Tuesday, January 21, 2020

Squirrel Appreciation Day


இன்றைய தினம் எனது செல்லப் பிராணிக்கான நாள் என்று தெரிய வந்தது.
( ஜனவரி 21 'Squirrel Appreciation Day') பலருக்கும் செல்லமாகவும் சிலருக்கு உபத்திரமாகவும் வளைய வருகிறது இந்த அணில்கள். மதுரையில் வீட்டில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டாலே அம்மா, ஜன்னலை மூட மறந்துட்டேன் போல. அணில் உள்ளே வந்துடுச்சு. இப்படியே விட்டா கூடு கட்டிடும் என்றார். மரங்களை அழித்து விட்ட நாம் தானே குற்றவாளி என்று நினைத்துக் கொண்டேன். ஆல்பனி அணில்களைப் பார்த்த பிறகு மதுரை அணில்கள் நோஞ்சானாக இருப்பது போல தோன்றிற்று!

எங்கள் வீட்டுப் பின்புறத்தில் மரங்களில் ஆனந்தமாக அணில் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. போதாக்குறைக்கு நாங்கள் வேறு தீனிகளைப் போட்டு வளர்த்து வருகிறோம். அருகிலிருந்து இவர்களைப் பார்ப்பதால் எங்களுக்கும் ஆனந்தம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் விதவிதமாக நானும் ஈஷ்வரும் படங்கள் எடுத்து விடுவோம். விடியற்காலையில் சமையலறையில் நடமாட்டம் தெரிந்த பொழுதில் தீனிக்காக கதவருகில் காத்திருக்கும். ஜன்னலில் என் பார்வை படும்படி சமையலறையை பார்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் தான் காலை நேரத்தை உற்சாகப்படுத்துகிறார்கள். இப்பொழுதெல்லாம் விடுமுறையில் வரும் மகனும், மகளும் கூட 'உன் குழந்தைகள் வந்தாச்சு. சாப்பாடு போடும்மா.' என்று கிண்டலடிக்கும் அளவிற்கு செல்லமும் கொடுத்தாச்சு. தீனி போட்டு விட்டு திரும்புவதற்குள் மரங்களிலிருந்து இறங்கி வருவார்கள்! எப்படித்தான் தெரியுமோ?

மாம்பழம் என்றால் அதற்கும் ஆசை அதிகம். ஸ்ட்ராபெரிஸ், ஆப்பிள், திராட்சை, தேங்காய், கிர்ணிப்பழம், தண்ணீர்ப்பழம் என்று ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. அழகாக நறுக்கி வைத்தால் 'யம் யம்' என்று கையில் வைத்து சாப்பிடும் அழகிற்கே அடிக்கடி பழங்களையும் வைப்பதுண்டு. பறவைகளுக்காகப் போடும் தீனிகளை காலி செய்து விட்டுத்தான் செல்லும் இந்த ரௌடிக்கூட்டம். கடலை என்றால் விரும்பிச் சாப்பிடும். தேவைக்கு அதிகமாக கிடைத்து விட்டால் எங்காவது ஓடிச் சென்று மண்ணில் ஒளித்து விட்டு வரும். சில அசட்டு அணில்கள் செடித்தொட்டிக்குள் புதைத்து வைத்து விட்டு வேண்டும் பொழுது மண்ணைக் கிளறி குப்பையாக்கி விடுவதால் பலருக்கும் இவர்களைக் கண்டால் ஆகாது. இவர்களுக்குள்ளும் ஆல்ஃபா மேல் என்ற ஆணின அணிலின் ராஜாங்கம் இருக்கிறது. பெண் அணில்களை நெருங்க விடாமல் தானே தீனிகளை களேபரம் செய்து விடுகிறது!

