Tuesday, July 24, 2012

பெர்லின், ஜெர்மனி - பயணக் குறிப்புகள்

அடுத்த நாள் காலையில் எழுந்து காலை உணவை முடித்து விட்டு விபூவுடன் பெர்லின் நகருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அது நண்பரின் வீட்டிலிருந்து இரண்டரை மணிநேரத் தொலைவில் இருந்தது. நெடுஞ்சாலையில் எங்கள் காரை மற்ற கார்கள் முந்திச் செல்ல நாங்கள் பதட்டப்படாமல் போய்க் கொண்டிருந்தோம்😊

ஜெர்மனியில் எல்லோரும் அசுர வேகத்தில் ஓட்டுகிறார்கள்! எங்கள் காரோ இந்தா நகர்வேனா என்று ஊர்ந்து கொண்டிருப்பது போல் இருந்தது. தமிழ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே ஜெர்மனியின் ரோடுகளில் செல்லுவதும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பெர்லின் நகரத்தில் காரை ஒரு இடத்தில் நிறுத்தி அதற்கான கட்டணத்தையும் கட்டிவிட்டு பாராளுமன்றம்(Reichstag) பார்க்க கிளம்பினோம். அங்கு வருவதாக ஏற்கெனவே நண்பர் முருகன் மூலம் முன்பதிவு செய்து விட்டதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் போக முடிந்தது. அந்த கட்டடமும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. உள்ளே பாஸ்போர்ட் சகிதம் செல்ல, எல்லாவற்றையும் சரிபார்த்தவுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். ஒவ்வொரு குழுவாக வேகமாக செல்லும் லிஃப்ட் மூலம் மேலே அழைத்துச் சென்றார்கள். மேலே கண்ணாடியால் ஒரு அழகிய dome கட்டி இருக்கிறார்கள்.
நாங்கள் சென்ற போது ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. அதைச் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே நின்று கொண்டு பெர்லின் நகரின் உயர்ந்த கட்டடங்களையும், தேவாலயங்களையும், நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்த எங்களைப் போன்ற சுற்றுலாவினரையும் சுற்றி வரப் பார்த்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.

வழி நடுவே பலூன், ஐஸ்கிரீம் என்று தெருவில் விற்றுக் கொண்டிருப்பவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோடைகாலத்தில் வெளிநாட்டினரும் அதிகம் வருவதால் அவர்களுக்கும் நல்ல விற்பனை. நடுவில் வயிற்றுக்கும் சிறிது ஈந்து விட்டு, காசு கொடுத்து ரெஸ்ட்ரூம் போய்விட்டு, Brandenburger Tor என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சென்றோம். இந்த Brandenburg Gate தான் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை உலகப்போரில் பிரித்துக் காட்டிய இடமாகவும், உயர் அதிகாரிகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் செல்லும் வழியாகவும் இருந்திருக்கிறது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கும், மேற்கு ஜெர்மனியும் இணைந்த பிறகு இது வரலாற்றில் இன்னும் முக்கிய இடமாகி விட்டது. நாங்கள் சென்ற அன்று அங்கு நல்ல கூட்டம். ஒரு புறம், சுடச்சுட ஆட்டுக்கறியை சுட்டு ரொட்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். பல கலைநிகழ்ச்சிகளும் நடப்பதற்கான அரங்குகள் போடப்பட்டிருந்தன. உருளைக்கிழங்கு fries , ஐஸ்கிரீம், கபாப் வாங்கிக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தோம். நல்ல வெயில். உலகப்போரை நினைவுறுத்தும் வகையில் வேடமிட்டு நின்று கொண்டிருப்போருடன் நாங்களும் படம் எடுத்துக் கொண்டோம்.

அந்த இடமே திருவிழா கூட்டம் போல் இருந்தது. பல விதமான மொழிகளில் பேசிக்கொண்டு பல நாட்டு மக்கள்! நகர் முழுவதும் உலகப்போரைப் பற்றிய அருங்காட்சியகங்கள். அழகான கட்டடடங்களுடன் மற்ற நாடுகளின் இம்மிக்ரேஷன் அலுவலகங்கள். பூங்காக்கள். இடிபட்ட பெர்லின் சுவரிலிருந்து எடுத்த சில்லுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள்!நண்பரின் மகள் விபூ, எங்களுக்கு அந்த நகரின் வரலாற்றையும் ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் அருமையாக சொல்லிக் கொண்டே வந்தார்.கடைக்குச் சென்று சில நினைவுப் பொருட்களையும் வாங்கினோம்.


அங்கிருந்து மீண்டும் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்து சென்று holocaust memorial பார்க்க கிளம்பினோம். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியர்களால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான யூதர்களின் நினைவிடமாக அதைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடம் முழுவதும் சிமெண்ட்டால் சிறு,சிறு பாளங்களாக எந்தவித அலங்காரமும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே யாரும் அதன் மேல் நடக்கக் கூடாது. தெரியாமல் நடந்தாலும் அங்கிருக்கும் பாதுகாவலர்கள் அவர்களை இறங்கச் சொல்லிவிடுகிறார்கள். ஒரு மயான அமைதி அங்கே. சிலர் அந்த சிமெண்ட் பாளங்களை தடவிக் கொண்டே முகம் இறுகிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களோ, கொலையில் தங்கள் குடும்பத்தில் யாரையாவது பறிகொடுத்தவரோ என்னவோ! பார்வையாளர்களுக்கு அன்று நடந்த கொடுமையை விவரிக்கும் வகையில் படங்களுடனும், வீடியோ காட்சிகளுடனும், போரில் பெண்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விரிவாக விளக்கி இருக்கிறார்கள். இவ்வளவு அட்டாகசம் செய்த ஜெர்மனியரசே இந்த நினைவிடைத்தை அமைத்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

அங்கிருந்த படங்களும், அதற்கு கீழ் எழுதி இருந்த வாசகங்களும் நெஞ்சை உருக வைக்கும். அதிலிருந்த முக்கால்வாசி காட்சிகளை அருமையாக The Pianist என்ற படத்தில் எடுத்திருந்தார்கள். அந்த படத்தின் டைரக்டர் தன் குடும்பம் எப்படி இந்த கொலையில் சிதறுண்டு போனது என்றும், அவர் கண்முன்னே நடந்த நிகழ்ச்சிகளை படத்தில் கொண்டுவர எப்படி மெனக்கெட்டார் என்பதையும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்த போது நாமெல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து வெளியே வரும் பொழுது அனைவர் முகமும் இருண்டு சிலர் அழுத முகத்துடன் வந்ததையும் பார்க்க முடிந்தது. இன்றும் சிறிலங்காவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நடக்கும் கொடுமை இப்படிப்பட்டது தான் என்று நினைக்கையில் மனம் கனக்கத் தான் செய்கிறது. அதற்குள் என் மகன் கீழே விழுந்து கையில் அடிப்பட்டு, அவசர அவசரமாக ஐஸ் ஒத்தடம் கொடுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்று பயந்து ஒரு பெரிய களேபரம் நடந்தது. அழுதழுது நடந்த களைப்பால் மீண்டும் மகனுக்கு பசியெடுக்க அருகிலிருக்கும் ஐஸ்கிரீம் கடையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே சிறிது இளைப்பாறினோம். ஐஸ்கிரீம் மிகவும் சுவையாக இருந்தது😋

மீண்டும் காரில் ஏறி பெர்லின் சுவர் பார்க்க கிளம்பினோம். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரிக்கும் விதமாக கட்டப்பட்ட சுவர், ஜெர்மனியை இருநாடுகளாக துண்டாடியது. அதனால் பிரிந்த குடும்பங்களும், அவர்கள் பட்ட துன்பங்களும் பல. அவற்றை எல்லாம் நன்கு டாகுமெண்ட் செய்து வைத்திருக்கிறார்கள். சுவருக்கு எதிர்த்தாற்போல் உயரத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுவர் நீள்கிறது! இதனால் குழந்தைகளைப் பிரிந்தவர்கள், கணவன்/பெற்றோர்/மனைவியைப் பிரிந்தவர்கள் என்ன அவதிப்பட்டிருப்பார்கள்? வரலாறு மிகவும் கொடியது என்று உணர்ந்த தருணம்.

இப்போது மனதாலும், நடந்து நடந்து சென்றதாலும் களைப்பாக இருந்ததால் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். முருகன் பார்த்து விட்டு வரச் சொன்ன Alexanderplatz என்ற இடத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. மீண்டும் இரண்டு மணிநேரப் பயணம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி, சாப்பிட்டு விட்டு, Dresden வந்து சேர்ந்தோம். ஜெர்மானியர்கள் நிறைய sausage சாப்பிடுகிறார்கள். என் மகளும் சில புது வகை உணவுகளைச் சாப்பிட்டாள்.
வீட்டுக்கு வந்து முருகன், செல்வியுடன் பேசி விட்டு, விரைவிலேயே தூங்கியும் போனோம். அடுத்தநாள், கனவுப் பிரதேசமான Swtizerland போவதற்கான ஆயத்தங்கள் செய்ய, கடைகளுக்குப் போய் பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, பிரட், வெண்ணை, சாப்பாட்டு சாமான்கள் வாங்கி வந்தோம்.

அமெரிக்க கடைகளைப் போல் இல்லாமல் இந்த ஊர் கடைகளும் வித்தியாசமாக இருந்தது. விதவிதமான மதுபானங்களை ஒரு பகுதி முழுவதும் அடுக்கி வைத்திருந்தார்கள். என் கணவரும் ஜெர்மனியின் பீர் எப்படித் தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஒன்றை வாங்கிக் கொண்டார். நொறுக்குத் தீனிகள் அமெரிக்காவில் கிடைப்பது போல் இல்லை. மக்களும் அனாவசியமாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தாமல், வீட்டிலிருந்து பைகளை கொண்டு செல்கிறார்கள்.

துணிமணிகள், சாப்பாட்டுச் சாமான்கள் என்று எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு வர, முருகனும் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு நாங்கள் வரும் நேரத்தையும் சொல்லி அவருடைய விலாசத்தையும் வாங்கிக் கொண்டார்.

போன வருடம் இதே நாளில், சுவிட்சர்லாந்தில் இருந்தோம்J

Monday, July 23, 2012

Saxon Switzerland, Germany



Saxon Switzerland 
நாங்கள் Zwinger ஐ சுற்றிப் பார்த்து விட்டு வர, முருகனும் தன் வேலையை முடித்துக் கொண்டு செல்வி, சத்யாவுடன் வர, இரு குடும்பங்களும், Saxon Switzerland என்ற காடுகளும், மலைகளும் நிறைந்த இடத்திற்குப் பயணமானோம். இங்கே rock climbing, hiking, mountain biking என்று பல activities நடக்கிறது. அருகிலே எல்ப் (elbe) ஆறு. கொஞ்சம் மலை ஏறிப் பார்த்தால் ஆறும், அதை ஒட்டிய நிலங்களும், சுற்றி வர மலைகளும் நன்றாக இருக்கிறது. ஒரு பெண்ணும், ஆணும் மலை உச்சிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். நாங்களும் தஸ்ஸு, புஸ்சுவென்று மூச்சிரைக்க ஓரளவு மலை ஏறிவிட்டு கையில் எடுத்துச் சென்றிருந்த முறுக்கு, குக்கீஸ் எல்லாவற்றையும் அங்கு வந்திருந்தவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு நன்றாக படங்கள் எடுத்துக் கொண்டோம். நேரமாகிவிட்டதால் பாதைகளை மூடிவிட்டனர். இல்லையென்றால் இன்னும் சிறிது தூரம் நடந்து சுற்றிப் பார்த்திருக்கலாம். சில அருமையான இடங்களை பார்க்காமல் வந்து விட்டோமே என்று நினைத்துக் கொண்டே இருக்கின்ற இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். செல்வியும் அங்கிருந்து ஒரு மலையில் இருந்த ஒரு அரண்மனையைக் காட்டி மிகவும் அருமையான ஒன்று. நேரம் இருந்தால் போய் பார்க்கலாம் என்று சொன்னார். அந்த ஊரைச் சுற்றி பல அரண்மனைகள். ஜெர்மனியில் பெரிய பெரிய அரண்மனைகள் கொட்டிக் கிடக்கிறது. மக்களுக்கு அவர்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் அத்தனையும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மக்களும் விடுமுறையில் இந்த மாதிரி இடங்களுக்கு வந்து போகிறார்கள். பொழுது சாயும் நேரமாகி விட்டது. மனமில்லாமல் அங்கிருந்து கீழிறங்கி ஆற்றுப் பக்கத்தில் சிறிது நேரம் செலவழித்துவிட்டு மீண்டும் வந்த வழியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் கோடைக்கால விடுமுறை வீடுகளையும், குறுகிய தெருக்களையும் பார்த்துக் கொண்டே வந்தோம். பரபரப்பே இல்லாத ஒரு இடமாக இருந்தது. ஆறு மணிக்கு மேல் மலைப்பாதைகளை மூடி விடுகிறார்கள். படங்களிலும் , காலண்டர்களிலும் பார்த்த மாதிரி சின்ன சின்ன அழகான கோடைக்கால வீடுகள். இந்த நகரின் வழியாக எல்ப் (elbe) என்ற ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அதை ஒட்டி பசுமையான நிலங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. 2002ல் வந்த வெள்ளத்தில் இந்த ஆற்றுப் பாதையில் இருந்த ஊர்கள் மிகுந்த பாதிப்படைந்ததாக முருகன் சொன்னார்.
Albe view from Sandstone Mountain 



வரும் வழியில் சூரியகாந்திப் பூந்தோட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போனோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சூரியகாந்திப் பூக்கள்! ஒவ்வொரு பூவும் நீ முந்தி, நான் முந்தி என்று போட்டா போட்டி போட்டுக் கொண்டு சூரியனைப் பார்ப்பதற்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருப்பதைப் போல் ஒரு தோற்றம்.
ஒரு ஈ, காக்கா கூட இல்லை. சூரியகாந்திப் பூக்களால் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருந்தஅமைதியான அந்த இடத்தில் சிறிது நேரம் காரை நிறுத்தி பல படங்களை எடுத்து விட்டு சிறிது தூரம் நடந்தோம்.

வீடு வந்து இரவு உணவை முடித்து விட்டு நாங்கள் பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பெர்லின் நகருக்குச் சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி முருகனும், செல்வியும் சொல்லி முடிக்க, ஆவலுடன்அதை நினைத்துக் கொண்டே தூங்கியும் போனோம்.




Saturday, July 21, 2012

வார விடுமுறை தினங்கள்

இன்று காலையிலிருந்தே சோம்பேறித்தனமான நாளாகப் போய்க் கொண்டிருக்கிறது. டிவியில் P .சுசீலாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய சிறு வயது வார விடுமுறை நாட்களைப் பற்றிய ஞாபகங்கள் வர , இந்தப் பதிவு. எப்படி ஆரம்பித்தாலும் அது சாப்பாட்டில் கொண்டு தான் முடிகிறது. அப்படி ஒரு சாப்பாட்டுப்ரியை நான்.

