Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Friday, April 10, 2026

The Giant Falls

எங்கு பார்த்தாலும் போர், பொருளாதார நெருக்கடி செய்திகள் என்று சோகமாக இருக்கவே ஏதாவது படத்தைப் பார்க்கலாம் என்று நெட்பிளிக்ஸ்-ல் தேடினால் "The Giant Falls" என்றொரு ஸ்பானிஷ் படம் கண்ணில்பட்டது. சரி என்று பார்க்க ஆரம்பித்தால் முதல் காட்சியே பசுமையுடனும் பெரும் அருவி அருகே படகு செல்வது போன்ற காட்சிகளாலும் கவரப்பட்டு பார்க்க ஆரம்பித்தேன். மிகவும் எளிமையான கதை. ஆர்ப்பாட்டமே இல்லாமல் செல்லும் ஒரு குட் ஃபீல் படம். தந்தைக்கும் மகனுக்குமான உறவை அழுது ஓவர் செண்டிமெண்ட் இல்லாமல் மிக நேர்த்தியாகக் கொண்டு செல்கிறது. அழகான ஒளிப்படக் காட்சிகள், மெல்லிசை, மூடுபனி, 'ஜோ'வென்ற இரைச்சலுடன் அருவி நீர் தெளிப்பது போல படகுப் பயணக் காட்சிகள், பச்சைப்பசேல் மரங்களும் செடிகளும் என இயற்கைக்காட்சிகள், நடிப்பவர்களும் இயற்கையாக நடித்திருந்தது என்று படத்தைப் பார்க்க வைத்து விட்டது.

உலகின் மிக அற்புதமான இயற்கை இடங்களில் ஒன்றான Iguazú National Parkல்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது. இது அர்ஜென்டினா-பிரேசில் எல்லையில் இருக்கிறதாம். கூகிளாண்டவர் சொன்னார். கதைக்களமே ஒரு கதாபாத்திரமாக வலம் வருவதால் காட்சிகள் மிகவும் இயல்பாக அமைந்திருந்தன.

சில படங்களைப் பார்க்க, பார்க்கப் பிடிக்கும். சில படங்களைப் பார்த்தவுடன் பிடிக்கும். கதையும், மாந்தர்களும், களமும் நன்கு அமைந்து விட்டால் அது நல்ல படமாக அமைந்து விடும். இந்தப்படமும் அந்த வரிசையில் தான் சேரும்.

அருவியின் பேரிரைச்சல் கதாபாத்திரங்களின் மனஓட்டத்தையும், மூடுபனி குழப்பத்தையும், அடர்ந்த காடுகள் தனிமையையும் பிரதிபலிப்பதைப் போல இருந்தது. கண்களில் அன்பையும், பாசத்தையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் காட்டும் போரிஸ் கதாபாத்திரம் மிக அருமை. அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த பெண்மணியின் நடிப்பும் அருமை.

வசனங்களை விட, அமைதியாக கடந்து செல்லும் இடங்கள் உணர்வுகளை அழகாகக் கடத்திச்சென்றது சிறப்பு. முடிவு எதிர்பாராத ஒன்று!


பார்த்து ரசிக்கலாம்.

 

Monday, December 23, 2024

அங்கிள் சாமின் உண்மையான முகம்


சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்று பார்த்தால் நம்ம 'மேட் டேமன்'. இவர் நடித்த படங்கள் எல்லாமே பார்க்கிற வகையில் தான் இருக்கும். அவர் இளைஞனாக இருக்கின்ற பொழுது எடுத்த படமென்றால் தொண்ணூறுகளில் எடுத்த படம் என்று தெரிந்து விட்டது. இந்தப் படத்தை இதற்கு முன் பார்த்தது போலவே எங்கள் இருவருக்கும் தோன்றியது. அநேகமாகப் பார்க்க ஆரம்பித்து நடுவில் தூங்கி விட்டிருப்பேன். அதனால் சில காட்சிகள் பார்த்தது போலவே இருந்தது.

தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அமெரிக்காவில் தனியொருவனாக வாழும் ஏழை மாணவர்களின் நிலையை நன்கு பிரதிபலித்திருந்தார்கள். இந்தப்படத்தில் ஏழ்மை, பெருநிறுவன முதலைகள், நீதிமன்றம், குடும்ப வன்முறை என்று அமெரிக்காவின் மறுமுகத்தை நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

நமக்குத் தெரிந்த வாழ்க்கையெல்லாம் இந்திய மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சராசரி அமெரிக்கர்களை விட கூடுதல் வருமானம் ஈட்டும் இந்தியர்கள். கலர்கலராக 'இன்ஸ்டா'வில் போடும் படங்களை வைத்து அமெரிக்க வாழ்க்கை இப்படித்தான் என்று இன்ஸ்டா காலத்திற்கு முன்பு நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது வறுமையின் நிறம் வெள்ளையும் கருப்புமாக இங்கும் இருக்கிறது என்று.

கல்லூரியில் படிப்பதென்பது பலருக்கும் இங்கு கனவாகவே இருந்தது. ஓரளவு வசதி இருந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் என்றிருந்த நிலை இப்பொழுது மெல்ல மாறிவருகிறது. மேற்படி சட்டம், மருத்துவம் பயில ஆண்டுகளும் செலவுகளும் அதிகம் என்பதால் ஏழை மாணவர்களின் பாடு திண்டாட்டம் தான். அரசு உதவி அளித்தாலும் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும். அப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் கதாநாயகனுக்கு. வாடகை கொடுக்க முடியாமல் கதாநாயகன் காரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அங்கே, இங்கே ஏதோ கிடைக்கிற துக்கடா வேலைகளைப் பார்த்துக் கொண்டு சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றான். அதே நேரத்தில் பகுதி நேர வேலையின் மூலமாக மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றில் கட்சிக்காரர்களுக்கு உதவ தானாகவே சென்று ஆஜராகிறான். எப்படியாவது தன் கட்சிக்காரர் ஜெயித்து விட வேண்டும் என்று வெறிகொண்டு உழைக்கும் கதாபாத்திரம். நடுவே ஒரு குடும்ப வன்முறை வழக்கிற்கும் ஆஜராகிறான்.

மகனின் நோய்க்குச் சிகிச்சை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒத்துக்கொள்ள மறுத்து பெற்றோர் செலவழிக்க முடியாமல் மகன் இறந்து விடுகிறான். அவர்களுக்காக காப்பீட்டு நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்கிறான் கதாநாயகன். பெரிய நிறுவனங்கள் ஏழைகளுக்கு உதவ மாட்டார்களே தவிர, தங்களுக்காக வாதாட பெரிய தலைகள் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவைக் கொண்டு நேற்று பட்டம் வாங்கியவனைப் பந்தாடுவார்கள். கோடிக்கணக்கில் செலவிடுவார்கள்!

கதாநாயகன் எல்லா வழிகளிலும் முயன்று நிறுவன மேலதிகாரி வரை விசாரணை செய்து முடிவில் பணத்தைக் கொள்ளையடிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனம் செய்த தகிடுதத்தங்களை வெளிக்கொணர்வான். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் ஆணையிடும். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று நினைக்கும் நேரத்தில் அந்த நிறுவனம் 'திவால்' அறிக்கை அனுப்பி யாருக்கும் ஒரு பைசா கொடுக்காமல் தப்பி விடும். வாதாடிய வக்கீலுக்கோ மகனை இழந்த குடும்பத்திற்கோ எந்த நிவாரணமும் கிடைக்காது. இது தான் 'corporate greed' என்பது.

இப்படி மக்களின் பணத்தை 'காப்பீடு' என்ற பெயரில் வசூலித்தாலும் பெரும்பாலான அமெரிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மோசடி வேலைகள் செய்து வருவது கண்கூடு. மருத்துவர் கோரும் பணம் அதிகமா அல்லது நிறுவனங்கள் அவர்களுக்குப் பாதியைக் கொடுப்பது சரியா? தெரியவில்லை. 'ஒபாமாகேர்' வந்த பிறகு ஏமாந்த சோணகிரிகளிடம் அதிகமாக வசூலிக்கிறார்கள்.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன மேலதிகாரியை ஒருவன் சைலன்சர் துப்பாக்கியால் நியூயார்க் நகரத்தில் சுட்டுக் கொன்று விட்டான். தப்பியோடிய அவனைப் பிடித்தது மட்டுமில்லாமல் தீவிரவாதம் என்ற பெயரில் ராணுவ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிகளில், பொது இடங்களில் சராமாரியாக துப்பாக்கியால் கொல்லும் பைத்தியங்களைக் கூட தீவிரவாதி என்று தண்டனை கொடுப்பதில்லை. கார்ப்பரேட்காரன் ஒருவனைக் கொன்றதற்கு எப்படியெல்லாம் துடிக்கிறது அமெரிக்கா! இது தான் அங்கிள் சாமின் உண்மையான முகம்😩

என்னவோ போடா மாதவா!


Monday, November 11, 2024

அமரன்


'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பிடித்து விட்டது. நண்பர்களுடன் சேர்ந்து நானும் சென்று பார்த்தேன்.

'பயோபிக்' என்பதால் கதையில் சொதப்பல் இல்லை. என்ன அதிசயம்! ராணுவ காட்சிகளை மிகத் தத்ரூபமாக எடுத்திருந்தார்கள். 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்குப் பிறகு கண்கலங்க வைத்த படம்.

'மேஜர் முகுந்த் வரதராஜன்', ஒரு நல்ல மகன், காதலன், கணவன், மிக முக்கியமாக, படைத்தலைவன். தன் குழுவில் இருப்பவர்களின் உயிருக்காக எந்த எல்லை வரைக்கும் சென்ற மகத்தான மனிதன்! முப்பது வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த அற்புத மனிதன்.

உயிருக்கு உத்தரவாதமற்ற நாட்டுப்பணியில் சேர நம்மில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? மனசு வரும்? அதுவும், சாதாரண அரசு சம்பளத்தில்! சுயநலம் பிடித்தவர்கள் நாம். வெகு சிலருக்கே, தன்னையும் தன் குடும்பத்தையும் மீறி, தான் பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கும் துணிவு இருக்கும். அது 'மேஜர் முகுந்த் வரதராஜனின்' வாழ்க்கையைப் பார்க்கும் போது எத்தனை கடினமான மனதையும் அசைத்து விடுகிறது.

முப்பது வயது மகனை இழந்த பெற்றோர்களின் வலி, கணவனுடன் முழுதாக வாழ்ந்த சில அரிய கணங்களைத் தவிர, அவன் நினைவிலே வாழ்ந்த அவனின் மனைவியின் ஆறாத வலி, தந்தைக்கு என்ன ஆனதே என்று தெரியாத ஒரு மகளின் பெரும்வலி. அது தான் இன்று பலரையும் அழ வைத்திருக்கிறது.

ஒரு நல்ல மகனாக, காதலனாக, கணவனாக, தன் படையினரைக் காக்க, எதிரிகளைத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் படைத்தலைவனாக, தன் தேசத்தைக் காக்க, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 'மேஜர் முகுந்த் வரதராஜன்' ரியல் ஹீரோ! ராயல் சல்யூட்!

