Friday, January 31, 2020

Little Forest

மிகை நடிப்பு இல்லாத எதார்த்தமான கதாபாத்திரங்கள். அழகிய கதை. படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை கதாநாயகி சமைப்பதும் சாப்பிடுவதும் அதனூடே அவளின் அம்மாவுடன் வாழ்ந்த இனிய பொழுதுகளும் நினைவுகளுமாய் வெகு அழகாக நகர்ந்து செல்கிறது. நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சொந்த ஊரில் எளிதான, மனநிறைவான, நண்பர்களுடன் கொண்டாட்டமான வாழ்க்கையை ஒரு பெண் தனியாக எந்த வித கட்டுப்பாடுமின்றி வாழ முடியும் என்பதே கனவாகிப் போன காலத்தில் (இந்தியாவில்) இத்தகைய படங்களைப் பார்க்கும் பொழுதே புத்துணர்ச்சியையும் ஏக்கத்தையும் தருகிறது. இயற்கையாக தாமே விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், மாறும் பருவங்கள், தென் கொரியாவின் கிராமத்துச் சூழல் காண்போரை மகிழ்விக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து மகிழலாம்.


Tuesday, January 21, 2020

Squirrel Appreciation Day


இன்றைய தினம் எனது செல்லப் பிராணிக்கான நாள் என்று தெரிய வந்தது.
( ஜனவரி 21 'Squirrel Appreciation Day') பலருக்கும் செல்லமாகவும் சிலருக்கு உபத்திரமாகவும் வளைய வருகிறது இந்த அணில்கள். மதுரையில் வீட்டில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டாலே அம்மா, ஜன்னலை மூட மறந்துட்டேன் போல. அணில் உள்ளே வந்துடுச்சு. இப்படியே விட்டா கூடு கட்டிடும் என்றார். மரங்களை அழித்து விட்ட நாம் தானே குற்றவாளி என்று நினைத்துக் கொண்டேன். ஆல்பனி அணில்களைப் பார்த்த பிறகு மதுரை அணில்கள் நோஞ்சானாக இருப்பது போல தோன்றிற்று!

எங்கள் வீட்டுப் பின்புறத்தில் மரங்களில் ஆனந்தமாக அணில் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. போதாக்குறைக்கு நாங்கள் வேறு தீனிகளைப் போட்டு வளர்த்து வருகிறோம். அருகிலிருந்து இவர்களைப் பார்ப்பதால் எங்களுக்கும் ஆனந்தம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் விதவிதமாக நானும் ஈஷ்வரும் படங்கள் எடுத்து விடுவோம். விடியற்காலையில் சமையலறையில் நடமாட்டம் தெரிந்த பொழுதில் தீனிக்காக கதவருகில் காத்திருக்கும். ஜன்னலில் என் பார்வை படும்படி சமையலறையை பார்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் தான் காலை நேரத்தை உற்சாகப்படுத்துகிறார்கள். இப்பொழுதெல்லாம் விடுமுறையில் வரும் மகனும், மகளும் கூட 'உன் குழந்தைகள் வந்தாச்சு. சாப்பாடு போடும்மா.' என்று கிண்டலடிக்கும் அளவிற்கு செல்லமும் கொடுத்தாச்சு. தீனி போட்டு விட்டு திரும்புவதற்குள் மரங்களிலிருந்து இறங்கி வருவார்கள்! எப்படித்தான் தெரியுமோ?

மாம்பழம் என்றால் அதற்கும் ஆசை அதிகம். ஸ்ட்ராபெரிஸ், ஆப்பிள், திராட்சை, தேங்காய், கிர்ணிப்பழம், தண்ணீர்ப்பழம் என்று ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. அழகாக நறுக்கி வைத்தால் 'யம் யம்' என்று கையில் வைத்து சாப்பிடும் அழகிற்கே அடிக்கடி பழங்களையும் வைப்பதுண்டு. பறவைகளுக்காகப் போடும் தீனிகளை காலி செய்து விட்டுத்தான் செல்லும் இந்த ரௌடிக்கூட்டம். கடலை என்றால் விரும்பிச் சாப்பிடும். தேவைக்கு அதிகமாக கிடைத்து விட்டால் எங்காவது ஓடிச் சென்று மண்ணில் ஒளித்து விட்டு வரும். சில அசட்டு அணில்கள் செடித்தொட்டிக்குள் புதைத்து வைத்து விட்டு வேண்டும் பொழுது மண்ணைக் கிளறி குப்பையாக்கி விடுவதால் பலருக்கும் இவர்களைக் கண்டால் ஆகாது. இவர்களுக்குள்ளும் ஆல்ஃபா மேல் என்ற ஆணின அணிலின் ராஜாங்கம் இருக்கிறது. பெண் அணில்களை நெருங்க விடாமல் தானே தீனிகளை களேபரம் செய்து விடுகிறது!

வீட்டுக்கருகில் இருக்கும் பூங்காவில் ஒரு பெண்குழந்தை பெற்றோருடன் குளத்திலிருக்கும் வாத்துகளுக்கும் ஆமைகளுக்கும் ரொட்டிகளைப் போட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆவலுடன் நானும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அணில் ஒன்று அருகில் வருவதும் ஓடுவதுமாய் பரபரத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் எதிரிலிருந்த மரத்திலிருந்து ஒரே சலசலப்பு. 'க்ரீச் க்ரீச்' சத்தம். அந்த அணில் வாயில்  எதையோ வைத்துக் கொண்டு ஓட, அதை துரத்திக் கொண்டே இன்னொரு அணில் வேகமாக மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. அடடா! வாயில் என்னத்தை தூக்கிக் கொண்டு போகிறது? மரத்திலிருந்து ஏன் இவ்வளவு சத்தம்? அண்ணாந்து பார்த்துக் கொண்டே அருகில் செல்ல, சிறு பெண்ணுடன் வந்த கணவனும் மனைவியும் இரண்டு குஞ்சுகள் கீழே விழுந்து விட்டது. பார்த்தீர்களா? என்று கேட்டவுடன் தான் தெரிந்தது அந்த அடாவடி அணில் ஒரு குஞ்சைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. அம்மா அணிலும் அதைத் துரத்திக் கொண்டு போயிருக்கிறது. கூட்டின் ஓரத்தில் ஒரு குஞ்சு சருகுகளை பற்றிக் கொண்டு எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற நிலையில்! கீழே விழுந்த குஞ்சுகளை ஓடிச் சென்று கையில் எடுத்த அந்தப் பெண்மணி மேலிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டிருக்கிறது என்று அணில் குஞ்சை தன் கைகளில் ஏந்திக் கொண்டார். ரத்தம் கசிய அவரது சட்டையிலும் ஒட்டிக் கொள்ள, 'மாமி யூ ஹேவ் ப்ளட் ஆன் யுவர் ஷர்ட் ' என்று அவர் பெண்குழந்தை பதைபதைக்க, அவருடைய கணவரும் கீழே விழுந்திருந்த மற்றொரு அணில் குஞ்சை கையில் எடுத்துக் கொண்டார். பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல. கண்களைக் கூட திறக்கவில்லை. என்ன செய்யலாம் என்றார். மரத்தின் அருகில் விட்டு விட்டால் அம்மா வந்து எடுத்துக் கொள்வாளோ என்னவோ என்று மரத்தின் அருகில் வைத்து விட்டு ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். துரத்திச் சென்ற அணிலிடமிருந்து குஞ்சைக் காப்பாற்ற முடியாமல் வேகமாக மரத்தில் ஏறியவள் அங்கிருந்து கீழே விழுந்திருந்த குஞ்சுகளை ஏக்கத்துடன் பார்த்து மரத்தில் இருந்து இறங்குவதும் பின்பு மீண்டும் ஏறுவதுமாய் குழப்பத்துடன் அங்குமிங்கும் அலைவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மரத்தில் இருந்த குஞ்சும் கீழே விழுந்து அடிப்பட்டிருந்த குட்டியும் ஈன ஸ்வரத்தில் முனகிக் கொண்டிருக்க, 'அடிபட்ட குஞ்சுகளை அம்மா அணில்கள் விரும்புவதில்லை. அவர்களால் ஆபத்து என்று கைகழுவி விடும். நான் அருகிலிருக்கும் விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன்' என்று இரண்டு குஞ்சுகளையும் எடுத்துச் சென்று விட்டார் அந்தப் பெண்மணி.

