Showing posts with label ஃபேஸ்புக் பதிவு. Show all posts
Showing posts with label ஃபேஸ்புக் பதிவு. Show all posts

Friday, November 18, 2022

நானே நானா யாரோ தானா

இன்று மாலை கோவிலுக்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழைந்தவுடன் என்னடா இத்தனை ஜோடி செருப்புகள் இருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குளிரிலும் பள்ளி நாளிலும் இத்தனை பேர் கோவிலுக்கு வந்திருக்கிறார்களே ஏதாவது விசேஷமா என்று உள்ளே சென்று பார்த்தால்,
ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. பத்து மலையாளி குடும்பங்கள் அங்கிருந்தன. "இன்னிக்கு மண்டல பூஜை ஆரம்பம்" என்று அய்யர் கூறவும், நாளைக்குத் தானே கார்த்திகை மாசம் என்று குழப்பமாகிவிட்டது எனக்கு😕

சுவாமிக்கு மாலைத் தொடுக்க உதவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சுருட்டைமுடி அழகி மை தீட்டிய கண்களுடன் 'பளிச்'சென்று சிரித்துக் கொண்டே "துளசி கல்யாண பூஜை எப்படி நடந்தது" என்று கேட்டார். இதற்கு முன் இவரை நான் பார்த்தது கூட இல்லை. துளசி கல்யாண பூஜையைப் பற்றி இவர் ஏன் என்னிடம் கேட்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவரே, "நீங்கள் தானே பூஜைக்கு என்னை வரச் சொன்னீர்கள்" என்று அடுத்த குண்டைப் போட்டார். நானா? எப்போது? என்றவுடன் 
"நீங்கள் இல்லையா? சாரி! அவர் உங்களைப் போலவே இருந்தார். அதான்..." வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே நகர்ந்தார் மலையாளக் கரையோரம் இசை பாடும் அழகி.😍

அடடா! ஆல்பனியில என்னைய போல எத்தனை பேரும்மா இருக்கீங்க?😉

இங்கே தான் இந்தக் கதை என்றால் கேதார்நாத் செல்கிற வழியில சந்தித்த செட்டியார்கள் குடும்பத்தில் ஒருத்தரும் "இவங்க சிரிக்கிறது பேசுறத பார்த்தா யார் பெயரையோ சொல்லி அவங்க மாதிரி இல்ல" என்று...😟😆

இப்படித்தான் நியூயார்க் விநாயகர் கோவில் உணவகத்தில் வரிசையில் காத்திருந்த பொழுது பின்னாடி நின்றிருந்தவர்கள் அட! நம்ம ஆல்பனி மக்கள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் வேறு பெயரில் என்னை அழைத்தார். நான் திரும்பிப் பார்க்கவில்லை. இரண்டாவது முறையும் யாரையோ அழைக்கிறார் போல என்று நினைத்துத் திரும்பினால் "சாரி! இவரோட மன்னி அப்படியே உங்களை மாதிரியே இருப்பா. அதான் லதான்னு பேரு கூட மறந்துடுச்சுப் பாருங்க." என்றார். பிள்ளையாரப்பா...அந்த மன்னி யாரப்பா?😝

நியூஜெர்ஸியியில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்குச் சென்றிருந்த பொழுது அவர்களுடைய பழக்க வழக்கங்களைக் காணும் ஆசையில் முதல் வரிசையில் உட்கார்ந்து திருமண வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல உயரமான அழகான பெண்மணி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். நானும் அவர் கட்டியிருந்த சேலை நன்றாக இருக்கிறதே? நல்ல வடிவாக வேறு இந்தப் பெண்மணி இருக்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென திரும்பிப் பார்த்தவர் சிரித்துக் கொண்டே அருகில் வந்து அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு
"உமாவோட சிஸ்டரா நீங்க?" என கேட்க,
"உமாவா ? அவங்க யாரு?" என நான் "திருதிரு"வென முழிக்க,
"பொண்ணோட அம்மா தான் உமா. என் ஃபிரெண்ட்." என்றார்.
"அப்படியா? நான் மாப்பிள்ளை வீட்டுச் சார்பா வந்திருக்கேன்" என்றவுடன், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "உங்க ஊர்ல இருக்கிற இவரைத் தெரியுமா?" என்று ஆல்பனியில் பிரபலமான மருத்துவரைக் கேட்டார்.
"ஓ! நல்லா தெரியுமே. நல்ல மனிதர். நன்கொடையாளர். என் கணவருக்கு நல்ல பழக்கம்." என்றவுடன் 'டபக்'கென்று ஃபோனில் அவரை அழைத்து அவரும் ஃபேஸ்டைமில் வர, சிறிது நேரம் பேசினோம். பிறகு அந்தப் பெண்மணி என்னை அழைத்துக் கொண்டு போய் அங்கிருந்த அவருடைய அம்மா, அப்பாவை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும், "நாங்க உன்னைய கோவில்ல பார்த்திருக்கிறோம்மா" என்றார்கள். இந்தப் பெண்மணியின் தங்கை எங்கள் ஊரில் இருக்கிறாளாம்.
அப்பப்பா! சிறிது நேரத்தில் என்னமாய் பேசிவிட்டாள் அழகி😊

நண்பர்களுடன் டொரோண்டோ கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது பெருமாள் சந்நிதியில் பட்டர்,
"என்ன இப்பல்லாம் கோவில்ல சுத்தமா பார்க்க முடியறதுல்ல?" என கேட்கவும் யாரைக் கேட்கிறார் என்று சுற்றிப் பார்த்தால் அவர் என்னைத் தான் கேட்டுக் கொண்டிருந்தார்.
"என்னையா? நான் ஆல்பனியிலேருந்து வந்திருக்கேன்." ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஆஹா! டொரொன்டோல இருக்கிற என்னோட 'டூப்' யாருன்னு தெரியலையே?😛

ஒரு முறை ஆல்பனி கோவிலில் நான் பாட்டுக்கு சிவனே என்று சாமி கும்பிட்டுத் திரும்புகையில்
"நேத்து நீங்க ரொம்ப நல்லா பாடினீங்க?" என்று அப்பாவியாக ஒரு பெண் சொல்லவும்,
"நானா? பாடினேனா?" நமக்குத் தான் சங்கீதம்னாலே கிலோ என்ன விலையாச்சே என்று யோசித்து
"நீங்க என்னைய மாதிரி வேற யாரையோ பார்த்திருக்கீங்க" என்றவுடன் "அப்படியே உங்களை மாதிரியே இருந்தாங்க" என்றார். ஒரு பாடகி பேர வச்சது என் குத்தமா உன் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல...😜

கல்லூரியில் என்னைப் போலவே ஒரு சீனியர் மாணவி இருந்தாள். பார்க்க கொஞ்சம் அவளும் என்னைப் போல இருப்பாள். பள்ளியில் இருந்தே அவள் தான் என் அக்கா என்று பலரும் நினைத்திருந்தார்கள். கல்லூரியிலும் பலர் கேட்டார்கள். எனக்கு வகுப்பெடுத்த விரிவுரையாளர் ஒருவரையும் என் அக்காவா என்று கேட்பார்கள். கொஞ்சம் ஒத்துக்கலாம்.

எங்கள் சமூகத்து மக்கள் சிலர் நான் குப்பா வீட்டுப்பெண் என்பதை மறந்து "அவங்க வீட்டுப்பெண்ணா? இவங்க வீட்டுப்பெண்ணா?" என்று வேறு வேறு குடும்ப பெயர்களைச் சொல்லிக் கேட்பார்கள். அதிலாவது கொஞ்சம் நியாயம் இருக்கிறது. எங்கள் சமூகத்தில் கொஞ்சம் முகம் ஒத்துப்போகும்.

ஆனால் மற்றவர்கள் கேட்கையில் 'நவராத்திரி' சிவாஜி மாதிரி மற்ற கெட்டப்களையும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொள்வேன்😇😇😇

ஒரு முகம்
ஒவ்வொருக்கும் புதுமுகமாக
தெரிவது ஏனோ?






Thursday, September 8, 2022

செய்யும் தொழிலே தெய்வம்

நேற்று ஷூ வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்குள் நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி துள்ளிக்குதித்துக் கொண்டே வேகமாக வந்து, "ஹாய் மை நேம் இஸ் சூஸன்." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "என்ன மாதிரியான ஷூ வேண்டும்?" என்று கேட்டார்.

நானும், " எனக்கு உயிர்போற குதிகால் வலி. நல்ல ஷூ வேண்டும்" என்றேன்.

அவரும் பாதங்களைப் படமெடுத்து சிறிது நேரம் ஏன் குதிகால் வலிக்கிறது என்று ஒரு மருத்துவரைப் போல் படங்களை வைத்து விளக்கி விட்டு, உள்ளே சென்று ஷூக்கள் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று போனார்.

நரைத்த தலைமுடி. குட்டையான உருவம். தெளிவான பேச்சு. துறுதுறு முகம். வயது 55+ ஆக இருக்கலாம். எப்படி இவ்வளவு உற்சாகமாக வேலை பார்க்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்று அட்டைப்பெட்டிகளுடன் வந்தவர் ஒரு பெட்டியிலிருந்து ஷூ ஒன்றை எடுத்து லேஸ் பிரித்து, "இதைப் போட்டுப் பார்." என்றார்.

"எனக்கு இந்த கலர் பிடிச்சிருக்கு." சொல்லிக் கொண்டே வாங்கிப் போட்டு நொண்டி நொண்டி நடந்து பார்த்து, அதற்குள் அவர் இரண்டாவது, மூன்றாவதையும் பிரித்துக் கொடுக்க நானும் போட்டுப் பார்க்க...

"தேர்ந்த மருத்துவரைப் போல இத்தனை விஷயங்களைப் பேசுகிறீர்களே. அது சம்பந்தமாக படித்திருக்கிறீர்களா?" என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "நான் பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறேன். இருபது வருடங்கள் நியூயார்க் சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பபாளராக இருந்து இரு வருடங்களுக்கு முன்பு தான் பணியிலிருந்து ஒய்வு பெற்றேன்." என்று ஆச்சரியமூட்டினார்!

"அப்ப கொரோனா காலத்துல நீங்க இல்லையா?"

"ஆறு மாதம் வரை இருந்தேன். அதற்கு முன்பு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுப்பரவல் , டிக் வேறு பல பூச்சிகளின் மூலம் உருவாகும் நோய்கள் பற்றின ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒய்வு பெற்றதும் 'LLBean' என்ற கடையில் துணிகளை மடித்து வைப்பது, பொருட்களை வரிசைப்படுத்தி வைப்பது போன்ற வேலைகள். இங்கு சேர்ந்து ஒரு வருடம் இருக்கும். எனக்கு ஓட மிகவும் பிடிக்கும். என் அம்மா 100 வயதாக இரு வாரங்கள் இருக்கும் பொழுது தான் இறந்தார். அதுவரையில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தவர். இங்கு வேலை செய்வதால் பலரையும் தினமும் சந்திக்கிறேன். எனக்கும் பிடித்திருக்கிறது."

“ஓ! அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கணினியியல் துறையில் வேலை கிடைத்தும் இருமுறையும் என்னால் சேர முடியவில்லை." என்று என் அனுபவத்தையும் சொல்லி பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் கனடாவில் சஸ்கேட்ச்சுவான் எனும் குளிர் பிரதேசத்தில் பிறந்து கால்கரியில் படித்து முடித்து அமெரிக்காவில் வந்து செட்டிலாகியிருக்கிறார். அவருடைய குழந்தைகளை ஒரு பஞ்சாபி பெண்மணி தான் வளர்த்திருக்கிறார். "என் குழந்தைகள் பஞ்சாபி உணவை விரும்பி உண்பார்கள். கனடா-இந்தியா கலாச்சார விழா நாட்களில் பஞ்சாபி உடைகளை அணிந்து கொள்வார்கள். அந்தப் பெண்மணி பாசத்துடன் என் குழந்தைகளை வளர்த்தார்" என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் நான் எந்தப் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

"கனடாவில் வெளிநாட்டவர்களை விரும்பி அழைத்துக் கொள்வார்கள்." அமெரிக்காவில் அப்படி இல்லை என்று சொல்லாமல் கண்களை உருட்டினார்.

என் பெயரையும் தவறில்லாமல் உச்சரித்தார். பரவாயில்லையே என்றவுடன் அவரின் கீழ் படித்த இந்திய மாணவர்களின் பெயர்களைச் சொன்னார்.

பணம் கொடுத்து விட்டுத் திரும்புகையில் "சீக்கிரம் உனக்கு குணமாகட்டும்." என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார்.

பொதுவாகவே அமெரிக்காவில் "கஸ்டமர் கேர்" என்பது தான் தொழிலின் அடிப்படை. அவர்கள் தான் நமக்கு மூலதனம் என்று உணர்ந்த எந்த நிறுவனமும் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள பணியாட்களுக்குப் பயிற்சி அளிக்கும். நான் சென்ற கடையும் ஷூக்களுக்கு மிகவும் பிரபலமானது. அங்கு வருபவர்களுடன் இணக்கமாக பேசுவார்கள். அவர்களைப்பற்றி விசாரிப்பார்கள். அவர்களிடம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவார்கள். அதனால் தான் கொள்ளை விலையில் விற்றாலும் வாங்கி கொண்டுச் செல்ல கூட்டம் இருக்கிறது. பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்காமல் (பிடிக்கா விட்டாலும்) கவனிப்பார்கள். ஆரம்ப அமெரிக்க நாட்களில் இது பெரிய கலாச்சார அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு!

மெத்த படித்தவர்கள் என்ற அகம்பாவோமோ எந்த வேலையையும் கீழ்த்தரமாக எண்ணும் மனோபாவமோ இல்லாது நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பலரையும் அறிவேன். எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாகவே நான் இங்கு பகுதி நேரம் வேலை செய்கிறேன் என்று உயர் பதவியில் இருப்பவர்கள் கூறிக் கேட்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் பலரிடமும் இருக்கும் இந்த குணாதிசயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் மக்களில் பலரும் தங்களால் தான் அமெரிக்காவில் தினசரி வேலைகள் நடப்பதைப் போல் 'நான் இப்படியாக்கும் நான் அப்படியாக்கும்' என பீலா விடுவார்கள். அப்பேர்ப்பட்ட மனிதர்களிடையே வெட்டி கௌரவம் பார்க்காமல் உயர் படிப்பு படித்திருந்தாலும் கைநிறைய ஓய்வூதியம் கிடைத்தாலும் ஒய்வு காலத்தில் தனக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்த சூஸனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. அவருடைய 'இகிகை'யை அவர் கண்டறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். கடந்து வரும் மனிதர்கள் எதையாவது ஒன்றை கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள்!
 
வாழ்க வளமுடன்!

ஆசிரியர் தின வாழ்த்துகள்

எனக்கு கமலா டீச்சர்
கணவருக்கு Prof.Rao
மகளுக்கு Mr. Spencer
மகனுக்கு Mr. Keilen
 
வாழ்க்கையில் வெற்றி பெற, நல்வழிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசிரியர் தேவை. அவர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் நம்முடன் பயணித்திருக்கலாம். நல்லாசிரியர் ஒருவர் போதும் நல்வாழ்க்கை அமைந்திட!