சிவகார்த்திகேயனின் படங்களிலேயே முத்தாய்ப்பாக அவருக்குக் கிடைத்த வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தி, நன்றாக நடித்து, தன்னை நிரூபித்திருந்தார். சாய் பல்லவி, ஆஸ்கார் விருதுக்குத் தகுதியானவராகத் தன்னை நிரூபித்து விட்டார். அருமையான நடிப்பு!

முகுந்தின் அம்மாவாக நடித்திருந்தவரின் கேலி வசனங்களுக்குப் பின்னால் இருக்கும் வலி, படைவீரர்களின் அம்மாக்களுக்கே உரித்த வலி. என்ன அதிசயம்! கமல் தயாரிப்பு, ரகுமானை/அனிருத்தை இசை அமைக்கக் கேட்காமல், ஜிவிபிரகாஷிடம் கேட்டிருக்கிறது. காது சவ்வு கிழியாமல் படத்தோடு ஒன்றிப் போன இசையை அளித்த ஜிவிபிரகாஷிற்கு ஒரு சபாஷ்! படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.

தான் செய்த பாவங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பரிகாரம் தேடிக்கொள்வது மனித இயல்பு. அப்படித்தான் கமலுக்கும் இந்தச் சந்தர்ப்பம். மற்றவர்களுக்கும்.

வட இந்தியர்கள் அளவிற்குத் தமிழ்நாட்டில் ராணுவத்தினைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் சற்றே குறைவாக இருந்தாலும் ஒரு திரைப்படமாகத் தமிழில் அழகான படத்தைக் கொடுத்திருப்பது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். ஹிந்தியில் ஏராளமான படங்கள் வந்துகொண்டிருக்கிறது.

நம்மிடையே 'முகுந்த் வரதராஜன்கள்' வாழ்ந்து வருவது நமக்குப் பெருமை. இந்தியர்கள் என்ற உணர்வு இருக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நெஞ்சைத் தொடும்.

ஜெய் ஹிந்த்!

ஜெய் பஜ்ரங்பலி!


Sunday, May 12, 2024

ஆர்டிகிள் 370

சில அரசியல் நகர்வுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட ஆவணப்படங்கள் மூலமாகவோ அல்லது திரைப்படங்கள் வாயிலாகவோ தெரிந்து கொள்வது மக்களுக்கு எளிதாகி விடுகிறது. அந்த வகையில் சேர்ந்தது தான் 'ஆர்டிகிள் 370' திரைப்படம். அரசியல் குழப்பங்கள் நிறைந்த ஒரு வரலாற்றைப் படமாக எடுப்பதற்கு முன் அதனைப் பற்றின முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இயக்குநர் அந்த வகையில் தன் பங்களிப்பை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார். சர்ச்சையைத் தூண்டாத வகையில் இந்தப் படத்தைத் தயாரித்ததற்குப் படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

ஒவ்வொரு காட்சியையும் வசனங்களையும் மிக கவனமாகக் கையாண்டு அரசியல் வரலாற்று நிகழ்வை கண்முன்னே தெளிவுற நிறுத்தியுள்ளது இப்படம். முக்கியமாக, ஏன் அரசியல் சாசனம் 370 பிரிவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதைத் தொடர் காட்சிகளாகக் கொண்டு சென்றிருப்பது மிகச்சிறப்பு. பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள், ராணுவ வீரர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், உயிரிழப்புகள், அதைக் கண்டும் காணாமல் அரசியல் செய்யும் கட்சிகள், பிரிவினைவாதிகள் என்று அனைவரின் முகங்களையும் உரித்துக் காட்டுகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் மக்களுக்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது சில கட்சிகள். அதுவும் காஷ்மீர் விவகாரம் என்பது யாருமே எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பதும் அதற்குக் காரணமானவர்கள் யார் யார் என்பதும் நாட்டை நேசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மை கசக்கத்தானே செய்யும்? பொய்ச்செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்க்கிறார்கள் எதிர்க்கட்சிகள். தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆர்டிகிள் 370 மீதான ரத்தை நிராகரிப்பதை ஒரு தேர்தல் வாக்குறுதியாகவே வைத்துள்ளது. படத்தில் சில குறைகள் இருப்பினும் வரலாறு அறியாத தலைமுறைக்கு இப்படத்தின் வாயிலாக உண்மையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் அருமை. நெட்ஃப்ளிக்ஸ்ல் வந்துள்ளது.






Wednesday, May 1, 2024

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்




மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹூடா' கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார். 18 வயதில் தாய்நாட்டுக்காக உயிரை இழந்த தியாகிகளால் கிடைத்த விடுதலையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று உணர வேண்டும்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஸ்ரீ வீர் சாவர்க்கரைப் பற்றி பலர் எதிர்மறையான கருத்துக்களை அரசியல் ஆதாயத்துக்காகப் பரப்புவதை நாம் காண்கிறோம்.அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு இப்படத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும். காந்தியின் அஹிம்சா கொள்கைக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடித்தவர். ஆங்கிலேய அரசிற்கு அச்சத்தை ஏற்படுத்தியவர். அதனாலேயே அந்தமான் சிறையில் இரண்டு முறை ஆயுள் தண்டனை பெற்றவர். சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளை எவ்வளவு எளிதாக மறைத்து அவர் மேல் சேற்றை வாரி வீசிக்கொண்டிருக்கிறார்கள் அற்ப பதர்கள்!

ஒரு தூய்மையான,சுதந்திர தாகம் கொண்ட மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது அத்தனை எளிதல்ல. விடுதலைப் போராட்டங்களையும் அவருடைய வாழ்க்கையையும் பிணைத்து அழகான படமாகக் கொண்டு வந்ததில் முழு வெற்றியடைந்திருக்கிறது திரைப்படக்குழு. 'காலா பாணி' சிறையில் அவர் படும் கொடுமைகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

'இந்துத்துவா' விற்கு அவர் அளிக்கும் விளக்கம் தான் உண்மையானது. அதை வழக்கம் போல திராவிட பாணியில் உருட்டி பொய்யைப் பரப்பி வருகிறது தீராவிடம். படத்தைப் பார்த்தால் பல உண்மைகள் தெரிய வரும். அதை விட, அவரைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டால் அற்பர்களின் பொய் அம்பலமாகும். 

இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். மாணவர்கள் கண்டிப்பாக.

Monday, April 29, 2024

லாபதா லேடீஸ்


'Laapataa Ladies' என்றொரு இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. வெள்ளந்தி மனிதர்களை வைத்துப் பின்னப்பட்ட அழகான கதை. மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் பெண், கணவனுக்காக வாழ விரும்பும் படிக்காத பெண். இருவரும் ஓரிடத்தில் மாறி விட, தொலைந்த நாட்களில் தங்களது சுயத்தைக் கண்டடைவதை இத்தனை எளிமையாக, அழகாகச் சொல்லவும் முடியுமா? 

வடமாநிலங்களில் அதுவும் போதிய பின்தங்கிய கிராமங்களில் இல்லாத இளவயது திருமணம் என்பது நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியபடி துவங்குகிறது படம். புது மனைவி மீது தீராக்காதலுடன் 'ஐ லவ் யூ'  சொல்லி வெட்கப்படும் நாயகன் அனாயசமாக நடித்திருக்கிறார். அந்தச் சிறுபெண்ணும் வெள்ளந்தியாக பெண் என்பவள்திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்று வேலை செய்யவே படைக்கப்பட்டவள் போல அடுப்படி வேலைகள் அனைத்தையும் கற்று கணவன் பெயர் கூட சொல்ல வெட்கப்படுபவள். திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கணவனுடன் ரயிலில் செல்கிறாள். அதே ரயிலில் அவர்களுடைய பெட்டியில் இன்னொரு மணமகனும் மணமகளும் இருக்கின்றனர்.

'கல்யாண மாப்பிள்ளை' என்றாலே கோட்டு சூட்டு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. பொருந்தாத உடையை அணிந்து அதில் யார் துணி உசத்தி? வரதட்சணை எவ்வளவு? என்ன கொடுத்தார்கள் என்று கேட்பது இன்னும் பெண்களுக்கு விடியல் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் கிரண் ராவ். மாற்றார் முன்னிலையில் திருமணமான பெண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் புழக்கத்தில் உள்ள வழக்கம்.  அதில் வரும் குழப்பத்தால் இறங்குமிடம் வந்ததும் தன் மனைவி என்று அதே பெட்டியில் பயணம் செய்த மணப்பெண்ணை இழுக்க கொண்டு இறங்கி விடுகிறான் அந்த இளைஞன்.

ஊருக்குச் சென்று ஆரத்தி எடுக்கும் பொழுது தான் தெரிகிறது அழைத்து வந்தது தன்னுடைய மனைவி அல்ல என்று. தன் மனைவியைத் தேட ஆரம்பிக்கிறான். பணத்தாசை பிடித்த உள்ளூர் காவல்நிலைய அதிகாரி வாயில் பீடாவை குதப்பிக்கொண்டே பேசி... உவ்வே... எங்களுடைய பீகார் பயணம் தான் நினைவிற்கு வந்தது. வெத்தலை போடுவதும் துப்புவதுமே முழுநேர வேலையாகச் செய்து எரிச்சலூட்டுகிறார்கள். கான்ஸ்டபிளாக வருபவர் இதற்கு முன்பு படத்திலோ நாடகத்திலோ பார்த்தாக நினைவு. இவர்கள் இருவரும் வரும் காட்சிகளின் வசனங்கள் 👌 மனைவியைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று பரிதாபமாக வந்து நிற்கும் இளைஞனைப் பார்த்து அவனிடமிருந்து பைசா தேறாது ஆனால் அவன் மனைவியாக வந்திருப்பவளிடமிருந்து கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டு அவளைக் கண்காணிக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. 

யார் என்று தெரியாமலே மகன் தவறாக அழைத்து வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு அவள் கணவனைத் தேடுகிறார்கள்.மேற்படிப்பு படிக்க விரும்பும் சாதூரியமான பெண். தான் தங்கியிருந்த வீட்டில் மூத்த மருமகளின் திறமையைக் கண்டறிந்து அவளுக்கு உதவுகிறாள். திருமணமானாலே பெண்கள் தங்களுடைய ஆசைகளை மறந்து விட வேண்டும் என்பதை மாமியார் கதாபாத்திரத்தில் வருபவர் கூறும் பொழுது பல பெண்களும் அதை உணர முடியும். குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகளுக்காக வாழ்ந்து தங்களது ஆர்வத்தை, ஆசைகளைத் துறந்த பெண்கள் பலர். அதையும் அழகாகச் சுட்டிக்காட்டியது சிறப்பு. 