ஈன்ற நான்கில் மூன்றை ஒரே நேரத்தில் பறிகொடுத்த அம்மா அணிலை நினைத்து மனம் வருந்தியபடி வீடு வந்து சேர்ந்தோம். வாழ்க்கை என்பதே போராட்டம் தானே? இதில் அணில் என்ன மனிதன் என்ன? ம்ம்ம்...

இன்று நினைத்தாலும் மனம் வருந்தும். அந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா அணிலின் பதைபதைப்பும் தவிப்பும் கண் முன்னே நிற்கும். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும்... கவிஞர் சொன்னது நினைவுக்கு வர, அம்மரத்தை கடந்து விடுவேன்.

காடுகளை வளர்க்க பெரிதும் உதவும் இச்செல்லங்களுக்கு இன்று நிறைய தீனிகள் போட்டு குஷிப்படுத்திவிட வேண்டியது தான். இந்த நாள் இனிய நாள் :)

படங்கள்: இணைய உபயம் 👍



Sunday, January 5, 2020

Vaping


சமீப காலமாக அமெரிக்க ஊடகங்களில் அதிகமாக 'Vaping' எனப்படும் ஈ-சிகரெட் புகைப்பதைப் பற்றி செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. புகைப்பிடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். கான்சர், நுரையீரல் தொடர்பான நோய்களும், இதய நோய்க்கும் வித்திடும் இப்புகைப்பழக்கத்தைக் கைவிட கோரி பல விளம்பரங்கள். இதற்கு அடிமையானவர்கள் வெகு சிலரே இதன் கோரப்பிடியிலிருந்து வெளிவந்துள்ளனர். சிகரெட்டில் இருக்கும் புகையிலையின் நச்சுத்தன்மையை விட சிறிதளவில் நச்சு குறைந்த ஈ-சிகரெட்டுகள் இப்பழக்கத்திலிருந்து வெளிவர விரும்புவர்களுக்கு உதவும் என்று அறிமுகப்படுத்தப்பட்டு இன்று இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் ஈ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி சில உயிரிழப்புகளும் தொடருவதால் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதன் தீங்குகளை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.

புகைப்பிடிப்பதை முழுவதுமாக தடை செய்ய முடியவில்லை. ஒரு பக்கம் விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இதன் தீங்குகளை எடுத்துரைக்கும் விளம்பரங்கள். அடிமையானவர்கள் தாங்களும் புகைத்து அந்த புகையை சுவாசிப்பவர்களையும் சேர்த்தே கொல்கிறார்கள். காலாற நடந்து செல்லும் எமனை எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து வருகிறார்கள்.

மனிதனே மனிதனுக்கு எதிரி😞😞😞

தடுப்பூசி அவசியமா ?


உயிரைக் கொல்லும் வியாதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது. சமீப காலமாக சிலர் இது இயற்கைக்கு முரணானது. நம்முடைய முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல ரீதியில் தடுப்பூசிகளுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பி வருகிறார்கள். இது சரியா தவறா என்று வாதிடுவதற்கு முன் நாம் வாழும் காலத்தில் புதிது புதிதாக நோய்களும் கிருமிகளும் உயிரை அச்சுறுத்தும் வேளையில் அவற்றினின்று தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மையை வழங்கும் ஊசிகள் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அத்தியாவசியமானதை இன்று சிலர் எதிர்க்கத் துவங்கியுளளர்கள்.

அமெரிக்காவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு முன் சில தடுப்பூசிகள் கட்டாயமாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மத நம்பிக்கையின் பேரில் அதற்கு விலக்கம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஐந்தில் ஒரு குழந்தை தடுப்பூசி போடாமல் இருப்பது சுகாதாரத்துறையினரை கலங்கடித்து வருகிறது.

இன்றோ மத ரீதியாக, தத்துவ நம்பிக்கையின் அடிப்படையில் , தனிமனித சுதந்திரத்தின் தலையீடாக தடுப்பூசிகள் அளிப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் சமுதாயம் ஒன்று உருவாகியுள்ளது. ஆல்பனி நகரில் இரண்டு நாட்களாக போராளிகள் இந்த கட்டாயமாக்கலை எதிர்த்துக் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்படப் போவது அவர்களும் அவர்கள் குடும்பங்கள் மட்டுமல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் தான் என்று அறியுமோ இப்போராட்ட சமூகம்?


பந்தர் எனும் அழகன்


சில நாட்கள் பெய்த அதிக மழையால் கோஹோஸ் அருவியில் வெள்ளப் பெருக்கெடுத்து பொங்கி வரும் ஹட்சன் ஆற்றைக் காண மக்கள் சிலர் குழுமியிருந்தார்கள். சிலர் படமெடுத்துக் கொண்டே, சிலர் மணலையும் அடித்துக் கொண்டு சீறிப்பாயும் அருவியை ஒருவித அச்சத்துடன் பார்த்துக் கொண்டே இருக்க, அங்கு வந்திருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தது ஷிபா இனு எனும் ஜப்பானிய இன வகையைச் சேர்ந்த இரண்டரை வயது பந்தர். அச்சோ! என்ன அழகு! ஹாய் என்றவுடன் வாலாட்டிக் கொண்டே அருகில் வந்து விட்டது.

செல்லமேன்னு தலையைத் தடவிக் கொடுக்க அதுவும் வாலாட்டிக் கொண்டே என்னைப் பார்க்க, மெதுவாக கால்கள் இரண்டையும் என் மடி மேல் போட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு நெருங்கி வர, அவனுடைய உரிமையாளர் (அப்பா என்று தான் சொல்ல வேண்டும்) பதட்டத்துடன் நோ நோ நோ நீ பாட்டுக்கு அவங்க மேல கால் போடக் கூடாது என்று சொல்ல, டபக்கென்று காலை எடுத்து விட்டு பாவம் போல் மூஞ்சியை வைத்துக் கொண்டு அழகாக நின்று கொண்டிருந்தான் பந்தர். அங்கு வந்திருந்த பலரும் அவன் அழகில் மயங்கி ச்ச்ச்சோ ஸ்வீட்! என்ன அழகு! பாராட்டுப் பத்திரம் வாசிக்க, அமைதியாக சினேகமாக அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தான். அதற்கு முதல் நாள் தான் காப்பகத்திலிருந்து தத்தெடுத்திருக்கிறார் இந்த அழகனை! இவையெல்லாம் விலையுயர்ந்த நாய் வகையினத்தில் சேரும். யாரோ வளர்க்க முடியாமல் அவனை காப்பகத்தில் விட, இவர்களும் ஆசையுடன் அழைத்து வந்து விட்டார்கள். அன்புக்கு நான் அடிமை என்பது போல் இருந்த பந்தர் அழகுச் செல்லம்!

