைக் காண வீடு திரும்பும் கூட்டம்.

Saturday, April 20, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி பட்டாபிஷேகம்

 திருவிழாவின் முதலாம் நாள் அம்மைஅப்பன் கற்பகவிருட்ச வாகனத்திலும்,  அம்மன் சிம்ம வாகனத்திலும் வந்து அருள் புரிவார்கள். இரண்டாம் நாள், பூத வாகனம் மற்றும் அழகிய அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும், நான்காம் நாள் தங்கப்பல்லக்கிலும், ஐந்தாம் நாள் தங்கக் குதிரை வாகனத்திலும், ஆறாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஏழாம் நாள் யாளி, நந்திகேசுவரர் வாகனத்திலும் என்று வெள்ளி, தங்க வாகனங்களில் வந்து வலம் வருவார்கள்.

எட்டாம் நாள் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்று பட்டாபிஷேகம் முடிந்து கையில் கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் அம்மனைக் காண கூட்டம் கோவில், விளக்குத்தூணிலிருந்து ஆரம்பித்து தெற்குமாசி வீதி,  மேலமாசி, வடக்கு மாசி வீதி என்று அதகளப்படும். குழந்தைகளுடனும், சுற்றங்களுடனும் முன் கூட்டியே வந்து இடத்தை பிடித்துக் கொண்டு காத்திருக்கும் கூட்டம். என் பாட்டி வீடு விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த சந்தில் இருந்ததால் அடித்து பிடித்துக் கொண்டு போகும் கூட்டத்தை பார்த்துக் கொண்டே வாசலில் உட்கார்ந்திருப்போம். சில நேரங்களில் தண்ணீர் பானையும் வெளியில் வைத்திருப்போம்.

ஒன்பதாம் நாள் அம்மனின் திக்விஜயம். அன்று இந்திரவிமானத்தில் வந்து தெரு முக்குகளில் அம்மன் திக்குபாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமானது.

ஒவ்வொரு நாளின் விழாவிற்கும் ஒரு தாத்பர்யம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம் என்று திருவிழா கோலாகலமாக நடக்க, உச்சமாக அன்னையின் திருக்கல்யாணம்!



Monday, April 15, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி விழாக்கோலம்


இன்னும் சில நாட்களில் மதுரை திருவிழா கோலம் பூண்டு விடும். இப்பொழுதே ஆரம்பித்திருக்கும் கூட! மதுரை மக்கள் தங்கள் மீனாக்ஷி அம்மனை பட்டத்து அரசியாக்கி, சிவபெருமானுடன் திருமணக்கோலம் காணத் தயாராகி விடுவார்கள். விடுமுறை நேரமாதலால் குழந்தைகளும் குதூகலமாக அம்மன் கோவில் அலங்காரங்களையும், தினம் வெவ்வேறு வாகனங்களில், அலங்காரங்களில் பவனி வரும் சுவாமியையும், அம்மனையும் காணவும்,  வரும் வழியில் வாய் இனிக்க, உதடு சிவக்க முட்டாய் வாங்கித் தின்னவும் தயாராகி விடுவார்கள் :)

மீனாக்ஷி அம்மன் கோவிலில் கொடியேற்றம் ஆரம்பித்தவுடனே ஆரம்பிக்கும் விசேஷங்கள் ஆற்றில் அழகர் இறங்கி ஊர் போய் சேரும் வரை மதுரையையே அலைக்கழிக்கும்! வெயிலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், அதற்கெல்லாம் அசந்து விடுவார்களா மதுரை மைந்தர்கள்? வெயில் கொளுத்தினாலும், தண்ணீர் பஞ்சம் இருந்தாலும், நகரமே இருட்டில் மூழ்கினாலும் கூட்டம்,கூட்டமாக கோவிலுக்கு போவதில் தான் என்னே ஆனந்தம்!


சித்திரை முதல் நாள், தமிழ் வருடப்பிறப்பன்று பெரும்பாலோனோர் வீடுகளில் செம்மண் கரைத்து அதன் மேல் கோலம் போட்டு மங்களகரமாக ஆரம்பிக்கும்இந்த மாதம் வரும் மாதங்களுக்கும், விசேஷங்களுக்கும் ஒரு பிள்ளையார் சுழி.

