செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பிக்க, குளிருடன் கொலு ஊர்வலம், சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பெருமாளுக்கான புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜைகள், ஹாலோவீன் டே இனிப்பு தினம் தித்திக்கும் தீபாவளியில் முத்தாய்ப்பாக முடிய, நிமிர்ந்து பார்ப்பதற்குள் பனியும் வாசற்கதவைத் தட்ட, கூடவே புன்சிரிப்பு முகங்களுடன் வளைய வரும் மக்கள் காத்திருப்பது நவம்பர் மாதத்திற்குத்தான்! பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அதிகமான விடுமுறை நாட்கள் கிடைப்பதால் ஆவலுடன் அவர்களும் காத்திருக்கும் மாதமிது!
யாத்ரீகர்களாக அமெரிக்காவிற்கு குடிபுகுந்த வெளிநாட்டவர்கள் ஆதிமக்களின் நிலத்தை கையகப்படுத்தி அங்கு விளைந்தவைகளை இம்மண்ணின் மைந்தர்களுக்கே படையலிட்டு நன்றி சொன்ன நாள் என்று பள்ளிப்பாடங்களில் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியும் வரலாறும் மிக கொடியது. பல லட்சம் பூர்வீக மக்களைக் கொன்று குவித்து அவர்களின் கலாச்சாரத்தை சிதைத்து கொடுஞ்செயல் புரிந்தவர்கள், கொண்டாட்டத்தை மட்டும் கைவிடாமல் நண்பர்கள், உறவுகளுடன் குதூகலித்து உணவு பல உண்டு மகிழும் இனிய நாளாக இன்று 'தேங்க்ஸ்கிவிங் டே'யை கொண்டாடி மகிழுகிறார்கள்.
இந்த நாளில் பலரும் அவரவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிமையாக பொழுதைக் கழிக்கிறார்கள். வான்கோழி இறைச்சி பிரதான உணவாக படைக்கப்பட்டு சோளம், பூசணிக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்குகளில் செய்த இனிப்பு, கார வகைகள், விதவிதமான ரொட்டிகள், க்ரான்பெர்ரி சாஸ், கேக் மற்றும் மதுபான வகைகள் என்று பேக்கரி, பலசரக்கு, மதுக்கடைகளுக்கும் வருமானத்தைத் தேடித்தரும் திருநாளாக உருமாறியிருக்கிறது! வருடத்திற்கு ஒருமுறை உறவுகளைச் சந்தித்து அளவளாவி மகிழும் நாளுக்காக பலரும் கார், பேருந்து, விமானப் பயணம் மேற்கொள்வதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதும் விமான நிலையங்கள் மக்கள் வெள்ளத்தால் அலைமோதுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து மழையாக, பனிப்பொழிவாக, கடும்குளிராக இயற்கையும் பரபரப்பாக்க மேலும் சுவாரசியமாகும் இந்நாள்!
புதன்கிழமை வரை பரபரப்பாக இருக்கும் சாலைகள் வியாழக்கிழமை மாலைக்குள் அடங்கி விடும். நண்பர்கள், உறவுகள் வீடு நோக்கிச் செல்லும் வண்டிகள் மட்டுமே சாலையில். சிரிப்பும் கும்மாளமுமாய் அனைத்து வீடுகளும் ஒளிவெள்ளத்தில் திளைத்துக் கிடக்கும் . கிறிஸ்துமஸ் மரங்கள் முன்னறையை அலங்கரிக்க , சாண்டா என்ன பரிசுகளுடன் வருவாரோ? கனவுகளுடன் குழந்தைகள் உற்சாகமாக வளைய வரும் அழகிய நாட்கள் இனி ஆரம்பமாகும்.