அந்த நினைவிலேயே வாழைக்காய் பஜ்ஜி போட்டேன். கருப்பட்டியும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் கருப்பட்டி ஆப்பமும் ரெடி. சாப்பிட்டுக் கொண்டே இந்த பதிவு.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் சனிக்கிழமைகளில் பொதுவாக அரை நேரப் பள்ளிக்கூடம் இருக்கும். சாயங்கால வேளைகளில் இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி வள்ளுவர் ஸ்டால் என்று முறுக்கு, பக்கோடா, காராச்சேவு, காராபூந்தி, நெய்க்கடலை, மசாலாக்கடலை என்று பல தினுசு நொறுக்குத் தீனிகளையும் சிறுசிறு கண்ணாடி ஜாடிகளுக்குள் போட்டு வைத்திருப்பார். எங்கள் எல்லோருக்கும் என்ன என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டு யாராவது ஒருவர் போய் வாங்கி வருவோம். அவர் அழகாக பேப்பரில் கோன் மாதிரி பண்ணி கை நிறைய கேட்ட ஐட்டங்களைப் போட்டு தருவார். அவர் கடைக்கு எதிரிலே வாய் பேச முடியாத ஒருவர் இதே மாதிரி ஒரு கடை வைத்திருந்தார்.அவரிடம் எப்போதாவது வாங்குவது உண்டு. அவர் கடை பலகாரங்களின் சுவை வேறு மாதிரி இருக்கும். சில நேரங்களில் வீட்டு முக்கில் இருக்கும் பொரிகடலை கடையிலிருந்து ஆளுக்கு ஒரு வறுத்த கடலை, பொட்டுக் கடலை பொரி, பொட்டுக் கடலை கலந்த ஒரு பொட்டலம் என்று வாங்கி வந்து சாப்பிடுவதும் உண்டு.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் ஒரு வயதான பெண்மணி அப்பம், அப்பம் என்று கருப்பட்டி ஊற்றி செய்த இட்லியில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் சில்லுபோட்ட இனிப்பு பலகாரம் விற்றுக் கொண்டு வருவார். அவ்வளவு சாஃப்டாக வாயில் வைத்தால் கரையும் அந்த பலகாரம். இப்பொழுதெல்லாம் இவர்கள் வருகிறார்களா, மக்களும் இவற்றை எல்லாம் சாப்பிடுகிறார்களா என்ன? மதிய நேரம் வருவதற்குள் இன்னொருவர் ஆட்டு ரத்தப் பொரியல் சுடச்சுட விற்றுக் கொண்டு வருவார். கருவேப்பிலை வாசனையுடன் கொஞ்சமே சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும்😍

பெரும்பாலான சௌராஷ்டிரா வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை மணக்க மணக்க கறிக்குழம்பு சாப்பாடு தான். நன்றாக சாப்பிட்டு விட்டு உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்கிற மாதிரி ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு மாலையானதும் MLA ரேடியோ கடையின் உபயத்தால் பல டிஎம்எஸ் , பிபிஎஸ், பி.சுசீலா பாடிய பல பாடல்களைக் கேட்டிருக்கிறோம். எங்கள் தெருவில் நடிகர் திலகம் ரசிகர் மன்றமும் டிஎம்எஸ் ரசிகர் மன்றமும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ரசிகர் மன்றங்களும் இருந்ததால் இவர்கள் நடித்த பாடல்களைப் போட்டு தெருவில் அனைவரும் வாசலில் உட்கார்ந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த காலம். இந்த தொல்லைக்காட்சிப் பெட்டி வந்தவுடன் அந்த ஆனந்த வாழ்க்கை போய்த் தான் விட்டது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை, ஓராயிரம் பார்வையிலே, அத்தான்... என்னத்தான், அத்தைமடி மெத்தையடி , உள்ளத்தில் நல்ல உள்ளம் என்று பல நெஞ்சில் நின்ற பாடல்களைப் போடுவார்கள். சில சமயங்களில், சுமதி, நீ எப்படிம்மா இருக்கே என்று சிவாஜி கணேசன் உள்ளம் உருகி பேசிய திரிசூலம், என் மூக்கு, என் நாக்கு, என் ராசாத்தி என்று சிவாஜி டப்பாங்குத்து ஆடிய பட்டிக்காடா பட்டணமா, கேள்விகளை நான் கேட்கவா அல்லது என்று திருவிளையாடல், நாரதா சக்தி பெரிதா, செல்வம் பெரிதா என்று சரஸ்வதி சபதம் என்று பல படங்களின் வசனங்களையும் கேட்டு பொழுதை போக்கியிருக்கிறோம்.அந்த காலங்களில் வந்த படங்களிலிருந்து புதிய பாடல்களையும் போடுவார்கள். மைக் மோகன் நடித்த பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். அதெல்லாம் ஒரு காலம்!
இதெல்லாம் கேட்டுக் கொண்டே அந்த நேரத்தில் கிடைக்கும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட , ஆனந்தம், ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்😊😊

மதிய நேரத்தில், பஞ்சு மிட்டாய், பஞ்சு மிட்டாய் என்று ஒரு பெரிய வண்டியில், பெடலை மிதிக்க சுற்றுகிற அந்த பெரிய கொப்பரை மாதிரி பாத்திரத்தில் சக்கரையைக் கொட்ட , ரோஸ் கலர் பஞ்சு வர ஆரம்பிக்க, ஒரு குச்சியில் சுற்ற , சுற்ற, பஃப் என்று அழகாக உருமாறும் அந்த மிட்டாய். அதை அமுக்கினால் சிறு உருண்டை ஆகி விடும். இனிப்போ இனிப்பு. அவ்வளவு இனிப்பு. 😋
சில மாலைகளில், தெருவில் வரும் உடித் என்கிற வேகவைத்த கருப்பு உளுந்து விற்றுக் கொண்டு அதன் மேல் தூவிய பொரிக்கடலை, மிளகாய் சேர்த்து பொடித்த பவுடர் , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் துண்டுகள் அவர் வைத்துக் கொடுக்கும் பேப்பரில் சாப்பிட..ம்ம்ம்.என் பாட்டிக்காக அடிக்கடி வாங்குவதால் நாங்கள் அவருடைய ரெகுலர் கஸ்டமர்கள். உளுந்து ஓரத்தில் வைக்கும் மிளகாயை கடித்தவுடன் ஏற்படும் சுர்ர்ர் காரம் உச்சி மண்டையைத் தொட, தண்ணீரைத் தேடி ஓடியதும்....
சில தெருக்கள் தள்ளி கருப்பட்டியை கோதுமை மாவில் கலந்து அச்சில் ஊத்தி ரொட்டியாக விற்பவரிடமிருந்து வாங்கி வந்து அதையும் சாப்பிட்டிருக்கிறோம்.

சில மாலைகளில், ஒருவர் இரண்டு அலுமினியத் தூக்குகளில் முறுக்கு அதிரசம், ரவா உருண்டை, கமர்கட் வைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு எதிரில் வந்து நின்று கொண்டு வெகு அழகாக குழந்தைகளை கவரும் வகையில் கூவி கூவி விற்பார். எப்பாடா வருவார் என்று காத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற குழந்தைகளுக்கு அவரைப் பார்த்தாலே ஜாலி ஜாலி தான்.

சைக்கிளில் பலகை ரொட்டி மைதா மாவினால் செய்த பல வகை ரொட்டித் துண்டுகள் என்று விதவிதமான இனிப்புகளை ஒருவர் விற்றுக் கொண்டு வருவார்.
இவர் போக, மெதுவாக ஒரு தள்ளு வண்டியில் அடுப்பில் எண்ணைக் கொதிக்க, இன்னொரு அடுப்பில் தோசைக் கல்லுடன் பங்கராபான் பைரி , நளறு பைரி, போளியல், சுஜ்ஜியாப்பம் என்று கீரை வடை, தேங்காய் அரிசி மாவினால் செய்த பதார்த்தங்களைச் சுடச்சுட விற்றுக் கொண்டே ஒரு குடும்பம் வரும். அவ்வளவு ருசியாக இருக்கும்.

இரவு நேரத்தில் வேகவைத்த கடலை வண்டி ஒன்று வரும். எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று . வேகிற கடலை வாசனையும், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசனையும் ......சுடச்சுட வறுத்த கடலை வண்டியும் வரும். அவர் சுடு மண்ணில் சரக் சரக் என்று கடலையை வறுப்பது வேடிக்கை பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். அவரிடம் இருக்கும் அந்த சின்ன படியில் நிறைய எடுத்து ஒரு விரலால் மேலே இருக்கும் கடலைகளைத் தள்ளி விட, கோன் மாதிரி மடித்த காகிதத்தில் போட்டு பெரிய பொட்டலமாக கொடுப்பார். உள்ளே கொஞ்சம் கடலை தான் இருக்கும்:(
இவருக்குப் பிறகு மூடிய வண்டியில் வரும் அந்த இனிப்பான பட்டர்பன், தேங்காய் துருவல் நடுவில் வைத்த பன் என்று விதவிதமான கேக் வகைகளைக் கொண்டு மணியடித்துக் கொண்டே வருபவரிடமும் நொறுக்குதீனிகள் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.

குல்பி ஐஸ் கூட லேட்டாகத்தான் வரும். எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு வெயிட் போடாத காலம். கடைசியில் டின், டின் மிட்டாய் வண்டி வரும். இனிப்புடன் கழிந்த தினங்கள்!

நினைத்தாலே இனிக்கும். இவ்வளவு தின்பண்டங்கள் கிடைத்த காலம்! இப்பொழுதும் கிடைக்கலாம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில்
இன்றும் தொடருகிறது. இவ்வளவும் சாப்பிட்டாலும் ஸ்லிம்மாக இருந்த நான்! இதையெல்லாம் நினைத்தாலே இப்பொழுதெல்லாம் எடை கூடி விடுகிறது.

Dresden , ஜெர்மனி - பயணக் குறிப்புகள்

Semperoper with the Theater Square
Dresden வந்து சேர்ந்த அடுத்த நாள் நன்கு தூங்கி எழுந்து விட்டு பதினோரு மணிவாக்கில் காலை உணவை முடித்துக் கொண்டோம். அங்கு ப்ரோட்சன் என்ற ( Brötchen (bread rolls) ) கோதுமை/மைதா மாவில் செய்த பிரட்டில் நன்கு வெண்ணை தடவி, சீஸ் ஸ்லைஸ் ஒன்று வைத்து செல்வி கொடுக்க, அவ்வளவு ருசியாக இருந்தது. ஊர் திரும்பும் வரை அதை நானும் என் கணவரும் நன்றாகச் சாப்பிட்டோம். அதற்கேற்றார் மாதிரி உடல் எடையும் நன்கு கூடி விட்டது எனக்கு! ஜெர்மனியில் நிறைய தானியவகை ரொட்டிகளும், cheese வகைகளும் கிடைக்கிறது. வீட்டுக்குப் பக்கத்திலேயே ரொட்டி, காய்கறிகளை வண்டியில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். செல்வியும் ஒரு கூடை எடுத்துக் கொண்டு போக, நானும் அவருடன் போய் பார்த்தேன்.குழந்தைகள் எல்லோரும் குளித்து முடித்து விட்டுவர, செல்வி எங்களுக்காக சுவையாக சமைத்து வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு சாதம் சாப்பிட்டதால் நன்கு ரசித்து,ருசித்து சாப்பிட்டோம்.

நண்பரின் குடும்பத்தில் எல்லோரும் ஜெர்மன் மொழி பேசுவார்கள். நமக்குத் தெரிந்தவர்கள் வேற்று நாட்டு மொழி பேசும் பொழுது ஆச்சர்யமாக இருக்கிறது! என் மகளும் அவர்கள் பேசுவது எல்லாம் எனக்குப் புரிகிறது ஆனால் திருப்பி வேகமாக பதில் சொல்ல தெரியவில்லை என்றாள். அவளும் பள்ளியில் ஜெர்மன் மொழியை ஐந்து வருடங்களுக்கும் மேலாக படித்துக்கொண்டிருந்தாள். நன்கு எழுதுவாள். தட்டுத் தடுமாறி பேசுவாள். அங்கு ஓரிரு வருடங்கள் தங்கி இருந்தால் வேகமாக பேச முடியும் என்ற தன்னம்பிக்கை அவளுக்கு வந்தது. தான் படத்தில் மட்டுமே பார்த்த/கேட்ட ஜெர்மன் மொழியை நேரில் பேசுபவர்களிடமிருந்து கேட்ட பொழுது மிகுந்த ஆனந்தமடைந்தாள். நண்பரின் மகனும்(சத்யா), மகளும்(விபூ) பேசுவதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்களும் அவளிடம் ஏதாவது ஜெர்மனில் கேட்டால் பதில் சொல்ல முயற்சி செய்தாள். படிக்கும் மொழியும், நடைமுறையில் புழங்கும் மொழியிலும் அநேக வித்தியாசங்கள் இருக்கும். அவளுக்கும் அந்த பிரச்சினை இருந்தது. விபூவிற்கு சராளமாக தமிழ் வருகிறது. சத்யாவிற்கு நன்றாக புரிகிறது. அவன் தமிழில் பேசினால் accent இருக்கிறது. அதுவும் கேட்க நன்றாகவே இருந்தது.


நண்பருடைய குடும்பத்திற்காக வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை கொடுக்க, அவர்களும் குழந்தைக்களுக்காக அழகிய கைப்பை, அவர்கள் ஊர் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் என்று கொடுத்ததை வாங்கிக்கொண்டோம். என் மகனுக்கு சதா விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்க்கேற்றார்போல் நண்பரின் குழந்தைகளும் இருந்ததால் சதாசர்வகாலமும் கார்டு கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருந்தார்கள்.

Dresden நகரைச் சுற்றிப் பார்க்க விபூவோடு கிளம்பினோம். Dresden என்பது Saxony என்ற மாநிலத்தின் தலைநகரம். இரண்டாம் உலகப் போரில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு ஊர். அந்த பாதிப்பை அங்கே பல இடங்களில் காண முடிந்தது. கட்டடங்களில் புகைபடிந்த கருமையான நெருப்பின் தீவிரமும், உடைந்த சிலைகளும் அதற்குச் சாட்சியாக நின்றுக் கொண்டிருக்கிறது. சில கட்டடங்களை கவனமாக சீரமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். நகரின் மையத்தில் ஒரு படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அங்கும் பல உணவகங்கள். மது அருந்தியபடி, பேசிக் கொண்டே உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். சுத்தமான cobblestone தெருக்கள். தெருக்களில் வேடமிட்டபடி பலர் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நாங்கள் படங்கள் எடுத்துக் கொண்டோம். அதற்கு கூலியாக சில ஈரோஸ் (euros ) கொடுக்க வேண்டியிருந்தது. அமெரிக்காவிலும், ஹாலிவுட் பக்கம் போனால் பல நடிகர்களைப் போல வேடமிட்டவர்களுடன் படங்கள் எடுத்தால் பணம் கொடுக்க வேண்டும்! சிலர் அழகிய குரலில் ஒபேரா ஸ்டைலில் பாடிக்கொண்டிருந்தார்கள். அதையும் சிறிது நேரம் கேட்டு விட்டு மெதுவாக நடந்து கொண்டே சென்றோம். சில மாணவ, மாணவியர்கள் இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கும்படி உயரமான, திடமான கல்கட்டடங்கள். நண்பரின் மகள் விபு, அந்த நகரின் வரலாற்றைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் புள்ளி விவரங்களுடன் எங்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தாள். சாலையின் நடுவே ட்ராம் போய்க்கொண்டிருந்தது. நீண்ட சுவர் முழுவதும் அழகிய வண்ணங்களால் அந்த பகுதியை ஆண்டவர்களுடைய உருவங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். பெரிய பெரிய சிலைகளுடன் கூடிய பிரமாண்டமான கட்டடங்கள் பரந்து கிடக்கிறது. வாவ்! வாவ்! ஒ மை காட்! என்று ஆச்சரியமாக வாயைப் பிளந்து கொண்டே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தோம்.

