Wednesday, July 24, 2013

போவோமா ஊர்கோலம்

போவோமா ஊர்கோலம் - நாகலட்சுமி அனெக்ஸ், அரசமரம், மதுரை

நாகலட்சுமி அனெக்ஸ்-ல் சாப்பிடாத சௌராஷ்டிரா மக்கள் அந்த ஏரியாவில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த ஹோட்டல் பிரபலமாக இருந்தது. இந்த ஹோட்டலின் நிர்வாகியும் ஒரு சௌராஷ்டிரர் தான்.

பல நேரங்களில் இரவு உணவுக்காக இங்கிருந்து இட்லி, தோசை வாங்கப் போவோம். ஒரு பெரிய ஹால் மாதிரி இருக்கும் இடத்தில் நிறைய டேபிள், சேர்கள் போடப்பட்டு உள்ளே கண்ணாடிக் கூண்டில் பஜ்ஜி, வடை, இட்லிகள் குவிக்கப்பட்டிருக்கும். கீழ் அடுக்கில் குலாப்ஜாமூன், ஜிலேபி, மக்கன் பேடா என்று சில இனிப்பு வகைகளும் இருக்கும்.

நுழைவாசலில் குங்குமம், விபூதி பூசிக் கொண்டு கொழுகொழுவென்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருப்பார். அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் பலரும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் கொஞ்சம் குண்டு முகத்துடன் இருப்பார்கள். பின்னாளில் என் தம்பியின் நண்பனும் இந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று தெரிந்தது.

கல்லாவின் பின்புறம் முருகன், மீனாக்ஷி அம்மன், விநாயகர், லட்சுமி படங்களுக்கு மாலை போட்டு, மணக்க மணக்க ஊதுவத்தி ஏற்றப்பட்டிருக்கும்.

டேக் அவுட் என்றால் உள்ளே போய் ஆர்டர் செய்யலாம். அங்கு போய் ஆறிய இட்லி வேண்டாம், சூடான இட்லியும், நல்ல முறுகலான தோசையும் வேண்டும் என்றவுடன் கொஞ்ச நேரம் ஆகும் அது வரை வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த ஆர்டர் எடுக்க ஆரம்பித்து விடுவார் பார்சல் கட்டுபவர். பார்சல் கட்டுவதற்கு என்றே பேப்பர்களும், தொங்குகிற சணல் கயிறும், முதலிலேயே தயாராக வெட்டி வைக்கப்பட்ட வாழை இலைகளும் என்று டேபிளில் அடுக்கி வைத்திருப்பார்கள். பக்கத்தில் இருக்கும் கதவு வழியாக சமையல்கட்டுக்குள் போவதும் வருவதுமாய் வேலைக்காரர்கள். பென்சிலை காதில் சொருகிய பேரர்கள் ஆர்டரை கொடுப்பதும், பரிமாறுவதுமாய் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சாப்பிட்டு முடித்தவர்களின் இலையை அல்லது தட்டை எடுக்க சிறு பையன்கள்!

பார்சல் கட்டுமிடத்தில் ஒரு பெரிய அலுமினிய அண்டாவில் கொதிக்கிற சாம்பார், சில சட்னி வகையறாக்கள், இவைகளை கேட்பவர்களுக்கு எடுத்துக் கொடுக்க என்று ஒருவர். சில நேரங்களில் சட்னி தீர்ந்து போய் பெரிய ஆட்டுக்கல்லில் துண்டுகளாக்கிய தேங்காய் சில்லுகள், இஞ்சி, சிறிது புளி, பச்சைமிளகாய், பொரிகடலை, கடலை போட்டு ஒருவர் அவசரஅவசரமாக சடுதியில் அரைக்க, அதை எடுத்துக் கொண்டு தாளிதம் பண்ணிக் கொடுக்க, சட்னிக்காக காத்துக் கொண்டிருந்தவர் மீண்டும் சாப்பாட்டை தொடர என்று வேடிக்கை பார்ப்பதே நன்றாக இருக்கும்.

சமையல்கட்டில் சூடான பெரிய தோசைக்கல்லில் தண்ணீரைத் தெளித்து ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்று புகையுடன் கூடிய சத்தம் வரும் பொழுது விளக்குமாறைக் கொண்டு சரக்சரக் என்று துடைக்க, முறுகலான தோசைக்கு கல்லும் ரெடியாக, மளமளவென்று இத்தூனுண்டு மாவில் மெல்லிய பெரிய பெரிய தோசைகளை இட்டு, தோசைக்கரண்டியை எண்ணையில் முக்கியெடுத்து மாவிலும், மாவை சுற்றியும் ஊத்த, சலசலவென்று பொரித்துக் கொண்டே தோசையும் தயாராக, முன் டேபிளுக்கும் வந்து சேர, அப்பாடா என் ஆர்டர் வந்து விட்டது என்று சந்தோஷமாக இருக்கும். தோசை வருவதற்குள், பேப்பரில் இலையை வைத்து, கொஞ்சம் தேங்காய் சட்னி அதன் மேல் ஒரு சிறிய இலை ,கொஞ்சம் வெங்காய கார சட்னி, அதன் மேல் ஒரு சிறிய இலை வைத்து, தோசையை வைத்து ஒரு சுருட்டு சுருட்டி, இரண்டு கார்னர்களையும் உள்ளே தள்ளி பார்சல் பண்ணி முடித்து விடுவார்.

சூடான இட்லி என்றால் இட்லி வேகும் வரை காத்திருக்க வேண்டும். அந்த பெரிய இட்லி கொப்பரையும், பூப்போன்ற இட்லியும்...வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தட்டுக்களிலிருந்து ஆவி பறக்க இட்லி தட்டை எடுத்து பரப்பி, அதன் மேல் தண்ணீர் தெளித்து ஒரு பெரிய தட்டில் கவிழ்த்து, லாவகமாக துணியை எடுத்து, இட்லியை அதே சூட்டில் பார்சல் பண்ண...

வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ஒரு நன்னாளில், காலை பதினோரு மணியளவில் அவர்கள் அறிமுகப்படுத்திய தக்காளி சாதமும், வெஜிடபிள் பிரியாணியும் மணக்கமணக்க விரைவில் அதைப்பற்றி ஒரே பேச்சாக கிளம்ப, நாங்களும் சுவைத்துப் பார்த்தோம். அப்பப்பா ...சீரகசம்பாவின் மணத்தில், அதன் ருசியில் மயங்கியவர்கள் பலர். அளவு குறைத்து இருந்தாலும் சுவை அதிகமாக அனைவரையும் கொள்ளை கொண்ட அந்த நாட்கள்...சுகமானாவை.

Saturday, July 13, 2013

தஞ்சாவூர் - பிரகதீஸ்வரர் கோவில்


பள்ளியில் படிக்கும் பொழுது பார்த்த தஞ்சாவூரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வர, தஞ்சாவூரும் பயணத்திட்டத்தில் சேர்ந்து கொண்டது. அதுவும் இல்லாமல் என் மகளுக்கு அந்த ஆயிரம் வருட பிரமாண்ட கோவிலையும் அதன் அழகையும், கலைஞர்களின் திறமையையும், கலைப் பொக்கிஷத்தையும் அவளும் பார்க்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் காரணமாக, தம்பியுடன் தஞ்சாவூருக்குப் பயணமானோம்.


தஞ்சாவூர் என்றதும் பச்சைப்பசேல் என்ற விளைநிலங்களும், காவிரி ஆறும், தஞ்சாவூரின் பெரிய கோபுரமும், பெரிய்ய்ய்ய்ய நந்தியும், ராஜராஜ சோழனும், தலையாட்டி பொம்மையும், தஞ்சாவூர்  ஓவியங்களும் என்று ஒரு பெரிய லிஸ்டே கண்ணில் நர்த்தனமாடும். இந்த முறை திருக்கருக்காவூர் கோவிலுக்குப் போய் விட்டு மண் ரோடு, தார் ரோடு என்று பல ரோடுகளையும், ரோட்டின் நடுவில் நின்று எனக்கென்ன என்று பேசிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தையும் தாண்டி காலை நேரத்தில் போனதும் சுகமாகத் தான் இருந்தது.

வழியில் ஒரு கல்லூரி அருகே நடந்திருந்த விபத்தை கடந்து போகும் பொழுது வருத்தமாக இருந்தது. யாரோ, எவரோ, கிராமத்து ஜனங்கள் சுற்றிலும் நின்று கொண்டிருக்க, ஆம்புலன்சும் வந்து சேர, ஒரு வயதான பெண்மணி நெஞ்சில் அடித்து அழுது கொண்டே வர, அவரை சுற்றிலும் ஒரு கூட்டம். ஏதோ பெரியதாக ஒன்று நடந்திருந்தது என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்குள் அங்கிருப்பவர்களே வண்டிகளை நெரிசலில் இருந்து மீட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போலீஸ் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது :(

எப்படியோ அங்கிருந்து கிளம்பி, வழி கேட்டு தஞ்சாவூருக்குள் நுழைந்தோம். பஸ் நிலையம் அருகிலேயே கோவில் இருக்கிறது. காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, நடக்க ஆரம்பித்து விட்டோம். பார்த்த உடனேயே மனதில் 'பச்'சென்று ஒட்டிக் கொள்ளும் கோபுரத்தின் அழகு! கோவிலை சுற்றி இருக்கும் சுவர் முழுவதும் சின்ன சின்ன ஒரே அளவிலான நந்திகள். சில சேதராமான நிலைகளில்:( நுழைவாயிலில் செம்மண் கலரில் சின்ன அகண்ட கோபுரம், அருகே கோவிலைப் பற்றிய விளக்கங்கள், கோவிலை சுற்றிக் காட்டும் பல மொழிகள் பேசும் கைடுகள்!, அவர்கள் பேசிய கொச்சையான ஹிந்தி, ஆங்கிலம்! கோவிலுக்கு வந்த மேலை நாட்டு மக்கள், உள்ளூர் மக்கள் என்று அந்த காலை வேளையிலும் கூட்டம். செருப்புக்கள் வைக்க ஓரிடம். வைத்து விட்டு கல்தரையில் நடக்க நன்றாக இருந்தது. வாசலில் வெள்ளையம்மாள்-அதாங்க கோவில் யானை, கரும்பு இலைகளை சாப்பிட்டுக் கொண்டே, ஆசீர்வாதமும் செய்து கொண்டிருந்தது.


உள்ளே நுழைந்தவுடன் தெரியும் பிரமாண்டம், மனதை கொள்ளை கொள்ளும். பரந்த இடத்தில் நேர்த்தியாக கட்டப்பட்ட மண்டபகங்கள் இடப்புறத்திலும், எதிர்த்தாற்போல் கொடிக்கம்பமும், பெரிய நந்தியும், நிமிர்ந்தால் சோழர்களின் கலை நேர்த்தியுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் கோபுரமும் மனதை மயக்குகிறது. மெதுவாக ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே முதலில் கொடிக்கம்பத்தை வணங்கி விட்டு, பெரிய நந்தியை முன்புறம் சென்று பார்த்தோம்.

எவ்வளவு பெரிய நந்தி! வழுவழுவென்ற தீர்க்கமான உருவச்சிலை! அந்த பெரிய உருவமே 'ஆ' என்று வாயை பிளக்க வைத்து விடும்! நந்திக்காக நிறைய தூண்களுடன் கூடிய ஒரு மண்டபம். தூண்களை கூர்ந்து நோக்கினால் அழகிய கலை நயங்களுடன் கூடிய சிற்பங்கள்! ஒவ்வொரு தூணையும் ஆராய்ந்து பார்த்தால் அதனுள்ளே இருக்கும் கலைநயங்கள் வியக்க வைக்கும்! அங்கு அவரை வணங்கி விட்டு, கல் படிகளில் ஏறி கோவிலுக்குப் போனால், அவ்வளவு பெரிய சிவலிங்கத்தை காணக் கண் கோடி வேண்டும். அந்த பிரமிப்பு போக பல நிமிடங்கள் பிடித்தது. சிறு வயதில் பார்த்தது நினைவிருந்தாலும், இப்பொழுது பார்க்கும் போது இன்னும் பல மடங்கு ஆச்சரியமாக இருந்தது.