சுவாமி வருவதற்கு முன்பு ஒரு வெடி போடுவார்கள். கூட்டமும் சலசலக்க ஆரம்பிக்கும். முதலில் வரும் குதிரை ஒட்டகம், எருது என்று வரிசையாக வருபவைகளைப் பார்த்து குழந்தைகள் ஆர்ப்பரிக்க, விநயாகர் , முருகன் அவரவர் வாகனங்களில் வர, மக்களும் பயபக்தியுடன் எழுந்து நின்று கும்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே ஒளிவெள்ளத்தில் அம்மனும், சுவாமியும், தனியாக அம்மனும் என்று வெள்ளி வாகனங்களில் ஜொலிக்க வரும் காட்சியே அலாதியானது. ஆங்காங்கு நின்று கொண்டே பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு சுவாமி புறப்பட , கூட்டமும் களைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளும் பொம்மை மிட்டாய்க்காரனிடம் போய் கையில் வாட்ச்சோ அல்லது ஏதாவது ஒரு டிசைனோ போட்டுக் கொண்டு ஒரு முறை சப்பி பார்த்து விட்டு அந்த இனிப்புடனும் கையை பார்த்துக் கொண்டும் போவார்கள்.

இன்னும் சிலர் மண்ணெண்ணெய் வாசம் மணக்க பெரிய திரியுடன் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில், வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மிட்டாய் விற்பவர்களை நோக்கிப் போவார்கள். சிவப்பு நிற மிட்டாய் விரைவில் தீர்ந்து விடும், அதை வாயில் போட்டு கடக் முடக் என்று கடிப்பதை விட, வாயிலேயே வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட, ராமராஜன் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி ஆகி விடும் சிறிது நேரத்தில். குழந்தைகளும் யாருக்கு அதிக சிவப்பு நிறம் வாயில் இருக்கிறது என்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே போவதும், இன்னும் சிலரோ குருத்து, மாங்காய், திகர்தெண்டா என்று ஆளுக்கொரு திசையாக போய்க் கொண்டிருப்பார்கள்! ஆப்பிள் பலூன், ஆரஞ்சு பலூன், ஊதுகுழல், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் மூங்கில் குச்சிகள் என்று எதையாவது கேட்டு அழுது கொண்டே போகும் குழந்தைகளையும் பார்க்கலாம்.

ஒரே தெருவிலிருந்து வந்தவர்கள் கூட்டமாக பேசிக் கொண்டே மறுநாள் எத்தனை மணிக்கு வருவது என்று பேசிக் கொண்டே போவதும், சுற்றங்களுடன் வந்தவர்கள் மீண்டும் நாளை பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே பிரிவதுமாய் கூட்டம் களையும். தூரத்தில் மீனாக்ஷி அம்மன் போவதை பார்த்துக் கொண்டே விரைவில் அம்மனின் பட்டாபிஷேகம், திருக்கல்யாண கோலத்தைப் பார்க்கும் ஆவலுடன் வீட்டுக்குத் திரும்பும் கூட்டம்.
















Wednesday, June 13, 2012

மதுரை சித்திரைத் திருவிழா



மதுரையில் எல்லா மாதங்களுமே விசேஷ மாதங்கள் தான். ஒவ்வொன்றையும் என் சிறு வயதில் குடும்பத்துடன் அனுபவித்த நாட்களை அசை போட்டு கொண்டிருக்கிறேன்.

சித்திரை - மதுரையே திருவிழா கோலம் கண்டிருக்கும் நேரமிது. மீனாக்ஷி அம்மன் ஒவ்வொரு இரவும் ( திருவிழா முடியும் வரை ) ஒரு அலங்காரத்தில் பவனி வருவது என்ன? அதை குடும்பத்தோடு மக்கள் கூட்டம் கூட்டமாக பார்க்க போவதென்ன? கலர் மிட்டாய்(வாயெல்லாம் சிவக்கும் ஜவ்வு மிட்டாய்) , வித விதமான பலூன்கள் (ஆப்பிள் பலூன், ஆரஞ்சு பலூன்), வாட்ச் மிட்டாய்( அந்த பொம்மை கையை மடித்து எழுப்பும் ஜல் ஜல் ஒலி என்ன) , மாங்கா, வெள்ளரிக்காய், இளநீர் (மீது காரபொடி தடவி விற்பார்கள், ம்ம்ம்ம், தேங்காய் கொப்பரையில் எண்ணெயில் வறுத்த கடுகை போட்டு கரண்டியால் பொடி செய்து நறுக்கிய மாங்கையைப் போட்டுத் தருவார்கள். என் அக்காவிற்கு மிகவும் பிடித்தது :) ) இன்னும் என்னென்னவோ தின்பண்டங்கள் விற்பவர்கள் என்று சொல்லி கொண்டே போகலாம்.

மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணமும் அன்று இரவு பூப்பல்லக்கும், அடுத்த நாள் தேரோட்டமும் இன்றும் பசுமையாய் என் நினைவில் உள்ளது. சித்திரைத்  திருவிழாவிற்கு முதல் நாளிலிருந்தே ஹனுமான், கருடன் இன்னும் பல வேஷம் போட்டு தண்ணீரைப் பீய்ச்சிக்  கொண்டே குழந்தைகள் புடை சூழ கோமாளிகள் வருவதென்ன, அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று அதிகாலையிலேயே எல்லோரும் எழுந்து குளித்து விட்டு புதுத்துணி உடுத்தி, சீவி சிங்காரித்து கொண்டு வீட்டில் பித்தளை சொம்பை நன்கு 'பளபள'வென விளக்கி, நாமம் போட்டு துளசி அல்லது பூ மாலை கட்டி, சொம்பு நிறைய நாட்டுசக்கரை மற்றும் பொடித்த ஏலக்காய் போட்டு வாழை இலையால் மூடி, சூடம் தீப்பெட்டி எடுத்து கொண்டு வைகைக்கு ஓடுவதென்ன ??

பெருமாளைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக சூடம் கொளுத்தி காற்றில் அணையாமல் கோவிந்தா, கோவிந்தா கோஷத்தோடு சேவிப்பதென்ன, சர்க்கரையை அங்கு உள்ளவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு அவர்கள் சர்க்கரையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு சிநேக புன்னகையுடனும், பெருமாளைப் பார்த்த திருப்தியுடனும், ஓசியாக கிடைக்கும் விசிறி , தொன்னை வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல் வாங்கி அங்கேயே ஒரு பந்தலில் உட்கார்ந்து சாபிடுவது என்ன, சிறிது இளைப்பாறி விட்டு ஸ்டேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு ஆட்டோ/ரிக்க்ஷா பிடித்து வீட்டுக்கு திரும்பி சுற்றம் அனைவருக்கும் சர்க்கரை கொடுத்து விட்டு அன்று இரவு நடக்கும் தசாவதார அலங்காரத்தை எங்கு போய் பார்க்கலாம் என்று யோசித்து அதற்கும் நடையை கட்டுவதென்ன .. இதெல்லாம் கனவாகி விட்டது இப்போது எனக்கு.

அழகர் திரும்பி மலை ஏறும்போது பொதுவாக எங்கள் இனத்தவர்கள் (சௌரஷ்ட்ரா)அழகர் கோவில் போகும் பஸ் பிடித்து , புளியோதரை, தயிர் சாதம், ஸ்வீட் சேமியா/பன் ஹல்வா, சுண்டல், கடலை, காரசேவு, முறுக்கு, அதிரசம் , இன்ன பிற நொறுக்கு தீனிகளை எடுத்து கொண்டு, புதூர்/மூன்று மாவடியில் இறங்கி , கலெக்டர் பங்களா பக்கம் நிழல் இருக்கும் இடத்தில பெட்ஷீட் விரித்து மற்ற நண்பர்கள்/ உறவினர்களுக்காக காத்திருந்து அவர்கள் வந்தவுடன் சாப்பிடுவதென்ன!

அன்று முழுவதுமே அங்கேயே உண்டு இளைப்பாறி வாடிய முகத்துடன் திரும்பியதெல்லாம் ...

மீண்டும் அந்த காலத்துக்குப் போக துடிக்கும் மனது.. மிஸ்ஸிங் மதுரை வெரி மச்😑

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...