Procession of Princes - paintings on the wall


ஓங்கி உயர்ந்த கதீட்ரல்கள் நகரின் மையத்திலே இருக்கிறது. நாங்கள் பார்த்த எல்லா தேவாலயங்களிலும் பைப் ஆர்கன் என்று சொல்லப்படுகிற இசை வாத்தியக் கருவிகள் இருந்தன. மேடையில் இருக்கும் பியானோவில் வாசித்தால் தேவாலயம் முழுவதும் கேட்கும் வண்ணம் அதனிலிருந்து இனிமையான இசையைக் கேட்க முடிகிறது. ஓங்கி உயர்ந்த அழகிய வேலைப்பாடுகளுடன் சாளரங்கள். வண்ணம் தீட்டிய கண்ணாடி ஜன்னல்கள். நடுவில் ஏசுவின் சிலை. சில கிருத்துவர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு அமைதியாக வழிபாடு செய்கிறார்கள். பலரும், அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு, போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலை நாடுகள் என்றாலே கிறித்துவ நாடு என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்கேற்றாற்போல் பல தேவாலயங்கள் ஊர் முழுவதும் பரவிக் கிடக்கிறது.ஆனால், பலரும் இறைநம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய அனுபவத்தில், கறுப்பின அமெரிக்கர்கள் வாரம் தவறாமல் அவர்களுடைய சர்ச்சுக்குப் போகிறார்கள். வெள்ளையின அமெரிக்கர்கள் பலரும் சிறு வயதில் போனதோடு சரி. தவறாமல் சர்ச்சுக்குப் போகும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். அமெரிக்காவில், ஒரே தெருவிலே பலவகையான சர்ச்சுகள். அது ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கிறித்துவ சமூகத்தைச் சார்ந்தவை. எங்கள் வீட்டுக்கு பின்னேயும் ஒரு சர்ச் உள்ளது. மிகவும் வயதானவர்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார்கள். கூட்டமும் அவ்வளவாக இருக்காது. மதுரையில், சாரை, சாரையாக சர்ச்சுக்குப் போகும் கூட்டத்தைப் பற்றி நினைக்கையில் ஐரோப்பாவை விட இந்தியாவில் தான் அதிக கிறித்துவர்கள் இருப்பார்கள் என்று பேசிக் கொண்டோம். இங்கும் ஒரே நடை தான். நடந்தால் தான் ஊரைப் பார்க்க முடியும். ஆஹா, என்ன அழகு என்று ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே போகும் பொழுது நடப்பது சிரமமாகவே இல்லை.

Inside view of a Cathedral
அங்கிருக்கும் ஒபேரா ஹவுஸ்(opera house ), ஜ்விங்கேர்(zwinger ) கட்டிடங்கள் அந்த நகரின் வளமைக்கும், ரசிப்புத்தன்மைக்கும், வரலாற்றுக்கும் நல்ல எடுத்துக்காட்டு. இவற்றை எல்லாம் நிதானமாக பார்க்க வேண்டுமானால், நிச்சயம் அதிக நாட்கள் வேண்டும். எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே போகலாம் அவ்வளவு விஷயங்கள் அங்கே! பரந்து விரிந்த கூடத்தில் நீருற்றுகளும், அருங்காட்சியகமும் மிக அருமையாக இருந்தது. என் மகன் வயதுள்ள குழந்தைகளுடன் கண்டிப்பாக போகவே கூடாது. சிறிது தூரம் நடந்தாலே பசிக்கிறது என்பான். அவனுக்காக எப்பொழுதும் தண்ணீரும், நொறுக்குத் தீனிகளும் மறக்காமல் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஜெர்மனியில் ரஷ்ய ஆதிக்கம் இருந்ததை நினைவுறுத்தும் வகையில் அந்தநாட்டு பாணியில் கட்டடங்களின் கோபுரங்கள். எல்லா கட்டடங்களுக்கு முன் அதைப் பற்றிய சிறு குறிப்புகளும் சுவரில் எழுதபட்டிருக்கிறது.
Inside the Zwinger




Inside the Zwinger

Hopping on a cobblestone street

Wednesday, July 18, 2012

நெதர்லாண்ட்ஸ்-ஜெர்மனி - பயணக் குறிப்புகள்

நெதர்லாண்ட்ஸ் நாடு அதன் மலர்க்கண்காட்சிகளுக்கு மிகவும் பிரபலம். பல வண்ணங்களில் பலவிதமான மலர்கள் மற்றும் டூலிப் மலர்களின் அணிவரிசையைக் காண பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் ஏப்ரல்,மே மாதங்களில் இங்கு வருகிறார்கள். தமிழ், ஹிந்தி படங்களில் நாயகனும், நாயகியும் அதனுள் ஓடி விளையாடி பாடுவதைப் போல் காட்சிகள் பார்த்திருப்போம். சங்கரின் அந்நியன் படத்திலும் கூட அந்த மாதிரி ஒரு பாடல்காட்சி வரும். நாங்கள் போனது ஜூலை மாதம் ஆகையால் மலர்க்கண்காட்சியை பார்க்க முடியவில்லை. நடுவில் ஒரு இடத்தில் காருக்குப் பெட்ரோல் போட்டு விட்டு சிறிது நேரம் காலார நடந்து, வயிற்றையும் கொஞ்சம் நிரப்பிக் கொண்டு மீண்டும் பயணம். பல இடங்களில் எங்கள் கிரெடிட் கார்டு மக்கர் பண்ணியதால், பணத்தைச் செலவு பண்ணும் போது 'ஜிவ்வென்றிருந்தது😟
ஜெர்மனி எல்லை தொட்டவுடன் நல்ல வேற்றுமை தெரிந்தது. முதலில் சாலைகளின் தரம். கனடாவில் மாண்ட்ரியல் போய் விட்டு அமெரிக்கா  எல்லையைத் தொட்டவுடன் அந்த வேற்றுமை தெரியும். அதேபோல் தான் நெதர்லாண்ட்ஸ் முடிந்து ஜெர்மனி ஆரம்பித்தவுடன் உணர்ந்தோம். ஜெர்மனியின் விசாலமான நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகள் மற்றும் அதன் நிலப்பரப்பு. நெதர்லாண்ட்ஸில் மலைகள் அதிகம் இல்லாமல் தட்டையான நிலப்பரப்பு. ஜெர்மனியிலோ ஒரே மேடும் பள்ளமுமாக மலைகள் சூழ்ந்த ஊர்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ராட்சத காற்றாலைகள் கண்கொள்ளாத காட்சியாக இருந்தது.

ரோட்டில் சில கார்களைத் தவிர ஒரு ஜனமும் இல்லை. சில இடங்களில் எந்த வேகத்தில் செல்லலாம் என்றிருந்தது. பல இடங்களில் அதுவும் இல்லை.  நண்பர் முருகன்  வேகம் எவ்வளவு என்று எதுவும் போடாமால் இருந்தால் எந்த வேகத்திலும் செல்லலாம் என்று கூறினார். எங்களுக்கு அப்போது எதுவும் தெரியாததால் முதலில் பார்த்த அதே வேகத்தில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பின் வந்த கார்கள் எல்லாம் ஏதோ பந்தயத்தில் செல்வது போவது போல் விர்,விர்ரென்று எங்களைக்  கடந்து முந்திப் போனபோது கொஞ்சம் அதிர்வாகத்தான் இருந்தது. அநியாயத்திற்கு வேகமாக ஓட்டுகிறார்கள். பிறகு நாங்களும் வேகமாக  செல்ல  ஆரம்பித்தோம். ஆனால் கார் தான் எவ்வளவு அழுத்தினாலும் நான் போவேனா என்று அழுத்தமாக அது போகிற வேகத்தில் மட்டுமே போனது😩 வாடகைக்காரின் மகிமையே மகிமை. அதுவும் போக, இது தானியங்கி காரும் கிடையாது. அதனால் ஒன்றும் சொல்ல முடியாது.


வழிமுழுவதும் பசுமை போர்த்திய மலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக அந்த நாட்டின் வளமையை பறைசாற்றும் விதத்தில். மலைகளில் முடிந்த வரை பலவிதமான தானியங்களைப் பயிரிட்டிருந்தார்கள். அதனால் தூரத்திலிருந்துப் பார்ப்பதற்கு பழுப்பு, இளம் பழுப்பு, இளம் பச்சை வண்ணத்தில் மலைகள் போர்த்தப்பட்டிருப்பதைப் போல் ஒரு தோற்றம். ஆங்காங்கே மலைகளில் பச்சைப்பசேலென காடுகளும் இருக்கிறது. சுற்றுப்புறச் சூழ்நிலையில் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஐரோப்பா முழுவதும் இப்படித்தானோ என்னவோ! இந்த மாதிரி இடங்களிலும் நம்மூர் டைரக்டர்கள் பல பாடல்களை எடுத்திருக்கிறார்கள்.




முதலில் வந்த ஊர் ஒரு மலையில் இருந்தது. எல்லா ஊர்களும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக சுத்தமாக இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு அழகிய தேவாலயம். அதைச் சுற்றி வீடுகள். சில ஊர்களில் சில தொழிற்சாலைகள். அங்கங்கே ஊர்ந்து செல்லும் சிறு சிறு கார்கள். அழகிய திட்டமிட்ட தெருக்கள். எங்களைக் கடந்து சென்ற கார்கள் எல்லாமே பெரும்பாலும் BMW , AUDI , சில honda , சில toyota , சில ஃபோர்ட், சில ஃப்யட் மற்றும் வேறு சில ஐரோப்பிய கார்கள். மிகச்சில Vanகளே எங்களை கடந்து சென்றது. அதிலும் குடும்பமாக சென்று கொண்டிருந்தார்கள். இதே US என்றால், நூற்றுக்கணக்கான SUV, Van, பெரிய,பெரிய கார்கள் ஒற்றை ஆளுடன் சென்று இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். பெட்ரோலும் அநியாய விலைக்கு விற்கிறார்கள்!

நான்கு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சற்றே இளைப்பாறிவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். மீண்டும் சிறு சிறு ஊர்கள். ஊர் முழுவதும் ஒரே மாதிரி வண்ணத்தில் அழகிய வீடுகள். ஏதோ வாழ்த்து அட்டைகளிலும், காலண்டர்களிலும் பார்த்த மாதிரி அவ்வளவு அழகுடன்! பார்த்துக் கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு! பின் இருக்கையில் குழந்தைகள் இருவரும் எனக்கென்ன மனக்கவலை என்று தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் பல முறை தூங்காமால் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தால் என்ன என்று எழுப்பி பார்த்தேன். ஹ்ம்ம், அசதியில் சாப்பிட்டுத் தூங்கியவர்கள் தான். சரி நாமாவது நன்றாக வேடிக்கை பார்ப்போம் என்று முடிந்தவரை 'கிளிக்' செய்து கொண்டே வந்தோம்.

என் கணவருக்கு வண்டி ஒட்டாமல் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வரமுடியவில்லையே என்ற வருத்தம். அவருக்கும் சேர்த்து நான் பார்த்து, ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டே வந்தேன். ஆங்காங்கே, கொழுத்த ஆடுகளும், மாடுகளும் புல் மேய்ந்துக் கொண்டிருந்தன. வழியில் பார்த்த பாலங்கள் எல்லாம் நல்ல கட்டமைப்புடன் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்துடன் ஒரு கலைநயத்துடன் இருந்தது. முதலில் பார்த்த ஒரு போர்டில் Ausfahrt என்று எழுதியிருந்தது. அது ஒரு ஊர் போல என்று நினைத்துக் கொண்டோம். மறக்காமல், இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு போர்டில் Ausfahrt என்னடா, மதுரைக்கு வந்த சோதனை, ஒரு வேளை ஒரே ஊருக்குப் பல வழிகளிலும் போக முடியும் போல என்று நினைத்துக் கொண்டோம். பிறகு, அது exit என்பதைத்தான் அப்படி சொல்லிருக்கிறார்கள் என்று முருகன் மூலமாக தெரிந்து கொண்டோம்😁
இரவு 10 மணி வாக்கில் முருகனுடைய ஊருக்கு (Dresden) வந்து சேர்ந்தோம். கூகிள்மேப்ஸ் சொன்னபடி எல்லாம் சரியாகத்தான் இருந்தது. வழக்கம் போல கடைசியாகத்தான் ஒரு சின்ன சொதப்பல். அவர் வீடு தேடி சுற்றினோம், சுற்றினோம் அந்த ஊருக்குள்ளே அவ்வளவு நேரமும். அவர் குடியிருந்த தெரு மட்டும் தான் கண்ணில் படவே இல்லை. இரவு நேரமாதலால் ஜன நடமாட்டம் மிகவும் குறைவு. ஒரு கல்லூரி பக்கத்தில் சில மாணவர்களிடம் ஏதோ கேட்க அவர்கள் 'நோ இங்கிலீஷ்' என்று சொன்னதும் அடச்சே என்றாகி விட்டது. காரில் வந்து கொண்டிருந்த ஒருவர் தனக்குத் தெரியும் என்று எங்களை வழிநடத்தி ஏதோ ஒரு தெருவில் விட்டு இப்படி போங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நண்பரின் வீடு அவர் சொன்ன திசைக்கு மறு திசையில் இருந்தது. மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து தூங்கி கொண்டிருந்த என் மகளை எழுப்பி நீ படித்த ஜெர்மன் யூஸ் பண்ணி எப்படியாவது வழி கேட்டுக் கொண்டு வா என்று அவளுடன் என் கணவரும் இறங்கிக் கொள்ள அந்த வழியாக போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அவள் செல்போனை வாங்கி நண்பருக்கு போன் போட்டு அவரும் வரும் வழியை அந்தப் பெண்ணிடம் ஜெர்மனில் விவரமாகச் சொல்ல, அவளும் எங்களுக்குச் சரியான பாதையைக் காட்ட, நன்றி சொல்லி நண்பர் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அவரை கண்ட ஆனந்தத்தில் என் கணவர் ஹலோ முருகன், ஒரு வழியா உங்க ஊருக்கு வந்து சேர்ந்துட்டோம் GPS இல்லாமலே என்று சொல்லிக் கொண்டே இறங்க, அந்த இரவில் எங்களைத் தவிர எந்த மனித நடமாட்டமும் இல்லாத நேரத்தில், நாங்கள் எழுப்பிய சத்தத்தில் தூக்கத்தைத் தொலைத்த எதிர் வீட்டு மாடியில் குடியிருக்கும் சீத்த்தாப்பாட்டி😁 ஜன்னல் வழியே எங்களை பார்த்துக் கத்த, (ஜெர்மனில் தான்) நாங்களும் அமைதியாக எங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த நேரத்திலும் எங்களுக்காக காத்திருந்து சூடாக செல்வி சமைத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசி விட்டு களைப்பில் தூங்கி விட்டோம். என் மகளுக்கு அவளுடைய கனவுநாடான ஜெர்மனிக்கு வந்து சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி😇 என் மகனோ மெதுவாக தூக்கம் கலைந்து கொண்டிருந்தான்.