இந்த நாளைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையன்று ஆன்லைன் மற்றும் கடைகளில் நடக்கும் வர்த்தகம் பல நிறுவனங்களுக்கும் ஒரு வருடத்திய வருவாயை ஈட்டித் தரவல்லது. அதிவிலை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பலவும் குறைந்த விலையில் கிடைப்பதால் வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்க மக்களும் காத்திருக்கும் நாள். Veterans Dayல் ஆரம்பித்து Thanksgiving Day வரும் முன்னரே தள்ளுபடி விற்பனைகள் சூடு பிடிக்க, நன்றி நவிலும் நாளில் மாலை முதல் சில நாட்களுக்குத் தொடரும் அதிரடி விலைகுறைப்பிற்காக தள்ளு முள்ளு செய்து நினைத்த பொருட்களை வாங்கிய வெற்றிக்களிப்பில் சனி, ஞாயிறு கழிய, சைபர் மண்டே டீலுக்காக காத்திருந்து ஆன்லைனில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம். இந்த மாதமும் கிறிஸ்துமஸை ஒட்டி அடுத்த மாதமும் நடைபெறும் வர்த்தகத்தைப் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறது வணிக உலகம். மக்களை வாங்க வைக்க எல்லா தகிடுதத்தங்களும் செய்கிறார்கள். மக்கள் செலவு செய்து கொண்டே இருந்தால் தான் இவர்களால் வாழ முடியும். விட்டில் பூச்சியாய் மக்களும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்! உலகத்தையே இப்படித்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது வியாபார உலகம்.
இந்த மெகா தள்ளுபடி நாட்களுக்காக பல வெப்சைட்களை அலசி ஆராய்ந்து என்று எந்த கடையில் எந்த நேரத்தில் விற்பனையென நேரம் பார்த்து நண்பர்களுடனும் தம்பதி சமேதரராகவும் தனியாகவும் கிளம்பிவிடுவார்கள் பலர். அத்தியாவசியப் பொருட்களை காத்திருந்து குறைந்த விலையில் வாங்குவது சமயோசிதம். சிலர் பொருட்களை வாங்கி அதிக விலைக்கு ஈபேயில் விற்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட அதே பொருட்களை வாங்கி, இங்கி, பிங்கி, பாங்கி போட்டு ஒன்றை வைத்துக் கொண்டு மற்றவற்றை திருப்பிக் கொடுப்பதும் தான் கொடுமை. இச்செயல் வாங்க வந்த மற்றவர்களுக்கு கிடைக்காமல் போகச் செய்து விடும் என்ற பொது அறிவை சுயநலமிக்கவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு தான். பலரும் வாங்கிய பொருட்களைத் திரும்பி கடைகளுக்கு எடுத்துச் சென்று "ரிட்டர்ன்" செய்யும் கொடுமையும் நடக்கும். ஆன்லைன் வர்த்தகம் வந்த பிறகு கடைகளுக்குச் செல்லும் கூட்டம் குறைந்து விட்டது.போக்குவரத்து நெருக்கடியும் கூட!
இனி கிறிஸ்துமஸ் தள்ளுபடிக்கு காத்திருப்பார்கள். அடுத்த மாதத்திலிருந்து வீடு தேடி வரும் பொருட்களுக்கு ஷிப்பிங் மற்றும் பேக்கிங் இலவசம் என்பதால் இன்னும் ஜமாவாய் வியாபாரம் நடக்கும். சாண்டாவின் வருகையில் வியாபார உலகம் புத்துணர்ச்சி பெரும் மாதமல்லவோ?
பல இடங்களில் வசதியற்ற குழந்தைகளுக்காக இலவச கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்க பெரிய பெரிய அட்டைப்பெட்டிகளை வைத்திருப்பார்கள். பலரும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கும் பரிசுப் பொருட்களுடன் அபாக்கிய குழந்தைகளுக்கும் வாங்கி மகிழ்கிறார்கள்.
நானும் வாங்கி வைத்திருக்கிறேன். அப்ப நீங்க?
"Giving is sometimes as simple as saying thank you to someone. Let's all give a little more."
வரலாற்றை மறக்காமல் இன்றைய நாளில் வாழ்வின் வரங்களை நினைவுகூர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி நன்றி நவிழ்ந்து இனிதே கொண்டாடி மகிழ்வோம்!
No comments:
Post a Comment