Tuesday, September 8, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்


18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்பாடா! கோபுரங்களில் உடைந்திருந்த சிலைகளுக்கு விமோசனம் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.

"காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு" என்பதைப் போல ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த ஊர் பற்றின பெருமை இருக்கும். என்ன? மதுரை மக்களுக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கோவிலின் அருகாமையில் வளர்ந்து நினைத்த நேரத்தில் சென்று வந்த கோவில். மதுரை அழகியின் தரிசனத்திற்கு அத்தனை ஈர்ப்பு உண்டு. இன்று நினைத்தாலும் அப்பா, அம்மா, பாட்டி, பெரியம்மாவுடன் சென்று வந்த இனிமையான நாட்கள், கோவில் திருவிழாக்கள் என்று அனைத்தும் கண்முன்னே விரிகிறது. மனம் முழுவதும் மதுரையில் இருக்க, மீண்டும் ஒருமுறை 'மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் - வரலாறும் வழிபாடும்' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர் ப.சரவணன் எழுதியவற்றையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

நகரின் நடுவே அமைந்திருக்கும் 'திருவாலவாய் கோவில்' என்று புராணகாலத்தில் அழைக்கப்பட்ட கோவிலைச் சுற்றித் தான் நகரமே அமைந்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பே கட்டப்பட்ட இக்கோவில் இஸ்லாமிய கொடுங்கோலர்களின் படையெடுப்பின் போது பூட்டிவைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகளுக்கு மேல் பூஜைகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது வரலாறு. பின்பு மதுரையை ஆண்ட மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று நாம் காணும் கோவிலாக வானுயர ஓங்கி வளர்ந்து நிற்கிறது.

64 சிவதலங்களில் காசி, காளஹஸ்தி, சிதம்பரத்திற்கு அடுத்து நான்காவதாகச் சிறப்பு பெற்றிருக்கும் தலம். அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் 'ராஜமாதங்கி சியாமளா பீடம்' என்றழைக்கப்படும் இக்கோவிலை 'அங்கயற்கண்ணி தன்னொடு அமர்ந்த ஆலவாய்' என்று தேவார பதிகங்களில் திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அக்காலத்தில் சொக்கனும் சொக்கியும் ஒரே சந்நிதியில் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் தான் தனித்தனி சந்நிதிகள் கட்டப்பெற்றிருக்க வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோவிலின் தனிச்சிறப்பே பிரம்மாண்ட நான்கு கோபுரங்கள் தான். அதுவும் தெற்கு கோபுரம் காண்போரை வசீகரிக்கும் அளவில் சிற்பங்களைக் கொண்டது. இக்கோவிலில் சுதைச்சிற்பங்கள் நீங்கலாக 33,000 சிற்பங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் புத்தக ஆசிரியர்.

திசைக்கு ஒரு கோவில் இருக்கலாம். ஆனால் நான்கு திசைகளிலிருந்தும் ஒரு கோவிலுக்குச் சென்று வரமுடியும் என்றால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். இங்கு சித்திரையில் முடிசூட்டி ஆடி வரை அம்மனின் ஆட்சியும் ஆவணி முதல் எட்டு மாதங்களுக்கு சொக்கரின் ஆட்சியும் நடைபெறுகிறது என்பது ஐதீகம்.

ஒரு கோவில் மலை மீது கட்டப்பட்டிருந்தால் அதற்கு 'பெருங்கோவில்' என்று பெயர். உயரமான மேடையின் மீது கட்டப்பட்டால் அது 'மாடக்கோவில்'. தேர் வடிவில் கட்டப்பட்டால் அது 'கரக்கோவில்'. கொடிகள் சூழக் கட்டப்பட்டால் அதற்கு 'கொகுடிக்கோவில்' என்று பெயர். வெறும் மரத்தால் மட்டும் கட்டப்பட்ட கோவிலை 'ஞாழற்கோவில்' என்பர். ஆலமரத்தடியில் அமைக்கப்பட்ட கோவிலை 'ஆலக்கோவில்' என்பர். கோவிலைப் பழுதுபார்க்கும் போது அமைக்கப்படும் பாலாலயத்தை 'இளங்கோவில்' என்பர். கோவில் விமானம் மணிவடிவில் அமையப் பெற்றால் அது 'மணிக்கோவில்'.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் விமானம் 'மணி' போன்ற அமைப்பினைக் கொண்டதால் மணிக்கோவில் வகையைச் சார்ந்தது. அதனால்தான் திருஞானசம்பந்தர் 'கோபுரம் சூழ் மணிக்கோவில்' என்று குறிப்பிட்டுள்ளார்.

"வட இந்தியாவில் முகலாயர் காலத்து அரண்மனைகளும் கோட்டைகளுமே இந்தியாவின் சுற்றலாத் தலங்களாக உள்ளன. ஆனால் தென்னிந்தியாவில் அதற்கு இணையான பிரம்மாண்டமும் கண்டறியப்படாத வரலாறுகளும் உள்ளன. மிக அதிகமான கோவில்களும் கலாச்சார பெருமைகளும் தமிழகத்தில் நிறைந்துள்ளது. அதுவும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பரந்து விரிந்துள்ளது" என்று மதுரைக்கோவிலைப் பற்றி 2016ம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களில் ஒன்றாக மதுரையையும் இணைத்துள்ளது சிறப்பு. நம்முடைய கோவில்களைப் பற்றின சிறப்பை வெளிநாட்டுக்காரன் அங்கீகாரம் செய்ய வேண்டியிருப்பது எத்தனை கொடுமை?

"கோவில் நகரம்" என்ற பெருமைபெற்ற மதுரையை குப்பைகள் நரகமாக மாற்றிய மதுரை மக்களே! இனி குப்பைகளற்ற நகரமாக காக்க வேண்டிய பெரும் பொறுப்பு மக்களுக்கும் மாநகராட்சிக்கும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்காக உழைக்கும் மக்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

செப்டம்பர் 17,2026 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதுவரையில் இந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகளையும் என்னுடைய அனுபவத்துடன் எழுதுவதாக உத்தேசம். பாடல் பெற்ற தலம். 'ஆலவாய் பதிகம்' என்று திருஞானசம்பந்தர் இக்கோவிலின் அருமை, பெருமையைப் பற்றி விரிவாகப் பாடியுள்ளார். சொக்கனும், சொக்கியும் அரசாளும் மதுரையைப் பற்றி எழுதாமல் இருக்க முடியுமா?


No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...