Sunday, July 7, 2013

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல?

திருப்பி திருப்பி இந்த விஷயம் என் மனதை அரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கெல்லாம் என்று தான் விடிவு? என்ன தான் தீர்வு? விஷயம் என்னவென்றால், படித்த/வேலைக்குப் போகிற பெண்களுக்குத் தான் அதிகமான பிரச்னைகள். அதுவும் தாலி கட்டிய கணவன் என்ற கயவனால். சமயங்களில் அந்த கயவனை பெற்றெடுத்த தாய் என்ற பிசாசினாலும், பிற குடும்ப நபர்களாலும் கூட!

கேள்விப்பட்ட வரையில், படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்கள் குடும்பத்தில் கணவனால் பிரச்சினைகள் தலை தூக்கும் பொழுது தன் குழந்தைகளுக்காகவும், தன் பெற்றோர்களுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும், பிரச்சினைகளை பெரிதாக்க கூடாது என்ற நோக்கத்தில் என்றாவது ஒருநாள் இந்த கயவனும் மாறிவிடுவான் என்று நினைப்பில் தான் படும் கஷ்டங்களை வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளே புதைத்து தன்னையும் வதைத்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள். இப்படி தான் எது செய்தாலும் பொறுத்துப் போகிறாள் என்றவுடன் கயமைப் பேய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. அவர்களுடைய கொடுமையும் தொடர ஆரம்பிக்கிறது.

சில குள்ளநரிகள், குழந்தைகள் எதிரில் மட்டம் தட்டி பேசுவதும், அவர்களை கொண்டு மரியாதை இல்லாமல் நடத்துவதும் என்று ஆரம்பித்து உடலளவில், மனதளவில் பெண்களை வதைக்க ஆரம்பிப்பதுமாய் தொடருகிறது.

சில மனம் பிறழ்ந்த குள்ளநரிகளோ பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்று பெற்றெடுத்த பிசாசுகளால் வளர்க்கப்பட்டு, அன்புக்காக ஏங்கும் மனங்களை சித்திரவதை செய்வதில் ஆரம்பிப்பதுமாய் தொடருகிறது.

பொதுவாக இந்தியர்கள் படித்த பண்பானவர்களாக இருப்பார்கள், மிகவும் கண்ணியமானவர்கள் என்ற நம்பிக்கையை வெற்றிகரமாக பொய்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நபர்கள். இந்த மாதிரி விகார மனம் படைத்த போலிஆசாமிகளை கண்டு போலீசும், வழக்கறிஞர்களும், நீதித்துறையும் விக்கித்துத் தான் போயிருக்கிறது. இப்படிக் கூடவா நடக்கும் உங்கள் குடும்பங்களில். இந்த மாதிரி கீழ்த்தரமான செயல்களை இங்குள்ளவர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவில் அவர்களையே வியப்படைய செய்கிறார்கள் இந்த மிருகங்கள்.

ஒருவன் கல்லூரியில் பேராசிரியர். வீட்டிலோ மனைவிக்கு சொல்ல முடியாத அளவிற்கு கொடுமைகள். வேலைக்குச் செல்லாத பெண். பார்த்தால் அவ்வளவு அமைதி அவர் முகத்தில்! இவருக்கா இந்த கஷ்டம் என்று மனம் வருந்தும். இந்தியாவில் இருக்கும் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் தப்பித் தவறி வந்து விடாதே, இங்கிருக்கும் பிரச்சினையே பெரிதாக இருக்கிறது. உன்னை நீயே எப்படியாவது காத்துக் கொள் என்று கையை நனைத்து விட, அந்த பேதலித்த பேதை நண்பர்களின் துணையை நாட, அப்பாடா, அவர் செய்த பிரார்த்தனைகள் வீண் போகவில்லை. நல்ல நண்பர்கள் அனைவரும் அவரவர் முடிந்த வரையில் பணத்தை போட்டு, அவரை வீட்டிலிருந்து வெளியில் குடி வைத்து, அவருக்கென்று ஒரு வேலைக்குச் சென்று சொந்த காலில் நிற்கும் வரை உதவி இருக்கிறார்கள் அந்த மாமனிதர்கள். ஆம், அனைவரும் கெட்டவர்கள் இல்லையே. இந்த ஆறுதல் தான் மனித இனத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது முறையாக விவாகரத்து பெற்று அவருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மனம் பாதிக்கப்பட்ட முதாலவது மகன் கல்லூரிப் படிப்பை தொடராமல் அம்மாவின் நிம்மதியை தொலைத்துக் கொண்டிருக்கிறான். பூதம் இரண்டாம் பாகமோ என்று அம்மாவிற்கு ஒரே கவலை. நண்பர்களின் உதவி இல்லையென்றால் இந்த பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்?

