Saturday, February 20, 2016

எல்லோரும் கொண்டாடுவோம்...


தாய்பாஷை பேசும் மக்கள் சூழ்ந்திருந்த தெருக்களில் வளர்ந்ததால் தமிழ் மொழி பேசுவது பள்ளியில், கடைகளுக்குச் செல்கையில் மட்டுமே. தமிழ் அவ்வளவு பரிச்சயமும் கிடையாது. ஏன், யாராவது ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசவோ தமிழில் திட்டவோ கூட தெரியாது அப்போது. ஒரு முறை கல்லூரியிலிருந்து வர தாமதமாகும் என்று அம்மாவிடம் தமிழில் சொல்லி விட்டேன். வீட்டிற்கு வந்தவுடன் சௌராஷ்ட்ராவில் பேசாமல் தமிழில் ஏன் என்னுடன் பேசினாய் என்று அவருக்கு ஒரே கோபம். எதற்காக இவ்வளவு கோபப்படுகிறார் என்று அப்போது எனக்குப் புரியவில்லை. எங்கிருந்தாலும் யார் கூட இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களிடம் பேசும் பொழுது சௌராஷ்ட்ராவில் மட்டுமே பேச வேண்டும் கறாராக அன்று அம்மா சொன்னது இன்றும் நினைவில் வைத்து அப்படித்தான் இருக்கிறேன். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

தாய்மொழியின் மகத்துவம் தாய்நாட்டில் இருக்கும் வரை தெரிவதில்லை. கனடாவில் கால் வைத்தவுடன் கணவரின் நண்பர் தினேஷை ( மதுரைக்காரரும் கூட ) பார்த்துப் பேசியவுடன் இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் தாய் வீட்டை விட்டுப் பிரிந்த வலி குறைந்தது மட்டுமில்லாமல் அந்நிய தேசத்தில் என் பாஷையில் உரையாட முடியும் என்ற நினைவு தந்த இன்பம் அனுப்பவித்தவர்களுக்குத் தான் தெரியும். வீட்டிற்கு வந்தவுடன் எங்களுக்காக உணவை கொண்டு வந்து கொடுத்த ராம், மதுரையிலிருந்து வந்திருந்த மதி என்று நண்பர்கள் கிடைக்க, வெளிநாட்டில் இருந்தாலும் தமிழில் பேச ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் கனடாவில் வாழ்க்கை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் தொலைக்காட்சியில் வரும் சில மணிநேர தமிழ் நிகழ்ச்சிகளுக்காக காத்திருந்த காலங்களும் உண்டு.

பஸ்ஸில், கடைகளில் என்று எங்கு பார்த்தாலும் பல தேசத்திலிருந்து வந்த மனிதர்கள். தமிழ் முகம் போல தெரிந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய இலங்கைத் தமிழ் மக்கள். அவர்களுடைய பேச்சுத்தமிழ் கேட்க அவ்வளவு இனிமையாக! நாம் தான் தமிழ் மொழியை கலப்படமாக்கி விட்டோம்!

முதன் முதலில் பஸ்ஸில் பயணிக்கையில் தமிழில் உரக்க பேசிக்கொண்டே இருவர். அரசியல், சினிமா, சர்ட்டிபிகேஷன் , கணினி மொழிகள் என்று அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டே வருவேன். கணவரிடம் அவ்விருவரைப் பற்றி சொன்னவுடன் உன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது தானே என்றார். நானாக போய் பேச மாட்டேன். பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். ஆனால், சில தமிழ் குடும்பங்கள் இருக்கிறது என்று ஒரு சின்ன திருப்தி.

ஒரு நாள் கடை வாசலில் அவ்விருவரில் ஒருவர் நின்று கொண்டிருக்க, கணவரிடம் இவர் தான் பஸ்ஸில் வருவார் என்றவுடன் அவரிடம் போய் அறிமுகப்படுத்திக் கொள்ள, பார்த்தால் அருப்புக்கோட்டைக்காரர். அடுத்த நாள் பஸ் நிறுத்தத்தில் அவருடைய நண்பர் சையதை அறிமுகப்படுத்தினார். அவர் திருச்சிக்காரர். நீங்க தமிழ் பேசுவீங்கன்னு தெரியாது. பார்த்தா நார்த் இந்தியன் மாதிரி இருக்கீங்க என்று அன்று ஆரம்பித்த நட்பு இன்றும் தொடருகிறது. தாய்மொழி , தமிழ்மொழி பேசும் நண்பர்கள் பலர் கனடாவில் அறிமுகமாகி இன்றும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா வந்த பிறகு மகளையும், கணவரையும் பிரிந்து நான் மட்டும் தனியே ஹோட்டலில் தங்கி வேலைக்குச் செல்ல .வேண்டிய நிலை. ஊரில் இருந்தவரை தனியாக இருந்ததில்லை. தனிமை தந்த பயமும், தூக்கமிழந்த இரவுகளும், புது இடமும், பழகாத பனியும், குளிரும் மிகுந்த மன அழுத்தத்தை தந்தன. வேலையிடத்தில் மனிதர்கள் எப்படி பழகுவார்களோ என்ற தயக்கம் வேறு.

முதல் நாள் வேலைக்குச் சென்ற அன்று பல இந்தியர்களை பார்த்த்தில் ஒரு திருப்தி. சேலத்தில் இருந்து வந்திருந்த ஸ்ரீதேவியின் அறிமுகம் கிடைத்த உடன் தமிழில் பேசிய அந்த பொழுதில் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருடைய கணவர் கண்ணன் மதுரை திருநகரைச் சேர்ந்தவர். இது போதாதா? கண்ணனும் மதுரை என்றவுடன் விவரங்களை கேட்டறிந்து பாசத்துடன் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். பெரும்பாலும் இரவு உணவு அவர்கள் வீட்டில் தான். நல்ல நண்பர்கள் ஆனோம்.