ஆண் என்றாலே மனைவியை அடிக்கலாம். வரதட்சணையை வெட்கமின்றி கேட்டு வாங்கலாம். பெண்ணைப் பெற்றவர்களை அவமானப்படுத்தலாம். பெண் என்பவள் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற அக்மார்க்தனமான அடாவடி  ஆணிற்கு மனைவியாக நடித்திருந்த பெண்ணும் நடிப்பில் அசத்தியிருந்தார். பெண்ணிற்குத் திருமணம் தான் முக்கியம் அதுவும் அவளுடைய கனவுகள், ஆசைகளைக் கேட்ட பிறகும் வீட்டில் திணிக்கப்படும் வன்முறை நாடகம் என்று பெண்களின் அவதியை ஒன்று விடாமல் காட்டியுள்ளார்கள்.

கணவனைத் தொலைத்தபிறகு நடைமேடையில் அழுது கொண்டு ஊர் பெயரும் தெரியாமல் பயந்த விழிகளுடன் நடித்திருந்த பெண்ணும் அமர்க்களம். அவருக்கு உதவுபவர்கள், அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து அந்தப் பெண் கற்றுக்கொள்வது என்று காட்சிகள் அழகாக நகர்கிறது.

நடைபாதையில் கடை வைத்திருக்கும் பெண், தன் சம்பாத்தியத்தில் கணவரும், மகனும் வாழ்ந்ததால் அவர்களை விரட்டி விட்டு நிம்மதியாக இருப்பதாகக் கூறுவார். அப்பொழுது அந்த வெள்ளந்திப் பெண், தனியாக இருக்க பயமில்லையா என்று கேட்பாள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் யாரையும் அண்ட விடுவதில்லை என்று போகிற போக்கில் முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லிக்கொண்டே போவது போல காட்சிகள் மிகச்சிறப்பு.

எப்போதாவது இப்படியொரு படத்தை இந்தியிலும் கூட எடுத்து விடுகிறார்கள். 

தமிழ்த் திரையுலகம் தான் கதையும் இல்லாமல் அதிக செலவுகள் செய்து யார்  யாரையோ திருப்திப்படுத்த அலங்கோலமாக படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! 


Sunday, March 17, 2024

மஞ்சும்மல் பாய்ஸ்

உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆரம்பத்தில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் படத்தைப் பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர். சபாஷ். ஒரு நல்ல படத்திற்கு குத்தாட்டமும் பெரிய நடிகர் பட்டாளங்களும் தேவையில்லை. அதுவும் மலையாளப் படங்களில் அதெல்லாம் ஒரு பெரிய விஷயமும் இல்லை. ஏனென்றால் அவர்களிடம் நல்ல கதை இருக்கிறது.தமிழ் திரைத்துறை உலகமோ கோடிகளில் பெரிய நடிகர்களுக்கு கொட்டிக் கொடுத்து கதையில்லாமல் தலையில்லாத கோழிகள் போல திசை அறியாது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் இது நல்ல படம். போகிற போக்கில் இளைஞர்களின் அதீத ஆர்வம், குடியால் ஏற்படும் இன்னல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஊரில் சிறு வேலைகளைச் செய்யும் சாமானிய நண்பர்கள் குழாம் ஓணம் பண்டிகை விடுமுறையின் போது எங்குச் செல்வது என்று தீர்மானித்து கொடைக்கானல் செல்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே 'குணா' படப்பாடலான 'கண்மணி அன்போடு ,...நான் ... நான் எழுதும் கடிதம்...' என்று கேட்டவுடன் மதுரையில் 'வெற்றி' திரையரங்கத்தில் ஒரே ஆராவாரம்! எத்தனை நாட்கள் ஆயிற்று இப்படிப்பட்ட ரசிகர் பட்டாளங்களுடன் படத்தைப் பார்த்து! இதே திரையரங்கில் தான் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் படத்தை விட குழந்தைகள், பெரியவர்களின் எதிர்வினைகள் தான் ரசிக்கும் படி இருந்தது. இந்தப்படத்திற்கு அதிகம் இளம்பெண்களும், ஆண்களும் வந்திருந்தார்கள்.

எங்கள் அருகில் தாயுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் என்ன நடக்கிறது என்று சதா அவன் அம்மாவைப் போட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான். அவரும் பொறுமையாகக் காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார். மலையாளப் படம். 'சப் டைட்டில்' ஆங்கிலத்தில் வருகிறது. தமிழில் வந்திருந்தால் சிறுவர்களும் ரசித்துப் பார்த்திருப்பார்கள். திரையரங்கில் முக்கால் சதவிகிதம் நிறைந்து விட்டிருந்தது. மக்களின் மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. நல்ல படம் எந்த மொழியில் இருந்தாலும் வெளிமாநிலங்களில் கூட வெற்றி பெறுகிறது.

இப்பொழுது இந்தப் படம் இன்னும் அதிக கவனம் பெறும். திரு.ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய பாணியில் இந்தப் படத்தை விமரிசித்திருக்கிறார். மலையாளிகளை "குடிகார பொறுக்கிகள்" என்று காறி உமிழ்ந்திருக்கிறார். என்னவோ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் குடிப்பக்கம் தலையே வைக்காதவர்கள் போல. தமிழர்களையும் இதே போல வசைபாடுவாரா? பொது இடங்களில் இந்த குடிகாரர்கள் செய்து கொண்டிருக்கும் அநாகரீக செயல்களைக் கண்டிப்பாரா? அழகான மலைப்பிரதேசங்களில் பாட்டில் குப்பைகள். அதுவும் உடைந்த நிலையில். அங்குச் செல்லும் மனிதர்கள், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில்.

இன்றைய நாளில் கொண்டாட்டம் என்றால் குடி, ஆட்டம், பிரியாணி என்றாகிவிட்டிருக்கிறது. பாவம்! வாழ்க்கை என்றால் இதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது பகுத்தறிவில்லாத சமூகம். இப்பொழுது போதை மருந்துகளும் சேர்ந்து விட்டிருக்கிறது.

'குணா' குகைக்குச் சென்ற பலரும் இந்தப்படத்தைப் பார்த்தவுடன் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்திருப்பார்கள். உணராதவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. அடிபட்டுத் தான் திருந்துவார்கள்.

 

Tuesday, December 26, 2023

The Hundred-Foot Journey


எதையோ தேடிக் கொண்டிருந்த பொழுது கண்ணில் பட்ட இப்படத்தில் ஜூஹி சாவ்லா, ஓம்பூரி மற்றும் சில இந்திய நடிகர்களும், உணவைப் பற்றினதாகவும்😃 இருக்கவே பார்க்கலாமென ஆரம்பித்தேன். மும்பையில் உணவகம் நடத்திய குடும்பம் ஒன்று அரசியல் வன்முறையாளர்கள் நடத்திய தீவிபத்தில் குடும்பத்தலைவியை இழந்த பிறகு லண்டனுக்கு குடிபெயர்ந்து பிறகு பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்கிறார்கள். அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் அவர்களுடைய கதையைக் கேட்டு அனுமதிக்க(!), உணவகம் துவங்கும் ஆசையில் அப்பாவும், அரைகுறை மனதுடன் இளைய மகனும் இந்திய உணவின் சுவையை அறிந்திராத பிராந்தியத்தில் எப்படி உணவகம் வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற தயக்கத்துடனும் கேள்வியுடனும் விருப்பமில்லாமல் மூத்த மகனுடன் வந்து சேர்கிற ஊரின் அழகு, ஓவியமாக கண்களுக்கு விருந்தளிக்கிறது. அச்சிறு நகரில் பிரபலமாக இருக்கும் அந்நாட்டு உணவகத்திற்குப் போட்டியாக ஆரம்பித்து எப்படி வெற்றிப் பெறுகிறார்கள் என்பதே கதை.

அம்மாவின் கைப்பக்குவமும், குறிப்புகளும் இயற்கையாகவே உணவுத்தயாரிப்பின் மேல் இருக்கும் ஈர்ப்பும் இரண்டாவது மகனைப் பிரபலமாக்கி போட்டியாக நினைத்தவர்களுடன் கரம் கோர்க்க வைத்து இறுதியில் சுபம்.

புலம் பெயர்ந்து செல்பவர்களின் கனவு அம்மண்ணில் நனவாவதென்பது அத்தனை எளிதல்ல. அதுவும் அந்நாட்டு மொழி அறியாமல், அவர்களுடைய உணவு விருப்பத்திற்கு முற்றிலும் வேறுபட்ட சுவை கொண்ட இந்திய உணவை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதென்பது சவாலான வேலை தான். தன்னாட்டிற்கு வந்தவர்களை வேற்றுப்படுத்திப் பார்க்காமல் அவர்களுடைய உரிமைகளையும் காக்கும் மேயர், தொடக்கத்தில் வித்தியாசமாகப் பார்த்து பின் அவர்களையும் ஏற்றுக் கொள்ளும் அவ்வூர் மக்கள் என அயல் நாட்டிற்குச் செல்லும் பலரும் எதிர்கொள்வதை நன்கு காட்டியிருந்தார்கள். புலம்பெயரும் அயல்நாட்டவர்களை வெறுப்புடன் பார்க்கும் உள்ளூர் மனிதர்கள் எங்குமிருக்கிறார்கள். இதிலும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து தன்னுடைய திறமையினால் சமையல் விற்பன்னர்களுக்கான உயர் விருதைப் பெறுகிறான் இரண்டாவது மகன் என்பதில் முடிகிறது கதை.

ஃப்ரெஞ்ச் மக்களுக்கே உரிய திமிருடன் ஹெலன் மிர்ரன் ஆரம்ப காட்சிகளில் வந்தாலும் கதை இப்படித்தான் போகும் என்று தெரிந்தாலும் புறநகரின் மக்கள் வாழ்க்கை, எழில் கொஞ்சும் காட்சிகள் கண்ணுக்கு விருந்து.

படம் ஒகே ரகம்.

'நூறு-அடி பயணம்' என்பது ஒரு புதிய இந்திய சமையலறைக்கும் பாரம்பரிய ஃப்ரஞ்சுக்கும் இடையிலான நூறு அடி தூரம். வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் விருப்பங்களுக்கு இடையிலான இடைவெளியை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றிய புதினத்தின் அடிப்படையில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

சுவையான உணவின் வெற்றி என்பது அன்புடன், காதலுடன் உணவைத் தயாரிப்பதிலும் புதுச்சுவையை அளித்து மனமகிழ வைப்பதிலும் தான். தினம் தினம் அதைச் செய்யும் நாமெல்லாம் பல மிஷெல்லின் விருதுக்குரியவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டேன் 😉😉😉




Friday, December 8, 2023

தி சீக்ரெட்: டேர் டு ட்ரீம்

ரோண்டா பைரனின் 'தி சீக்ரெட்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் 'தி சீக்ரெட்: டேர் டு ட்ரீம்'. தற்பொழுது நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளிவந்துள்ளது. எளிமையான கதை தான். அதைச் சொல்லிய விதமும் அழகான படக்காட்சிகளும் இந்தப்படத்தை அழகிய பொழுதுபோக்குப் படமாக்கியுள்ளது. நடிப்பவர்கள் மெனக்கெட்டு இயற்கையாக நடிக்கிறேன் பேர்வழி என்று செயற்கையாக நடிக்காமல் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.