விபூதி பிரசாதம் வாங்கி கொண்டு, கோவிலை சுற்றி வருகையில் பெரிய கோபுரம் பல கேள்விகளை மனதில் எழுப்புகிறது. அதன் கலை அழகும், நேர்த்தியும், ஒரே கல்லில் செய்த விமான மகுடமும் அந்த காலத்தில் எவ்வளவு திறமையான கட்டிட, கலை வல்லுநர்களும், அவர்களை கௌரவித்த அரசர்களும், அவர்களுடைய வாழ்க்கையும் எப்படி இருந்திருக்கும் என்ற நினைப்பு வருவதை மறுப்பதற்கில்லை. எப்படி இவ்வளவு பிரமாண்டமான கோவிலை கட்டியிருப்பார்கள்? இந்த கால கட்டத்தில் இது ஒரு பெரிய சவாலான விஷயம் தான்!

இதே போல் தான் யாளியும்! நான் பார்த்த அநேக கோவில்களில் யாளியின் சிலைகள் தவறாமல் இருந்தது. அதன் பின்னணி தான் இன்னும் புலப்படவில்லை எனக்கு. யாளியும், சிங்க முகங்களுடன் கூடிய சிலைகளும் பார்க்க நன்றாக இருந்தது. ஓரிடத்தில் லிங்கங்கள் வரிசையாக! முருகன், விநாயகர் சன்னிதானங்கள் எல்லாம் கலைநயத்துடன்!

மண்டப நுழைவாயில்களில் யானை சிற்பங்கள். குழந்தைகள் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார்கள். சில இடங்களில் குதிரை, யானை, துர்க்கை என்று பல சிற்பங்களின் கால்கள்/முகங்கள் உடைந்த நிலையில்:( பல சிற்பங்களையும், உடைந்த பாகங்களையும் மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்து ஓட்ட வைத்திருந்தார்கள். மண்டபகங்களின் மேல் வண்ண வண்ண சித்திரங்கள்! கோவில் சுவர்களில் பலவிதமான சிற்பங்கள், கடவுள்களின் உருவங்கள். செதுக்கி எடுத்த சிற்பங்கள். இப்படியே வலம் வந்தால் அம்மனுக்கு ஒரு மண்டபம். கம்பீரமான அழகிய அம்மன்.

மேல்நாட்டுக்காரர்கள் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். கோவிலை வளைத்து வளைத்து படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மெதுவாக பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இஸ்ரேல், ஜெர்மனியிலிருந்தும் வேறு பல நாடுகளில் இருந்தும் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

கோபுரங்களைப் பற்றியும், இந்த கோவிலைப் பற்றியும் படிக்க படிக்க மிகவும் சுவாரசியமான தகவல்கள் கிடைக்கிறது! இப்படியே கோவிலைச் சுற்றிசுற்றி வந்தாலும் அலுப்பதில்லை. புற்கள் போட்டு நன்றாக பராமரித்திருக்கிறார்கள். தொல்துறையினரின் கீழ் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருவதால் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அங்கேயே சூப்பராக லெமன் சாதம், புளியோதரை, முறுக்கு, அதிரசம் பொட்டலம் போட்டு விற்கிறார்கள்.

வெளியில் வந்து என் மகள் யானை மேல் ஏற ஆசைப்பட அதையும் விடுவானேன்! அவளுக்கும் என்னைப் போன்றே மலைப்பு! தஞ்சாவூரில் இன்னும் பார்க்க பல இடங்கள் இருக்கிறது. மெதுவாக இன்னுமொருமுறை போக வேண்டும்.

ஆனால் வீட்டு நினைப்பு வந்து விட, மதுரைக்குப் போகலாம் என்று முடிவெடுத்து, அம்மாவிடம் சூப்பரான சமையல் செய்யுமாறு சொல்ல, அவரும் மகன், மகள்,பேத்தி வருகிறார்கள் என்றவுடன் எல்லோருக்கும் பிடித்த சமையலை செய்து விடுகிறேன், பார்த்து கவனமாக வந்து சேருங்கள் என்று சொல்ல, இன்னொரு தம்பிக்கும் நாங்கள் சீக்கிரமே வீடு திரும்பி விடுவோம், நீயும் வேலையை முடித்து ஊருக்கு வந்து விடு என்று சொல்லி விட்டு கார் நிறுத்தத்திற்கு திரும்பினோம்.

இதற்குள் உச்சி வெயில் மண்டையை பிளக்க! வெளியில் வந்தால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அநியாய விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள். மாங்காய், வெள்ளரியை விதவிதமாக நறுக்கி, மிளகாய்த்தூளைப் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். என் தம்பி, வேணுமா என்று கேட்க, சாப்பிட ஆசையாக இருந்தாலும், மதுரை போகும் வரையிலாவது பத்திரமாக இருக்க வேண்டும், நீ மட்டும் போய் சாப்பிடு என்று சொல்லி விட்டு, அவன் நறுக்மொறுக் என்று சாப்பிடுவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே நெடுஞ்சாலையில் சங்கமித்தோம்.


சோழர்களின் கலைநாட்டம், பெரிய கோவில், அழகான சிற்பங்கள்...ஒரு நல்ல கோவிலை பார்த்த திருப்தியில் மதுரைக்குப் பயணமானோம்.

நல்ல சுள்ளென்ற வெயில். என் மகள் தூங்கியும் விட்டாள். வந்து இறங்கியதிலிருந்து சென்னையில் இதுவரை காணாத மழை பற்றியும், மார்கழி மாத காலைப் பனியும், புயல் காரணமாக பெய்த மழையில் தெளித்து விடப்பட்டிருந்த சாலைகளும், களைப்பைத் தராத வெயிலும், கண்ணுக்கினிய கோவில்களும், தெய்வ தரிசனங்களும், நண்பர்களின் சந்திப்பும் என்று பேசிக் கொண்டே வந்தோம். என் தம்பிக்கும் இந்த ட்ரிப் ஆனந்தமாக இருந்தது என்று அவனும் சந்தோஷமாக இருந்தான்.

