Showing posts with label சொல்வனம். Show all posts
Showing posts with label சொல்வனம். Show all posts

Sunday, August 16, 2026

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த சமூகத்தின் தொடக்கமே இப்படி என்றால் யாரெல்லாம், எப்படியெல்லாம் பாதிக்கப்படப் போகிறார்கள். மேலும் வாசிக்க...


மனித நாகரிகத்தின் மிகப்பெரிய செல்வம் பணமோ, கட்டிடங்களோ, தொழில்நுட்பமோ அல்ல. அது அறிவு மட்டுமே. ஆதிமனிதன் குகைச் சுவர்களில் தனது அனுபவங்களை வரைந்த காலத்திலிருந்து, இன்று கணினி சில்லுகளில் தகவல்களைப் பதிவு செய்யும் காலம் வரை, தான் கற்றதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்வது என்று சிந்தித்த மனிதன் உருவாக்கிய சாதனம் தான் புத்தகம்.

ஒரு நல்ல புத்தகம் என்பது வெறும் காகிதமும் மையும் மட்டுமே அல்ல. அதன் பக்கங்களுக்குள் ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவமும், பல ஆண்டுகள் சிந்தித்த ஒரு மனதின் தடமும், ஒரு காலத்தின் குரலும் இருக்கிறது. ஒரு தலைமுறையின் கனவுகள், கேள்விகள், கண்டுபிடிப்புகள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் அதற்குள் மறைந்திருக்கின்றன. அதனால்தான் உலகின் ஒவ்வொரு நாகரிகமும் சமுதாயத்தின் அறிவாக புத்தகங்களை மதித்தது. அந்தப் புத்தகங்களைப் பாதுகாக்கவே நூலகங்கள் உருவானது.

நூலகம் என்பது வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவகம். அறிவைத் தேடி வருபவர்களுக்கும் ஒரு தலைமுறை கற்ற பாடங்களை, அனுபவங்களை அடுத்த தலைமுறை மறந்துவிடாமல் பாதுகாக்கும் பொக்கிஷ அறையாக இருப்பதால் தான் உலகின் மிகப் பழமையான நூலகங்கள் இன்றும் மனித நாகரிகத்தின் பெருமையாகப் பேசப்படுகின்றன. இதில் பல நூலகங்கள் போர்களில் எரிந்தும் வெள்ளத்தில் அழிந்தும் காலத்தின் தாக்கத்தாலும் சிதைந்து போகும்போதெல்லாம் அறிவார்ந்த மனிதகுலம் வருந்தியது. ஏனெனில் எரிந்தது புத்தகங்கள் மட்டுமல்ல. மனித நினைவுகளின் ஒரு பகுதியும் கூட.

இவ்வாறு கண்ணும் கருத்துமாகப் பேணி காத்து ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் இப்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட புதிய, உயிரற்ற “மாணவனுக்கு” பாடம் சொல்லிக் கொடுக்கின்றன. ஆம். “செயற்கை நுண்ணறிவு”(Artificial Intelligence – AI) தான் அந்த மாணவன்! மனிதர்களைப் போலவே கணினியால் கற்றுக்கொள்ள முடியுமா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் யோசித்திருப்போம். இப்பொழுது சாத்தியமாகிவிட்டது!

இன்று நம்மால் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்க முடிகிறது. அது கதை, கவிதை, கட்டுரை எழுதுகிறது. கணினி நிரலை உருவாக்குகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவுகிறது. மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. சில நேரங்களில் நம்மோடு நண்பனைப் போல உரையாடவும் செய்கிறது.

இவ்வளவு விஷயங்களை அதற்கு யார் கற்றுக்கொடுத்தது?

பிறந்த குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் கல்வியின் மூலமும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. ஆனால் உலகைப் பார்க்க முடியாத செயற்கை நுண்ணறிவோ மனிதர்கள் எழுதியவற்றிலிருந்து தான் கற்றுக் கொள்கிறது. “சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது கிளாட் (Claude) புத்தகங்களைப் படிக்கிறதா?” என்றால் இல்லை என்பது தான் பதிலாகும்.

ஒரு மனிதன் ஒரு நாவலைப் படித்தால் கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்வான். சம்பவங்களை உணர்வோடு அனுபவிப்பான். ஆனால் செயற்கை நுண்ணறிவு அப்படிப் படிப்பதில்லை. அது புத்தகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான சொற்களைக் கணித ரீதியாக ஆராய்கிறது. எந்தச் சொல் எந்தச் சொல்லுடன் அதிகமாக வருகிறது? ஒரு கேள்விக்குப் பொதுவாக எப்படி பதில் எழுதப்படுகிறது? ஒரு விஞ்ஞானக் கட்டுரை எப்படி அமைக்கப்படுகிறது? ஒரு கவிதையின் மொழிநடை எப்படி இருக்கிறது? ஒரு வரலாற்றுப் புத்தகம் எப்படி தகவல்களை அடுக்குகிறது? இப்படிப் பல கோடிக்கணக்கான தொடர்புகளை அது கண்டுபிடிக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால், மனிதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்கிறான். செயற்கை நுண்ணறிவோ, வடிவங்களையும் (patterns) தொடர்புகளையும் கண்டறிந்து கற்றுக்கொள்கிறது. இதற்கு Large Language Model (LLM) என்று பெயர். அதாவது, “மொழியின் அமைப்புகளையும் தொடர்புகளையும் கற்றுக்கொள்ளும் மாபெரும் கணினி மாதிரி.” அதனால் தான் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்க மிகப் பெரிய அளவிலான தரவுகள் தேவைப்படுகின்றன.

ஒரு சிறந்த ‘AI மாதிரி’யின் திறன் அதன் கணினி சக்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது கற்றுக்கொள்ளும் தரவின் “தரமும்” முக்கியம். ஒரு மாணவன் நல்ல ஆசிரியர்களிடம் கற்றால் அவன் அறிவு சிறப்பாக இருக்கும். அதேபோல் AIக்கும் தரமான மனித அறிவு தேவை. ஆனால் எல்லா தரவுகளும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் தவறான செய்திகள், உறுதி செய்யப்படாத தகவல்கள், தரமற்ற எழுத்துக்கள் இருக்கலாம். அதனால் மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் AI உலகில் முக்கியமானதாக மாறின.

புத்தகங்கள் என்பது ஆசிரியர்களின் பல ஆண்டுக்கால ஆராய்ச்சி, ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்கள், பதிப்பாசிரியர்களின் திருத்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதனால் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உயர்தரமான புத்தகங்கள் மிகவும் மதிப்புமிக்க பயிற்சி வளமாக மாறின.

அதற்காகத் தான் ‘Anthropic’ நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து புத்தகங்களை வாங்கியதோடு மட்டுமில்லாமல் பக்கங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, ஒவ்வொரு பக்கத்தையும் மின்னணு வடிவமாக மாற்றிய பின்னர் அந்தப் புத்தகங்களைத் தூக்கி எறிந்தது! AIக்கு அறிவை கற்றுக்கொடுக்க, மனித அறிவின் அடையாளமான புத்தகங்களையே நாம் அழிக்கிறோமா? மனிதர்கள் பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய புத்தகங்களைச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்கள் மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தலாமா போன்ற அதிர்ச்சிகரமான கேள்விகள் தான் இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் “ஆன்த்ரோபிக் புத்தக சட்ட விவகார”த்தின் மையம் ஆகும்.

ஆனால் ஆன்த்ரோபிக்கின் பார்வையில், “ அழிக்கப்பட்டது காகிதம். பாதுகாக்கப்பட்டது அதிலிருந்த தகவல். ஒரு மாணவன் ஆயிரம் புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு புதிய புத்தகத்தை எழுதுகிறான். அவன் ஒவ்வொரு வரியையும் நகலெடுக்கவில்லை. அவன் கற்றுக்கொண்ட அறிவை புதிய சிந்தனையாக மாற்றுகிறான். செயற்கை நுண்ணறிவும் அதைத்தான் செய்கிறது. அது புத்தகங்களைச் சேமிப்பதில்லை. அவற்றிலிருந்து மொழியையும் கருத்து அமைப்புகளையும் கற்றுக்கொள்கிறது. அதுவும் ஒரு வகையான கற்றல் தான்” என்று வாதிட்டது.

இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையேதான் இன்று உலகின் மிகப் பெரிய சட்ட, நெறிமுறை, சமூக விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கான பதிலைத் தேடும் முக்கியமான சட்டப் போராட்டங்களில் ஒன்றுதான் ‘Bartz v. Anthropic’ என்ற வழக்கு. இது ஒரு நிறுவனத்துக்கும் சில எழுத்தாளர்களுக்கும் இடையிலான சாதாரண வழக்கு அல்ல. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உருவாக்கப்படும்? எழுத்தாளர்களின் உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும்? மனித அறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் எவ்வாறு பயன்படுத்தப்படும்? போன்ற மிகப் பெரிய கேள்விகளுக்கான ஒரு முக்கியமான முன்னுதாரணமாக மாறியது.

ஆகஸ்ட் 19, 2024 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா வடக்கு மாவட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தில் மூன்று எழுத்தாளர்கள், ஆண்ட்ரியா பார்ட்ஸ் (Andrea Bartz), சார்லஸ் கிரேபர் (Charles Graeber), கிர்க் வாலஸ் ஜான்சன் (Kirk Wallace Johnson) தங்களுக்காக மட்டுமல்லாமல், தங்களுடைய படைப்புகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கருதிய பல எழுத்தாளர்களின் சார்பாகவும் “Claude” என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய ஆன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

எழுத்தாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு, ஆன்த்ரோபிக் பல லட்சக்கணக்கான பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி தனது செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், சில காலகட்டங்களில் அனுமதியற்ற இணைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்னூல்கள் ஒரு பெரிய டிஜிட்டல் தொகுப்பாக சேமிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “எங்கள் பல ஆண்டுகால படைப்பாற்றலும் உழைப்பும் எங்களிடம் அனுமதி பெறாமல் ஒரு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.” என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

இந்த விவாதம் மேலும் தீவிரமானதற்குக் காரணம், உலகம் முழுவதும் சில புத்தக விற்பனையாளர்கள் மிகப்பெரிய அளவிலான புத்தக ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். “யார் இவ்வளவு புத்தகங்களை வாங்குகிறார்கள்? எதற்காக வாங்குகிறார்கள்? AI நிறுவனங்களுக்காகவா” என்ற கேள்விகள் எழுந்தன. ISBNdb, Zoom Books போன்ற நிறுவனங்களின் பெயர்களும் பேசப்பட்டு உறுதி செய்யப்படவில்லை. AI உலகிற்கு மிகப்பெரிய அளவில் தரமான தரவுகள் தேவைப்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து சட்டப்படி வாங்கி பயன்படுத்திய புத்தகங்களை ஏன் தூக்கி ஏறிய வேண்டும்? அவற்றைப் பாதுகாக்க வேண்டாமா? நூலகங்களில் வைத்து அடுத்த தலைமுறைக்காக காக்க வேண்டாமா? அவற்றை அழிப்பதில் என்ன அர்த்தம்? இது அறிவுக்கு எதிரான செயலா? அல்லது நம்மால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு புதிய உலகின் தொடக்கமா? என்று பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் ஆல்சப் (Judge William Alsup), 2025 ஜூன் 23 அன்று, இரண்டு விஷயங்களைத் தனித்தனியாகப் பார்த்து முக்கியமான தீர்ப்பை வழங்கினார்.

1. சட்டப்படி வாங்கப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்துவது

“ஒரு நிறுவனம் சட்டப்படி புத்தகங்களை வாங்கி, அவற்றை உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்காகப் பயன்படுத்துவது Fair Use (நியாயமான பயன்பாடு) என்ற அமெரிக்கப் பதிப்புரிமை விதிக்குள் வருவதால் சட்டப்படி பெற்ற புத்தகங்களை AI கற்றலுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம் அல்ல” என்று ஆன்த்ரோபிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இது செயற்கை நுண்ணறிவு துறைக்குக் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்பட்டது.


2. திருட்டு மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள்

அனுமதியற்ற மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களைச் சேகரித்தது “பதிப்புரிமை மீறல்” என்று இந்த முக்கியமான விஷயத்தில் நீதிமன்றம் எழுத்தாளர்களின் தரப்பை ஏற்றுக்கொண்டது. ஒரு தொழில்நுட்ப நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், திருட்டுத்தனமாகப் பெறப்பட்ட படைப்புகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதனால் இந்த வழக்கில், சட்டப்படி பெறப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற முக்கியமான சட்ட ஆதரவு ஆன்த்ரோபிக்குக் கிடைத்த வெற்றியாகவும் அனுமதியற்ற முறையில் பெறப்பட்ட புத்தகங்களைப் பயன்படுத்துவது பதிப்புரிமை மீறல் என்ற அங்கீகாரம் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. “AI பயிற்சியின் நோக்கம் சட்டபூர்வமாக இருக்கலாம். ஆனால் தரவைப் பெறும் வழியும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும்” என்பதே இந்த வழக்கின் தீர்ப்பாக அமைந்தது.