நண்பர் ஒருவர் வீட்டில் இருக்கும் ஒன்றரை வயது நாய் ஆட்களைப் பார்த்து விட்டால் ஓடி வந்து பாய்வான். நக்கிக்கொண்டே இருப்பான். அப்படியேதும் செய்யாமல் இருந்ததாலோ என்னவோ எளிதில் வசீகரித்து விட்டான். சுப்பிரமணியும் நிவியும் இருந்திருந்தால் ஆரம்பித்திருப்பார்கள்! நினைத்துக் கொண்டோம் 🙂

மற்றொரு நண்பர், உருவில் பெரிய பார்த்தாலே பயப்பட வைக்கும் நாய் ஒன்று வைத்திருக்கிறார். முதன்முதலில் பார்க்கும் பொழுது அவளுடைய கண்களைப் பார்க்காமல் பேசுங்கள் என்றார். நானும் நண்பரிடமும் அவர் மனைவியிடமும் பேசிக்கொண்டே இருக்க அவளும் பக்கத்தில் முகர்ந்து கொண்டே வர, எனக்குத்தான் லப்டப் லப்டப் சத்தம் பலமாக கேட்க, ஒரு வழியாக வாலாட்டி என்னையும் நண்பர்கள் வட்டத்தில் சேர்த்துக் கொண்டாள். அதற்குப் பிறகு அவர்களுடன் பார்க்கும் பொழுது அமைதியாக நின்று கொண்டிருப்பாள். எனக்குத்தான் இன்னும் கூட பயமாக இருக்கிறது.

ஆனால் பந்தர் அப்படியெல்லாம் இருக்கவில்லை. பார்த்தவுடன் சிலரைப் பிடித்துவிடுவது போல் உள்ளங்கவர் கள்வனாகி விட்டான்.

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
பந்தர் போல் நாய் வளர்க்க
ஆசை தீரும் காலம் எப்பொழுது????

நான் பாடியது அருவிச்சத்தத்தில் யாருக்கும் கேட்டிருக்காது தான் 😛

பந்தர் எனும் அழகன் 

Holiday in the Wild

யானைகள்னாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் வனாந்திரத்தில் சுதந்திரமாக கம்பீரமாகத் திரியும் யானைகளைப் பற்றின டாக்குமெண்டரிகளை விரும்பி பார்ப்பதுண்டு. தந்தத்திற்காக தாயை இழந்த குட்டி யானை “Naledi” பற்றின டாக்குமெண்டரியையும் இதற்கு முன்பு இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

‘Holiday in the Wild’ படமும் விலங்குகளை விட கொடியவர்கள் மனிதர்கள் என்பதையும்,, இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையில் இருக்கும் திருப்தியும் மனநிம்மதியும் அன்புடன் பழகும் யானைகள் வழியாக புரிய வைக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸில் காண கிடைக்கிறது.


யாரிந்த சாண்டா?

அடுத்த வாரம் இதே நேரம் சாண்டா வந்து போன சுவடு தெரியாமல் குழந்தைகளும் பெரியவர்களும் கோலாகலமாக விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள். ப்ரீ-ஸ்கூல் , டே கேர் வரை பனிக்கால விடுமுறையாக அறிமுகமான கிறிஸ்துமஸ், மகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பொழுது தான் சாண்டாவின் திருவிழாவாக தொடங்கியது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த நிவி கண்கள் விரிய, அம்மா கிறிஸ்துமஸ் நாளன்று சாண்டாக்ளாஸ் நிறைய பரிசுகள் கொண்டு வந்து தருவாராம் என்று குண்டு போட்ட நாளில் தெரியவில்லை அது எத்தனை பெரிய வம்பு என்று! அதற்குப் பிறகு ஒரே சாண்டா கனவு தான்.

நம்ம அபார்ட்மெண்ட்ல ஃபயர்பிளேஸ் இல்லையே? எப்படி சாண்டா வருவார்? எங்கே பரிசுகளை வைப்பார்? நான் முதலில் எனக்கு என்னென்ன வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போடணும்...அவள் சொல்லிக்கொண்டே போக, எனக்குத்தான் "திக்திக்" கென்று இருந்தது. ஏதேது நம் தலையில் பெரிய மிளகாயை அரைக்கிற திட்டம் போல இருக்கே?

அவளுடைய பட்டியலில் இருந்து அவள் கேட்டதில் சிலவற்றை வாங்கி அவள் வெளியில் விளையாட சென்றிருந்த வேளையில் ஈஷ்வரிடம் வண்ண காகித உறை கொண்டு பூ வைத்து பெயர் எழுதி அதை அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக் காத்திருப்பேன். கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு தூங்காமல் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பாள்.

எங்கம்மா இப்ப சாண்டா இருப்பார்? எப்ப வருவார்? கேள்வி மேல் கேள்விகள் வரும்.

நீ தூங்கினா தான சாண்டா வருவார்.

இல்லை நான் முழிச்சிக்கிட்டு இருப்பேன் என்று கையும் களவுமாக சண்டாவைப் பிடித்து விடும் வெறியோடு காத்திருப்பாள்.

எனக்குத் தான் இவள் எப்பொழுது தூங்கி நான் எப்படி பரிசுகளை முன்னறையில் வைக்க என்று கவலையாக இருக்கும். திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து அம்மா, சாண்டாவுக்கு பாலும் குக்கீஸும் வைக்க மறந்துட்டேன் என்று சமயலறைக்குள் ஓடுவாள். ஓ! அந்த கொடுமை வேற இருக்கா? அதை வேற தின்னு தொலைக்கணுமே?

அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் அடித்தவுடன் ஓடிப்போய் பரிசுகளை ஓரிடத்தில் அழகாக அடுக்கி வைத்து விட்டு மறக்காமல் பாலையும் குடித்து குக்கீஸை பாதி சாப்பிட்டு( என்னவோ போடா மாதவா!)... திரும்ப வந்து படுத்துக் கொள்வேன்.

காலையில் மகள் போடும் ஆனந்த கூச்சலில், அம்மா இங்க வந்து பாரு. சாண்டா நான் கேட்டதெல்லாம் வாங்கியிருக்காரு. (என்ன கொடுமைடா மாதவான்னு இருந்தாலும் ) அப்படியா என்று ஒன்றும் தெரியாது போல நடித்ததெல்லாம் ஞாபகம் வருதே ...ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே. என்ன பண்றது? "பீ எ ரோமன் இன் ரோம்"னு சொல்லி வச்சிருக்காங்களே 🙂

அதற்கு அடுத்த வருடம் பட்டியல் நீண்டது. பல கனவுகளுடன் காத்திருந்தாள். டிவியில் சாண்டா பயணிக்கும் வரைபடத்தை வேறு போட்டுக் காட்ட இன்னும் சுவாரசியமானது அவளின் காத்திருப்பு. அவள் தூங்கிய பிறகு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்து பரிசுகளை அழகாக காகித உறையிட்டு மறக்காமல் குப்பைகளை மறைத்து தூங்கிப் போனேன். ... அவளின் ஆர்ப்பாட்ட கூச்சலில் விடிந்தது கிறிஸ்துமஸ் எனக்கு.