கல்லிலே கலை வண்ணம் கண்டான் - எவ்வளவு உண்மை!

தஞ்சாவூரைக் கடக்கும் பொழுது, மோகமுள், பொன்னியின் செல்வன் மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வரும் வழியில் தனியார் கல்லூரிகள் பல கடந்து வந்தோம்!!!!திருச்சி அருகே வரும் பொழுது நகர சந்தடி, போக்குவரத்து நெரிசல், திடீரென்று வெயில் அதிகமான மாதிரி ஒரு எண்ணம். விரைவில் திருச்சியை கடந்து சிறிது நேரத்தில் விராலிமலையையும் கடந்தோம். அந்த முருகன் கோவில் இப்பொழுது வண்ணங்கள் அடித்து, படிகள் எல்லாம் சுத்தமாக பார்க்க நன்றாக இருந்தது. நான் நினைத்திருந்த கோவிலுக்கும் இப்போதைய கோவிலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ம்ம்ம். காலம் மாறி விட்டது என்று நினைத்துக் கொண்டே கன்னக்குழி விழ, ஆலுக்காசிற்கு வாங்கிய காசிற்காக மாதவன், விஜய், ஐஸ்வர்யாராய் நெடுஞ்சாலைகளில் சிரித்துக் கொண்டிருந்ததை கடந்து வர, சிறிது நேரத்தில் யானைமலை தெரிய ஆரம்பித்து விட்டது. ஹையா, மதுரை வந்து விட்டது என்ற உற்சாகமும் தொற்றிக் கொண்டு விட்டது!

இன்னும் சிறிது நேரத்தில் மதுரையில் இருப்போம் என்ற நினைப்பே மகிழ்ச்சியாக இருந்தது. ஒத்தக்கடை அருகில் வரும்பொழுது ஒரு விபத்து நடந்திருக்கும் போல, அதனால் வண்டியை திருப்பி தெருக்களின் வழியே சுற்றி வந்து, எப்படியோ, KK நகர் வழியே என்ன, இப்படி ஊரே மாறிடுச்சு, இவ்வளவு கடைகள், போக்குவரத்து நெரிசலும்! என்று புலம்பிக் கொண்டே வந்து சேர்ந்தோம். நல்ல பசி வேறு. அம்மா சமைத்த சாப்பாடு...இதோ வந்துவிட்டோம் என்று துள்ளிக் குதித்துக் கொண்டே வீடு போய் சேர்ந்தவுடன், வழியில் அனைவரும் குசலம் விசாரிக்க, அவர்களுடன் பேசி விட்டு, பாட்டியை பார்த்தவுடன் என் மகளும் குதூகலிக்க...

ஆரம்பமானது மதுரை வாசம் :)

Sunday, July 7, 2013

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல?

திருப்பி திருப்பி இந்த விஷயம் என் மனதை அரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கெல்லாம் என்று தான் விடிவு? என்ன தான் தீர்வு? விஷயம் என்னவென்றால், படித்த/வேலைக்குப் போகிற பெண்களுக்குத் தான் அதிகமான பிரச்னைகள். அதுவும் தாலி கட்டிய கணவன் என்ற கயவனால். சமயங்களில் அந்த கயவனை பெற்றெடுத்த தாய் என்ற பிசாசினாலும், பிற குடும்ப நபர்களாலும் கூட!

கேள்விப்பட்ட வரையில், படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்கள் குடும்பத்தில் கணவனால் பிரச்சினைகள் தலை தூக்கும் பொழுது தன் குழந்தைகளுக்காகவும், தன் பெற்றோர்களுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும், பிரச்சினைகளை பெரிதாக்க கூடாது என்ற நோக்கத்தில் என்றாவது ஒருநாள் இந்த கயவனும் மாறிவிடுவான் என்று நினைப்பில் தான் படும் கஷ்டங்களை வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளே புதைத்து தன்னையும் வதைத்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள். இப்படி தான் எது செய்தாலும் பொறுத்துப் போகிறாள் என்றவுடன் கயமைப் பேய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. அவர்களுடைய கொடுமையும் தொடர ஆரம்பிக்கிறது.

சில குள்ளநரிகள், குழந்தைகள் எதிரில் மட்டம் தட்டி பேசுவதும், அவர்களை கொண்டு மரியாதை இல்லாமல் நடத்துவதும் என்று ஆரம்பித்து உடலளவில், மனதளவில் பெண்களை வதைக்க ஆரம்பிப்பதுமாய் தொடருகிறது.

சில மனம் பிறழ்ந்த குள்ளநரிகளோ பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்று பெற்றெடுத்த பிசாசுகளால் வளர்க்கப்பட்டு, அன்புக்காக ஏங்கும் மனங்களை சித்திரவதை செய்வதில் ஆரம்பிப்பதுமாய் தொடருகிறது.

பொதுவாக இந்தியர்கள் படித்த பண்பானவர்களாக இருப்பார்கள், மிகவும் கண்ணியமானவர்கள் என்ற நம்பிக்கையை வெற்றிகரமாக பொய்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நபர்கள். இந்த மாதிரி விகார மனம் படைத்த போலிஆசாமிகளை கண்டு போலீசும், வழக்கறிஞர்களும், நீதித்துறையும் விக்கித்துத் தான் போயிருக்கிறது. இப்படிக் கூடவா நடக்கும் உங்கள் குடும்பங்களில். இந்த மாதிரி கீழ்த்தரமான செயல்களை இங்குள்ளவர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவில் அவர்களையே வியப்படைய செய்கிறார்கள் இந்த மிருகங்கள்.