மூன்று குழந்தைகளுடன் தனியாளாகப் போராடும் கதாநாயகி. யதார்த்த அமெரிக்க வாழ்க்கை. இங்கு நான் பழகிய நண்பர்கள் பலரும் வீடு, வண்டிகளுடன் வசதியாக வாழ்வது போல இருந்தாலும் அந்தந்த வார/மாதச் சம்பளத்தை எதிர்பார்த்துதான் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டே செலவு செய்வார்கள். அப்படித்தான் கதாநாயகியின் வாழ்க்கையும். குழந்தைகள் கேட்கும் பீட்ஸா கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழலில் இருப்பாள். அவள் வாழ்வில் வரமாக வருகிறான் கதாநாயகன். அதனால் வரும் மாற்றங்கள் தான் கதை.

கன்னக்குழி அழகன் ஜாஷ் லூகாஸ் கதாநாயகன்😍. மென்மையான கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக பொருந்தும் முகமும், குரலும், நடிப்பும். 98களில் பிரபலமான 'டாசன்ஸ் க்ரீக்' தொடரின் நாயகி கேட்டி ஹோம்ஸ். டாம் குரூயிஸின் முன்னாள் மனைவி. அநியாயத்திற்கு இளைத்து வயதானவர் போல இருந்தாலும் கதாபாத்திரத்திற்குப் பொருந்துகிறார்.

நீண்ட பாலம், கதாநாயகியின் வீடு, மாலை நேரம், மழை என்று அழகுக்காட்சிகள்! பொதுவாகவே சிறுநகரங்களில் நடக்கும் கதைக்களங்களில் ஒரு ஜீவன் இருக்கும். இந்தப்படத்திலும் இருந்தது.

காதல் என்பது உணர்வுப்பூர்வமானது. அவரவர் வசதிக்காகவோ நிர்பந்தத்தினாலோ வருவது அல்ல. என்பதை அழகாகச் சொல்கிறது படம். ஏதோ ஒரு சொல்லவியலாத ஈர்ப்பு இருவருக்கும் இடையே. அவனிடமிருந்து அவளுக்கும் அவளிடமிருந்து அவனுக்கும் குறுஞ்செய்திகள் வந்துவிடாதா என்ற பரிதவிப்பு. இருவரும் ஒருவரை ஒருவர் காணச் சென்று சந்திக்க முடியாமல் சாலைகளில் பயணிக்கும் பொழுது அசடு வழிந்து செல்போனில் உரையாடி 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்ம்ம்ம்ம்...' என்று தொடரும் காட்சிகள் 💖💖💖

படம் முழுவதும் கதாநாயகன் மிகவும் நேர்மறையாகப் பேசி மற்றவர்களைக் கவருவான். பார்க்கும் நம்மையும் தான். நிஜ வாழ்க்கையில் இப்படியான அரிதான மனிதர்கள் கிடைப்பது வரம்! ஹ்ம்ம்! நம் எண்ணங்களே நம் வாழ்க்கையாகிறது. நேர்மறை எண்ணங்களும் நேர்மறை வார்த்தைகளும் நம் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதாக கதை. 

இனி  'தி சீக்ரெட்' புத்தகத்தைப் படிக்க வேண்டும்😎

“The more you think about something, the more you draw it to you.”

Tuesday, September 12, 2023

The Courier

மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நிகழ்ந்த நிகழ்வினை விறுவிறுப்பாக படமெடுத்திருக்கிறார்கள். காலத்திற்கேற்றவாறு வண்டிகள், நடிப்பவர்கள் உடைகள், ஆடைகள், தோரணைகள் என்று எப்படித்தான் பீரியட் படங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்கள் தொடங்கி சுவர் அலங்காரங்கள், அலுவலகங்களில் இருக்கும் தொலைபேசிகள் என்று சின்னசின்ன விஷயங்களில் கூட அத்தனை கவனம் செலுத்தியிருந்தார்கள். ஹாலிவுட் பீரியட் படங்களை மிஞ்சவே முடியாது என்பதற்கு இந்தப்படமும் ஒரு சான்று. செய்தித்தொடர்பு வளர்ச்சி அவ்வளவாக இல்லாத காலத்தில் உளவுத்துறை எப்படி எல்லாம்செயல்பட்டிருக்கும் என்று நினைத்தாலே பதட்டமாகத் தான் இருக்கிறது!

ரஷியா என்றாலே 'KGB' என்பதும் அதன் கொடுரமான தண்டனைகளும் நினைவிற்கு வரும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாவிற்கிடையே நடக்கும் செய்திப் பரிமாற்றங்கள். எப்படி சாத்தியாமாகிறது? நம்மைப் போல மனிதர்கள் எப்படி உளவு பார்க்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். எப்படி படம் முடியுமோ என்று ஒவ்வொரு காட்சியையும் அதனோடு இழைந்து வரும் இசையும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது. ஒரு நிமிடம் கூட கவனத்தைச் சிதற விடாமல் பார்க்க வைக்கும் படம். நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். அனாவசிய காட்சிகள் இன்றி அழகாக கொண்டு சென்றது சிறப்பு.

ரஷ்யாவில் உயர் பதவியில் இருக்கும் நல்ல மனிதர் அவருடைய கனவு நகரத்தில் வாழ முடிந்தததா? இங்கிலாந்து தொழிலதிபர் KGBயிடம் மாட்டினாரா? இவர்களை இங்கிலாந்து, அமெரிக்க உளவுத்துறைகள் எவ்விதம் கையாண்டன என்று பதைபதைப்புடன் அருமையாக எடுத்திருந்தார்கள். பல நாட்களுக்குப் பிறகு பார்த்த ஒரு நல்ல படம்.

"The Courier" அமேசான் பிரைமில் காண கிடைக்கிறது.


The Banshees of Inisherin

 

படத்தின் சில காட்சிகளைப் பார்த்தவுடனே முழுப்படத்தையும் பார்த்தே தீருவது என்று நானும் ஈஷ்வரும் தீர்மானித்தோம். 2021ல் சென்று வந்த அயர்லாந்தை நினைவூட்டியது பெரும் காரணம் என்றாலும் இந்தப் படத்தில் நடித்துள்ள இரு நடிகர்களின் படங்களையும் பார்த்திருக்கிறோம் என்பதாலும் தான். தேர்ந்த நடிகர்கள். வேறு என்ன வேண்டும்?

ஆரம்பக்காட்சியே அமர்க்களமாக இருந்தது. அயர்லாந்தின் பரந்த நிலப்பரப்பும் ஜொலிக்கும் அட்லாண்டிக் கடலும் நீல வானமும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழகிய பழங்காலத்து வீடுகளும் கற்களால் எழுப்பப்பட்ட சுற்றுச்சுவர்களும் காட்சிக்குக் காட்சி அழகு சேர்க்கிறது.அந்நாட்டு மக்களின் ஆங்கிலம் வேறு ராகத்துடன் பேச, கேட்க அழகாக இருந்தது. சப்டைட்டில் வசதி இருப்பதால் புரிகிறது மாதவா!

இங்கிலாந்தின் கீழ் அயர்லாந்து இருக்கும் பொழுது உள்ளூர் சண்டைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை. அங்குள்ள கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்பது தான் பிரதான தொழில். இங்கும் அப்படியே. நாங்கள் அங்குச் சென்றிருந்த பொழுது சிலரைச் சந்தித்துப் பேசுகையில் பலரும் கட்டிட வேலை செய்பவர்களாக இருந்தார்கள். நகர்ப்புறங்களுக்குச் சென்று வேலை செய்து விட்டு வீடு திரும்புவது வாடிக்கை என்று கூறினார்கள். ஒவ்வொரு ஊரிலும் தேவாலயங்கள் இருந்தது. இந்தப்படத்திலும் ஞாயிறு அன்று தேவாலயத்திற்குச் செல்லும் காட்சிகளில் மட்டுமே சில மனிதர்கள் வருகிறார்கள்.

நீண்ட கால நண்பர்கள் இருவரிடையே வரும் பிரிவினை. தான் என்ன தவறு செய்தோம் என்று புரியாத வெள்ளந்தியான கிராமத்து மனிதன். மன்னிப்பு கேட்டு நட்பை எப்படியாவது தொடர விரும்புபவன். "நீ ஒரு முட்டாள். உன்னோடு என் பொன்னான நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. இசையில் எதையாவது சாதிக்க விரும்புகிறேன்." என்று சில காரணங்களைக் கூறி திடீரென மாறிவிட்டிருக்கும் இன்னொருவன். இவர்கள் இருவரும் படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நடுவில் வேறு சில முக்கிய கதாபாத்திரங்கள்.

இந்த ஊரில் இரண்டு கொலைகள் நடக்கப்போகிறது என்று சூனியக்காரி தோற்றம் கொண்ட பக்கத்து வீட்டுக் கிழவி சொல்வது நடக்கிறதா? வெறுப்பு என்பது எந்த எல்லை வரைச் செல்லும்? மனித மனம் எப்படியெல்லாம் மாறும்? என்பதை அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அருமையான ஒளிப்படக்காட்சிகள் வேறு படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

ஐரிஷ் பின்னணி என்றால் குடிக்கும் காட்சிகள் இல்லாமலா? மது அருந்துவது அவர்களின் கலாச்சாரத்தின் அங்கம். அதன் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் அருமை. பெரும் நடிகர்கள். அழகான ரசிக்கத்தகுந்த கவிதைகளைப் போல நகரும் காட்சி அமைப்புகள் என்று படத்தை ரசிக்க வைக்கிறது.


(Hulu) ஹுலுவில் வெளிவந்திருக்கிறது. கண்டுகளியுங்கள்😊

Thursday, August 3, 2023

பார்பி

கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பிறகு தான் பார்பி பொம்மையின் அறிமுகமே எங்களுக்குக் கிடைத்தது. ஏதோ ஒரு நெகிழிப் பொம்மை என்று நினைத்தது எவ்வளவு தவறு. கடைகளில் விதவிதமான பார்பி பொம்மைகளைப் பார்த்தவுடன் தலையே சுற்றிவிட்டது. ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பெயர். சிறுவயதுப் பெண்குழந்தைகள் அதன் மேல் அத்தனை காதலாய் இருந்தார்கள். இப்படி ஏதாவது ஒரு பொம்மையைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் குழந்தைகள் அதற்குத் தலைசீவி விடுவார்கள். விதவிதமாக உடையை அணிவித்து மகிழ்வார்கள். டீபார்ட்டி வைத்துக் கொண்டாடுவார்கள். அதற்குப் பிறகு 'பாலி பாக்கெட்', 'கேபேஜ் பேட்ச் கிட்ஸ்', 'அமெரிக்கன் டால்ஸ்' இன்னும் பல பொம்மைகள் வெளிவந்தது. அவரவர் பர்சின் கனத்தைப் பொறுத்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்கள் பெற்றோர்கள். இந்தியாவிற்குச் சென்றிருந்த பொழுது பட்டுச்சேலை கட்டிய பார்பி பொம்மையை வாங்கிக் கொண்டாள் மகள். இன்றுவரை அவளுக்கு மிகவும் பிடித்தமான 'பார்பி' அவள் தான். இன்று இந்திய பார்பி பொம்மைகளே விதவிதமான உடைகளில் அத்தனை கிடைக்கிறது!