பிறகு வேறு மாநிலத்தில் வேலை. Utah என்றால் பலருக்கும் அப்போது தெரியவில்லை. சால்ட் லேக் சிட்டி-யில் இறங்கிய பொழுது என்ன மாதிரியான ஊர், எப்படி இருக்கப் போகிறது வாழ்க்கை என்று எதுவுமே தெரியாமல் கலக்கமாகவே சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் பாம்பே ரெஸ்டாரன்ட் என்ற போர்டை பார்த்தவுடன் அப்பாடா, ஒரு இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறது. நிச்சயம் இந்தியர்கள் இருப்பார்கள் என்று அன்றிரவு உணவைச் சாப்பிட உடனே கிளம்பி விட்டோம்.

நல்ல கூட்டம். மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த ஹிந்திப்பாடல், கதம்பமான மசாலா நறுமணம். மனம் சாந்தி சாந்தி சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடி என்று பாடுகையில் புது முகங்களாக இருக்கிறதே என்று அந்த ஹோட்டலின் உரிமையாளர் வந்து யார் எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்கள் கேட்டு, தமிழில் பேசி கொடுத்தாரே ஒரு ஷாக்! அவர் கோயம்புத்தூர்க்காரர். சூப்பராக ஸ்பெஷலாக உணவுகளை சமைக்கச் சொல்லி கொடுத்தார். ஐந்தாறு பேர் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று அவர் சொன்ன பிறகு Utah பிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த நண்பர்களையும் அதே வாரத்தில் சந்தித்து பிறகு வந்த நாட்களில் ஒரு குடும்பமாக சுற்றிக் கொண்டு திரிந்தோம். அமெரிக்காவில் மிகவும் ஊர் சுற்றியது அந்த நண்பர்களுடன் தான். இன்றும் பலருடன் தொடர்பில் இருக்கிறோம்.

இன்று நினைத்துப் பார்க்கையில் தாய் பாஷையும், தமிழ் மொழியும் தான் பல நண்பர்களை அயல்மண்ணில் இணைத்தது. மிக நல்ல மனிதர்களையும் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியது. மனதிற்கு மொழி தரும் அமைதி, நெருக்கத்தைப் போல் வேறு எதுவுமில்லை. என்ன தான் அமெரிக்க நண்பர்கள் இருந்தாலும் தமிழ் மொழியில் பேசி சிரித்து நண்பர்களுடன் அளவளாவது தனியொரு இன்பம். அதனினும் பேரின்பம் தாய் பாஷையில் பேசும் பொழுது மதுரையில் குடும்பத்தினருடன் இருப்பது போல் தரும் உணர்வு... வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 

U.S. வந்த பிறகு சென்னைக்கு சென்ற முதல் விசிட்டில் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருக்கும் தமிழர்கள் ஆங்கிலத்தில் கதைத்ததை கண்டு ஒரே அதிர்ச்சி! கேட்டால், ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் ஆங்கிலம் தெரியாது என்று முத்திரை குத்தி விடுவார்களாம். இப்படியும் சிலர்! நல்ல வேளை ! மதுரை இன்னும் அந்த அளவிற்கு மோசமாகவில்லை. 

அவரவர் தாய்மொழியை கொண்டாடுவோம், அதன் அருமையை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் சொல்லுவோம்.


maathru bhaaShaa divas!

தாய்மொழிக்கு வந்தனம். 

பின் குறிப்பு: என் பெயரை சௌராஷ்டிராவில் எழுதி கொடுத்த கொண்டா.செந்தில்குமாருக்கு நன்றி.




































Thursday, February 18, 2016

ஆத்தா நான் பாஸாயிட்டேன் ...

மதுரையில் இருந்த வரை பஸ், பைக், கை தட்டினால்  ரிக்க்ஷா, ஆட்டோ என்று பழகி விட்டு கனடாவிற்கு வந்ததும் வெளியில் சென்று வர பஸ் மற்றும் ரயிலை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.  சொன்ன நேரத்திற்கு 'டான்' என்று வரும் கூட்டமில்லாத பஸ்களும், ஓரளவு கூட்டத்துடன் வரும் ரயில்களும் போக்குவரத்தை எளிதாக்கி அதற்கும் பழகியாகி விட்டது. ஆனால் அமெரிக்கா வந்தவுடன் தான் காரில்லாமல் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல என்று புரிந்தது.

பனி கொட்டும் குளிர் வாட்டும் மிக்சிகனில் குடியிருந்த இடத்திலிருந்து கடைகளுக்கு, நண்பர்களைப் பார்க்க, வேலையிடத்திற்குச் செல்ல வண்டி  இல்லாமல் வாழ முடியாது என்ற கட்டாயத்தால் கார் வாங்க வேண்டிய சூழ்நிலை. கணவரின் சித்தப்பா பையனின் நண்பர், கல்லூரியில் படிக்கும் காலத்தில் வாங்கிய Mazda MX 6 என்ற ஸ்போர்ட்ஸ் கார்(!) மட்டுமே எங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வர...ஒரு சுபமுகூர்த்த நாளில் கணவர் சென்று வாங்கி ஒட்டிக் கொண்டு வந்து விட்டார்!

அடுத்த தலைவலி அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. ஆம், வண்டி ஓட்ட பழக வேண்டுமாம். நானா! ஐயோ! எப்படி? இதென்ன கொடுமை? கற்றுத் தான் ஆக வேண்டும். நான் கற்றுக் கொடுக்கிறேன். கவலைப்படாதே. தைரியமாக ஓட்டு.  எவ்வளவு சீக்கிரம் கற்றுக் கொண்டு தனியாக இருக்க முடிகிறதோ அப்பொழுது தான் நானும் நிம்மதியாக வேலைக்குச் சென்று வர முடியும் என்று எளிதாக சொல்லி விட்டார்ஆம்படையான்.

வேறு வழியில்லை. முதலில் ரிட்டன்(written) டெஸ்ட் என்று சாலை விதிகளைப்  படித்து அந்த தேர்வில் பாஸாக வேண்டுமாம். படிக்கத் தானே வேண்டும். இதெல்லாம் ஜுஜுபி. அது முடிந்தவுடன், வண்டி ஓட்டிப் பழக ஒரு தற்காலிக லைசென்ஸ் கொடுத்தார்கள். இனி கணவரின் மேற்பார்வையில்  வண்டியை ஓட்டலாம்.