ஒருவன் கல்லூரியில் பேராசிரியர். வீட்டிலோ மனைவிக்கு சொல்ல முடியாத அளவிற்கு கொடுமைகள். வேலைக்குச் செல்லாத பெண். பார்த்தால் அவ்வளவு அமைதி அவர் முகத்தில்! இவருக்கா இந்த கஷ்டம் என்று மனம் வருந்தும். இந்தியாவில் இருக்கும் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் தப்பித் தவறி வந்து விடாதே, இங்கிருக்கும் பிரச்சினையே பெரிதாக இருக்கிறது. உன்னை நீயே எப்படியாவது காத்துக் கொள் என்று கையை நனைத்து விட, அந்த பேதலித்த பேதை நண்பர்களின் துணையை நாட, அப்பாடா, அவர் செய்த பிரார்த்தனைகள் வீண் போகவில்லை. நல்ல நண்பர்கள் அனைவரும் அவரவர் முடிந்த வரையில் பணத்தை போட்டு, அவரை வீட்டிலிருந்து வெளியில் குடி வைத்து, அவருக்கென்று ஒரு வேலைக்குச் சென்று சொந்த காலில் நிற்கும் வரை உதவி இருக்கிறார்கள் அந்த மாமனிதர்கள். ஆம், அனைவரும் கெட்டவர்கள் இல்லையே. இந்த ஆறுதல் தான் மனித இனத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது முறையாக விவாகரத்து பெற்று அவருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மனம் பாதிக்கப்பட்ட முதாலவது மகன் கல்லூரிப் படிப்பை தொடராமல் அம்மாவின் நிம்மதியை தொலைத்துக் கொண்டிருக்கிறான். பூதம் இரண்டாம் பாகமோ என்று அம்மாவிற்கு ஒரே கவலை. நண்பர்களின் உதவி இல்லையென்றால் இந்த பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்?

இதற்கு யார் பொறுப்பு?

இப்படித்தான் பல பெண்களின் நிலைமையும். படித்த நல்ல வசதியுள்ள ஒருவனுக்கு நன்கு படித்த நல்ல வசதியுள்ள பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவள் வேலைக்குச் செல்வதை விரும்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறான். அவளும் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களுடைய நலன் ஒன்றே கருதி காலத்தைஒட்டி இருக்கிறாள். அவனுடைய கொடுமையைத் தாளாமல் ஒருநாள் அவளே போலீசுக்குத் தகவல் சொல்ல, அவளையும் குழந்தையும் வேறு வீட்டிற்கு குடி அமர்த்தி செலவுக்கும் அவனை பணம் கொடுக்க வைத்திருக்கிறார்கள். சில நாட்களில் அவன் விவாகரத்திற்கு மனு போட, இன்று அவள் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறது.

இதற்கு யார் பொறுப்பு?

இன்னும் ஒரு படி மேலே போய், சில வக்கிர மனம் படைத்தவர்கள் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு, மனைவிக்கு மனநிலை சரியில்லை என்று இல்லாத ஒன்றை சொல்லி விவாகாரத்து செய்து விட்டு , இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்தி, குழந்தைகளுடன் அவள்படும் பாட்டை பார்த்து கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. அந்த அபலைப் பெண்ணோ, ஊருக்குப் போய் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று தன் விதியை நினைத்து புலம்பியபடி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கப்படும் துன்பங்கள் இருக்கே!

இதற்கும் யார் பொறுப்பு?

அந்த 47 நாட்கள் என்ற படத்தில் வருவது போல், தன்னை பெற்றவர்களிடம் நல்லவர்கள் போல் நடித்து அவர்களுக்காக ஒரு பேசா மடந்தையை திருமணம் செய்து, இங்கு கூட்டிக் கொண்டு வந்து, உன்னோடு வாழப் பிடிக்கவில்லை. திருமணம் செய்யவில்லையென்றால் பிரச்னை ஆகி விடும், அதான் பேருக்குத் திருமணம் என்று சொல்லி ஒரு பெண்ணின் மனதை வதைக்கும் கொடுமையும், விரைவில் அவளுடன் வாழ முடியாது என்று விவாகாரத்து செய்யும் கொடுமைக்கும் யார் பொறுப்பு?

பெண் படித்தாலும் பிரச்னை, படிக்காவிட்டாலும் பிரச்னை. படித்து நல்ல வேளையில் இருக்கும் பெண்ணின் சம்பளப்பணம் அவளுக்கு சொந்தமில்லை. அவளை அந்த நிலைக்கு கொண்டு வந்த அவள் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் சொந்தமில்லை. அதனால் பல குடும்பங்களிலும் இன்றளவில் பிரச்னைகள்.

இன்று கீழ், மேல், நடுத்தர வர்க்கம் என்று எல்லா நிலைகளிலும் தொடரும் இந்த சமூக அவலங்களுக்கு என்ன தான் தீர்வு?

நான் பார்த்தவரையில் வெகு சில பிரச்னைகளே பெண்களால் வந்திருக்கிறது. பலவும், மனிதர்கள் போர்வையில் நடமாடும் கொடிய மிருகங்களினால் தான். உடலளவில் சித்திரைவதை அனுபவிப்பவர்கள், மனதளவில் தினம் தினம் கொடுமைகளை அனுபவிப்பவர்கள் என்று இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

நல்ல மனிதர்களும் இருக்கும் இந்த கால கட்டத்தில், இப்படி அவதியுறும் பெண்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் என்ன தான் தீர்வு?

பெண்ணிற்கு திருமணம் ஒன்று தான் அவள் வாழ்க்கையின் எல்லை என்று நிர்மாணித்திருக்கும் சமூகமா, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சொல்லி சொல்லியே, கணவனால் கைவிடப்பட்டால் தன்னை சமூகம் என்ன சொல்லி விடுமோ என்று பயந்து பயந்து துணிவுடன் வாழ முடியாத நிர்பந்தத்திற்கு அவளை தள்ளியதற்கு யார் பொறுப்பு?

எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி பேராசிரியர் தன்னுடைய ஆராய்ச்சிக்காக குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி எழுதினார். அதற்காக அவர் சந்தித்த பெண்கள், அவர்களிடம் இருந்து அவர் தெரிந்து கொண்ட விஷயங்கள் பல நாட்கள் மனதை அலைக்கழித்து கொண்டிருந்தது. தன் சொந்த குடும்ப உறுப்பினர்களால், தாலி கட்டிய கணவனால், நண்பன் என்று தான் நம்பிய கயவனால் என்று பலவயதினரும் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டு மனது மற்றும் உடலளவில் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று தெரிந்த பொழுது பெண்ணாக பிறப்பதே கொடுமை என்ற எண்ணத்தை தான் ஏற்படுத்தியது.