பதிப்புரிமை தொடர்பான பிரச்சினைகளை நீண்ட நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துச் செல்லாமல் ஆன்த்ரோபிக் சமரசத் தீர்வை ஏற்றுக்கொண்டது. சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. இந்தத் தொகை பதிப்புரிமை வழக்குகளில் உலகின் மிகப்பெரிய சமரசத் தொகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

‘ஆன்த்ரோபிக் வழக்கு’ ஒரு நிறுவனத்தின் பிரச்சினை மட்டும் அல்ல. “மனித அறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் செயற்கை நுண்ணறிவின் பலனில், அந்த அறிவை உருவாக்கிய மனிதர்களின் பங்கு என்ன” என்ற முக்கியமான கேள்வியையும் முன்வைத்தது.

AI, மனித அறிவின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்த வளர்ச்சி நியாயமானதாக இருக்க வேண்டுமானால், எழுத்தாளர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும். அறிவின் மூலங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனித உரிமைக்கும் சமநிலை தேவை என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்த்தியுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பப் புரட்சியும் ஒரு புதிய வாய்ப்பை மட்டுமல்ல, ஒரு புதிய பொறுப்பையும் மனிதகுலத்தின் தோள்களில் சுமத்துகிறது. தற்பொழுது செயற்கை நுண்ணறிவின் பார்வையில் புத்தகங்கள் வெறும் தரவுகளா என்ற ஆழமான கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு புரட்சியும் பயத்தையும் நம்பிக்கையையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது. எனவே, “செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?” என்பது அல்ல. அதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியது மனிதர்கள்தான். 

அறிவுக்கு வழிகாட்டியாக இருப்பது அறம். எதைச் செய்ய முடியும் என்று அறிவு சொல்லும். எதைச் செய்ய வேண்டும் என்று அறம் சொல்லும். அது சட்டத்தின் பொறுப்பு. அரசுகளின், தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு. அதைவிட முக்கியமாக, அறத்துடன் செயல்படவேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புத்தகங்கள் மனிதர்களின் ஆசிரியர்களாக, நம் முன்னோர்களின் குரல்களாக, நம் தவறுகளை நினைவூட்டி, வெற்றிகளைப் பதிவு செய்து, கனவுகளுக்கு இறக்கைகள் கொடுத்தன. இன்று, அதே புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய மாணவனுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்தை நாம் பயத்தோடு பார்க்க வேண்டியதில்லை. கண்மூடித்தனமான உற்சாகத்தோடும் பார்க்கக் கூடாது. மாறாக, பொறுப்புணர்வுடன், சமநிலையுடன், தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும்.

ஏனெனில், புத்தகங்கள் காகிதத்தால் மதிப்புப் பெறவில்லை. அவற்றை எழுதிய மனிதர்களின் சிந்தனையால் மதிப்புப் பெற்றன.

அதேபோல, செயற்கை நுண்ணறிவு அதன் கணக்கிடும் திறனால் மட்டுமே உயர்ந்ததாக மாறாது. மனித அறிவையும், மனித மதிப்புகளையும், மனிதநேயத்தையும் மதிப்பதில் தான் அதன் உண்மையான மதிப்பு தீர்மானிக்கப்படும்.


Sunday, August 2, 2026

அமெரிக்காவின் புதிய தங்க வேட்டை- AI உருவாக்கும் புதிய கோடீஸ்வரர்கள்

'நிவிடியா' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜென்சென் ஹுவாங் "இன்னும் ஐந்து வருடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல மில்லியனர்கள் உருவாகும் வாய்ப்புகள் இருக்கிறது" என்று 2025ல் கூறியிருந்தார். அந்தக் கூற்று தற்பொழுது உண்மையாகி வருகிறது என்பதை விவரிக்கிறது சொல்வனத்தில் வெளியாகியுள்ள இந்தக்கட்டுரை.



கிராமப்புற அமெரிக்காவில் விவசாய நிலம் வைத்திருப்பது பெரும் செல்வத்திற்கான அறிகுறியாக இருந்ததொரு காலம் உண்டு. குறைந்து வரும் லாபம், அதிகரித்து வரும் செலவுகள், நிச்சயமற்ற எதிர்காலம் ஆகியவற்றால் பல விவசாயக் குடும்பங்கள் போராடி வரும் நிலையில், நிலங்கள் பெரும்பாலும் நிதி மதிப்பை விட உணர்வுப்பூர்வமான மதிப்பையே கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய தொழில்நுட்பப் புரட்சி அந்தக் கதையை மாற்றி எழுதப் போகிறது என்பது தான் சுவாரஸ்யமே!

செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் , தரவு மையங்களுக்கான தேவையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தூண்டியுள்ளது. இந்த புதிய AI சகாப்தத்தில், அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று இனி பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் எண்ணையோ அல்லது இயற்கை எரிவாயுவோ அல்ல. அது பூமிக்கு மேலே உள்ள நிலம்தான்.

இந்த மாற்றம் தான் முற்றிலும் புதிய கோடீஸ்வரர்கள் வர்க்கத்தை உருவாக்கி வருகிறது.

இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வடகிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள சேலம் டவுன்ஷிப்பில் அரங்கேறியுள்ள சம்பவம்தான். அங்கு பல தசாப்தங்களாக டேவிட்டும் மாரிலீ கிலிட்டியும் தங்களின் 89 ஏக்கர் பண்ணையில் கடுமையாக உழைத்து வந்தனர். பன்றிகளை வளர்ப்பது அவர்களுக்கு ஒருபோதும் பெரும் செல்வத்தைக் கொண்டுவரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் விவசாயத் தொழிலை விரிவுபடுத்த முயன்று கடனில் மூழ்கி, அண்டை வீட்டாரிடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொண்டனர். பல ஆண்டுகளாக நிதிப் போராட்டங்கள் அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தன.

பின்னர் எல்லாம் மாறிவிட்டது. எப்படி?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நில மேம்பாட்டாளர்கள் அந்தத் தம்பதியினரை அணுகி நம்பவே முடியாத ஒரு சலுகையை வழங்கினர். ஒரு சாதாரண விலைக்கு மட்டுமே விற்க முடியும் என்று அவர்கள் நினைத்திருந்த அவர்களின் பண்ணை திடீரென்று 22 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையதாக மாறியது.

அதற்குக் காரணம் விவசாயம் அல்ல.

அவர்களுடைய சொத்து ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையத்திற்கு மிகச்சரியான இடமாக மாறியிருந்ததே காரணமாகும்.

கிலிட்டி குடும்பத்தினர் மட்டும் இல்லை. சேலம் டவுன்ஷிப்பில் இருக்கும் 96 குடும்பங்களும் கூட்டாகச் சேர்ந்து முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனுக்குச் சொந்தமான தரவு மைய மேம்பாட்டாளரான QTS-க்கு சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளன. இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு வியக்கத்தக்க வகையில் 586 மில்லியன் டாலரை எட்டியது. சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் சுமார் 5.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. அதாவது, ஒரு ஏக்கர் நிலம் தோராயமாக 330,000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனைக்கு முன்பு இந்தக் குடும்பங்களில் பலர் சாதாரண வேலைகளைச் செய்பவர்களாகவும், சிலர் நடமாடும் வீடுகளில் வசிப்பவர்களாகவும், மற்றவர்கள் சிறு வணிகங்களை நடத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். ஒரே இரவில் தங்கள் நிலங்களை விற்று அமெரிக்காவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கோடீஸ்வரர்கள் வரிசையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலம் ஏன் திடீரென்று இவ்வளவு மதிப்புமிக்கதாக மாறியது?

செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய கணினி ஆற்றல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியும் பில்லியன்கள் அல்லது டிரில்லியன்கள் அளவிலான தகவல்களைச் செயலாக்குகிறது. இதற்கு 24 மணி நேரமும் இயங்கும் ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த கணினி சேவையகங்கள் தேவைப்படுகின்றன. இந்த சேவையகங்களுக்கு மூன்று முக்கிய வளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான தரவு மையங்கள் தேவை. அவை, தொடர்ச்சியான மின்சாரமும், அதிக திறன் கொண்ட மின் பரிமாற்ற கம்பிகளும், வேகமான இணைய இணைப்பும் ஆகும்.

பென்சில்வேனியாவில் உள்ள அந்த நிலங்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பிற்கு அருகில் அமைந்திருந்தன. வேறு இடங்களில் புதிய மின்சார உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக இருந்திருக்கும். இந்தப் பண்ணைகளுக்கு ஏற்கனவே தாராளமான மின்சாரம் கிடைத்ததால் அவற்றின் மதிப்பு வியத்தகு முறையில் அதிகரித்தது.

இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில், ஒரு காலத்தில் எண்ணெய்க்கான அணுகல் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்ததோ அதே அளவிற்கு மின்சாரத்திற்கான அணுகலும் மதிப்புமிக்கதாக இருக்கக்கூடும்.

அதுவே அமெரிக்கக் கனவின் ஒரு புதிய வடிவமாக உருவெடுத்துள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோர், வால்ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களைப் போலல்லாமல், இந்தப் புதிய கோடீஸ்வரர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் ஒருபோதும் பணியாற்றியதில்லை. அவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிலத்தை வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்!

எதிர்பாராமல் கிடைத்த பணத்தில் சிலர் கனவு இல்லங்களைக் கட்டுகிறார்கள். சிலர் உள்ளூர் வணிகங்களை வாங்குகிறார்கள். தங்கள் சமூகங்களில் முதலீடு செய்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். எதிர்கால சந்ததியினருக்கு நிதி நிலைத்தன்மையை உறுதி செய்கிறார்கள். கிலிட்டி குடும்பத்தின் மகள்களில் ஒருவர் ஒரு உள்ளூர் மதுபான ஆலையை வாங்கியுள்ளார். மற்றொருவரான மருத்துவர் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவத் திட்டமிட்டுள்ளார். எதிர்பாராத நில விற்பனை, இப்போது புதிய வணிகங்கள், தொண்டுப் பணிகள், குடும்பக் கனவுகளுக்கு நிதியுதவி அளித்துள்ளது.

பென்சில்வேனியாவின் கதை தனித்துவமானது அல்ல.

அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்புக்காக நிலத்தைப் பெறுவதற்கு கட்டுமான நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. வர்ஜீனியா, டெக்சாஸ், அரிசோனா, ஜார்ஜியா, ஓஹையோ, பென்சில்வேனியா போன்ற மாநிலங்கள் தரவு மையக் கட்டுமானத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததாகத் தோன்றிய திட்டங்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்த வளர்ச்சி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளுக்கு நிலையான வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். மின்சார வல்லுநர்கள், பொறியாளர்கள், HVAC நிபுணர்கள், எஃகு, கான்கிரீட் உற்பத்தியாளர்கள், உபகரணங்களை நிறுவுபவர்கள் என அனைவரும் இந்த விரைவான விரிவாக்கத்தால் பயனடைந்து வருகின்றனர். முக்கிய மின் உள்கட்டமைப்புகளுக்கு அருகிலுள்ள நிலங்களின் மதிப்பும் வியத்தகு முறையில் உயர்ந்து வருகிறது. உள்ளூர் பொருளாதாரங்களும் மாறி வருகின்றன.

சிலருடைய வாழ்க்கையை நல்ல விதமாகப் புரட்டிப்போட்டிருந்தாலும் செயற்கை நுண்ணறிவின் இந்த வளர்ச்சியை அனைவரும் வரவேற்பதில்லை. தரவு மையங்களின் இந்த விரைவான விரிவாக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதிகரித்த மின்சார நுகர்வு, நீர் பயன்பாடு, இரைச்சல், கிராமப்புற சமூகங்களின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, குடியிருப்பாளர்கள் பெரிய செயற்கை நுண்ணறிவு மையங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். கணினி சர்வர்கள் நிரம்பிய பிரம்மாண்டமான தொழிற்சாலைக் கட்டிடங்களின் வரிசைகளுக்குக் கீழே, அமைதியான கிராமப்புற நிலப்பரப்புகள் படிப்படியாக மறைந்துவிடும் என்று சிலர் கவலைப்படுவதிலும் நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒரு துறையின் வளர்ச்சியால் வேறு சில துறைகளில் பாதிப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க இயலாது தான். ஒரு சில நில உரிமையாளர்கள் செல்வந்தர்களாகும் அதே வேளையில், அருகிலுள்ள சமூகங்கள், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்புச் செலவுகளைச் சுமக்க நேரிடலாம் என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

இருப்பினும், புதிய வேலை வாய்ப்புகள், அதிகரித்த வரி வருவாய், பல்லாண்டுகளாகப் பொருளாதார ரீதியாகப் போராடி வரும் பகுதிகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் வருமானம் வருவதையும் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சேலம் டவுன்ஷிப்பில் மட்டும் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம் அதன் 12 தரவு மையக் கட்டிடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கட்டுமான வேலைகளையும், சுமார் 600 நிரந்தரப் பணியிடங்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் ஒவ்வொரு தலைமுறையும் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

1848 முதல் 1855 வரை நடந்த தங்க வேட்டையில் ஈர்க்கப்பட்டு உலகெங்கிலும் இருந்து 300,000-க்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தனர். ஒரே இரவில் நகரங்கள் தோன்றி வங்கிகள் செழித்தன. தொடர்வண்டிப் பாதைகள் விரிவடைந்தன. கலிஃபோர்னியாவின் பொருளாதாரம் நிரந்தரமாக மாற்றப்பட்டது.