நடுநிலைப்பள்ளி வரை எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியைகளின் கொஞ்சும் நாகர்கோயில் தமிழையும், “இங்க வாங்க பிள்ளைங்களா” என்று அன்புடன் அவர்கள் போதித்ததையும் ரசித்திருக்கிறேன். மேல்நிலைப்பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை கட்டும் சேலைகளின் மேல் வந்த ஈர்ப்பு அவர் பாடத்திலும் வர, லயித்துப் படித்திருக்கிறேன். டீச்சர் ட்ரைனிங்க்காக வந்த இளவயது அழகு ஆசிரியையின் கவனம் பெற நன்கு படித்ததில் அவருக்கும் என்னைப் பிடித்துப் போக அதிலொரு கர்வம்! எனக்குப் பிடித்த ஆசிரியைகள் எடுத்த பாடங்களே எனக்கு மிகவும் பிடித்த பாடங்களாகிப் போனது. பள்ளிகளில் ஆசிரியைகளுடன் இருந்த பயம், பாசம் , பந்தம் ... இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள், நினைவில் இருக்கிறார்கள் எனும் பொழுது... நல்ல மாணவியாக இருந்திருக்கிறேன். மாணவியர் மேல் அக்கறை கொண்ட பண்பான வழிகாட்டிகள் ஆசிரியைகளாக கிடைத்ததும் வரமன்றோ?

சில பாடங்கள்
சில ஆசிரியர்கள்
பல நினைவுகள்
சுகம்ம்ம்ம்ம்...

வாழ்வில் வழிகாட்டிகளாக வந்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Monday, August 8, 2022

யாரிந்த ராபர்ட் ஃபிராஸ்ட் ?

"Robert Frost வாழ்ந்த வீடு இவ்வளவு பக்கத்துல இருக்கு. இத்தனை நாள் தெரியாம போச்சே! போகலாமா?" ஈஷ்வர் கேட்க,

"யாரிந்த ராபர்ட் ஃபிராஸ்ட் ? பெயர் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே" என நானும் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.

"இரு நான் அவரோட கவிதைகளை வாசிக்கிறேன். உனக்கு நல்லாவே தெரியும்"னுட்டு
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.

"அட! நான் அடிக்கடி அந்த கடைசி இரண்டு வரிகளைப் போட்டு பல படங்களை ஃபேஸ்புக்ல போட்டிருக்கேனே! அதான் இந்த பேரு தெரிஞ்ச பேராட்டம் இருந்துருக்கு. நல்ல வேளை! அந்த மனுஷன் எழுதுனதுல ரெண்டு வரியாவது எனக்குத் தெரிஞ்சிருக்கு. நான் என்ன ஆங்கில இலக்கியம் படிச்சேனா இல்லைன்னா கவிஞர்களைத் தெரிஞ்சுக்கிட்டேனா?" ஜாலியா நான் உண்டு என் கணினி உண்டுன்னு இருந்தவள ஆங்கில இலக்கியவாதியோட முடிச்சு போட்டாரு பாருங்க தட் கடவுள் இருக்காருடா கொமாரு மொமெண்ட் 😎 ஹ்ம்ம்ம்!

"இரு. இன்னொரு பிரபலமான கவிதையை வாசிக்கிறேன்"னு ஈஷ்வர் வாசிக்க, நான் வண்டியை ஒட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன்.

Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

"எப்படி இருக்கு?"

"ம்ம்ம். நல்லா இருக்கு. இந்த ஊரின் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த மாதிரி கவிதைகளை நம்மூர் மாணவர்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொள்வார்கள்?"

"அதெல்லாம் கவிதைகளைத் தேடிப் படிக்க ஆரம்பிச்சாலே எழுதினவங்களோட வாழ்க்கை முறை, வீடு, உலகம்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கும். சில படங்கள் மூலமா கற்பனையில் இதெல்லாம் புரியும் சாத்தியம் இருக்கும்னு" ஈஷ்வர் சொல்லிக் கொண்டே வர,

"என்னுடைய பள்ளியில் இந்த கவிதையை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து விட்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் சொல்லி கவிதையின் சுவையை இழக்க செய்திருப்பார் அந்த ஆங்கில ஆசிரியர்." என்றேன்.

"ஆமாம். கவிதைகள் என்பது பொருள் சொல்லிப் புரிய வைப்பதோ எழுத்துக்களின் தொகுப்போ அல்ல. ஒரு நல்ல கவிதை வாசிப்பவர்கள் மனதில் ஒன்றி கற்பனையை வளர்க்கும். அதோடு வாழ்வியலும் கூடவே வரும்." என்று பேராசிரியராகி பேச ஆரம்பித்து விட்டார் ஈஷ்வர்.

ஆல்பனியே குக்கிராமம் என்று சொல்பவர்கள் உண்டு. அதனைத் தாண்டினால் பழங்காலத்து வீடுகள், உயர்ந்த மரங்கள், பரந்து விரிந்த பச்சைப்பசேல் நிலங்கள் என அழகிய பல குக்குக்கிராமங்கள் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும். இரு வழிப்போக்குவரத்து தான் வழிநெடுக. மலைகளும், நீரோடைகளும், ஆறு, ஏரி, குளங்கள் என கண்களுக்கு விருந்தாக இருந்தது பயணம் முழுவதும். பக்கத்து மாநிலமான வெர்மாண்ட்டில் பென்னிங்டன் நகருக்கு அருகில் உள்ள ஷாப்ட்ஸ்பர்ரி எனும் ஊரில் திரும்பு திரும்பு என்று ஜிபிஎஸ்ஸில் அவள் வேறு ஆணையிட...

"என்ன இது? ஒன்னும் பெரிய இடமா தெரியலையே?"

"அங்க போய் நிப்பாட்டு" என்ற இடத்தில் எந்த வண்டியும் இல்லை.

"இன்னைக்குத் திறந்திருக்காங்களா? கேட்டீங்களா?"

சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தால்...

அமைதி தவழும் இடத்தில் ஒரு வீடு. சுற்றிலும் தோட்டம். வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் செல்லும் பாதையில் ஆற அமர உட்கார்ந்து இளைப்பாற பெரிய மரத்தின் கீழ் நாற்காலிகள். இங்கு தான் ராபர்ட் ஃபிராஸ்ட்-ம் உட்கார்ந்து எழுதியிருப்பாரோ?

நல்ல வெயில். இதமாக தென்றல். உள்ளே சென்றால் இளம்பெண் ஒருவர் வரவேற்பறையில் இருந்தார். அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆளுக்கு பத்து டாலர் கொடுத்து டிக்கெட்டை வாங்கி விட்டு அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பெண் விரிவாக கவிஞரைப் பற்றின தகவல்களைக் கூறி எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டார். மஹிந்திரா கல்வி அறக்கட்டளை வாயிலாக இந்தியாவில் புனேயில் தங்கி ஒரு வருடம் படித்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அப்படி ஒன்று இருக்கிறதே இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்!ம்ம்ம்ம்!

அந்த அறை முழுவதும் கவிஞர் எழுதிய புத்தகங்கள், அவரைப்பற்றின புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவர் வாழ்ந்த வீட்டையே கண்காட்சியாக்கி இருக்கிறார்கள்.

அவருடைய கவிதைகள் இங்கிலாந்தில் முதலில் பிரசுரமாகி பின்பு தான் அமெரிக்காவில் பிரபலமாகி இருக்கிறது. கலிஃபோர்னியாவில் பிறந்து நியூஇங்கிலாந்து மாநிலங்களில் வாழ்ந்து அதன் கிராமப்புற அழகின்பால் ஈர்க்கப்பட்டு வெர்மாண்ட் மாநிலத்தில் குடியேறியிருக்கிறார். வட அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் நான்கு பருவங்களும் வெவ்வேறு அழகுடன் வலம்வருவதையும் கிராமப்புற அழகையும் வாழ்க்கையையும் அவருடைய கவிதைகள் பலவும் எளிய முறையில் கூறுகிறது. பல உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளதை அங்கே உரிய தகவல்களுடன் வைத்திருந்தார்கள். கவிதைகள் எழுதுவதுடன் விவசாயமும் செய்து அதில் திருப்தியற்று அருகிலிருந்த கல்லூரியில் பணியாற்றியதாக அவருடைய சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரவேற்பறைப் பெண் விவரித்தார்.

அவர் பணிபுரிந்த பென்னிங்டன் கல்லூரி இந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருக்கிறது. ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஆப்பிள் மரங்களுடன் பச்சைப்பசேல் சூழலில் அமைந்துள்ள  250 ஆண்டுகளுக்கும் மேலான இந்த வீட்டின் முன் அறையில் தான் "Stopping by Woods on a Snowy Evening" என்ற புகழ்பெற்ற கவிதையை எழுதி உயரிய விருதினையும் பெற்று பிரபலமாகியுள்ளார். அவரைப் பொறுத்தவரை கவிதை என்பது அதிக சிந்தனையுடன் எழுதப்பட்டதோ அல்லது அறிவு சார்ந்ததாக இல்லாமல் எளிமையாக தெளிவாக இருந்தாலே போதுமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய தமிழ்க்கவிஞர்கள் பலரும் தங்கள் அறிவைப் புலப்படுத்த குறியீடுகள், தொன்மங்கள், படிமங்கள்  அது இது என்று நம்மைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டிருப்பது தான் நினைவிற்கு வந்தது. அப்படி எழுதுவது தான் கவிதை. தங்களுடைய கவிதையைப் படித்துப் பொருளுணர அறிவு வேண்டும் என்று நினைக்கும் அதிமேதாவிகள் தான் இன்றைய தமிழக கவிக்கள். அவர்கள் எல்லோரும் ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகளைப் படித்தால் நலம் என்று நினைக்கத் தோன்றியது.

அறைகளில் அந்த வீட்டின் அழகுப் படங்கள் பலவும் கருப்பு வெள்ளையில் வெவ்வேறு பருவங்களில் எடுக்கப்பட்டிருந்ததையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். வரைந்து பார்க்கணும் என்று மனதில் ஒரு ஆசை. அவருடைய கவிதைகள், மனைவி, குழந்தைகள், அமெரிக்கா அதிபர் கென்னடியுடன் எடுத்த படங்களும் அவருடைய வாழ்க்கையை விவரிக்கும் வகையில் இருந்தது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அழகான பல படைப்புகளை வழங்கியிருக்கிறார். அமெரிக்க அரசாங்கம் அவர் உருவம் பதித்த முத்திரையை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இரண்டு அறைகள் மட்டுமே பார்வையாளர்கள் பார்க்க முடியும். மாடிக்குச் செல்ல அனுமதியில்லை. ஜன்னல்கள், கதவுகள், சாளரமும் பழமைமாறாமல் அழகைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது சிறப்பு.

வெளியே பசுமை நடை வழித்தடத்தில் அவருடைய கவிதை வரிகளை எழுதி வைத்திருந்தார்கள். மரங்களும் செடிகளும்,  தேனீ, வண்டுக்களின் ரீங்காரமும் பறவைகளின் குரல்களும் அச்சூழலை ரம்மியமாக்கின. ஒரு நல்ல கவிஞரை அறிந்து கொண்ட திருப்தியில் மரநிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேன். 
கொண்டு வந்திருந்த குளிர்ந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு அருகிலிருக்கும் அம்மாநிலத்தின் போர் நினைவுச்சின்னத்தையும் பார்த்து விட்டு வீடு போய்ச் சேரலாம் என்று நடையைக் கட்டினோம்😇😇😇

வீடியோ சுட்டி 👇


Wednesday, August 3, 2022

ஆடிப்பெருக்கு

காலையில் ஆறு மணிக்கெல்லாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டால் ஆடிப்பெருக்கு தினக்கூட்டத்தை சமாளித்து விடலாமென அங்கு போனால் உறங்கா நகர மக்கள் நீண்ட வரிசையில் அம்மன் தரிசனத்திற்காக காத்திருந்தார்கள். பெண்கள் சிலர் புதுப்புடவை சரசரக்க , நகை மினுமினுக்க, சில மஞ்சள் பூசிய இயற்கை முகங்கள், மேக்கப் போட்ட பல செயற்கை முகங்கள், எண்ணெய் திரி விளக்கு, மதுரை தாழம்பூ குங்குமம், பூக்களின் மணத்துடன் கோவில் மண்டபமே ரம்மியமாக இருந்தது. மெல்ல நகர்ந்த வரிசை, தீபாராதனை, அழகு அம்மன் தரிசனம் குங்குமம் வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனம் முடித்து குளத்து படிக்கட்டில் சிறிது நேரம் ஆசுவாசம். கோவிலின் நுழைவாயிலில் புது மணப்பெண் மணமகன் குடும்பத்தினருடன் வந்து தாலி பிரித்து சேர்க்கும் வைபவம் வெட்கத்துடன் அரங்கேறிக் கொண்டிருந்தது.

வெளியில் ஆட்டோ, கார்கள் என்று மாடர்ன் ரெஸ்டாரண்ட் முன் முண்டியடித்துக் கொண்டு போக்குவரத்து. ஆடிப்பெருக்கு அன்று புது ஹோண்டா காரின் பின்சீட்டில் வைர, தங்க நகைகளுடன் பட்டுச்சேலை உடுத்திய பெண்மணி. இன்ச் இன்ச்சாக நகரும் கூட்டத்தில் வண்டி மீது யாரும் உரசிடாதவாறு ஒட்டிச் செல்லும் டிரைவர். மதுரையில் வண்டி ஓட்டுவதற்கு சாமர்த்தியம் வேண்டும்! புது வண்டி கீறல் படாமல் கடந்து செல்லும் வரை எனக்குத்தான் படபடப்பாக இருந்தது!

அதிகாலை கூட்டத்துடன் ஆடிப்பெருக்கு கூட்டமும் சேர்ந்து அம்மன் வீதிகளில் கலகலப்பாக...

சூடான பஜ்ஜி அங்கே
சுவையான சொஜ்ஜி இங்கே
சந்தோசம் மீறி பொங்க
ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

தோசை வடையும் ஜோரு
வெகு பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு..
ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

இனி இஷ்டம் போல வெட்டு ...ன்னு மாடர்ன் ரெஸ்டாரண்ட்டில் கொண்டாடியதெல்லாம்ம்ம்ம்ம்...

அந்த நாள் இனிய நாள் 🙂

ஆறு வறண்டால் என்ன?மனது வறண்டு போகா விட்டால் பெருக்கலாம் ஆயிரம் நற்பண்புகளை!

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள் 🙂🙂🙂

Thursday, July 21, 2022

The Magic of your first work friends

 சமீபத்தில் 'நியூயார்க் டைம்ஸ்'ல் வெளிவந்த "The Magic of your first work friends" கட்டுரையில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் இழக்கும் பல விஷயங்களை அலசி இருந்தார்கள். அதில் முக்கியமாக வேலையிடத்து நண்பர்கள். முதன்முதலில் பணியில் சேரும் பொழுது நம் அலைவரிசையுடன் ஒத்து வரும் நண்பர்கள் அமைந்து விட்டால் வேலைக்குச் செல்வதில் ஒரு நாட்டம் உருவாகி விடும். புத்துணர்ச்சியுடன் ஒரு வித உத்வேகத்துடன் பணிக்குச் செல்லும் மனநிலையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான பொழுதுகளாக இருக்கும். பணியில் திருப்தியும் மனஉளைச்சல் இல்லாத  நாட்களுமாய் வாழ்க்கையும் வீறு நடை போடும். அலுவலகத்திற்குச் சென்று புது நபர்களைச் சந்தித்து நண்பர்களாகி தொடரும் பந்தம் அனுபவித்தே உணர்வது. நம் நாட்டில் இப்படிப்பட்ட உறவு வீடு வரை தொடரும். அமெரிக்காவில் பெரும்பாலும் வேலையிடத்து நண்பர்கள் வேலையிடத்தில் மட்டுமே. ஆனால் வீட்டு விஷயங்களில் இருந்து சொந்தப் பிரச்னைகள் வரை நன்கு பேசுவார்கள். நமக்கிருக்கும் மனக்கிலேசமோ என்னவோ வீடு வரை வெகு சிலரை மட்டுமே அனுமதிக்கத் தோன்றும். இதெல்லாம் கோவிட் காலத்திற்கு முன். பழைய ஆட்கள் மட்டும் எப்பவும் போல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

புதிதாக சேர்ந்தவர்கள், வருகிறார்கள். வேலை செய்கிறார்கள். போய்க் கொண்டே இருக்கிறார்கள். யாரும் யாருடனும் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. ஏன் தான் அலுவலகத்திற்கு வருகிறோமோ என்ற முகபாவம் தான் பலருக்கும்! அதுவும் இந்த தலைமுறை என்றால் சோகமாக தனியாக இருப்பது போல் தோன்றுவது எனக்குத்தானோ?