வார இறுதியில் நாங்கள் குடியிருந்த அபார்ட்மெண்ட் அருகில் இருந்த கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாயிற்று என் கார் டிரைவிங் பயிற்சி. நடுங்கிக் கொண்டே சாவியை வாங்கிக் கொண்டு டிரைவர் சீட்டில் உட்காரும் பொழுது எனக்குத் தெரிந்த எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன். பின் சீட்டில் நான் ஓட்டப்போவதை வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்த மகளை நினைத்து தான் கவலையாக இருந்தது. கடவுளே, நான் பத்திரமா வண்டி ஓட்டணும், அட்லீஸ்ட் என் குழந்தைக்காக. முருகனின் மேல் பாரத்தை விட்டு, கணவரை பார்த்தால்...

இது தான் பிரேக். வண்டி மெதுவா போக, நிறுத்த. இது தான் ஆக்சிலரேட்டர். வேகமா போகணும்னா இது மேல மெதுவா காலை வச்சு அமுக்கணும்.  D,P,N கியர்களை பற்றிச் சொன்னார். கடவுளே, மெக்கானிக்கல் லேப்-ஐ விடக்  கொடுமையா இருக்கே.

ம்ம்ம். இப்ப ஸ்டார்ட் பண்ணு.

எப்படி?

பிரேக் மேல கால வச்சு ஸ்டார்ட் பண்ணு.

சரி.

ஏன் இப்படி போட்டு அழுத்தற?

மெதுவா மெதுவா...நீ ஒண்ணும் பண்ண வேணாம். அப்படியே நேரா ஓட்ட மட்டும் செய்.

எதுக்கு ஸ்டியரிங்க இப்படி அழுத்தி பிடிச்சிக்கிட்டு இருக்க? ரிலாக்ஸ்டா இரு. ஏன் இவ்வளவு முன்னாடி உட்காந்திருக்க?

ஸ்ஸ்ஸ்ஸ்...எங்கேயாவது முட்டிடுவேனோன்னு பயமா இருக்கு.

அஞ்சு மைல் ஸ்பீட்ல ஒன்னும் ஆகாதுன்னு சொல்றப்ப கணவர் முகத்தில் ஒரு நக்கலான சிரிப்பு. இதே வேற சமயமா இருந்தா ஒரு காச்சு காச்சு எடுத்திருக்கலாம். நான் இருந்த பதட்டத்தில் உடலெங்கும் ஒரே படபடப்பு.  சே! என்ன ஒரு சோதனை!

நேர போ. கார் எங்கேயோ போகுது. உனக்குத் தெரியலையா?

என்னத்த தெரியுது?

எதுக்கு 'சடக்சடக்'ன்னு திருப்புற? ஸ்டியரிங்க மெதுவா திருப்பு.

இப்படியே ஒரு அரைமணி நேரம் ஓட்டி... சரி, நாளைக்கு வரலாம்.

அப்பாடா! தப்பிச்சோம்டா சாமின்னு இன்ஜினியரிங் டிராயிங் வகுப்பிலிருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருந்தது.

அடுத்த நாள் மீண்டும் அதே இடத்தில். இன்றும் வண்டியை நேராக ஓட்ட பயிற்சி. ஏதோ flintstone படத்தில் வருகிற வண்டி மாதிரி கார் நடந்து கொண்டிருந்தது.

ம்ம்ம்...இன்னைக்குப் பரவாயில்ல. மெதுவா ஆக்சிலரேட் பண்ணு.

ஜூம்!

ஐயோ, என்ன பண்றே?

நீங்க தான...

அதுக்கு? மெதுவா போ. நீ வண்டி ஓட்ட கத்துக்கறதுக்குள்ள எனக்கு BP வந்துடும் போலிருக்கு!

வரும் நாட்களில் காரை திருப்புவது, பார்க்கிங் பண்ணுவது, ரிவர்ஸில் எடுப்பது என்று போக...

எங்க போற? கார் எங்கியோ போகுது. எந்தச் சக்கரம் எப்படி திரும்புதுன்னு கூட உனக்குத் தெரியல.

எனக்கு எப்படித் தெரியும்?

கத்துக்கணும்னு ஆசை இருக்கா இல்லியா?

சே! எனக்கு இந்த டிரைவிங் பிடிக்கல.

வேற வழியில்ல. இங்க இருக்கணும்னா கத்துத் தான் ஆகணும். ஸ்டியரிங் திரும்பறப்ப எந்த சக்கரம் எப்படி திரும்புதுன்னு பாரு. அப்ப தான் காரை திருப்ப, ரிவர்ஸில எடுக்கறப்ப வசதியா இருக்கும்.

இப்ப வண்டிய ரிவர்ஸில எடு.

கடவுளே!! என்னைய காப்பாத்து.

பாரு. வண்டி அதுபாட்டுக்கு எங்கியோ போகுது. நல்ல வேளை. இன்னிக்கு காலேஜ் லீவு. இல்லன்னா பத்து பதினெஞ்சு பேரு அவுட்டு.

அழுகை தயாராக கண்களில். ஏன் எனக்கு மட்டும் கார் ஓட்டுவது இவ்வளவு சிரமமாக இருக்கிறது?

இறங்கிப் போய் கார் எப்படி நிக்குதுன்னு பாரு. இப்ப புரியுதா நீ எப்படி ஓட்டினேன்னு?

சரி,  இப்ப பார்க் பண்ணு.

நேரா இருந்தாலே பார்க் பண்றது வராது. இது வேற முறைச்சுக்கிட்டு நிக்கிற மருமகள் மாதிரி நின்னுக்கிட்டு இருக்கு. முருகா!

