Tuesday, March 8, 2022

சர்வதேச மகளிர் தினம் - 2022


பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடும் விதமாக "சர்வதேச மகளிர் தினம்" ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும்கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது.

1900 களின் முற்பகுதியில் தொழில்மயமான நாடுகளில் பெண்கள் உரிமைகள் இயக்கத்தில் இருந்து இந்த நாள் பிறந்தது. அமெரிக்காவின் சோஷியலிஸ்ட் கட்சி 1909 ஆம் ஆண்டு தேசிய மகளிர் தினத்தை முதன்முதலில் அறிவித்தது. 1910 ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடினர். 'சர்வதேச மகளிர் தினம்' என்ற யோசனை முன்மொழியப்பட்டு முதல் முறையாக மார்ச் 19, 1911 அன்று பல ஐரோப்பிய நாடுகளில் அனுசரிக்கப்பட்டது. பெண்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் பாலின பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டங்களில் அடங்கும். 1914 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்திற்கான நிலையான தேதியாக இருந்து வருகிறது.

சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட பல்வேறு வழிகள் உள்ளன. அனைத்து வகையான அரசு, அரசு சாரா மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் திருவிழாக்கள், கலைக் கண்காட்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் உட்பட அனைத்து விதமான டிஜிட்டல் மற்றும் நேரில் சமூகக் கூட்டங்களில் பங்கேற்பதைக் கடைப்பிடிப்பதும் இதில் அடங்கும்.

ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளைக் கொண்டு இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. பணியிடத்திலும், பள்ளியிலும், வீட்டிலும் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான நிகழ்வுகளை வெளிக்கொணரும் விதமாக இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "#BreakTheBias".

பன்முகத்தன்மை கொண்ட பாலின சமத்துவமான உலகில் மட்டுமே பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை உடைத்தெறிய முடியும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அனைவரும் முன் வர வேண்டும். முக்கியமாக ஆண்கள். பெண்கள் பல தடைகளைத் தாண்டி கல்வி, அறிவியல், அரசியல், தொழிற்துறை என்றுஅனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். ஆனாலும் பாலின பாகுபாடுகள் முற்றிலும் களையப்படவில்லை. அதனைத் தகர்க்கும் பொருட்டே இந்த வருடத்திற்கான கருப்பொருள் "#BreakTheBias".

தேசிய விடுதலைக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் போராடிய திருமதி சரோஜினி நாயுடுவின் நினைவாக இந்தியாவில்  பிப்ரவரி 13 அன்று "தேசிய மகளிர் தினமாக" கொண்டாடப்பட்டு வருகிறது.

நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். அதுவரை தொடரட்டும் நமது போராட்டம்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! "

பாரதியார் கண்ட கனவினை நனவாற்றும் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.




2 comments:

  1. இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
    பயனுள்ள பதிவு.

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...