 


இந்த பார்பி பொம்மைகளை 'மேட்டல்' என்ற நிறுவனம் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக தயாரித்து வருகிறது. பார்பி உடுத்தும் உடையிலிருந்து வீடு, விளையாட்டுப் பொருட்கள், கார் என்று ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் எதையாவது ஒன்று வெளியிட்டுத் தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான 'ஒபென்ஹெய்ம்ர்', 'பார்பி' இரண்டு ஹாலிவுட் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மக்கள் பல நாட்களுக்குப் பிறகு குடும்பமாக திரைப்படத்தைக் காண திரையரங்குகளுக்குப் படையெடுத்திருக்கிறார்கள். பொம்மைப் படம் தானே என்று நினைத்தால் அதிக வசூலில் முன்னணியில் நிற்கிறது பார்பி! இப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் 'கிரேட்டா கெர்விக்'கிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி! அதுவும் 'ஒபென்ஹெய்ம்ர்' படத்துடன் மோதி வெற்றி பெற்றிருக்கிறது!

அமெரிக்க நிறுவனங்கள் விற்பனை செய்வதில் கில்லாடிகள். பார்பி படம் வெளியானவனுடன் பார்பி, கென் டிஷர்ட்ஸ், தொப்பிகள், கண்ணாடி என்று கடையை விரித்து விட்டார்கள். திரையரங்குகளில் ஒரே மாதிரி உடையணிந்து கொண்டு ஜாலியாக நண்பர்கள், குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்திருந்த கூட்டத்தைப் பார்க்க நன்றாகத் தான் இருந்தது.

அப்படி என்ன தான் இந்தப்படத்தில் இருக்கிறது என்று பார்க்க கிளம்பிவிட்டோம்.

தலைமுதல் கால் வரை அப்படியே பார்பி பொம்மைகளைப் போலவே உருமாறியிருந்த கவர்ச்சியான நடிகைகள். அவர்கள் பயன்படுத்தும் கார் முதற்கொண்டு அவர்கள் கற்பனை உலகத்தை அழகாக உருவாக்கியிருந்தார்கள். பார்பியின் காதலன் 'கென்' அவனுடைய நண்பர்களுடன் படம் முழுவதும் பாடிக்கொண்டே பேசிக்கொண்டே இருக்கிறார்கள் பார்பியும் பெண் நண்பர்களும். 'ரூத் ஹாண்ட்லெர்' என்ற அமெரிக்கப் பெண்மணி தான் 'பார்பி' பொம்மைகளை உருவாக்கியவர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் அவரும் வருகிறார்.

தன்னுடைய ராஜ்ஜியத்தைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற சாகசப் பயணம் மேற்கொள்ளும் 'பார்பி' தன்னுடைய நண்பர்களுடன் ஒருவித பிணைப்பை உருவாக்கிக் கொள்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தனித்தன்மை வாய்ந்தவர்கள். இப்படத்தில் ஒருவரின் திறமைகளை அங்கீகரித்து குழுவாக செயல்படுவது, தனிப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து நட்பைப் பேணுவது, தைரியமாக தான் நினைத்த காரியத்தில் ஈடுபடுவது , தங்களுடைய ஆர்வத்தினைச் செழுமைப்படுத்திப் பின்தொடர்வது, தாய்-மகள் பாசப் போராட்டம் என்று வாழ்க்கைப் பாடங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் தங்கள் உரிமைகளைப் போராடி வெற்றிப் பெறுவதை நகைச்சுவையாக இசையும் நடனமும் வாயிலாக அனைத்து வயதினருக்கும் ஏற்றதாகப் படத்தை எடுத்திருப்பது தான் சிறப்பு.

நிஜ வாழ்வில் இருந்து சிறிது நேரம் கற்பனை உலகில் சஞ்சரிக்க முடிந்தவர்கள், பார்பியுடன் வளர்ந்தவர்கள், பொம்மைகள் உலகத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது மிகவும் விருப்பமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

"ஐயம் எ பார்பி கேர்ள் இந்த பார்பி வேர்ல்ட்' பாட்டு எப்படி ஹிட் ஆனதோ, அப்படித்தான் இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்! இனி வரிசையாக 'மேட்டல்
நிறுவனம் பொம்மைப்படங்களைத் தயாரிக்கப் போவதாக வரும் செய்திகள் உண்மையா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Monday, June 26, 2023

கதல் (Kathal)


நெட்ஃப்ளிக்ஸ்ல் 'கதல்' என்றொரு அருமையான பொழுதுபோக்குப் படம் பார்த்தேன். சிறு கிராமத்தில் நடக்கும் கதை. ஒரு காவல்துறை, அங்கே பணிபுரியும் அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் சின்னச்சின்ன சண்டைகள், காதல், அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கு என்று போகிற போக்கில் அள்ளித் தெளித்துக் கொண்டே செல்கிறது கதை. இப்படத்தின் கதாநாயகி, சான்யா மல்ஹோத்ரா 'ஃபோட்டோகிராப்' படத்திலிருந்தே கவர்ந்து விட்டாள். அவருடைய சிரிப்பும் கண்களும் சுருட்டை முடியும் அழகு!

அதிகார வர்க்கத்தின் வீட்டுப் பிரச்சினையை விடவா நாட்டு மக்களின் பிரச்சினை பெரிது? கண்கூடாகத் தமிழகத்தில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே? ஒரு ஊழல் பேர்வழியைக் காப்பாற்ற எப்படியெல்லாம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள் என்று. இப்படமும் அந்தக் கருத்தை மிக அழகாக இரண்டு பலாப்பழங்கள் மூலம் சொல்லி இருக்கிறது. ஒரு சட்டசபை உறுப்பினர் வீட்டிலிருந்து திருடு போயிருக்கும் பழங்களைக் கண்டுபிடிக்க காவல்துறையை ஏவி பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகட்டும். பணியில் தனக்குக் கீழே இருப்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் தப்பிக்க நினைக்கும் காவல்துறை மேலதிகாரிகள் என்று அருமையாகக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்.

இந்த காலத்திலும் திருமண உறவில் பெண்ணை விட ஆண் உயர்பதவியில் இருப்பது தான் நல்லது என்று நினைக்கும் சமூகம். அதற்கும் பெண்கள் தான் பலிகடாவா? என்ன தான் வேலை பார்த்தாலும் வீட்டின் சமையலறை என்றுமே பெண்ணிற்குத்தான் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். காலம் மாறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நெடுந்தூரமே!

இன்றைய ஊடகங்கள் தங்கள் ரேட்டிங்ஐ ஏற்ற எப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புகிறது என்பதிலிருந்து அதே ஊடகங்களைக் கொண்டு சீர்திருத்தங்களையும் கொண்டு வர முடியும் என்றும் காட்டியிருந்தது சிறப்பு.

சமீபத்தில் வடமாநிலங்களுக்குச் சென்று வந்திருந்ததால் அங்கிருந்த சூழலை இப்படத்தில் பொருத்திப் பார்க்க முடிந்தது. போதிய கல்வியறிவு இல்லாதது, வறுமை என்றிருந்தாலும் மக்கள் எளிமையாக அப்பாவித்தனமாக இருக்கிறார்கள். அவர்களை ஆளும் வர்க்கம் விட்டு வைக்குமா? அதையும் நாசூக்காகப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

குட்கா, பான்பராக்கிற்கு அடிமையான சமூகம். பெண்களைக் கடத்தும் கும்பல் என்று பல விஷயங்களையும் தொட்டுக்கொண்டுச் செல்வதால் இந்தப்படம் நல்லதொரு பொழுதுபோக்குப் படம் மட்டுமல்ல சிறிது விழிப்புணர்வையும் சமூகத்தில் நிலவி வரும் அபாயங்களையும் அச்சுறுத்தல்களையும் அரசியல்வாதிகளும் அரசு எந்திரங்களும் தங்கள் கடமையை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் சொல்லாமல் சொல்கிறது. இப்படியெல்லாம் படம் எடுக்க முடியும் என்று நிரூபித்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்😇தமிழில் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி எடுக்கும் படங்களை விடப் பல மடங்கு நன்றாக இருக்கிறது.



Tuesday, June 6, 2023

அயல்வாஷி

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த மலையாளப் படம் 'அயல்வாஷி'. எதார்த்தமான படம் என்றால் இது தான். இப்படித்தான் இருக்க வேண்டும். கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி அத்தனை எளிமையாக இயல்பாக படத்தைப் பார்ப்பவர்களுக்கும் நிறைவைத் தந்து வெற்றிபெற்றிருக்கிறது. 

அருகருகே வாழும் இரு நண்பர்களுக்கிடையில் வரும் தவறான புரிதலைக் களைய ஒரு நண்பன் மேற்கொள்ளும் பிடிவாதமான முயற்சி. இறுதியில் பலப்படுகிறது நட்பு. இருவரையும் சமாதானப்படுத்தும் நட்பு கதாபாத்திரம் அருமை. குடும்பங்களில் இருக்கும் பணப்பிரச்னைகள், கணவன்-மனைவி உறவில் மாமியாரின் ஆதிக்கம், வில்லன்கள் என்று கலவையாக ஆனால் அருமையாக வடிவமைத்து விறுவிறுப்புடன் செல்கிறது. கதாபாத்திரங்களின் எளிமையும் ஊரின் அழகும் கதை சொல்லிய விதமும்  நம்மை இங்கும் அங்கும் நகர்த்தவிடாமல் படத்தைப் பார்க்க வைக்கிறது.

வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு நண்பர்கள் கலந்து கொண்டு உதவி செய்வது, உறவுகளுக்குள் கைகலப்பு, ஒன்று என்றால் உதவிக்கு ஓடிவரும் அக்கம்பக்கத்து மனிதர்கள் என்று முதல் காட்சியில் ஆரம்பித்த பரபரப்பு கடைசிக் காட்சி வரை தொடருகிறது. ஒரு நல்ல கதைக்கு நடிக்கத் தெரிந்த நடிகர்கள் இருந்தால் போதும். 'தாம்தூம்' என்று அதிக பொருட்செலவில் பாடல் காட்சிகள், அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கன்னாபின்னாவென்று சண்டைகள், தேவையற்ற காட்சிகள் என்று இல்லாமல் அமைதியாக ஆனால் அடுத்த வீட்டில் நடப்பது போல ஒரு கதை. கதை மாந்தர்களும் மிக எளிமையாக அதிக ஒப்பனைகள் இன்றி நடித்திருப்பது சிறப்பு. 

ஃபீல்குட் படம் என்றால் இது தான். நெட்ஃப்ளிக்ஸ்ல் கண்டு களிக்கலாம். 

பச்சுவும் அத்புத விளக்கும்


சோம்பேறித்தனமான மாலை. கழுதை கெட்டால் குட்டிசுவரு. நமக்குத் தொலைக்காட்சி. அதிலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹுலு என்று ஏகப்பட்ட குட்டிச்சுவர்கள். பிரைமில் என்ன படங்கள் புதிதாக வந்திருக்கிறதென்று பார்த்தால் அடடா! நமக்குப் பிடித்த நடிகரின் படம் வந்திருக்கிறதே என்று பார்க்க ஆரம்பித்தேன்.

