அப்பொழுது தான் வாசல் தெளித்து, கோலம் போட்டு, சுவாமிக்கு புது பூமாலை போட்டு, சாம்பிராணி பத்தி வாசம் மணக்க கமகம வென்றிருந்த அந்த ஹோட்டலில் முதல் போணியாக அமர்ந்தோம். சமையற்கட்டில் ஒருவர், கல்லாப் பெட்டிக்கருகே ஒருவர் என்று மொத்தமே இருவர் மட்டும் தான் இருந்தார்கள். ஒரு மேஜை மேல் மொறுமொறுவென்று சுடச்சுட வடைகள் அடுக்கி வைத்திருந்தார்கள். பொங்கல், இட்லி, பூரி என்று எது கேட்டாலும் அழையா விருந்தாளியாக வடையும் வருகிறது!!! சாம்பார், சட்னி வகைகள், பூரி மசாலா, காபி எல்லாமே சுவையோ சுவையுடன். மெதுவாக ஹோட்டலுக்கு ஆட்களும் வர ஆரம்பித்தார்கள். நாங்களும் சாப்பிட்டு முடித்து நடையை கட்டினோம்.
அந்த வழி முழுவதும் இன்னும் மண் சாலை மாதிரி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த தட்டி போட்ட காபி கடைகளில் பாய்லர்- பூ, விபூதி என்று பளிச்சென்றிருக்க, க்ளாஸ் டம்ளர்களில் குடித்துக் கொண்டே பேப்பர் படிப்பதும், அருகில் இருப்பவருடன் பேசுவதும், வேடிக்கை பார்ப்பதும் என்று ஒரு கூட்டம். இவர்களிடம் இருந்து ஏதாவது கிடைக்காதா என்று அவர்களைப் பார்த்துக் கொண்டே நாய்களும்! தெரு முக்குகளில் சீருடை அணிந்த மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் செல்ல தயாராக, அவர்களை வழியனுப்ப வந்த பெற்றோர்கள், ஆடி அசைந்து கொண்டே குண்டு குழி சாலையில் பள்ளி வேன்களும், புறநகர் பஸ்களும்...அப்பா அல்லது அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் சிறு குழந்தைகள், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், தோழர்களுடனும், தோழிகளுடனும் நிற்கும் பருவ வயது மாணவர்கள், கையில் சில புத்தகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு கல்லூரி செல்ல காத்திருக்கும் கூட்டம் என்று பல வயதினரும் அந்த அதிகால வேளையில்பஸ்சுக்காக காத்திருந்தார்கள்.
கண்ணுக்குத் தெரிந்த வரை பச்சை நிறமே, பச்சை நிறமே என்று வயல் வெளிகளும் தென்னை மரங்களும். முன்பெல்லாம் இந்த மாதிரி சாலைகளில் வயலை உழுவதற்கு மாடுகளை பூட்டிக் கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் செல்லும் விவசாயிகளைப் பார்க்கலாம். இப்போது CAT/மகேந்திரா என்று மஞ்சள்/பச்சை வண்ணம் அடித்த ராட்சத டயர்கள் கொண்ட வாகனங்களும், ட்ராக்டர்களும் அதிகம் பார்க்க முடிந்தது! வயல்கள் எல்லாம் பொங்கல் அறுவடைக்குத் தயாராக இருந்தது.
இப்படியே ஒரு வழியாக அங்கிருக்கும் கற்பராக்ஷம்பிகை கோவிலுக்கு வந்து சேரும் பொழுது காலை 7.15 மணி இருக்கும். கோவிலில் நுழையும் பொழுதே குளம் வரவேற்கிறது. குளத்தில் நிறைய தண்ணீர், குளம் சுற்றி அஹ்ரகாரத்து வீடுகள், நடுவில் அழகிய அம்மன் சிலை என்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது. கோவில் திறந்திருந்தது. ஓரிரு குடும்பங்களும் கோவில் நடை திறப்பிற்காக காத்திருந்தார்கள். நாங்களும் சேர்ந்து கொண்டோம். கோவில் மாடுகள் அசை போட்டுக் கொண்டே இருப்பதை குழந்தைகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அர்ச்சகர் சாவிக்கொத்துடன் உள்ளே நுழைந்து நடையை திறக்க, நாங்களும் கோவில் அலுவலகத்தில் பூஜைக்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு போனோம். சின்ன கோவில் தான். பெரிய உண்டியல், எடைக்கு எடை தராசு என்று ஜோராக இருந்தது. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் குழந்தை பிறந்த பிறகு பிரார்த்தனை நிறைவேற்ற வருபவர்கள் என்று நல்ல கூட்டம் வரும் இங்கே என்று தம்பி கூறினான். ஒவ்வொரு பொருளாக அட்டவணைப் போட்டு தானம் கொடுத்தால் கிடைக்கும் புண்ணிய பலன்களையும் போட்டிருந்தார்கள்.
இதுவும் ஒரு பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று அங்கு போட்டிருந்தார்கள். தோல் வியாதிகள் நீங்க , கருகாத்த தேவியிடம் குழந்தை வரம் வேண்டி வருவோர் ஸ்தலம் என்றும் பிரபலமான கோவில் இது. கோவில் சுற்றை வலம் வரும் பொழுது மரங்களில் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் நிறைய கட்டியிருந்தார்கள். இங்கிருக்கும் முல்லைவனநாதருக்கு புனுகு அபிஷேகம் செய்கிறார்கள். சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் என்று சன்னதிகள்.
சிறிது நேரம் அங்கே அமைதியாக உட்கார்ந்து விட்டு அழகான கோவிலைப் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தோம்.
ஒரு முறையோ / இரு முறையோ இந்தக் கோவிலுக்கு சென்றதுண்டு... சிறப்புக்கள் அதிகம் உள்ள கோவில்...
ReplyDeleteபயணத்தை தொடர்கிறேன்...
உண்மை தான் தனபாலன். பல சிறப்புக்கள் கொண்ட கோவில் என்று தெரிந்து கொண்டேன். அழகான அம்மன் :)
Deleteபயணத்தை தொடருவதற்கு நன்றி!
நான் இந்தக் கோவிலுக்குப் போனதில்லை. தகவல்கள் எனக்கு புதிது. :)
ReplyDelete//ஒவ்வொரு பொருளாக அட்டவணைப் போட்டு தானம் கொடுத்தால் கிடைக்கும் புண்ணிய பலன்களையும் போட்டிருந்தார்கள்.//
நாத்திகம் இங்கேதான் துளிர் விடுகிறது. :)
//நாத்திகம் இங்கேதான் துளிர் விடுகிறது.// :(
Delete