Wednesday, January 1, 2020

கூடலழகர் பெருமாள் கோவில்

காற்றோட்டத்துடன் நீண்ட பிரகாரங்கள், அழகான மதுரவல்லித்தாயாரின் தரிசனம், நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் காட்சி தரும் பெருமாள், ஆண்டாள் சந்நிதி... சனிக்கிழமை என்றாலே கூட்டமிருக்கும் பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? 
சிறுவயதில் வாரம் தவறாமல் சனிக்கிழமை தோறும் சென்று வந்த கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்.

கோவிலின் முன்பு செருப்பு வைக்க கூட இடமில்லாமல் மக்கள் கூட்டம் ஒருபுறம் என்றால் தங்களுக்கும் உணவளிப்பார்கள் பகுத்துண்டு வாழும் பக்த கோடிகள் என்று மாடுகளும் வெளியில் காத்திருக்கும். மாடுகளுக்கு அருகிலேயே கீரைக்கட்டுக்களுடன் மாடுகளின் உரிமையாளரோ?

கோவில் வாசலில் துளசி மணம் கமகமக்கும் மாலைகள், தாமரைப்பூக்கள், மல்லி, பிச்சி்மலர்களுடன் பூக்காரம்மா. அவர் எதிரே திருவோட்டுடன் தானத்திற்கு காத்திருக்கும் வயிறு ஒட்டிய ஏழைகள் பிச்சையெடுத்துக் கொண்டு!

உள்ளே நுழைந்தவுடன் காக்கிச்சட்டை கடமைவீரர்கள்! அவர்களைத் தாண்டி இடப்புறத்தில் நுழைந்தால் மதுரவல்லி தாயார் சன்னதி. இந்நாளுக்கான சிறப்பு அலங்காரங்களுடன் அவள் அமர்ந்திருந்து அருளும் காட்சியை கண்கள் விரியு பார்த்துக் கொண்டே ரசிக்கலாம். பட்டுச்சேலையும் மங்கிய ஒளியில் மின்னும் மூக்குத்தி அலங்காரமும் மனதில் ஒட்டிக் கொள்ளும்.

அவளைச் சுற்றி வலம் வருகையில் சுவரில் தீட்டியிருக்கும் ஓவியங்கள் பாட்டி, அம்மா, பெரியம்மா சொன்ன கதைகளை நினைவுறுத்தும்.

ராமஜெயம் மாலைகளுடன் வெண்ணெய் அலங்காரத்தில் குட்டி அனுமர்.

தாயாரிடம் விடைபெற்று வெளியில் வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. அதையொட்டிய கல்யாண மண்டபம். சிறு பூந்தோட்டம். தும்பிக்கையை ஆட்டியபடி அழகு குட்டி ஆண்டாள் யானை. தற்போது இல்லை என்று நினைக்கிறேன். இனி யானைகளை வதைக்கவும் வேண்டாம்.

வேகமாக மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே கடந்து செல்பவர்கள், பாசுரங்களைப் பாடிச் செல்லும் பக்தர்கள், கோபுரத்தைப் பார்த்து "நாராயணா, நாராயணா" என கைகூப்பி வணங்குபவர்கள், ஓடிச்செல்லும் குழந்தைகள், வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள், சுடும் வெயிலில் ஓட்டமெடுப்பவர்கள் ...என பிரகாரச்சுற்று களையாக இருக்கும்.

கோவில் நடுவே பெருமாள் சன்னதி. தேவியர்களுடன் கன்னங்கரிய பெருமாள்! காண கண்கோடி வேண்டும். அவர் பாதத்தில் ஆரம்பித்து மந்திரங்களுடன் தீபாராதனை... துளசி தீர்த்தம், பச்சைக்கற்பூர மணம்... மனம் அமைதியாகும் அந்தக்கணம்...மெய்சிலிர்க்கும் அனுபவம்.

கருடர், அனுமரை வணங்கி அமைதியாக அமர்ந்திருக்கும் ஆண்டாள் தரிசனம் முடித்து நவக்கிரகங்களையும் வேண்டிய பிறகு ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமர்ந்தால் கண்ணெதிரே அப்பம், முறுக்கு, லட்டு, பொங்கல் பிரசாதங்கள்!

மனமும், வயிறும் குளிர பெருமாள் தரிசனம் இனியதொரு சுகானுபாவம்.

சந்தடி மிக்க நெரிசலிருந்து மனதிற்கு அமைதியைத் தரும் கோவில்கள் தான் மதுரையின் அழகே! அதிகாலை மார்கழி மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி என பெருமாளுக்கு உகந்த மாதம்.

கணவரின் தாத்தா மற்றும் பங்காளிகள் (ஓபுளா) குடும்பத்தினர் நன்கொடையால் இக்கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது என்ற தகவலும் இக்கோவிலில் உள்ளது.



குளிர்பனிக்காலை
வீதிநிறைய கோலம்
வர்ணஜாலத்தின் நடுநடுவே
பூசணிப்பூக்கள்
ஈரம்சொட்டிய கூந்தலோடு
சன்னலோர வேடிக்கை
காற்றில்கரைந்தொலிக்கும்
கோஷ்டிகானம்
ஆண்டாளாயிருப்பதும்
அற்புதம்தான்
மார்கழி போற்றுதும்
மார்கழி போற்றுதும்

ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏



கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை
PC: Vishvesh Obla




No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...