1859-ல் ‘எட்வின் டிரேக்’ பென்சில்வேனியாவில் வெற்றிகரமாக எண்ணெய்க்காகத் துளையிட்டபோது, பெட்ரோலியம் என்பது தானியங்கி வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், நவீன நாகரிகத்திற்கு ஆற்றல் அளிக்கும் எரிபொருளாக மாறும் என்று மிகச் சிலரே கற்பனை செய்திருந்தனர். ஆனால் எண்ணெய் வரலாற்றில் மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றானது மட்டுமல்ல அமெரிக்காவை ஒரு தொழில்துறை வல்லரசாகவும் அது நிலைநிறுத்தியது.

1990களில் மின்சாரமும் தொழில்மயமாக்கலும் அமெரிக்காவை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றன.

2000 வருடம் நடந்த இணையப் புரட்சி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மாற்றியது. அமேசான், கூகிள், ஈபே, பின்னர் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தகவல்தொடர்பு, வர்த்தகம், கல்வி, பொழுதுபோக்கை மாற்றியமைத்தன. மென்பொருள், பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்துசக்தியாக உருவெடுத்து, கோடீஸ்வரர்களையும் உலகின் பெரும் செல்வந்தர்களையும் தொழில்முனைவோர்களில் பலரையும் உருவாக்கியது.

2022 முதல் தற்பொழுது வரை ஏற்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியால் ஒரே இரவில் கணினிகளால் மொழியைப் புரிந்துகொள்ளவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், படங்களை உருவாக்கவும், மென்பொருள் எழுதவும், அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவவும் முடியும் என்பதை மில்லியன்கணக்கான மக்கள் உணர்ந்தனர். மின்சாரம், இணையத்தைப் போலவே செயற்கை நுண்ணறிவும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை அரசாங்கங்களும் வணிக நிறுவனங்களும் உடனடியாக உணர்ந்தன.

போட்டி தொடங்கியது

அமெரிக்கா மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க வேட்டையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்தமுறை அந்த மதிப்புமிக்க வளம் பூமிக்கடியில் இருக்கும் புதையல் அல்ல. மாறாக, செயற்கை நுண்ணறிவை இயக்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பைத் தாங்கக்கூடிய நிலமாகும்.

அதனால் முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் நாடு முழுவதும் தாராளமான மின்சாரம், வலுவான மின் கட்டமைப்பு, ஃபைபர்-ஆப்டிக் வலையமைப்புகள், சாதகமான ஒழுங்குமுறைகள் உள்ள இடங்களைத் தேடுகின்றனர். இந்த நன்மைகளைக் கொண்ட சமூகங்கள் அடுத்த எதிர்பாராத செல்வ மையங்களாக மாறக்கூடும்.

இனி எதிர்காலம் தரவுகளுக்கே சொந்தம். செயற்கை நுண்ணறிவு, மென்பொருளை விட மிக அதிகமாக மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அது ரியல் எஸ்டேட் சந்தைகள், எரிசக்தி உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு முறைகள், உள்ளூர் பொருளாதாரங்களை மறுவடிவமைத்து வருகிறது. வெகு சிலரே எதிர்பார்த்த இடங்களில் அது வாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் மூலம் தாங்கள் செல்வந்தர்களாவோம் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத மக்களுக்கு அவர்களின் நிலங்கள் மூலமாக அந்த வாய்ப்பை அளிக்கிறது. மேலும் அளிக்கப் போகிறது.

ஒவ்வொரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியும் வெற்றியாளர்களையும், சவால்களையும், கடினமான தேர்வுகளையும் உருவாக்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு விஷயம் மேலும் மேலும் தெளிவாகிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், “தரவு”, உலகின் புதிய இயற்கை வளமாக மாறியுள்ளது. அதைத் தாங்கும் நிலம் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான புரட்சி.

அடுத்த தொழிற்புரட்சியாக மாறும் என்று பலர் நம்புவதற்கு தற்பொழுது அமெரிக்கா பௌதீக அடித்தளத்தை அமைத்து வருகிறது.

நெடுஞ்சாலைகள் போக்குவரத்தை மாற்றியமைத்தது போலவும், மின்சாரம் உற்பத்தியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு தொழில்துறையையும் மாற்றியமைக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவுப் புரட்சி இன்னும் அதன் ஆரம்ப அத்தியாயங்களில்தான் உள்ளது. அடுத்த கோடீஸ்வரர்கள் மென்பொருள் பொறியாளர்களாகவோ, சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோராகவோ இல்லாமல் சரியான தருணத்தில், சரியான நிலத்தில் நிற்கும் சாதாரண மனிதர்களாகக் கூட இருக்கலாம்.

செயற்கை நுண்ணறிவுப் போட்டி என்பது இனி வெறும் மேம்பட்ட மென்பொருளை உருவாக்குவது மட்டுமல்ல. அது கணினி ஆற்றலுக்கான ஒரு உலகளாவிய போட்டியாக மாறியுள்ளது. மிக வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் நாடுகள், அடுத்த தலைமுறை அறிவியல் ஆராய்ச்சி, சுகாதாரம், உற்பத்தி, கல்வி, வேளாண்மை, நிதி, உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, தேசியப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கலாம்.

தொழிற்புரட்சி பத்தொன்பதாம் நூற்றாண்டை மறுவடிவமைத்தது போலவும், இணையம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு இருபத்தியோராம் நூற்றாண்டை வரையறுக்கக்கூடும்.

எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு அடித்தளமாக அமையும் என்று நம்புவதால், அமெரிக்கா நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. சீனா, யுனைடெட் கிங்டம், ஃபிரான்ஸ், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளும் செயற்கை நுண்ணறிவின் தலைமைத்துவம் பல்லாண்டுகளுக்கு உலகளாவிய போட்டித்தன்மையை வடிவமைக்கக்கூடும் என்பதை உணர்ந்து முதலீடுகளைச் செய்து வருகின்றன.

ஏனெனில் யார் வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்குகிறார்களோ, அவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் தொழில்நுட்ப நன்மைகளையும் பெற்று உலகை ஆளக்கூடும்.

வரலாறு மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது.

அந்த அத்தியாயத்தின் முதல் சில பக்கங்களில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Thursday, July 30, 2026

வரலாறு மறக்காத நட்பு: வாஷிங்டனும் லஃபாயெட்டும்

உலகம்  முழுவதும் பிரபலமான சுதந்திர தேவி சிலை (Statue of Liberty) , அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் எல்லிஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை ஃபிரெஞ்ச் அரசாங்கம் அமெரிக்கா தனது 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய பொழுது பரிசாக வழங்கியது வரலாறு. அவர்கள் ஏன் அமெரிக்காவிற்கு இந்தச் சிலையை வழங்க வேண்டும்? தேடிய பொழுது தான் தெரிந்தது அமெரிக்க சுதந்திரத்திற்கு ஃபிரான்சில் பிறந்த ஒரு மனிதரின் சிறப்பான பங்களிப்பும் அவரால் அந்நாட்டின் ஆதரவும் தான் அமெரிக்கர்கள் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற முடிந்துள்ளது. அந்த மனிதரின் பெயரில் அமெரிக்கா முழுவதும் நகரங்கள், தெருக்கள், பொது இடங்களைக் காண முடியும். அப்படி பார்க்க நேர்ந்தால் அதற்கான காரணம் இது தான் என்பதை இந்தக் கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

சொல்வனத்தில் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரையின் சுட்டி இதோ...



ஜூலை 4, 2026 அன்று தன்னுடைய 250வது சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது அமெரிக்கா. அதன் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் பலருக்கும் உடனடியாக நினைவிற்கு வருவது ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் போன்ற பெயர்கள் தான். அவர்கள் முன்னின்று நாட்டை முன்னேற்றியவர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் பலரும் அறிந்திராத ஒருவர், இந்நாட்டின் விடுதலைக்காகக் கடல் கடந்து, தன் சொந்த நாட்டு மன்னனை எதிர்த்து வெளிநாட்டுப் போரில் பங்கேற்று, அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

அவரது பெயர் ‘மார்கி ட லஃபாயெட்’.

செப்டம்பர் 6 ,1757 ஆம் ஆண்டு பிரான்சின் உயர்குடி குடும்பங்களில் பிறந்தவர். வசதிகள் நிறைந்த சூழலில் வளர்ந்தவர். அவரால் ஒரு வசதியான ராணுவ வாழ்க்கையை எளிதாக அனுபவித்திருக்க முடியும். ஆனால் ஒரு பதின்பருவ இளைஞனாக, சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை ஆதரித்த அறிவொளி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

அட்லாண்டிக் கடலுக்கு அப்பால், பிரிட்டனின் பதின்மூன்று அமெரிக்கக் காலனிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடங்கியிருந்த நேரம். அவர்கள் அரசியல் சுதந்திரத்தை மட்டுமல்ல, தங்களைத் தாங்களே ஆளும் உரிமையையும் கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். ஃபிரான்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த மோதலில் நுழையவில்லை என்றாலும் 19 வயதான லஃபாயெட், அமெரிக்காவின் நிலைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டிய கொள்கைகளைக் கொண்டிருப்பதாக நம்பினார்.

பதினாறாம் லூயி மன்னரின் கட்டளைகளைப் புறக்கணித்து, தனது சொந்தப் பணத்தில் ரகசியமாக ஒரு கப்பலை வாங்கி 1777ல் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். தனது செல்வம், ராணுவ வாழ்க்கை, உயிரைக்கூட இழக்க நேரிடும் என்பதை முழுமையாக அறிந்திருந்தும் துணிந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

அமெரிக்கப் புரட்சி ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்த நேரத்தில் லஃபாயெட் ஃப்லடெல்பியாவிற்கு வந்து சேர்ந்தார். கான்டினென்டல் ராணுவத்திடம் தளவாடங்களும், பயிற்சியும், அனுபவமும் வாய்ந்த அதிகாரிகளும் பற்றாக்குறையாக இருந்தனர். லஃபாயெட் சம்பளம் எதுவும் கேட்காமல் தனது சேவைகளை வழங்க முன்வந்தார். அவரது அர்ப்பணிப்பையும் ராணுவத் திறனையும் அங்கீகரித்த கான்டினென்டல் காங்கிரஸ், அவரது வயதையும் பொருட்படுத்தாமல் அவரை மேஜர் ஜெனரலாக நியமித்தது.

அதன் பிறகு விரைவில் அவர் ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டனைச் சந்தித்தார்.

அவ்விருவருக்கும் இடையிலான உறவு, அமெரிக்கப் புரட்சியின் வரையறுக்கும் நட்புகளில் ஒன்றாக மாறியது. வாஷிங்டன் அவருக்கு ஒரு வழிகாட்டியாகவும் தந்தை போன்றவராகவும் ஆனார். லஃபாயெட்டும் தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த விசுவாசத்துடனும் வாஷிங்டனுக்குக் கிடைக்காத மகனாகவும் ஆனார் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

செப்டம்பர் 1777ல் நடந்த பிராண்டிவைன் போரின்போது, அமெரிக்கப் படைகளின் பின்வாங்கலை ஒழுங்கமைக்க உதவிய வேளையில் லஃபாயெட் காயமடைந்தார். இருந்தும், போர்க்களத்தை உடனடியாக கைவிடாமல், தனது சக வீரர்கள் பாதுகாப்பான இடத்தை அடையும் வரை அவர்களுக்குத் தொடர்ந்து உதவினார். அவரது வீரச்செயல், அமெரிக்கப் படைகள் மற்றும் வாஷிங்டன் ஆகிய இருவரின் மரியாதையையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

மேலும், வேலி ஃபோர்ஜில் நிலவிய கடுமையான குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குளிரில் பசி,நோயுடனும் போதுமான ஆடைகள் இன்றியும் தவித்த இருண்ட காலத்தில் அவர்களுடனே தங்கி இருந்தார்.

1779ல் ஃபிரான்சுக்குத் திரும்பி, போராடிக் கொண்டிருந்த அமெரிக்கப் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக ராணுவத்தையும் கடற்படையையும் விரிவுபடுத்துமாறு ஃபிரெஞ்சு அரசாங்கத்தை வெற்றிகரமாகச் சம்மதிக்க வைத்தார். அரசும் சம்மதித்து வீரர்களையும், கடற்படைக் கப்பல்களையும், ஆயுதங்களையும் பொருட்களையும் நிதி உதவியையும் அனுப்பியது.

இந்த ஆதரவுதான் போரின் போக்கை வியத்தகு முறையில் மாற்றி, அமெரிக்கச் சுதந்திரத்தைப் பெறுவதில் ஃபிரெஞ்சு அரசு காரணியாக அமைந்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

1781ல் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிய லஃபாயெட், வர்ஜீனியாவில் ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்த உதவினார். செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 19 வரை நடந்த யார்க்டவுன் முற்றுகை, அமெரிக்கப் புரட்சிப் போரின் கடைசி முக்கியத் தரைப்படைச் சண்டையாகக் கருதப்படுகிறது. இது ஜெனரல் சார்ல்ஸ் கார்ன்வாலிஸின் கீழ் இருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக ஃப்ராங்கோ-அமெரிக்கப் படைகள் பெற்ற மிக முக்கியமான வெற்றியாகும்.