சில பெண்கள் அனாவசியமாக பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டு ஆண்களை சித்திரவதை செய்வதும் நடக்கிறது. சில ஆண்களும் பொறுமையாக நடந்து அனுசரித்துப் போகிறார்கள். அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. பல நேரங்களிலும், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று உண்மையாகி விடுகிறது.

பெண்ணைப் பெற்றவர்கள் கண்டிப்பாக பெண்களுக்கு கல்வியும், அதனுடன் துணிவையும் கற்றுத் தர வேண்டும். கல்யாணம் செய்து கொண்ட பாவத்திற்காக 'பாவிகளை' பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று அவசியமில்லை. என்று மனைவியை ஒருவன் கை நீட்டி அடிக்க, வார்த்தைகளால் வதைக்க ஆரம்பிக்கிறானோ அன்றே அவன் செத்து விட்டான் என்று தலையில் தண்ணீர் தெளித்து விட்டு, அவள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ சுற்றமும், சொந்தங்களும் நம்பிக்கை அளிக்க வேண்டும்.

பல நிலைகளில் பெண்கள் உயர்ந்து விட்டாலும், காலம் மாறிப் போனாலும் இந்த துயரம் 'நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்' என்று பெண்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!


ஹ்ம்ம்...









Saturday, July 6, 2013

கும்பகோணம்- திருக்கருக்காவூர்

அடுத்த நாள் மீண்டும் ஒரு அதிகாலைப் பயணம். ஹோட்டலில் பில் செட்டில் செய்து விட்டு, கும்பகோண கோவில் கோபுரங்களை வணங்கி அமைதியாக இருந்த அந்த சிறு தெருக்களின் வழியே போய் வழியில் ஒரு உணவகத்தை பார்த்தவுடன் இறங்கினோம். அதிகாலையில் உணவகங்கள், பாத்திரங்கள், டேபிள்கள் என்று எல்லாமே சுத்தமாக பளிச்சென்றிருக்கும்.

அப்பொழுது தான் வாசல் தெளித்து, கோலம் போட்டு, சுவாமிக்கு புது பூமாலை போட்டு, சாம்பிராணி பத்தி வாசம் மணக்க கமகம வென்றிருந்த அந்த ஹோட்டலில் முதல் போணியாக அமர்ந்தோம். சமையற்கட்டில் ஒருவர், கல்லாப் பெட்டிக்கருகே ஒருவர் என்று மொத்தமே இருவர் மட்டும் தான் இருந்தார்கள். ஒரு மேஜை மேல் மொறுமொறுவென்று சுடச்சுட வடைகள் அடுக்கி வைத்திருந்தார்கள். பொங்கல், இட்லி, பூரி என்று எது கேட்டாலும் அழையா விருந்தாளியாக வடையும் வருகிறது!!! சாம்பார், சட்னி வகைகள், பூரி மசாலா, காபி எல்லாமே சுவையோ சுவையுடன். மெதுவாக ஹோட்டலுக்கு ஆட்களும் வர ஆரம்பித்தார்கள். நாங்களும் சாப்பிட்டு முடித்து நடையை கட்டினோம்.

அந்த வழி முழுவதும் இன்னும் மண் சாலை மாதிரி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த தட்டி போட்ட காபி கடைகளில் பாய்லர்- பூ, விபூதி என்று பளிச்சென்றிருக்க, க்ளாஸ் டம்ளர்களில் குடித்துக் கொண்டே பேப்பர் படிப்பதும், அருகில் இருப்பவருடன் பேசுவதும், வேடிக்கை பார்ப்பதும் என்று ஒரு கூட்டம். இவர்களிடம் இருந்து ஏதாவது கிடைக்காதா என்று அவர்களைப் பார்த்துக் கொண்டே நாய்களும்! தெரு முக்குகளில் சீருடை அணிந்த மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் செல்ல தயாராக, அவர்களை வழியனுப்ப வந்த பெற்றோர்கள், ஆடி அசைந்து கொண்டே குண்டு குழி சாலையில் பள்ளி வேன்களும், புறநகர் பஸ்களும்...அப்பா அல்லது அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் சிறு குழந்தைகள், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், தோழர்களுடனும், தோழிகளுடனும் நிற்கும் பருவ வயது மாணவர்கள், கையில் சில புத்தகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு கல்லூரி செல்ல காத்திருக்கும் கூட்டம் என்று பல வயதினரும் அந்த அதிகால வேளையில்பஸ்சுக்காக காத்திருந்தார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த வரை பச்சை நிறமே, பச்சை நிறமே என்று வயல் வெளிகளும் தென்னை மரங்களும். முன்பெல்லாம் இந்த மாதிரி சாலைகளில் வயலை உழுவதற்கு மாடுகளை பூட்டிக் கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் செல்லும் விவசாயிகளைப் பார்க்கலாம். இப்போது CAT/மகேந்திரா என்று மஞ்சள்/பச்சை வண்ணம் அடித்த ராட்சத டயர்கள் கொண்ட வாகனங்களும், ட்ராக்டர்களும் அதிகம் பார்க்க முடிந்தது! வயல்கள் எல்லாம் பொங்கல் அறுவடைக்குத் தயாராக இருந்தது.

