'Still Alice' என்ற ஹாலிவுட் திரைப்படம் மறதி நோயால் பாதிக்கப்பட்டவருடைய வாழ்க்கையை அழகாகச் சித்தரித்திருக்கும். அதில் நடுத்தர வயது கதாநாயகி. ' ஸ்மைல் ப்ளீஸ்' படத்தில் மிகச் சிறிய வயதில் கூட இந்நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் அவரைச் சுற்றியுள்ள குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, நோயை எதிர்கொள்ள கதாநாயகி தடுமாறுவதையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஆழமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் 'அல்சைமர்ஸ்' என்று அங்கொன்று இங்கொன்றுமாக பரவலாக கேட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்நோயைப்பற்றி மக்கள் அறிந்து கொள்வதும் அவசியம். அதனால் இந்தப்படம் கவனம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.
மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நண்பர்கள் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். 'Still Alice' படத்தைப் பார்த்தவுடன் எனக்கு அப்படியொரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று உண்மையிலேயே பயந்து போனேன். முன்னெச்சரிக்கையாக குழந்தைகளிடம் கூட பேசினேன். இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் குழப்பங்கள், ஏமாற்றங்கள், தனிமை, விரக்தியை பொறுமையாக கையாளும் மனப்பக்குவம் அவரைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு அவசியம். அழகான காட்சியுடன் படத்தை நிறைவு செய்ததற்கே விருது கொடுக்கலாம்😊
பொறுமை இருப்பவர்களும் வசதியுடையவர்களும் கிடைத்தால் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எஞ்சிய வாழ்க்கையை ஓரளவு நிம்மதியாக கழிப்பார்கள். மற்றவர்களின் நிலைமை பாவம் தான்😔 இவர்களைக் கையாளுவது அத்தனை எளிதல்லவென பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் மட்டுமே நன்கு அறிவர். நண்பர் ஒருவரின் தந்தை காணாமல் போய் அவரைக் கண்டுபிடிப்பதற்குள் குடும்பமே பதறிப்போனது. எதிரே நிற்கும் குடும்ப உறுப்பினர் யார் என்றே தெரியாமல் வேற்று மனிதருடன் பேசுவது போல் பேசும் அன்பானவர்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது😢
தமிழில் ஏன் இத்தகைய படங்கள் வருவதில்லை என்று யோசித்தால் புரியும். சாதியை ஒழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டே கொம்பு சீவும் 'சாதீய' படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை மாறாத வரை நாம் மலையாளம், மராத்தி, இந்திப் படங்களைப் பார்ப்போம்.
2020ல் மராத்தியில் சிறந்த கதாநாயகிக்கான விருதை இப்படத்தில் நடித்த 'முக்தா பார்வே' பெற்றிருக்கிறார்👏