இதற்கு யார் பொறுப்பு?

இப்படித்தான் பல பெண்களின் நிலைமையும். படித்த நல்ல வசதியுள்ள ஒருவனுக்கு நன்கு படித்த நல்ல வசதியுள்ள பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவள் வேலைக்குச் செல்வதை விரும்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறான். அவளும் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களுடைய நலன் ஒன்றே கருதி காலத்தைஒட்டி இருக்கிறாள். அவனுடைய கொடுமையைத் தாளாமல் ஒருநாள் அவளே போலீசுக்குத் தகவல் சொல்ல, அவளையும் குழந்தையும் வேறு வீட்டிற்கு குடி அமர்த்தி செலவுக்கும் அவனை பணம் கொடுக்க வைத்திருக்கிறார்கள். சில நாட்களில் அவன் விவாகரத்திற்கு மனு போட, இன்று அவள் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறது.

இதற்கு யார் பொறுப்பு?

இன்னும் ஒரு படி மேலே போய், சில வக்கிர மனம் படைத்தவர்கள் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு, மனைவிக்கு மனநிலை சரியில்லை என்று இல்லாத ஒன்றை சொல்லி விவாகாரத்து செய்து விட்டு , இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்தி, குழந்தைகளுடன் அவள்படும் பாட்டை பார்த்து கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. அந்த அபலைப் பெண்ணோ, ஊருக்குப் போய் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று தன் விதியை நினைத்து புலம்பியபடி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கப்படும் துன்பங்கள் இருக்கே!

இதற்கும் யார் பொறுப்பு?

அந்த 47 நாட்கள் என்ற படத்தில் வருவது போல், தன்னை பெற்றவர்களிடம் நல்லவர்கள் போல் நடித்து அவர்களுக்காக ஒரு பேசா மடந்தையை திருமணம் செய்து, இங்கு கூட்டிக் கொண்டு வந்து, உன்னோடு வாழப் பிடிக்கவில்லை. திருமணம் செய்யவில்லையென்றால் பிரச்னை ஆகி விடும், அதான் பேருக்குத் திருமணம் என்று சொல்லி ஒரு பெண்ணின் மனதை வதைக்கும் கொடுமையும், விரைவில் அவளுடன் வாழ முடியாது என்று விவாகாரத்து செய்யும் கொடுமைக்கும் யார் பொறுப்பு?

பெண் படித்தாலும் பிரச்னை, படிக்காவிட்டாலும் பிரச்னை. படித்து நல்ல வேளையில் இருக்கும் பெண்ணின் சம்பளப்பணம் அவளுக்கு சொந்தமில்லை. அவளை அந்த நிலைக்கு கொண்டு வந்த அவள் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் சொந்தமில்லை. அதனால் பல குடும்பங்களிலும் இன்றளவில் பிரச்னைகள்.

இன்று கீழ், மேல், நடுத்தர வர்க்கம் என்று எல்லா நிலைகளிலும் தொடரும் இந்த சமூக அவலங்களுக்கு என்ன தான் தீர்வு?

நான் பார்த்தவரையில் வெகு சில பிரச்னைகளே பெண்களால் வந்திருக்கிறது. பலவும், மனிதர்கள் போர்வையில் நடமாடும் கொடிய மிருகங்களினால் தான். உடலளவில் சித்திரைவதை அனுபவிப்பவர்கள், மனதளவில் தினம் தினம் கொடுமைகளை அனுபவிப்பவர்கள் என்று இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

நல்ல மனிதர்களும் இருக்கும் இந்த கால கட்டத்தில், இப்படி அவதியுறும் பெண்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் என்ன தான் தீர்வு?

