Thursday, May 16, 2019

திரும்பிப்பார்க்கிறேன் - போராட்ட வாழ்க்கை

மகளின் கல்லூரி இறுதியாண்டில் வகுப்புகள், தேர்வுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் என்று நேரமில்லாமல் அவள் ஓடிக்கொண்டிருந்த காலமது! மேற்படிப்பா அல்லது வேலைவாய்ப்பா என்று முடிவு செய்து வார இறுதிகளில் பாஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் என்று எங்கெங்கு வேலைவாய்ப்புக்காக நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஜாப் ஃபேர் நடக்கிறதோ அதற்கும் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தாள். அங்கு அவளுடைய பயோடேட்டா கொடுத்து முதற்கட்ட இண்டர்வியூக்கள் முடிந்த நிறுவனங்களில் ஒன்று நேர்முகத்தேர்வுக்காக அவளை நார்த் கரோலினாவில் இருக்கும் அவர்களுடைய அலுவலகத்திற்கு வரச் சொல்லி அவளும் காலை வகுப்புகளை முடித்துக் கொண்டு மதிய உணவு எடுத்துக் கொள்ளக்கூட நேரமில்லாமல் கல்லூரியிலிருந்து ஒன்றரை மணிநேர ரயில் பயணத்தில் நியூயார்க் நகரம் சென்று அங்கிருந்து வேறொரு ரயிலில் 45 நிமிட பயணம் மேற்கொண்டு பிறகு ஏர்ட்ரெயின் மூலம் 15-20 நிமிடங்களில் விமான நிலையத்திற்குச் சென்றடையும் பொழுது மணி 4.30. அங்கு சென்றடையும் வரை எங்களுக்குத் தகவல்கள் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

சுப்பிரமணியை பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொழுதே இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிச் செய்திகளில் நியூயார்க் நகரத்திலும் அதிமழை, இடி, மின்னல் என்ற பொழுது தான் அடடா! இந்தச் சூழ்நிலையில்... நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மகளிடமிருந்து ஃபோன்.

அம்மா...இங்கே ஒரே கலவரமா இருக்கு. நான் போற விமானம் இப்போதைக்குப் போகாது லேட்டாகும்ங்கிறாங்க. ஒரே கூச்சலும் குழப்பமாவும் இருக்கு. அனேகமா எல்லா ஃப்ளைட்ஸ்ம் கான்சல் பண்ணிடுவாங்க போல!

அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு?

எட்டு மணிக்கு.

நீ ஊருக்குப் போய்ச் சேர லேட்டாய்டுமே! அங்க இருந்து தங்கப்போற ஹோட்டலுக்கு அரைமணி நேரமாவது ஆகும். ராத்திரி பத்து பத்தரை ஆயிடும். புது ஊர் வேற!

என்ன பண்ணலாம்மா? கேட்கும் பொழுதே அழுகைக்குத் தயாராகும் குரல்!

நான் இந்த இண்டர்வியூக்காக எதுவுமே தயார் பண்ண நேரமில்லை. புரஃபஸர் வேற அடிக்கடி க்ளாஸ் கட் பண்ணிட்டுப் போறே. ஃபெயில் பண்ணிடுவேன்னு சொல்லி இருக்கார். நேரத்துக்குப் போய் சேர்ந்துட்டு நைட் கொஞ்சம் பார்த்துக்கலாம்னு இருந்தேன். எனக்கு நம்பிக்கையே இல்லை. அந்த ஆஃபீஸ்ல வேற யாரையும் காண்டாக்ட் பண்ண முடியலை. இங்கே ஒரே தள்ளுமுள்ளா இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படி?

பசி மயக்கம், எதிர்பாராத தடங்கல்கள், தயார் பண்ணிக்கொள்ளாத நேர்முகத்தேர்வினை எதிர்கொள்ளப் போகும் பதட்டம், வகுப்பில் ஆசிரியரின் கண்டிப்பு என்று நினைத்தபடி எதுவும் நடக்காத நிலையில் மொத்தமும் கனமாக அழுத்தியதில் அழ ஆரம்பித்து விட்டாள்.