இன்று வரையிலும் சந்திப்புகள் டீம்ஸ் அல்லது ஜூம் என்றாகி விட்டதால் இடைவேளைகளில் நடக்கும் கலாட்டா பேச்சுக்கள் சிரிப்புகள் எல்லாம் தொலைந்து தான் போயிருக்கிறது.

சமீபத்தில் அலுவலகத்தில் புதிய முகம் ஒன்று. அமைதியாக சோகமாக இருந்தார் அந்த இளைஞர். ஒரே தளத்தில் வேலை செய்வதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்றார்! இப்படி பல முகங்கள்! 

நேற்று இரு இந்திய பெண்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரை எங்கேயோ பார்த்த ஞாபகம். அனேகமாக கோவிலாகத் தான் இருக்க வேண்டும். அதற்குள் அந்தப் பெண்ணே சிரித்துக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்தி "உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேன்." என்று ஸ்னேகத்துடன் அவரைப்பற்றி பேசி விட்டுச் சென்றார். 

புதிதாக அணியில் சேர்ந்திருக்கும் நபர் அவருடைய அலுவலகத்தில் ரூபிக்ஸ் கியூப் பல அளவுகளில் விதவிதமாக வைத்திருப்பார். நேற்று அழகாக ஒன்றை வைத்து மண்டையைக் குடைந்து கொண்டிருந்தார். 

"என் மகனுக்கும் கணவருக்கும் ரூபிக்ஸ் கியூப் பிடிக்கும்." என்றவுடன் முகம் மலர்ந்து பேச துவங்கி விட்டார். அவரும் வேலைக்குச் சேர்ந்து ஐந்தாறு மாதங்கள் ஆகி விட்டது. இது வரை பேசியதில்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு நாட்கள் வந்து செல்வதால் யாருக்கும் மற்றவரைப் பற்றின அறிமுகப்படலம் கூட நடக்கவில்லை என்று நினைக்கிறேன். நேற்று தான் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம். 

"நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். 

"ஆஹா! நாம யாருக்கும் புரியாதுன்னு தைரியமா சௌராஷ்டிரால பேசுறத ஒட்டு கேட்கறானுவோ"😀😀😀 நல்ல வேளை ! ஒன்னும் புரியாது 😎

நினைத்துக் கொண்டே என் தாய்ப்பாஷையைப் பற்றி, தமிழைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் ஆப்கான் மொழி பஷ்டோ படித்தவராம். அதனாலேயே ராணுவத்தில் வேலையும் பார்த்திருக்கிறார்! 

"ம்ம்ம்ம். ஜாக்கிரதையா இருக்கணும் போலயே!" 

சிறிது நேரம் ஆப்கானிஸ்தான் பற்றி பேசி விட்டு வேலைகள் பக்கம் பேச்சு திரும்பியது. அவர் புதிதாக ஒரு வலைத்தளத்தைக் காண்பித்து அங்கிருக்கும் விவரங்கள் நன்றாக இருக்கிறது. நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. என்று புதிய பாதையைக் காண்பித்தார்.  நானும் குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பினேன்.

இன்று காலையில் என்னைக் கண்டதும் ஏதோ யோசித்தவராக "காலே வணக்கம்" என்றார் சிரித்த முகத்தோடு.

அட! பரவாயில்லையே!

நானும் "நன்றி" சொல்ல, கூகுளாண்டவர் உதவினார் என்று இந்த நாளை இனிமையாக்கினார்.

என் வண்டிக்கு அருகே ஒரு வயதான பெண்மணியும் அவர் வண்டியை நிறுத்துவார். தினமும் காலையில் முகமன் சொல்லிக்கொண்டு அன்றைய காலைப்பொழுதைப் பற்றி சிறிது நேரம் அளவளாவுவோம். அங்கிருக்கும் பாதுகாவலர் காலை ஆகாயத்தை, சூரிய பகவானை எடுத்த படங்களைக் காண்பிப்பார். எலிவேட்டரில் பயணிக்கையில்"நல்ல வேளை இன்னும் ஒரு நாள்  தான் இருக்கிறது வார இறுதிக்கு" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு செல்லும் மனிதர்களுடன் அருகில் இருக்கும் குழந்தைகள் டே கேர் சென்டருக்குச் செல்லும் சின்னஞ்சிறு மழலைகள் பூ போன்ற கைகளை அசைத்தவாறு செல்லும் அழகு என்று ஏகப்பட்ட காட்சிகள் கிடைக்கும்!

என்ன தான் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது சுகமாக இருந்தாலும் சின்ன சின்ன உரையாடல்கள், நலம் விசாரிப்புகள், வம்பு தும்புகள் என்று இருந்தால் தானே நன்றாக இருக்கிறது? 

அலுவலகம் முடிந்து மாலையில் வீடு திரும்பியவுடன் அன்று பள்ளியில் நடந்த நிகழ்வுகளை குழந்தைகளும் அலுவலகத்தில் நடந்தவற்றை நாங்களும் பேசிக் களித்த தருணங்கள் தான் எத்தனை இனிமையாக இருந்தது! 

ஆன்லைன் சந்திப்புகளில் இவையெல்லாம் சாத்தியமில்லையே! மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனைக் கூண்டுக்குள் அடைத்து வைப்பது போல தான் வீட்டிலிருந்து வேலை பார்க்கச் சொல்வதும். அதுவும் பெண்களுக்கு கூடுதலாக சமையல் வேறு😓

ஆமாம்! பெட்ரோல் விற்கிற விலையில் அலுவலகம் வந்து செல்ல கூடுதல் செலவு தான். வெயில் 100 டிகிரி வாட்டுகிறது தான். யாரவது தும்மினாலோ இருமினாலோ பயம் வரத்தான் செய்கிறது. அதற்காக எத்தனை நாட்கள் "தெனாலி" மாதிரி பயந்து கொண்டிருக்கப் போகிறோம்? பல கட்டடங்களும் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது. ஒரு அலுவலகம் என்றால் அதைச் சுற்றி உணவகங்கள், வண்டி நிறுத்தும் இடங்கள், கடைகள் என்று பலருடைய பொருளாதார வாழ்க்கையும் இரண்டற கலந்திருக்கிறது. கொரோனாவால் அவர்கள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். என்று மீளுவோமோ தெரியவில்லை! 

அமெரிக்கா இந்த பயத்திலிருந்து வெளியில் வந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்ய பழகி விட்ட மனிதர்கள் பெருகிவிட்டார்கள் என்பது தான் உண்மை!

என்னவோ போடா மாதவா!


Monday, July 18, 2022

ஈமோஜி😜😂🙂

முகபாவனைகளும் உடல்மொழியும் ஒருவரின் பேச்சை துல்லியமாக மற்றவரிடத்தில் கடத்தி விடும். ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் ஈமோஜிக்கள் அப்பணியைச் செவ்வனே செய்கிறது. என்ன? ஏற்கெனவே தப்பில்லாமல் சேர்ந்தாற்போல நாலு வார்த்தை எழுதத் தெரியாதவர்களும் பொருத்தமான ஈமோஜியைப் போட்டு விட்டு சொல்ல வந்ததைச் சொல்லி விட முடிகிறது.

"நான் ஒன்று சொல்ல வேண்டும். சரியான ஈமோஜி தான் கிடைக்கவில்லை" என்ற புலம்பல்களும் கேட்கத்தான் செய்கிறது😜 இன்னும் நிறைய ஈமோஜிக்கள் வேண்டும்ம்ம்ம்ம்🙂 

 சீரியசாக சொல்லிவிட்டு சிரிப்பு ஸ்மைலியைத் தட்டி விட்டு சிரிப்பு போலீஸாகி தப்பித்துக்கொள்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். 

வார்த்தைகளில் உணர்வுகளை முற்றுப்புள்ளியாக்கிய ஈமோஜியை கொண்டாடும் நாள்😜😂🙂 Happy Emoji Day! (ஜூலை 17)

Saturday, July 2, 2022

ஜூன் போனால் ஜுலை காற்றே

கோடை ஆரம்பமாகி நீள்கிறது பகல் பொழுதுகள். ஆம் இனி வரும் நாட்களில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும். காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை கூடஇது தொடரும். விடுமுறையில் இருப்பதால் குழந்தைகளும் 'ஓடி விளையாடு பாப்பா' என்று தெருவில் பெருங்குரலெடுத்து நண்பர்களுடன் விளையாடி மகிழும் இனிய காலம். 

வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகளும், பழங்களும் , பூக்களும் பூத்துக் குலுங்க, பறவைகளும் ,அணில் , முயல்களும் துள்ளியோடும் அழகில் மனம் மயங்கும் பருவம். மழைக்காலத்தில் வருகை தந்த பறவைகள் கூடுகள் கட்டி கொஞ்சிக் குலாவி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளுக்கு இரை தேடி ஊட்டி வளர்ந்து பறக்கும் வரை சீராட்டிப் பாராட்டும் பொறுப்பான காலம். மழையுடன் பல வண்ணப்பறவைகளின் இனிய இசையில் மனமும் மயங்கும் வசந்த காலம். பார்க், பீச் என்று மக்கள் குடும்பமாக கோடை விடுமுறையைக் கொண்டாடி உறவினர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்திருக்கும் நாட்கள் மனதிற்கும் இனிமை. தாய் நாட்டுக்குச் செல்பவர்கள் விமான நிலையத்தை நோக்கிப் படையெடுக்க, பெற்றோர்களை ஊரிலிருந்து வரவழைத்து வெளிநாட்டைச் சுற்றிக் காண்பிக்க தாத்தா, பாட்டிகள் பேரக்குழந்தைகளுடன் அகமகிழ்ந்து வெளிநாட்டு வாழ்க்கையின் சுவாரசியத்தை அனுபவிக்கும் இனியதொரு காலம். வியர்வையும் புழுதியும் கொசு, பூச்சிக்கடிகளும் உடலைப் பதம் பார்க்க நீச்சல் குளங்களில், நீர்நிலைகளில் கூட்டம் அலைமோதும்.
 
நானும் நினைத்திருந்ததுண்டு! நாம் தான் வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்று பழகி விட்டதால் இந்த வட அமெரிக்கர்கள் ஏன் இப்படி கோடை கோடை என்று கொண்டாடுகிறார்கள் என்று!
பள்ளி திறக்கும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் இப்பருவம் பின் மெதுவாக குளிர்ப்போர்வையை சுமக்க ஆரம்பிக்கும். படுக்கையிலிருந்து எழ அடம்பிடிக்கும் குழந்தைகளைப் போலவே சூரிய பகவானும் வானில் உலா வர மறுத்து இருள் விலகா காலையில் மாணவச்செல்வங்கள் பள்ளிக்குச் செல்வார்கள். காலைக்குளிர் புற்களில் வைரமாக ஜொலிக்க இளம் தென்றல் சாமரம் வீச கோடைக்கால துணிமணிகளுக்கு விடை கொடுத்து விட்டு ஸ்வெட்டர், சாக்ஸ், ஷூ என்று இலையுதிர் காலத்திற்குத் தயாராக வேண்டும். கோடை மலர்கள் மலர்ந்து உதிர்ந்து இலையுதிர்காலத்தில் பூக்கும் மலர்கள் வீடுகளை அலங்கரிக்கும். கோடை வரை பாடித்திரிந்த பல பறவைகளும் புலம் பெயர சில துயில் கொள்ள ஆரம்பிக்கும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வண்டிகள் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி எரிச்சல் படுத்தும் பருவமும் கூட! விடியலில் தொடங்கி மாலை மங்கும் நேரம் செல்வது கூட தெரியாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பெற்றோர்களும் பம்பரமாகச் சுழல... மரங்களின் இலைகள் வண்ணங்களுடன் வலம் வர அக்டோபர் மாதம் பிறந்திருக்கும். 

காற்றில் தவழ்ந்து வரும் குளிரும் பனிமூட்டமும் காலை நேரத்தை அழகூட்ட மரங்களின் வண்ண இலைகள் நகரையே மெருகூட்ட, மழையும் காற்றும் இலையுதிர்காலத்தை தொடங்கி வைக்க...அது ஒரு அழகிய கனாக்காலம்! நவம்பரில் குளிர் சற்று அதிகமாகி தேங்க்ஸ்கிவிங் , கிறிஸ்துமஸ் விழா நாட்களின் உற்சாகத்துடன் மக்கள் வலம் வர, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் மெதுவாக வெண்பனியினால் சூழ... வசந்த காலத்திற்காக காத்திருக்கும் மனது!

வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் மழை , குளிர், பனி, பனிமழை, ஐஸ் என்று வீட்டுக்குள் முடக்கி விடுவதால் வசீகரன் வானில் உலா வரும் நாட்களைக் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுகிறோம். கொண்டாடுகிறேன்!
 
இப்பொழுது தெரிந்து விட்டது கோடையின் மகத்துவம்!
மழைக்காலத்திற்கு விடை கொடுத்து வரவேற்போம் கோடையை
ஜூன் போனால் ஜுலை காற்றே ....

Tuesday, June 28, 2022

ஃபேஸ்புக் பதிவு

அவனுக்குத் தேர்வுகள் ஆரம்பிக்க எனக்கு எக்ஸாம் ஃபீவர் வந்துடுது. கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்றேன்னு ஓடிப் போனவன் மூச்சிரைக்க ஓடி வந்து மடக் மடக்குன்னு தண்ணிய குடிச்சிட்டு திரும்பி பார்க்குறதுக்குள்ள கதவு மூடுற சத்தம் மட்டும் தான் கேட்குது. நாளைக்குப் பரிட்சைய வச்சுக்கிட்டு எங்க இவன்ன்னு கடிகாரத்தை பார்த்தா, வேர்க்க விறுவிறுக்க, அம்மா, பசிக்குது, தோசை வேணும்னு சாப்பிட உட்கார்ந்துடறான். அப்ப கூட, வடிவேலு மாதிரி, "நாளைக்குப் பரீட்சை..."

"ஆமா, ரெண்டு இருக்கும்மா ? நீ ஏன் டென்க்ஷன் ஆற?"

ஞே!

"என்ன என்ன பாடம்னாவது தெரியுமா?"

"ஒ! தெரியுமே!"

"ம்ம்ம். பெரிய விஷயம் தான்!"

"இங்கிலீஷ்ல படிக்கிறதுக்கு ஒன்னுமே இல்ல. மேத்ல படிக்கிறதுக்கு என்ன இருக்கு?"