பொதுவாக மலையாளப் படங்களில் ஐந்து நிமிடத்திற்கு தலைப்பு ஓடும். இந்தப் படத்தில் மும்பை நகர வாழ்க்கையை முதல் காட்சியிலேயே காட்டி அசத்தியிருந்தார்கள். அதனால் வேலைகளையும் தூக்கத்தையும் விட்டுவிட்டுத் தொடர்ந்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியது. மும்பை நகரம் என்னளவில் இன்றும் ஒரு கனவு நகரம் தான். விடியலில் தொடங்கி இரவு வரை அதன் பரபரப்பிற்காகவே அந்த நகருக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நெருக்கமான வீடுகள், ஓய்வின்றி செல்லும் தொடர் ஓட்ட ரயில்கள், வேலைக்குச் செல்லும் மனிதர்கள், பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை வாழும் குடியிருப்புகள் என்று பல கவரும் அம்சங்களுடன் மும்பையை இந்தப் படத்தில் நன்கு காண்பித்திருக்கிறார்கள். கொசுறாக, கோவாவும். கிட்டத்தட்டப் பாண்டிச்சேரியை ஒத்து இருக்கிறது அந்த நகரம்.

நல்லவிதமாகத் தொடங்கிய படம் போகப்போக சுவாரசியம் குறைந்து எப்படா முடியும் என்றாகிவிட்டது. அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் போகும் என்று எளிதில் புரிந்து விடும் அளவிற்கு கதை இருந்தாலும் கோவா, மும்பை, கேரளா என்று சுற்றி வந்து நம்மை உட்கார வைத்து விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மும்பை என்றால் தாதாவாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரண மனிதர்கள் கூட இருப்பார்கள். ஃபகத் ஃபாசில் மெலிந்த உருவத்துடன் கண்களை உருட்டியபடி அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்கு நடித்திருக்கிறார். அவருடைய கடையில் வேலைபார்க்கும் இளைஞனின் ஹிந்தி, ஆங்கில நகைச்சுவை வசனங்கள் நன்று. மலையாளப் படங்களில் எனக்குப் பிடித்தது என்றால் அங்கு ஹிந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாளும் முறை தான். இந்தப் படத்திலும் அப்படித்தான். கதாநாயகன் பெண் பார்க்கச் செல்லும் வீட்டில் அந்தப் பெண் தன்னுடைய கிறிஸ்தவ நண்பனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவள் அம்மாவிடம் வெகு இயல்பாகக் கூறுவாள். இஸ்லாமியப் பாட்டியாக வருபவர் 'சுவாமி சரணம்' என்று மாலை போட்ட சிறுவனிடம் கூறுவார். இந்த மாதிரி காட்சிகள் தமிழ்ப்படங்களில் பார்ப்பது அரிதாகி வருகிறது. பாட்டியின் கனிவான கதாபாத்திரம் தான் மையக்கரு. உணர்ந்து நடித்திருக்கிறார்.

அதே போல் ரியாஸ் கதாபாத்திரத்தில் வரும் வினீத்தின் வீட்டில் புத்தர், கலைப்படங்கள் எல்லாம் சுவற்றை அலங்கரித்திருக்கும். ஹராம் என்று கேரளாவில் கூவ மாட்டார்கள் போலிருக்கிறது. தமிழகத்தில் தான் ஹிந்துக்களையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் புண்படுத்தும் வகையில் படங்களில் குறியீடுகளை வைத்து தங்களுடைய அடிமைப்புத்தியை திராவிட எஜமானர்களுக்கு வாலாட்டும் இயக்குநர்கள் சமூகம் இருக்கிறது போலும்! என்று ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்காக எடுக்க இவர்கள் கற்றுக் கொள்வார்களோ? அதுவரையில் வேற்று மொழிப் படங்களைப் பார்ப்போம்.

பெரிய கண்களுடன் அதிக ஒப்பனை இல்லாமல் இயற்கை அழகுடன் இந்த மலையாள கதாநாயகிகள் தான் எத்தனை அழகு! அரைகுறை ஆடை அணிந்து விரச நடனம் ஆடும் நாயகிகள் எல்லாம் தமிழ்ப்படத்திற்குத் தான் தேவை. ஏனென்றால் கதைக்குப் பஞ்சம் இங்கே. தமிழ்ப்படங்கள் பார்ப்பவர்களின் ரசனையும் அந்த அளவில் தான் இருக்கிறது. இசை என்ற பெயரில் காட்டு கத்தல், நடனம் என்ற பெயரில் ஆபாச அங்க அசைவுகள், வசனங்கள் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகள் இப்படி எதுவுமில்லாமல் படத்தைப் பார்க்க மலையாளப் படங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது. கதையினூடே ஒரு நல்ல கருத்தையும் சொல்கிறது இந்தப்படம்.

கண்டதும் காதல் என்றாலும் பொழுபோக்குப் படம்.


Thursday, May 18, 2023

மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே


2011ஆம் ஆண்டில் நார்வே அதிகாரிகள் இந்திய தம்பதிகளின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்ற வாழ்க்கைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் 'Mrs Chatterjee vs Norway'. நார்வேயில் தனது கணவர், இரண்டு சிறு குழந்தைகளுடன் வசிக்கும் திருமதி சாட்டர்ஜி (ராணி முகர்ஜி) என்ற இந்தியப் பெண்ணின் கதையை இப்படம் சொல்கிறது.

குழந்தைகளை அந்நாட்டு முறைப்படி வளர்க்கத் தெரியவில்லை. தாய்க்கு மனநிலை சரியில்லை. வீட்டில் கணவன் மனைவியை வன்முறை செய்கிறார் என்று நார்வே சமூக சேவகர்களால் குற்றம் சுமத்தப்பட்டு குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். தன் குழந்தைகளை மீட்கப் போராடுகிறார் கதாநாயகி. நீதிமன்றத்தில் இவர்களுடைய வழக்கில் பலமுறை தோற்கடிக்கப்படுகிறார்கள். முடிவு என்ன என்பது தான் கதை.

இப்படத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன் குழந்தைகளைக் காப்பகத்திலிருந்து ஸ்வீடனுக்கு அழைத்துச் செல்வதைக் கடத்தல் என்று குற்றஞ்சுமத்துகிறது நார்வே அரசு. உண்மை தான். அது கடத்தல் தான். தான் பெற்ற குழந்தைகளை எடுத்துச் செல்வது எப்படி கடத்தலாகும் என்று கத்தி கூப்பாடு போட்டால் மனநிலை சரியில்லை என்று மீண்டும் வழக்கு.  திருமதி சாட்டர்ஜி நம்பிக்கையைக் கைவிடாமல் தன் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து போராடுகிறார். குழந்தைகள் நல அமைப்புகளில் கலாச்சார சார்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இறுதியில் நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியான செய்தியுடன் படம் முடிகிறது.  

கையால் ஊட்டிவிட்டால் தவறு என்பதை எந்த இந்தியரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் வெளிநாட்டினருக்கு அதுவும் நார்வே அதிகாரிகளுக்கு அது தவறாகத் தெரிகிறது. சிறு குழந்தைகள் பெற்றோருடன் தூங்குவதில் என்ன தவறு? அவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது. குழந்தைகளைக் கண்டிக்கப் பெற்றோர்கள் அடிப்பார்கள். அடி வாங்கி வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம். பள்ளிகளில் கூட பிரம்படி வாங்கிப் படித்தவர்கள் நாம். இன்று ஏனோ அதை இந்தியாவிலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. குழந்தைகளை அடிப்பது தவறு என்று அமெரிக்காவிலும் சொல்வார்கள். பேசத் தெரிந்த குழந்தைகள் 911ஐ அழைத்து என்னை அடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டால் போதும் பெற்றோர்களைச் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து காப்பகத்தில் விட்டு விடுவார்கள். ஏனென்றால் அடிப்பதைக் குழந்தைகள் மீதான வன்முறை என்று இந்த மேலைநாடுகளில் கூறுகிறார்கள். அடிப்பதற்கும் கண்டிப்பதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இவர்களுடைய கலாச்சாரத்தில் குழந்தைக்கு வளர்ப்புத்தந்தை, தாய் என்று ஏகப்பட்ட குழப்பங்கள். மனநலம் குன்றியவர்களும் அதிகம். ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கிறது தான். அதற்காக இப்படியா?

இந்தியாவில் பக்கத்து வீடு, நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் பொழுது அவர்கள் சமைப்பதை நமக்கும் கொடுப்பார்கள். நாமும் வாங்கி உண்போம். ஆனால் மேலை நாடுகளில் அப்படி எளிதில் செய்துவிட முடியாது. குழந்தைகளின் பெற்றோர்களிடம் முன்அனுமதி கேட்க வேண்டும். இது நல்லதுக்குத் தான். பல குழந்தைகளுக்கும் இங்கு உணவு ஒவ்வாமை இருக்கிறது. அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவு தான். நான் பழகிய வரையில் குழந்தைகளும் எதுவும் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் இந்த ஊர் ஜூஸ், ரொட்டி, இனிப்புகளைத் தான் விரும்புவார்கள். ஒரு சில குழந்தைகளே நாம் சாப்பிடும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களின் குடும்பத்துடன் இருக்கும் நம் பழக்கத்தைப் பொறுத்தது. அதனால் நன்கு பரிச்சயமில்லாத மேலைநாட்டுக் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை நாம் செய்யக் கூடாது.

அதே போல, குழந்தைகளைத் தொட்டும் பேசக்கூடாது. அதுவும் இங்கு தவறாகவே பார்க்கப்படும். குழந்தைகள் மீதான வன்முறை இங்கு அதிகம் இருப்பதால் இத்தகைய வழக்கங்கள் என்று தெரிந்து கொண்டேன். சில விஷயங்களை நாமும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தன்னுடைய வீட்டில் தன் சொந்தக் குழந்தைகளை இந்திய முறைப்படி வளர்க்கும் பெண்ணிற்க்கு அராஜகம் நடக்கிறது. அது தான் கொடுமையாக இருக்கிறது.

நார்வேயில் குழந்தைகளைத் தத்து கொடுக்க புலம்பெயன்றவர்களின் குழந்தைகளைக் கையகப்படுத்தி பெரும் வியாபாரமாகச் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே திரைப்படம், உணர்வுப்பூர்வமாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. கலாச்சார சார்பு, குழந்தைகள் நலன் போன்ற சிக்கல்களை ஆராய்வதில் படம் வெற்றி பெற்றுள்ளது. கலாச்சார வேறுபாடுகள் எவ்வாறு தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், குடும்பங்களைச் சிதைக்கும், சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக குழந்தைகள் நல அமைப்புகள் எவ்வாறு சார்புடையதாக இருக்கும் என்பதையும் படம் காட்டுகிறது.