சே! தனியாக மகளின் முதல் விமானப்பயணம்! இப்படியா இருக்க வேண்டும்? ஏன் தான் என் குழந்தைகளுக்கு மட்டும் இப்படி!

அழாதே! அப்பா வேணா வரட்டுமா? நீ போய்த்தான் ஆகணும்னா நாளைக்கு காலையில கிடைக்கிற முதல் ஃப்ளைட்ல போற மாதிரி கேளு.

சரிம்மா... அங்க கவுண்டர்ல ஏதோ சொல்றாங்க. கேட்டுட்டு வர்றேன்.

இப்ப என்ன பண்ணலாம்? நான் போயிட்டு வரவா? பாவம் இவ்வளவு கஷ்டப்படறா. கலக்கத்துடன் கணவர்.

நீங்க எப்படி இந்த மழையில நாலு மணிநேரம் அப்புறம் ராத்திரி முழுக்க ஓட்டினாலும் போய்ச்சேர காலையில பத்து மணியாயிடும்! ஒரு சமாதானத்துக்காகத் தான் சொன்னேன். நீங்க மட்டும் ஒட்டுறதும் கஷ்டம். போனா இவனையும் கூட்டிட்டு நாம எல்லாரும் சேர்ந்து தான் போகணும் இல்லைன்னா அந்த கம்பெனியை கூப்பிட்டு வேற நாள்ல இண்டர்வியூ வைக்கச் சொல்லணும். நானும் ஈமெயில் அனுப்பிட்டேன். ஃபோன்ல மெசேஜ் கூட விட்டுட்டேன். ஆஃபிஸ் நேரம் முடிஞ்சதனால யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. வெய்ட் பண்ணுவோம்.

அம்மா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கு ஒரு ஃப்ளைட் இருக்கு. டிக்கெட் கொடுத்துட்டாங்க. இப்ப என்ன பண்றது?

நீ திருப்பி காலேஜ்க்குப் போயிட்டு நாளைக்கு காலையில மூணு மணிக்கு கிளம்பி வர்றது நடக்கிற காரியம் இல்ல. பக்கத்துல ஹோட்டல் இருந்தா அங்க போய் தங்கிட்டு காலையில வந்திடலாம். ஏர்போர்ட்ல இருக்கிற ஹோட்டல் கவுண்டர்ல ஏதாவது ஒன்னை புக் பண்றியா இல்ல நான் பண்ணவா?

வேண்டாம் நானே பண்ணிடறேன் என்று சொல்லி விட்டுச் சென்றவள் மீண்டும்.... சே! இங்கேயும் கூட்டம்மா. நான் ஆன்லைன்ல பக்கத்துல இருக்கிற ஹோட்டல் ரூம் புக் பண்ணிடறேன்.

மொத்தமா ஃப்ளைட் எல்லாத்தையும் கான்சல் பண்ணியிருப்பாங்க. மழை கொட்டிக்கிட்டு இருக்கிறதால அவங்களும் வேற என்ன பண்ண முடியும்?

அப்படியே ஏர்போர்ட் டாக்ஸி புக் பண்ணிடு.

சரிம்மா.

ஹோட்டல் ரூம் கிடைத்து டாக்ஸி கிடைக்கவில்லை.

வெளியில் சென்று ஏதோ ஒரு டாக்ஸியில் ஏறி ஹோட்டலுக்குத் தான் போயிட்டு இருக்கேன். அங்க போய்ச் சேர்ந்தவுடன கூப்பிடவா?

வேண்டாம் வேண்டாம். நீ ஃபோன்லேயே இரு.

அம்மா, வண்டியில GPS இல்லையாம். ஃபோன் GPS வேணுமாம்.

GPS இல்லாதவன்லாம் எதுக்கு நியூயார்க்ல வண்டிய ஒட்டிக்கிட்டு இருக்கான். நீ ஸ்பீக்கர்ல போடு. அவன் வண்டியில இருக்கிற ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், கார் நம்பர் டீடைல்ஸ்லாம் அவனுக்கும் கேட்குற மாதிரி சொல்லிட்டே வா. எந்த பக்கம் போகுதுன்னு அப்பப்ப அப்டேட் பண்ணிட்டே இரு.