😐😐😐

ஒரே நாள்ல ரெண்டு பரீட்சை வச்சா சுப்பிரமணி தான் என்ன பண்ணுவான்? பாவம்! எழுதி எழுதி களைச்சுப் போய் தூங்கி தூங்கி எந்திரிச்சு படிக்க விட்டுருந்த லீவெல்லாம் முடியறப்ப ஏதோ போனா போகுதுன்னு ஒரு பார்வை.

"எப்படிடா எழுதின?"

"நல்லா எழுதின மாதிரி தான் தோணுச்சு!"

"அப்படின்னா?"

"மார்க் வந்தாதான்ம்மா தெரியும்."

"அப்ப எனக்கும் தெரியும். கேட்டா எப்படி பதில் வருது பாரு!"

"இப்ப ரெண்டுநாள் லீவு. ஜாலி!"

"படிக்கத்தான?"

"நாளைக்கு என் ஃப்ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வர்றாங்க?"

"எதுக்கு?"

"விளையாட?"

"விளையாடவா? படிக்க இல்லியா?"

"ஜெர்மன்ல படிக்க ஒன்னுமே இல்லையே?!"

"ஞே!"

"அதுக்கப்புறம் வர்ற கெமிஸ்ட்ரிக்கும் உனக்கும் தான் ஏகப்பொருத்தமாச்சே! அதையாவது படிக்கறதா உத்தேசம் இருக்கா?"

"ஆமா, அதைப் படிச்சு தான் ஆகணும்."

"ஏதோ ஒரு பாடத்தையாவது படிக்கணும்னு தோணுச்சே? வா, வந்து படி."

புஸ்தகத்தை திறந்து வச்சுட்டு ரோபோ சிட்டி மாதிரி ஸ்கேன் பண்ணி பக்கத்தை திருப்பறான்!

"என்னடா பண்ற?"

"படிக்கிறேன்."

"இப்படியா?"

ரெண்டு மணி நேரம் தான். "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா! டயர்டா இருக்கு. ரிலாக்ஸ் பண்ணப் போறேன்!"

அடுத்த நிமிஷம், விளையாட ஓடிப் போயாச்சு!

"கெமிஸ்ட்ரி எக்ஸாம் எப்படி எழுதின? ஈஸியா இருந்துச்சா?"

பதில்: "pretty solid"

இனி ரெண்டு மாசத்துக்கு காலை அலாரம் அடிக்காது. ஓடிப் போய் பஸ்ஸை மறியல் பண்ணத்தேவையில்லை.
Hooray! hooray! it's a holi-holiday
What a world of fun for everyone, holi-holiday
Hooray! hooray! it's a holi-holiday
Sing a summer song, skip along, holi-holiday
It's a holi-holiday...

இப்படியாகத்தான் சுப்பிரமணியின் பள்ளி நாட்கள் இருந்தது. இன்றோ, கல்லூரியில் அவன் என்ன படிக்கிறான் எவ்வளவு மதிப்பெண்கள் என்று ஒன்றும் தெரியவில்லை 😓😓😓



Tuesday, June 21, 2022

கோடைக்கால காற்றே


மதுரையில் பிறந்து வளர்ந்து விட்டதாலோ என்னவோ நாம் கோடையை கொண்டாடுவதில்லை. வெயில் நம்மை வாட்டி வதைத்துவிடுமே என்ற பயத்தில் வெறுப்புடனே இருந்து விட்டு வட அமெரிக்காவில் இப்பொன்னாளுக்காக மக்கள் ஏன் காத்திருக்கிறார்கள் என்று வியந்ததுண்டு!

மழைக்காலம் முடிந்து நீண்ட பகற்பொழுதாக கோடைக்காலம் இன்று முதல் ஆரம்பமானாலும் மழையின் வாசம் அவ்வப்பொழுது 'சிறுசிறு' தூறல்களாக, 'சிலுசிலு' மழைச்சாரல்களாக மண்ணை நனைத்துச் செல்லும். மழை தந்த உற்சாகத்தில் புத்துயிர் பெற்ற மரங்கள், பூத்த மலர்கள் இனி காய்களாக, கனிகளாக! புது உயிர்களும் இவ்வுலகைக் காண, மரங்களில் பறவைகளின் குதூகல சங்கீதம் மென்மேலும் கேட்கும். வண்டுகளும், தேனீக்களும், பட்டாம்பூச்சிகளும் மலர்கள் தாவும். துள்ளியோடும் முயல்களும், அணில்களும், மான் கூட்டங்களும் கொண்டாடும் இனிய காலம்!
 
இனி வரும் நாட்களில் காலை தொடங்கி மாலை வரை தெருவெங்கும் ஓடியாடும் குழந்தைகளின் விடுமுறைக் கொண்டாட்டம் இனிதே ஆரம்பமாக, அவர்களுடன் களிப்புற விளையாடி மகிழும் பெற்றோர்கள் பூங்காக்களுக்கும், ஆறு, குளங்களுக்கும் சென்று குழந்தைகளுடன் குழந்தைகளாய் குதூகலித்து இரவில் மறையும் சூரியனை வழியனுப்பி விட்டு களைப்புடன் வீடு திரும்பும் மனம் ஏங்கும் மீண்டும் ஒரு நன்னாளுக்காக!
 
ஓடுபவர்கள், நடைபயிலுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், படகுகளில் உல்லாசமாக செல்பவர்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம்! அதுவும் கோடை வார இறுதிகளில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலுடன் படகுகளையும் சுமந்து செல்லும் வண்டிகளும், அனைத்து வசதிகளுடன் கூடிய விடுமுறை வாகனங்களும் இயற்கையோடு இணைந்த முகாம்களை முற்றுகையிடும்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரிய ஒளியைப் பெற அரை நிர்வாணமாக பூங்காக்களில், கரையோரம் என்று படுத்துக் கொண்டும், காதலர்கள் தத்தம் காதலியரோடு அளவளாவிக் கொஞ்சிக் கொண்டும், குழந்தைகள் மணல் வீடு கட்ட, பெற்றோர்கள் சூரியக்குளியல் போட...இது ஒரு இனிய காலம்.

நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பெரும் விருந்துகள் கோலாகலமாக சிரிப்பும் உற்சாகமுமாய் காற்றில் வலம் வரும். கூடவே சுட்ட கறியின் வாசமும்ம்ம்ம்

பெட்டிகளுடன் விமான நிலையத்துக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டமும் காத்திருக்கும் அருமையான காலம்!

அடுக்கடுக்காக உடைகள் உடுத்திய காலங்கள் சென்று அழகிய ஆடைகளுடன் தேவதைகள் உலா வரும் கோடைக்காக காத்திருந்து கொண்டாட நானும் தயாராகிறேன்.

கோடைக்கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதைக் கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்ம்ம்ம்ம்
லல லால லாலா ...

Wednesday, January 13, 2021

கற்றதும் பெற்றதும்

கையில் தூக்கிப் பார்த்து என்னவாக இருக்கும்? தான் கேட்டது தானோ? ஆயிரம் கேள்விகள் மனதில்! நிவியும் சுப்பிரமணியும் பரபரவென காகித உறையைப் பிரிக்கும் சத்தம். உனக்கு என்ன? உனக்கு என்ன? இருவருக்குள்ளும் ஏக எதிர்பார்ப்புகள். முகத்திலும் பெருமகிழ்ச்சி. ஹாஹாஹா! ஐ காட் இட்! மாடிப்படிகளில் ஓடி வருகிறான். மாம்! லுக் அட் திஸ். மை நிண்டெண்டோ டிஎஸ். பளபளவென மின்னிக் கொண்டிருந்தது அவன் கண்களைப் போலவே! நான் விளையாட போறேன். அக்காவிடமும் காட்டி குதூகலித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டில் நண்பர்களிடம் (அண்ணன் & தம்பி) காமித்து விட்டு வருகிறேன் என்று குஷியாக கிளம்பி விட்டான். அரைமணிநேரத்தில் திரும்பி வந்தவன் முகம் வாடி இருந்தது.

என்னடா? என்னாச்சு?

அவங்களுக்கு சாண்டா மேக் புக் வாங்கி கொடுத்திருக்காரும்மா!

ஐயோ! இது என்ன பட்டணத்தில் பூதம்!

எனக்கு சாண்டவ பிடிக்கல😳

நோவாஸ் ஃபேமிலி இஸ் ஆப்பிள் ஃபேமிலி!

நாமளும் தான். ஃப்ரிட்ஜ் நிறைய ஆப்பிள் இருக்கே?

முறைத்துக்கொண்டே , மாம் ஐ ஆம் சீரியஸ் 😞

நீங்க ரெண்டு பேர் வேலைக்குப் போறீங்க. அவங்க வீட்ல ஒருத்தர் தான் வேலைக்குப் போறாரு. நீங்க ஏன் எனக்குச் செலவு பண்ணக்கூடாது? யாருக்காக சேர்த்து வைக்கிறீங்க? திஸ் ஐஸ் நாட் ஃபேர் 😞

உனக்கெதுக்கு மேக் புக்? உங்க அக்காகிட்ட இருக்கா? அவளே இன்னும் கேட்கல? உனக்கு வேணும்ங்கிறப்ப கண்டிப்பா வாங்கிக்கொடுப்போம்.

சமாதானமாகவில்லை.

பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறோம்? எனக்குப் பிடிச்சத இப்ப வாங்கி கொடுக்காம?
விடுவதாக அவனும் இல்லை.

பக்கத்து வீட்ல இருக்கிற உன் வயசு ஈத்தன் அவனை விட நான்கு வயது மூத்த அவங்க அண்ணன், அவங்க பக்கத்து வீட்ல இருக்கிற உன்னை விட ரெண்டு வயசு மூத்த பசங்க இவங்க யாருகிட்டேயும் மேக் புக் இல்லை. தெரியுமா? அவங்க அப்பா, அம்மாவும் வேலைக்குப் போறவங்க தான். உன்னைய மாதிரி இப்படி யாரும் அழ மாட்டாங்க. ஏன்னா, அப்பா அம்மாவுக்குத் தெரியும் எப்ப பிள்ளைங்களுக்கு எதை வாங்கி கொடுக்கணும்னு. இந்த வயசுல உனக்கு விளையாடுறதுக்கு இதுவே ஜாஸ்தி தான். உன் இந்தியன் ஃப்ரெண்ட்ஸ் எத்தனை பேர்கிட்ட இந்த கேம் செட் இருக்கு? உனக்கே தெரியும்.

கொஞ்சம் அமைதியானான்.

அவனை இவனைப் பார்த்து நம்மகிட்ட இதெல்லாம் இல்லையேன்னு வருத்தப்படக் கூடாது. நம்மகிட்ட என்ன இருக்கோ அத வச்சு சந்தோஷமா இருக்க கத்துக்கிடனும். உன்கிட்ட இருக்கிறது கூட இல்லாம எத்தனையோ பேர் உன்னோட வகுப்பிலேயே இருக்காங்க. உனக்கும் நல்லா தெரியும். காலையில எவ்வளவு சந்தோஷமா இருந்த? அக்கா எப்பவாவது இப்படி கம்ப்ளைண்ட் பண்ணி பார்த்திருக்கியா? என்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பா. அவளுக்கும் தெரியும். அப்பா, அம்மா நல்லதுக்குத்தான் செய்வாங்க. எப்ப என்ன வாங்கிக் கொடுக்கணும்னு அவங்களுக்குத் தெரியும்னு அவ புரிஞ்சிக்கிட்ட மாதிரி நீயும் புரிஞ்சிச்சுக்கணும். என்ன ஓகேவா?

ம்ம்ம்ம்...

வா. உனக்குப் பிடிச்ச குக்கீஸ் பண்ணி இருக்கேன். சாப்பிடு.

சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் தங்கள் டிஎஸ்சுடன் வர, விளையாட்டு சுவாரஸ்யத்தில் மறந்தே போனான்.

இந்தா நீ அப்ப கேட்ட மேக் புக் இப்ப வாங்கி கொடுத்தாச்சு. சந்தோஷமா? கல்லூரிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவனிடம் கூறிய போது புரியாமல் முழித்தான்.

பழைய கதையைச் சொன்ன பிறகு, அப்படியா சொன்னேன்? அப்ப நான் சின்ன பையன். அந்த வயசுல எனக்கு என்ன தெரிஞ்சிருக்கும் ? வெட்கப்பட்டான்.

இப்ப என்னடா நினைக்கிற? இன்னும் அவங்களை போல நாங்க இல்லையேன்னு தோணுதா?

சேசே! நீங்க பண்ணினது தான் சரி. நான் படிக்க கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை. அவன் பாவம் கடன் வாங்குறான். தேங்க் யூ மாம்.

நிவிக்கும் தேங்க்ஸ் சொல்லுடா.

வாழ்க்கையில் சில ஏமாற்றங்கள் அவசியம் தான். பணமும் வசதியும் இருக்கிறது என்பதற்காக நம் குழந்தைகள் கேட்டதையைல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களைக் கெடுக்காமல் பொறுப்பாக வளர்க்க வேண்டிய கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு. அப்படித்தானே என்னை வளர்த்தார்கள்😆


Thursday, January 7, 2021

கோவிட் கிறிஸ்துமஸ்

தீபாவளி நாள் நெருங்க நெருங்க மனதில் பொங்கும் உற்சாகத்தைப் போல இந்த கிறிஸ்துமஸ் நாள் நெருங்க அமெரிக்க நண்பர்கள் பலரும் முகத்தில் சிரிப்புடனும் உற்சாகத்துடனும் வளைய வருவார்கள். 'Thanksgiving Day' முடிந்தவுடன் வீடுகளில் கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள், மரங்கள் என்று தெரு முழுவதும் விழாக்கோலம் பூண்டு விடும். கடைகளில், அலுவலகங்களில் கிறிஸ்துமஸ் மின்விளக்குகள் ஒளிர, நகரமே ஒளிவெள்ளத்தில் மிதப்பது போல் தோன்றும். கூடவே குளிரும் பனியும் கிறிஸ்துமஸ் நெருங்குவதைப் பறைசாற்றும்.

 "ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் த வே" எங்கும் ஒலிக்க தொடங்கியிருக்கும். மால்களில் சாண்டாக்ளாஸ் வேடமணிந்த நீண்ட வெண்தாடி தாத்தக்கள் மடியில் அமர்ந்து கொண்டு அழகாக போஸ் கொடுக்கும் குழந்தைகள் தங்களுக்குப் பரிசாக இன்னது வேண்டும் என்று மழலையில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் கண்ணாடியும் தாடியும் பார்த்து மிரண்டு அழுது கொண்டிருப்பார்கள். பெற்றோர்கள் நடப்பதை அனைத்தையும் ஆனந்தத்துடன் அருகில் நின்று வேடிக்கைப் பார்க்க, தக்க சமயத்தில் 'க்ளிக்' செய்து படமெடுக்கும் கூட்டம் ஒன்று தங்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருப்பார்கள். 

டிசம்பர் மாதம் முதல் பலரும் சிகப்பு, பச்சை நிற ஆடைகளை உடுத்தி திருவிழாவிற்குத் தயாராகுவார்கள். என்னுடைய முதல் கிறிஸ்துமஸ் மாதத்தில் அலங்காரங்களையும், ஆன்லைன் வசதியில்லாத காலத்தில் கடைகளில் நீண்டு கொண்டே செல்லும் வரிசைகளையும் தள்ளுவண்டி நிறைய பரிசுப்பொருட்களையும் மக்கள் வாங்கிச்செல்வதைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். அந்த ஒரு மாதத்தில் மட்டுமே நிறுவனங்களின் வருமானம் பங்குச்சந்தையைக் கூட ஆச்சரியப்படுத்தும். தீபாவளிக்கு முன்பாக வரும் கண்கவர் விளம்பரங்கள் போல் கிறிஸ்துமஸ் பரிசு விளம்பரங்களும் கொடிகட்டிப் பறக்கும். இன்று அனைத்துமே மாறியிருக்கிறது. 

