Sunday, January 5, 2020

அணில்களின் ராஜ்ஜியம்


காலையில் சமையலறையில் நடமாட்டம் தெரிந்து விட்டால் போதும் மெதுவாக மரத்திலிருந்து இறங்கி deckல் வந்து அமர்ந்து கொள்ளும். கதவு பக்கத்தில் வந்து நின்று தன் இருப்பைத் தெரியப்படுத்தும். சாப்பிட ஏதாவது கொடு என்பது போல் முகபாவத்துடன் நிற்கும் அழகில் பழங்கள், பழத்தோல்கள், விதைகள் , கடலையை அள்ளிப்போட்டு விட்டால் போதும். யம் யம் என்று தன்னுலகில் இன்பமாக வயிறு நிரம்ப சாப்பிட்டு தண்ணீரும் குடித்து விட்டு மெதுவாக மரமேறி விடும். நம்மூர் அணில்களோடு ஒப்பிட்டால் இவை பலமடங்கு பெரியவை. நாமம் இல்லாத அணில்கள், பெரிய வால்களுடன் குளிரைத் தாங்கிக் கொள்ள கூடுதலான மேற்தோல்கள் என்று பார்ப்பதற்கே கொள்ளை அழகு!

மழைக்காலத்தில் இதற்கு அதிக உணவு கிடைப்பதில்லை. பனிக்காலத்திற்காகவும் சேர்த்தே இலையுதிர்காலங்களில் தேடித்தேடி உணவுகளை பதுக்கிக் கொள்ளும். எங்கள் வீட்டுப் பின்புறம் இதன் பதுங்கு குழிகள் ஏராளம். அழகாக தன் சிறு கைகளால் பள்ளம் தோண்டி அதில் உணவுப் புதையலை மறைத்து யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே குழியை அழகாக மூடி ஓடி விடும். உணவு கிடைக்காத நேரங்களில் முகர்ந்து கொண்டே தான் பதுக்கிய இடங்களில் இருந்து உணவை ஆனந்தமாக உண்டு மகிழும்.

உண்ணும் பொழுது ஆண் அணில்கள் அதிகாரமாக சிறிய அணில்களையும் , பெண் அணில்களையும் துரத்தி விடும். சண்டையின்னு வந்துட்டா... பாணியில் யாரையும் நெருங்க விடாமல் மற்ற அணில்கள் ஏக்கத்தோடு கீழே சிந்தும் உணவுகளை உண்ணும். விலங்குகளிடத்தில் கூட ஏற்றத்தாழ்வுகள் ஆண், பெண் வேறுபாடுகள் அதிகமிருக்கிறது!

கொடும் பனியையும் , குளிரையும் தாங்கிக் கொள்ள இயற்கை போர்த்தி விடும் கூடுதல் மேற்தோல்கள் கோடையில் உதிர்ந்து மெலிந்து தெரியும். எங்கிருந்தோ பறந்து வரும் கழுகினத்தைக் கண்டவுடன் துள்ளி ஓடி மறைந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நுண்ணுணர்வு கொண்ட அணில்கள் இரையாவதும் அதிகம். மரத்தின் உச்சிகளில் கூடு கட்டி குஞ்சுகளுக்குப் பாலூட்டும் தாய் அணில்களுடன் வளைய வரும் குட்டி அணில்கள் அழகோ அழகு. குஞ்சுகள் தனியாக உணவு தேடும் பருவம் வரை தாயுடனே வெளிவரும்.

நடுரோட்டில் நின்று கொண்டு இங்கி பிங்கி பாங்கி போட்டு எந்தப் பக்கம் ஓடுவதென்று தடுமாறி வண்டி ஓட்டுபவர்களையும் பதற வைக்கும். கோடை மாதங்களில் சாலைகளில் அதிகம் இறந்து கிடப்பதைக் காண வருத்தமாக இருக்கும்.


மழை, பனி, குளிர், வெயில் என அனைத்துப் பருவநிலைகளிலும் உணவைத் தேடி அலைந்தபடியே இயற்கையைப் பாதுகாக்கும் இச்சிறிய உயிரினம் கற்றுக் கொடுக்கும் பாடங்களோ ஏராளம்!

இயற்கையோடு இணைந்தால் எதுவும் ரொம்ப அழகு...


No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...