Friday, March 4, 2022

Cycle

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கொரியன் தொடர்கள், திரைப்படங்கள் என்று சென்று கொண்டிருந்ததில் அவ்வப்போது மராத்தி படங்களையும்   ஒரு மாறுதலுக்குப் பார்ப்பதுண்டு. அந்த வரிசையில்  'சைக்கிள்' திரைப்படத்தைக் காண நேர்ந்தது. 

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நகரத்தில் உழல்பவர்களை விட வெள்ளந்தியானவர்கள். அவர்களிடம் இருக்கும் சக நட்பு, பரிவு, பாசம் எல்லாம் நகரத்தில் எதிர்பார்க்கவும் முடியாது. படத்தின் இயக்குனர் அப்படியான கால கட்டத்தில் இருப்பது போல் இந்தக்  கதை நடப்பதாக துவக்கத்திலேயே சொல்லி விடுகிறார். 

ஜாதகம் பார்க்கும் எளிமையான  ஜோதிடர் குடும்பம். அக்கம் பக்கத்து ஊர் மக்கள் வந்து அவரிடம் பணிவுடன் ஜாதகப்பலன்களை கேட்டுச் செல்ல வருகிறார்கள். சுட்டிப் பெண் குழந்தை. ஜோதிடரின் சைக்கிளுக்கென்று ஒரு கதை இருக்கிறது. அவர் அதைப் பொத்திப்  பொத்தி பாதுகாத்து ஓட்டி வருவார். திடீரென காணாமல் போகும் அந்த சைக்கிளால் ஜோதிடர்,  திருடர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அனாவசிய மிகை உணர்வுகள் இன்றி வெள்ளந்தி மனிதர்களின் பார்வையில் சுவையாக திரைப்படமாக்கியிருக்கிறார்கள். 

பச்சைப்பசேலென கிராமத்துச் சூழல். சூரியோதயம், அஸ்தமன அழகிய கடற்கரை என கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி அமைப்புகள் மனதைக் கவருகிறது. மராத்தி மொழி வார்த்தைகள் பலவும்  என் தாய்மொழியில் பேசுகிறோம்  என தெரிந்தது. மாலை, இரவு நேரங்களில் கதாகலாட்சேபம், புராண நாடகங்கள் என்று தெருக்களில் குடும்பங்களுடன் கண்டு களித்திருந்த காலமும் உண்டு என்பதை தொலைக்காட்சி, வீடியோ கேம்களில் தொலைந்திருக்கும் இந்த தலைமுறையினருக்குப் புரியுமா?

பொருட்களின் மேல் பற்று வைக்காதே என்று படத்தின் துவக்கத்தில் ஒருவருக்கு அறிவுரை சொல்வார் ஜோதிடர். அந்த மனிதரின் ஜாதகம் படு மோசமாக இருக்கும். தன்னால் முடிந்த உதவியைச் செய்து நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கேட்டு மகிழ்வுடன் செல்வார் அந்த மனிதரும். தன் மிதிவண்டி தொலைந்தவுடன் தான் அவருக்கு அதன் மேல் இருந்த பற்று புரியும். இப்படி அவர் அடுத்தவருக்குச் சொன்னதைப் புரிந்து கொள்ளும் பல காட்சி அமைப்புகள். 

திருடர்களுக்கோ அந்த மிதிவண்டியின் வாயிலாக ஒரு  மனிதரை எப்படியெல்லாம் மக்கள் கொண்டாடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட நல்ல மனிதரிடம் திருடி விட்டோமே என்று மனம் வருந்தி திருந்துவதாக சிறு சிறு காட்சிகளின் மூலம் அவர்கள் உணரும் வண்ணம் அமைத்திருந்தது சிறப்பு.

வெற்றுக் கூச்சல் வசனங்கள், ரௌடிகளைக் கொண்டாடும் கதைகள், அரைகுறை நிர்வாண ஆபாச நடனங்கள், சாதி சமூகப் படங்கள் போர்வையில் மிகை நடிப்பும் முட்டாள்தனமான செண்டிமெண்ட் படங்களுக்கு இடையில் இதமான படம் இது. 

 நெட்ஃப்ளிக்ஸ்ல் கண்டு மகிழுங்கள்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...