எனக்கு என்னென்ன வேணும்னு எப்படிம்மா சாண்டாவுக்குத் தெரியும் ? ஏய்! நீ தானே சாண்டா? கையும் களவுமாக ஒரு வருடம் சாண்டாவும் மாட்டிக் கொண்டதில் உண்மையான சாண்டாவை இன்னும் கொண்டாட ஆரம்பித்தாள்.

சுப்பிரமணிக்கு மூன்று வயதாகும் பொழுது தான் சாண்டா பற்றின கதைகளைச் சொல்லி அவனுக்காக நிவியும் காத்திருந்து தூங்கிப் போவாள். விடியலில் இருவரின் அலறல் சத்தம் தான் கேட்கும். 'தடதட'வென்று மாடிப்படியேறி ஓடி வந்து தூங்கியிருப்பவளை எழுப்பி பரிசுகளைத் திறந்து பார்க்கவா என்று ஆவலுடன் கேட்பார்கள். யார் சாண்டா என்று தெரிந்திருந்தும் தம்பிக்காக ரகசியத்தை காத்து வந்தாள் நிவி.

வீட்டிற்கு வந்தவுடன் கிறிஸ்துமஸ் மரம் வாங்க வேண்டும். அங்கு தான் சாண்டா வந்து பரிசுகள் வைப்பார். ஆரம்பித்து விட்டான் சுப்பிரமணி. கூடவே அக்காவும் சேர்ந்து கொள்ள வேறு வழியின்றி வாங்கி அலங்காரம் செய்து ஃபயர்பிளேஸ் அருகே உள்ளறையில் வைத்து விட்டோம்.

சாண்டா வரும் பொழுது ஃபயர்பிளேஸ் ஆன் செய்திருந்தால் எப்படி இறங்கி வருவார் என்று அறிவார்த்தமாக கேள்விகள் கேட்டு தூங்குடா. இப்படியே கேள்வி கேட்டுட்டு இருந்தா சாண்டா ஓடிப்போயிடுவார் என்று சொல்லி தூங்கிய பிறகு காரிலிருந்து கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை கொண்டு வந்து பேக் செய்து நானும் தூங்கிப் போவேன்.

நீ என்னவோ சொன்னே? நான் நினைச்சதெல்லாம் சாண்டா கொண்டு வந்து கொடுப்பார்னு? அவர் ஒன்னும் அதை கொண்டு வரலை. இதுக்கு மேலயுமாடா? ன்னு மலைப்பாக இருந்தாலும் அதுக்குதான் நீ லிஸ்ட் எழுதி வைக்கணும். பாவம் சாண்டா வயசான தாத்தா இல்ல? மறந்துருப்பார்னு சமாளிச்சாலும் போதும் போதுமென்றாகி விடும்.

ஒரு வழியாக அம்மா தான் சாண்டாவென தெரிந்த பிறகு லிஸ்ட் பாம்பு வால் மாதிரி நீள, மீ பாவம்டா பட்ஜெட் இவ்வளவு தான் என்று வந்து நிற்க, டிசம்பர் மாதம் முழுவதும் குறிப்பால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வண்டியை அலசுவார்கள்.

சொல்லும்மா. எங்க வச்சிருக்க?

எதை?

எங்க கிறிஸ்துமஸ் கிஃப்ட்ஸ்?

அதெல்லாம் இன்னும் வாங்கலை.

பொய்.

நீ தான் தேடி பார்த்தியே?

வீடு முழுவதும் தேடுவார்கள். அப்பாவிடம் கெஞ்சுவார்கள். ஆனாலும் அந்த வருட கிறிஸ்துமஸ் பரிசுகள் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்கள் கட்டிலுக்கு அடியில் குப்பைகளுடன் குப்பையாக எளிதில் மறைத்து வைத்து விடுவேன். பாவம். வீடு முழுவதும் தேடிக் கொண்டிருப்பார்கள். சமையலறையை உருட்டுவார்கள். நான் போகுமிடமெல்லாம் பின் தொடர்வார்கள். பைகளைத் துழாவுவார்கள். ம்ஹூம்! எங்கேயுமே காண கிடைக்காது.

இரண்டு வருடங்கள் வரை இருந்த ஆர்வம் தற்பொழுது இல்லை. மகள் எனக்கு ஒன்னும் வேண்டாம். எல்லாமே வாங்கி கொடுத்தது விட்டீர்கள் என்றவுடன் சுப்பிரமணியும் அப்ப அந்த பணத்தையும் எனக்கே செலவு பண்ணும்மா...

வாட்?

வாங்கும் பெருமாளாக சுப்பிரமணி மட்டும் தான் இதுவரையில். ஈஷ்வருக்கும் சேர்த்து 'நமக்கு நாமே' திட்டத்தில் சாண்டா வேஷம் போட்டாச்சு. இனி பரிசுகள் கொடுத்து தானே ஆக வேண்டும்ம்ம்ம்.

இந்த வருடம் தான் அடித்து பிடித்துக் கொண்டு ஆன்லைனில் எதுவும் தேடாமல் பணப்பரிசு உங்களுக்கு வேண்டியதை நீங்களே வாங்கி கொள்ளுங்கள் என்றவுடன் இருவருக்கும் திருப்தி.

முன்னெச்சரிக்கையாக சுப்பிரமணியிடம் உன்னோட கிரெடிட் கார்ட் பில் நான் கட்டி இருக்கேன். ஒழுங்கா வந்து பணத்த செட்டில் பண்ணு என்று சொல்லி விட்டேன். பணத்தைக் கொடுக்கிற மாதிரி கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அவன் என்னை விட பெரிய தில்லாலங்கடி. அதற்கும் மேலே திட்டம் போட்டு வசூலித்துச் சென்று விடுவான்.

சாண்டாவின் உருவில் நம்மிடையே பலர் இருக்கிறார்கள். தேவையான நேரத்தில் பரிசுகளாக வேண்டியவற்றை வாரி வழங்கிட. இனம் கண்டு கூடி மகிழ்ந்து வாழ்வோம் அனைவருமே!

புரிகிறவரையில்
புரியாதவைகளே
புதிர்களாகின்றன
வியப்பாய் விரிந்து
எதிர்பார்ப்புகளாக
எழுந்துநிற்பவையல்லாம்
பின்னொருநாளில்
புரிந்தக்கணத்தில்
அத்தனையும் தொலைகிறது
ம்ம்ம்ம்...



Rivers Remember

டிசம்பர் 2015 சென்னை மக்கள் பலரும் மறக்க முடியாத மாதம்! யாரும் எதிர்பாராத இரவொன்றில் ஆற்று நீர் வெள்ளத்தில் வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கு மாறும் என்று நினைத்துக் கூட பார்க்காத அந்நாளில் நடந்த உயிர், உடைமையிழப்புகளும் ஏராளம். தத்தம் குடும்பத்தினரை எண்ணி வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்களும் கலக்கம் கொண்டிருந்த நாட்களும் அவதியுறும் மக்களுக்குத் தங்களான உதவிகளைச் செய்ய மக்கள் பலரும் களத்தில் இறங்கியவர்களும் தொலைவில் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக உதவி செய்தவர்களும் என்று மக்கள் எனும் அற்புத சக்தி சமூக வலைதளங்களின் மூலம் இணைந்து மதம், மொழி, இனம் தாண்டி உதவியதை கண்முன்னே கண்ட அதிசய நாட்களை எளிதில் மறக்க முடியாது தான்!