தொடர்ந்து பல காலங்கள் நீடித்த போரினால் 1781ஆம் ஆண்டளவில் இரு தரப்பினரும் சோர்வடைந்திருந்தனர். அமெரிக்கா, ஐரோப்பா என இரண்டு முனைகளில் போரிட்டுக் கொண்டிருந்த பிரிட்டிஷார், தங்கள் துருப்புக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் சிரமப்பட்டனர். ஃபிரெஞ்சு அரசின் உதவி இருந்தபோதிலும், அமெரிக்கர்கள் உணவுப் பற்றாக்குறையையும் குறைந்த மன உறுதியையும் எதிர்கொண்டனர். ‘சரட்டோகா’ போர்களுக்குப் பிறகு, 1778ல் ஃப்ரான்ஸ் அமெரிக்கர்களுடன் முறையாகக் கூட்டணி அமைத்தது.

யார்க்டவுன் முற்றுகையின்போது, ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையிலான அமெரிக்கப் படைகள், ‘காம்ட ட ரோஷாம்போ’ தலைமையிலான ஃபிரெஞ்சு படைகளுடன் இணைந்தன. அதே நேரத்தில், அட்மிரல் ‘ட கிராஸ்’-ன் தலைமையிலான சக்திவாய்ந்த ஃபிரெஞ்சு கடற்படை, பிரிட்டிஷ் படைகள் கடல் வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுத்தது.

நிலத்திலும் கடலிலும் சூழப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் தளபதி சார்ல்ஸ் கார்ன்வாலிஸ் அக்டோபர் 19, 1781 அன்று சரணடைந்தார்.

அதைத் தொடர்ந்து 1783ல் பாரிஸ் உடன்படிக்கையுடன் போர் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தபோதிலும், யார்க்டவுன் பெரும் சண்டைகளைத் திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்கச் சுதந்திரத்தைப் பிரிட்டன் அங்கீகரிப்பதற்கு வழி வகுத்தது.

நவீன வரலாற்றில் வெற்றிகரமான சர்வதேச ராணுவ ஒத்துழைப்பின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக ‘யார்க்டவுன் போர்’ விளங்குகிறது.

அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, லஃபாயெட் ஃப்ரான்சுக்குத் திரும்பினார். அங்கு அவர் அரசியலமைப்பு அரசாங்கத்தை ஆதரித்து ஃபிரெஞ்சு புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில் ஈடுபட்டார். தனிமனித உரிமைகளுக்காகப் போராடினார். மத சகிப்புத்தன்மையையும் அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படிப்படியான விடுதலையையும் ஊக்குவித்தார். தன்னிச்சையான சிறைவாசத்தையும் எதிர்த்தார்.

இறுதியில், புரட்சிகர ஃபிரான்சின் அரசியல் கொந்தளிப்பு, அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இது அந்தக் காலகட்ட அரசியல் சீர்திருத்தத்தின் சிக்கலான, ஆபத்தான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஃபிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு 1824ல் ஐந்தாவது அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோ, லஃபாயெட்டை மீண்டும் ஒருமுறை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அழைத்தார்.

அப்பொழுது லஃபாயெட்டிற்கு கிடைத்த வரவேற்பு அசாதாரணமானதாக இருந்தது. 13 மாதங்களுக்கு, அமெரிக்காவை உருவாக்கியிருந்த 24 மாநிலங்கள் வழியாக அவர் பயணம் செய்தார். மாபெரும் மக்கள் கூட்டம் அணிவகுப்புகள், விழாக்கள், விருந்துகள் என பொதுக் கொண்டாட்டங்களுடன் அவரை வரவேற்றது. அமெரிக்கர்களுக்கு அவர் வெறும் ஒரு ஃபிரெஞ்சு தளபதியாக இருக்கவில்லை. அவர்களில் ஒருவராக ஆகிவிட்டார்.

1783ல் பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் பிரிட்டன் அமெரிக்காவை முறையாக அங்கீகரிப்பதற்கு முன்பு, பல ஆண்டுகள் கடுமையான போர்கள் தொடர்ந்தன. போர்க்களங்களில் லஃபாயெட்டின் தலைமைத்துவம், ஜார்ஜ் வாஷிங்டனுடனான அவரது நெருங்கிய கூட்டாண்மை, ஃபிரெஞ்சு அரசின் ஆதரவை வலுப்படுத்துவதில் அவர் பெற்ற வெற்றி ஆகியவை அமெரிக்கச் சுதந்திரக் கனவை நனவாக்க உதவின. அவரது சேவையைப் பாராட்டி, காங்கிரஸ் அவருக்குத் தாராளமான நிதி விருதையும் பொது நிலத்தையும் வழங்கி கௌரவித்தது. 2002ல் ஒரு சில தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புரிமையான கௌரவ அமெரிக்கக் குடியுரிமையையும் வழங்கிச் சிறப்பித்தது.

எனவே, இந்த 250வது ஆண்டு நிறைவு விழா, அமெரிக்க “Founding Fathers” மட்டுமல்லாமல், அவர்களின் வெற்றியைச் சாத்தியமாக்கிய சர்வதேச நட்புறவுகளையும் கூட்டணிகளையும் கொண்டாடுகிறது. அந்தக் கூட்டாளிகளில், ‘மார்கி டி லஃபாயெட்டை விட வேறு எந்த வெளிநாட்டு ஆளுமையும் இவ்வளவு அன்புடன் நினைவுகூரப்படவில்லை.

இன்று அமெரிக்கா முழுவதும், நகரங்கள், மாவட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், தெருக்கள், பொது நினைவுச்சின்னங்களில் லஃபாயெட்டின் பெயர் நிலைத்து நிற்கிறது.

அவரது கதை, தைரியம், லட்சியவாதம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் சின்னமாகத் தொடர்ந்து விளங்குகிறது. மிக முக்கியமாக, அமெரிக்காவின் பிறப்பு, சுதந்திரத்தை நாடிய அமெரிக்கர்களால் மட்டுமல்ல, அந்த லட்சியங்களுக்கு ஆதரவு தேவை என்று நம்பிய வெளிநாட்டு நண்பர்களாலும் வடிவமைக்கப்பட்டது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

மக்கள் தனிப்பட்ட வசதியை விட கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கும்போதும், நாடுகள் ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்படும்போதும் வரலாற்றின் மகத்தான தருணங்கள் எழுகின்றன. ஒரு இளம் ஃபிரெஞ்சு பிரபுவிலிருந்து அமெரிக்காவின் மிகவும் போற்றப்படும் நாயகர்களில் ஒருவராக உயர்ந்த அவருடைய பயணம், சுதந்திரம், நட்பு, பகிரப்பட்ட பொறுப்பு ஆகிய லட்சியங்கள் எல்லைகள் கடந்தும் நிற்க முடியும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.

சுதந்திரமான எதிர்காலம் குறித்த ஒரு தொலைநோக்குப் பார்வைக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்களாலேயே நீடித்த மாற்றம் பெரும்பாலும் சாத்தியமாகிறது. அந்த வகையில் அமெரிக்கச் சுதந்திரத்திற்கு வித்திட்ட ‘லஃபாயெட்’டின் வரலாற்றை அறிந்து கொள்வதும் மிக முக்கியமானதாகிறது.

Saturday, July 18, 2026

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துப் பதவிகளை வழங்குகிறார்கள். அமெரிக்காவில் இன்னும் ஒரு படி மேலே சென்று மிகப் பொறுப்பான பதவிகளுக்கு சிறு நேர்முகத்தேர்வை வைத்து விடுவார்கள். முடிவில் அவர்கள் தகுதியானவர்கள் என்று அந்த மன்றம் தீர்ப்பு வழங்கும். சமயங்களில் இது கண்துடைப்பு நாடகம் போல தோன்றினாலும் சில தேர்ந்தெடுத்த நபர்கள் நேர்முகத்தேர்வின் போதே எதிர்ப்புகள் கிளம்பியவுடன்,  மேலும் கேவலப்படுத்துமுன் பதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கிளம்பிவிடுவார்கள். இவ்வாறாக பார்த்து, பார்த்து  ட்ரம்ப் தேர்ந்தெடுத்தவர்களை அவரே "யூ ஆர் ஃபயர்ட் " என்று சொல்லாமல் சொல்லி சிலரும், சொல்வதற்கு முன் சிலரும் நைசாக அவரது ஆட்சியில் இருந்து விலகி விட்டார்கள். அதுவும் நாடு பொருளாதார தேக்கத்தில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் நேரத்தில். சுங்கவரி என்று உலகநாடுகளுடன் விரோதித்துக் கொண்டிருக்கும் வேளையில். அமைதி பேச்சு வார்த்தை பாகிஸ்தான் மூலமாக நடந்து, முடிந்து, நடந்து என்று நடையாய் நடக்கும் காலத்தில். யார் யாரெல்லாம் பெரும் பதவியிலிருந்து தற்பொழுது விலகி விட்டார்கள் என்பதை விவரிக்கும் கட்டுரை👇👇👇
 
ஏதோ ஒட்டுப் போட்டோமோ அடுத்த வேலையைப் பார்ப்போமா என்றிருப்பதை விட, நாடு எந்த வழியில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியது ஒட்டு போட்ட மக்களின் கடமையும் கூட.



இன்று வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வாஷிங்டனைத் தாண்டி வெகுதூரம் எதிரொலிப்பதைக் கண்கூடாக பார்க்கமுடிகிறது. ஆசியாவின் நிதிச் சந்தைகள், ஐரோப்பாவின் பாதுகாப்பு கணக்கீடுகள், சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் குடியேற்றக் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள தூதரக உறவுகள் ஆகிய அனைத்திலும் இதன் செல்வாக்கு நீள்கிறது. உலகளாவிய கவனம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈரான் போர் கொள்கைகள் மீது குவிந்திருக்கும் வேளையில், திரைக்குப் பின்னால் மற்றொரு முக்கியமான கதையும் அரங்கேறி வருகிறது. ஆம். அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தப் பொறுப்பேற்றிருந்த மூத்த அதிகாரிகளின் தொடர்ச்சியான விலகல் தான் அது. சிலர் விருப்பத்தின் பேரிலும், மற்றவர்கள் அழுத்தத்தின் பேரிலும், இன்னும் சிலர் கொள்கை, நிர்வாகம், அரசியல் தொடர்பான மோதல்களுக்குப் பிறகு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெளியேற்றங்கள், கொள்கைகளைப் போலவே நிர்வாகத்தின் ஆட்சிப் பாணியைப் பற்றியும் பல விஷயங்களை அம்பலப்படுத்துகின்றன.

ஜனவரி 2025 அன்று அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப், 
எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்திச் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைத்தல், கூட்டாட்சி அரசாங்கத்தை அதிக செயல்திறனுக்காக மறுவடிவமைத்தல், அமெரிக்க உற்பத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் விரிவுபடுத்துதல், “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” போன்ற கொள்கைகளை முன்மொழிந்தார்.

2017 ட்ரம்ப் அரசு நிர்வாகத்தில் பல மூத்த அதிகாரிகள் பாரம்பரிய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்ததற்கு மாறாக, 2025-ல் அவர் நியமித்தவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகவோ அல்லது அவரது கொள்கைகளை வெளிப்படையாக ஆதரித்தவர்களாகவோ இருந்தனர். அவர்களும் ட்ரம்ப்பிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தாலும் ஒருகட்டத்தில் சிலர் மட்டும் அதிகாரத்தில் இருந்து விலகிக்கொண்டனர் அல்லது விலக்கப்பட்டனர்.

அவ்வாறு முதலில் விலகியது உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த ‘கிறிஸ்டி நோம்’. தனது குடியேற்றக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தக்கூடிய ஒருவரை விரும்பிய ட்ரம்ப் இவருடைய பெயரை 2024, நவம்பரில் பரிந்துரை செய்ய, ஜனவரி 2025ல் அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தெற்கு டகோட்டாவின் ஆளுநராகவும் காங்கிரசிலும் பணியாற்றியுள்ளார். ஜனநாயக அரசின் கோவிட்-19 கட்டுப்பாடுகளை எதிர்த்ததன் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர். ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளை வலுவாக ஆதரித்து அவருடைய விசுவாசிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பழமைவாத வாக்காளர்களிடையே பிரபலமானவர். திறமையான பேச்சாளர். கடுமையான எல்லை அமலாக்கத்தை ஆதரித்தவர். வலுவான நிர்வாக அனுபவம் மிக்கவர் என்பதாலேயே இவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளராகப் பரிந்துரைத்து பணியிலும் அமர்த்தியது ட்ரம்ப் நிர்வாகம்.

