Monday, April 1, 2013

பாண்டிச்சேரி - 1

 திண்டிவனம்- பாண்டிச்சேரி ஹைவேஸ் பாதையில்,சுங்க சாவடி வருவதற்கு முன் பாண்டிச்சேரி ஊர் எல்லை அருகே இருக்கிறது இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். மிகச் சிறிய எழுத்தில் ஒரு போர்டில் எழுதி இருப்பதால் எளிதில் வழியை தவற விட முடிகிறது. ஒரு சின்ன ஊர் வழியே போனால் கோவிலைப் பார்க்கலாம். இப்பிடியே நேரா போங்க, கோயில் வந்துரும் என்று வழி கேட்பவர்களிடம் பொறுமையாக சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள். இது தனியாரால் நடத்தப்படும் கோவில் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 2011-ல் முதல் முறை இந்த கோவிலுக்கு போன பொழுதே மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்த முறையும் போய் விடுவது என்று போனோம்.

நெடுநெடுவென்ற பஞ்சமுக ஆஞ்சநேயர், நங்கநல்லூர் ஆஞ்சநேயரை நினைவுறுத்தினாலும், பஞ்சமுகத்துடன் விஸ்வரூபமாக காட்சி தருவது இந்த கோவிலின் சிறப்பு. பெருமாள், விநாயகர் சன்னதிகளும் இருக்கிறது. நீண்ட மண்டபம்-நல்ல காற்று, சூரிய வெளிச்சத்துடன்! தொன்னையில் வைத்து நெய் மிதக்க மிளகு காரத்துடன் வெண்பொங்கல் கொடுத்தார்கள். மதிய நேரம் இலவச உணவு சாப்பிட பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் நல்ல கூட்டம் இருக்கிறது. பெரிய சுற்றுப் பிரகாரம். நல்ல தரிசனம், திவ்யமான பிரசாதம் முடித்து விட்டு மெதுவாக வெளியில் கிளம்பி வந்தோம்.

சிறிது நேரத்தில்சுங்க சாவடி தாண்டி பாண்டிச்சேரிக்குள் பிரவேசம். கைத்தடியுடன் காந்தி சிலை வரவேற்க, எங்கும் மணக்குள விநாயகர் பெயர் தான். அவரை அடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் வானாளவ இரு கரம் கூப்பி வரவேற்கும் படங்களும்,போர்டுகளும் ஊரெங்கும்:( பாண்டிச்சேரி ஜிப்மர் வளாகம் தாண்டி குறுகிய சாலைக்குள் போக்குவரத்து நெரிசலில் ஐக்கியமானோம். பலவிதமான கடைகள் - துணி, நகை, பிளாஸ்டிக்...என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே கோவில் இருக்கும் பகுதிக்குள் வந்து விட்டோம்.

வருட கடைசி நாள் வேறு, சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் என்று கூட்டமோ கூட்டம். ஒரு வழியாக காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்தோம். தெருக்கள் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக பிரெஞ்ச் கலவையுடன்! தெருக்களும் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்த வீடுகளும் வேறு விதமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே மணக்குள விநாயகர் கோவில் இருக்கும் தெருவிற்கு வந்து விட்டோம். தாமரை மலர்கள், சிறு,சிறு விளையாட்டுப் பொருட்கள் விற்பவர்கள் கூட்டம் கோவிலுக்கு வருபவர்களிடம் முந்தியடித்துக் கொண்டு வியாபாரம் செய்ய அவர்களை கடந்து கோவிலுக்குள் போனோம்.

6 comments:

  1. மணற்குள விநாயகர் என்பதே திரிந்து மணக்குள விநாயகரானார். இந்த மூலவருக்கு கீழே ஒரு கிணறு இருப்பதாய் சொன்னார்கள். அரவிந்தர், பாரதியாரெல்லாம் இவரின் புகழ்பெற்ற பக்தர்கள். பாரதியால் பாடல் பாடல் பெற்ற பெருமை இந்த மூலவருக்கு உண்டு.பாரதியாரின் நான்மணி மாலை இந்த விநாயகரின் மேல் எழுதப் பட்டதே....

    ReplyDelete
    Replies
    1. இந்த கோவிலில் இவ்வளவு விஷயங்களா! புதுத் தகவல்கள். நன்றி சரவணன்.

      Delete
  2. இனிய பயணம்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. இந்த ஆஞ்சநேயர் கோவில்களின் பின்னே ஒளிந்திருக்கும் போலியான ஆன்மிகம் குறித்து எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. எப்படி யானைக்கு அலங்காரம் பண்ணி தெருத்தெருவாய் பிச்சையெடுக்க வைத்து சம்பாதிக்கிறார்களோ அப்படித்தான் இப்போதெல்லாம், ஊர் ஊருக்கு இப்படி மெகா சைஸ் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டி வருமானம் பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

    நாமக்கல் ஆஞ்சநேயரைத் தவிர்த்து மற்ற பிற மெகா ஆஞ்சநேயர் கோவில்கள் எல்லாம் தனியாருக்குச் சொந்தமானவை. இவர்களின் ஒவ்வொரு அசைவும் வருகின்ற பக்தனிடம் இருந்து பணம் பண்ணுவதாகவே இருக்கிறது. இவர்களை முறைப் படுத்தவோ, நெறிப்படுத்தவோ எந்தவொரு மெக்கானிசமும் இல்லை.

    பச்சையாய் சொன்னால் இவர்கள் குரங்கை வைத்து வித்தை காட்டுகிறார்கள். மற்றபடி ஆஞ்சநேயர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. திராவிட இனத்தின் மாபெரும் வீரன். அசாத்திய சக்திசாலி.... திராவிடனாய்ப் போனதால் குரங்காய் ஆக்கப் பட்டவன். ஆன்மிகத்தின் பேரால் இராமரின் அடியாளாக்கப் பட்டவர்.

    (இவை யாவும் என் தனிப்பட்ட கருத்துக்களே!,இது பதிவின் நோக்கத்திற்கு தொடர்பில்லாதது என்பதால் இதனை நீங்கள் பிரசுரிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை.....) :)

    ReplyDelete
    Replies
    1. சரவணன் - நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. இந்த கோவிலை கட்டியவர்களே பல இடங்களிலும் கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அதன் உண்மையான பின்னணி தெரியவில்லை. கூட்டமும் அவ்வளவாக இல்லை. எப்படி இவ்வளவு பெரிய கோவிலை நடத்த முடிகிறது என்று நானும் எண்ணியதுண்டு.

      கும்பகோணம் அருகிலும் ஒரு பெரிய ஆஞ்சநேயர் கோவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. எந்த நிர்வாகம் என்று தெரியவில்லை.

      இந்த கோவில் என்று இல்லை, எந்த கோவிலிலும் மக்கள் தோஷம், பூஜை, புனஸ்காரம் என்று போனால் வரும் வருமானத்தை விடுவானேன் என்று கிளம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

      மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும் :(

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...