"Rivers Remember" புத்தகத்தை எழுதிய Krupa GE தன்னுடைய சொந்த அனுபவங்களுடன் அன்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் வாயிலாக கண்டறிந்த உண்மைகளையும் எழுதியிருக்கிறார். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் மெத்தனப்போக்கே இத்துயரத்திற்கெல்லாம் காரணம் என்பதை ஆதாரத்துடன் எழுதியிருப்பதைப் படிக்க வருத்தமாகத் தான் இருக்கிறது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மக்களை அலைக்கழித்த ஆற்று நீர் வெளியேற்றத்தை முறையாக கையாளத் தவறவிட்டதும் இன்னல்படும் மக்களைக் காக்க தவறியதும் மீனவ சமுதாய மக்கள் படகு மூலம் தவித்தவர்களைக் காப்பாற்றியதும் என்று அன்று நடந்த பல நிகழ்வுகளையும் விரிவாக விவரித்துள்ளார். சென்னை ஆறுகளின் அன்றைய , இன்றைய நிலைகளையும் மனிதர்களின் சிந்தனையற்ற போக்கால் எவ்வாறு நீர் வளங்களைச் சுரண்டி பாதைகளை மறித்து எதிர்கால சந்ததியினருக்கு கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

புரிகிறது. சுற்றுப்புறச்சூழல் என்ற ஒன்றை முற்றும் மறந்து சுயநலம் ஒன்றே ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை உருவாக்கும் கல்வியும், அரசும், மக்களும் விழிப்புறும் நாள் தான் எந்நாளோ?


புலம்பெயர்தல்

நாடுநாடாய் சிலகடந்து
நான்கே பெட்டிகளுடன்
பயணித்த நாட்கள்
எங்கோ தூரத்தொலைவில்
நினைவுகளாய் தேங்கியிருக்க

ஏற்றமும் இறக்கமுமாய்
காலங்கள் உருண்டோட
கோலங்கள் உருமாறி
நானறியா வேறொருவளாகி

நெருங்குபவர்களும்
விலகுபவர்களுமாய்
சில நட்புகள்
இருந்தும் இல்லா உறவுகள்
சமன்செய்யும் நெருங்கிய குடும்பங்கள்

கைபிடித்து நடந்தவள்
இன்று வழிகாட்டியாகிட
மடியில் தவழ்ந்தவன்
சிறு தொலைவில்

அனைத்தும் தெரிந்த
அந்த ஒருவனே
அன்றும் இன்றும்
வழித்துணையாய்
என் பயணத்தில் 😍😍😍

(கனடாவிலருந்து அமெரிக்க மண்ணில் காலடி வைத்த நாள்😇)
(நவம்பர் 20, 1998)

உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம்

நவம்பர் 25 உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம்.

உடல், பாலியல், உளவியல் ரீதியாக பெண்கள் படும் சித்திரவதைகள் வெளியுலகம் அறியா வண்ணம் பலரும் அனுபவித்து வரும் துயரம் இருபதாம் நூற்றாண்டிலும் தொடருவது தான் கொடுமை . குழந்தைத்திருமணங்கள், பெண் குழந்தைகள் கடத்தல் , சில பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு கணவரால், அவர் குடும்பத்தினரால், பிறந்த வீடுகளில் உடன் பிறந்தவர்களால், பெற்றவர்களால், உறவுகளால், சமூகத்தில் வேலையிடத்திலும் வெளியிடங்களிலும், பள்ளிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இவ்வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்கள் ஆணதிக்கவாதிகளின் அதிகார துஷ்பிரயோகமும், பெண்ணை அடிமையாகவும், போகப்பொருட்களாகவும் நோக்கும் மனப்பாங்கே! ஒவ்வொரு பெண்ணிற்கும் நடக்கும் வன்முறை, அதற்கு ஒத்துழைக்கும் ஆண்களின் தோல்வியையே பறைசாற்றுகிறது.

வீட்டின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வீடு முன்னேற பெண்களின் சுதந்திரமும், கல்வியறிவும், அச்சமில்லா உலகமும் அவசியம். ஆண்களின் ஒத்துழைப்பில் மட்டுமே இவையெல்லாம் சாத்தியப்படும். ஒவ்வொரு ஆண்மகனின் கடமையும் கூட!

சாதி, மதம், இனம், மொழி, நாடு வேற்றுமைகள் மறந்து பெண்ணினத்திற்காக , பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகப் போராடும் நல்லுள்ளங்கள் வாழ்கவே!

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;”


அணில்களின் ராஜ்ஜியம்


காலையில் சமையலறையில் நடமாட்டம் தெரிந்து விட்டால் போதும் மெதுவாக மரத்திலிருந்து இறங்கி deckல் வந்து அமர்ந்து கொள்ளும். கதவு பக்கத்தில் வந்து நின்று தன் இருப்பைத் தெரியப்படுத்தும். சாப்பிட ஏதாவது கொடு என்பது போல் முகபாவத்துடன் நிற்கும் அழகில் பழங்கள், பழத்தோல்கள், விதைகள் , கடலையை அள்ளிப்போட்டு விட்டால் போதும். யம் யம் என்று தன்னுலகில் இன்பமாக வயிறு நிரம்ப சாப்பிட்டு தண்ணீரும் குடித்து விட்டு மெதுவாக மரமேறி விடும். நம்மூர் அணில்களோடு ஒப்பிட்டால் இவை பலமடங்கு பெரியவை. நாமம் இல்லாத அணில்கள், பெரிய வால்களுடன் குளிரைத் தாங்கிக் கொள்ள கூடுதலான மேற்தோல்கள் என்று பார்ப்பதற்கே கொள்ளை அழகு!

மழைக்காலத்தில் இதற்கு அதிக உணவு கிடைப்பதில்லை. பனிக்காலத்திற்காகவும் சேர்த்தே இலையுதிர்காலங்களில் தேடித்தேடி உணவுகளை பதுக்கிக் கொள்ளும். எங்கள் வீட்டுப் பின்புறம் இதன் பதுங்கு குழிகள் ஏராளம். அழகாக தன் சிறு கைகளால் பள்ளம் தோண்டி அதில் உணவுப் புதையலை மறைத்து யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே குழியை அழகாக மூடி ஓடி விடும். உணவு கிடைக்காத நேரங்களில் முகர்ந்து கொண்டே தான் பதுக்கிய இடங்களில் இருந்து உணவை ஆனந்தமாக உண்டு மகிழும்.

உண்ணும் பொழுது ஆண் அணில்கள் அதிகாரமாக சிறிய அணில்களையும் , பெண் அணில்களையும் துரத்தி விடும். சண்டையின்னு வந்துட்டா... பாணியில் யாரையும் நெருங்க விடாமல் மற்ற அணில்கள் ஏக்கத்தோடு கீழே சிந்தும் உணவுகளை உண்ணும். விலங்குகளிடத்தில் கூட ஏற்றத்தாழ்வுகள் ஆண், பெண் வேறுபாடுகள் அதிகமிருக்கிறது!