ஸ்டியரிங்கை வளைத்து வளைத்து இரு கோடுகளுக்கிடையில் வளைந்து நின்ற வண்டியை பார்த்து மகளும், அம்மா , எப்படி  நிக்குது. பாரு என்று அவள் பங்குக்கு வேறு எடுத்துக் கொடுக்க...போதும் போதும் இன்னைக்கு.

கார் ஓட்டப் பழக என்றாலே வேப்பங்காயாக கசக்க, எப்படியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறியும் கூடவே.

அடுத்த வாரத்திலிருந்து ரோட்ல ஓட்ட கத்துக்கலாம்.

என்னது? ரோட்லையா?? எனக்குப் பயமா இருக்கு.

அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் தான் இருக்கேன்ல.

இப்ப லெஃப்ட்ல திரும்பு. அந்த நேரத்தில் எது லெஃப்ட், எது ரைட் என்று ஒரு சின்ன குழப்பம்.

என்ன நடு ரோட்ல நின்னு யோசிச்சுக்கிட்டு? போலீஸ் பார்த்தா டிக்கெட் கொடுத்துடுவான்.

ஆமாமா, லைசென்ஸ் இல்லாதப்ப நல்லா குடுத்துருவான். ம்ம்ம்...

யாருக்குத் தெரியும்? லைசென்ஸ் இல்லாம டிக்கெட் வாங்குனாலும் வாங்கிடுவ நீ!

எத்தனை நாள் கோபமோ? மனுஷன் இப்படி போட்டு பார்க்குறாரே? முதல்ல லைசென்ஸ் வாங்கணும். அப்புறம் இருக்கு. இந்த நக்கலுக்கெல்லாம் பதிலடி.

என்ன? நீ பாட்டுக்கு ஒட்டிக்கிட்டே போற? அங்க எல்லோ விழுந்து ரெட் சிக்னல் வரப்போகுது. எல்லோ பார்த்தவொடன மெதுவா போகாம வேகமா போற?

சரி சரி!

ரைட்ல திரும்பு. பார்த்து பார்த்து. எதுக்கு இப்ப பிளாட்பார்ம்ல வண்டிய ஏத்துன? கொஞ்சம் விட்டிருந்தா அந்தக் கல்-ல முட்டியிருக்கும் காரு. எங்க போகுது, எப்படி திரும்புதுன்னு ஒரு ஐடியாவும் இல்ல.

ரோட்ல போறப்ப வர்ற தகவல் பலகைகளையும் படிக்கணும். இந்த ரோட்ல எவ்வளவு ஸ்பீட்னு தெரியுமா?

ஙே!

இப்படி முழிச்சா?? அடுத்த சிக்னல்ல லெஃப்ட்ல திரும்பணும்.

தலையில் அடித்துக் கொண்டே, எதுக்கு இவ்வளவு க்ளோஸ் டர்ன்?  கொஞ்சம் விட்டிருந்தா அந்த கார் மேல இடிச்சிருப்ப.

என்னை கடந்து செல்லும் பெரிய பெரிய ட்ரக்குகள் வேறு ஒரு வித பயத்தை ஊட்டின. ஒண்ணு அந்த வண்டிக்கு முன்னாடி போகணும். இல்லைன்னா பின்னாடி வரணும். blind spot பற்றி விலாவாரியாக சொன்ன போது கலவரமாக இருந்தது.

எப்பவுமே அலர்ட்டா இருக்கணும். கண்ணாடிகளை அடிக்கடி பார்த்து பின் வரும் வண்டிகள் எவ்வளவு அருகில் வருகிறது, மெதுவாக தலையை திருப்பி பின்னால், பக்கவாட்டில் வரும் வண்டிகளை பார்த்து, வண்டியில் சிக்னல் போட்டு ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு தான் லேன் மாற வேண்டும். கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொன்னாலும் பதட்டத்தில் மறந்து அதற்கும்  திட்டு வாங்கி...

குழந்தை இருக்கிறாள்  பத்திரமாக ஓட்ட வேண்டும் என்ற நினைவு மேலும் பதட்டத்தை ஏற்படுத்த...

ஹைவேஸ்ல ஓட்டுறது ஈஸி. என்ன, வேகமாக சென்று கொண்டிருக்கும் போக்குவரத்துடன் வண்டியின் வேகத்தை கூட்டிக் கொண்டே merge ஆவது தான் ஆரம்பத்தில் கஷ்டம். போகப்போக சரியாகி விடும். விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஹைவேஸ் ஓட்டிப் பழக மட்டும் தனியாக ஓட்டுனர் பள்ளியில் வகுப்புகள் எடுத்துக் கொண்டேன்.

ஒரு வழியாக,  காரை பார்க் பண்ண (ஒய்யார கொண்டை மாதிரி வளைந்து தான் நின்றது!) ஸ்டாப் சிக்னலில் நிறுத்த, வலது, இடது திருப்பங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அடுத்த பூதத்திற்கு தயாராக வேண்டும்.

வரிசையாக நிற்கும் இரு கார்களுக்கு இடையில் நிறுத்தும் parallel பார்க்கிங் ! ரொம்ப அவசியமடா உங்களுக்கு? சில நாட்கள் பயிற்சி எடுத்தும் வருவேனா என்றது.

அதற்குள் வேறு வேலை காரணமாக DMV அலுவலகத்திற்குச் சென்ற வேளையில், கூட்டமே இல்லை, நீ வேணா டிரைவிங் டெஸ்ட் எடுத்துப் பாரேன். நானும் கொஞ்சமும் யோசிக்காமல், எடுத்தால் தான் என்ன என்று பெயரை கொடுத்தவுடன் தான் பயம் கவ்விக் கொண்டது. அய்யோயோ, எனக்கு parallel பார்க்கிங் பண்ண தெரியாது?

அதெல்லாம் ஒகே.

என்ன சொல்றீங்க?

சும்மா போயிட்டு வா. எல்லாம் நல்லா பண்ணா parallel பார்க்கிங் கண்டுக்காம கூட இருக்கலாம்.