ஆன்லைன் வர்த்தகங்கள் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. அதுவும் கொரோனா காலத்தில் கேட்கவே வேண்டாம். தொலைக்காட்சியிலும், தினசரி, மாதாந்திர பத்திரிக்கைகளிலும் வந்து கொண்டிருந்த விளம்பரங்கள் இன்று கைபேசி, கணினியைத் திறந்தவுடன் வந்து கண்முன்னால் கொட்டுகிறது. மக்களின் ஆசையைத் தூண்டுகிறது. கையில் காசு இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்ட் வைத்திருந்தால் போதும் என்ற நிலையில் மக்களும் வாங்கித் தள்ளுகிறார்கள். கடன் கொடுக்கும் வரை நல்லவனாக இருப்பவன் கடன் தொகையை செலுத்தவில்லையென்றால் கடனாளி ஆக்கி மனநோயாளிகள் அதிகரிக்கும் காலமும் இதுவே!

பல அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் பார்ட்டிகள் கோலாகலமாக நடைபெறும். இதைத்தவிர, நண்பர்களுடன் வெளியில் சென்று உணவருந்துவதும், கடைகளுக்குச் செல்வதும் ஷாப்பிங் செய்வதும் நடைமுறை பழக்கம். மதுபான விடுதிகளில் கூட்டம் அலைமோதும். எங்கும் சிரித்த முகத்துடன் திருவிழா உற்சாகத்துடன் வளைய வரும் மக்களிடம் பனிக்கால குளிரையும் தாண்டிய மனிதநேயம் வெளிப்படும்.
ம்ம்ம்... இந்த வருடம் என் நண்பர்களை, கலகலப்பான பேச்சுக்களை, நாட்களை, விதவிதமான உணவுவகைளை எல்லாவற்றையும் 'மிஸ்' செய்கிறேன். வீட்டில் இருக்கும் பொழுது தான் வாழ்க்கையில் எதையெல்லாம் தவறவிடுகிறோம் எப்படியெல்லாம் இனிமையான நாட்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்று தெரிகிறது!

2021 சுகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன்...


Saturday, January 2, 2021

Bye, bye 2020 (FB post)

கொண்டாட்டமாகத்தான் ஆரம்பித்தது 2020. தை பிறக்கும் பொழுதே உடன் பிறவா சகோதரராய் துயர்மிகு காலங்களில் நம்பிக்கையையும் அன்பையும் ஆதரவையும் அளித்த பாலாஜி dhaவின் மரணம் மிகுந்த வருத்தத்தைத் தந்தாலும் அவர் அனுபவித்துக் கொண்டிருந்த வலிகளிலிருந்து விடுதலை பெற்றதாய் நினைத்து ஆறுதல் கொண்டோம். சில நாட்கள் மகளுடன் தங்கி இருந்ததில் தொழில்நுட்பத்துறையில் இன்றைய மில்லினியல்களின் வாழ்க்கையை ஓரளவு கணிக்க முடிந்தது. எல்லோரும் ஒருவித வேலை நெருக்கடியுடனும் மன அழுத்ததுடனும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனாலும் கொண்டாட்ட மனநிலையில் தங்களை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள் என்பதே ஆறுதல்.

இந்த வருடம் சிறப்பான வருடமாக, மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது பலித்துத்தான் போனது. ஆம். சரித்திரத்தில் இடம்பெறும் இந்த வருடத்தில் ஜீவித்துக் கிடப்பது என்பதே வரம் தானே! இன்று ஸ்பானிஷ் ஃப்ளுவைப் பற்றி படிக்கும் பொழுது வரும் ஆச்சரியம் எதிர்காலத்தில் இந்த துரதிர்ஷ்ட கொரோனாவைப் பற்றி படிப்பவர்களுக்குத் தெரியும். மார்ச் ஆரம்பித்த நாளிலிருந்தே அலுவலகத்தில் கூடிக்கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். சீனாவிலிருந்து விடுமுறையைக் கொண்டாடிவிட்டு வந்த ஒரு சீன அமெரிக்கப் பெண்ணை அலுவலகத்தில் ஏன் அனுமதித்தார்கள் என்பதே அனைவரின் பதட்டம். அவரை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ தவிர்த்தார்கள். பாவமாக இருந்தது. ஆனால் உயிர் பயம் யாரை விட்டது? அமெரிக்காவின் சியாட்டில் நகரம் திணற ஆரம்பிக்க, நியூயார்க்கில் அதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கிய தினத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அரசு அலுவலகங்களை மூட கவர்னரின் ஆணை வந்தவுடன் தான் அதுவரையில் இல்லாத பல கேள்விகள் மனதில். என்னுடன் வேலை பார்தத அனைவருக்கும் கூட.

வேலை இருக்குமா இல்லையா என்ற கேள்விக்கு அழைத்துச் சொல்கிறோம். ஆனால் நாளையிலிருந்து யாரும் வேலைக்கு வரத்தேவையில்லை என்று அனுப்பி விட்டார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கு தங்கி இருக்கிறேன். நிரந்தரமற்ற நிலையை எண்ணி பதட்டத்துடன் வீட்டிற்குத் திரும்பிய அன்று தான் என்னடா வாழ்க்கை என்று நினைக்கத் தோன்றியது.
அன்று இரவே தனித்தகவலில் வீட்டிலிருந்து வேலை செய்யும் அனுமதி கிடைத்து விட்டாலும் பலருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாமல் பணிநீக்கம் செய்ய்யப்பட்டது தெரிய வந்ததில் வருத்தமே. அதற்குப் பிறகான வாழ்க்கையில் நித்தம் வரும் செய்திகள் கலக்கத்தையே அதிகரித்தது. ஒரே ஆறுதல் குழந்தைகள் எங்களுடனே எங்கள் பாதுகாப்பில் இருந்தது தான். அதுவே இந்த வருடத்தின் மிகப்பெரும் வரம்.

இத்தனை வருடங்களில் இல்லாத மருத்துவச் செலவுகளுடன் ஏகபோகமாக ஆரம்பித்து ஏகப்பட்ட மன உளைச்சல். உடன்பிறந்தவர்களுக்கும் இதே நிலைமை. நிம்மதியின்றி அனைவரும் வருந்தும் படி அடுத்தடுத்த நிகழ்வுகள். நல்லதே நடக்கும் என்று ஆறுதல் கூறியவர்கள் கூட இன்று விலகி நிற்பது தான் கொடுமை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்... தெரிந்தது தான். அதற்காக வலிகளே இல்லை என்று புறந்ததள்ளி விட முடிவதில்லை. ஆனால் ஒன்று, வலிய சென்று வாங்கிக் கட்டிக்கொள்வதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. மாத்திக்கணும் எல்லாத்தையும் மாத்திக்கணும்னு எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒழுங்கற்ற அமைதியற்ற நிலை. வலிகளும், அழுகைகளும், வருத்தங்களும், கவலைகளும், இழப்புகளும் இருந்தாலும் சைக்கிள் கேப்பில் என்னை நானே அமைதியாகவும் வைத்திருக்கவும் தவறவில்லை.

மகனும் மகளும் குழந்தைகளாக இருக்கும் பொழுது அவர்களுடன் இருக்க முடியவில்லையே என்று வருந்திய நாட்கள் பல உண்டு. இன்று அவர்கள் மீண்டும் என் கூட்டிற்குத் திரும்பியதைக் கொண்டாட முதலில் ஆரம்பித்தது சமைலயலறையில். அவர்களுக்குப் பிடித்ததை விதம்விதமாக சமைத்து அவர்களைத் திக்குமுக்காட வைத்தேன். அவர்களும் ரசித்து ருசித்துச் சாப்பிட புதுப்புது உணவுவகைகளைத் தேடித்தேடி சமைக்க கற்றுக் கொண்டேன்.
காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும் காலை நேரம். இன்றோ ஆற அமர உட்கார்ந்து மழையையும் வெயிலையும் ரசிக்கும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்த வருடத்தில் தான் எங்கள் பகுதியில் இருக்கும் நான்கு தெருக்களில் இருப்பவர்களின் அறிமுகமும், அவர்களின் வளர்ப்புப்பிராணிகளைப் பற்றியும் அதிகம் தெரிந்து கொண்டோம். தீபாவளி, கொலு, விநாயகர் சதுர்த்தி நாட்களில் மட்டும் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்ததும் மாறியது. கார்த்திகேயன் ஃபேஸ்புக்கில் இருக்கும் கோலதிற்கான குழுமங்களை அறிமுகப்படுத்த, கொண்டாட்டம் எனக்கு. திண்டாட்டம் உங்களுக்கு. இன்று 100வது கோலத்துடன் 2020க்கு டாட்டா சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கோலம் போடறீங்களே, மதுபானி என்றொரு கலை இருக்கிறது. முயற்சி செய்து தான் பாருங்களேன் என்று தொடங்கி வைத்தார் உமா. அது என்னவோ என்று யூடியூபில் பார்த்து கற்றுக் கொண்டேன். நல்லா இருக்கே என்று மேலும் ஊக்குவித்தார்கள். அக்கா, நீங்கள் மண்டலா, வார்லி, பட்டசித்ரா, கோண்டா கலைகளையும் முயற்சி செய்யாலாம் என்று வித்யா எடுத்துக் கொடுக்க நானும் ஆர்வமாக அறிந்து கொண்டு சிறு முயற்சிகள் செய்து உங்கள் பார்வைக்கும் கொண்டு வந்தேன். என்னைப் போலவே ஆர்வம் கொண்ட மக்கள் பலரும் முயற்சி செய்து அவர்கள் வரைந்ததை எனக்கு அனுப்பினார்கள். ஆகா! என்று அவரவர் உணர்ந்து கொண்ட தருணம் தான் எத்தனை இனிமையானது. இவை ஒவ்வொன்றும் அதிக கவனத்தையும் நேரத்தையும் எடுத்துக் கொண்டாலும் மன அமைதியையும் கொடுத்தது என்பதே உண்மை. அதனாலேயே தொடர்ந்து செய்தேன். செய்கிறேன். செய்து கொண்டிருப்பேன். வேறு சில குழுமங்களில் கற்களில், கண்ணாடி போத்தல்களில் வண்ணங்கள் தீட்டுவதையும் கண்டேன். எல்லாவற்றையும் முயற்சி செய்து உங்களையும் வறுத்தெடுத்தேன்  

நாம சந்தோஷமா இருந்தா நவகிரகங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ நம்மைச் சுற்றி இருக்கும் இம்சை அரக்கர்களுக்குப் பிடிக்காது. எப்படியாவது எதையாவதுச் சொல்லி மனவலியைக் கொடுக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை அடிச்சாலும் தாங்குறாண்டா மொமெண்ட்கள் ஏராளம் இந்த வருடம் மட்டும். போதாக்குறைக்கு ஏழரை வேறு காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு துள்ளி ஆடுகிறது. 'ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்...' என்று வலிக்காத மாதிரியே நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

2020 நிலையற்ற வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. நான் நானாக இருந்தாலும் என்னை வம்புக்கு இழுக்கும் அடாவடிகளுக்கு குறைவில்லை. இந்த நாள், இப்பொழுது, இக்கணம் மட்டுமே நிரந்தரம் என்று உணர்ந்து அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்திடவே விழைகிறேன். எப்பொழுதும்ம்ம்...

பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் விசேஷ நாட்களை குடும்பத்துடன் அந்தந்த நாட்களில் கொண்டாட முடிந்திருக்கிறது. அதுவே பேரானாந்தம்

முடிந்த வரையில் நண்பர்களை அழைத்துப் பேசினேன்.நிறைய மலையாளப்படங்கள், அமெரிக்கன், கொரியன் தொடர்கள் என்று நன்றாக பொழுதும் போனது.சில புத்தகங்களை வாசிக்கவும் செய்தேன்

எனக்கு மிகவும் பிடித்த ஊடகம் ஃபேஸ்புக் . பல நல்ல நண்பர்களும் சில துஷ்டர்களையும் கண்டறிந்தது இங்கு தான். நான் கற்றுக் கொண்ட பலவும், சந்தித்த நண்பர்கள், அன்பர்கள் பலரும் இங்கு வந்த பிறகு தான். தம்பி மார்க்கிற்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

எழுத, கோலம் போட, வரைய ஊக்குவித்த நல்ல உள்ளங்களுக்கும் ஆதரவு அளித்த உங்களுக்கும் நன்றி. 

உறவுகளை இழந்து வருந்தும் உள்ளங்களுக்கு என்னுடைய இரங்கல்கள்.

என்னை விட்டு விலகியவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு. 

என்னோடு பயணிப்பவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

Friday, May 8, 2020

National Teachers Appreciation Day

அமெரிக்காவில் மே 5ந்தேதியை 'National Teachers Appreciation Day'யாகவும் இந்த வாரம் முழுவதும் ‘National Teachers Appreciation Week’ ஆகவும் கொண்டாடுகிறார்கள். அநேக பள்ளிகளில் மதிய விருந்துணவுடன் அன்பளிப்பு, பாராட்டுகள் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களை கௌரவிக்கும் தினம். இந்த வருடம் கொரோனாவால் இம்மகிழ்ச்சியான நாளை இழந்துள்ளார்கள் ஆசிரியர்களும் மாணவர்களும்.

காலையில் வானொலியில் இது சம்பந்தமாக நேயர்களிடம் உங்களுக்கு விருப்பமான ஆசிரியர் யார்? எதனால் உங்களுக்கு அவரைப் பிடிக்கும்? அவரால் உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? என்று கேட்க, பல மாணவர்களும், மாணவர்களாக இருந்தவர்களும் சுவாரசியமான பதில்களைக் கூறினார்கள். வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தா விட்டாலும் ஒரு மாணவரின் வாழ்க்கை ஒரு ஆசிரியரால் நல்ல மாற்றத்துக்கு உள்ளாயின் அதுவே அவரின் வெற்றியாகும். கண்டிப்பு, பாசம், அறிவுரை என்று பெற்றோருக்கு நிகராக என்னுள் மாற்றங்களைக் கொண்டு வந்த பல ஆசிரியர்களும் என் நினைவில் வந்து சென்றார்கள். பள்ளி செல்லும் மகனும் அவனில் மாற்றங்களைக் கொண்டு வந்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்தான். மானசீகமாக அனைவருக்கும் நன்றி கூறிக் கொண்டு தொடங்கியது இன்றைய காலை.

இந்த நாள் இனிய நாள்.

வீட்டில் இருக்கும் நேரத்தை விட பள்ளிகளில் அதிக பகல் பொழுதைச் செலவிடும் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், படிப்பிலும், விளையாட்டிலும்,மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆசிரியர்களை கவுரவிக்க ஒரு நாள் போதாது தான். அவர்களுடைய கடும் உழைப்பை, அர்ப்பணிப்பை மதித்து உணவும், பரிசுகளும், விளையாட்டுமாக அவர்களுக்காக ஒரு நாள்.