Tuesday, July 17, 2012

பயணக் குறிப்புகள் - Bruges, பெல்ஜியம்- 3

ப்ரசெல்ஸ் வந்த முக்கிய நோக்கமே Bruges நகரத்தை நாங்கள் ஒரு ஆங்கில படத்தில் பார்த்து அதன் அழகில் மயங்கி எப்படியாவது பார்த்து விடவேண்டும் என்று தான். அந்தப் படம் முழுவதும் Bruges-ல் மட்டுமே எடுத்திருப்பார்கள். எங்கள் உறவினரும் இதைக் கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியமாகிப் போனார். வருபவர்கள் எல்லோரும் Ghent, Antwerp போன்ற பெரிய நகரங்களுக்குத் தான் போக ஆசைப்படுவார்கள். நீங்கள் என்னடா என்றால் Bruges போக ஆசைப்படுகிறீர்களே என்று. வழியைக் கேட்டுக் கொண்டு விடைப்பெற்றோம். ஐரோப்பாவில் குடும்பத்துடன் தனியாக ஆரம்பித்தது எங்கள் பயணம்.

கூகிள்மேப்சில் நாங்கள் அன்று இரவு தங்கப் போகின்ற விடுதியின் முகவரிக்குப் போட்டு எடுத்து வந்திருந்த பிரிண்ட் அவுட்டுடன் கிளம்பினோம். வழியில் Antwerp , Ghent நகரங்களுக்குப் போகும் வழிகாட்டிகளை எல்லாம் தாண்டி தங்கும் விடுதிக்கு  வந்து சேரும் பொழுது இரவு 8.30 மணி. மகன் மற்றும் மகளுடன் வந்திருந்ததால்  அந்த ஊர் வழக்கப்படி இரண்டு அறைகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம்.  கொஞ்சம் களைப்பாக இருந்ததால் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு  இரவு நேர Bruges ஐ சுற்றிப் பார்க்க கிளம்பினோம். விடுதியிலிருந்து நகருக்குள் எப்படி போவது என்ற விவரங்களை விடுதி வரவேற்பாளரிடம் கேட்டுத்  தெரிந்து கொண்டு இரவு நேரத்தில் ஊர் சுற்றப் போவதால் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகு காரிலேயே  கிளம்பினோம். வாடகைக்கு எடுத்த ஷிஃப்ட் கார் ஓட்டுவது  மிகவும் கஷ்டமான ஒன்றாகத்தான் இருந்தது. நல்ல வேளை எனக்கு இந்த வண்டியை ஓட்ட வேண்டிய அவசியமில்லை. ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வரலாம்:) ஒரு பத்து நிமிடத்தில் ஊர் வந்து விட்டது. வரிசையாக வண்டிகள் நிறுத்தியிருந்த   இடத்தில நாங்களும் காரை நிறுத்தி விட்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த காவல்காரரிடம் எத்தனை மணி வரை இங்கே பயமில்லாமல் நடமாடலாம் என்று கேட்டதற்கு,  "பயமில்லாமல் இரவு முழுவதும் நடக்கலாம். பயப்படாமல் போங்கள்" என்று சிரித்துக் கொண்டே வழியனுப்பினார்.



எங்களைப் போலவே ஐரோப்பாவைச் சேர்ந்த மற்ற நாட்டு மக்களும் வேற்று மொழி பேசியபடியே குடும்பத்துடனும், சிறு குழந்தைகளுடனும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மொழியை அவர்கள் கடினமாக அழுத்தி பேசியது போல் இருந்தது. Bruges நகர நுழைவாயில் ஏதோ கோட்டைக்குள் செல்வது போல் கோட்டைச்சுவர்களுடன் இருந்தது. எங்கு காணினும் உணவகங்கள் மயம். பெரிய பெரிய பூந்தொட்டிகளுடன் பார்பதற்க்கே அவ்வளவு அழகு. ஊர் முழுவதும் பலவிதமான சிலைகள். நீரூற்றுகள்!!! இரவு நேரத்தில் வண்ண வண்ண விளக்குகளுடன் நெஞ்சை அள்ளும் விதத்தில் ஒருவித திட்டமிடலுடன் அமைக்கப்பட்டிருந்தன.


பல மைல்களுக்கு நடந்து ஆவலுடன் காண வந்திருந்த அந்த ஆற்றையும், அதன் மேல் கட்டப்பட்டிருந்த பாலங்களையும், ஆற்றுடன் ஒட்டிக்கொண்டிருந்த வீடுகளையும் இரவு நேர நிலா வெளிச்சத்தில் கண்டு களித்தோம். அங்கிருந்து போக மனமில்லமால் களைப்பாலும் பசியாலும் மீண்டும் விடுதிக்கே வந்து சேர்ந்தோம். நடுவில் வழியைத் தவற விட்டு யூகித்துக் கொண்டு திரும்பும் போது இரவு 11.30 மணி. எல்லா உணவகங்களும் மூடி விட்டன. பசி எடுக்கவே, பாலுக்குச் சொல்லி விட்டு கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டு விட்டு தூங்கிப்போனோம்.

மறுநாள் காலை 9 மணிக்கு நகர்வலம் போகத் தயார் ஆனோம். விடுதியிலேயே காலைச் சாப்பாடு, வித விதமான பிரட் வகைகள், பழங்கள், அவித்த முட்டைகள், scrambled eggs , வெண்ணை, ஸ்ட்ராபெர்ரி /திராட்சை ஜாம்கள் , பெல்ஜியன் waffles, தேநீர், காப்பி என்று அழகாக வைத்திருந்தார்கள். நன்றாகச் சாப்பிட்டு விட்டு, பெட்டிகளை காரில் ஏற்றி கணக்கை செட்டில் செய்து விட்டு, பகல் நேர Bruges நகரத்தைக் காண விரைந்தோம்.
அந்தக் காலைப் பொழுதிலேயே அவ்வளவு கூட்டம்! காலை உணவகங்கள் திறந்திருந்தன. காரை நிறுத்தி விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். அங்கங்கே எங்களை முன்னே நிறுத்தி சிலைகளுடனும், நீரூற்றுக்களுடனும், அழகிய கட்டிடங்களின் முன் வைத்தும் என் கணவர் படங்களை எடுத்துக் கொண்டே வந்தார். முதலில் ஆற்றில் படகில் செல்ல டிக்கெட்டுக்களை வாங்கி விட்டு வரிசையில் காத்திருந்தோம். இந்தச் சூழ்நிலை வெனிஸ் நகரத்தை நினைவுறுத்தும். அங்கு நான்கைந்து இடங்களிலிருந்து படகுகள் பயணிகளை ஏற்றிக் கொண்டு போகிறது. எங்களுக்கான படகு வந்தவுடன், குஷியாக கிளம்பி ஒவ்வொருவராக வரிசையாக அமர்ந்து கொண்டோம். படகோட்டியும் நல்ல ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லிவிட்டு வரிசையாக வரும் கட்டிடங்களின் அமைப்பையும், அதன் வரலாற்றையும் நகைச்சுவையுடன் சொல்லிக் கொண்டே வந்தார். அது ஒரு மணி நேரப்பயணம். காலை வெயில் மூஞ்சியில் 'சுள்'ளென்று அடிக்க கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டே வந்தோம். ஆற்றுப் பயணம் முடிந்தவுடன் அங்கிருந்த மீன் மார்க்கெட் பார்க்க கிளம்பினோம். முன்பு மீன் மார்க்கெட்டாக இருந்த இடத்தில் இப்போது சிறு கடைகளை போட்டிருந்தார்கள். நம் கோவில் கடைகளை அது ஞாபகப்படுத்தியது. அவற்றை எல்லாம் ஒரு பார்வை பார்த்து விட்டு சிறிது நேரம் ஆற்றையும், அதில் போகும் படகுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நகரின் வழியே கோட்டைக்குள் நுழைந்தோம்.

இந்த நகரம் ஒரு medieval கால நகரம். பத்தொன்பாவது நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பழமையான கட்டிடங்களை அதன் தொன்மை மாறாமல் பராமரித்து வைத்திருக்கிறார்கள். மதுரை மகாலும், மீனாக்ஷி அம்மன் கோவிலும் , புது மண்டபமும், ராணிமங்கம்மாள் அரண்மனையும் இன்னும் வரலாற்று முக்கியம் பெற்ற இடங்களை இந்தியாவில் நாம் இப்படி பராமரிப்பதே இல்லை என்று நினைக்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது. நாம் வரலாற்றுக்கும், வரலாற்றுமிக்க இடங்களுக்கும் முக்கியம் கொடுப்பதில்லை. அதை எல்லாம் மேல்நாட்டவர்களிடமிருந்து கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.

நகரம் முழுவதும் பெரிய பெரிய கல்லினால் போடப்பட்ட தெருக்கள். (cobblestones )

நிறைய அருங்காட்சியகங்கள். தெருக்களில் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.



சில அழகான ஓவியங்களை வாங்கினோம். நகரின் மையப் பகுதியில் ஓங்கி உயர்ந்த தேவாலயம். கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டிய இடங்கள்!

அங்கு தள்ளு வண்டியில் விற்றுக்கொண்டிருந்த தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே மீண்டும் நகருக்குள் நடை. நடந்தோம் நடந்தோம் நடந்துக் கொண்டே இருந்தோம். அழகான நீண்ட குறுகலான தெருக்கள். மதுரையில் சில தெருக்களை ஞாபகப்படுத்தியது. வீடுகள் எல்லாம் நன்றாக பளிச்சென்று இருந்தது. தமிழ்நாட்டில் சில கிராமங்களைப் படத்தில் இப்படி பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் பெரிய கதவுகள். சின்ன சின்ன ஜன்னல்கள். ஜன்னல்களில் வண்ண மலர் பூந்தொட்டிகள். தபால்காரர் ஒவ்வொரு வீட்டைத் தட்டி தபால்களை கொடுத்து விட்டு செல்கிறார்.






அந்த குறுகிய தெருக்களில் சின்ன சின்ன கார்களும், ஸ்கூட்டர்களும், சைக்கிள்களும் செல்கிறது. இப்படியே நடந்து வந்து கொண்டே வருகிற வழியில் இருந்த கடைகளை நோட்டம் விட்டுக் கொண்டும், சில சாமன்களை வாங்கிக் கொண்டும், 'ஹேமா' என்ற கடையை பார்த்ததும் அக்காவின் பெயரில் ஒரு கடை, அதுவும் Bruges இல் என்று வியந்து கொண்டே ஒரு 'கிளிக்'. எனக்கு எங்கு சென்றாலும் அந்த ஊர் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும். அங்கும் சில பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறேன். அப்படியே பல கடைகளைக் கடந்த பின் மிகவும் பரிச்சயமான 'pizza hut' என்ற போர்டைப் பார்த்தவுடன் என் மகனுக்கு ஒரே ஆனந்தம். எல்லோரும் pizza சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் ஒருமுறை பெல்ஜியம் ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு ஜெர்மனி கிளம்ப ஆயத்தமானோம்.
கிளம்பும் போது மணி பகல் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. மீண்டும் வந்த வழியே Antwerp , Ghent , ப்ரசெல்ஸ் ஏர்போர்ட் கடந்து நெதர்லாண்ட்ஸ் வழியாக ஜெர்மனி பயணம். நடுநடுவே பாலங்களில் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டோம். குழந்தைகளும் தூங்க ஆரம்பித்தார்கள். நடந்த களைப்பால் தூக்கம் கண்ணை சுற்றினாலும், எங்கே நான் தூங்க ஆரம்பித்தால் என் கணவர் கார் ஓட்ட சிரமப்படுவாரோ என்றெண்ணிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் , வெட்டிக் கதைகளைப் பேசிக் கொண்டும் வந்தோம். ப்ரசெல்சிலிருந்து பத்து மணி நேரப் பயணம் ஜெர்மனிக்கு.



Sunday, July 15, 2012

பயணக் குறிப்புகள் - Brussels, பெல்ஜியம் - 2

நாங்கள் முதலில் இறங்கிய இடம் மதிய உணவிற்காக. கணவர்,  குழந்தைகளுக்காக சிக்கன்பர்கரும், பிரெஞ்சுப்ரைசும், சுதாமன் மற்றும் எனக்காக வெஜ்பர்கரும் அநியாய விலைக்கு வாங்கிச் சாப்பிட்டோம்! அமெரிக்காவில் பர்கர்,fries,சோடா எல்லாம் பெரிய சைசில் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் ஐரோப்பாவில் எல்லாமே சிறிய சைசில் தான் கிடைக்கிறது. விலையும் மிக அதிகம். இது எதிர்பார்த்தது தான். இருந்தாலும் கொள்ளை விலையாய் இருக்கிறதே என்று நினைக்கத் தான் தோன்றியது. கை துடைக்கும் டிஷ்ஷு பேப்பர் கேட்டால் US-ல் மொத்தமாக தூக்கிக் கொடுப்பார்கள் அல்லது எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வகையில் வெளியே வைத்திருப்பார்கள்.  இங்கே கேட்டாலும் ஒன்றோ, இரண்டோ தான் கொடுக்கிறார்கள். அதுவும் சிறிய சைசில் தான் தான் கைதுடைக்கும் பேப்பர்கள் எல்லாம்! என் பையனும், சாப்பிட்டு விட்டு முகம்,கை கழுவ பாத்ரூம் பக்கம் போனவன், அரண்டு ஓடி வந்து daddy they are asking 1 euro to use the restroom என்று ஷாக் அடித்தவன் போல் கூற, நாங்களும் ஷாக்ஆகிப் போனதென்னவோ உண்மை தான். அமெரிக்காவில் இப்படி ஒன்றை கேள்விப்படாததால் சிறிது நேரம் ஆகியது இந்த விஷயத்தை ஜீரணிப்பதற்கு!



Mini Europe
சாப்பிட்டு முடித்து விட்டு அருகிலிருக்கும் மினிஈரோப் என்ற அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். ஐரோப்பா நாடுகள் அனைத்திலும் உள்ள பிரபலமான இடங்களை அதே மாதிரி சிறு,சிறு வடிவங்களில் மிக அழகாக உருவாக்கி இருந்தார்கள். வெனிசில் இருப்பது போல் படகுகளும், வீடுகளும், பாரிஸில் இருப்பது போல் ஐஃபில்டவரும், ரோமில் இருப்பது போல் பிசா டவரும், சர்ச்சுகளும், லண்டன் தேம்ஸ் ஆறும், பார்லிமென்ட் கட்டிடமும், இன்னும் பல. சுமார் ஒன்றரை மணி நேரமாவது நடந்து கொண்டே இருந்திருப்போம். குழந்தைகள் விளையாடும் வகையில் ஆங்காங்கே அவர்களுக்கான விளையாட்டுகளும், வீடியோகேம் விளையாட அரங்கமும் இருந்தது. அந்த இடங்களில் என் மகனும் ஜாலியாக இருந்தான். அப்பாடா என்றிருந்தது!