அப்படியா? ஒரு நப்பாசையுடன் நானும் கிளம்ப,

அந்த DMV ஆஃபீசர் பேனா, நோட்டு சகிதம் வந்து என் பெயரை சொல்லி அழைக்க, பார்த்தால் நல்லவராக இருக்கிறார். பார்க்கலாம்.

ஆல் தி பெஸ்ட்,  சிரிப்புடன் என்னை வாழ்த்தி  கணவரும், மகளும்...

அலுவலக வளாகத்திற்குள் மாடல் சாலைகளை போட்டு வைத்திருக்கிறார்கள். ஸ்டாப், லெஃப்ட், ரைட், ட்ரைன் கிராஸிங் எல்லாம் ஒகே.

இங்க parallel பார்க்கிங் பண்ணலாம்.

ஆ! ஐயோ!  என் அதிர்ச்சியான முகமே அவருடைய வேலையை சுலபமாக்கி இருக்கும்.

சுத்தம். நல்லா கத்துக்கிட்டு வாங்க. அடுத்த முறை பார்க்கலாம்.

வாழ்க்கையில் முதல் முறை தோல்வியை எதிர் கொண்ட நாள். எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

இப்ப யாரையாவது சாட வேண்டுமே! நீங்க தான் அவசரப்பட்டு என்னைய போகச் சொன்னீங்க. நல்லா ப்ராக்டிஸ் பண்ணி இருந்திருக்கலாம். நான் இதுவரைக்கும் ஃபெயில் ஆனதே இல்லை. எல்லாம் உங்களால தான். இனிமே உங்க பேச்ச கேட்க போறதில்ல.

வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு யூ டிட்ன்ட் லூஸ் எனிதிங். அடுத்த முறை டெஸ்ட் ஈசியா இருக்கும். parallel பார்க்கிங் மட்டும் தான் இப்ப பழகணும். கமான். சியர் அப்!

ஆனாலும், இவ்வளவு மோசமா நீ parallel பார்க்கிங் பண்ணி இருக்க கூடாது.  பாவம், அவர் உயிர் தப்பிச்சா போதும்னு ஓடிட்டார். அப்பொழுதும் சிரிப்பு :(

ம்ம்ம்... இனிமேல் யார் சொல்வதும் கேட்க கூடாது. நான் போயிருந்திருக்கவே கூடாது. சே! முதல்முறை வாழ்க்கையில் ஃபெயில் ஆகிவிட்டேனே! மனசு ஆறவில்லை.

இந்த சனியனை எப்படியாவது பழகியே ஆக வேண்டும். எப்படி parallel பார்க்கிங் செய்வது என்று அடுத்தடுத்த நாட்களில் பழகி அடுத்த மாதத்திலே மீண்டும் ஆஜர்.

இந்த முறை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். பதட்டப்படாம நல்லா ஓட்டுறோம். லைசென்ஸ் வாங்குறோம்.

வழக்கமான நிறுத்தங்கள், ஸ்பீட் டெஸ்ட் எல்லாம் முடிந்த பிறகு, parallel பார்க்கிங். ஏற்கெனவே போட்ட மனக்கணக்கின் படி முதல் காரின் பாதி தூரம் வரை என் காரை நிறுத்தி சக்கரத்தை இப்படி திருப்ப வேண்டும்  ஸ்டியரிங்கை இப்படி அப்படி திருப்பி ஒகே, மெதுவாக மெதுவாக இப்பொழுது எதிர்த்திசையில்  ஸ்டியரிங்கை திருப்பி ஒரு வழியாக நிறுத்தி விட்டேன்.

நான் சொன்ன பதில் சரியா என்று ஆசிரியரிடம் பயந்து கொண்டே கேட்கும் மாணவனைப் போல் பயத்துடன் அதிகாரியை பார்த்தால்

நாட் பேட், என்றார் அந்த அதிகாரி.

அப்பாடா! குட் ஆர் பேட் லைசென்ஸ் குடுத்துருப்பா. நீ நல்லா இருப்ப.

ஒகே, ஹியர் இஸ் யுவர் ரிப்போர்ட். சீக்கிரமே ஒரிஜினல் லைசென்ஸ் வீடு வந்து சேரும். கன்கிராஜூலேஷன்ஸ்!

அந்த நிமிடம் என் மனதில் இருந்த உற்சாகம்... வாழ்க்கையில் ஏதோ சாதித்து விட்ட ஒரு மகிழ்ச்சி! இனி நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்குச் சென்று வரலாம். என்ன ஒரு சுதந்திரமான உணர்வு!

என் கணவர் முகத்திலும் சுதந்திரமான அதே உணர்வு!  சிரித்துக் கொண்டே மகளும், அப்பா இனி நீங்க ஃப்ரீ.

அம்மாவிடம் நான் தோற்று ஜெயித்த விஷயத்தை சொல்ல, வழக்கம் போல் அம்மாவும், நீ என் மகளாச்சே! அடிக்கடி இதை கேட்டிருந்தாலும் அன்று கேட்க மேலும் சுகமாக இருந்தது.

கணவருக்கு அடுத்த கவலை ஆரம்பமாயிற்று. பார்த்து பத்திரமா  போ. வேகமாக போகாத.

அடுத்த நாள் காலையில் விரைவில் எழுந்திருந்து, கடவுளை வேண்டிக்கொண்டு...

 ஸ்டார்ட் தி மியூசிக் ...எழுபத்தைந்து மைல் வேகத்தில் ...

ஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூம் !



Saturday, February 13, 2016

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்...

ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானும் கணவரும் காலையில் அன்றைய தமிழக முதல்வரின் ஐந்து செயலாளர்களில் ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு கல்வி மண்டல இயக்குனர் அலுவலகத்திற்குச் சென்றோம். அப்போதே நேரம் பத்து மணி இருக்கும். அலுவலகத்திற்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போரும் உண்டு, வேலையைத் தவிர மற்றதை எல்லாம் செய்பவர்களும் உண்டு. அரசு சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு அலட்சியமான, அதிகாரமான உடல் மொழியும் உண்டு என்று கண்டுணர்ந்த நாளும் கூட!. உட்கார்ந்தே வேலை பார்த்து எடை கூடிய ஆண்களும், பெண்களும் நிறைய இருந்தார்கள்.