என்னுடைய அனுபவத்தில் இங்குள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மாணவர்களுக்காக அதிகச் சிரத்தை எடுத்துக் கொள்வதுடன் காலையில் அரைமணிநேரத்திற்கு முன்பே வருவதும், பள்ளி முடிந்த சில மணிநேரங்கள் படிப்பில் தடுமாறும் மாணவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுப்பதும் என அவர்களின் சொந்தவேலைகளையும் புறந்தள்ளி மாணவர்களுக்காகக் காத்திருந்து உதவி செய்வதற்கே பாராட்டலாம். பெற்றோர்களும் எந்த நேரத்திலும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

ஒரு சில ஆசிரியர்கள், சில பல மாணவர்களின் வாழ்க்கையை நேர்படச் செய்வதில் பெரும்பங்கு கொள்வதுடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பையும் சுமக்கிறார்கள். நல்லாசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலில் தோன்றிய பல மாணவர்கள் இன்றும் கல்வி மற்றும் ஒழுக்கம் கற்றுத் தந்த குருவினை வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டிருப்பது தான் இப்புனித பணியில் அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் மனநிறைவு.

வாழ்க அவர்கள் தொண்டு.

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரா
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ!

ஹரி ஓம்!

Wednesday, January 1, 2020

ப்ளம் கேக்

கிறிஸ்துமஸ் என்றாலே எனக்கு ப்ளம் கேக் தான். ப்ளம் கேக் சீசனும் வந்தாச்சு. யாராவது பண்ணிப் பார்த்து நல்லா வந்திருந்தா ரெசிபிய போடுங்கன்னு கேட்டு வருஷம் ஒன்னு ஓடியே போச்சு. ம்ம்ம்ம்ம்...😞

ராஜாபார்லி கிளை நிறுவனம் ஒன்னு ஆல்பனிக்கு வரணும்😞

கடையில வச்சிருக்கிறதெல்லாம் பார்த்துட்டு கடந்து போறதெல்லாம் ஜென் நிலையில சேருமோ🤔🤔🤔

போன வருஷம் கேட்ட ப்ளம் கேக் ரெசிபி இந்த வருஷம் கிடைச்சு அத சமைச்சும் பார்த்து டேஸ்ட் பண்ணினதுல
” தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறு எங்கேன்னு” என்னைய பாட வச்சு... அவ்வளவு சுவையா இருந்தது. யாரும் சொல்ல மாட்டாய்ங்க. ஆக, நமக்கு நாமே திட்டத்தில்... இனி ராஜா பார்லிக்கு போற வேலை மிச்சம்னு...

இனி எண்டே ஃபேவரைட் கேக் ப்ளம் கேக். அதுவும் நானே பண்ணினது. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க😂


ரெசிபி:
https://youtu.be/Wgrv5ithNrg
https://youtu.be/Cd0x661PujE


இந்த நாளை ப்ளம் கேக் சாப்பிட்டு
கொண்டாடுவோம்ம்ம்ம்ம்😇

புது வருட தீர்மான அலப்பறைகள்


டயட்டை எண்ணிப் பார்க்கையில்
ரெசிபி கொட்டுது
ஃபாலோ பண்ண நினைக்கையில்
விடுமுறை வந்து கெடுக்குது

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல
என்ன சாப்பிட்டாலும் எனக்கு எடை ஏறதில்ல

🙄🙄🙄

இதையும் எழுதிக்க
நடுநடுவுல பிரியாணி, பரோட்டா, திகர்தண்டா, ப்ளம்கேக்னு போட்டுக்கணும்...

தோ பாரு எனக்கு எடை ஏறினாலும் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?

அபிராமி அபிராமி...

அதையும் எழுதிக்கணுமா?
ஹ்ம்ம்...ஹ்ம்ம்...

அது...காதல்...உணவுக்காதல்

உன் எடை என்னன்னு சொல்லாம அழுகை அழுகையா வருது
ஆனா நா அழுது நீ இன்னும் சாப்பிட்டு
எடை கூடிடுமோன்னு பயந்து
வர்ற அழுகை கூட நின்னுடுது

மனிதர் உணர்ந்து கொள்ள இது சாதாரண டயட் அல்ல...

பேலியோ டயட்... பேலியோ டயட்

#மீள்

கஷ்டப்பட்டு ஒரு வழியா தீர்மானம் எல்லாம் போட்டு உடல் எடையை குறைக்கலாம்-னு வருடத்தில் முதல் தேதியில நினைக்கிறப்பவே , ம்ஹும் என் பிறந்த நாள் வருது, வெளியில போய் குடும்பத்தோட சாப்பிடணும்-னு மகளின் அன்புத் தொல்லை, நான் விடுமுறை முடிந்து போகிறேன் அதனால் என்று மீண்டும் ஒரு முறை, திருமண நாள் என்று ...

சரி பிப்ரவரி-யில ஆரம்பிக்கலாம்-ன அதே பல்லவிய மகன் பாட,

ஓகே, மார்ச் மாசம் - ம்ம்ம்ம்...

அப்பாடா தமிழ் வருடப் பிறப்பு வந்தாச்சு , ஆரம்பிக்கலாம்-னா , இந்த கெட்-டுகெதர் அந்த கெட்-டுகெதர் ...

கோடை மாதங்கள் - சொல்லவே வேணாம், ஊர் சுத்த, உறவுக்காரர்கள் வர, போக --அதுவும் போச்சா?

அப்பாடா ஸ்கூல் திறந்தாச்சு இனி என் வழி தனி வழி-ன்னு ஆரம்பிச்சா விநாயகர் சதுர்த்தி , கொலு, சரஸ்வதி பூஜை , தீபாவளி ன்னு ஒண்ணு மாத்தி ஒண்ணு வருதா, ஒவ்வொரு பலகாரம், படையல் னு முடிய...

ம்ம், இப்ப ஆரம்பிக்கலாம்-னா thanksgiving celebrations , x -mas வருதா...
குளிரும் சேர்ந்துச்சா... அடுத்த புது வருஷமும் வந்துச்சா ...

வருஷம் பூரா குழந்தைங்க மிச்சம் வைக்கிறது, கொஞ்சூண்டு தானே இருக்கு, இதை எடுத்து வைக்கணுமா-ன்னு அதையும் மிச்சம் வைக்காம சாப்பிட்டு...

அதுக்குள்ள ரொம்ப நாளாச்சு ஊருக்குப் போகணும்-னு மாதிரி தோணுமா, அங்க போய் எந்த தெருவுல எந்த ஹோட்டல்-ல என்ன ஸ்பெஷல்-னு ஒன்னு விடாம சாப்பிட்டாச்சா, உறவுக்காரங்க பாசமா கூப்பிட்டு விருந்து வைக்க அதையும் தட்ட முடியாம, வரும் போது மறக்காம பெட்டிகள்ல அடிச்சு வச்சு எடுத்துட்டு வர்றதை நாய் மோப்பம் பிடிக்காம காப்பாத்திட்டு வந்து அதையும் ...

நடுநடுவுல மானே தேனே மாதிரி நண்பர்கள் 40வது , 50வது பிறந்த நாள், அவர்கள் வீட்டு விசேஷங்கள் அப்புறம் புதுமனைப் புகுவிழா, வளைகாப்பு, பூஜைகள், மாதம் ஒரு முறை ஒரு ரெஸ்டாரன்ட், ஒரு இனிப்பு, புது ரெசிபி-ன்னு போட்டுக்கணும் சரியா??

இப்படியாகத் தானே ஒவ்வொரு வருடமும் வந்து போக
ஏறிய எடையும் இறங்கிய பாடில்லை ...

ஒரே தீர்வு - வருஷம் வந்தா தீர்மானம் போட வேண்டியது. அதுலயே பாதி எடை கொறஞ்ச மாதிரி மனசு லேசாயிடும். கண்டிப்பா நடக்கும்-னு ஒரு சின்ன நம்பிக்கை வரும்.

ஆஃப்டர் ஆல் நம்பிக்கை தானே வாழ்க்கை, என்ன நான் சொல்றது ?

🙂😂🤣

 

கூடலழகர் பெருமாள் கோவில்

காற்றோட்டத்துடன் நீண்ட பிரகாரங்கள், அழகான மதுரவல்லித்தாயாரின் தரிசனம், நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் காட்சி தரும் பெருமாள், ஆண்டாள் சந்நிதி... சனிக்கிழமை என்றாலே கூட்டமிருக்கும் பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? 
சிறுவயதில் வாரம் தவறாமல் சனிக்கிழமை தோறும் சென்று வந்த கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்.

கோவிலின் முன்பு செருப்பு வைக்க கூட இடமில்லாமல் மக்கள் கூட்டம் ஒருபுறம் என்றால் தங்களுக்கும் உணவளிப்பார்கள் பகுத்துண்டு வாழும் பக்த கோடிகள் என்று மாடுகளும் வெளியில் காத்திருக்கும். மாடுகளுக்கு அருகிலேயே கீரைக்கட்டுக்களுடன் மாடுகளின் உரிமையாளரோ?

கோவில் வாசலில் துளசி மணம் கமகமக்கும் மாலைகள், தாமரைப்பூக்கள், மல்லி, பிச்சி்மலர்களுடன் பூக்காரம்மா. அவர் எதிரே திருவோட்டுடன் தானத்திற்கு காத்திருக்கும் வயிறு ஒட்டிய ஏழைகள் பிச்சையெடுத்துக் கொண்டு!

உள்ளே நுழைந்தவுடன் காக்கிச்சட்டை கடமைவீரர்கள்! அவர்களைத் தாண்டி இடப்புறத்தில் நுழைந்தால் மதுரவல்லி தாயார் சன்னதி. இந்நாளுக்கான சிறப்பு அலங்காரங்களுடன் அவள் அமர்ந்திருந்து அருளும் காட்சியை கண்கள் விரியு பார்த்துக் கொண்டே ரசிக்கலாம். பட்டுச்சேலையும் மங்கிய ஒளியில் மின்னும் மூக்குத்தி அலங்காரமும் மனதில் ஒட்டிக் கொள்ளும்.

அவளைச் சுற்றி வலம் வருகையில் சுவரில் தீட்டியிருக்கும் ஓவியங்கள் பாட்டி, அம்மா, பெரியம்மா சொன்ன கதைகளை நினைவுறுத்தும்.

ராமஜெயம் மாலைகளுடன் வெண்ணெய் அலங்காரத்தில் குட்டி அனுமர்.

தாயாரிடம் விடைபெற்று வெளியில் வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. அதையொட்டிய கல்யாண மண்டபம். சிறு பூந்தோட்டம். தும்பிக்கையை ஆட்டியபடி அழகு குட்டி ஆண்டாள் யானை. தற்போது இல்லை என்று நினைக்கிறேன். இனி யானைகளை வதைக்கவும் வேண்டாம்.

வேகமாக மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே கடந்து செல்பவர்கள், பாசுரங்களைப் பாடிச் செல்லும் பக்தர்கள், கோபுரத்தைப் பார்த்து "நாராயணா, நாராயணா" என கைகூப்பி வணங்குபவர்கள், ஓடிச்செல்லும் குழந்தைகள், வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள், சுடும் வெயிலில் ஓட்டமெடுப்பவர்கள் ...என பிரகாரச்சுற்று களையாக இருக்கும்.

கோவில் நடுவே பெருமாள் சன்னதி. தேவியர்களுடன் கன்னங்கரிய பெருமாள்! காண கண்கோடி வேண்டும். அவர் பாதத்தில் ஆரம்பித்து மந்திரங்களுடன் தீபாராதனை... துளசி தீர்த்தம், பச்சைக்கற்பூர மணம்... மனம் அமைதியாகும் அந்தக்கணம்...மெய்சிலிர்க்கும் அனுபவம்.

கருடர், அனுமரை வணங்கி அமைதியாக அமர்ந்திருக்கும் ஆண்டாள் தரிசனம் முடித்து நவக்கிரகங்களையும் வேண்டிய பிறகு ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமர்ந்தால் கண்ணெதிரே அப்பம், முறுக்கு, லட்டு, பொங்கல் பிரசாதங்கள்!

மனமும், வயிறும் குளிர பெருமாள் தரிசனம் இனியதொரு சுகானுபாவம்.

சந்தடி மிக்க நெரிசலிருந்து மனதிற்கு அமைதியைத் தரும் கோவில்கள் தான் மதுரையின் அழகே! அதிகாலை மார்கழி மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி என பெருமாளுக்கு உகந்த மாதம்.

கணவரின் தாத்தா மற்றும் பங்காளிகள் (ஓபுளா) குடும்பத்தினர் நன்கொடையால் இக்கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது என்ற தகவலும் இக்கோவிலில் உள்ளது.



குளிர்பனிக்காலை
வீதிநிறைய கோலம்
வர்ணஜாலத்தின் நடுநடுவே
பூசணிப்பூக்கள்
ஈரம்சொட்டிய கூந்தலோடு
சன்னலோர வேடிக்கை
காற்றில்கரைந்தொலிக்கும்
கோஷ்டிகானம்
ஆண்டாளாயிருப்பதும்
அற்புதம்தான்
மார்கழி போற்றுதும்
மார்கழி போற்றுதும்

ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏



கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை
PC: Vishvesh Obla




Sunday, September 1, 2019

பெத்த மனம் பித்து



வருடங்கள் உருண்டோடி விட்டது! கைகளில் ஏந்திய நாள் முதல் பள்ளிப்படிப்பு முடியும் வரை எத்தனை சீண்டல்கள், கேலி கிண்டல்கள், கோபங்கள், சிரிப்புகள், செல்ல சண்டை சச்சரவுகள்! ஒவ்வொரு வயதையும் தன் குழந்தைத்தனத்தால் எங்களை மட்டுமல்ல அவன் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கவர்ந்திருந்தான் சுப்பிரமணி. பிறந்த சில மாதங்களில் அவனால் ஏற்பட்ட மனவேதனை மறக்க நினைக்கையில் பதினாறாவது வயதில் உயிர் பயத்தையும் கூட்டி இன்று வரை அவனைப் பற்றிய சிந்தனையே என்றும் எந்நாளும் எந்நேரமும்! அம்மாவுக்கு உன்னைய விட என்னைய தான் நிறையப் பிடிக்கும் என்று அக்காவைச் சீண்டுவதிலிருந்து நான் பொறுப்புள்ளவனா இருப்பேன். நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியபடியே அந்த நாளும் வந்தே விட்டது!

அமெரிக்காவில் பெரும்பான்மையான மாணவர்கள் கல்லூரிப் படிப்பிற்காக வீட்டை விட்டு செல்லும் நிலை தான். மேல்நிலைப்பள்ளி முடிக்கும் பொழுதே அவர்களின் தன்னம்பிக்கையும் சுயமாக முடிவெடுக்கும் திறமையும் கூடி விடுகிறது.அவன் கல்லூரிக்குச் செல்லும் நாளை எண்ணி மனம் விரும்பினாலும் என்னை விட்டுத் தூரச் சென்று விடுவான் என்ற வாதை தான் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தது. ஷாப்பிங் எல்லாம் முடிந்ததா?
என்று அக்கா கேட்கும் பொழுது கூட அம்மா பார்த்துக் கொள்வாள் என்ற பதிலில், என்னம்மா இவன் இன்னமும் இப்படியே இருக்கிறான்? கடைசி நாள் வரை நண்பர்களுடன் விளையாடுவதிலும் வெளியில் சென்று சாப்பிடுவதிலும் நாளை கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே என்ற சிறு பதட்டம் கூட இல்லாமல் நான் தான் அதிக படபடப்புடன் இருந்தேன்.