ஒருவாறு அதை எல்லாம் கண்டுகளித்த பிறகு வெளியில் வந்தால், Atomium - பார்ப்பதற்கு வேதியலில் பயின்ற மூலக்கூறுகள் அமைப்புடன் கண்கவரும் வண்ணம் இருந்தது. உள்ளே உணவு விடுதி, பல வியாபார சம்பந்தப்பட்ட அருங்காட்சியகங்கள் இருப்பதாகவும் இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் அந்த இடம் ஜொலிக்கும் என்றும் தெரிந்து கொண்டோம். மகன் இன்னும் அரைதூக்கத்திலேயே இருந்ததால் பஸ்-ஐ பிடித்துக் கொண்டு ப்ரச்செல்ஸ் நகருக்குள் சென்றோம்.


பஸ்சில் சிறிது நேரம் தூங்கியதால் இறங்கும் நேரத்தில் கொஞ்சம் தெளிந்திருந்தான். இறங்கிய பிறகு மீண்டும் சிறிது தூர நடை.  பிரமாண்டமான அழகிய சிலை வேலைப்பாடுகளுடன் பளிங்கினால் கட்டப்பட்ட பெரிய பெரிய கட்டிடங்கள் நகர் முழுவதும். அழகிய வண்ண வண்ண கண்ணாடி வேலைப்பாடுடன் கூடிய மிகவும் பழமையான கிறிஸ்துவ கோயில்கள். அவைகள் எல்லாம் வெறும் அழகுக்கும் நாட்டைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் பார்க்கும் இடமாகவும் ஆகிவிட்டிருக்கிறது. அங்கு வழிபாடுகள் எல்லாம் நடப்பதில்லை. உள்ளே மேரி மாதா, அந்தோனியார், சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த ஏசுவின் உருவங்கள் என்று பளிங்கினால் நன்கு செதுக்கிய அழகிய சிலைகள், அண்ணாந்து பார்த்தால் நீண்டு உயர்ந்த அழகிய வேலைப்பாடுகளுடன் சாளரங்கள், பழைய பிரமாண்டமான வாத்தியக் கருவிகள் என்று பார்வையைக்  கவரும் வகையில் அமைத்திருந்தார்கள். சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து விட்டு வெளியில் படியிலேயே இளைப்பாறினோம். நல்ல கூட்டம். அங்கிருந்து மெதுவாக நடை போட்டுக்கொண்டே மற்ற கட்டிடங்களையும் பார்த்தோம். நகரில் எங்கு பார்த்தாலும் சிலை வேலைப்பாடுகளுடன் கூடிய சிமெண்ட் கலரில் கல் கட்டடங்கள். நிர்வாண சிறுவனின் சிலைகள்! அது தான் பெல்ஜியத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. நகர் நடுவே செயற்கை நீர் ஊற்றுகள். அதைச்  சுற்றிலும் சிலைகள்.

எல்லா இடங்களைப் பற்றியும் சுதாமன் எங்களுக்கு அருமையான தகவல்களை சொல்லிக் கொண்டே வந்தார். குழந்தைகளுடன் அன்புடன் பழகியதால் அவர்களும் அவருடன் பேசிக் கொண்டே வந்தனர்.  ஐரோப்பாவில் பல நாடுகளில் வேலை பார்த்ததால் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அவருடைய பெற்றோர்கள் அவரைப் பார்க்க வந்திருந்த பொழுது அவர்கள் சென்று வந்தஇடங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. அங்கிருந்து மீண்டும் ஒரு பேருந்தை பிடித்துக் கொண்டு, Grand Place /Market Square எனும் நகர மையத்திற்குச் சென்றோம்.



Market Square/Grand Place
உள்ளே நுழைய, நுழைய கண்முன் பரந்து விரிந்த கண்கவர் கட்டடங்கள் நம்மை முழுமையாக ஆக்கிரமிக்கிறது. இது கனவா, இல்லை நனவா என்று நம்மை நாமே கிள்ளத் தோன்றுகிறது. அப்படி ஒரு அழகு! ஒரு நேர்த்தி! ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு விதத்தில் அழகு. இந்தியாவிலும் நாம் பல கோவில்களை இப்படி காணலாம். இவர்கள் பழமை மாறாமல் அந்த கட்டடங்களை அதே நிறத்தில் வைத்துப் பராமரிக்கிறார்கள். சிறிது நேரம் வரை அந்த கனவுலகத்தில் இருந்து விட்டு வெளியில் வந்து ஒவ்வொரு இடங்களையும் நிதானமாக பார்க்க ஆரம்பித்தோம். எங்கும் சுற்றுலாப் பயணிகள். பெரும்பாலும் குழந்தைகள் இல்லாத கணவன், மனைவி, வயதானவர்கள், காதலர்கள் வெவ்வேறு மொழிகளை பேசிக்கொண்டு.

அமெரிக்காவிலும், கனடாவிலும் பல நல்ல இடங்களைப் பார்த்திருந்தாலும், இந்த கனவுப்பிரதேசம் முற்றிலும் வேறுபட்டு இருந்ததால் அதிலிருந்து விடுபட முடியாமல் மனம் தத்தளித்ததென்னவோ உண்மை தான். மிகப் பெரிய வெட்ட வெளி இடம். குப்பை இல்லாத கல் தரைகள். ஒவ்வொரு கட்டடத்தின் மேல் தாமிரத்தால் வேய்ந்த கோபுரங்கள். அவை பருவநிலை வேறுபாட்டால் வண்ணம் மாறி காப்பர் ப்ளூவாக கட்டடத்திற்கு இன்னும் மெருகூட்டி இருந்தது. சிறு சிலைகளின் மேல் அடித்திருந்த தங்கப்பூச்சும் வெயிலில் மின்னிக் கொண்டிருந்தது.

என் கணவர் கேமராவில் பல இடங்களையும் வளைத்து,வளைத்து எடுத்துக் கொண்டார். அவருக்கு இயல்பாகவே போட்டோ எடுக்கப் பிடிக்கும். அதுவும் இந்த மாதிரி இடங்களை பார்த்தாலோ மிகவும் பரவசமாகி விடுவார். அங்குமிங்கும் அலைந்து கட்டடங்களைப் பல கோணங்களில் எடுத்து தள்ளிவிட்டார். அன்று வார இறுதி நாளாததால் எங்கும் கூட்டம். நல்ல வெயில். நிறைய உணவகங்கள்.  உணவகங்களில் நல்ல கூட்டம். மக்கள் வெளியே அமர்ந்து திராட்சை ரசம், பாஸ்டா , கறி என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கையில் ஐஸ்கிரீம்,பெல்ஜியன் waffles வைத்து சாப்பிட்டுக் கொண்டே நகர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப்  பார்த்து எங்களுக்கும் பசிக்க ஆரம்பித்து விட்டது. பெல்ஜியன் waffles - மிகவும் பிரபலமான உணவு. நம் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், அச்சில் வார்த்த இனிப்பு கோதுமை ரொட்டி. அதன் மேல் தேன் மாதிரி maple syrup கொட்டி கொடுப்பார்கள். நன்றாக இனிப்பாக இருக்கும். சிலர் ஐஸ்கிரீமையும் அதன் மேல் போட்டுச் சாப்பிடுவார்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம். சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். எல்லோரும் wafflesம்  ஐஸ்கிரீமும் வாங்கிக் கொண்டோம். குச்சியில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் என்று மாறி மாறி அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். அதை உருகிய சாக்லேட்டில் நனைத்து கொடுக்கிறார்கள். ஐஸ்கிரீமில் கூட போட்டுச் சாப்பிடலாம். சுதாமன் அதை எங்களுக்கு வாங்கி கொடுத்தார். என் மகனும் தூக்கக் கலக்கத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவனுக்கு பிடித்த ஐஸ் கிரீமும் சேர்ந்து கொள்ள, சோர்வும் அவனிடமிருந்து மெல்ல விடைபெற்றுக் கொண்டிருந்தது.


இப்படியாக மாலை ஐந்து மணி வரை சுற்றிக் கொண்டிருந்தோம். பெல்ஜியம் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகள், வீட்டுச் சாமான்கள், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய திரைச் சீலைகள், மேசை விரிப்புகள் மிகவும் பிரபலம். நிறைய கடைகளும் அவைகளை எல்லாம் விற்றுக் கொண்டிருந்தன. அதை எல்லாம் விட பெல்ஜியம் வைரைங்கள் மிகவும் பிரபலம். சிறு வயதில் என் பாட்டி அணிந்திருந்த வைரத்தோடுகள் பெல்ஜியம் வைரங்களால் செய்யப்பட்டது என்று அடிக்கடி அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இனிப்புக்  கடைகளுக்கும் பஞ்சமில்லை.  அங்கே அதை வாங்க மக்கள் கூட்டமும் அலைமோதிக் கொண்டிருந்தன. இதெல்லாம் நம்மூர் அல்வா, ஜிலேபி, முறுக்கு, பெங்காலி இனிப்புகள் பக்கத்தில் வருமா என்று எங்களுக்குள் பேசியபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு இனிப்பின் பெயர் கூட தெரியவில்லை. அப்படியே நண்பர் வீட்டுக்குப் பயணமானோம். சுதாமன் அவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைப் புத்தகத்தை எங்களுக்குப் பரிசாக அளிக்க, அவருக்கும், அவருடைய நண்பருக்கும் பல நன்றிகளைத் தெரிவித்து விட்டு, எங்களுக்குத் தேவையான பெட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்று காரில் Bruges நோக்கிப் பயணமானோம்.


Wednesday, July 11, 2012

பயணக் குறிப்புகள்- Brussels, பெல்ஜியம் - 1

நியூயார்க்கிலிருந்து மாலையில் 6.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட,  நீண்டுயர்ந்த கட்டிடங்களின் அழகும்,சாலைகளில் வண்டிகள் அழகாக ஊர்ந்து போவதும், வளைந்து நெளிந்து செல்லும் நெடுஞ்சாலைகளின் அழகுத் தோற்றமும் மெல்ல மெல்ல வெண்பஞ்சு மேக மூட்டத்தில் காணமல் போயின. விமானப் பணிப்பெண் ஒருவர் விமான பயணத்தில் எப்படி சீட்பெல்ட் போடுவது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்று செய்முறை விளக்கம் அளித்து முடித்த பின், கேப்டன் (விஜயகாந்த் இல்லைங்க, நிஜமான விமான கேப்டன்) எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். மேக பஞ்சு மூட்டைகளிடையே விமானம் பறக்க ஆரம்பித்து விட்டது. மெதுவே உயர, உயர விமானத்தில் வரும் 'கொய்ங்' ஓசை காதை வதம் செய்ய, சிறிது நேரம் ஆனது அந்த சத்தத்திற்குப் பழக😞

விமானம் ஒரு நிலைக்கு வந்த பின் முதலில் தாகம் தீர்க்க தண்ணீர், பழ ரசங்கள், மது பானங்களை வண்டியில் வைத்துக் கொண்டு மிகவும் அழகாகவும், நேர்த்தியாக உடையணிந்தும் அளவான மேக்கப் போட்டுக்கொண்டும்(!) வலிய ஒரு புன்சிரிப்புடனும், கனிந்த பார்வையுடனும் அழகான விமான பணிப்பெண்களும், மிடுக்கான ஆண்களும் என்ன வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டேஅவரவர் கேட்டதைக் கொடுத்தார்கள். ஐபாடில் பாட்டுக் கேட்டுக் கொண்டு கணினியில் படம் பார்த்தபடி புத்தகம் படித்துக் கொண்டும் பலரும் வந்து கொண்டிருந்தார்கள். நிறைய குழந்தைகளைப் பார்க்கும் போதே நினைத்தேன் 😓 இந்த பயணம் ஒரு வழியாகத் தான் இருக்க போகிறதென்று. சில குழந்தைகள் ஜம்மென்று வந்தன. சிலர், விமானம் புறப்பட்டதிலிருந்து ஆரம்பித்த அழுகையை விடாமல் மூச்சை இழுத்து இழுத்து அழுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. விமானம் மேலே போகும்பொழுது காது வலியால் அழுத குழந்தைகள் பலர். அவர்களை விட, அவர்களுடன் இருந்த அம்மாவையோ, அப்பாவையோ மற்றவர்கள் பார்த்த பார்வை தான் பரிதாபம். சிறிது நேரத்தில் அனைவருக்கும் இரவு சாப்பாடு வந்து அதையும் முடித்தோம். மகன் என் மடியில் தலை வைத்து காலை நீட்டி அப்பாவின் மடியிலும், அக்காவின் மடியிலும் படுத்துக் கொண்டு சுகமாக தூங்க, நாங்களும் அசதியில் உறங்கிப் போனோம்.

நியூயார்க் நேரப்படி அதிகாலை 2.30மணி. ப்ரஸ்ஸெல்ஸ் நேரப்படி காலை 8.30மணிக்கு வந்து சேர்ந்தோம். தூக்க கலக்கத்துடன் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வெளியில் வந்த பிறகு படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை விமானத்திலேயே வைத்து விட்டு வந்து விட்டதாக மகள் கூறியவுடன் வந்ததே கோபம் எங்களுக்கு. அது என் கணவர் மிகவும் மதிக்கும் ஸ்ரீ அரவிந்தரின் 'சாவித்ரி' என்ற புத்தகம். சரியான தூக்கம் வேறு இல்லாது களைத்துப் போயிருந்ததில் எல்லாம் சேர்ந்து நன்றாக வாங்கி கட்டிக்கொண்டாள். பிறகு பாம்பு வால் மாதிரி நீண்டு கொண்டிருந்த வரிசையில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அங்கிருந்த அதிகாரிகள் ஆங்கிலத்திலோ, ஃப்ரெஞ்சிலோ எங்கிருந்து வருகிறீர்கள், எவ்வளவு நாள் தங்குகிறீர்கள் என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி பாஸ்போர்ட்டில் உள்ள போட்டோவையும் , எதிரில் நிற்பவர் மூஞ்சியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே அவர்கள் நாட்டுக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். ஃப்ரெஞ்ச் பேசும் நிறைய ஆப்ரிக்க நாட்டு மக்களை பார்க்க முடிந்தது. எங்கள் பெட்டிகளும் வந்து சேர்ந்தது. அவற்றை எல்லாம் மூன்று தள்ளு வண்டியில் வைத்து விட்டு உறவினரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அந்த இடைவேளையில் எல்லோரும் பல் துலக்கி முகம் கழுவிக்கொண்டு வந்து விட்டோம். என் உறவினரின் பெயர் சுதாமன். அவருக்குப் போன் செய்து பார்த்ததில் அவரும் கிளம்பி விட்டதாக அவருடன் தங்கி இருப்பவர் தெரிவித்தார். அதற்குள் மகனுக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டது. உடனே

பால் ஒன்று வாங்கி கையோடு எடுத்து வந்திருந்த சீரியலுடன் கலந்து அவனுக்கு கொடுத்து விட்டு சுதாமன் வந்தவுடன் காலை உணவை சாப்பிடலாம் என்று காத்திருந்தோம். அவரும் ஒரு மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்தார். பின் அனைவரும் விமான நிலையத்திலேயே காலை உணவை முடித்துக் கொண்டோம்.