 கணினி, கைப்பேசி இல்லாத 'டொக்டொக்டொக்டொக்'  'சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்ற ஒரு இழுப்பில் தட்டச்சு பேசிய காலமது. அதிகாரி தந்த குறிப்புகளை காகிதங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர் பலர். ஒரு சிலர் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருப்பவரிடம் பேசிக் கொண்டும், முன் தினம் முடிக்காத வேலையை பார்த்துக் கொண்டும், ஏதோ எழுதுவதும், கையொப்பமிடுவதும், பியூனை அழைத்து கோப்புகளை வேறு மேசைக்கு எடுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்கள். உண்மையாகவே தங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்களையும் பார்த்தோம்.

திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகள் மாதிரி நாங்கள் நின்று கொண்டிருக்க ...

என்ன விஷயம். யாரை பார்க்க வந்திருக்கீங்க? கேட்டுக் கொண்டே வந்தவரைப் பார்த்தவுடன் அவர் தான் பியூன் என்று தெரிந்து கொண்டோம்.

ஒரு நாலைந்து ஆட்கள் தத்தம் வேலையை விட்டுவிட்டு நிமிர்ந்து வேடிக்கை பார்க்க, நாங்கள் மண்டல இயக்குனரை பார்க்க வேண்டும். மதுரையிலிருந்து வருகிறோம் என்று இன்ன பிற தகவல்களை சொல்லி, தமிழக முதல்வரின் செயலாளர் கொடுத்த பரிந்துரை கடிதத்தையும் கொடுத்தோம்.

இங்க இருங்க சார். உக்காருங்க மேடம். சார்ட்ட சொல்றேன்.

சொல்லிவிட்டு இயக்குனர் அறை வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

ஒரு பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு, சார்  இந்த கோப்புகளை அவர்ட்ட கொடுத்து கையொப்பம் வாங்கணும். செயலாளர் கொடுத்த பரிந்துரை கடிதத்தை இன்னும் நீங்கள் உள்ளே எடுத்துச் செல்லவில்லையே என்றவுடன்,

சார் இப்ப ரொம்ப பிஸி. கொஞ்ச நேரம் பொறுங்க மேடம்.

கோபம் மெதுவாக எட்டி பார்க்க ஆரம்பித்தது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்னு சொல்ற கதையா இருக்கே.  மீண்டும் முதல்வரின் செயலாளர் அறைக்குச் சென்று விஷயத்தைச் சொல்லி, உங்கள் கடிதத்தை கூட அவர் உள்ளே எடுத்துச் செல்லவில்லை என்றவுடன், அவர் தொலைபேசியில் யாரிடமோ பேசினார். இப்போது போய் பாருங்கள்.

மீண்டும் வந்தால் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதை தான்.

இப்பொழுதும் உங்களால் என்னை என்ன செய்து விட முடியும் என்ற அகங்கார, அதிகார தோரணையுடன் அந்த காக்கிச்சட்டை . (என்ன புடலங்காய் மரியாதை வேண்டியிருக்கிறது).

வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளே குளிரூட்டப்பட்ட அறையில் அந்த இயக்குனர்! அலுவலகத்தில் அவருடைய வெளியுலகத் தொடர்பே அந்த படிக்காத மேதை மூலமாகத்  தான் நடக்கிறது என்பது துயரமான விஷயம்.

அதற்குள் பதினோரு மணி ஆகி விட, உழைத்து உழைத்து களைத்துப் போன சமுதாயம் தேநீர் அருந்த கிளம்பி விட்டது.

அந்த பியூனும் சார், நீங்களும் மேடமும் காபி சாப்பிட்டு வாங்க. சாரை பார்க்க இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்றார்.

கணவரும், இவர் நம்மிடம் பணத்தை எதிர்பார்க்கிறார் போலிருக்கு என்றவுடன். என்ன கொடுமை, உயர் பதவியில் இருப்பவரிடமிருந்து சிபாரிசு கடிதம் கொண்டு வந்த நமக்கே இப்படி இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கு வந்த ஆத்திரத்திற்கு எனக்குத் தெரிந்த தெரியாத எல்லா நல்ல வசவுகளையும் மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டேன். வேறு என்ன செய்வது?

அதற்குள் அங்கிருப்பவர்கள் எங்களை காட்சிப்பொருளாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அங்கிருந்த சில மணிநேரங்களில் ஓரிருவர் இயக்குனர் அறைக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தனர். அதில் ஒரு பெண்மணி, பார்க்க விஷய ஞானம் உள்ளவர்போல தெரிந்தது. அவரும் காலையில் இருந்து நாங்கள் உட்கார்ந்திருந்ததும்,பியூனிடம் பேசிப்பார்ப்பதையும் பார்த்து எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

வந்த விஷயத்தைச் சொல்லி, சிபாரிசு கடிதத்தையும் குறிப்பிட்டோம். அவர் அந்த காக்கிச்சட்டையிடம் கேட்க, சார் பிஸியா இருக்கார் மேடம் அதான் என்று அவன் இழுக்க...அந்த பெண்மணிக்குத் தெரிந்து விட்டது போலும்.

எங்களிடம் இருந்த அலுவல் கோப்புகளைத்  தானே வாங்கிப் பார்த்து விட்டு, சில அரசாங்க ஆணைகளையும்  படித்து விட்டு, இன்னும் இரு  மாநகர அலுவலகங்களில் இருந்து NOC வாங்கி கொண்டு வர வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்குள் மதியம் ஆகி விடவே, சாப்பிட்டு விட்டு வாருங்கள். அதற்குள் சில படிவங்களை எடுத்துத் தருகிறேன் என்றார். அந்த காக்கிச்சட்டைக்கு அது பிடிக்கவில்லை தான்.

பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றோம். இங்கு யாரை பார்க்க வேண்டுமோ? இன்று மாலைக்குள் வேலை முடிந்து விடுமோ முடியாதோ என்று பல கேள்விகளுடன் உள்ளே நுழைந்தோம். நல்ல பெரிய மிகவும் சுத்தமான விசாலமான இடம். பெரிய மரங்கள் செடிகள் என்று நன்றாக இருந்தது. உள்ளே நுழையும் பொழுது கணவரின் உறவினர் தென்பட்டார். என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து அப்போதைய IPS ஆபிசரிடம் அழைத்துச் சென்றார். அவரும் பெரியப்பாவின் உறவினர். அங்கு அவர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உதவியால் சென்ற வேலை உடனடியாக முடிந்து மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அந்தப் பெண்மணியும் விரைவில் வேலையை முடித்து விட்டு வந்த எங்களை அதிசயத்துடன் பார்த்தார்.  நாங்கள் வருவதற்குள் ஒரு கட்டு படிவங்களை டைப் செய்து வைத்திருந்தார். ஒவ்வொன்றிலும் கையெழுத்திட்டு அவரே ஒரு பைலில் போட்டு அந்த வாயிற்காப்போனை கூப்பிட்டு உள்ளே இயக்குனரிடம் கொடுத்து விடுங்கள். நான் சரி பார்த்து விட்டேன். அவர் கையொப்பமிட்டால் வேலை முடிந்து விடும் என்று சொல்லி விட்டார்.

அப்போது அந்த கடுவன் மூஞ்சியில் இருந்த கடுப்பை பார்க்க வேண்டுமே? வேண்டா வெறுப்பாக உள்ளே எடுத்துச் சென்றது மட்டும் தான் தெரியும். இப்படியே சில மணிநேரங்கள்.

சார், நான் உள்ளே போய் சார்ட்ட விஷயத்த சொல்றேன் என்றவுடன், அவர் இப்பொழுது ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அனுமதிக்கவில்லை.

மணி மூன்றாகி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் கிளம்பி விடுவார்கள். இன்று இந்த வேலை முடியுமோ முடியாதோ என்று ஒரே கலக்கம்.

அந்தப் பெண்மணியிடம் சென்று நிலைமையைச் சொல்லி அந்த பியூன் பைலை உள்ளே எடுத்துச் சென்றாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னவுடன் அவரே உள்ளே சென்று பியூனிடம் இருந்த பைலை இயக்குனரிடம் கொடுத்து விட்டு வந்தார்.

நல்ல வேளை, இன்றிரவு இயக்குனர் ஒரு அவசர வேலையாக டெல்லி செல்கிறார். எப்பொழுது வருவார் என்று தெரியவில்லை என்று சொல்லும் பொழுது அந்த பியூன் மேல் அவ்வளவு கோபம் வந்தது. எல்லாம் தெரிந்திருந்தும் எப்படியெல்லாம் அலைக்கழிக்க பார்த்தான். இவனெல்லாம்...

இயக்குனர் கையெழுத்திட்ட படிவங்கள் எங்கள் கைகளில் கிடைக்கும் பொழுது அந்தப் பெண்மணியைத் தவிர மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். வேண்டா வெறுப்பாக பைலை கொண்டு வந்து கொடுத்த அந்த பியூன் போன்ற ஆட்கள் இத்தனை வருடங்கள் கடந்தும் பல அரசு அலுவலகங்களில் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் வருத்தம்.

ஆனாலும் கடவுள் இருக்காருடா கொமாரு மாதிரி சில நல்லவர்களும் இருப்பதினால் மழை அவ்வப்போது பெய்கிறதோ என்னவோ?

நான் வெளிநாடு செல்ல முகம் தெரிந்த மனிதர்கள் பலரும், அப்பெண்மணியை போல முகமறியாதவர் பலரும் உதவினர் என்பதே என்னுடைய அதிர்ஷ்டம் தான்!


Saturday, February 6, 2016

ஒபாமா - நம்பிக்கை நட்சத்திரம்

கடந்த 2008ல், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப்பட்ட போது நாடே ஒரு வித உற்சாக கொந்தளிப்பில் இருந்தது. வெள்ளை, கறுப்பின மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று முதல் கருப்பின அதிபர் என்கிற பெருமையுடன் ஆட்சியில் அமர்ந்த பதவியேற்பு விழாவுக்கு நாடெங்கிலும் இருந்து  திரளான மக்கள் வாஷிங்டன் டிசி க்கு வந்திருந்து அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்தனர். நூற்றாண்டு கால அடிமைச் சமூகத்தின் பிரதிநிதியாக, மார்டின் லூதர் கிங் கண்ட கனவின் நனவாக, தங்களை மீட்க வந்த மீட்பராக ஒபாமா பார்க்கப்பட்டார். இந்த உணர்வுகளை 2013ம் ஆண்டு வெளியான “the butler” திரைப்படத்தில் அழகாய் காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஒபாமாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாத குடியரசு கட்சியினர் தங்களுடையை வன்மத்தையும், வெறுப்புணர்வையும் பல்வேறு வகையில் கொட்டித் தீர்த்தனர். ஒபாமா அமெரிக்கனே இல்லை, இந்த மண்ணில்  பிறக்கவில்லை, அப்பா ஒரு ஆப்ரிக்கன் , அவர் ஒரு முஸ்லீம் என்று பலவாகிலும் அவதூறு செய்தனர். இதெல்லாம் முந்தைய புஷ் ஆட்சிக் காலத்தில் குடியரசு கட்சி செய்த தவறுகளினால் மக்கள் மனதில் எடுபடாமல் போய்விட்டது. சரியான காரணங்கள் எதுவும் இல்லாமல் பொய் சொல்லி ஈராக் மீது படையெடுத்தது, அதற்கால கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்தது, ஆப்கான், பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்த அமெரிக்கர்களுக்கு அவர்களைப் பற்றின பிம்பத்தை வளர்த்து பயமூட்டியது, வேலையில்லா திண்டாட்டம் என புஷ் ஆட்சியில் மக்களுக்கு இருந்த அதிருப்தியில் மாற்றம் வேண்டும் என்ற ஒபாமாவின் குரல் மட்டுமே உரக்க கேட்டது