அதற்குள் அந்த டிரைவரும் GPSல் வழியைப் போடச் சொல்ல...

ஒரே மழை! ஒண்ணுமே தெரியலை! எங்கே போகிறோம் என்று தெரியாமல் மகள். எந்த வண்டியில் ஏறியிருக்கிறாள் என்ற பதட்டம் எங்களுக்கு. பத்திரமாக போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை அதிகரிக்க...எரிச்சலாக வந்தது. இன்று பார்த்து ஏன் எல்லாமே இப்படி போய்க் கொண்டிருக்கிறது?

இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ஹோட்டல் போய்ச்சேர?

நடுவுல ஏதோ ஒரு வழிய மிஸ் பண்ணிட்டான் போல.

இவன் என்ன டிரைவர்? வழி கூட தெரியாம? நேரம் செல்லச்செல்ல பதட்டம் கூடிக்கொண்டே போனது.

டிரைவரிடமே எங்க இருக்கு அந்த ஹோட்டல் ? ஏன் இவ்வளவு லேட்டாகிறது என்று கேட்டு....

ஒரு வழியாக ... அம்மா... ஹோட்டலுக்கு வந்துட்டோம்.

அப்பாடா! முதல்ல இவனை அனுப்பு! GPS இல்லாம வழியும் தெரியாம இவன்லாம் ஒரு டிரைவர்!

அம்மா! இந்த ஹோட்டல்ல நான் ரூம் புக் பண்ணலையாம். இவங்க பிரான்ச் வேற ஒண்ணு. இங்க பக்கத்துல தானாம்.

ஐயோ! இன்னொரு டாக்ஸியா?

அவங்க ஷட்டில் கூப்பிட்டுருக்காங்க.

அப்ப சரி!

ஒருவழியாக ரூம் போட்டு அங்கே போனவுடன் சேர்த்து வைத்து ஓவென்று அழுகை!

முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணு.

பசியில்லை.

சாப்பிட்டா தான் கொஞ்சம் தெம்பா இருக்கும். தெளிவா யோசிக்க முடியும். சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் இண்டர்வியூக்கு ரெடி பண்ணிக்கோ. சரியா என்றவுடன்

சரிப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்.

பாவம்ங்க! முதல் முதல்ல தனியா போற பயணம் இவ்வளவு மோசமா இருந்திருக்கக் கூடாது. ஹ்ம்ம்...

சிறிது நேரம் கழித்துப் பேசுகையில் கொஞ்சம் தெளிவாக இருந்தது குரல். தூங்கலையா?

இல்லம்மா. கொஞ்ச நேரம் படிக்கிறேன். நாளைக்கு காலையில 3.30 மணிக்கு எழுப்பிடு. அஞ்சு மணிக்கு ஷட்டில் வந்திடும்.

குட்நைட் சொல்லி விட்டு என் மகளுக்கு ஏன் இப்படியொரு சோதனை என்று வருந்திக் கொண்டே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து காலையில் நான் எழுப்பி விடுவதற்குள் அவளே எழுந்து விட்டிருந்தாள். ஏர்போர்ட் போனவுடன், விமானம் ஏறியவுடன் என்று ஊர் போய்ச் சேரும் வரை அப்டேட் செய்து கொண்டே இருந்தாள்.

கவலைப்படாதே! இதெல்லாம் அனுபவங்கள்! திரும்பிப் பார்க்கையில் இதையெல்லாம் நீ கடந்து வந்திருக்கிறாய் என்று பெருமையாகத் தான் இருக்கும். உன் வயதிற்கு இது அதிகம் தான் ஆனாலும் நீ என் மகள். இதையெல்லாம் எளிதில் கடந்து விடுவாய். நேர்முகத் தேர்வை நன்றாகச் செய். அத்தனை ஆர்வமுடன் அவர்கள் நிறுவனத்தில் சேர நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறாய் என்பதையும் அழகாகச் சொல்லி விடு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பி விட்டு...கடவுளே! எல்லாம் சுபமாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு...