என் கணவரும், சுதாமனும் சென்று நாங்கள்

ஏற்கெனவே முன் பதிவு செய்திருந்த வாடகைக்கார் எடுத்து வர கிளம்பிவிட்டார்கள். நானும், குழந்தைகளும் பெட்டிகளுடன் ஊருக்குள் போகிறவர்களையும், எங்களைப் போல் யாரையோ எதிர்ப்பார்த்து உட்கார்ந்திருந்தவர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

எல்லா பெட்டிகளும் காருக்குள் போகாது என்பதால் ஒரு வாடகைக்காரைப் பேசி முடித்து பெட்டிகளை ஏற்றி விட்டு அனைவரும் காரில் பின் தொடர்ந்து சென்றோம்.

ஷிஃப்ட் கார் ஒட்டி ரொம்ப நாளாகி விட்டதால் அந்தக் காரை இயக்க கொஞ்சம் சிரமப்பட்டார் என் கணவர். அடடா! ஆரம்பமே தகராற இருக்கே. அடக்கடவுளே! இவரை நம்பி தொலைதூரப் பயணத்திட்டம் எல்லாம் போட்டோமே என்று கவலையாகி விட்டது எனக்கு. அந்தக் காரை வெளியே கொண்டு வருவதற்குள் போதும், போதும்என்றாகிவிட்டது. ஒரு வழியாக விமானநிலையத்திலிருந்து வெளியே வந்து முதல் சிக்னலில் நிற்கும் பொழுது சுதாமன் அந்த ஊரிலிருக்கும் சாலை விதிகள் சம்பந்தப்பட்ட

விஷயங்களைத் தெளிவுப்படுத்தினார். நகரில் முதலில் பார்த்தது IBM கட்டிடம் தான். அவர் அங்கு தான் வேலை பார்ப்பதாக கூறினார். ஞாயிற்றுக்கிழமையாதலால் தெருவில் கூட்டம் இல்லை. சோம்பேறித்தனமாக பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. அவருடைய நண்பர் வீட்டுக்குச் சென்று பெட்டிகளை இறக்கி வைத்து விட்டுச் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு முகம் கழுவி ஆடைகளை மாற்றிக் கொண்டு நண்பரின் மனைவி கொடுத்த சூடான ஏலக்காய் டீ சாப்பிட்டோம். அவர்களின் இரண்டு வயதுப் பெண் மிகவும் சுட்டியாக இருந்தாள். என் மகனுடன் bhaiya bhaiya என்று ஹிந்தியில் அவளுடன் விளையாட அழைத்துக் கொண்டே இருந்தாள்.

அவனோ நியூயார்க் நேரப்படி தூக்கத்தில் இருந்தான்! என் மகள் அவளுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு நாங்கள் விடை பெற்றுக் கிளம்பும் போது அந்தக் குழந்தை அழுததைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்கள் மாடியில் தங்கி இருந்தார்கள். மிகவும் குறுகலான படிகள். ஏறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படியோ பெட்டிகளை நண்பர்களின் உதவியோடு ஏற்றி விட்டோம். அந்த தெருவும் மிகவும் குறுகலாக இருந்தது. அதற்குள் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தார்கள். மற்ற கார்களும், பஸ்களும் போய்க்கொண்டிருந்தன!

சுதாமனும், ஊரைச் சுற்றிப் பார்க்கலாம், கிளம்புவோமோ என்றவுடன், அதற்குத் தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்று சிரித்துக் கொண்டே வெளியே கிளம்பினோம், . அரை தூக்கத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த என் மகனைத் தவிர நாங்கள் உற்சாகத்துடன் இருந்தோம்.
 
அவர்கள் வீட்டிலிருந்து இறங்கி ஒரு முப்பது அடிக்குள் தெருவில் திரும்பியவுடன் ட்ராம் ஒன்றுக்காக காத்திருந்து அதில் ஏறினோம். அது ஒரு புது அனுபவம். தெருக்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். ஒவ்வொரு ஊரும் ஒரு விதம். மக்கள் பேசும் அழகும், மொழியும், அவர்களுடைய நடை உடை பாவனைகளும் என்று அவர்களை வேடிக்க பார்க்க ஆரம்பித்து விட்டேன். சின்ன சின்ன நேர்த்தியான அழகான வீடுகள். அனேகமாக எல்லோர் வீடுகளிலும் அழகழகான வண்ணமயமான பூந்தொட்டிகள். சிறு குழந்தைகள் வரைவது போல் ஒரு சிறு கதவு, இரண்டு ஜன்னல்கள் என்று ஒவ்வொரு வீடும், பார்ப்பதற்கு அழகு. மிகவும் சிறிய கார்கள். அமெரிக்காவில் வீடு, கார், சாலைகள் என்று எல்லாமே பிரமாண்டமாக இருக்கும்.



இங்கே பஸ்கள், ட்ராம்கள், சப்வே, சைக்கிள் என்று போக்குவரத்து வசதி மிகுந்திருப்பதால், மக்கள் அதையே அதிகமாக பயன்படுத்துக்கிறார்கள். வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகும் வகையில் ஓரிடத்தில் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. சுற்றுச்சூழலை பாதுக்காக்க வேண்டும் என்ற உணர்வை அரசாங்கமும், மக்களும் பலவழிகளில் கடைப்பிடிப்பதை பலநேரங்களில் பார்க்க முடிந்தது. அந்த அளவு விழிப்புணர்வு பல அமெரிக்க மக்களிடம் காண்பது அரிது.


ப்ரச்செல்ஸ் வணிகரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மிகவும் முக்கியமான ஐரோப்பிய நகரம். ஐரோப்பாவின் பல முக்கிய வணிக முடிவுகள் நடக்கின்ற இடம். மிகவும் தொன்மையான வரலாறு நிறைந்த இடமும் கூட.. ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த கட்டிடங்களும், பலவண்ண கொடிகளுடன் பார்த்தாலே பிரமிக்க வைக்கும் கட்டிடங்களும் நகரின் நடுவில் இருக்கிறது.




Tuesday, July 10, 2012

ஹைர ஹைர ஐரோப்பா, ஹைர ஹைர ஐரோப்பா..

சென்ற வருடம் இதே நாளில் எங்கள் ஐரோப்பா பயணம். அதன் நினைவுகளிலிருந்து...

பயணக் குறிப்புகள் - 1. திட்டமிடல்

எங்களுடைய நெடு நாளைய கனவான ஐரோப்பா பயணம் சென்ற வருடம் நிறைவேறியது. இதோ,இதோ என்று இரண்டு வருடங்களாகத் திட்டமிட்டும், சென்ற வருடம் தான் செல்ல முடிந்தது. 2011 ஜனவரி மாதமே விமான டிக்கெட்டுகள் பார்க்க ஆரம்பித்து ஏறும் இடம், ஐரோப்பாவில் இறங்கும் இடம், பின் இந்தியா போகுமிடம் என்று பல அலைக்களிப்புக்களுக்குப்பின் ஒரு வழியாக டிக்கெட்டுகள் வாங்கி முடித்தோம். அப்பாடா! ஒரு பெரிய வேலை முடிந்து விட்டது என்ற திருப்திக்குப்பின் ஜெர்மனியில் இருக்கும் நண்பரிடமும் விசயத்தை சொல்லிவிட்டு, சுற்றிப் பார்க்கும் இடங்களைத் திட்டமிட ஆரம்பிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டோம்.

மார்ச்சில் ஆரம்பித்த விசா விண்ணப்பங்கள் அந்தா, இந்தா என்று இழுத்தடித்துக்கொண்டு ஏப்ரலில் முடிந்து, பெல்ஜியம் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தோம். நிறைய கேள்விகள்! அதற்குப் பதில்களும் அதை நிரூபிக்கும் சான்றிதழ்களும் என்று ஒரு பெரிய பேப்பர் மூட்டையை பாஸ்போர்ட்டுடன் அனுப்பி வைத்தோம். போன சில நாட்களில் எங்களிடமே எல்லாம் திரும்பி வந்து விட்டது. காரணம்😐 எங்கு அதிக நாட்கள் தங்கப் போகிறோமோ அந்த நாட்டிற்கு விண்ணப்பிக்குமாறு செய்தி சொல்லி இருந்தார்கள். பிறகு ஜெர்மனி தூதரகத்திற்குப் புதிதாக விசா விண்ணப்பித்தோம். முதல் வாரத்திலேயே அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது நேரில் வரவேண்டுமென்று😓

என் கணவரும் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டுப் போனால், நூத்தியெட்டு கேள்விகள் (ஒரு பேச்சுக்குத்தான்! ) கேட்டார்களாம். எந்த நாட்டில் முதலில் இறங்குகிறீர்கள் என்பதிலிருந்து, எந்தெந்த ஊர்களை எப்படி எல்லாம்(கார் /பஸ் / ரயில் /விமானம் ) சுற்றிப் பார்க்க போகிறீர்கள், நிறைய செலவாகுமே? யார் வீட்டில் தங்கப் போகிறீர்கள்? என்று நண்பரின் விலாசம், அவர் வேலை செய்யுமிடம், பண நிலவரம் என்று எல்லா தகவல்களையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். என் மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் பள்ளியிலிருந்து ஒரு தகவலையும் கேட்டு, கடைசியில் விசாவும் வந்து சேர்ந்தது. ட்ராவல் இன்சூரன்ஸ் என்று ஒரு தண்டத்தையும் வாங்கச் சொன்னார்கள். இது எல்லாம் அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்களுக்குத் தான்!!! அது என்ன கணக்கோ தெரியவில்லை:( அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் இநத வேலை எல்லாம் கிடையாது. டிக்கெட் எடுத்தோமா போனோமா என்று மிகவும் எளிமையாக இருந்திருக்கும்!) விசா வாங்கும் இரண்டாவது பெரிய வேலையும் முடித்தாயிற்று!

இன்டர்நேஷனல் லைசென்சும் வாங்கியாகி விட்டது.

மே மாதம் முதல் எங்கெல்லாம் போகப் போகிறோம் என்பதைத் திட்டமிட ஆரம்பித்து விட்டோம். நண்பர் முருகனும், செல்வியும் மிக அழகாக எங்கள் பயணத்திட்டத்தை வகுத்திருந்தார்கள். முதலில் கொண்டு போகும் சூட்கேசுகளை விமான நிலையத்தில் வைத்துவிட்டுச் செல்லும் வகை இருக்கிறதா என்று பார்த்தோம். எதேச்சையாக கணவரின் உறவினர் மகள் மற்றும் அவர் கணவர் ப்ரஸ்ஸெல்சில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்களிடமும் எங்கள் பயணத்தைக் கூறி பெட்டிகளை வைத்துக்கொள்ள முடியுமா என்று உதவி கேட்டோம். அவரும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி விமான நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்வதாக கூறினார். அடுத்த பிரச்சினையும் முடிந்தது.

வாடகைக்கார் விமான நிலையத்திலிருந்தே எடுக்க ஏற்பாடு செய்தாயிற்று. தானியங்கி என்றால் வாடகை அதிகம் என்பதினால் ஷிஃப்ட் காரை வாடகைக்கு எடுத்தோம். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் கார் ஓட்ட வேண்டியதில்லை. என் கணவருக்கும் கியர் காரை ஓட்டப்பிடிக்கும் என்பதினால் அவருக்கும் பிரச்சினையில்லை என்று சொல்லிவிட்டார். அந்த ஊரில் தங்கப் போகிற விடுதியில் அறையையும் முன் பதிவு செய்து விட்டோம்.

ஆக மொத்தம் பயணத்திற்கு வேண்டிய முக்கியமான வேலைகளை எல்லாம் முடித்தாயிற்று. எங்கள் பயண குறிப்பில் ஸ்விட்சர்லாண்டும் இருந்ததால் அந்த சீதோஷண நிலைக்கேற்றவாறு உடைகளையும், இந்தியாவிற்கான உடைகளையும், மற்ற ஐரோப்பா நகரங்களுக்கான உடைகளையும், நண்பர்களுக்கான பரிசுப்பொருட்களையும், கேமரா, பைனாகுலர், லேப்டாப், நண்பர் வாங்கி வரச்சொன்ன ஐபேட், மற்ற நண்பர் இந்தியாவிலிருக்கும் அவர் மச்சினருக்காக எடுத்துச் செல்ல சொன்ன லேப்டாப் சகிதமாக சூட்கேசில் வைத்து முடிக்கும் போது வீடு நிறைய சூட்கேசுகள் ஆகி விட்டது!

அந்த நாளும் வந்திடாதோ என்று நாங்கள் காத்துக் கொண்டிருந்த தினமும் வந்தே விட்டது. கொஞ்சம் படபடப்பு, கொஞ்சம் கவலை ( இன்னும் ஏதாவது மறந்து விட்டோமோ என்று) நிறைய சந்தோஷத்துடன் அன்றைய தினம் ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்து குளித்து விட்டு அனைவரும் காலை உணவை முடித்து பாத்திரங்களைக் கழுவி ஃபிரிட்ஜை சுத்தம் செய்து சுவாமி கும்பிட்டு விட்டு பக்தி பரவசமாய் விபூதி, குங்குமம் அணிந்து, வண்டியில் எல்லா சாமான்களையும் ஏற்றி விட்டு பக்கத்து வீட்டில் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டுச் சாவியை கொடுத்து விட்டு விடை பெற்றோம். துளசிச் செடியை நண்பரின் வீட்டில் வைத்து விட்டு வேனில் ஏறி கடவுளை வேண்டிக் கொண்டுப் பயணமானோம். குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்குமாறு பணம் கொடுத்தார்கள் (அவர்கள், வட மாநிலத்தவர் , அவர்களுடைய அப்பா, அம்மா அப்போது வந்திருந்தார்கள்) அவர்களிடம் தோட்டத்திற்குத் தண்ணீரை மறக்காமல் ஊற்றுமாறு சொல்லி விட்டு வீட்டிலிருந்து இரண்டு மணி நேரத்தில் வரும் ஒரு ரெஸ்ட் ஏரியாவில் வண்டியை நிறுத்தி சிறிது வயிற்றுக்கும் உணவு கொடுத்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து போக்குவரத்து மிகுந்த நியூஜெர்சி வந்து சேர்ந்தோம்.

நியூஜெர்சியில் நண்பர் ஒருவர் எங்களை நியூயார்க் விமான நிலையத்தில் விட்டு விட்டு வண்டியை அவர் வீட்டில் வைத்துக்கொள்வது தான் திட்டம். அதன் படி அங்கு சென்று அவரையும் அவர் நண்பர்களையும் பார்த்துப் பேசி விட்டுப் புறப்பட்டோம். அங்கிருந்து, ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஒரு வழியாக விமான நிலையம் வந்து சேர்ந்தோம். எல்லா சூட்கேசுகளையும் இறக்கி வைத்து விட்டு டிக்கெட் கவுன்ட்டர் சென்று செக்-இன் செய்து விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது மாலை மணி 5.30. சிற்றுண்டி முடித்து விட்டு வந்த பின் செக்யூரிட்டி செக் வழியாக வருவதற்குள் விழி பிதுங்கி விட்டது.

