Monday, September 7, 2026

லேபர் டே

செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அமெரிக்காவில் 'லேபர் டே' விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. நியூயார்க்கில் பள்ளி திறப்பதற்கு முன்பான விடுமுறை என்பதால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உற்சாகமான நாள். அதுவுமன்றி நீண்ட வார இறுதி என்பதால் குடும்பத்துடன் பார்பிக்யூ, நண்பர்களுடன் சந்திப்பு, சிறிய சுற்றுலா என்று கோடைகாலத்தின் கடைசி நாட்களை அனுபவிக்கும் மகிழ்ச்சியான நாட்கள். கடைகளில் அதிரடி தள்ளுபடிகள் இருப்பதால் கூட்டம் நிறைய மால்களும் கலகலக்கும். திங்கட்கிழமை விடுமுறை என்றால், சனி, ஞாயிறு ஆகியவற்றுடன் சேர்ந்து தொழிலாளர்களுக்கு மூன்று நாள் நீண்ட வார இறுதி கிடைக்கும். அதனால் குடும்பத்துடன் நேரம் செலவிடவும், ஓய்வெடுக்கவும், விழாக்களில் கலந்து கொள்ளவும் முடியும். இன்று மூன்று நாள் weekend என்பது மிகவும் சாதாரணமானதாகத் தோன்றலாம்.

ஆனால் அந்தக் காலத்தில் அது தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தின் அடையாளமாக இருந்தது. குறைந்த ஊதியம் பெற்று தினமும் பத்து, பன்னிரண்டு மணி நேரம் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அன்று வேலை செய்தனர். குழந்தைகள்கூட தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்பொழுது தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்தனர். அந்த நீண்ட போராட்டங்களின் நினைவாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்பிய உழைக்கும் மக்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் உருவானதுதான் Labor Day.

ஒரு நாட்டின் வரலாற்றைப் படிக்கும்போது, அதன் அதிபர்கள், அரசியல்வாதிகள், போர் வீரர்கள், தொழிலதிபர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரின் பெயர்களைத்தான் நாம் அதிகமாகக் கேட்கிறோம். ஆனால் ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியின் அடித்தளத்தில் இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் ரயில் பாதை அமைத்த தொழிலாளி, சுரங்கத்தில் இறங்கிய மனிதர், தொழிற்சாலையில் இயந்திரம் இயக்கியவர், நிலத்தில் உழைத்த விவசாயி, சாலைகளையும் பாலங்களையும் கட்டிய கட்டுமானத் தொழிலாளி, பள்ளியில் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர், மருத்துவமனையில் இரவு பகலாக பணியாற்றிய செவிலியர், பொருட்களை நாட்டின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குக் கொண்டு சென்ற கனரக வாகன ஓட்டுநர், உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும் ஊழியர், இன்று கணினி முன் அமர்ந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் software engineer என்று பலரும் இலைமறைகாயாக இருப்பதைக் கவனிக்கத் தவறுகிறோம்.

அவர்களுடைய உழைப்பை நினைவுகூர்வதற்காகவே ஒரு நாள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் Labor Day-ன் அடிப்படை.

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா வேகமாக மாறிக்கொண்டிருந்தது. தொழிற்சாலைகள் பெருகின. ரயில்வே நாடு முழுவதும் விரிந்தது. சுரங்கங்கள் செயல்பட்டன. உற்பத்தித் தொழில்கள் வேகமாக வளர்ந்தன. அமெரிக்கா ஒரு பெரிய தொழில்துறை சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஆறு நாட்கள் வேலையும் நீண்ட வேலை நேரமும் சாதாரணமாக இருந்தது. ஊதியமும் பணியிடப் பாதுகாப்பும் குறைவு. அப்போது "வேலைக்கும் வாழ்க்கைக்கும் சமநிலை" என்ற கருத்து பெரும்பாலும் கனவாகவே இருந்தது. இதனால் தொழிலாளர்கள் ஒன்றிணையத் தொடங்கி தொழிற்சங்கங்கள் உருவாகின.

அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று, 8 மணி நேர வேலை. எட்டு மணி நேரம் ஓய்வு. மீதமுள்ள எட்டு மணி நேரம் தனிப்பட்ட வாழ்க்கைக்கு. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையும் வேலைக்காக மட்டுமே இருக்கக் கூடாது என்ற இந்த எண்ணம் தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக மாறியது.