நானும் அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவள் வந்து சேரும் நேரத்தைச் சொல்லி அவர்களும் அதற்கேற்றவாறு நான்கு குழுக்களுடனான நேர்முகத் தேர்வினை மூன்று குழுக்களுடன் மட்டும் வைத்துக் கொண்டு வேறொரு நாளில் ஸ்கைப் மூலம் நான்காவது குழுவுடனும் இண்டர்வியூ என்று முடித்தார்கள்.

மீண்டும் விமானம் ஏறி நியூயார்க் வரும் பொழுது அம்மா, என்னோட ஷூ ஹீல்ஸ் உடைஞ்சு போச்சு தெரியுமா? அதோட தான் இண்டர்வியூக்குப் போனேன்! இந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது. ஒர்ஸ்ட் டே ஆஃப் மை லைஃப்!

கவலைப்படாதே! இந்த மாதிரி அனுபவங்கள் தான் உனக்குப் பலமாக இருக்கும். இனி உலகத்தில் எந்த விமான நிலையத்தில் எத்தனை குழப்பங்கள் வந்தாலும் உன்னால் எதிர் கொள்ள முடியும். இனி வரும் நாட்களிலும் இப்படி எதிர்பாராத ஏதாவது ஒன்று நடந்து கொண்டே தானிருக்கும். நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். இனி கல்லூரித்தேர்வுகளில் கவனம் செலுத்து. எதைப் பற்றியும் கவலைப்படாதே.  இதை விட வேற ஏதாவது புதுசா வந்தா இதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு தோணும். டேக் இட் ஈஸி! வேற வழியில்லைன்னு சொன்னாலும் மிகவும் வருத்தமாக இருந்தது.

பாவம் இதுக்கே இப்படி பயந்து நொந்து போய்விட்டாளே!

எது எப்படியோ எல்லாம் சுகமாக முடிந்து வேலைக்கான ஆர்டரும் கிடைத்து விட்டது. அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வேறு இரு நிறுவனங்களிலும் வேலை கிடைத்த பெருமையுடன் அவளுடைய ஆசிரியர்களும் பெருமிதம் கொள்ளும் வகையில் இனிதே நிறைவடைந்தது அவளுடைய கல்லூரி வாழ்க்கை.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் யாருக்கும் இதெல்லாம் தெரிவதில்லை. கடந்து வந்த கடுமையான பாதைகளைக் கண்டுகொள்வதில்லை பலரும்! வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு கவலை என்பது ஒன்று இல்லவே இல்லை. சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் நம்மூரில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைகள், போராட்டங்கள் எல்லோருக்கும் எங்கேயும் இருக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எளிதாக எல்லாம் அமைந்து விடுகிறது. பலருக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதில்லை. அநேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல தடைகள் எதிர்பாரா வருந்தத்தக்க தருணங்கள் இருந்திருக்கும். ஐயோ! எனக்கு மட்டும் ஏன் என்று புலம்பிக் கொண்டிராமல் எப்படி தகர்த்து வெளிவருவது என்று யோசிக்கும் மனம் தளர்ந்து போவதில்லை என்பது என் அனுபவத்தில் கண்டறிந்தது.

இன்று வரை அவளுக்கு எதுவுமே எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் போராடித்தான் பெறுகிறாள். என்னுடைய இருபது வயதில் இதை விட மிகப்பெரிய போராட்டங்களைக் கடந்து தான் வந்திருக்கிறேன் என்றாலும் இந்த விஷயத்தில் என்னைப்போலவே இருக்கிறாளே என்று வருத்தமும் மகிழ்ச்சியும்! சோர்வடைந்தாலும் துவண்டு விழாமல் மீண்டு வரும் இந்தப் போராட்ட குணம் இருந்தாலே போதும். வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம் என்று என் குழந்தைகளுக்குச் சொன்னேன், சொல்கிறேன், சொல்லிக் கொண்டே இருப்பேன்!

சரிதானே?






















































































1 comment:

  1. Great experience. My daughter too went all alone to USA.

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...