கிறிஸ்டி நோம் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை. மார்ச் 5, 2026 அன்று, அதிபர் ட்ரம்ப் அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, ‘ஷீல்ட் ஆஃப் தி அமெரிக்காஸ்’ அமைப்பின் சிறப்புத் தூதராக நியமித்தார். அதே நேரத்தில், எல்லைப் பாதுகாப்பில் அவரது பணிகளைப் பகிரங்கமாகப் பாராட்டினார். வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கையை “மறுபணியமர்த்தல்” என்று விவரித்தாலும், அவரது விலகலுக்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாகச் செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) தலைமைப் பொறுப்பில் அவரது செயல்பாடுகள் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. DHS-க்கு 70 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு ஜெட், குடியேற்றத் தடுப்புக்காவல் திறனை விரிவுபடுத்துவதற்காக சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பில் 11 கிடங்குகளை வாங்கும் அவரது முக்கிய முன்னெடுப்பும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மற்றொரு பெரிய சர்ச்சை, ஆவணமற்ற குடியேறிகளைத் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஊக்குவிக்கும் வகையில் மக்களின் வரிப்பணத்தில் DHS நடத்திய 220 மில்லியன் டாலர் மதிப்பிலான விளம்பரப் பரப்புரையைச் சார்ந்தது. அந்த விளம்பரங்களில் நோம் முக்கியமாக இடம்பெற்றிருந்ததும் ஒரு நாடாளுமன்ற விசாரணையின் போது, ட்ரம்ப் இந்தப் பிரச்சாரத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறி, பின்னர் ட்ரம்ப் தனக்கு அதுபற்றித் தெரியாது என்று மறுத்ததால், பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சியினரிடையேயும் குழப்பம் ஏற்பட்டது.

மேலும், மினியாபோலிஸில் நடந்த ஒரு கூட்டாட்சி குடியேற்ற நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கக் குடிமக்களை விசாரணைகள் முடிவடைவதற்கு முன்பே “உள்நாட்டுப் பயங்கரவாதிகள்” என்று நோம் கூறியதால் இரு கட்சியினரிடமிருந்தும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அதன் தொடர்பில் காங்கிரஸில் கடுமையான கேள்விகளையும் எதிர்கொண்டார்.

அவருடைய விலையுயர்ந்த கொள்முதல் முடிவுகள், முன்மொழியப்பட்ட குடியேற்றத் தடுப்புக்காவல் திட்டங்கள் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) செலவினங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப, துறைக்குள் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள், தொடர்ச்சியான சர்ச்சைகளால் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் மிகுந்த விரக்தியடைந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.

எல்லைப் பாதுகாப்பில் நோமின் முயற்சிகளை ட்ரம்ப் தொடர்ந்து பகிரங்கமாகப் பாராட்டிய போதிலும், மேற்கூறிய பிரச்சினைகள் அனைத்தும் சேர்ந்து அவரைப் பதவியிலிருந்து நீக்கும் முடிவுக்குக் காரணமாக அமைந்தன.

அவருக்குப் பதிலாக மார்க்வேய்ன் முல்லின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த விக்கெட், ட்ரம்ப்பின் மிக நெருங்கிய சட்ட, அரசியல் கூட்டாளிகளில் ஒருவரும் நம்பிக்கைக்குரியவருமான பாம் போண்டி (Pam Bondi). ஃப்ளோரிடாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல். பல்லாண்டு கால வழக்கறிஞர் அனுபவம் கொண்டவர். ட்ரம்ப்பின் முதல் பதவி நீக்க விசாரணையின்போது அவருக்காக வாதாடியவர். விரிவான சட்ட அனுபவம், திறமையான நீதிமன்ற வாதாடல் திறன், விசுவாசமான ஆதரவாளர் என்று நீளும் பட்டியல். இது போதாதா?

தனது சட்டம்-ஒழுங்கு செயல்திட்டத்தை ஆக்ரோஷமாகப் பின்பற்றும் ஒரு அட்டர்னி ஜெனரலை விரும்பிய அதிபர் இவரைப் பரிந்துரைக்க, பிப்ரவரி 2025-ல் பதவி உறுதியானது. சுமார் 14 மாதங்கள் அமெரிக்க அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய பிறகு ட்ரம்ப் அவரை அப்பதவியிலிருந்து நீக்கினார். அவரது பணிநீக்கத்திற்கான விரிவான காரணத்தை வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை என்றாலும் அவரது பதவிக்காலத்தைச் சுற்றிப் பல சர்ச்சைகள் நிலவின.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளை நீதித்துறை கையாண்ட விதம் தொடர்பானதே மிகப்பெரிய சர்ச்சையாக இருந்தது. இந்த வழக்கை நீதித்துறை ஒட்டுமொத்தமாகக் கையாண்ட விதத்தை நியாயப்படுத்திய அதே வேளையில், ஆவணங்களை வெளியிடுவதில் தவறுகள் நடந்ததை அவரே ஒப்புக்கொண்டார். தாமதங்கள், திருத்தப் பிழைகள், வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்பாக ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் சில குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார். மேலும், ட்ரம்ப்பின் அரசியல் போட்டியாளர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் உட்பட, நீதித்துறையில் அதிகரித்து வரும் அரசியல் மயமாக்கலுக்காகவும் போண்டி விமர்சிக்கப்பட்டார். அரசியல் நோக்கங்களுக்காகத் தான் எதிர்பார்த்த சில சட்ட மாறுதல்களை போண்டி மூலம் நீதித்துறையில் கொண்டுவர இயலாததால் ட்ரம்ப் விரக்தியடைந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.

எப்ஸ்டீன் கோப்புகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், நீதித்துறையின் சுதந்திரம் குறித்த விமர்சனங்கள், அவரது செயல்திறன் மீதான அதிருப்தி ஆகியவை அனைத்தும் சேர்ந்து போண்டியை அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து மாற்றுவதற்கான காரணமாக அமைந்தன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2026-ல் பதவி விலகினார் (விலக்கப்பட்டார்?)அவருக்குப் பதிலாக தற்காலிகமாக டாட் பிளான்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர், தொழிலாளர் துறைச் செயலாளர் “லோரி சாவேஸ்-டிரெமர்”. மார்ச் 2025-ல் பதவி நியமனம் செய்யப்பட்டு ஏப்ரல் 2026-ல் பதவியிலிருந்து விலகினார்.

பல குடியரசுக் கட்சியினரைப் போலல்லாமல், சாவேஸ்-டிரெமர் பழமைவாதப் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்த அதே வேளையில், தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பெற்றிருந்தார். ஓரிகானில் உள்ள ‘ஹேப்பி வேலி’யின் முன்னாள் மேயராகவும், அமெரிக்கப் பிரதிநிதியாகவும், பணியாளர் மேம்பாடு, தொழிலாளர் பேச்சுவார்த்தைகளில் அனுபவம் கொண்டவராகவும் இருந்ததால் தொழிலாளர் வர்க்க வாக்காளர்களிடையே தனது செல்வாக்கை அவரால் விரிவுபடுத்த முடியும் என்று ட்ரம்ப் தீவிரமாக நம்பி இவரைத் தேர்ந்தெடுத்தார்.

வெள்ளை மாளிகை அவரது பணியைப் பாராட்டியபோதிலும், தொழில்முறை முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் விசாரணையால் அவரது பதவிக்காலம் மங்கியது. தனது தனிப்பட்ட பயணங்களுக்காக அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஊழியர்களைத் தனது தனிப்பட்ட வேலைகளைச் செய்யப் பணித்ததாகவும், தனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவருடன் முறையற்ற உறவைப் பேணி வந்ததாகவும், அலுவல் ரீதியான பணி நடவடிக்கைகளின் போது மது அருந்தினார் என்றும் அறிக்கைகள் குற்றம் சாட்டின. கடினமான பணியிடச் சூழலும், தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களிடமிருந்து வந்த பல புகார்களும் இவர் மேல் குற்றம் சாட்டினாலும் சாவேஸ்-டிரெமர் பகிரங்கமாகத் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளவில்லை.

விசாரணைகள் விரிவடைந்து பொதுமக்களின் கண்காணிப்பு தீவிரமடைந்த பிறகு தான் அவர் பதவி விலகினார். இதன்மூலம், ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் விலகிய மூன்றாவது அமைச்சரவை உறுப்பினர் ஆனார்.

தற்பொழுது ஈரானுடன் போருக்குச் சென்றிருக்கும் நேரத்தில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ‘ஜோ கென்ட்’ பதவியை விட்டு விலகியது அரசிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சியாகவே வல்லுநர்களால் பார்க்கப்பட்டது. கென்ட், மார்ச் 17, 2026 அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநர் பதவியிலிருந்து விலகி, வெளியுறவுக் கொள்கைக் கருத்து வேறுபாடு காரணமாகப் பதவி விலகிய முதல் மூத்த ட்ரம்ப் நிர்வாக அதிகாரியுமானார்.

கென்ட்டின் விரிவான ராணுவ, உளவுத்துறைப் பின்னணியின் காரணமாகவே அதிபர் ட்ரம்ப் அவரைத் தேர்ந்தெடுத்தார். கென்ட், அமெரிக்க ராணுவத்தில் ‘கிரீன் பெரெட்’ ஆக 11 போர்ப் பணிகளில் பணியாற்றியுள்ளார். இவரின் ராணுவத் தலைமைத்துவம், உளவுத்துறை, போர் அனுபவம், பயங்கரவாத எதிர்ப்பு நிபுணத்துவம், டிரம்ப்-ன் வெளியுறவுக் கொள்கைக்கு கொடுத்த பொது ஆதரவினாலேயே இப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கவும் பட்டார்.

ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்கான நிர்வாகத்தின் முடிவை கடுமையாக எதிர்த்ததால் கென்ட் பதவி விலகினார். தனது ராஜினாமா கடிதத்தில், “நல்ல மனசாட்சியுடன்” இந்தப் போரை ஆதரிக்க முடியாது. ஈரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. இந்த மோதல் ட்ரம்ப் பிரச்சாரம் செய்த தலையிடாமைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் அவர் வாதிட்டார்.

ட்ரம்ப், கென்ட்டின் கூற்றுகளை நிராகரித்து, ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தினார். மேலும், ஈரான் ஒரு அச்சுறுத்தல் அல்ல என்று நம்பும் அதிகாரிகளுக்குத் தனது நிர்வாகத்தில் இடமில்லை என்றும் கூறினார். கென்ட்டின் ராஜினாமா, ட்ரம்ப் அரசின் தேசியப் பாதுகாப்புக் குழுவிற்குள் ஏற்பட்டிருக்கும் பகிரங்கப் பிளவுகளை வெளிப்படுத்தியதுடன், வெளிநாட்டு மோதல்களில் அமெரிக்காவின் பங்கு குறித்த கருத்து முரண்பாடுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.

தற்பொழுது ‘ஜோ வெய்ர்ஸ்கி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் மிகவும் வழக்கத்திற்கு மாறான நியமனங்களில் தேசிய உளவுத்துறை இயக்குநராக இருந்த ‘துளசி கபார்ட்’டும் ஒருவர். ஹவாய் தீவைச் சேர்ந்த முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈராக் போரில் பங்கேற்றவரும், அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான கபார்ட், பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் மற்றும் வெளியுறவுக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு காலத்தில் ஜனநாயகக் கட்சிக்காரராக இருந்தபோதிலும், பின்னர் ஒரு சுயேச்சையாக மாறி, டிரம்ப்-ன் “அமெரிக்கா முதலில்” என்ற வெளியுறவுக் கொள்கையின் வலுவான ஆதரவாளராக உருவெடுத்து, அதிபரின் மிகவும் வழக்கத்திற்கு மாறான அமைச்சரவைத் தேர்வுகளில் ஒருவரானார். குடியரசுக் கட்சிக்கு வெளியிலிருந்தும் ஆதரவாளர்களைத் திரட்டுவதில் ட்ரம்ப்பின் விருப்பத்தையும் இந்த நியமனம் வெளிப்படுத்தியது.

தனது கணவரின் உடல்நலக்குறைவு தொடர்பான குடும்பக் காரணங்களைக் கூறி, மே 22, 2026 அன்று தேசிய உளவுத்துறை இயக்குநர் (DNI) பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அவரது பதவிக்காலம் சர்ச்சைகள் அற்றதாக இருக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு முழுவதும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் வெளியுறவுக் கொள்கை, குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவத் தலையீடு தொடர்பான தனது சுதந்திரமான கருத்துக்களுக்காக காபார்ட் விமர்சனங்களை எதிர்கொண்டார். உளவுத்துறை மதிப்பீடுகள், தேசியப் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக நிர்வாகத்திற்குள் பதட்டங்கள் நிலவியதாகவும் சில அறிக்கைகள் விவரித்தன. இருப்பினும் இந்தக் கருத்து வேறுபாடுகளே அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வெளியேறுவதற்கு முன்பு ஒரு இந்து மத அமைப்புடன் அவருக்கு இருந்த கடந்தகாலத் தொடர்புகள் குறித்த ஆய்வை ஊடக அறிக்கைகள் மீண்டும் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டுகளை காபார்ட்டும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்துக்களுக்கு எதிரானவை என்றும் நிராகரித்தனர்.