இப்படியே ஒரு வழியாக அங்கிருக்கும் கற்பராக்ஷம்பிகை கோவிலுக்கு வந்து சேரும் பொழுது காலை 7.15 மணி இருக்கும். கோவிலில் நுழையும் பொழுதே குளம் வரவேற்கிறது. குளத்தில் நிறைய தண்ணீர், குளம் சுற்றி அஹ்ரகாரத்து வீடுகள், நடுவில் அழகிய அம்மன் சிலை என்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது. கோவில் திறந்திருந்தது. ஓரிரு குடும்பங்களும் கோவில் நடை திறப்பிற்காக காத்திருந்தார்கள். நாங்களும் சேர்ந்து கொண்டோம். கோவில் மாடுகள் அசை போட்டுக் கொண்டே இருப்பதை குழந்தைகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அர்ச்சகர் சாவிக்கொத்துடன் உள்ளே நுழைந்து நடையை திறக்க, நாங்களும் கோவில் அலுவலகத்தில் பூஜைக்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு போனோம். சின்ன கோவில் தான். பெரிய உண்டியல், எடைக்கு எடை தராசு என்று ஜோராக இருந்தது. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் குழந்தை பிறந்த பிறகு பிரார்த்தனை நிறைவேற்ற வருபவர்கள் என்று நல்ல கூட்டம் வரும் இங்கே என்று தம்பி கூறினான். ஒவ்வொரு பொருளாக அட்டவணைப் போட்டு தானம் கொடுத்தால் கிடைக்கும் புண்ணிய பலன்களையும் போட்டிருந்தார்கள்.

இதுவும் ஒரு பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று அங்கு போட்டிருந்தார்கள். தோல் வியாதிகள் நீங்க , கருகாத்த தேவியிடம் குழந்தை வரம் வேண்டி வருவோர் ஸ்தலம் என்றும் பிரபலமான கோவில் இது. கோவில் சுற்றை வலம் வரும் பொழுது மரங்களில் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் நிறைய கட்டியிருந்தார்கள். இங்கிருக்கும் முல்லைவனநாதருக்கு புனுகு அபிஷேகம் செய்கிறார்கள். சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் என்று சன்னதிகள்.

சிறிது நேரம் அங்கே அமைதியாக உட்கார்ந்து விட்டு அழகான கோவிலைப் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தோம்.


Monday, July 1, 2013

கும்பகோணம் - ஆலங்குடி, தாராசுரம்

மதிய உணவை முடித்து கொஞ்ச நேரம் இளைப்பாறிய பிறகு, ஆலங்குடி கோவிலுக்குச் சென்றோம். குருபகவான் கோவிலுக்கு கூட்டத்திற்கு பஞ்சமா, அதுவும் குருப்பெயர்ச்சி நடக்க போகிற நேரத்தில்? பரிகார ஸ்தலம் வேறு! நல்ல கூட்டம். புது வருடத்தை முன்னிட்டு சுவாமி, அம்மன் அலங்காரம் எல்லாம் மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் போன எல்லா கோவில்களிலும் அலங்காரங்கள் எல்லாம் ரொம்பவே சூப்பராக இருந்தது. கோவிலுக்கும் மாலைநேர கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. அர்ச்சகர்கள் அர்ச்சனைத் தட்டுக்களுடன் படு பிசியாக இருந்தார்கள்!நாங்களும் சுவாமி தரிசனம் முடித்து குளத்தையும் வேடிக்கைப் பார்த்து விட்டு வெளியில் வந்தோம்.

தள்ளு வண்டியில் சரக்சரக் என்று சுடுமணலில் கடலை வறுப்பதை பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் ஆளுக்கு ஒரு பொட்டலம் வாங்கிக் கொண்டு கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்து போகையில் திண்ணை வைத்த வீட்டைப் பார்த்தவுடன் வா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து போகலாம் என்று என் மகளுடன் சிறிது நேரம் அங்கு உட்கார்ந்து திண்ணை வீடுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஒட்டுவீடு, வேப்பமர நிழல், நன்றாக வாசல் மொழுகி கோலமிட்டு அந்த இடமே குளுகுளுவென்றிருந்தது. வீட்டுக்குள்ளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். திண்ணை வைத்த வீடுகள் அரிதாகி வரும் இக்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்தது நன்றாக இருந்தது. அங்கு குடியிருப்பவர்கள் நல்ல மனமுடையவர்கள் போல. வீட்டின் முன் வளர்ந்திருந்த வேப்பமரத்தை வெட்டி எறியாமல் அதனைச் சுற்றி நிழலுக்காக கொஞ்சம் எக்ஸ்டென்ஷன்  போட்டிருந்தார்கள். இன்னும் மரங்களை மதிக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே காருக்குள் ஏறினோம்.


வழியில் அபய வரதராஜ பெருமாள் கோவிலைப் பார்த்தவுடன் அங்கும் சென்று விடலாம், ஒரு பெருமாள் கோவிலுக்கு கூட போகவில்லை என்று நினைத்துக் கொண்டு உள்ளே போனோம். மிகப் பழைய கோவில். பராமரிப்பு இன்னும் நிறைய வேண்டும் போல. ஆனால், அழகான கோவில். பெருமாள் கோவில்கள் என்றாலே கன்னங்கரிய பெருமாளும், அழகிய தாயாரும், கருடாழ்வாரும், அனுமனும் என்று அந்த கோவிலிலும் இருந்தது. அர்ச்சகரும் பெருமாளின் பாதம் ஆரம்பித்து பெருமாள் பெருமையை சொல்லிக் கொண்டே தீபாராதனை காட்டி பூஜை செய்தது மகவும் திருப்தியாக இருந்தது. துளசி, பச்சைக்கற்பூரம் போட்ட தீர்த்தம், சிறிது பூ, குங்குமம் என்று அவர் கொடுத்ததை வாங்கி கொண்டு அந்த சின்ன கோவிலை வலம் வந்தோம். அதற்குள் ஒரு சிறு நந்தவனம். கூட்டம் இல்லாததால் அமைதியாக இருந்தது. அர்ச்சகரும் பொறுமையாக பூஜை செய்கிறார்.