Tuesday, February 7, 2023

Goodbye

நெட்ஃபிளிக்ஸ்ல் 'Goodbye' என்றொரு ஹிந்திப்படம் வெளியாகி உள்ளது. அமிதாப், நீனா குப்தா, ராஷ்மிகா (தெலுங்கு நடிகை) நடித்துள்ள படத்தில் பிற நடிகர்களைத் தெரிகிறது ஆனால் பெயர் தான் தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா இருவரின் பங்கும் சமமாக இருப்பினும் அம்மாவிடம் தான் பெரும்பாலும் குழந்தைகள் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்வதில் அம்மாவை மிஞ்ச முடியாது என்றாலும் அதன் பின்புலத்தில் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் அப்பாவின் அன்பை பெரும்பாலான குடும்பங்களில் உணர்வதில்லை. பல குடும்பங்களில் அம்மா, அப்பாவின் பங்கு நேர்மாறானதாக இருக்கும். அப்பாவிடம் நெருங்கி அம்மாவிடம் தூர இருந்து பழகும் குழந்தைகளும் இருக்கிறார்கள். 

குழந்தைகளாக அம்மா, அப்பாவின் அரவணைப்பில் வளர்பவர்கள் தங்கள் சொந்தக்காலில் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்குச் செல்ல, ஒரு சிறிய தற்காலிக விரிசல் உறவுகளில் ஏற்பட்டு விடுகிறது. தற்போதைய கால கட்டத்தில் அது அதிகமாகி இருப்பதைக் கண்கூடாகவே காண முடிகிறது. அவரவர் வேலை, படிப்பு, நண்பர்கள் தாண்டி பெற்றவர்களுடன் உறவைப் பேண நேரம் வேண்டியிருக்கிறது. ஆனால் பெற்றோர்கள் என்றுமே பெற்றோர்கள் தான். குழந்தைகள் நலமாக இருக்கவே விரும்புவார்கள். இத்தகைய சூழலில் வளரும் புரட்சிப் பெண். பழமையைக் கேள்வி கேட்டு புதுமைப்பெண்ணாக வாழ்பவள். அப்பாவிற்கும் அவளுக்கும் இடையே பனிப்போர். வேலை வேலை என்று சதா வேலையைக் கட்டி அழும் மகன் வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன். அந்தப் பெண்ணும் குடும்பத்தின் பாசத்தில் ஒட்டிக்கொள்ளபவள். அப்பா அம்மாவுடன் பாசத்துடன் வாழும் இன்னொரு மகன். தத்தெடுத்து வளர்த்த பிள்ளை. வீட்டில் வேலைக்கு வந்து சேர்ந்த பெண்ணைத் தம் மகளாக பாவிக்கும் அந்த பெற்றோர்கள் என்று வசதியான குடும்பம்.

திடீரென மாரடைப்பில் இறந்து விடும் மனைவி. அந்த விஷயத்தை தனது குழந்தைகளிடம் சொல்லத் தவிக்கும் அப்பா அமிதாப். அவரவர் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வருபவர்களின் எண்ணோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் படம். வீட்டில் எழவோ கல்யாணமோ, கூட இருந்து கவனித்துக் கொள்பவர்கள், கூடவே கொஞ்சம் கமிஷன் அடிப்பவர்கள் என்று இருக்கத்தான் செய்வார்கள். சாவு வீட்டிற்கு வருபவர்கள் இந்தக் காலத்திற்க்கேற்றபடி செல்ஃபி எடுத்துக் கொண்டும் வாட்ஸாப் குழுவில் யார் என்ன சமைத்து வருவது என்று பேசிக்கொண்டும் இருப்பது நடைமுறையில் நடப்பது தான்.

எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்றால் அது ரிஷிகேஷில் அஸ்தியைக் கரைக்க குடும்பத்துடன் செல்பவர்களுக்கு அங்கிருக்கும் புரோகிதர் சொல்லும் அருமையான விளக்கங்கள். பழமையை முழுவதும் உணராது அதைக் கேவிக் கேட்பவர்களுக்கு அவர் போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே செல்லும் அறிவுரைகள். அதில் மனம் மாறும் மகள், மகன் கதாபாத்திரங்கள். நம்முடைய இந்து வழிப்பட்டு முறைகள் பழமையாக இருந்தாலும் மிகவும் அர்த்தம் பொதிந்துள்ளதை இந்த தலைமுறையினர் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்லியவிதத்தில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் நாய் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தது. சில காட்சிகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


Monday, December 19, 2022

The Elephant Whisperers

சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியாகியுள்ளது "The Elephant Whisperers" என்றொரு குறும்படம். தலைப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இது யானைகளைப் பற்றின படம் என்று. இதற்கு முன் வெளியான படம் ஒன்றைப் பற்றி ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். Holiday in the Wild யானைகளைப் பிடிக்காத மக்கள் குறைவாகத் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய உருவம் பார்க்க பயமாக இருந்தாலும் ஒரு குழந்தையைப் போல பழகுவதைக் கோவில்களில் பார்த்திருப்போம். மக்களும் கோவில் யானைகளுடன் மனதோடுப் பழகி தங்களில் ஒருவராக நெருங்கி விடுவார்கள். கொஞ்சம் அச்சத்துடன் தான். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் யானை இறந்த போது பொதுமக்கள் அளித்த சிறப்பான இறுதி ஊர்வலமாகட்டும் அழுது கொண்டே அந்த யானையைக் கொன்றுவிட்டதாக அவர்களின் கொந்தளிப்பாகட்டும் மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையேயான ஆத்மார்த்தமான அன்பை அது வெளிப்படுத்தியது.

இந்த குறும்படமும் அப்படித்தான். காட்டில் தனித்து விடப்பட்ட, நலிந்த யானைகளை வளர்க்கும் இரு மனிதர்களைப் பற்றின படம். இயற்கையோடு இணைந்த வாழ்வில் இருக்கும் வெள்ளந்தித்தனம் அந்த மனிதர்களிடம் இருக்கும்.தங்களைக் கவனித்துக் கொள்பவர்களைத் தன் இனமாக கொண்டாடும் மிருகங்கள் மனிதர்களை விட மேல். மனிதர்களின் பாதிப்பு இல்லாத காடுகள் அரிதாகிக் கொண்டு வரும் வேளையில் இப்படியொரு இடத்தில் வாழும் பொம்மன், அவர் மனைவி பெல்லி என்று இருவரும் அனாதையாக வந்த ரகு என்ற யானையை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். தங்கள் குழந்தையாக பாவித்து அவர்கள் ரகுவுடன் பேசுவதும் கொஞ்சுவதும் ரகுவும் அவர்களுடன் குலாவுவதும் அந்தக் கண்கள் பார்ப்போரை வசீகரிக்கும்.

தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகளின் முகாம். அங்கு வாழும் பெல்லி என்பவர் அனாதையாக விடப்பட்ட யானைகளை வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் ஒரே பெண்மணி. அவருடைய கணவர் ஒரு யானையால் இறந்தவர். பொம்மனை மறுமணம் செய்து கொண்டு யானைகளைப் பராமரித்து வாழ்ந்து வருகிறார். ரகு சாப்பிட மறுத்து கீழே போடும் ராகி உருண்டைகளைக் குரங்குகள் விரும்பி சாப்பிடுவது இயற்கையில் எதுவும் வீணாகப் போவதில்லை என்று புரிய வைக்கிறது. குரங்குகள், கழுகு, புலி என்று காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. மனிதர்களுக்குத் தான் அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.

நான் முன்பு பணிபுரிந்த இடத்தில் நியூயார்க் மாநிலத்தில் கடைகளிலும், வீடுகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த தந்தத்தாலானப் பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். மனம் பதறி விட்டது. எத்தனை யானைகள் கொல்லப்பட்டதோ ? ரகு போன்று எத்தனை இளம் யானைகள் கஷ்டப்பட்டதோ என்று இன்று நினைத்தாலும் தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடும் மனிதர்கள்,அவர்களை வேட்டையாடத் தூண்டுபவர்கள் எல்லாம் ஏன் வாழ்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றும்.

பசுமையான காடு, சலசலத்து ஓடும் ஆற்றில் ரகு குளிக்கும் காட்சிகள், பிடித்த உணவைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைத்தனம், மனிதர்களின் உணர்வுகளை புரிந்து ஆறுதலாக அரவணைக்கும் ரகு என்று எல்லாமுமே அழகு! இரண்டாவது குழந்தை வரும் பொழுது முதல் குழந்தைக்கு ஏற்படும் அதே பொறாமை ரகுவிற்கும் வருகிறது.விலங்குகளுடன் வாழும் உலகில் மனிதன் தன் சுயத்தை இழந்து புனிதனாகிறான். இயற்கையோடு இணைந்தால் எல்லாமே அழகு! அது தான் இந்த குறும்படம் நமக்குச் சொல்வது. கண்டு களியுங்கள்!






Tuesday, July 26, 2022

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

"ராக்கெட்ரி" திரைப்படம் வெளியாகிறது என்றவுடன் உள்ளூர் திரையரங்குகளில் திரையிடப் போகிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. கண்ட கருமாந்திரப் படங்களைப் போடுகிறார்கள் அத்திப் பூத்தது போல் பல மொழிகளில் வெளியாகும் ஒரு நல்ல படம். அதுவுமில்லாமல் "எண்டே மாதவா" வின் தயாரிப்பில் உருவான பயோ-பிக். ரசனை கெட்ட உலகமடா மாதவா என்று ஒடிடியில் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தோம். நேற்று அமேசான் பிரைமில் எதையோ தேட போய்,

'ஆ! ராக்கெட்ரி படம் வந்துடுச்சு. வாங்க பார்க்கலாம்' என்று வேலைகளை முடித்து விட்டு தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து படம் முடியும் வரை எழுந்திருக்கவில்லை. 

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

என சுப்ரபாதத்துடன் துவங்கும் முதல் காட்சியிலேயே பிரம்மாண்ட அண்டம் சுழலும் காட்சி ஈர்த்து விட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏன் இவருடைய கதை ? ஒரு தேசப்பற்று மிகுந்த விஞ்ஞானியை எப்படி உடல், மனதளவில் நொறுங்க வைத்து நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைத்திருக்கிறார்கள் என்ற உண்மைக்கதையைப் படமாக நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார் நடிகர் மாதவன்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் நம்பி நாராயணின் திறமையை ஊக்குவித்து ஒரு குருவாக வழிநடத்தியிருக்கிறார். அமெரிக்காவின் உயர்தர பல்கலையில் படிக்கும் காலம் முடியும் முன்னரே பட்டப்படிப்பை முடித்து திறமைக்கேற்ப அமெரிக்க விண்வெளி மையத்தில்( நாசா) கை நிறைய சம்பளத்துடன் கௌரவமான வேலை கிடைத்தும் தாய்நாட்டிற்குத் திரும்புகிறார் நம்பி நாராயணன். இஸ்ரோவில் ராக்கெட் தயாரிக்க வேண்டிய நுட்பங்கள் தெரிந்தும், வசதியும் போதிய நிதியும் இல்லாமல் ஃபிரான்ஸ் நாட்டுடன் கூட்டு சேர்ந்து குடும்பங்களை விட்டு பல விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக சோதனையை முடித்து திரும்புகிறது இவருடைய தலைமையிலான குழு. ராக்கெட் தயாரிக்க தேவையான பொருட்களை சோவியத் ரஷ்யாவிலிருந்து அந்நாடு சிதறுவதற்குள் இந்தியாவிற்கு கொண்டு வந்து விட, அங்கிருந்து ஆரம்பிக்கிறது நம்பியின் வாழ்க்கையைத் துண்டாடும் காட்சிகள். நேர்க்காணல் மூலம் படக்காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு.