செப்டம்பர் 5, 1882 அன்று Central Labor Union ஏற்பாடு செய்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்று திரண்டு அணிவகுத்துச் சென்றனர். கொடிகள், பதாகைகள், இசைக்குழுக்கள், தொழிற்சங்க அடையாளங்கள், உரைகள் என்று நியூயார்க் நகரின் தெருக்கள், "உழைக்கும் மனிதர்களுக்கும் இந்த நாட்டில் ஒரு குரல் இருக்கிறது" என்று தொழிலாளர்கள் தங்களுடைய சமூக வலிமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்திய நாள். அதுவே அமெரிக்காவின் முதல் 'தொழிலாளர் தின'மாக கருதப்படுகிறது.

1882ல் நியூயார்க் நகரில் தொடங்கிய இந்த இயக்கம் மெதுவாக மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. 1887-ல் ஆரிகன், லேபர் டே-ஐ அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் மாநிலமாகியது. பின்னர் பல மாநிலங்கள் இதைப் பின்பற்றின. இறுதியில் 1894-ல் அமெரிக்க காங்கிரஸ் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையைத் தேசிய விடுமுறையாக அங்கீகரித்தது. அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட் அதற்கான சட்டத்தில் கையெழுத்திட்டார்.

இவ்வாறு ஒரு நகரத்தின் தொழிலாளர் பேரணியாக தொழிலாளர்கள் தொடங்கிய ஒரு நாள் அமெரிக்காவின் தேசிய விடுமுறையாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாளாகியது. ஒரு காலத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக நடைபெற்ற பேரணி, இன்று பல குடும்பங்களுக்கு ஓய்வு மற்றும் மகிழ்ச்சியின் நாளாக மாறிவிட்டது. அதனால் இன்றைய Labor Dayல் வரலாறும், ஓய்வும், குடும்பமும், வணிகமும், பொழுதுபோக்கும் ஒன்றாகக் கலந்துவிட்டன.

'Labor Day'க்குப் பிறகு வெள்ளை நிற ஆடை அணியக்கூடாது! இப்படி ஒரு வழக்கம் இருப்பதைத் தெரிந்து கொண்ட பொழுது ஆச்சரியமாக இருந்தது! கோடைகாலத்துடன் தொடர்புடைய வெள்ளை நிற ஆடைகளை Labor Dayக்குப் பிறகு அணிவது நாகரிகமல்ல என்று கருதப்பட்டது. இன்றைய தலைமுறை இதைக் கட்டாய விதியாகக் கருதுவதில்லை. ஆனால் அந்தப் பழைய வழக்கம் இன்னும் அமெரிக்கக் கலாச்சாரத்தில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பாகத் தொடர்கிறது.

ஆக, தொழிலாளர் தினம் என்பது "வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை" என்ற நாளாக மட்டும் உருவாக்கப்படவில்லை. அதன் அடிப்படை நோக்கம், உழைக்கும் மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது. ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது பெரிய நிறுவனங்களாலும் பங்குச் சந்தையாலும் மட்டும் உருவாகவில்லை. அதன் பின்னால் கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பு இருக்கிறது என்பதை நினைவூட்டும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு Labor Day-க்கு ஒரு கூடுதல் வரலாற்றுச் சிறப்பு இருக்கிறது. 2026ல் அமெரிக்கா தனது 250-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் தனது 250 ஆண்டுக்கால பயணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் எண்ணற்ற சாதாரண மனிதர்களின் வியர்வையும் உழைப்பும் கலந்திருப்பதை நினைவுபடுத்தும் விதமாக அமெரிக்க Department of Labor, "Freedom250: Celebrating the American Worker" என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஆக, Labor Day என்பது வெறும் மூன்று நாள் விடுமுறை அல்ல. உழைப்பின் மதிப்பு, உழைப்பவரின் கண்ணியம், இவை எந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளங்கள். உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் நன்றியும் மரியாதையும்!

Happy Labor Day!



No comments:

Post a Comment

லேபர் டே

செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அமெரிக்காவில் 'லேபர் டே' விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. நியூயார்க்கில் பள்ளி திறப்பதற்க...