கொடும் பனியையும் , குளிரையும் தாங்கிக் கொள்ள இயற்கை போர்த்தி விடும் கூடுதல் மேற்தோல்கள் கோடையில் உதிர்ந்து மெலிந்து தெரியும். எங்கிருந்தோ பறந்து வரும் கழுகினத்தைக் கண்டவுடன் துள்ளி ஓடி மறைந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நுண்ணுணர்வு கொண்ட அணில்கள் இரையாவதும் அதிகம். மரத்தின் உச்சிகளில் கூடு கட்டி குஞ்சுகளுக்குப் பாலூட்டும் தாய் அணில்களுடன் வளைய வரும் குட்டி அணில்கள் அழகோ அழகு. குஞ்சுகள் தனியாக உணவு தேடும் பருவம் வரை தாயுடனே வெளிவரும்.

நடுரோட்டில் நின்று கொண்டு இங்கி பிங்கி பாங்கி போட்டு எந்தப் பக்கம் ஓடுவதென்று தடுமாறி வண்டி ஓட்டுபவர்களையும் பதற வைக்கும். கோடை மாதங்களில் சாலைகளில் அதிகம் இறந்து கிடப்பதைக் காண வருத்தமாக இருக்கும்.


மழை, பனி, குளிர், வெயில் என அனைத்துப் பருவநிலைகளிலும் உணவைத் தேடி அலைந்தபடியே இயற்கையைப் பாதுகாக்கும் இச்சிறிய உயிரினம் கற்றுக் கொடுக்கும் பாடங்களோ ஏராளம்!

இயற்கையோடு இணைந்தால் எதுவும் ரொம்ப அழகு...


நன்றி நவில ஒரு நாள்


Happy Thanksgiving 💐💐💐

செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பிக்க, குளிருடன் கொலு ஊர்வலம், சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பெருமாளுக்கான புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜைகள், ஹாலோவீன் டே இனிப்பு தினம் தித்திக்கும் தீபாவளியில் முத்தாய்ப்பாக முடிய, நிமிர்ந்து பார்ப்பதற்குள் பனியும் வாசற்கதவைத் தட்ட, கூடவே புன்சிரிப்பு முகங்களுடன் வளைய வரும் மக்கள் காத்திருப்பது நவம்பர் மாதத்திற்குத்தான்! பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அதிகமான விடுமுறை நாட்கள் கிடைப்பதால் ஆவலுடன் அவர்களும் காத்திருக்கும் மாதமிது!

யாத்ரீகர்களாக அமெரிக்காவிற்கு குடிபுகுந்த வெளிநாட்டவர்கள் ஆதிமக்களின் நிலத்தை கையகப்படுத்தி அங்கு விளைந்தவைகளை இம்மண்ணின் மைந்தர்களுக்கே படையலிட்டு நன்றி சொன்ன நாள் என்று பள்ளிப்பாடங்களில் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியும் வரலாறும் மிக கொடியது. பல லட்சம் பூர்வீக மக்களைக் கொன்று குவித்து அவர்களின் கலாச்சாரத்தை சிதைத்து கொடுஞ்செயல் புரிந்தவர்கள், கொண்டாட்டத்தை மட்டும் கைவிடாமல் நண்பர்கள், உறவுகளுடன் குதூகலித்து உணவு பல உண்டு மகிழும் இனிய நாளாக இன்று 'தேங்க்ஸ்கிவிங் டே'யை கொண்டாடி மகிழுகிறார்கள்.

இந்த நாளில் பலரும் அவரவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிமையாக பொழுதைக் கழிக்கிறார்கள். வான்கோழி இறைச்சி பிரதான உணவாக படைக்கப்பட்டு சோளம், பூசணிக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்குகளில் செய்த இனிப்பு, கார வகைகள், விதவிதமான ரொட்டிகள், க்ரான்பெர்ரி சாஸ், கேக் மற்றும் மதுபான வகைகள் என்று பேக்கரி, பலசரக்கு, மதுக்கடைகளுக்கும் வருமானத்தைத் தேடித்தரும் திருநாளாக உருமாறியிருக்கிறது! வருடத்திற்கு ஒருமுறை உறவுகளைச் சந்தித்து அளவளாவி மகிழும் நாளுக்காக பலரும் கார், பேருந்து, விமானப் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதும் விமான நிலையங்கள் மக்கள் வெள்ளத்தால் அலைமோதுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து மழையாக, பனிப்பொழிவாக, கடும்குளிராக இயற்கையும் பரபரப்பாக்க மேலும் சுவாரசியமாகும் இந்நாள்!

புதன்கிழமை வரை பரபரப்பாக இருக்கும் சாலைகள் வியாழக்கிழமை மாலைக்குள் அடங்கி விடும். நண்பர்கள், உறவுகள் வீடு நோக்கிச் செல்லும் வண்டிகள் மட்டுமே சாலையில். சிரிப்பும் கும்மாளமுமாய் அனைத்து வீடுகளும் ஒளிவெள்ளத்தில் திளைத்துக் கிடக்கும் . கிறிஸ்துமஸ் மரங்கள் முன்னறையை அலங்கரிக்க , சாண்டா என்ன பரிசுகளுடன் வருவாரோ? கனவுகளுடன் குழந்தைகள் உற்சாகமாக வளைய வரும் அழகிய நாட்கள் இனி ஆரம்பமாகும்.

இந்த நாளைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையன்று ஆன்லைன் மற்றும் கடைகளில் நடக்கும் வர்த்தகம் பல நிறுவனங்களுக்கும் ஒரு வருடத்திய வருவாயை ஈட்டித் தரவல்லது. அதிவிலை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பலவும் குறைந்த விலையில் கிடைப்பதால் வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்க மக்களும் காத்திருக்கும் நாள். Veterans Dayல் ஆரம்பித்து Thanksgiving Day வரும் முன்னரே தள்ளுபடி விற்பனைகள் சூடு பிடிக்க, நன்றி நவிலும் நாளில் மாலை முதல் சில நாட்களுக்குத் தொடரும் அதிரடி விலைகுறைப்பிற்காக தள்ளு முள்ளு செய்து நினைத்த பொருட்களை வாங்கிய வெற்றிக்களிப்பில் சனி, ஞாயிறு கழிய, சைபர் மண்டே டீலுக்காக காத்திருந்து ஆன்லைனில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம். இந்த மாதமும் கிறிஸ்துமஸை ஒட்டி அடுத்த மாதமும் நடைபெறும் வர்த்தகத்தைப் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறது வணிக உலகம். மக்களை வாங்க வைக்க எல்லா தகிடுதத்தங்களும் செய்கிறார்கள். மக்கள் செலவு செய்து கொண்டே இருந்தால் தான் இவர்களால் வாழ முடியும். விட்டில் பூச்சியாய் மக்களும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்! உலகத்தையே இப்படித்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது வியாபார உலகம்.