அவரது ராஜினாமா ஜூன் 30, 2026 அன்று நடைமுறைக்கு வந்தது. அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து விலகிய நான்காவது அமைச்சரவை உறுப்பினரானார். அவரது ராஜினாமா அதிகாரப்பூர்வமாக குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், உளவுத்துறையிலும் வெளியுறவுக் கொள்கை குறித்த நிர்வாகத்திலும் ஒலித்த மிகத் தனித்துவமான குரல்களில் ஒன்றின் இழப்பைக் குறிக்கிறது. நிரந்தர இயக்குநர் உறுதிசெய்யப்படும் வரை ‘பில் புல்டே’வை தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராக அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

அமைச்சரவைச் செயலாளர் பதவியில் இல்லாவிட்டாலும், அரசாங்க செயல்திறன் துறை (DOGE) மூலம் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ‘எலான் மஸ்க்’ இருந்தார்.

உலகின் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபர். முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர். செலவுகளைக் குறைப்பதிலும் விரைவாகச் செயல்படுவதிலும் நற்பெயர் பெற்றவர். கூட்டாட்சி அதிகாரத்துவத்தின் அளவைக் குறைக்கக்கூடிய ஒருவராக அதிபரால் கருதப்பட்டார். பெரும் பணியாளர் குறைப்புகளைச் செய்ய அவர் மேற்கொண்ட சீர்திருத்த முயற்சிகள், தொழில்நுட்ப நவீனமயமாக்கல் முன்மொழிவுகள் பல விமரிசனங்களையும் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டது உலகறிந்ததே.

இவர்களின் விலகல்களைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் கூடுதல் மாற்றங்களைச் செய்வாரா என்பதில் தற்பொழுது கவனம் திரும்பியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக், FBI இயக்குநர் காஷ் பட்டேல் மற்றும் ராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கால் ஆகியோர் பல்வேறு சமயங்களில் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியமான வேட்பாளர்களாக விவாதிக்கப்பட்டதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், ஜூன் 2026 இறுதி நிலவரப்படி, வெள்ளை மாளிகை எந்த அமைச்சரவைப் பதவி நீக்கங்களையும் அறிவிக்கவில்லை, அந்த மூன்று அதிகாரிகளும் தங்கள் பதவிகளில் நீடிக்கின்றனர்.

தலைப்புச் செய்திகளையும் அரசியல் விவாதங்களையும் கடந்து, அதிபர் டிரம்ப்-ன் இரண்டாவது நிர்வாகத்திலிருந்து ஏற்பட்ட விலகல்கள், அதிபர் பதவி என்பது வெள்ளை மாளிகையில் இருக்கும் நபரால் மட்டுமல்ல, நாட்டின் நிறுவனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாலும் வரையறுக்கப்படுகிறது எனும் ஒரு எளிய உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, அமைச்சரவைச் செயலாளர்கள், உளவுத்துறைத் தலைவர்கள், முகமைத் தலைவர்கள், எல்லைப் பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு முதல் வேலைவாய்ப்புகள், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் வரை அனைத்தையும் பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார்கள். அந்தத் தலைவர்கள் மாறும்போது ​​முன்னுரிமைகளும் மாறக்கூடும்.

அரசியல் தலைவர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் அவர்கள் வழிநடத்தும் நிறுவனங்கள் நிலைத்திருக்கும். அமைச்சரவையிலோ அல்லது உயர் தலைமையிலோ ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நிர்வாகத்தை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா என்பது விலகும் அதிகாரிகளின் எண்ணிக்கையால் அல்ல, மாறாக அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி பொதுமக்களுக்குத் திறம்பட சேவை செய்கிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

இந்த விலகல்கள், ஜனநாயகம் என்பது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு அதிபரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல நமது சார்பாக யார் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் அரசாங்கம் ஒவ்வொரு நாளும் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் எடுத்துரைக்கிறது.

அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொரு நாளும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை வடிவமைக்கின்றன. அவர்கள் யார், ஏன் விலகுகிறார்கள், அவர்களுக்குப் பதிலாக யார் பதவியேற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது என்பது வெறும் அரசியல் நலன் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அது தகவலறிந்த குடிமக்களாக இருப்பதன் ஒரு பகுதியாகும். ஜனநாயகத்தில், தகவலறிந்த குடிமக்களே நல்லாட்சியின் மிக வலிமையான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்.

Friday, June 26, 2026

மாறும் அமெரிக்கா, மாறும் கனவுகள்

ஹெச்1பி விசா மாற்றங்கள் அவசியமானது. நிறுவனங்கள் பலவும் இந்த விசாவை முறைகேடாக பயன்படுத்துவது தான் முதன்மைக்காரணம் என்றாலும் அளவுக்கதிகமாக வெளிநாட்டுக்காரர்களின் வருகையால் உள்நாட்டு மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற உள்ளூர் குரல்களைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது அரசு. "Land of oppurtunities" இனி வெறும் கனவாகி விடுமா என்று அஞ்ச வேண்டாம். மாறும் தொழில்நுட்பத்திற்கேற்ப நம்மை இன்னும் மெருகேற்றிக் கொண்டால் கனவும் நனவாகும். தற்பொழுது செயற்கை நுண்ணறிவு, இன்னும் சிறிது நாட்களில் 'குவாண்டம் பிஸிக்ஸ்' என்று மாறும். ஆனாலும் ஹெச்1பி விசாக்கள் தொடரும். மேற்கல்விக்காக மாணவர்களும் வந்து கொண்டு தானிருப்பார்கள்.
மேலும் வாசிக்க...


சில வருடங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்குச் செல்லும் பாதை மிகவும் தெளிவாக இருந்தது. இந்தியாவில் படிப்பு முடித்து அமெரிக்காவில் முதுகலைப் பட்டம், பிறகு OPT(Optional Practical Training) வேலை அனுமதி, பின்னர் H-1B வேலை விசா, இறுதியாக கிரீன் கார்டு. ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் “அமெரிக்க கனவு” இப்படித்தான் நனவாகிக்கொண்டிருந்தது. ஆனால் அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை”யின் குடியேற்றத் திட்டம், H-1B விசா முறைகேடு குறித்த அரசியல் விவாதங்கள் இந்த பாரம்பரிய பாதையை மாற்றத் தொடங்கியுள்ளன. திறமை, சம்பளம், பாதுகாப்பு ஆய்வு, குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய கொள்கை மாற்றங்களால் அமெரிக்காவிற்கு கல்வி கற்க வந்த/வரும் மாணவர்களும் வேலை கிடைத்துப் புலம்பெயர்ந்த திறமையான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். H-1B பணி விசாக்கள், F-1 மாணவர் விசாக்கள், OPT (விருப்பப் பயிற்சி), STEM OPT மாணவர் விசாக்கள், கிரீன் கார்டு வழிமுறைகளில் கொண்டு வந்துள்ள மாற்றங்களால் இந்தியர்கள் அதிகளவில் இதன் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அழுத்தம் பல ஆண்டுகளாக அதிகரித்து வருவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் குடியேற்றம், விசா முறையில் உள்ள மோசடிகளைத் தடுக்கவே கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசு கூறியுள்ளது. இதன் மூலம், உயர்திறன் கொண்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பு H-1B விசா பெரும்பாலும் சீரற்ற லாட்டரி முறையில் வழங்கப்பட்டது. இப்போது “யார் அதிக திறமைசாலி? யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?” என்பதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு கொள்கைகளை நகர்த்துகிறது. இதனால் திறமையான இந்திய IT நிபுணர்களுக்கு வாய்ப்புகளும் உயர்கல்வி பெற்றவர்களுக்கு முன்னுரிமையும் கிடைக்கலாம். ஆனால், புதிய பட்டதாரிகளுக்கும் குறைந்த சம்பள வேலைகளுக்கும் H-1B கிடைப்பது கடினமாகலாம். இந்திய IT கன்சல்டிங் நிறுவனங்களுக்கும் சவாலான காலமாகி விட்டது.

திறமையான வெளிநாட்டு நிபுணர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான முதன்மை வழியாக H-1B விசா நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 85,000 விசாக்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. முன்பு சில நிறுவனங்கள் ஒரே நபருக்காக பல H-1B விண்ணப்பங்களை தாக்கல் செய்து லாட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்தன. இப்போது USCIS “Beneficiary-Centric” முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு நபருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே. பல நிறுவனங்கள் விண்ணப்பித்தாலும் அந்த நபருக்கு ஒரே ஒரு பதிவு மட்டுமே கணக்கிடப்படும். இவ்வாறாக H-1B லாட்டரி முறையில் உள்ள துஷ்பிரயோகங்களைத் தடுத்து உயர்தரத் திறமை கொண்டவர்களைத் தேர்வு செய்வது, தேசிய பாதுகாப்பையும் பின்னணி சரிபார்ப்பையும் வலுப்படுத்துவது, அமெரிக்க தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப குடியேற்றக் கொள்கையை மாற்றுவது போன்ற அரசியல் காரணங்களும் இதில் உள்ளன.

அமெரிக்க அரசு தற்போது நிறுவனங்களிடம், உண்மையான வேலை இருக்கிறதா?, தேவையான சம்பளம் வழங்கப்படுகிறதா?, விண்ணப்பதாரரின் திறமை வேலைக்கு பொருத்தமா? என்பதை விரிவாக ஆய்வு செய்கிறது. பெருநிறுவனங்கள், அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பதிலாக மலிவான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நியமிக்கவும், ஊதியங்களைக் குறைக்கவும், தரத்தை விட எண்ணிக்கைக்கு வெகுமதி அளிக்கும் லாட்டரி முறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் H-1B விசாக்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்று ட்ரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது.

வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலாளர் வில் ஷார்ஃப், H-1B திட்டத்தை “நாட்டில் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா அமைப்புகளில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார். USCIS இயக்குநர் ஜோசப் பி.எட்லோ, இந்த மாற்றங்களை “ஒழுங்கு, பாதுகாப்பு, நேர்மை, ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ அணுகுமுறை” என்று விவரித்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

செப்டம்பர் 19, 2025 அன்று அதிபர் ட்ரம்ப் “சில குடியேறாத தொழிலாளர்களின் நுழைவு மீதான கட்டுப்பாடு” (“Restriction on Entry of Certain Nonimmigrant Workers”) என்ற தலைப்பில், செப்டம்பர் 21, 2025 முதல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து தாக்கல்செய்யப்படும் எந்தவொரு புதிய H-1B மனுவிற்கும் ஏற்கனவே உள்ள அனைத்து கட்டணங்களுடன் பணி நிறுவனங்கள் $100,000 கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த பிரகடனம் மேலும் நீட்டிக்கப்படாவிட்டால், செப்டம்பர் 21, 2026 வரை அமலில் இருக்கும் என்று பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அதனால் 2025 நிதியாண்டில் சுமார் 10,000 அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுடன் மிகப்பெரிய H-1B பயனாளியான அமேசான், இந்த விகிதத்தில் ஆண்டுக்கு $1 பில்லியன் செலவையும் சுமார் 5,500 ஒப்புதல்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) $550 மில்லியனையும் எதிர்கொள்ள நேரிட்டது. 2025 டிசம்பரில் ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் அந்தக் கட்டணத்தைத் தடுக்க மறுத்துவிட்டது. இதனால் “Body Shopping” அல்லது “Bench Consulting” போன்ற நடைமுறைகள் மேலும் சிரமப்படலாம்.

டிசம்பர் 23, 2025 அன்று, H-1B பதிவுகள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை முழுமையாக மாற்றியமைக்கும் ஒரு இறுதி விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்தது. பிப்ரவரி 27, 2026 முதல் முன்பு இருந்த சீரற்ற குலுக்கல் முறைக்கு பதிலாக, முன்னுரிமை அளிக்கப்பட்ட தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அதிக ஊதியம் பெறும் உயர் திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு விசாக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விதி, 2027 நிதியாண்டின் H-1B உச்சவரம்புக் காலத்திற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. குறைந்த ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

இதற்கு இணையாக, USCIS ‘புராஜெக்ட் ஃபயர்வால்’ என்ற ஒரு கடுமையான நடவடிக்கையையும் தொடங்கியது. இதன் கீழ், விசா முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் நிறுவனங்களில் H-1B திட்ட முறைகேடுகள் குறித்து குறைந்தது 175 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜனவரி 9, 2026 அன்று, ஜூன் 2023 முதல் ஜூன் 2025 வரையிலான பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, விரைவு வழிமுறையான பிரீமியம் செயலாக்கத்திற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக DHS அறிவித்தது. மார்ச் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு தாக்கல்செய்யப்படும் எந்தவொரு படிவம் I-907லிலும் இந்தப் புதிய கட்டணங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது நிராகரிக்கப்படும்.