கிடைக்கும் நேரங்களில் அவன் செய்த சேட்டைகளைச் சொல்லிக் குதூகலித்து அவன் இல்லாத வெறுமையான நாட்களை எப்படி கடக்கப் போகிறேனோ... வருந்தும் பொழுது ஜாஸ் கிளாசிக்கல் மியூசிக் கேளும்மா. அமைதியாயிடுவ. நாய்க்குட்டி வாங்கிக் கொடுக்கவா? பிஸியா இருக்கலாம். ஜிம்முக்குப் போய் நல்லா ஃபிட்டா இரும்மா, உனக்குப் பிடிச்ச விஷயங்களைப் பண்ணு. அப்பாவும் நீயும் நல்லா டூர் போங்க... சொல்லிக்கொண்டே போனான். எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டான்? மகள் கல்லூரிக்குப் போன பொழுது இதே போல் வருந்தினாலும் இவன் எவ்வளவு ஆறுதலாக இருந்தான். இப்பொழுது இருவரும் இல்லாத வாழ்க்கையை நினைக்கவே பயமாகவும் வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறதே!

ஏதோ சமீபகாலத்தில் தான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் சேருவதற்கான படிவங்களையும், பெற்றோர்களின் வேலை, சம்பளம் இன்ன பிற ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு முதன்முதலாக சுப்பிரமணி படிக்கவிருக்கும் பள்ளிக்குச் சென்றோம். ஒவ்வொரு குழந்தையையும் தனியே அழைத்துக் கொண்டு சென்றார்கள். சுப்பிரமணியின் பெயரை அழைத்தவுடன் சமர்த்தா பேசிட்டு வாடா என்று அனுப்பி விட்டுக் காத்திருந்தோம். டே கேர், ப்ரீ ஸ்கூல் சென்று வந்ததால் எளிதில் யாரிடமும் பழகுவதிலும் பேசுவதிலும் பிரச்சினைகள் இருந்ததில்லை. அவனை அழைத்துச் சென்ற ஆசிரியை ஐந்து வயதுக் குழந்தையிடம் எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்து, நன்றாக வரைகிறான் என்று அவன் வரைந்திருந்த தாமஸ் தி டேங்க் என்ஜின் படத்தை எங்களிடம் கொடுத்தார். நல்ல ஓவியராக வருவான். நன்றாகத் தெளிவாகப் பேசுகிறான். பள்ளி திறக்கும் நாளைச் சொல்லி விட்டு மற்ற தகவல்கள் பள்ளியிலிருந்து வரும் என்று கூறி விட்டு பை என்று குழந்தையிடம் சிரித்த முகமாகப் பேசி விட்டுச் சென்றார். முகத்தில் கடுமை இல்லை. பெற்றோரையோ குழந்தையோ மிரட்டும் தொனியில்லை. எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ என்ற ஐயம் இல்லை. பள்ளிக்குச் செல்ல ஆசையுடன் காத்திருந்தான். காத்திருந்தோம்.

அவன் வயது சுட்டிப்பையன்களுடன் இனிமையாகக் கழிந்தது அவனுடைய கிண்டர்கார்ட்டன்! சேட்டை சேட்டை அவ்வளவு சேட்டை! சிரித்துக் கொண்டே வகுப்பறையில் அடித்த லூட்டிகளைக் கேட்க ஆனந்தமாக இருக்கும்.

ஒன்றாம் வகுப்பில் அப்பொழுது தான் கல்லூரி முடித்து வந்த இளம் ஆசிரியரிடம் பேச சுப்பிரமணிக்கு அப்படியொரு கூச்சம். கவலைப்படாதீர்கள்! நீங்கள் நிறுத்தச் சொல்கிற வரை பேசும் காலமும் வரும் என்று சொல்லி இருந்தேன். Facts Vs Opinions பற்றி வகுப்பெடுத்தவரிடம்

All schools have doors is a fact.
Ms.Albanese is beautiful is an opinion

என்று எழுதியதை அவர் பள்ளி முழுவதும் ஆசிரியர்களிடம் காண்பித்து, நான் சுப்பிரமணியை அழைத்து வரச் சென்ற பொழுது கண்ணீர் வர சிரித்துக் கொண்டே சொன்ன அதே நாளில் பள்ளியில் பிரபலமாகியிருந்தான். எங்கிருந்து தான் இப்படியெல்லாம் இவனுக்கு யோசனைகள் வருகிறதோ...

பள்ளியில் நடக்கும் பிரத்தியேக தின கொண்டாட்டங்களில் அவனுக்குத் தெரியாமல் வகுப்பு ஆசிரியருக்கு உதவி செய்யச் சென்றால் அவன் நண்பர்களிடம் 'மை மாம் இஸ் ஹியர்' என்று அறிமுகப்படுத்தி ஆனந்திப்பான். எப்படிம்மா வந்தே? என்கிட்டே சொல்லவே இல்லை? அன்று முழுவதும் குஷியாக வளைய வருவான்.

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பிறகு அதில் மூழ்கி வகுப்புகளுக்குத் தாமதமாகச் செல்வது, வீட்டிற்குச் செல்லும் பேருந்தைத் தவற விடுவது, சண்டைன்னு வந்துட்டா களத்தில் இறங்க... பள்ளித்தலைமை ஆசிரியருடன் இவனுக்காக நாங்கள் சண்டை போட்டு ஆரம்பப்பள்ளி நாட்கள் அதகளமாக தான் சென்றது. அவனுடைய நண்பர்கள் அனைவரும் ஒத்த குணமுள்ள வால் பையன்கள்.

நடுநிலைப்பள்ளிக்குச் சென்ற பிறகு வாசிப்பில் நாட்டம் குறைய ஆரம்பித்தது. ஏனோ தானோவென்று தான் படிப்பும். மேல்நிலைப்பள்ளியில் எப்படி இருப்பானோ என்ற கவலை அப்பொழுதே வந்து விட்டது.
மேல்நிலைப்பள்ளியிலும் படிப்பைத்தவிர எல்லாமும் பிடித்திருந்தது. ஜாஸ் இசையில் நாட்டம் கொள்ள, விளையாட்டிலும் ஆர்வம் அதிகமானது. படிக்கிறதிலையும் கவனமா இருடா என்று சொன்னது வருடக்கடைசியில் தான் உறைத்தது அவனுக்கு. மொத்தமாக அட்வான்ஸ்டு பாடங்கள் நான்கை எடுத்து எங்களையும் திணறடித்தான். இதில் கல்லூரி சேர்வதற்கான SAT தேர்வுகளும் வந்து சேர... கவலையே படாமல் வெளிமாநிலங்கள் சென்று படிக்க மாட்டேன். இந்த மதிப்பெண்கள் போதும் என்று நிம்மதியாக இருந்தான். என்னுடைய வற்புறுத்தலுக்காகப் போனால் போகிறதென்று ஒரே ஒரு கல்லூரியைப் பார்க்கச் சென்றோம். அங்கும் நான் தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். கடனுக்கே என்று வந்தான். இந்த கல்லூரி அந்த கல்லூரி என்று விண்ணப்பிக்காமல் இது போதும் என்று அவன் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் இரண்டு மட்டுமே. இவனுக்குப் பிடித்த கல்லூரியில் கிடைத்து விட்ட செய்தி அறிந்த நாளிலிருந்து ஹாப்பி...இன்று முதல் ஹாப்பி மனநிலை தான்!

தேர்வுகள் முடிந்து விட்டது. இனி பள்ளிக்குச் செல்ல தேவையில்லை என்று நன்றாகத் தூங்கியும் நண்பர்களுடன் பொழுதையும் கழித்துக் கொண்டிருந்தான். பள்ளி மூட இரண்டே நாட்கள் இருந்த நிலையில் அவனுடைய ஆங்கில பேராசிரியரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு. உங்கள் மகன் இன்னும் ப்ராஜெக்ட் ஒர்க் முடிக்கவில்லை. அவனைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வந்ததே கோபம்! தூங்கிக் கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பினால் நான் அனுப்பி விட்டேன் என்றான். இல்லை இதோ அனுப்பி விடுகிறேன் என்று அப்பொழுது தான் எழுத ஆரம்பித்தான். கோபம் வந்தாலும் என்ன செய்ய முடிகிறது? தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர. அறிவுரை கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறானே எப்படித்தான் கல்லூரியில் குப்பை கொட்டப் போகிறானோ? இன்னும் ஒரு வாரத்தில் பட்டமளிப்பு விழா. மதிப்பெண் குறைந்தால் என்ன ஆகுமோ என்ற கவலை எனக்கு. வழக்கம் போல்... எனக்கென்ன மனக்கவலை. என் தாய்க்கன்றோ தினம்தினம் என் கவலை மனநிலையில் சுப்பிரமணி.

பள்ளிபடிப்பு முடியும் வரை வீட்டுப்பாடங்கள் ஒழுங்காக செய்கிறானா, தேர்வுகளில் மதிப்பெண்களை தக்க வைத்துக் கொள்கிறானா என்று உடனுக்குடன் பள்ளி ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அவனைக் கண்காணிக்க முடிந்தது. இனி கல்லூரியில் என்ன நடக்கிறதென்று சுப்பிரமணி சொன்னால் தான் உண்டு. மாணவர்களுக்குத் தங்கள் படிப்பில் அக்கறை வரவேண்டும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பும் வர வேண்டும் என்பதற்காக கல்லூரியில் பெற்றோர்களின் தலையீட்டை விரும்புவதில்லை. மாணவர்களும் தங்கள் கடமையை உணர்ந்து நடந்தாலும் அவர்களின் கல்லூரிப்படிப்பு முடியும் வரை பெற்றோர்களுக்கு படபடப்பு தான்!

கல்லூரிக்குக் கிளம்பும் நாளில் கவலை, அச்சம், அழுகையென குழப்பமான மனநிலை எனக்கு. அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொருட்களை அடுக்கி வைத்து விட்டு பத்திரமா இருடா. நேரத்துக்குச் சாப்பிடு. ஒழுங்கா வகுப்புகளுக்குப் போ, உடம்ப பத்திரமா பார்த்துக்க ...சொல்லி முடிப்பதற்குள்... அவனும் அழுகையைக் கட்டுப்படுத்த சிரமப்பட...தினமும் ஃபேஸ்டைம் செய்கிறேன் கவலைப்படாதேம்மா என்ற ஒற்றை ஆறுதலில் தான் இனி எல்லாம். பதினெட்டு வருடமாகப் பொத்தி பொத்தி வளர்த்த குழந்தையைத் தனியே தவிக்க விட்டுவிட்டு வந்த மனவருத்தத்துடனும் கண்ணீருடனும் வீட்டிற்குத் திரும்பினோம்.

மகளும் மகனும் இல்லாத வீடு வெறிச்சோடி சோகையாய்! வாழ்க்கையில் முதன்முதலாக ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்ந்தோம் நானும் கணவரும்!

வகுப்புகள், தேர்வுகள், நண்பர்களென இனி நாட்கள் வெகு விரைவாகச் சென்று விடும் அவனுக்கு! நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்றும் சின்ன பையன் இல்லை. வகுப்புகள் ஆரம்பித்து அவனுக்கென்று நண்பர்கள் வந்தால் எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதே என்று இவர் சொன்னாலும் குழந்தைகள் வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டே நகரும் எதிர்வரும் நாட்கள்.

கல்லூரிக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளை வழியனுப்பும் பெற்றோருக்கு ஆகஸ்ட் மாத இறுதி நாட்கள் மிகவும் உணர்ச்சிகரமான மாதம். நல்ல நண்பர்கள் அமைய, ஒரே அறையில் தங்கி இருப்பவருடன் அணுக்கமாக , சுயமாக எடுக்கும் முடிவுகள் சரியானதாக, ஒழுங்காக வகுப்புகளுக்குச் செல்ல, தேர்வுகள் நல்ல முறையில் எழுத, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே ... நீண்டு கொண்டே செல்லும் கேள்விகள் பெற்றோரை அலைக்கழிப்பது போல, புதுச்சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்ள மாணவ, மாணவிகளுக்குள்ளும் போராட்டங்கள் இருக்கும். பலரும் முதன்முறையாக வீட்டை விட்டுத் தனியாக வந்தவர்களாகவே இருப்பார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கடக்க வேண்டிய பருவம்! மகள் கல்லூரிக்குச் சென்ற நாளில் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். அவளின் வழிக்காட்டுதலில் சுப்பிரமணிக்குச் சிரமங்கள் குறைவு தான் என்றாலும் அவன் தனித்திருந்து எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை நல்ல முறையில் கடந்து வர வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு என்ன பிரார்த்தனை இருந்து விட முடியும்?

சிறகுகளின் அரவணைப்பில்
ஆனந்தித்திருந்தவர்கள்
புதுசிறகு முளைத்து
பறந்து செல்கையில்
கனத்துத்தான் போகிறது
கூடுதிரும்புதலுக்கான
காத்திருப்புகளே
இனி
இயல்பாகிப்போகும்ம்ம்ம்



Thursday, May 16, 2019

திரும்பிப்பார்க்கிறேன் - போராட்ட வாழ்க்கை

மகளின் கல்லூரி இறுதியாண்டில் வகுப்புகள், தேர்வுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் என்று நேரமில்லாமல் அவள் ஓடிக்கொண்டிருந்த காலமது! மேற்படிப்பா அல்லது வேலைவாய்ப்பா என்று முடிவு செய்து வார இறுதிகளில் பாஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் என்று எங்கெங்கு வேலைவாய்ப்புக்காக நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஜாப் ஃபேர் நடக்கிறதோ அதற்கும் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தாள். அங்கு அவளுடைய பயோடேட்டா கொடுத்து முதற்கட்ட இண்டர்வியூக்கள் முடிந்த நிறுவனங்களில் ஒன்று நேர்முகத்தேர்வுக்காக அவளை நார்த் கரோலினாவில் இருக்கும் அவர்களுடைய அலுவலகத்திற்கு வரச் சொல்லி அவளும் காலை வகுப்புகளை முடித்துக் கொண்டு மதிய உணவு எடுத்துக் கொள்ளக்கூட நேரமில்லாமல் கல்லூரியிலிருந்து ஒன்றரை மணிநேர ரயில் பயணத்தில் நியூயார்க் நகரம் சென்று அங்கிருந்து வேறொரு ரயிலில் 45 நிமிட பயணம் மேற்கொண்டு பிறகு ஏர்ட்ரெயின் மூலம் 15-20 நிமிடங்களில் விமான நிலையத்திற்குச் சென்றடையும் பொழுது மணி 4.30. அங்கு சென்றடையும் வரை எங்களுக்குத் தகவல்கள் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

சுப்பிரமணியை பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொழுதே இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிச் செய்திகளில் நியூயார்க் நகரத்திலும் அதிமழை, இடி, மின்னல் என்ற பொழுது தான் அடடா! இந்தச் சூழ்நிலையில்... நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மகளிடமிருந்து ஃபோன்.

அம்மா...இங்கே ஒரே கலவரமா இருக்கு. நான் போற விமானம் இப்போதைக்குப் போகாது லேட்டாகும்ங்கிறாங்க. ஒரே கூச்சலும் குழப்பமாவும் இருக்கு. அனேகமா எல்லா ஃப்ளைட்ஸ்ம் கான்சல் பண்ணிடுவாங்க போல!

அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு?

எட்டு மணிக்கு.

நீ ஊருக்குப் போய்ச் சேர லேட்டாய்டுமே! அங்க இருந்து தங்கப்போற ஹோட்டலுக்கு அரைமணி நேரமாவது ஆகும். ராத்திரி பத்து பத்தரை ஆயிடும். புது ஊர் வேற!

என்ன பண்ணலாம்மா? கேட்கும் பொழுதே அழுகைக்குத் தயாராகும் குரல்!

நான் இந்த இண்டர்வியூக்காக எதுவுமே தயார் பண்ண நேரமில்லை. புரஃபஸர் வேற அடிக்கடி க்ளாஸ் கட் பண்ணிட்டுப் போறே. ஃபெயில் பண்ணிடுவேன்னு சொல்லி இருக்கார். நேரத்துக்குப் போய் சேர்ந்துட்டு நைட் கொஞ்சம் பார்த்துக்கலாம்னு இருந்தேன். எனக்கு நம்பிக்கையே இல்லை. அந்த ஆஃபீஸ்ல வேற யாரையும் காண்டாக்ட் பண்ண முடியலை. இங்கே ஒரே தள்ளுமுள்ளா இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படி?

பசி மயக்கம், எதிர்பாராத தடங்கல்கள், தயார் பண்ணிக்கொள்ளாத நேர்முகத்தேர்வினை எதிர்கொள்ளப் போகும் பதட்டம், வகுப்பில் ஆசிரியரின் கண்டிப்பு என்று நினைத்தபடி எதுவும் நடக்காத நிலையில் மொத்தமும் கனமாக அழுத்தியதில் அழ ஆரம்பித்து விட்டாள்.

சே! தனியாக மகளின் முதல் விமானப்பயணம்! இப்படியா இருக்க வேண்டும்? ஏன் தான் என் குழந்தைகளுக்கு மட்டும் இப்படி!

அழாதே! அப்பா வேணா வரட்டுமா? நீ போய்த்தான் ஆகணும்னா நாளைக்கு காலையில கிடைக்கிற முதல் ஃப்ளைட்ல போற மாதிரி கேளு.

சரிம்மா... அங்க கவுண்டர்ல ஏதோ சொல்றாங்க. கேட்டுட்டு வர்றேன்.

இப்ப என்ன பண்ணலாம்? நான் போயிட்டு வரவா? பாவம் இவ்வளவு கஷ்டப்படறா. கலக்கத்துடன் கணவர்.

நீங்க எப்படி இந்த மழையில நாலு மணிநேரம் அப்புறம் ராத்திரி முழுக்க ஓட்டினாலும் போய்ச்சேர காலையில பத்து மணியாயிடும்! ஒரு சமாதானத்துக்காகத் தான் சொன்னேன். நீங்க மட்டும் ஒட்டுறதும் கஷ்டம். போனா இவனையும் கூட்டிட்டு நாம எல்லாரும் சேர்ந்து தான் போகணும் இல்லைன்னா அந்த கம்பெனியை கூப்பிட்டு வேற நாள்ல இண்டர்வியூ வைக்கச் சொல்லணும். நானும் ஈமெயில் அனுப்பிட்டேன். ஃபோன்ல மெசேஜ் கூட விட்டுட்டேன். ஆஃபிஸ் நேரம் முடிஞ்சதனால யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. வெய்ட் பண்ணுவோம்.

அம்மா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கு ஒரு ஃப்ளைட் இருக்கு. டிக்கெட் கொடுத்துட்டாங்க. இப்ப என்ன பண்றது?

நீ திருப்பி காலேஜ்க்குப் போயிட்டு நாளைக்கு காலையில மூணு மணிக்கு கிளம்பி வர்றது நடக்கிற காரியம் இல்ல. பக்கத்துல ஹோட்டல் இருந்தா அங்க போய் தங்கிட்டு காலையில வந்திடலாம். ஏர்போர்ட்ல இருக்கிற ஹோட்டல் கவுண்டர்ல ஏதாவது ஒன்னை புக் பண்றியா இல்ல நான் பண்ணவா?

வேண்டாம் நானே பண்ணிடறேன் என்று சொல்லி விட்டுச் சென்றவள் மீண்டும்.... சே! இங்கேயும் கூட்டம்மா. நான் ஆன்லைன்ல பக்கத்துல இருக்கிற ஹோட்டல் ரூம் புக் பண்ணிடறேன்.

மொத்தமா ஃப்ளைட் எல்லாத்தையும் கான்சல் பண்ணியிருப்பாங்க. மழை கொட்டிக்கிட்டு இருக்கிறதால அவங்களும் வேற என்ன பண்ண முடியும்?

அப்படியே ஏர்போர்ட் டாக்ஸி புக் பண்ணிடு.

சரிம்மா.

ஹோட்டல் ரூம் கிடைத்து டாக்ஸி கிடைக்கவில்லை.

வெளியில் சென்று ஏதோ ஒரு டாக்ஸியில் ஏறி ஹோட்டலுக்குத் தான் போயிட்டு இருக்கேன். அங்க போய்ச் சேர்ந்தவுடன கூப்பிடவா?

வேண்டாம் வேண்டாம். நீ ஃபோன்லேயே இரு.

அம்மா, வண்டியில GPS இல்லையாம். ஃபோன் GPS வேணுமாம்.

GPS இல்லாதவன்லாம் எதுக்கு நியூயார்க்ல வண்டிய ஒட்டிக்கிட்டு இருக்கான். நீ ஸ்பீக்கர்ல போடு. அவன் வண்டியில இருக்கிற ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், கார் நம்பர் டீடைல்ஸ்லாம் அவனுக்கும் கேட்குற மாதிரி சொல்லிட்டே வா. எந்த பக்கம் போகுதுன்னு அப்பப்ப அப்டேட் பண்ணிட்டே இரு.

அதற்குள் அந்த டிரைவரும் GPSல் வழியைப் போடச் சொல்ல...

ஒரே மழை! ஒண்ணுமே தெரியலை! எங்கே போகிறோம் என்று தெரியாமல் மகள். எந்த வண்டியில் ஏறியிருக்கிறாள் என்ற பதட்டம் எங்களுக்கு. பத்திரமாக போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை அதிகரிக்க...எரிச்சலாக வந்தது. இன்று பார்த்து ஏன் எல்லாமே இப்படி போய்க் கொண்டிருக்கிறது?

இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ஹோட்டல் போய்ச்சேர?

நடுவுல ஏதோ ஒரு வழிய மிஸ் பண்ணிட்டான் போல.

இவன் என்ன டிரைவர்? வழி கூட தெரியாம? நேரம் செல்லச்செல்ல பதட்டம் கூடிக்கொண்டே போனது.

டிரைவரிடமே எங்க இருக்கு அந்த ஹோட்டல் ? ஏன் இவ்வளவு லேட்டாகிறது என்று கேட்டு....

ஒரு வழியாக ... அம்மா... ஹோட்டலுக்கு வந்துட்டோம்.

அப்பாடா! முதல்ல இவனை அனுப்பு! GPS இல்லாம வழியும் தெரியாம இவன்லாம் ஒரு டிரைவர்!

அம்மா! இந்த ஹோட்டல்ல நான் ரூம் புக் பண்ணலையாம். இவங்க பிரான்ச் வேற ஒண்ணு. இங்க பக்கத்துல தானாம்.

ஐயோ! இன்னொரு டாக்ஸியா?

அவங்க ஷட்டில் கூப்பிட்டுருக்காங்க.

அப்ப சரி!

ஒருவழியாக ரூம் போட்டு அங்கே போனவுடன் சேர்த்து வைத்து ஓவென்று அழுகை!

முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணு.

பசியில்லை.

சாப்பிட்டா தான் கொஞ்சம் தெம்பா இருக்கும். தெளிவா யோசிக்க முடியும். சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் இண்டர்வியூக்கு ரெடி பண்ணிக்கோ. சரியா என்றவுடன்

சரிப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்.

பாவம்ங்க! முதல் முதல்ல தனியா போற பயணம் இவ்வளவு மோசமா இருந்திருக்கக் கூடாது. ஹ்ம்ம்...

சிறிது நேரம் கழித்துப் பேசுகையில் கொஞ்சம் தெளிவாக இருந்தது குரல். தூங்கலையா?

இல்லம்மா. கொஞ்ச நேரம் படிக்கிறேன். நாளைக்கு காலையில 3.30 மணிக்கு எழுப்பிடு. அஞ்சு மணிக்கு ஷட்டில் வந்திடும்.

குட்நைட் சொல்லி விட்டு என் மகளுக்கு ஏன் இப்படியொரு சோதனை என்று வருந்திக் கொண்டே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து காலையில் நான் எழுப்பி விடுவதற்குள் அவளே எழுந்து விட்டிருந்தாள். ஏர்போர்ட் போனவுடன், விமானம் ஏறியவுடன் என்று ஊர் போய்ச் சேரும் வரை அப்டேட் செய்து கொண்டே இருந்தாள்.

கவலைப்படாதே! இதெல்லாம் அனுபவங்கள்! திரும்பிப் பார்க்கையில் இதையெல்லாம் நீ கடந்து வந்திருக்கிறாய் என்று பெருமையாகத் தான் இருக்கும். உன் வயதிற்கு இது அதிகம் தான் ஆனாலும் நீ என் மகள். இதையெல்லாம் எளிதில் கடந்து விடுவாய். நேர்முகத் தேர்வை நன்றாகச் செய். அத்தனை ஆர்வமுடன் அவர்கள் நிறுவனத்தில் சேர நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறாய் என்பதையும் அழகாகச் சொல்லி விடு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பி விட்டு...கடவுளே! எல்லாம் சுபமாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு...

நானும் அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவள் வந்து சேரும் நேரத்தைச் சொல்லி அவர்களும் அதற்கேற்றவாறு நான்கு குழுக்களுடனான நேர்முகத் தேர்வினை மூன்று குழுக்களுடன் மட்டும் வைத்துக் கொண்டு வேறொரு நாளில் ஸ்கைப் மூலம் நான்காவது குழுவுடனும் இண்டர்வியூ என்று முடித்தார்கள்.

மீண்டும் விமானம் ஏறி நியூயார்க் வரும் பொழுது அம்மா, என்னோட ஷூ ஹீல்ஸ் உடைஞ்சு போச்சு தெரியுமா? அதோட தான் இண்டர்வியூக்குப் போனேன்! இந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது. ஒர்ஸ்ட் டே ஆஃப் மை லைஃப்!

கவலைப்படாதே! இந்த மாதிரி அனுபவங்கள் தான் உனக்குப் பலமாக இருக்கும். இனி உலகத்தில் எந்த விமான நிலையத்தில் எத்தனை குழப்பங்கள் வந்தாலும் உன்னால் எதிர் கொள்ள முடியும். இனி வரும் நாட்களிலும் இப்படி எதிர்பாராத ஏதாவது ஒன்று நடந்து கொண்டே தானிருக்கும். நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். இனி கல்லூரித்தேர்வுகளில் கவனம் செலுத்து. எதைப் பற்றியும் கவலைப்படாதே.  இதை விட வேற ஏதாவது புதுசா வந்தா இதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு தோணும். டேக் இட் ஈஸி! வேற வழியில்லைன்னு சொன்னாலும் மிகவும் வருத்தமாக இருந்தது.

பாவம் இதுக்கே இப்படி பயந்து நொந்து போய்விட்டாளே!

எது எப்படியோ எல்லாம் சுகமாக முடிந்து வேலைக்கான ஆர்டரும் கிடைத்து விட்டது. அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வேறு இரு நிறுவனங்களிலும் வேலை கிடைத்த பெருமையுடன் அவளுடைய ஆசிரியர்களும் பெருமிதம் கொள்ளும் வகையில் இனிதே நிறைவடைந்தது அவளுடைய கல்லூரி வாழ்க்கை.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் யாருக்கும் இதெல்லாம் தெரிவதில்லை. கடந்து வந்த கடுமையான பாதைகளைக் கண்டுகொள்வதில்லை பலரும்! வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு கவலை என்பது ஒன்று இல்லவே இல்லை. சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் நம்மூரில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைகள், போராட்டங்கள் எல்லோருக்கும் எங்கேயும் இருக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எளிதாக எல்லாம் அமைந்து விடுகிறது. பலருக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதில்லை. அநேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல தடைகள் எதிர்பாரா வருந்தத்தக்க தருணங்கள் இருந்திருக்கும். ஐயோ! எனக்கு மட்டும் ஏன் என்று புலம்பிக் கொண்டிராமல் எப்படி தகர்த்து வெளிவருவது என்று யோசிக்கும் மனம் தளர்ந்து போவதில்லை என்பது என் அனுபவத்தில் கண்டறிந்தது.

இன்று வரை அவளுக்கு எதுவுமே எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் போராடித்தான் பெறுகிறாள். என்னுடைய இருபது வயதில் இதை விட மிகப்பெரிய போராட்டங்களைக் கடந்து தான் வந்திருக்கிறேன் என்றாலும் இந்த விஷயத்தில் என்னைப்போலவே இருக்கிறாளே என்று வருத்தமும் மகிழ்ச்சியும்! சோர்வடைந்தாலும் துவண்டு விழாமல் மீண்டு வரும் இந்தப் போராட்ட குணம் இருந்தாலே போதும். வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம் என்று என் குழந்தைகளுக்குச் சொன்னேன், சொல்கிறேன், சொல்லிக் கொண்டே இருப்பேன்!

சரிதானே?






















































































Monday, May 6, 2019

முகநூல் பதிவு - மாறாத ஒரு இனம்

நேற்று கோவில் கலையரங்கத்தில் பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி குழந்தைகள் வில்லுப்பாட்டு, நாடகம், நாட்டியம், ஹரிகதா வாயிலாக இனிய தமிழில் வழங்கியது அருமையாக இருந்தது. அவர்களின் பாசுரங்களை நியூஜெர்சியிலிருந்து வந்திருந்த சுபா ஸ்ரீனிவாசன் கணீரென்ற குரலில் லயித்துப் பாடி கேட்போரை ஆனந்தப்படுத்திக் கொண்டிருந்தார். வயலின் வாசித்த ஸ்ரீநாத் என்ற இளைஞனும் மிருதங்கம் வாசித்த ஷங்கரும் அவரின் பாடலுக்கு இனிமையைக் கூட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜானகிக்கு பாராட்டுகள்.

கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலரும் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து மெதுவாக ஊர்க்கதைகளை உரக்கப் பேசி, நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறதே என்ற நினைவு கூட இல்லாமல் நடந்து கொண்டது அநாகரீகம் என்றால் குழந்தைகள் ஓடியாடி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்ததை எந்த பெற்றோரும் கண்டு கொள்ளாதது அதை விட கொடுமையாக இருந்தது. தத்தம் குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் பலரும் சென்று விட்டார்கள். நடுவில் பத்து நிமிட இடைவெளியில் சுண்டல் சாப்பிடச் சென்ற பலரும் அங்கேயே தங்கி விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக ஐம்பது குழந்தைகளை பல நாட்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களும் தமிழில் பேசியதைக் கேட்க அழகாக இருந்தது. அதுவும் தெள்ளத் தெளிவாக ஹரிகதா சொன்ன க்ருஷா அனைவரையும் வசீகரித்து விட்டாள். தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்களும் பல நாட்கள் அலைந்திருக்கிறார்கள். அப்படி இருக்க, மற்ற குழந்தைகளின் நிகழ்ச்சியையும் பாடுவோரையும் கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்திருக்க வேண்டாமா?

இதே பெற்றோர்கள் தான் இரட்டை அர்த்தப்பாடல்களுக்கு டப்பாங்குத்து ஆட்டம் போடும் நடனங்களுக்கு கடைசி வரை இருந்து பார்த்து கைத்தட்டி விட்டுச் செல்கிறார்கள்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மாறாத ஒரு இனம் உண்டெனில்...









மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...