பெண்ணிற்கு திருமணம் ஒன்று தான் அவள் வாழ்க்கையின் எல்லை என்று நிர்மாணித்திருக்கும் சமூகமா, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சொல்லி சொல்லியே, கணவனால் கைவிடப்பட்டால் தன்னை சமூகம் என்ன சொல்லி விடுமோ என்று பயந்து பயந்து துணிவுடன் வாழ முடியாத நிர்பந்தத்திற்கு அவளை தள்ளியதற்கு யார் பொறுப்பு?

எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி பேராசிரியர் தன்னுடைய ஆராய்ச்சிக்காக குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி எழுதினார். அதற்காக அவர் சந்தித்த பெண்கள், அவர்களிடம் இருந்து அவர் தெரிந்து கொண்ட விஷயங்கள் பல நாட்கள் மனதை அலைக்கழித்து கொண்டிருந்தது. தன் சொந்த குடும்ப உறுப்பினர்களால், தாலி கட்டிய கணவனால், நண்பன் என்று தான் நம்பிய கயவனால் என்று பலவயதினரும் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டு மனது மற்றும் உடலளவில் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று தெரிந்த பொழுது பெண்ணாக பிறப்பதே கொடுமை என்ற எண்ணத்தை தான் ஏற்படுத்தியது.

சில பெண்கள் அனாவசியமாக பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டு ஆண்களை சித்திரவதை செய்வதும் நடக்கிறது. சில ஆண்களும் பொறுமையாக நடந்து அனுசரித்துப் போகிறார்கள். அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. பல நேரங்களிலும், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று உண்மையாகி விடுகிறது.

பெண்ணைப் பெற்றவர்கள் கண்டிப்பாக பெண்களுக்கு கல்வியும், அதனுடன் துணிவையும் கற்றுத் தர வேண்டும். கல்யாணம் செய்து கொண்ட பாவத்திற்காக 'பாவிகளை' பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று அவசியமில்லை. என்று மனைவியை ஒருவன் கை நீட்டி அடிக்க, வார்த்தைகளால் வதைக்க ஆரம்பிக்கிறானோ அன்றே அவன் செத்து விட்டான் என்று தலையில் தண்ணீர் தெளித்து விட்டு, அவள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ சுற்றமும், சொந்தங்களும் நம்பிக்கை அளிக்க வேண்டும்.

பல நிலைகளில் பெண்கள் உயர்ந்து விட்டாலும், காலம் மாறிப் போனாலும் இந்த துயரம் 'நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்' என்று பெண்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!


ஹ்ம்ம்...









4 comments:

  1. நல்ல அப்பாக்களை,நல்ல மகன்களை, நல்ல சகோதரர்களை உருவாக்கிடும் ஒரு சமூகத்தால் ஏன் நல்ல கணவன்மார்களை உருவாக்கிட முடியவில்லை என்பதை இரு தரப்பாருமே உணர்ந்து அதற்கான தீர்வுகளைப் பற்றி மனந் திறந்து பேசலாம், விவாதிக்கலாம்.

    மற்றபடி,ஒரு தரப்பு மற்றொரு தரப்பை குறை சொல்லிக் கொண்டேயிருப்பது பரஸ்பர அவநம்பிக்கையைத்தான் வளர்க்கும்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஆதங்கம் எல்லாம், பெற்றோர்களும், சமூகமும் இந்த மாதிரி நடக்கும் விஷயங்களை முறையாக கையாளவில்லை என்பது தான்.

      நல்ல மகனாக, நல்ல உடன்பிறப்பாக, நல்ல தந்தையாக இருப்பவர்கள் நல்ல கணவனாக இருக்கிறார்கள். இதில் ஏதோ ஒன்றில் சறுக்கும் போது தான் பிரச்னைகள் தலை தூக்குகிறது.

      Delete
  2. காலம் மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் நான் பார்ப்பது மனைவி கணவனைக் கொடுமைப்படுத்துவதே பெரும்பாலும் காண்கின்றேன். - ரிஷி

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் என்றாலும் சில ஆண்களுக்கும் இந்த கொடுமைகள் நடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

      Delete

அமரன்

'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பி...