பிறகு தாராசுரம் போவோம் அங்கு அழகான சிவன் கோவில் இருக்கிறது
என்று என் தம்பியும் சொல்ல, கேள்விப்பட்டதில்லையே அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கோவிலில் என்று நான் கேட்க, நீ பார்த்தால் உனக்குப் புரியும் என்று சொன்னதும் ரொம்பவும் ஆர்வமாகி விட்டது எனக்கு. சாலைகள் எல்லாம் நன்றாக இருந்தது. வழிகாட்டிகளும் நன்றாகவே வைத்திருக்கிறார்கள். இந்த பஸ்நிலையத்தில் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சில காட்சிகள் எடுத்திருந்தார்கள், கும்பகோணம் கலைக் கல்லூரியில் விக்ரம் படம் ஒன்றும் எடுத்தார்கள் என்று சொல்லிக் கொண்டே வர, தாராசுரமும் வந்து விட்டது. கொஞ்சம் நெரிசலான நகர்.
தாராசுரம்

நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட புல்வெளிகள். வண்டிகளை நிறுத்த வசதியாக இடங்கள் என்று பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது, இந்த கோவில் தொல்லியல் துறையின் கீழிருக்கிறது என்று. மாலை நேரம் நல்ல கூட்டம் இருந்தது. கோவில் வெளிச்சுற்று சுவர்களைப் பார்த்தவுடனேயே தஞ்சாவூர் கோவில் ஞாபகம் வந்தது.

தாராசுரம்
 கோவில் சுற்றுச் சுவற்றில் ஒரே அளவில் சிறுசிறு நந்தி சிலைகள். சில உடைந்த நிலையில். உள்ளே நுழைந்தவுடன் வரவேற்கும் ரத மண்டபம் மட்டுமே போதும் சோழ அரசர்களின் கலை ஆர்வத்தையும், கலைஞர்களின் வித்தையையும் பறைசாற்றும். தேரின் குதிரைகள், சக்கரங்கள் சிதிலமடைந்து அதை ஒட்டி சரி செய்திருக்கிறார்கள். கோவிலின் பெரும்பாலான சிலைகள் சேதமடைந்து அதை கவனத்துடன் சேர்த்து அதன் கலைஅழகை முடிந்தவரையில் பராமரித்திருக்கிறார்கள். சிலைகளை பார்க்கும் போதே சேதங்கள் நன்கு தெரிகிறது. குழந்தைகள் குதிரை, யானை சிலைகள் மேல் அமர்ந்து விளையாடி கொண்டிருந்ததைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெரிய நாயகி அம்மனும், ஐராவதேஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள்.

நீண்ட மண்டபகங்கள், பெரிய விமானங்கள் என்று தஞ்சாவூர் கோவில் அளவு இல்லை என்றாலும் மீண்டும் மீண்டும் அந்த கோவிலையே நினைவுறுத்தியது. பிரகாரங்களை சுற்றி வரும் பொழுது மூக்குடைந்து, கையுடைந்து இருந்த சிலைகளை பார்க்க வருத்தமாக இருந்தது. சே எப்படி எல்லாம் கலைப் பொக்கிஷங்களை உடைத்து வைத்திருக்கிறார்கள் மூடர்கள் என்று நாங்கள் பேசிக் கொண்டே போகும் பொழுது சௌராஷ்டிராவில் ஒருவர் இதெல்லாம் படையெடுப்பில் இப்படி ஆகி விட்டது என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனார்! வெளியில் உடைந்த நிலையில் மதில்கள், பெரிய அகழி போன்று கோவிலைச் சுற்றி. மாலை சூரியன் மறையும் நேரத்தில் அந்தக் கோவில் கோபுரங்கள் தகதக வென்று ஜொலிப்பதை பார்த்துக் கொண்டே கோவிலை விட்டுப் போக மனமில்லாமல் வெளியில் வந்தோம்.

தாராசுரம்
கண்குளிர தரிசனத்தை முடித்து விட்டு கும்பேஸ்வரர் கோவிலுக்குத் திரும்பினோம். மாலை நேரம். கூட்டம் வர ஆரம்பித்திருந்தது. காலணிகள் பாதுகாக்கும் இடம் என்ற இடத்தில் இலவசம் என்று போட்டிருந்த பலகை எனக்கென்ன என்று சிரித்துக் கொண்டிருந்தது. ஒரு பெண்மணி செருப்புகளுக்கு டோக்கன் கொடுத்துக் கொண்டே வர, நாங்களும் எங்கள் டோக்கனை வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் போனோம். பார்த்த முகங்கள் எல்லாம் சௌராஷ்டிரா மக்கள் என்று சொல்லி விடலாம். நிறைய சௌராஷ்டிரா மக்கள் கும்பகோணத்தில் இருக்கிறார்கள்!

பெரிய ராஜகோபுரம்! நீண்ட மண்டபகங்கள். நடுநாயகமாக கும்பேஸ்வரர் வீற்றிருக்க, அழகிய மங்களாம்பிக அன்னையின் சன்னிதானமும் பக்கவாட்டில். விநாயகர், முருகன், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மற்றும் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இருப்பது போல் பிட்சாடனார், நந்தி, லிங்கங்கள், நவக்கிரகங்கள் என்று ஏராளமான சன்னதிகள். குளமும் அழகாக பெரியதாக இருந்தது. கண்குளிர சுவாமி தரிசனம் முடிந்தது. கரண்ட் இல்லாததால் சில இடங்கள் இருளில் :(

வெளியில் வந்து காலணிகளை இங்கே விட்டு செல்லுங்கள், இலவசம் என்ற பலகையின் கீழ் காசு கொடுத்தால் தான் ஆச்சு என்று ஒரு வழியாக செருப்பை வாங்கிக் கொண்டு இருட்டில் கோவிலை விட்டுத் தெருவிற்கு வந்தோம். சிறு கடைகள் எல்லாம் மெழுகுவர்த்தி உதவியுடன், பெரிய பெரிய ஆள் முழுங்கி ஆலுக்காஸ், சேலைக்கடைகள் எல்லாம் ஜெனரேட்டர் உதவியுடன் ஒளி வெள்ளத்தில்! கும்பகோணம் கொசுக்களின் ஆதிக்கம் வேறு ஆரம்பமாகி விட, தூக்கமும் படுத்த வரும் வழியில் சாரங்கபாணி பெருமாள் கோவிலைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டே, ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் பேசி விட்டு பழங்கள், பால் சாப்பிட்டு விட்டு நானும் என் மகளும் தூங்கி விட, என் தம்பி இரவு சாப்பாடு சாப்பிட கிளம்ப...

அந்த நாள் என் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததை நினைத்து ஆனந்தமாக தூங்கிப் போனேன்.

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...