பொருளாதார வல்லுநர்கள் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ட்ரம்ப்பின் செப்டம்பர் மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஜெர்மன் முதலீட்டு வங்கியான பெரன்பெர்க், 2025ஆம் ஆண்டுக்கான அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 2%லிருந்து 1.5%ஆகக் குறைத்தது. ஆனாலும் அரசியல் ரீதியாக இந்த ஒடுக்குமுறை வேகம் பெற்று அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஹெச்1பி விசா மட்டுமல்லாது பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த மென்சக்திக் கருவிகளில் ஒன்றாக விளங்கும் சர்வதேச மாணவர்களும் வியத்தகு முறையில் மாறியுள்ள புதிய சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் 2, 2025 முதல் அனைத்து F-1 விண்ணப்பதாரர்களும் தங்கள் குடியுரிமை அல்லது வசிப்பிட நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நேரடி நேர்காணல்களில் கலந்துகொள்ள வேண்டும். இந்திய மாணவர்களுக்கு, இது ஏற்கனவே பணிச்சுமை மிகுந்த மும்பை, சென்னை, ஹைதராபாத், புது டில்லி, கொல்கத்தா தூதரகங்களில் காத்திருப்பு நேரங்களை அதிகரித்துள்ளது. நேர்காணலில் முன்பைவிட அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக, “ஏன் இந்த பல்கலைக்கழகம்? ஏன் இந்தப் பாடநெறி? படிப்பு முடிந்த பின் என்ன திட்டம்? படிப்புக்கான பணம் எங்கிருந்து வருகிறது” போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இருக்க வேண்டும். மேலும், நாட்டிற்குள் வருபவர்கள் எந்தவொரு தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக தகவல்களையும் ஆய்வு செய்கிறது அரசு.
இதனால் விசா செயல்முறை நீண்டு கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படுவதும் நேர்காணல் தாமதமாவதும் நடக்கிறது.

F-1 மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடரும் வரை தங்கியிருக்க அனுமதித்த, நீண்டகாலமாக இருந்துவரும் “தகுதி நிலைக் காலம்” (Duration Of Status, D/S) முறையானது தற்போது திருத்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, நான்கு ஆண்டுகள் என்ற நிலையான அங்கீகரிக்கப்பட்ட தங்கும் காலம் கொண்டுவரப்படலாம். இது பட்டப்படிப்பின் நடுப்பகுதியில் உள்ள மாணவர்களுக்குப் புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

மாணவர் விசாக்களுக்கு $250 புதிய விசா நம்பகத்தன்மை கட்டணமும் முன்மொழியப்பட்டுள்ளது, இருப்பினும் அதைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பட்டப்படிப்பிற்குப் பின் பணி அனுபவம் பெற வழங்கப்படும் விருப்பப் பயிற்சி விசா(OPT)வும் தீவிரமான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. STEM பட்டதாரிகளுக்கு மூன்றாண்டு கால நீட்டிப்பை வழங்கும் STEM OPTஐக் கட்டுப்படுத்தும் அல்லது முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு விதி 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணி வழங்கும் நிறுவனங்களும் மாணவர்களும், பணிக் கடமைகள், பயிற்சித் திட்டங்கள், இ-வெரிஃபை (e-Verify) தொடர்பான கடுமையான இணக்கத் தேவைகளை எதிர்கொண்டு வருகின்றனர். படிப்பு முடிந்தவுடன் OPT காலம் முடிவதற்குள் எப்படியாவது ஹெச்1பி விசா வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் மாணவர்கள் கடும் அழுத்தத்தில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதுவும் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருக்கும் பொழுது உள்ளூர்வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழலில் பல லட்சங்கள் செலவு செய்து கனவுகளுடன் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சோதனையான காலம் தான்.

மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு F-1 விசா வழங்குவதற்கான தடைகளும் போடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. ஆனால், கட்டுப்பாடுகளின் இந்த விரிவாக்கம் அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணி புரிந்து தங்க முடியும் என்றால் நிரந்தர குடியுரிமை பெற வழிவகுக்கும் கிரீன்கார்டு ஒவ்வொரு நாட்டிற்கும் வருடாந்திர எண்ணிக்கை என்ற வரம்பில் உள்ளது. இந்தியர்களின் விண்ணப்ப எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை. சில பிரிவுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பால் பலருக்கும் குடும்ப திட்டமிடல் சிக்கல்களும் வேலை மாற்ற சிரமங்களும் தொடர்கின்றன. க்ரீன்கார்டு செயல்முறையில் தற்போது பெரிய சட்ட மாற்றம் எதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஆவணச் சரிபார்ப்பு அதிகரித்துள்ளது. சில விண்ணப்பங்களுக்கு கூடுதல் ஆய்வும் நடைபெறுகிறது. குடியேற்ற அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2026 விசா அறிக்கையின்படி, EB-2(Employment Based) இந்திய விசாவுக்கான இறுதி நடவடிக்கை தேதி ஜூலை 15, 2014 ஆகும். இதன் பொருள், 2014-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்பு தங்கள் I-140 மனுக்களைத் தாக்கல் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தற்போது கிரீன்கார்டு ஒப்புதலுக்குத் தகுதியுடையவர்கள். அதற்குப் பின் க்ரீன்கார்டுக்காக விண்ணப்பித்தவர்களின் காத்திருப்பு நீண்டு, கையில் கிடைக்க இன்னும் பல்லாண்டுகள் ஆகலாம்.

USCIS தரவுகளின்படி, சுமார் 395,958 அங்கீகரிக்கப்பட்ட இந்திய EB-2 வழக்குகள் தற்போது விசா எண்களுக்காகக் காத்திருக்கின்றன. மிகவும் தற்போதையதாக இருந்த (current) EB-1 வகையும் குறிப்பிடத்தக்க பின்னடைவைக் கண்டுள்ளது. இந்தியர்களுக்கான EB-5 முதலீட்டாளர் விசா கூட சாத்தியமான பின்னடைவு குறித்த எச்சரிக்கைகளை எதிர் கொண்டுள்ளது.

வரலாற்று ரீதியாக, பிற நாடுகளிலிருந்து பயன்படுத்தப்படாத விசா எண்கள், தேவைக்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்த பிரிவுகளுக்குச் சென்றபோது, ​​இந்திய EB-2, EB-3 விண்ணப்பதாரர்கள் பயனடைந்தனர். அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. பிற நாடுகளும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்ற விசா எண்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வதால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

பத்தாண்டுகள் நீடிக்கும் காத்திருப்புகளை எதிர்கொண்டுள்ள இந்திய கிரீன்கார்டு விண்ணப்பதாரர்கள் தற்பொழுது மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் திறமையான இந்தியத் தொழில் வல்லுநர்களைத் தீவிரமாகக் கவர்ந்து வருகின்றன.

2025 நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து H-1B விசாக்களில் 70%-க்கும் அதிகமானவை இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டன. ஆனால் மேற்கூறிய ட்ரம்ப் அரசின் விசா மாற்றங்கள், “அமெரிக்காவின் புத்தாக்கச் சூழலமைப்பிலும் பரந்த வேலைவாய்ப்புப் பொருளாதாரத்திலும் அலை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று இந்தியாவின் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம்(NASSCOM) எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் இந்திய வல்லுநர்கள் எத்தகைய பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என்பதை உலகம் அறியும். மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் நிறுவனர்கள், பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களில் ஒரு விகிதாசாரமற்ற பங்கைக் கொண்டுள்ளனர். தற்போதைய இந்த அடக்குமுறையின் முரண் என்னவென்றால், அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு யார் அடித்தளமாக இருந்தார்களோ அவர்களையே குறிவைத்திருப்பது தான்.

இதன் புவிசார் அரசியல் பரிமாணங்கள் வாஷிங்டனுக்குத் தெரியாமல் இல்லை. பிரதிநிதிகள் ஜிம்மி பனெட்டா, அமி பெரா, சலூட் கார்பஜால், ஜூலி ஜான்சன் உள்ளிட்ட அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள், “அமெரிக்க-இந்திய உறவில் ஏற்படக்கூடிய எதிர்மறைத் தாக்கங்கள்” குறித்து எச்சரித்து, $100,000 H-1B கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அதிபருக்கு நேரடியாகவே கடிதம் எழுதினர். இந்தியா, அமெரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயகப் பங்காளியாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு ஒரு இன்றியமையாத எதிர்சக்தியாகவும், ஒரு முக்கிய தொழில்நுட்பக் கூட்டாளியாகவும் விளங்குகிறது. விசா கட்டணங்கள் காரணமாக அந்த உறவில் விரிசல் ஏற்படுவது ஆபத்து என்பதை வாஷிங்டனில் உள்ள சிலர் உணர்ந்துள்ளனர். கொள்கைகள் இன்னும் அதை பிரதிபலிக்கவில்லை என்றாலும் கூட.

H-1B விசா தேர்வுக்காகக் காத்திருப்பவர்கள், F-1 விசா வாய்ப்புகள் சுருங்குவதைக் காண்பவர்கள், கிரீன்கார்டு அறிக்கையில் முன்னுரிமைத் தேதியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என வரிசையில் நிற்கும் இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கும் மாணவர்களுக்கும் அமெரிக்கா தனது கதவுகளை மூடவில்லை. ஆனால் அந்த கதவுகளுக்குள் நுழைவதற்கான விதிகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. “படிப்பு→OPT→H-1B→கிரீன்கார்டு” என்ற பழைய பாதை இன்னும் இருக்கிறது. ஆனால் அது முன்பைவிட மிகவும் போட்டி நிறைந்ததாகவும் அதிக கண்காணிப்பு கொண்டதாகவும் மாறி வருகிறது. இந்திய மாணவர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையும் அதே நேரத்தில் ஒரு வாய்ப்பும் ஆகும்.

ஒரு காலத்தில் அமெரிக்கா என்பது வாய்ப்புகளின் நாடு மட்டுமல்ல, உலகின் சிறந்த திறமையாளர்களை வரவேற்ற திறந்த கதவாகவும் இருந்தது. இன்று அந்தக் கதவு திறந்தே இருந்தாலும் அதில் நுழைவதற்கான சாவி மாறியுள்ளது. அதிர்ஷ்டம், சரியான நேரம், சரியான நிறுவனம் என்பவற்றை விட திறமை, கல்வித் தகுதி, தொழில்நுட்ப நிபுணத்துவம், தெளிவான நோக்கம் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய மாணவர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் இது ஒரு தடையாக அல்ல, மாறாக தங்களை உலகத் தரத்திற்கு உயர்த்திக்கொள்ளும் அழைப்பாகும். அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள் மேலும் மாற்றமடையலாம். ஆனால், உலகின் சிறந்த திறமைகளுக்கான தேவை மட்டும் மாறாது. அந்தத் திறமைகளில் இந்தியர்கள் தொடர்ந்து முன்னணியில் இருப்பார்களா என்பதைத் தீர்மானிப்பது இனி கொள்கைகள் அல்ல. அவர்கள் மேற்கொள்ளும் தயாரிப்பும் தகுதியும் தான்.

Thursday, May 28, 2026

தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம் - அமெரிக்காவின் உணர்ச்சி நிறைந்த வரலாறு

சொல்வனம் இதழ் 364ல் வெளியாகியுள்ள என்னுடைய கட்டுரை தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த நாட்டில் வாழ்ந்த அனுபவம் மட்டுமில்லாமல் அதன் வரலாறு, அங்கு நடக்கும் அரசியல், பொது நிகழ்வுகள், வாழ்க்கை முறை, மக்கள் என்று அனைத்தையும் வாசித்தும், கண்டும், கேட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும். என் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்றாலும் அதன் வரலாற்றைப் படித்தும் கேட்டும் அறிந்து கொண்டதை மிக அழகாக அமேசான் ப்ரைமில்  ‘America: The Story of Us’ என்ற தொடரின் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த வருடம் தன்னுடைய 250வது சுதந்திர தினத்தை அமெரிக்கா கொண்டாடும் நேரத்தில், நாட்டைப் பற்றி இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் ஈர்க்கக்கூடிய ஆவணத்தொடர்களில் ஒன்றான ‘அமெரிக்கா: நமது கதை’யை மீண்டும் பார்ப்பதற்கு இதைவிடச் சிறந்த தருணம் வேறில்லை. இது வெறும் ஆவணப்படம் அல்ல. ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். ஒரு காட்சிக்கால இயந்திரம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாட்டை உருவாக்க முனைந்த மனிதர்களின் போராட்டக் கதையும் ஆகும். 

போர்கள், கண்டுபிடிப்புகள், இடப்பெயர்வுகள், புரட்சிகளின் ஊடாக, அமெரிக்கப் புரட்சியையும், அமெரிக்க உள்நாட்டுப் போரின் கொடூரங்களையும் தொழிற்புரட்சியின் உருமாற்ற ஆற்றல்களையும் வரையறுக்கும் தருணங்களை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் வெறும் தேதிகளையும் உண்மைகளையும் மட்டும் முன்வைக்காமல் வரலாற்றை மனிதாபிமானப்படுத்துகிறது. 

உலகளாவிய பார்வையாளர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, உலக அரங்கில் அமெரிக்கா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் இருக்கிறது என்ற ஆழமான கேள்விக்கு இந்த ஆவணப்படம் பதிலளிக்கிறது. காலனிகளின் ஒரு குழு எப்படி ஒரு உலக வல்லரசாக மாறியது? புதுமையும் லட்சியமும் அதன் கலாச்சாரத்தில் ஏன் ஆழமாக வேரூன்றியுள்ளன? அதன் உள்நாட்டுப் போராட்டங்கள் உலக வரலாற்றை எப்படி வடிவமைத்தன? என இந்தத் தொடரின் மூலம் அமெரிக்கா என்றொரு தேசம் எங்கிருந்து தொடங்கியது, எப்படி வளர்ந்தது என்று விளக்குகிறது.