இந்த மெகா தள்ளுபடி நாட்களுக்காக பல வெப்சைட்களை அலசி ஆராய்ந்து என்று எந்த கடையில் எந்த நேரத்தில் விற்பனையென நேரம் பார்த்து நண்பர்களுடனும் தம்பதி சமேதரராகவும் தனியாகவும் கிளம்பிவிடுவார்கள் பலர். அத்தியாவசியப் பொருட்களை காத்திருந்து குறைந்த விலையில் வாங்குவது சமயோசிதம். சிலர் பொருட்களை வாங்கி அதிக விலைக்கு ஈபேயில் விற்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட அதே பொருட்களை வாங்கி, இங்கி, பிங்கி, பாங்கி போட்டு ஒன்றை வைத்துக் கொண்டு மற்றவற்றை திருப்பிக் கொடுப்பதும் தான் கொடுமை. இச்செயல் வாங்க வந்த மற்றவர்களுக்கு கிடைக்காமல் போகச் செய்து விடும் என்ற பொது அறிவை சுயநலமிக்கவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு தான். பலரும் வாங்கிய பொருட்களைத் திரும்பி கடைகளுக்கு எடுத்துச் சென்று "ரிட்டர்ன்" செய்யும் கொடுமையும் நடக்கும். ஆன்லைன் வர்த்தகம் வந்த பிறகு கடைகளுக்குச் செல்லும் கூட்டம் குறைந்து விட்டது.போக்குவரத்து நெருக்கடியும் கூட!

இனி கிறிஸ்துமஸ் தள்ளுபடிக்கு காத்திருப்பார்கள். அடுத்த மாதத்திலிருந்து வீடு தேடி வரும் பொருட்களுக்கு ஷிப்பிங் மற்றும் பேக்கிங் இலவசம் என்பதால் இன்னும் ஜமாவாய் வியாபாரம் நடக்கும். சாண்டாவின் வருகையில் வியாபார உலகம் புத்துணர்ச்சி பெரும் மாதமல்லவோ?

பல இடங்களில் வசதியற்ற குழந்தைகளுக்காக இலவச கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்க பெரிய பெரிய அட்டைப்பெட்டிகளை வைத்திருப்பார்கள். பலரும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கும் பரிசுப் பொருட்களுடன் அபாக்கிய குழந்தைகளுக்கும் வாங்கி மகிழ்கிறார்கள்.

நானும் வாங்கி வைத்திருக்கிறேன். அப்ப நீங்க?

"Giving is sometimes as simple as saying thank you to someone. Let's all give a little more."

வரலாற்றை மறக்காமல் இன்றைய நாளில் வாழ்வின் வரங்களை நினைவுகூர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி நன்றி நவிழ்ந்து இனிதே கொண்டாடி மகிழ்வோம்!

Wednesday, January 1, 2020

ப்ளம் கேக்

கிறிஸ்துமஸ் என்றாலே எனக்கு ப்ளம் கேக் தான். ப்ளம் கேக் சீசனும் வந்தாச்சு. யாராவது பண்ணிப் பார்த்து நல்லா வந்திருந்தா ரெசிபிய போடுங்கன்னு கேட்டு வருஷம் ஒன்னு ஓடியே போச்சு. ம்ம்ம்ம்ம்...😞

ராஜாபார்லி கிளை நிறுவனம் ஒன்னு ஆல்பனிக்கு வரணும்😞

கடையில வச்சிருக்கிறதெல்லாம் பார்த்துட்டு கடந்து போறதெல்லாம் ஜென் நிலையில சேருமோ🤔🤔🤔

போன வருஷம் கேட்ட ப்ளம் கேக் ரெசிபி இந்த வருஷம் கிடைச்சு அத சமைச்சும் பார்த்து டேஸ்ட் பண்ணினதுல
” தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறு எங்கேன்னு” என்னைய பாட வச்சு... அவ்வளவு சுவையா இருந்தது. யாரும் சொல்ல மாட்டாய்ங்க. ஆக, நமக்கு நாமே திட்டத்தில்... இனி ராஜா பார்லிக்கு போற வேலை மிச்சம்னு...

இனி எண்டே ஃபேவரைட் கேக் ப்ளம் கேக். அதுவும் நானே பண்ணினது. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க😂


ரெசிபி:
https://youtu.be/Wgrv5ithNrg
https://youtu.be/Cd0x661PujE


இந்த நாளை ப்ளம் கேக் சாப்பிட்டு
கொண்டாடுவோம்ம்ம்ம்ம்😇

புது வருட தீர்மான அலப்பறைகள்


டயட்டை எண்ணிப் பார்க்கையில்
ரெசிபி கொட்டுது
ஃபாலோ பண்ண நினைக்கையில்
விடுமுறை வந்து கெடுக்குது

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல
என்ன சாப்பிட்டாலும் எனக்கு எடை ஏறதில்ல

🙄🙄🙄

இதையும் எழுதிக்க
நடுநடுவுல பிரியாணி, பரோட்டா, திகர்தண்டா, ப்ளம்கேக்னு போட்டுக்கணும்...

தோ பாரு எனக்கு எடை ஏறினாலும் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?

அபிராமி அபிராமி...

அதையும் எழுதிக்கணுமா?
ஹ்ம்ம்...ஹ்ம்ம்...

அது...காதல்...உணவுக்காதல்

உன் எடை என்னன்னு சொல்லாம அழுகை அழுகையா வருது
ஆனா நா அழுது நீ இன்னும் சாப்பிட்டு
எடை கூடிடுமோன்னு பயந்து
வர்ற அழுகை கூட நின்னுடுது

மனிதர் உணர்ந்து கொள்ள இது சாதாரண டயட் அல்ல...

பேலியோ டயட்... பேலியோ டயட்

#மீள்

கஷ்டப்பட்டு ஒரு வழியா தீர்மானம் எல்லாம் போட்டு உடல் எடையை குறைக்கலாம்-னு வருடத்தில் முதல் தேதியில நினைக்கிறப்பவே , ம்ஹும் என் பிறந்த நாள் வருது, வெளியில போய் குடும்பத்தோட சாப்பிடணும்-னு மகளின் அன்புத் தொல்லை, நான் விடுமுறை முடிந்து போகிறேன் அதனால் என்று மீண்டும் ஒரு முறை, திருமண நாள் என்று ...

சரி பிப்ரவரி-யில ஆரம்பிக்கலாம்-ன அதே பல்லவிய மகன் பாட,

ஓகே, மார்ச் மாசம் - ம்ம்ம்ம்...

அப்பாடா தமிழ் வருடப் பிறப்பு வந்தாச்சு , ஆரம்பிக்கலாம்-னா , இந்த கெட்-டுகெதர் அந்த கெட்-டுகெதர் ...

கோடை மாதங்கள் - சொல்லவே வேணாம், ஊர் சுத்த, உறவுக்காரர்கள் வர, போக --அதுவும் போச்சா?

அப்பாடா ஸ்கூல் திறந்தாச்சு இனி என் வழி தனி வழி-ன்னு ஆரம்பிச்சா விநாயகர் சதுர்த்தி , கொலு, சரஸ்வதி பூஜை , தீபாவளி ன்னு ஒண்ணு மாத்தி ஒண்ணு வருதா, ஒவ்வொரு பலகாரம், படையல் னு முடிய...

ம்ம், இப்ப ஆரம்பிக்கலாம்-னா thanksgiving celebrations , x -mas வருதா...
குளிரும் சேர்ந்துச்சா... அடுத்த புது வருஷமும் வந்துச்சா ...