1994ல் இஸ்ரோவில் பணிபுரிந்த பொழுது ​​நாராயணன் இந்தியாவின் விண்வெளித் திட்டம் குறித்த ரகசியத் தகவலை பாகிஸ்தானிற்கு விற்க இரண்டு மாலத்தீவு நாட்டினரிடம் பகிர்ந்து கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். 1996ல் சிபிஐ மற்றும் 1998ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. ஏப்ரல் 2021ல் இந்திய உச்ச நீதிமன்றம் இவருடைய கைதின் சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்று திரு.நாராயணன் அவர்களுக்கு கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்கியது.
 
விஞ்ஞான வளர்ச்சிக்காக நாடு செலவழிப்பது தேவையற்றது என்று கூவி மூலைக்கு மூலை சிலைகளை வைத்துக் கொண்டு திரியும் கூட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து பல சிரமங்களுக்கிடையில் உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரித்து இன்று அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே வியக்கும் வகையில் நம் தேசமும் முன்னேறியிருப்பதில் இவருடைய பங்கும் அளப்பரியது. இந்தியாவில் ராக்கெட் அறிவியலின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசாங்கம் நாராயணனுக்கு 2019 ஆம் ஆண்டில் நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.

இத்தனை படித்த நேர்மையான மனிதர் மீது களங்கம் சுமத்தி குடும்பத்தை அலைக்கழித்து தான் என்ன தவறு செய்தோம் என்றே புரியாமல் அவரை மனச்சோர்வுக்கு உள்ளாக்கிய மத்திய காங்கிரஸ், மாநில கம்யூனிஸ்ட் அரசாங்கம் மனிதாபிமானற்றது என்பதைக் காட்சியாக காண மனம் பதைபதைக்கிறது. 1996ல் பாஜக ஆட்சிக்காலத்தில் தான் இவருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் நாராயணன் மற்றும் சிலரை பொய்யாக சிக்க வைத்த குற்றச்சாட்டில் 17 முன்னாள் கேரள போலீஸ் மற்றும் ஐபி அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 15 வருடங்களில் 684 இஸ்ரோ விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தெரிகிறது. அணு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறுவதைத் தடுக்க மேலைநாடுகளின் சதியாக அதற்கு நம்நாட்டு எட்டப்பன்கள் உதவி இருப்பதைத் தான் காட்டுகிறது . இந்திய ஊடகங்கள் இந்தச் செய்திகளுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை பெரும்பாலும் ஒரு கட்சிக்கு அதுவும் தேசத் துரோகிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. கடைசிக் காட்சியில் கண்களில் நீர் வழிய "ஜெய்ஹிந்த்" என்று நம்பி நாராயணன் அவர்கள் கூறும் பொழுது வசனம் பேசி உணர்ச்சிகரமாக அதுவரை நடித்த சூர்யாவின் வாயிலிருந்து "ஜெய்ஹிந்த்" வராதது எந்த அளவிற்கு நம் நாட்டின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறது தேசத்துரோகிகள் கூட்டம் என்று தெரிகிறது. நமக்கு எதிரிகள் வெளியில் இருப்பதை விட உள்நாட்டில் தான் அதிகம். அவர்களால் தான் இத்தகைய மாமனிதர்களுக்கு அச்சுறுத்தல் என்ற நினைவே வெட்கமாகவும் வேதனையாகவும்இருக்கிறது.

ஒரு டாலர் அதிகம் கிடைத்தால் கூட வேலையை மாற்றிக் கொள்ள நினைக்கும் மனம் படைத்த மனிதர்கள் வாழும் காலத்தில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம், வசதி வாய்ப்புகள் கிடைத்தும் அனைத்தையும் நிராகரித்து தேசத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த உன்னத மனிதர்களுள் ஒருவர். தன்னுடைய குருவின் நினைவாக வெற்றிகரமாக இயங்கி வரும் "விகாஸ்
என்ஜினை உருவாக்கின மாமனிதர். தெய்வ பக்தியும் தேசப்பற்றும் மிக்க சில நம்பி நாராயணன்களால் தான் பல தேச துரோகிகளையும் மீறி இந்தியா தன்னிறைவு பெற்ற நாடுகளின் வரிசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவர் போன்ற மனிதர்களே நம் வருங்கால சந்ததியினருக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள். தமிழக அரசு இப்படத்தைப் பள்ளிகளில் திரையிடலாம் அல்லது வரி விலக்கு அளித்து கௌரவிக்கலாம். செய்வார்களா?

கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். அமேசான் ப்ரைமில் காண கிடைக்கிறது.

ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை அற்புதமாக படமெடுத்த "எண்டே மாதவன்" கதாசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, "நம்பி நாராயணனாக" மிளிர்ந்திருக்கிறார்.

வாழ்த்துகள் மாதவன் 💖💖💖

Wednesday, June 15, 2022

விக்ரம்

எழுத்தாளர் சுஜாதாவின் புதினத்தைத் தழுவி 1986ல் வெளிவந்த "விக்ரம்" திரைப்படம் பல காரணங்களுக்காக வெற்றிப்படமாக அமைந்திருந்தது. ராஜ்கமல் தயாரிப்பில் கமலஹாசன் கதாநாயகனாக தமிழுக்குப் புதிதான கதைக்களத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிரபலமாகி 100 நாட்களைத் தாண்டி லாபகரமாக ஓடிய படம். 

தற்பொழுது கமல் நடித்து அதே பெயரில் வெளிவந்துள்ள படத்தை மொத்தமே 7 பேருடன் சேர்ந்து அமெரிக்காவில் பார்த்த பொழுது "நாம் தான் தெரியாமல் மாட்டிக்கொண்டோமோ" என்றிருந்தது. பாவம் எனக்காக ஈஷ்வரும் படம் பார்க்க வந்திருந்தார். வீட்டிலேயே வசதியாக படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு அரங்கத்தில் பார்ப்பது வித்தியாசமாகவே இருக்கிறது. முதலில் இந்த அமெரிக்க திரையரங்கு உரிமையாளர்களிடம் இந்திய படங்களைத் திரையிடுகையில் ஒலியின் அளவைக் குறைத்து வைக்கச் சொல்ல வேண்டும். படம் முடிந்து வெளிவருகையில் காது சவ்வு கிழிந்து விட்டது போன்ற பிரமை😒

இந்தப் படத்தையா "அருமை. ஆஹா! ஓஹோ!" என்று எழுதித்தள்ளினார்கள்? தமிழ்த் திரையுலகம் தான் என்ன செய்யும்? கதைப்பஞ்சம்? தேவைக்கு மேல் அதிகமாக நடிக்கும் நடிகர்கள், தேவையற்ற 'பன்ச்' வசனங்கள், அவசியமில்லாத ஆடம்பர காட்சி களேபரங்கள் என்றே பழகி விட்டிருக்கிறது கோலிவுட். ஒரு படத்தை வித்தியாசமாக இயக்கி விட்டால் அந்த இயக்குனரைத் தலை மீது தூக்கி கொண்டாடி கடைசியில் ரஞ்சித் மாதிரி ஆட்களிடம் நாம் மாட்டிக் கொண்டு விடுகிறோம். இப்பட இயக்குநரை ஒன்றும் சொல்ல முடியாது. இது கமல் படம். அவ்வளவு தான். போதாக்குறைக்கு விஜய் சேதுபதி எனும் பெரிய கொடிய வில்லன்! வில்லனுக்கு மூன்று மனைவிகள் என பெரிய குடும்பம். இதில் என்ன குறியீடு இருக்கிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கடவுள் தேசத்திலிருந்து ஃபகத் ஃபாசில். கொடுத்த பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு. இப்படித்தான் கதை போகும் என்று எளிதாக கணிக்க முடிகிற திரைக்கதை. ஆரம்ப காட்சிகளிலே கமல் இறந்து விட்டால் அப்புறம் படம் எப்படி இருக்கும்? கமல் வருவார் என்று தெரிந்து விடுகிறது. 

விஜய் நடித்த 'திருப்பாச்சி' படக்கதை  தான். அங்கே ஒரு அண்ணன் தன் தங்கையின் நகர வாழ்க்கையில் வில்லன்களே இருக்க கூடாது என்று அடித்து நொறுக்குவான். இங்கே தன் பேரன் போதைமருந்து கும்பலிடம் சிக்காமல் இருக்க வில்லனை அடித்து நொறுக்குவதாய் 'உல்ட்டா'வாக்கி இருக்கிறார்கள். விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று கார்த்தி குரலையும் கடைசிக்காட்சியில் கத்திக்கொண்டே சூர்யாவும் இரண்டாவது பாகத்திற்கு அச்சாரம் போட்டு பயமுறுத்திச் சென்றிருக்கிறார்கள். வேகமாக மூச்சிரைக்க பேசினாலே கைதட்டும் கூட்டம் இருக்கும் வரை இம்மாதிரியான படங்கள் ஓடும்.

அரசியல்வாதி, காவல்துறை என்றுமே ஊழல் பெருச்சாளிகள் தான் என மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில் பெரும் வெற்றி கண்டது இம்மாதிரி திரைப்படங்களே. பழைய விக்ரம் படப்பாடல் ஓரிரு இடங்களில் வந்தது. அதைத்தவிர வேறு எந்த தொடர்பும் இரு படங்களுக்கும் இல்லை. கமல் பாடித்தான் ஆகவேண்டும் என்று என்ன நிர்பந்தமோ 😒 அப்பாடலில் இருக்கும் குறியீடு என்று சமூக வலைதளங்கள் விவாதித்தது வேறு கதை. கமல் இன்னும் நடிக்கிறார் என்பது அவரது ரசிக சிகாமணிகளுக்கு  கொண்டாட்டமான விஷயம் தான். ஆனால், உலகத்தரம், வேற லெவல், அப்படி இப்படி என்று அளக்காமல் இருக்கலாம். 

எப்படியோ கமலே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது இப்படம். மற்றபடி நல்ல பொழுதுபோக்குப் படம் என்றும் சொல்லும் அளவிற்கு கூட இல்லை. சண்டைக்காட்சிகள், பெரிய நடிகர்கள் போதும் என்று நினைத்து விட்டார்களோ? வன்முறைக்காட்சிகள் எல்லாம் 'வெறி'த்தனமாக இருக்கிறது. ஏன் இப்படி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை!

நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களைக்  கண்டுகளிக்க தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாமும் வளர வேண்டியிருக்கிறது😞

'விக்ரம்', பல வருடங்களுக்குப் பிறகு கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மற்றவர்களுக்குத் திண்டாட்டம்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...