குடியேறிகளுக்கு, இந்தத் தொடர் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அதன் சாராம்சத்தில், அமெரிக்கா என்பது குடியேறிகளின் நாடு. இந்த ஆவணப்படம், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களிலிருந்து வந்த மக்கள் அலை அலையாகத் தேடி வந்ததைச் சித்தரிக்கிறது. வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் தேடி புலம்பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கனவைத் தொடரவும் கட்டியெழுப்பவும் வாய்ப்புகள் தரும் நாடாக ஒரு உலகளாவிய உண்மையைப் பிரதிபலிக்கிறது.

மேலும் இந்தத் தொடர் எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டாமல் போராட்டங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், மோதல்களையும் காட்டுகிறது. அந்த நேர்மையே தொடரை இன்னும் வலிமையாக்குகிறது. ‘அமெரிக்கா: தி ஸ்டோரி ஆஃப் அஸ்’ ஆவணத்தொடரை உண்மையிலேயே மறக்க முடியாததாக ஆக்குவது அதன் கதை சொல்லும் பாணிதான். திரைப்பட பாணியிலான மீள்நிகழ்வுகள், நிபுணர் கருத்துரை, உணர்ச்சிப்பூர்வமான கதைசொல்லல் மூலம் இது ஒரு ஆவணப்படம் போலத் தோன்றாமல், வரலாற்று நிகழ்வுகளை அனுபவப்பூர்வமாக உணர வைக்கிறது.

முதல் அத்தியாயத்திலிருந்தே இந்தத் தொடர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, “அமெரிக்கா என்றொரு நாடு பாரம்பரிய அர்த்தத்தில் ‘கட்டப்படவில்லை’ – அது உருவாக்கப்பட்டது” என்பதுதான். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பேரரசை எதிர்க்க சாதாரண மக்கள் ஒரு அசாதாரணமான முடிவை எடுக்கும் அமெரிக்கப் புரட்சியின் குழப்பங்களுக்குள் நம்மை ஆழ்த்துகிறது. சரியான காலணிகள் இல்லாத, உறுதியான எதிர்காலம் இல்லாத, நம்பிக்கை மட்டுமே உள்ள வீரர்களின் பயத்தின் ஊடே “சுதந்திரம் அறிவிக்கப்படுவதில்லை, அது துணிந்து எதிர்கொள்ளப்படுகிறது”என்ற உணர்ச்சிப்பூர்வமான மையக்கருவுடன் துவங்குகிறது தொடர்.

வெற்றி என்பது கொண்டாட்டம் போல வருவதில்லை. அது தியாகம், பசி மற்றும் சந்தேகத்துடன் வருகிறது. தங்களால் தப்பிப் பிழைக்க முடியுமா என்ற உறுதியற்ற நிலையில் இருக்கும் ஒரு தேசத்தின் பலவீனமான பிறப்பை இரண்டாவது அத்தியாயம் படம்பிடித்துக் காட்டுகிறது. சுதந்திரக் கனவு, பணமில்லை, நிலைத்தன்மை இல்லை, ஒருங்கிணைந்த அடையாளம் இல்லை என்று யதார்த்தத்துடன் மோதினாலும் தர்க்கத்திற்கு எதிரான நம்பிக்கை எனும் சக்திவாய்ந்த ஒன்று உருவாகத் தொடங்குகிறது. ஒரு தேசம் என்பது போர் முடிவடையும்போது பிறப்பதில்லை. மாறாக, மக்கள் அதன் மீது நம்பிக்கை வைக்கும்போது பிறக்கிறது என்பதைக் காட்டுகிறது இந்த அத்தியாயம்.

கிழக்கில் துவங்கிய கதை மெதுவாக நிலம், வாய்ப்பு, தலைவிதியைத் தேடி மேற்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிமையானதல்ல. அறியப்படாத நிலத்திற்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கும் குடும்பங்கள், பூர்வகுடி சமூகங்களின் அழிவும் இடப்பெயர்ச்சியும், வாழ்வாதாரத்திற்கும் லட்சியத்திற்கும் இடையிலான கட்டுக்கடங்காத, அடக்கப்படாத போராட்டம் என்று இந்த அத்தியாயம் முன்னேற்றம் பெரும்பாலும் வலியுடன் வருகிறது என்ற கடினமான உண்மையை எதிர்கொள்ள வைக்கிறது. கனவுகளால் தேசங்களைக் கட்டியெழுப்பவும் முடியும், வாழ்க்கையையும் சிதைக்க முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது.

அமெரிக்க உள்நாட்டுப் போர் என்பது வெறும் போர் மட்டுமல்ல. அது சகோதரனுக்கு எதிராக சகோதரன், அரசுக்கு எதிராக அரசு, மனிதகுலம் தனக்கு எதிராகவே என ஒரு குடும்பம் தன்னைத்தானே சிதைத்துக் கொண்டதாகும். அடிமைத்தனம் என்னும் புறக்கணிக்க முடியாத பிரச்சினையும் இதன் மையத்தில் உள்ளது. இந்த அத்தியாயம் போரை மகிமைப்படுத்தவில்லை. ஆனால் ஒரு தேசத்தின் மிகப்பெரிய பலமே அதன் ஆழமான பிளவாகவும் இருக்கக்கூடும் என்பதை அம்பலப்படுத்துகிறது.

உள்நாட்டுப் போர் அதன் உச்சத்தை அடைய, அதன் அழிவின் மத்தியில், ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. மக்களிடையே சுதந்திரம் குறித்த கருத்து விரிவடைகிறது. அடிமைத்தனத்தின் முடிவு ஒரு அரசியல் மாற்றத்தை மட்டுமல்ல, ஒரு தார்மீகப் பரிணாம வளர்ச்சியையும் குறித்தாலும் அதன் வடுக்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. உடல்ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மீள்கட்டமைப்பு தொடங்குகிறது. அதன் விளைவுகள் அமெரிக்காவை என்றென்றைக்குமாக மாற்றியமைக்கின்றன.

போருக்குப் பிறகு மறுகட்டமைப்பு வருகிறது. இரயில் பாதைகள் நாடு முழுவதும் நீண்டு நகரங்கள் புழுதியிலிருந்து எழுகின்றன. தொழிற்புரட்சியின் போது தொழிற்சாலைகள் கர்ஜித்து உயிர்பெறுகின்றன. ஆனால் ஒவ்வொரு எஃகு உத்திரத்திற்கும் ரயில் பாதைக்கும் பின்னால் தொழிலாளர்கள், குடியேறிகள், மறக்கப்பட்ட கரங்கள் என இந்த அத்தியாயம், வியர்வையாலும் தியாகத்தாலும் அமெரிக்காவைக் கட்டியெழுப்பியவர்களைப் போற்றுகிறது. ஒரு தேசத்தின் வலிமை, அதைக் கட்டியெழுப்பும் கரங்களில் அடங்கியுள்ளது என்பதை நினைவுறுத்துகிறது.

மறுகட்டமைப்பில் வானுயரக் கட்டிடங்கள் வானத்தைத் தொடுகின்றன. மின்சாரம் இரவை ஒளிரச் செய்கிறது. கனவுகள் பெரிதாகி அமெரிக்கா ஒரு நகர வல்லமைமிக்க சக்தியாக உருமாறி வருகிறது. அதே நேரத்தில் செல்வமும் வறுமையும், வாய்ப்புகளும் போராட்டங்களும் என நகரங்கள் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்துகின்றன. குடியேறிகள் நம்பிக்கையைச் சுமந்து கடுமையான யதார்த்தங்களை எதிர்கொண்டு நகரங்களுக்குள் வெள்ளமெனப் பாய்கின்றனர்.

கார்கள், தொழிற்சாலைகள், பெருமளவு உற்பத்தி என அமெரிக்கா முன்னேற்றத்தின் இயந்திரமாக மாறுகிறது. ஹென்றி ஃபோர்டு போன்ற ஆளுமைகள், மக்கள் வாழ்க்கையையும் பணிபுரியும் விதத்தையும் மறுவரையறை செய்கிறார்கள். செல்வம் குவிகிறது. அமெரிக்கக் கனவு வளர்கிறது. கூடவே அதன் விலையும் அதிகரிக்கிறது. வளர்ச்சியுடன் சமநிலையின்மையும் வருகிறது. முன்னேற்றம் ஒரு தேசத்தை உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது அந்நாட்டை நிலைகுலையவும் செய்யும் என்று எடுத்துரைக்கிறது எட்டாவது அத்தியாயம்.

கனவு சிதைகிறது. பெரும் மந்தநிலை(Great Depression) விரக்தியைக் கொண்டுவருகிறது. வேலைகள் பறிபோகின்றன. குடும்பங்கள் துன்பப்படுகின்றன. நம்பிக்கை மங்குகிறது. ஆயினும், இங்குதான் அமெரிக்கா தன்னுடைய மீள்திறனை வெளிப்படுத்துகிறது. மக்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். ஒன்றுமில்லாததிலிருந்து மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். உண்மையான வலிமை என்பது வெற்றியில் வெளிப்படுவதில்லை, மாறாக உயிர் பிழைப்பதில் வெளிப்படுகிறது என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்துகிறது ஒன்பதாவது அத்தியாயம்.

வெற்றி என்பது ‘தலைமைத்துவம்’ என்றொரு புதிய சவாலையும் எதிர்கொள்கிறது. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுக்கிறது. தொழில்நுட்பம் முன்னேறுகிறது. செல்வாக்கு விரிவடைகிறது. கூடவே பதற்றங்கள் அதிகரித்து உள்நாட்டில் குடிமை உரிமைகளுக்காகப் போராட்டங்கள் தொடர்கின்றன. உலகத்தை வழிநடத்தினாலும் இந்தக் காலக்கட்டத்தில் தான் தேசம் தனது சொந்த முரண்பாடுகளை எதிர்கொள்கிறது.

இறுதி அத்தியாயம் நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்து வருகிறது. தொழில்நுட்பப் புரட்சிகள் முதல் செப்டம்பர் 11 தாக்குதல்கள் போன்ற துயரமான தருணங்கள் வரை, அமெரிக்கா தொடர்ந்து பரிணமித்து வந்திருக்கிறது. தற்பொழுது நாமும் இந்த அத்தியாயத்தின் அங்கத்தினர்களாகிவிட்டிருக்கிறோம். ஒரு தேசத்தின் மிகச்சிறந்த அத்தியாயம் என்பது, எப்போதும் இன்னும் எழுதப்படவிருக்கும் அத்தியாயமே ஆகும் என்று இந்த அத்தியாயம் நமக்கு ஒரு சக்திவாய்ந்த உண்மையை உணர்த்தி நிறைவடைகிறது.

அமெரிக்கா என்றதும் அதன் மீள்திறன், பன்முகத்தன்மை, தன்னைப் புதுப்பித்துக் கொள்வதில் வேரூன்றியுள்ளது என்பதே இன்று அடையாளமாக உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு, அதன்பின் முன்னேறிச் சென்றுள்ளது.

அமெரிக்கர்களுக்கு, இந்தத் தொடர் ஒரு கண்ணாடியாக, இன்று அவர்கள் அனுபவிக்கும் சுதந்திரங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்தவை. எளிதாகப் பெறப்பட்டவை அல்ல என்று நினைவூட்டுகிறது.

நாடு தனது 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்தத் தொடர் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, ஒரு சுயபரிசோதனைக்கான புள்ளியாக பரிணமிக்கிறது.நாட்டின் கதை இன்னும் எழுதப்பட்டு வருகிறது. அதன் சவால்களும் மனவுறுதியும் இன்னும் முடிவடையவில்லை. பல வழிகளில், இந்த ஆண்டுவிழா என்பது கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல, “அடுத்த 250 ஆண்டுகளில் அமெரிக்கா எத்தகைய தேசமாக இருக்கும்” என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

மேலும், ஒரு நாடு அதன் கடந்த காலத்தால் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை; மாறாக, கற்றுக்கொள்ளவும், தன்னைத் தகவமைத்துக்கொள்ளவும், தொடர்ந்து முன்னோக்கிச் செல்லவும் உள்ள அதன் திறனால் வரையறுக்கப்படுகிறது. 

அமெரிக்கா என்பது வரைபடத்தில் இருக்கும் ஒரு நாடு மட்டுமல்ல; அது தீயில் சோதிக்கப்பட்ட துணிவின் பெயர். தோல்வியில் கூட விடாமல் பிடித்துக் கொண்ட கனவின் பெயர்.

இந்தக் கதை முடிவடையவில்லை. ஒவ்வொரு குடியேற்றவாசியின் நம்பிக்கையிலும், ஒவ்வொரு உழைப்பாளியின் வியர்வையிலும், ஒவ்வொரு தலைமுறையின் போராட்டத்திலும் இது இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான், இந்தத் தொடர் கடந்த காலத்தை மட்டும் பேசவில்லை. 

“நீங்கள் எங்கிருந்து வந்தவராக இருந்தாலும்,
இந்தக் கதையில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது”

என்று எடுத்துரைக்கிறது.

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...