வீட்டுக்கருகில் இருக்கும் பூங்காவில் ஒரு பெண்குழந்தை பெற்றோருடன் குளத்திலிருக்கும் வாத்துகளுக்கும் ஆமைகளுக்கும் ரொட்டிகளைப் போட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆவலுடன் நானும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அணில் ஒன்று அருகில் வருவதும் ஓடுவதுமாய் பரபரத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் எதிரிலிருந்த மரத்திலிருந்து ஒரே சலசலப்பு. 'க்ரீச் க்ரீச்' சத்தம். அந்த அணில் வாயில்  எதையோ வைத்துக் கொண்டு ஓட, அதை துரத்திக் கொண்டே இன்னொரு அணில் வேகமாக மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. அடடா! வாயில் என்னத்தை தூக்கிக் கொண்டு போகிறது? மரத்திலிருந்து ஏன் இவ்வளவு சத்தம்? அண்ணாந்து பார்த்துக் கொண்டே அருகில் செல்ல, சிறு பெண்ணுடன் வந்த கணவனும் மனைவியும் இரண்டு குஞ்சுகள் கீழே விழுந்து விட்டது. பார்த்தீர்களா? என்று கேட்டவுடன் தான் தெரிந்தது அந்த அடாவடி அணில் ஒரு குஞ்சைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. அம்மா அணிலும் அதைத் துரத்திக் கொண்டு போயிருக்கிறது. கூட்டின் ஓரத்தில் ஒரு குஞ்சு சருகுகளை பற்றிக் கொண்டு எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற நிலையில்! கீழே விழுந்த குஞ்சுகளை ஓடிச் சென்று கையில் எடுத்த அந்தப் பெண்மணி மேலிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டிருக்கிறது என்று அணில் குஞ்சை தன் கைகளில் ஏந்திக் கொண்டார். ரத்தம் கசிய அவரது சட்டையிலும் ஒட்டிக் கொள்ள, 'மாமி யூ ஹேவ் ப்ளட் ஆன் யுவர் ஷர்ட் ' என்று அவர் பெண்குழந்தை பதைபதைக்க, அவருடைய கணவரும் கீழே விழுந்திருந்த மற்றொரு அணில் குஞ்சை கையில் எடுத்துக் கொண்டார். பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல. கண்களைக் கூட திறக்கவில்லை. என்ன செய்யலாம் என்றார். மரத்தின் அருகில் விட்டு விட்டால் அம்மா வந்து எடுத்துக் கொள்வாளோ என்னவோ என்று மரத்தின் அருகில் வைத்து விட்டு ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். துரத்திச் சென்ற அணிலிடமிருந்து குஞ்சைக் காப்பாற்ற முடியாமல் வேகமாக மரத்தில் ஏறியவள் அங்கிருந்து கீழே விழுந்திருந்த குஞ்சுகளை ஏக்கத்துடன் பார்த்து மரத்தில் இருந்து இறங்குவதும் பின்பு மீண்டும் ஏறுவதுமாய் குழப்பத்துடன் அங்குமிங்கும் அலைவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மரத்தில் இருந்த குஞ்சும் கீழே விழுந்து அடிப்பட்டிருந்த குட்டியும் ஈன ஸ்வரத்தில் முனகிக் கொண்டிருக்க, 'அடிபட்ட குஞ்சுகளை அம்மா அணில்கள் விரும்புவதில்லை. அவர்களால் ஆபத்து என்று கைகழுவி விடும். நான் அருகிலிருக்கும் விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன்' என்று இரண்டு குஞ்சுகளையும் எடுத்துச் சென்று விட்டார் அந்தப் பெண்மணி.

ஈன்ற நான்கில் மூன்றை ஒரே நேரத்தில் பறிகொடுத்த அம்மா அணிலை நினைத்து மனம் வருந்தியபடி வீடு வந்து சேர்ந்தோம். வாழ்க்கை என்பதே போராட்டம் தானே? இதில் அணில் என்ன மனிதன் என்ன? ம்ம்ம்...

இன்று நினைத்தாலும் மனம் வருந்தும். அந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா அணிலின் பதைபதைப்பும் தவிப்பும் கண் முன்னே நிற்கும். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும்... கவிஞர் சொன்னது நினைவுக்கு வர, அம்மரத்தை கடந்து விடுவேன்.

காடுகளை வளர்க்க பெரிதும் உதவும் இச்செல்லங்களுக்கு இன்று நிறைய தீனிகள் போட்டு குஷிப்படுத்திவிட வேண்டியது தான். இந்த நாள் இனிய நாள் :)

படங்கள்: இணைய உபயம் 👍



No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...