பெண்களைப் பாதிக்கும் வகையில் பல அமெரிக்க மாநிலங்களில் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்ட மாறுதல்கள் மக்களிடையே பெருங்கொந்தளிப்பை ஏற்பட்டுள்ள்ளது. ஜார்ஜியா மாநிலத்தில் மே 13ந் தேதி கருக்கலைப்பு தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் கருவுற்ற பெண் ஆறு வாரத்திற்குள் அதாவது கருவின் இதயத்துடிப்பு கேட்பதற்கு முன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்ட மாறுதலுக்கு கவர்னர் கையொப்பமிட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று விட்டால் 2020லிருந்து இச்சட்டம் அமலாக்கப்பட்டு விடும்.
இதனைத் தொடர்ந்து மிகவும் கடுமையான கருக்கலைப்புச் சட்டம் ஒன்றை 2019 மே மாதம் 15ந் தேதி அலபாமா மாநிலங்களவைக் கூட்டத்தில் 'Pro Life Law' என்று அமல்படுத்தியிருக்கிறார்கள். இச்சட்டத்தின் படி, கருவுற்ற நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது. கருக்கலைப்பை கொலைக் குற்றமாகவும் கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக மருத்துவருக்கு 99 ஆண்டுகள் வரை தண்டனையும் இச்சட்டத்தால் வழங்க இயலும். கவனமற்ற முறையில் நடந்த கர்ப்பம், பிறந்த குழந்தையை வளர்க்க போதிய நிதி நிலைமை இல்லாத சூழல், குழந்தை தற்பொழுது வேண்டாம் என்று எடுக்கும் முடிவுகளால் இனி கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது. இச்சட்டம் வன்புணர்வினால் கருவுறும் பெண்களையும் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பலரின் எதிர்ப்பிற்கும் காரணம். கருவைச் சுமக்கும் பெண்ணின் உடல்நிலை அபாய நிலையில் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே சட்டப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். இது பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று பலரும் கொந்தளிக்கும் நிலையில் வலது சாரி ஆளுங்கட்சியினரும் அவர்கள் சார்பு கொண்டவர்களும் உயிரைக் கொலை செய்வதைத் தடுக்கிறோம் என்று வாதிட்டு இச்சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
எட்டு வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்பு என்பது மூளை, இதயம் வளர்ச்சியடைந்த நிலையில் ஒரு உயிரைக் கொலை செய்வது போலத்தான் என்கிறது இச்சட்டம். கருவைச் சுமக்கும் பெண்ணிற்கு இருக்கும் அதே வாழ்வுரிமை வளரும் கருவிற்கும் உண்டு. அதனால் கருக்கலைப்பைக் கொலைக்குற்றமாக கருத வேண்டும். மனிதர்கள் தவறு செய்கிறோம் என்பதைக் கூட மறந்து இத்தகைய கொலைபாதக செயலைச் செய்து வருவதை தடுப்பதாக இந்தச் சட்டம் அறிவுறுத்துகிறது என்று வாதிடுகிறார்கள் சட்டமியற்றியவர்கள்.
அலபாமாவில் குழந்தைகள் வேண்டாம் என்பவர்கள் அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். அதையும் மீறி கரு உண்டானால் தற்போதைய புதிய சட்டத்தின் படி கருக்கலைப்பு காலம் முடிந்த பின்னர் எதுவும் செய்து கொள்ள முடியாது. இதனால் கரு உருவானது அறியும் முன்னே சட்டப்படி கருக்கலைப்பிற்கான காலத்தையும் கடந்து விட்டிருக்கும் பெண்கள் குழந்தைப்பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கருவைச் சுமக்க போதிய உடல் வலிமை இல்லாத பெண்களின் இறப்பு விகிதமும் அதிகமாகும்.
வளர்ந்து வரும் நாடுகளில் வருடத்திற்கு 25 மில்லியன் கருக்கலைப்புகள் பெரும்பாலும் தவறான உறவுகளாலும் அல்லது கருக்கலைப்பு தடைவிதிக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் அபாயகரமான வழியில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளால் நடந்து வருவதாகவும் அதில் 7 மில்லியன் பெண்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகம்!
இப்புதிய சட்டம் வருமுன்னே 2014ம் ஆண்டிலேயே பல countyகளிலும் தொண்ணூறு சதவிகிதம் கருக்கலைப்பு மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கிறது. டிரம்ப் ஆட்சியில் Planned Parenthood, கருத்தடை மற்றும் பாதுகாப்பான இனப்பெருக்க முறைக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதிகளையும் தடைசெய்ய முயல்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது போதிய ஊதியம் இல்லாத கல்வியறிவு குறைந்த வறுமையில் வாடும் புறநகர் மக்களே! அதிலும் பெரும்பான்மையினர் வெள்ளை அமெரிக்கர்கள் அல்லாதாவர்களாம். திட்டமிட்டே பெண்களின் மீதான வன்முறையை குழந்தைகளின் உயிரைக் காப்பதாக தங்கள் மத நம்பிக்கையினை திணிப்பதற்கும் இந்த அரசாங்கம் முயன்று வருகிறது. பெற்றவர்களால் வளர்க்க முடியாத சூழ்நிலையிலும் உண்டான கருவை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறும் அரசோ, இச்சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களோ பிறந்த குழந்தையினை நல்முறையில் வளர்க்க உத்தரவாதம் தர முடியுமா?
குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு வறுமையிலோ, முறையான கல்வி பெற வழியில்லாமல் வேலையில்லாமல் தீய வழிகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்குப் பாரமாய் இருப்பதை விட கருவில் அழிப்பதில் என்ன தவறு என்று வாதிடும் பெண்களுக்கு அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டுமே பாதிக்கும் வகையில் இருப்பது தான் இன்று போராட்டங்கள் நடைபெற காரணமாகி இருக்கிறது. பெண்ணை கர்ப்பமாகிவிட்டு ஆண் விலகிச்செல்ல, அந்நிலையில் பிறக்கும் குழந்தைக்கு முழுப்பொறுப்பேற்க முடியாத நிலையில் பெண்ணால் கருக்கலைப்பு செய்து பிறக்கப் போகும் குழந்தை எதிர்கொள்ளப் போகும் அபாயங்களிலிருந்து காப்பாற்ற முடிவதை இப்பொழுது தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட ஆண் இத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். குழந்தைச்செலவிற்கு பணம் மட்டுமே கொடுத்து ஒதுங்கிக் கொள்ள முடியும். அதுவும் அவ்வளவு எளிதாக கொடுத்து விட மாட்டார்கள். முடிந்தவரை பெண்களை அலைக்கழிக்கவே பார்ப்பார்கள். குழந்தை வளர்க்கும் பொறுப்பும் இல்லை. சில இடங்களில் ஆணே கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளித்தாலும் இனி அதுவும் முடியாது. எப்படியும் பெண்ணே எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இச்சட்டம் கொண்டு வந்துள்ளது.
"கருக்கலைப்பை முடிவு செய்யும் உரிமை கருவுற்றிருக்கும் பெண்ணிற்கே" என்று நாற்பத்தியாறு வருடங்களாக நிலவி வந்த அரசியலமைப்புச் சட்டத்தை 'Pro Life Law' மூலமாக மாநிலங்களில் தடை விதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆளும் கட்சியினரின் அதிகார பலத்தால் உச்சநீதி மன்றத்திலும் ஒப்புதல் பெற்றுவிடும் சாத்தியக்கூறுகளே அதிகம். அலபாமா மாநிலத்தைத் தொடர்ந்து மிசௌரி, ஓஹையோ, யூட்டா மாநிலங்களும் இச்சட்டத்தை அமல்படுத்த முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் கட்சியினரின் அதிகாரத்தில் இருக்கும் வேறு பல மாநிலங்களிலும் சட்ட மாற்றங்கள் கொண்டு வர முனைகிறார்கள்.
பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும், பாதுகாக்க நினைக்கும் அதிபராக வருபவராலும் கட்சியினராலும் மட்டுமே இச்சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர இயலும். அதுவும் அவர்கள் பெருமளவில் வெற்றி பெற்றால் மட்டுமே! மாநிலத்தில் இச்சட்டம் இருந்தாலும் மத்தியில் கொண்டு வரும் சட்டம் அதனை ரத்து செய்யும் வகையிலும் இப்புதிய சட்டத்தை எதிர்த்துப் பெண்களின் உரிமையைக் காப்போம் என்றும் பேட்டி அளித்துள்ளார்கள் ஜனநாயக கட்சியினர் சார்பில் அதிபராக போட்டியிடும் சிலர். சமீபத்திய கருத்துக்கணிப்பில் 71 சதவிகித மக்கள் புதிய சட்ட மாறுதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் 52 சதவிகித்தனர் குடியரசுக்கட்சியினர். பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும் சட்டத்தையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதிகளையும் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது. அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்தால் சாத்தியப்படலாம். அது கிடைக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும்.
மக்களிடையே கருத்தடை விழிப்புணர்வும், முறைகளும் இன்னும் அதிக அளவில் ஏற்படுத்துவது ஒன்று தான் தீர்வாக இருக்க முடியும். இச்சட்டங்கள் மென்மேலும் குற்றவாளிகளையும், மனநோயாளிகளையும், மன, உடல் வளர்ச்சிக்கு குன்றிய குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கவே செய்யும். மருத்துவமனைக்குச் செல்ல இயலாத சூழலில் கருக்கலைப்பைச் செய்ய முனைய, சிறை செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கூடும். அவர்களை கொலைகாரர்களாக பாவித்து சட்டங்கள் தண்டிக்கும். இதெல்லாம் எதற்காக?
பெண்ணின் உடலைக் கட்டுப்படுத்தும் ஆணின் சிந்தனைப்போக்கில் சிறிதளவிலும் மாற்றம் ஏற்படாத நிலையை ஒன்றே இச்சட்டம் பறைசாற்றுகிறது. கருவுறும் பெண்ணைக் குறைகூறும் சமுதாயம் ஆணை மட்டும் விட்டு விடுகிறது. முன்னேறிய நாடு என்று தன்னைப் பறைச்சாற்றிக்கொள்ளும் அமெரிக்காவில் இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கெதிரான அநீதி தொடர்வதும் அதை எதிர்த்துப் பெண்கள் போராட வேண்டிய துரதிர்ஷ்ட நிலைமையும் வருந்தத்தக்கதே!
இப்போராட்டத்தில் பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் ஆண்கள் அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment