Sunday, January 5, 2020

பந்தர் எனும் அழகன்


சில நாட்கள் பெய்த அதிக மழையால் கோஹோஸ் அருவியில் வெள்ளப் பெருக்கெடுத்து பொங்கி வரும் ஹட்சன் ஆற்றைக் காண மக்கள் சிலர் குழுமியிருந்தார்கள். சிலர் படமெடுத்துக் கொண்டே, சிலர் மணலையும் அடித்துக் கொண்டு சீறிப்பாயும் அருவியை ஒருவித அச்சத்துடன் பார்த்துக் கொண்டே இருக்க, அங்கு வந்திருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தது ஷிபா இனு எனும் ஜப்பானிய இன வகையைச் சேர்ந்த இரண்டரை வயது பந்தர். அச்சோ! என்ன அழகு! ஹாய் என்றவுடன் வாலாட்டிக் கொண்டே அருகில் வந்து விட்டது.

செல்லமேன்னு தலையைத் தடவிக் கொடுக்க அதுவும் வாலாட்டிக் கொண்டே என்னைப் பார்க்க, மெதுவாக கால்கள் இரண்டையும் என் மடி மேல் போட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நெருங்கி வர, அவனுடைய உரிமையாளர் (அப்பா என்று தான் சொல்ல வேண்டும்) பதட்டத்துடன் நோ நோ நோ நீ பாட்டுக்கு அவங்க மேல கால் போடக் கூடாது என்று சொல்ல, டபக்கென்று காலை எடுத்து விட்டு பாவம் போல் மூஞ்சியை வைத்துக் கொண்டு அழகாக நின்று கொண்டிருந்தான் பந்தர். அங்கு வந்திருந்த பலரும் அவன் அழகில் மயங்கி ச்ச்ச்சோ ஸ்வீட்! என்ன அழகு! பாராட்டுப் பத்திரம் வாசிக்க, அமைதியாக சினேகமாக அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தான். அதற்கு முதல் நாள் தான் காப்பகத்திலிருந்து தத்தெடுத்திருக்கிறார் இந்த அழகனை! இவையெல்லாம் விலையுயர்ந்த நாய் வகையினத்தில் சேரும். யாரோ வளர்க்க முடியாமல் அவனை காப்பகத்தில் விட, இவர்களும் ஆசையுடன் அழைத்து வந்து விட்டார்கள். அன்புக்கு நான் அடிமை என்பது போல் இருந்த பந்தர் அழகுச் செல்லம்!

நண்பர் ஒருவர் வீட்டில் இருக்கும் ஒன்றரை வயது நாய் ஆட்களைப் பார்த்து விட்டால் ஓடி வந்து பாய்வான். நக்கிக்கொண்டே இருப்பான். அப்படியேதும் செய்யாமல் இருந்ததாலோ என்னவோ எளிதில் வசீகரித்து விட்டான். சுப்பிரமணியும் நிவியும் இருந்திருந்தால் ஆரம்பித்திருப்பார்கள்! நினைத்துக் கொண்டோம் 🙂

மற்றொரு நண்பர், உருவில் பெரிய பார்த்தாலே பயப்பட வைக்கும் நாய் ஒன்று வைத்திருக்கிறார். முதன்முதலில் பார்க்கும் பொழுது அவளுடைய கண்களைப் பார்க்காமல் பேசுங்கள் என்றார். நானும் நண்பரிடமும் அவர் மனைவியிடமும் பேசிக்கொண்டே இருக்க அவளும் பக்கத்தில் முகர்ந்து கொண்டே வர, எனக்குத்தான் லப்டப் லப்டப் சத்தம் பலமாக கேட்க, ஒரு வழியாக வாலாட்டி என்னையும் நண்பர்கள் வட்டத்தில் சேர்த்துக் கொண்டாள். அதற்குப் பிறகு அவர்களுடன் பார்க்கும் பொழுது அமைதியாக நின்று கொண்டிருப்பாள். எனக்குத்தான் இன்னும் கூட பயமாக இருக்கிறது.

ஆனால் பந்தர் அப்படியெல்லாம் இருக்கவில்லை. பார்த்தவுடன் சிலரைப் பிடித்துவிடுவது போல் உள்ளங்கவர் கள்வனாகி விட்டான்.

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
பந்தர் போல் நாய் வளர்க்க
ஆசை தீரும் காலம் எப்பொழுது????

நான் பாடியது அருவிச்சத்தத்தில் யாருக்கும் கேட்டிருக்காது தான் 😛

பந்தர் எனும் அழகன் 

No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...