Tuesday, April 21, 2020

சித்திரைத் திருவிழா


ஏப்ரல் மாதம் அனலாய் கொதித்தாலும், தண்ணீர் திண்டாட்டம் வாட்டி வதைத்தாலும் திருவிழா உற்சாகத்தில் ‘கலகல’வென்றிருக்கும் மதுரை. பத்து நாட்கள் நகர வீதிகளில் தினம் ஓரு வாகனத்தில் மதுரை மல்லி, பிச்சிப்பூ, தாழம்பூ, மனோரஞ்சிதம், முல்லைப்பூ, பன்னீர் பூக்கள் மணமணக்க, மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அலங்காரங்களில் மதுரை அன்னை அவள் வலம் வரும் அழகே அழகு!



யானை, ஒட்டகம், காளையைக் கண்டதும் குழந்தைகள் ஆர்ப்பரிக்க, முரசு சத்தம் சொல்லாமல் சொல்லி விடும் பவனி வரும் உற்சவ மூர்த்திகளையும் உலகை ரட்சிக்கும் அம்மையப்பன் வரவினையும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தாத்பர்யம். மக்கள் திரளாக வந்து இறைவனை ரசிக்கும் திருவிழா. அனைவர் முகங்களும் உற்சாகம் ததும்ப அடுத்த நாள் அலங்காரம், வாகனம், விசேஷம் பேசி கலைந்து செல்வர். அம்மன் வலம்வரும் வீதிகள் ஒளி வெள்ளத்தில் ஜெகஜோதியாக ஜொலிக்க, அலை கடலென திரளும் மக்கள் கூட்டம் காண்பவர் அதிசயிக்க, மதுரை மக்கள் அனுபவிக்கும் திவ்ய திருவிழா நாட்கள்!

பட்டத்து ராணியாக கோலோச்சி வலம் வருகையில் மதுரைப் பெண்கள் அனைவருக்கும் பெருமிதம்🙂 அன்னை அவள் திருமண நாளை தத்தம் வீட்டுத்திருமணமாக பாவித்து மக்கள் கொண்டாடுவதே அழகு. அன்றிரவு பூப்பல்க்கில் மணமணக்க பவனி வரும் அழகிக்காக தவமாக காத்திருக்கும் மக்கள்...அனுபவித்தவர்களுக்கே புரியும் உணர்வு அது.


முத்தாய்ப்பாக அடுத்த நாள் காலையில் தேரோடும் வீதிகளில் கேட்கும் “ஹர ஹர சங்கர” கோஷமும், உருண்டு வரும் பிரம்மாண்டமான தேர்களும்... சிவ சிவா! என்ன தவம் செய்தனை இம்மண்ணில் பிறந்ததற்கு!

திருப்பரங்குன்றத்து முருகனும் வீடு திரும்ப, அழகர்மலையில் கோவிந்தா கோஷத்துடன் நாமம் போட்ட பெரிய விசிறிகளுடனும் உண்டியல்களுடனும் எம்பெருமான் மதுரை நோக்கி வர, வழியெங்கும் கோலாகலமான வரவேற்பு தான்! மதுரையைச் சுற்றி இருக்கும் கிராம மக்களும் சேர்ந்து கொண்டாடும் இனியதொரு வைபவம்!


தல்லாகுளத்தில் பெருமாளின் எதிர்சேவை! இரவு தங்கி விடிகாலையில் மதுரை நோக்கிப் பயணம். இந்த வருடம் என்ன வண்ண பட்டுடுத்தி வருவாரோ? குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் குளிர்விப்பதற்காக அவருடைய பக்தர்கள் வேடமிட்டு தண்ணீர் பீய்ச்ச , வீரராகவப் பெருமாள் வரவேற்க, ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து வந்த அழகு மாலையைச் சூடி வைகை ஆற்று மண்டபங்களில் அவன் எழுந்தருள... இனிப்பான வெல்லமும் சுக்கும் கலந்த எளிய நைவேத்தியத்தை நாமம் போட்ட சொம்பில் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என உளமுருகி வேண்டாத மனமும் உண்டோ?


தங்கை மீனாட்சியின் திருமணம் முடிந்த சேதி கேட்டு வழியிலே திரும்பி வண்டியூரில் இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்கள் பூண்டு பக்தர்களுக்கு காட்சி தந்து மறுநாள் கள்ளழகர் வேடத்தில் அழகர் மலைக்குத் திரும்பிச் செல்லும் சுந்தரராஜப் பெருமாளை அன்புடன் வழியனுப்பும் நாட்கள் தான் எத்தனை இனிமையானவை!

தொலைதூர தேசத்தில் இருந்தாலும் இணையத்தில் வரும் படங்களும் வீடியோக்களும் அதே உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தன. இவ்வருடம் திருவிழா தடைபட்டது மிக வருத்தமாக இருந்தாலும் அடுத்த வருடம் இதற்கும் சேர்த்து கொண்டாடி விடுவார்கள் எம்மக்கள்.

அனைவருக்கும் சித்திரைத் திருவிழா வாழ்த்துகள்! அவரவர் வீட்டில் அம்மையப்பனையும், பெருமாளையும் வணங்கி மகிழ்வோம் 🙂

படங்கள்: இணைய உபயம்🙏🙏🙏

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...