வருஷம் பூரா குழந்தைங்க மிச்சம் வைக்கிறது, கொஞ்சூண்டு தானே இருக்கு, இதை எடுத்து வைக்கணுமா-ன்னு அதையும் மிச்சம் வைக்காம சாப்பிட்டு...

அதுக்குள்ள ரொம்ப நாளாச்சு ஊருக்குப் போகணும்-னு மாதிரி தோணுமா, அங்க போய் எந்த தெருவுல எந்த ஹோட்டல்-ல என்ன ஸ்பெஷல்-னு ஒன்னு விடாம சாப்பிட்டாச்சா, உறவுக்காரங்க பாசமா கூப்பிட்டு விருந்து வைக்க அதையும் தட்ட முடியாம, வரும் போது மறக்காம பெட்டிகள்ல அடிச்சு வச்சு எடுத்துட்டு வர்றதை நாய் மோப்பம் பிடிக்காம காப்பாத்திட்டு வந்து அதையும் ...

நடுநடுவுல மானே தேனே மாதிரி நண்பர்கள் 40வது , 50வது பிறந்த நாள், அவர்கள் வீட்டு விசேஷங்கள் அப்புறம் புதுமனைப் புகுவிழா, வளைகாப்பு, பூஜைகள், மாதம் ஒரு முறை ஒரு ரெஸ்டாரன்ட், ஒரு இனிப்பு, புது ரெசிபி-ன்னு போட்டுக்கணும் சரியா??

இப்படியாகத் தானே ஒவ்வொரு வருடமும் வந்து போக
ஏறிய எடையும் இறங்கிய பாடில்லை ...

ஒரே தீர்வு - வருஷம் வந்தா தீர்மானம் போட வேண்டியது. அதுலயே பாதி எடை கொறஞ்ச மாதிரி மனசு லேசாயிடும். கண்டிப்பா நடக்கும்-னு ஒரு சின்ன நம்பிக்கை வரும்.

ஆஃப்டர் ஆல் நம்பிக்கை தானே வாழ்க்கை, என்ன நான் சொல்றது ?

🙂😂🤣

 

கூடலழகர் பெருமாள் கோவில்

காற்றோட்டத்துடன் நீண்ட பிரகாரங்கள், அழகான மதுரவல்லித்தாயாரின் தரிசனம், நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் காட்சி தரும் பெருமாள், ஆண்டாள் சந்நிதி... சனிக்கிழமை என்றாலே கூட்டமிருக்கும் பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? 
சிறுவயதில் வாரம் தவறாமல் சனிக்கிழமை தோறும் சென்று வந்த கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்.

கோவிலின் முன்பு செருப்பு வைக்க கூட இடமில்லாமல் மக்கள் கூட்டம் ஒருபுறம் என்றால் தங்களுக்கும் உணவளிப்பார்கள் பகுத்துண்டு வாழும் பக்த கோடிகள் என்று மாடுகளும் வெளியில் காத்திருக்கும். மாடுகளுக்கு அருகிலேயே கீரைக்கட்டுக்களுடன் மாடுகளின் உரிமையாளரோ?

கோவில் வாசலில் துளசி மணம் கமகமக்கும் மாலைகள், தாமரைப்பூக்கள், மல்லி, பிச்சி்மலர்களுடன் பூக்காரம்மா. அவர் எதிரே திருவோட்டுடன் தானத்திற்கு காத்திருக்கும் வயிறு ஒட்டிய ஏழைகள் பிச்சையெடுத்துக் கொண்டு!

உள்ளே நுழைந்தவுடன் காக்கிச்சட்டை கடமைவீரர்கள்! அவர்களைத் தாண்டி இடப்புறத்தில் நுழைந்தால் மதுரவல்லி தாயார் சன்னதி. இந்நாளுக்கான சிறப்பு அலங்காரங்களுடன் அவள் அமர்ந்திருந்து அருளும் காட்சியை கண்கள் விரியு பார்த்துக் கொண்டே ரசிக்கலாம். பட்டுச்சேலையும் மங்கிய ஒளியில் மின்னும் மூக்குத்தி அலங்காரமும் மனதில் ஒட்டிக் கொள்ளும்.

அவளைச் சுற்றி வலம் வருகையில் சுவரில் தீட்டியிருக்கும் ஓவியங்கள் பாட்டி, அம்மா, பெரியம்மா சொன்ன கதைகளை நினைவுறுத்தும்.

ராமஜெயம் மாலைகளுடன் வெண்ணெய் அலங்காரத்தில் குட்டி அனுமர்.

தாயாரிடம் விடைபெற்று வெளியில் வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. அதையொட்டிய கல்யாண மண்டபம். சிறு பூந்தோட்டம். தும்பிக்கையை ஆட்டியபடி அழகு குட்டி ஆண்டாள் யானை. தற்போது இல்லை என்று நினைக்கிறேன். இனி யானைகளை வதைக்கவும் வேண்டாம்.

வேகமாக மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே கடந்து செல்பவர்கள், பாசுரங்களைப் பாடிச் செல்லும் பக்தர்கள், கோபுரத்தைப் பார்த்து "நாராயணா, நாராயணா" என கைகூப்பி வணங்குபவர்கள், ஓடிச்செல்லும் குழந்தைகள், வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள், சுடும் வெயிலில் ஓட்டமெடுப்பவர்கள் ...என பிரகாரச்சுற்று களையாக இருக்கும்.

கோவில் நடுவே பெருமாள் சன்னதி. தேவியர்களுடன் கன்னங்கரிய பெருமாள்! காண கண்கோடி வேண்டும். அவர் பாதத்தில் ஆரம்பித்து மந்திரங்களுடன் தீபாராதனை... துளசி தீர்த்தம், பச்சைக்கற்பூர மணம்... மனம் அமைதியாகும் அந்தக்கணம்...மெய்சிலிர்க்கும் அனுபவம்.

கருடர், அனுமரை வணங்கி அமைதியாக அமர்ந்திருக்கும் ஆண்டாள் தரிசனம் முடித்து நவக்கிரகங்களையும் வேண்டிய பிறகு ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமர்ந்தால் கண்ணெதிரே அப்பம், முறுக்கு, லட்டு, பொங்கல் பிரசாதங்கள்!

மனமும், வயிறும் குளிர பெருமாள் தரிசனம் இனியதொரு சுகானுபாவம்.

சந்தடி மிக்க நெரிசலிருந்து மனதிற்கு அமைதியைத் தரும் கோவில்கள் தான் மதுரையின் அழகே! அதிகாலை மார்கழி மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி என பெருமாளுக்கு உகந்த மாதம்.

கணவரின் தாத்தா மற்றும் பங்காளிகள் (ஓபுளா) குடும்பத்தினர் நன்கொடையால் இக்கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது என்ற தகவலும் இக்கோவிலில் உள்ளது.



குளிர்பனிக்காலை
வீதிநிறைய கோலம்
வர்ணஜாலத்தின் நடுநடுவே
பூசணிப்பூக்கள்
ஈரம்சொட்டிய கூந்தலோடு
சன்னலோர வேடிக்கை
காற்றில்கரைந்தொலிக்கும்
கோஷ்டிகானம்
ஆண்டாளாயிருப்பதும்
அற்புதம்தான்
மார்கழி போற்றுதும்
மார்கழி போற்றுதும்

ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏



கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை
PC: Vishvesh Obla




ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...