ஒபாமாவின் முதல் நான்காண்டு பதவிக்காலம் அவருக்கு எல்லா வகையிலும் சோதனையான காலகட்டம்தான். முந்தைய புஷ் ஆட்சி காலத்து குளறுபடிகளை சரி செய்ய அவர் எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் குடியரசு கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்கவே இல்லை. ஒபாமா எதைச் செய்தாலும் அதை தடுப்பதுதான் தங்களுடைய லட்சியம் என்பதைப் போல குடியரசுக் கட்சியினர் நடந்து கொண்டனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ, பணம் கரைய, ஹௌசிங் மார்க்கெட் சரிய, உள்ளூர் கார் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தில் இயங்க, ஈராக் போர் தீவிரமடைய, பல போர் வீரர்களின் உடல்கள் போர்த்திய கொடிகளுடன் ஊர் திரும்ப, இயற்கைப் பேரிடர்கள் பிரச்சினைகள், பிரச்சினைகள் என பிரச்சினைகள்தான். இவற்றை எல்லாம் சமாளித்து கரையேறுவதற்குள் அவருடைய முதல் நான்காண்டுகள் ஓடியே போய்விட்டது.

இதைத் தாண்டியும் சொல்லிக் கொள்ளும் படியாக அவர் சில சாதனைகளை செய்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க சில வழிகளை கையாண்டது, வீடு வாங்குபவர்களுக்குச் சலுகைகள், கார் கம்பனிகளுக்கு அரசாங்கமே கடன் என்ற பெயரில் பண உதவி வழங்கி அவர்களை மீட்டது, ஒசாமா பின் லாடனை பிடித்தது அவருடைய அரசின் சாதனை தான். அவருடைய மனைவியும் போர் வீரர்களுக்கு உதவிகள், பள்ளியில் குழந்தைகளுக்குச் சத்தான உணவுத்திட்டம் என்று அவரளவில் மக்களிடையே பல நற்செய்திகளை கொண்டுச் சென்றார்.

ஒரு கட்டத்தில் மக்களும் ஒபாமாவைச் சொல்லி குற்றமில்லை, அவரே நினைத்தாலும் எதிர்க்கட்சிகள் அந்தத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்பதை புரிந்து கொண்டனர். இந்த ஒத்துழையாமையினால் ஒபாமா செய்வதாய் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளைக் கூட அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதன் எதிரொலி 2012 தேர்தலில் ஒபாமாவுக்கே சாதகமாய் இருந்தது. தனது இரண்டாவது பதவி காலத்தில் ஒபாமா தனது அணுகுமுறைகள் பலவற்றை தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டார்.அமெரிக்காவில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் கொள்ளையர்களிடமிருந்து எளிய சாமானிய குடிமக்களைக் காக்க அவர் கொண்டு வந்த திட்டத்தை தீவிரமாக எதிர்த்த குடியரசு கட்சியினர், அந்த திட்டத்தை செயலாக்க விடாமல் தங்களால் ஆன அனைத்தையும் செய்தனர். ஆனாலும் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி பல மில்லியன் டாலர் செலவழித்து ஒபாமாகேர் வந்து விட்டது. இன்றும் அதனுடைய பயன்கள் எப்படி சாமானியர்களுக்கு உதவப் போகிறது என்பது பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகளும் மருத்துவர்களும் வெளிப்படையாகவே ஒபாமாகேரில் நாட்டமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

மக்களின் எதிர்ப்பார்ப்புடன் வெள்ளைமாளிகைக்கு வந்த ஒபாமாவை ஒரே இரவில் நாட்டை ஜீ பூம்பா சொல்லி மாற்றி விடும் மாயஜால வித்தைக்கார் என்று நினைத்த கூட்டம் அவரின் கைகள் கட்டுண்ட நிலையில் வெள்ளை மாளிகையை ஆளுவது ஒபாமாவைத் தாண்டிய இன்ன பிற சக்திகள் வலுவாக இருப்பதையும் , ஜனாதிபதி என்கிற தனிமனிதனின் கையில் எதுவுமில்லை என்று புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

இதோ இந்த வருடம் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதற்கான எல்லாவித கூத்துகளும் நடக்க ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் நடந்த ஸ்டேட் ஆப் தி யூனியன் கூட்டத்தின் போது அவருடைய பேச்சு கேட்பவரை மெய்சிலிர்க்கத் தான் செய்தது. நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் ஜனநாயக கட்சி இறங்கி விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது அவர் பேச்சில். தீவிரவாதிகளை தான் கையாளும் விதமே சரி என்ற தொனியில் எதிர்க்கட்சிகளின் ஆவேச பேச்சு பிரச்னைகளுக்குத் தான் வழிவகுக்கும் என்று வலியுறுத்திக் கூறினார்.

உலக மக்களிடையே பிரபலமானவராக புன்னகையுடன் வலம் வந்த முதல் கறுப்பின ஜனாதிபதி, கறுப்பின மக்களுக்காக போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவை நிஜமாக்கிய ஒரு நல்ல மனிதர் ஜனாதிபதி ஒபாமா என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும் சமீப காலமாக ஒபாமா முஸ்லிம்கள் விஷயத்தில் அமைதி காக்கிறார் , நாட்டில் நடக்கும் தீவிரவாத நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்கிறார் என்பது போன்ற அதிருப்தி பலருக்கும் இருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும்.

இவற்றை எல்லாம் தாண்டி அமெரிக்காவின் நாற்பத்தி நான்காவது ஜனாதிபதியாக, மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவை நனவாக்கியவராக, பலமான அரசியல் பிண்ணனியோ, பணபலமோ இல்லாத ஒரு சாமானியன் தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் எதிர் வந்த தடைகளை எல்லாம் உடைத்து நொறுக்கி உலகின் சக்திவாய்ந்த பதவிக்கு வரமுடியும் என்று நிரூபித்த வகையில், சாமானியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

அவருடைய ஓய்வு காலம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...