அவ்வளவு கூட்டம்.இதெல்லாம் முடிந்து நாங்கள் பயணிக்கவிருந்த இடத்திற்கு வந்து விமானத்தில் ஏற, விமானம் 6.30க்கு புறப்பட்டது.



















Thursday, July 5, 2012

ஜூலை நான்காம் தேதி - அமெரிக்க சுதந்திர தினம்

ஜூலை நான்காம் தேதி அமெரிக்க சுதந்திர தின விடுமுறையை நாடே ஆனந்தமாக கொண்டாடும். பலரும் தங்கள் வீட்ட்டின் முன்னால் அமெரிக்க தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள். வெள்ளை, நீளம், சிகப்பு வண்ணத் துணிகளை மரத்தை சுற்றியும் வைத்திருப்பார்கள். 

விதவிதமான தொப்பிகளும், பாசி மணிகளும், கண்ணாடிகளும் ஜோராக விற்பனை செய்யப்படும். அனைத்தும் தேசியக் கொடியின் வண்ணங்களில் இருக்கும். அன்றைய தினத்திற்கு நிறைய டி-ஷர்ட்களும் 'Happy July 4th ' போன்ற வாசகங்களுடனும், வெறும் கொடியுடனும் அல்லது வேறு பல டிசைன்களிலும் அமோகமாக விற்பனை ஆகும். அன்று பீர் விற்பனையும் கொடிகட்டிப் பறக்கும்.

மக்கள் பலரும் தங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அருகிலிருக்கும் பூங்காவிற்குச் சென்று, மாடு, பன்றி. கோழி  இறைச்சியை அங்குள்ள கரி அடுப்பில் சுட்டு, பன்னுடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டாடுவதும் வழக்கமாக இருக்கிறது. சோளத்தையும் சுட்டு சிறிது வெண்ணையை அதன் மேல் போட்டும் உப்பு சேர்த்தும் சாப்பிடுவதுண்டு. ஐஸ் பாக்ஸ் நிறைய குழந்தைகளுக்கு popsicles,சோடா,பெரியவர்களுக்கு பீர் என்று எடுத்துச் செல்வார்கள். பொதுவாக எல்லா பூங்காவிலும் குழந்தைகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு இருக்கும். ஒரே கூச்சலும் கும்மாளமுமாக அவர்கள் ஆடிக் கொண்டிருப்பார்கள். சில இடங்களில் தண்ணீரில் விளையாடும் வகையில் நீச்சல் குளங்களும் இருக்கும். அடிக்கிற வெயிலுக்கு குழந்தைப்பட்டாளங்கள் அங்கேயே குடி கொண்டிருக்கும். மெதுவாக சாப்பிட்டு முடித்து விட்டுமாலை மங்கிய பிறகு வீட்டுக்குச் செல்பவர்களும் உண்டு. அங்கேயே இரவு வரை இருப்பவர்களும் உண்டு. வெயில் காலத்தில் இரவு 9 .30 மணி வரை வெளிச்சம் இருக்கும்.
அன்று இரவு இருட்டிய பிறகு வானவேடிக்கை வெகு விமரிசையாக ஒரு இடத்தில் அரசாங்க அனுமதியின் பேரில் அனைவரும் வந்து காணும் வகையில் கொண்டாடப்படும்.

அந்த மாதிரி இடங்களில், காலை பத்து மணியிலிருந்தே கலை நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும், அருமையான பலவகை உணவுகளும் (விற்பனைக்குத் தான்) நடந்துக் கொண்டிருக்கும். நம்மூர் திருவிழா மாதிரி இருக்கும். பூரி மாதிரி மைதா மாவினால் செய்த ரொட்டியின் மேல் மாவுசர்க்கரையைத் தூவி விற்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும். corn dog என்று நம்மூர் பஜ்ஜி மாவில் முக்கி செய்த கறியை குச்சியில் சொருகி விற்கிறார்கள். நிறைய தாகம் தீர்க்கும் lemonade கடைகளும், ஐஸ்கிரீம் விற்பவர்களும், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் விற்பவர்களும், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, அமெரிக்க உணவகங்களும் வண்டியில் வைத்து வியாபாரம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். அனைத்திலும் கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும்.

மாலை நேரம் ஆக, ஆக மெதுவாக வானவேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும். மக்களும், உட்காருவதற்கு வசதியாக இருக்கைகள், தண்ணீர் பாட்டில்கள் சகிதம் வந்து கொண்டிருப்பார்கள். கலைநிகழ்ச்சிகளும், கூட்டத்தை பாதுக்காக்கும் காவல் படையினரும், அவசரத்தேவைக்கான மருத்துவ வண்டிகளும், தீயணைக்கும் வண்டியும் என சகல வசதிகளுடன் அந்த இடம்
பரப்பரப்பாக இருக்கும். வந்த அனைவரும் அவர்களுடைய வண்டிகளை வெகு தூரத்தில் இருந்து நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் தங்கள் இடத்தை, ஒரு பார்க்கிங் இடமாக மாற்றி காசு பார்ப்பவர்களும் உண்டு. எங்களைப் போல் வானவேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட்டம், சிறிது தொலைவிலிருந்து அந்த நேரத்திற்கு சரியாக வந்து, போர்வை போர்த்துக் கொண்டு, கொசு மருந்தையும் அடித்துக் கொண்டு காத்திருக்கும்.

நன்றாக இருட்டிய பிறகு, 'டுமீல்' என்ற வெடி ஓசையுடன் ஆரம்பித்தவுடன் கூட்டம் 'ஓ'வென்று ஆர்ப்பரிக்கும். அதன் பிறகு, ‘சர்,சர்’ என்று ஒன்றன்பின் ஒன்றாக வண்ண வண்ண கலரில் கண்களை மயக்கும்விதமாக வானத்தை அலங்கரிக்கும் வர்ண ஜாலத்துடன் வானவேடிக்கைகள் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும். சில குழந்தைகள் காதைப் பொத்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் காரிலேயே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறை கண்முன்னே விரியும் வானவேடிக்கைகளைப் பார்த்துக் கூட்டமே வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும். அதுவும், பல நிறங்களில் நம் தலை மேல் விழுவது மாதிரி வருகையில் அனைவரும் 'வாவ்' என்று வாயில் கொசு நுழையும் வரை ஆச்சரியப்பட்டுப் போயிருப்பார்கள். தங்கத் துகள்கள் தூவுவது போல், வெள்ளிமழை பெய்வது போல், பச்சை, சிகப்பு, நீல குண்டுமணிகள் வானிலிருந்து விழுவது போல், தங்க நட்சத்திரங்கள் என்று விதவிதமான வானவேடிக்கைகள். கடைசியில் மூச்சு விடாமல் SPB பாடியது போல், தொடர்ந்து மாறி, மாறி கண்களை அசத்தும் விதத்தில் வெடித்துச் சிதற, கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டே தங்கள் காரை நோக்கி ஓட என்று அன்றைய தினம் சுபமாக முடியும்.

நேற்று நல்ல வேளை மழை, குளிர் என்று எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆனந்தமாக வீட்டிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவிலிருக்கும் Lake George என்ற இடத்திற்கு போய் பார்க்கலாம் என்று ஒரு எட்டு மணியளவில் கிளம்பினோம். ஒரே கூட்டம். நிறைய பேர் குழந்தை குட்டிகளுடன் காலையிலிருந்தே வந்து ஏரியில் (அது பிரமாண்டமான ஏரி) குளித்து விட்டு, அங்கேயே சூரிய குளியலும் எடுத்துக் கொண்டு குழந்தைகள் மண்ணில் விளையாட என்று பொழுது போக்கி விட்டு இந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். எங்களைப் போல் வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டம் அந்த ஊர் முழுவதும் சுற்றி சுற்றி வந்து தங்கள் வண்டிகளை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஏரிக்கு அருகில் பணம் கட்டி விட்டு ஒரு இடத்தில் காரை வைத்து விட்டு நல்ல இடமாக பார்த்து உட்கார்ந்து கொண்டோம். மெதுவாக இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. 'சிலுசிலு'வென்ற காற்று. கண் எதிரே பெரிய நீலநிற ஏரி. எல்லை முழுவதும் பெரிய பெரிய படகுகள். அங்கிருக்கும் தீவைச் சுற்றிப் பார்க்க வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப் பட்ட பெரிய படகுகள் மெதுவாக தண்ணீரில் ஆடி அசைந்த படி சுற்றுலாவினருடன் சென்று கொண்டிருந்தது.  அவற்றிலிருந்து வரும் ஹார்ன் ஒலி, சிறு அலைகள் கரையைத் தொட்டு எழுப்பும் 'களுக்,களுக்' ஓசை, தூரத்திலிருந்து கேட்கும் பாட்டு என்று மெதுவாக நேரம் போய்க் கொண்டிருந்தது. சரியாக ஒன்பதரை மணிக்கு 'டுமீல்' என்ற ஓசையுடன் ஆரம்பித்து ஒரு இருபத்தைந்து நிமிடம் வரை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது வான வேடிக்கை.
ஆரவாரத்துடன் முடிந்த பின்னர், இருட்டில் வண்டி நிறுத்திய இடத்தைக் கண்டுபிடித்து கூட்டத்திலிருந்து வெளியே வந்து ஹைவேயில் நிலா ஒளியில் வீடு வந்து சேரும் பொழுது மணி பதினொன்று!

ஏரியின் பின்னணியில் பார்த்த அழகு, அடுத்த வருடம் கூட அங்கு தான் போக வேண்டும் என்ற நினைப்புடன் தூங்கப் போனோம்.

Monday, July 2, 2012

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்


என் மாமாவிடமிருந்து பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு முடிந்த அளவு நன்கொடைகளைத் தருமாறும், நண்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியும் வந்த கடிதத்தைப் பார்த்தவுடன் இக்கோவிலைப் பற்றிய என் நினைவுகள்.

தெற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயரும் இந்தக் கோவிலுக்கு உண்டு.

என் பாட்டி வீடு தென்னோலைக்காரத் தெருவில் இருந்த காலங்களில் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சௌராஷ்ட்ரா மத்திய சபையின் கீழ் இந்த கோவில் வருவதால் விசேஷங்களுக்கும் குறைவில்லை. கோவில் நுழைவாயிலின் இடதுபுறம் கருப்பசாமி வீச்சரிவாளுடன் மஞ்சள்/சந்தனம் பூசியபடி காட்சி தருகிறார். நான் கருப்பண்ணச்சாமி ஒரு கிராமத்துக் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திருமணமான பிறகு என் கணவர் ஒப்லா குடும்பக் கடவுள் என்ற விஷயம் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பொதுவாக, பெருமாள் அல்லது முருகக் கடவுள் தான் பெரும்பாலான சௌராஷ்ட்ரா குடும்பங்களுக்கு குடும்பக் கடவுளாக கேள்விப்பட்டிருக்கிறேன்! 

கோவில் வாசல் என்றால் பூக்கடைகாரர், செருப்பு பார்த்துக் கொள்பவர், மிட்டாய் விற்பவர்கள் இருக்க வேண்டும் என்பது எழுதாத சட்டம். இங்கும் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால்  வைஷ்ணவ விநாயகரைத் தரிசித்தப் பிறகு ஆஜானுபாகான ஆஞ்சநேயர். மக்கள் எண்ணெய் விளக்கு ஏற்றி ஏற்றி அந்த இடம் முழுவதும் ஒரே எண்ணெய் பிசுக்கு. சில நேரங்களில், துளசி மாலையுடனும், பக்தர்களின் ராமஜெயம் மாலையுடனும், பல நேரங்களில் வடை மாலையுடனும் 😃 அழகாக காட்சி அளித்துக் கொண்டிருப்பார். அவரைத் தாண்டி படியேறி மேலே போனால் அழகான லட்டு கோபால்!

அவரைத் தொடர்ந்து மூலவர் பெருமாளின் அழகான திவ்ய தரிசனம். பெருமாளை விதவிதமாக அலங்காரம் செய்து பக்தர்களை பரவசமூட்டுவது இங்குள்ள அர்ச்சகர்களின் சிறப்பு. காலை, மாலை, இரவு நேர பூஜைகளை சிறு வயதில் பாட்டி, பெரியம்மா, பெரியம்மா மகளுடன் கண்டு களித்திருக்கிறேன். அம்மனும் மங்களகரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அந்தக்  கோவிலில் சிறு வயதில் நான் ரசித்தது, அங்கிருக்கும் பெரிய பெரியவண்ண கண்ணாடி குடுவை விளக்குகள் தான். பார்ப்பதற்கு மிகவும்அழகாக இருக்கும். இப்போது அவை எல்லாம் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. கோவில் சுவரில் வரைந்திருக்கும் ஓவியங்களும் அழகு.

பெருமாள் கோவிலுக்கே உரித்த துளசி, பச்சைக் கற்பூரம் வாசனையுடன் தீர்த்தம் திவ்யமாக இருக்கும். அப்படியே கீழிறங்கினால் சுவாமி புறப்பாட்டிற்க்கான அனைத்து வாகனங்களும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அங்கு தான் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு காட்சி தரும் பரமபத வாசல். அதன் பிறகு நவக்கிரகங்களை வழிப்பட்டு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு அங்கிருக்கும் பெரிய நாமம் போட்ட உண்டியலில் காணிக்கையைப் போட்டு திருப்தியுடன் வெளியே வந்து மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கோவிலைச் சேர்ந்த இடத்தில் கோவிலுக்கான யானை இருக்கும் இடத்திற்கு சென்று யானையைச் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு வர என்று நன்கு பொழுது போகும்.

இந்தக் கோவிலில் பங்குனித் திருவிழா, கோலாட்டம் எல்லாம் மிகவும் விமரிசையாக நடக்கும். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோலாட்ட நிகழ்ச்சியில் அனைத்து இளம் வயது பெண்களும் கோலாட்ட குச்சியுடன் வந்து வளைத்து வளைத்து ஆட கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சின்னக் குழந்தைகள் கோலாட்ட குச்சியின் முனையில் ரோஸ் கலர் ஜவ்வு மிட்டாயை வைத்துக் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பங்குனி திருவிழாவின் போதும் 'ஜேஜே' என்ற திருவிழா கூட்டத்துடன் சுவாமி ஊர்வலம் கோலாகலமாக நடக்கும். சௌராஷ்டிரா மக்களின் ஆஸ்தான கோவில்களுள் இதுவும் ஒன்று. இன்றும் பலர் தங்கள் பெற்றோர்களின் திதியன்று சுவாமி புறப்பாடு, சிறப்பு பூஜைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பிரசாதமும் சூப்பராக இருக்கும் 😊



குளிச்சா குத்தாலம், கும்பிட்டா பரமசிவம்

நேற்று சில்லென்ற காற்றுடன் மாலை நேரத்தில் இளம் வெயிலில் சாரலைப் பார்த்தவுடன் குற்றாலம் பற்றிய என் நினைவலைகள் மீண்டும் உயிருடன் திரும்பி வந்தது.

