Saturday, April 20, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி பட்டாபிஷேகம்

 திருவிழாவின் முதலாம் நாள் அம்மைஅப்பன் கற்பகவிருட்ச வாகனத்திலும்,  அம்மன் சிம்ம வாகனத்திலும் வந்து அருள் புரிவார்கள். இரண்டாம் நாள், பூத வாகனம் மற்றும் அழகிய அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும், நான்காம் நாள் தங்கப்பல்லக்கிலும், ஐந்தாம் நாள் தங்கக் குதிரை வாகனத்திலும், ஆறாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஏழாம் நாள் யாளி, நந்திகேசுவரர் வாகனத்திலும் என்று வெள்ளி, தங்க வாகனங்களில் வந்து வலம் வருவார்கள்.

எட்டாம் நாள் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்று பட்டாபிஷேகம் முடிந்து கையில் கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் அம்மனைக் காண கூட்டம் கோவில், விளக்குத்தூணிலிருந்து ஆரம்பித்து தெற்குமாசி வீதி,  மேலமாசி, வடக்கு மாசி வீதி என்று அதகளப்படும். குழந்தைகளுடனும், சுற்றங்களுடனும் முன் கூட்டியே வந்து இடத்தை பிடித்துக் கொண்டு காத்திருக்கும் கூட்டம். என் பாட்டி வீடு விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த சந்தில் இருந்ததால் அடித்து பிடித்துக் கொண்டு போகும் கூட்டத்தை பார்த்துக் கொண்டே வாசலில் உட்கார்ந்திருப்போம். சில நேரங்களில் தண்ணீர் பானையும் வெளியில் வைத்திருப்போம்.

ஒன்பதாம் நாள் அம்மனின் திக்விஜயம். அன்று இந்திரவிமானத்தில் வந்து தெரு முக்குகளில் அம்மன் திக்குபாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமானது.

ஒவ்வொரு நாளின் விழாவிற்கும் ஒரு தாத்பர்யம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம் என்று திருவிழா கோலாகலமாக நடக்க, உச்சமாக அன்னையின் திருக்கல்யாணம்!



4 comments:

  1. சிறப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. மதுரையைப் பொறுத்தவரையில் பாண்டிய அரசர்களின் ஆட்சி 1310ல் மாலிக்காஃபூர் படையெடுப்பின் பின்னர் நலிந்தது. அதன் பின்னர் மதுரை டெல்லி சுல்தான்களினால் நியமிக்கப் பட்ட கவர்னர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. பின்னாளில் இந்த கவர்னர்கள் டெல்லி சுல்தானுக்கு கட்டுப் படாமல் தங்களை அரசனாக அறிவித்துக் கொண்டு ஆள ஆரம்பித்தனர். வரலாறு இவர்களை மதுரை சுல்தான்கள் என்றே கூறுகிறது.

    ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இவர்களின் ஆட்சியில் ஹிந்துக்கள் பெரிய அளவில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. மதம் மாறாதவர்கள் ஈவிரக்கமில்லாமல் வெட்டிச் சாய்க்கப் பட்டனர். இவர்கள் காலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் முழுமையான மூடப் பட்டேஇருந்தது. மீனாட்சி அம்மன் சிலையும் கூட ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகே ஓரிடத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது.கோவிலின் செல்வம் பெருமளவில் கொள்ளையிடப் பட்டிருந்தது.

    1372ல் விஜயநகர இளவரசரான கம்பண்ண உடையார், மற்றும் இளவரசி கங்காதேவி தலைமையில் வந்த விஜயநகர படையினரே மதுரையை முஸ்லீம் சுல்தான்களை விரட்டி மதுரையை மீட்டன. மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் செயல்பாட்டுக் கொண்டு வந்த பெருமை இவர்களையே சேரும். ஒளித்து வைக்கப் பட்டிருந்த மீனாட்சி அம்மன் சிலையை மதுரைக்கு கொண்டு வந்து மீண்டும் பிரதிஷ்டை செய்தவர்கள் இவர்களே.

    இதன் பின்னர் இவர்களால் நியமிக்கப் பட்ட ஆளுனர்களே மதுரையை ஆண்டு வந்தனர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் நாகம்ம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கரின் விசுவாசத்தை மெச்சி மதுரையை அரசாளும் உரிமையை அவருக்குத் தந்தார். அவருக்குப் பின்னர் வந்த நாயக்க அரசர்களே மீனாட்சி அம்மன் கோவிலையும், அதன் திருவிழாக்களையும் நெறிப் படுத்தினர். அவர்கள் உருவாக்கிய முறையே இன்றளவும் பின்பற்றப் படுகிறது.எனவே சித்திரைத் திருவிழா என்பது நாயக்க அரசர்களினால் உருவாக்கப் பட்ட ஒரு கொண்டாட்டம். முந்தைய பாண்டியர் ஆட்சியில் சித்திரைத் திருவிழா நடந்தது பற்றிய குறிப்புகள் இல்லை......அல்லது அப்படி எதையும் நான் வாசிக்கவில்லை.

    மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு என்பது 2000-2500 ஆண்டுகள் பழமையானது. இந்த வரலாறை ஆதாரப் பூர்வமாய்ச் சொல்லும் ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் புராணங்கள் என்கிற பெயரில் ஏகப்பட்ட கற்பனை கதைகள் மீனாட்சி அம்மனின் மீது பூசி மெழுகப் பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் மீனாட்சி மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தின் அரசி. ஆணாதிக்க சமூகத்தில் முதல் அரசியாக, தனிப்பெருந்தலைவியாக விளங்கியவள், இன்றைக்கும் மதுரை மக்களின் அன்புக்கும் வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரிய தாய்மையின் அம்சம்.

    தாயை, தாய்மையை கொண்டாடுவதில் தவறே இல்லை. கொண்டாடித் தீர்க்கலாம். :)



    ReplyDelete
    Replies
    1. //மீனாட்சி மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தின் அரசி. ஆணாதிக்க சமூகத்தில் முதல் அரசியாக, தனிப்பெருந்தலைவியாக விளங்கியவள், இன்றைக்கும் மதுரை மக்களின் அன்புக்கும் வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரிய தாய்மையின் அம்சம்.

      தாயை, தாய்மையை கொண்டாடுவதில் தவறே இல்லை. கொண்டாடித் தீர்க்கலாம்//

      நூற்றுக்கு நூறு உண்மை, சரவணன்! கொண்டாட்டம் பலவிதமான மக்களையும் ஒன்று சேர்க்கும். மதுரை மக்கள் அந்த விதத்தில் கொடுத்து வைத்தவர்களே!

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...