குளிச்சா குத்தாலம், கும்பிட்டா பரமசிவம்..
குத்தால அருவியுல குளிச்சது போல் இருக்குதா ....
என்று பல திரைப்படபாடல்களிலும், மலையும், மலை சார்ந்த இடம், திருக்குற்றாலக் குறவஞ்சி, சிங்கன் சிங்கி, மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும், பொதிகை மலை என்றவுடனும் நினைவுக்கு வரும் குற்றாலத்தை பற்றிய என் நினைவுகள்...
அதுவரை தமிழ் பாடங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்து கேட்டுக் கொண்டிருந்த குற்றாலத்திற்குச் செல்லும் வாய்ப்பு நான் சிறுமியாக இருந்தபொழுது கிடைத்தது. மக்கள் ஒரு வருடமாக குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்து டூரிஸ்ட் பஸ் மூலம் குற்றாலத்திற்கு குடும்பத்தோடுசெல்வது வாடிக்கை. அதுவும் ஆடி மாதம் என்றால் கேட்கவே வேண்டாம். யாரைக்  கேட்டாலும், "குத்தால சீசன் சுப்பரா இருக்காம். நாங்க எல்லோரும் போறோம்" என்று விடுமுறைகளில் கிளம்புபவர்கள், ஒரு வாரத்திற்கு குழந்தை குடும்பங்களுடன் போகிறவர்கள், வெறும் தண்ணி அடிக்க நண்பர்களுடன்செல்கிறவர்கள், பஸ்சில் , பைக்கில்/காரில்/வேனில் செல்பவர்கள் என்று கூட்டம் கூட்டமாய் மதுரையிலிருந்து போகும் சௌராஷ்டிரா கூட்டம் நிறையவே இருக்கும். குற்றாலாத்தில் வசதி படைத்த சௌராஷ்டிரா குடும்பங்கள் பெரிய பெரிய தங்கும் இடங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

எம்மக்கள் நன்கு இயற்கையை ரசிப்பவர்களாகவும், வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்க வேண்டும்! அதனால் தான் இங்கெல்லாம் வீடு, பங்களா கட்டி வைத்திருக்கிறார்கள். இப்போது எல்லாமே வியாபாரமாகி விட்டது. சில இடங்களில் இலவசமாக தங்கவும், ரூம்கள் வாடகைக்கு கிடைக்கும் வகையிலும் வைத்திருக்கிறார்கள். சீசனில் ரூம்கள் கிடைப்பது அரிது, வாடகையும் பெரிது!

'ராதா டூரிஸ்ட்' என்று கிருஷ்ணாபுரத்தில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடுபவரும் வாடகை சைக்கிள் கடை உரிமையாளரும் இன்னும் மற்றொருவரும் சேர்ந்து குற்றாலத்திற்கு பஸ் விட்டனர். என் பாட்டியுடன் நான், அக்கா, தங்கை மற்றும் பெரியம்மா மகள் சகிதம் புறப்பட்டோம். பஸ் லக்ஷ்மிபுரத்தில் ஒரு வீட்டின் முன்னால் நிற்க, சாப்பாட்டுச் சாமான்கள், எங்களைப் போல பயணிகளின் மூட்டை முடிச்சுகளுடன், அரை டிக்கெட், முழு டிக்கெட் சண்டைகள், சச்சரவுகள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக நள்ளிரவுக்கு மேல் பஸ் புறப்பட்டது. ஏறியவுடன் நாங்கள் எல்லோரும் தூங்கிவிட்டோம். கண்முழித்து பார்க்கும் பொழுது குற்றாலத்தில் இருந்தோம்.

அங்கு, 'சாந்தி இல்லம்' என்ற பெரிய சத்திரத்திற்கு முன் பஸ் நிறுத்தப்பட்டு நாங்கள் அனைவரும் கீழே இறங்கினோம். முதன் முதலில் மிகப் பெரிய நெல்லிக்காய் மரத்தை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டே இடம் பிடிக்க உள்ளே ஓடினோம். பெண்கள் எல்லோரும் அவரவர் குடும்பத்திற்காக சாந்தி இல்லத்தில் இடம் பிடிக்க, ஆண்கள் அனைவரும் சாமான்களை இறக்க உதவி செய்து கொண்டிருந்தார்கள். பாட்டியும் நாங்களும் எங்களுடைய சாமான்களைச் சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டோம். பல் விளக்கி விட்டு நிமிர்ந்தால்  "எல்லோருக்கும் காப்பி ரெடி" என்று சமையல்காரர் ஒருவர் வந்து சொல்ல, ஓடிப் போய் வாங்கிக் கொண்டோம். மெதுவாக அந்த இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டே வெளியே வந்து பெரிய வரண்டாவில் உட்கார்ந்து நெல்லிக்காய் மரத்தில் நெல்லிக்காய் இருக்கிறதா என்று ஆராய்ந்துக் கொண்டே காப்பி சாப்பிட்டு முடித்தோம். அந்த இடம் ஒரு சௌராஷ்டிரா குடும்பத்திற்குச்  சொந்தமானது. மிகப் பெரிய ஹால்கள், சமையல் கூடம், சிறு ரூம்கள், பெரிய வராண்டா, பக்கத்திலேயே கழிவறைகள் என்று பெரிய இடம். முதன் முதலில் அழகர்கோவிலுக்கு பிறகு 'பச்சைப் பசே'லென்ற மரங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காப்பியின் சுவை மறைவதற்குள் காலை உணவைப் பரிமாற ஆரம்பித்தார்கள். கூட்டம் 'குடுகுடு'வென உள்ளே ஓட, நாங்களும் ஓடிப் போய் இடம் பிடித்துக் கொண்டு உட்கார ஒருவர் வேகமாக இலை போட்டுக் கொண்டே வர, பின்னாடியே வெண் பொங்கல், சாம்பார் வர நல்ல பசியுடன் இருந்தாலும் சுவையும் நன்றாக இருந்தாலும்,எப்போதும் போலவே சாப்பிட்டு முடித்து எழ ஆரம்பிக்க பாட்டியோ, "நன்றாக சாப்பிடுங்கள். மதிய சாப்பாடு நேரமாகும்" என்று சொன்னாலும் எழுந்து விட்டோம். ஆனால் அங்கே ஒவ்வொருவரும் சாப்பிடுவதைப் பார்த்தால் கொடுத்த காசுக்கு வசூல் பண்ணுவதாகவே தோன்றியது!

கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு துண்டு, உடைகள் சகிதம் குளிக்க அருவிக்குப்(மெயின்அருவி) புறப்பட்டோம். சாந்தி இல்லத்திலிருந்து பொடி நடையாகப் போனால் சிறிது நேரத்தில் 'ஜோ'வென்ற அருவியின் ஓசையை கேட்டவுடனேயே ஒரு சிலிர்ப்பு! கொஞ்சம் குளிர்வது போல் உணர முடியும். அருவியின் அருகில் செல்ல, சாரலும், குளித்து முடித்த பெண்கள் ஈரப் புடவையுடனும், குழந்தைகளுடனும், ஈரத்தலையுடனும் திரும்புவதை பார்த்துக் கொண்டே 'சலசல'வென்று நுரை பொங்கி பாறை வழியே வழிகின்ற அருவியைப் பார்த்தவுடன் மனம் குதூகலித்தது. முதல் முறையாக அருவியைப் பார்க்கிறோம். பக்கத்தில் செல்ல செல்ல நடுங்கிக் கொண்டே கூட்டத்தோடு கூட்டமாக முட்டி மோதி தலையை நுழைத்த அதே வேகத்தில் மூச்சு முட்ட வெளியே ஓடி வந்தால் அதற்குள் இன்னொரு கூட்டம் உள்ளே ஓட, 'தட் தட்' என்று தலையிலும், முதுகிலும், ஓங்கி அடிக்கின்ற மாதிரி விழுகின்ற தண்ணீரில் பழக சிறிது நேரம் ஆனது. மேலே நிமிர்ந்துப் பார்த்தால் நீல மேகம், கரும் பாறைகளுக்கு நடுவில் நுரையுடன் துள்ளிக் குதித்து விழும் அருவி. கண்கள் சிவக்க குளித்து முடித்து வெளியே வந்தால், சிறு குழந்தைகள் அங்கே குளம் போல சேர்ந்திருக்கும் தண்ணீரில் உருண்டு பெரண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டும், கைகால்களை நீவி, உருவிக் கொண்டும், ஒருவர் தலையில் எண்ணெய் வைத்து, பரோட்டோ கொத்துவது போல் கையை வைத்து தவில் வாசிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். போனவர்கள் எல்லாம் குளித்து முடித்து விட்டு வர, ஈர உடையுடன், நடுங்கிக் கொண்டே சாந்தி இல்லம் வந்து சேர்ந்தோம். தலையை துவட்டி விட்டு உடை மாற்றிக் கொண்டு சிறிது பசிஎடுக்கவே மதுரையிலிருந்து கொண்டு போயிருந்த நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட்டோம். எங்கள் வயதை ஒத்த குழந்தைகளும் கம்பும் கட்டையுமாக நெல்லிக்காய் மரத்தை நோக்கிப் போக நாங்களும் அவர்களுடன் சென்று கிடைத்த நெல்லிக்காய்களை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட்டோம். நல்ல சுவை. அதிலும் ஓசி நெல்லிக்காய்! கேட்க வேண்டுமா? மதிய நேரம் நெருங்க, நெருங்க பஸ்சில் வந்த அனைவரும் குளித்து முடித்து விட்டுத் திரும்பி இருந்தனர்.

எல்லோரும் மதியம் கறிக்குழம்பு(சைனா அவுண்டிம் பாத்) சாப்பிட வயிற்றைக் காய போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். குளித்ததால் அதிக பசி வேறு. வாசனையும் தூக்கலாக இருக்கவே பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட வரலாம் என்றவுடன் நாங்களும் ஓடிப் போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ஒருவர் பெரிய இலைகளைப் போட்டுக் கொண்டே வர,வேறொருவர் தண்ணீர் தெளித்துக் கொண்டே வர, வித்த முட்டைகளை பெரியவர்களுக்கு 5  சிறுவர்களுக்கு 2 என்ற கணக்கில் இலையில் போட்டுக் கொண்டே இன்னொருவர் போக, 'பொலபொல'வென வெள்ளை சாதம், கறிக்குழம்பு, பெரியவர்களுக்கு, பெரிய கரண்டி நிறைய கறி, சிறுவர்களுக்கு சின்ன கரண்டி நிறைய கறி என்று போக, சிறிது நேரம் ஆயிற்று அதை எல்லாம் பார்த்து மூச்சு விட. 5 அவித்த முட்டைகளையும், அவ்வளவு கறிகளையும் உண்ட சாப்பாட்டு ராமன்களையும் பார்த்து அதிசயுத்துப் போனோம். நாங்கள் சாப்பிட முடியாமல் வைத்த முட்டைகளை பாட்டி பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டார். பிறகு பசிக்கும் போது சாப்பிடலாம் என்று.
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்கிற மாதிரி குறட்டை விட்டுத் தூங்கியவர்களும்,  விளையாடிய சிறுவர்களும், சீட்டுக் கச்சேரியும், தாயம் விளையாடுபவர்களும், மீண்டும் குளிக்கச் சென்றவர்களுமாய் கூட்டம் கலைந்தது. இந்த நேரத்தில், பலர் வண்டி வைத்து ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி என்றும் போனார்கள். மாலை காஃபிக்காக மீண்டும் கூட்டம் சேர ஆரம்பித்தது. காபி குடித்து முடித்தவுடன் தலை சீவி, கமகமவென்று மணக்கும் கொடிபிச்சிப்பூவைத் தலையில் வைத்துக் கொண்டு கலைவாணர் அரங்கம் இருக்கும் பக்கம் போனோம்.

'சிலு சிலு'வென்று தூறல், இளம் வெயில், பூ வாசம், சில இடங்களில் மனோரஞ்சிதக் கொடி. அதிலிருந்து பூவை பறித்தும் பொடி நடையாக தியேட்டருக்கு கீழே இருக்கும் பூங்காவில் உட்கார்ந்து கொண்டு பொழுது போக்கினோம். சில மாலை வேளைகளில், சௌராஷ்டிரா நாடக கச்சேரி காசெட்டை டேப் ரெகார்டரில் போட எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டே கேட்டோம். திருக்குற்றாலநாதரை தரிசிக்கவும் செய்தோம். மிகவும் பழமையான கோவில். நன்றாக இருந்தது. அங்கிருக்கும் திருசித்திரச்சபை மிகவும் பிரபலமானது. கடை வீதிகளுக்குச் சென்றும், பழங்கள், மூலிகைகள் வாங்கிக் கொண்டும் 5 நாட்கள் தங்கியிருந்து ஊர் திரும்பிய அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை.

மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாண்டி ராஜபாளையம் தொட்டவுடன் ஒரு வித்தியாசம் தெரியும். வெயிலும் குறைந்த மாதிரி. மலைகளும், மரங்களுமாய் குற்றாலம் நெருங்க நெருங்க மலைகளுடன் கூடிய காடுகள் தூரத்திலிருந்து தெரியும் அருவியும் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இப்போதெல்லாம் பெண்கள் பக்கம் பெண் போலீசும், ஆண்கள் பக்கம் ஆண் போலீசும் நின்று கொண்டு மக்களை வரிசைப்படுத்தி அனுப்புவதாக கேள்விப்பட்டேன். பாலச்சந்தர் ஒரு படத்தில், மிக அழகாக குற்றாலத்தைப் படம் பிடித்து காண்பித்திருந்தார்.

மேல்நிலைப்பள்ளி படிக்கும் சமயத்தில் போன பொழுது, கூட்டத்தையும், குளிக்கும் இடத்தில் பார்த்த அசுத்தத்தையும், குடித்து விட்டு ஆண்கள், பெண்கள் குளிக்கும் பக்கம் வந்து பண்ணிய கலாட்டவைப் பார்த்து அன்றிலிருந்து போகவே பிடிக்காமல் திருமணமான பிறகு கணவர் குடும்பத்துடன் ரிசார்ட் ஒன்றில் தங்கி, சிற்றருவியில் குளித்ததோடு சரி. அதற்குப்பிறகு அந்தப் பக்கம் போக வாய்ப்பே வரவில்லை.

இன்றும் குற்றாலம் என்றவுடன் குடும்பம் குடும்பமாய் குதூகலாத்துடன் செல்லும் செல்வந்தர்களிருந்து கடைநிலை மக்களும், இலை நிறைய முட்டைகளும், கறியும், சாதமும் அதை மக்கள் உண்ட விதமும், எப்படி ஜீரணமாகிருக்கும் என்ற மலைப்பும், பூக்களின் வாசமும், அருவிகளின் 'ஜோ'வென்ற இரைச்சலும், பலவிதமான பழங்களும், பழைய கோவிலும், வரும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவும் என்று மனம் அலைபாய்கிறது.


  



ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...