Wednesday, April 24, 2024

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம். சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

 

பயணங்களில் நம்மை அறியாமலே சில இடங்கள் மிகவும் பிடித்து விடும். இந்தப் பயணத்தில் பார்க்கும் இடங்கள் எல்லாமே அப்படித்தான் இருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலத்திணைகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகாக பரந்து விரிந்து கிடக்கிறது. நாமே வண்டி ஓட்டிச் சுற்றிப்பார்க்கும் நாடுகளில் ‘யூகே’யும் ஒன்று. அதனால் தானோ என்னவோ ஒவ்வொரு நிலப்பரப்பும் எங்களை மிகவும் கவர்ந்தது. நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்திச் சுற்றிப்பார்த்துக் கொண்டே சென்றதில் பல விஷயங்களும் தெரிந்தது. பெருநகரங்களை விடுத்து உட்புற கிராமங்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே தென்பட்டனர். அமெரிக்காவைப் போல வீடுகளில் பெரிய வண்டிகள் நிறைந்து இல்லாமல் சிறிய வண்டிகள் இருந்ததும் மக்கள் போக்குவரத்திற்கு அதிகம் பேருந்துகளைப் பயன்படுத்துவதையும் பார்க்க ஆறுதலாக இருந்தது. மொத்தத்தில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் காடுகளும், நீர் நிலைகளும் பிழைத்துக் கிடக்கிறது. இப்படி பலவாறு பார்த்த விஷயங்களைப் பேசிக்கொண்டே ‘சௌத்போர்ட்’ டிலிருந்து ‘பிரிஸ்டல்’ நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.

சௌத்போர்ட்-ல் நாங்கள் தங்கியிருந்த ‘Arthur’s of churchtown’ விடுதியின் கீழே அழகான மதுக்கூடம். மாடியில் விசாலமான அறைகளுடன் தங்க வசதிகள் செய்திருந்தார்கள். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு விடுதியில் தங்கியதில் வெவ்வேறு அனுபவங்கள்! எனக்குத் தான் தெரியாத ஊரில் எங்கெங்கோ அறையைப் போட்டுத் தேடிப் போனதில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் இந்த அனாவசிய பயம் தேவையில்லை என்பதை அங்குச் சென்றவுடன் புரிந்து கொண்டேன். சாலையோர விடுதி. எதிரே துரித உணவுக்கடைகள். நல்ல வசதியாகத்தான் இருந்தது. காலையில் ஒரு பெரிய பைக்கர்ஸ் கூட்டம் பெரிய பெரிய பைக்குகளில் விடுதி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். பார்த்தவுடன் ஈஷ்வருக்கு ஒரே குஷி. அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்களும் சினேகமாகப் பேசினார்கள். நான் பார்த்தவரையில் இந்த ‘பைக்கர்கள்’ பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் சக பைக்கர்களுடன் மிகவும் பாசத்துடன் இருக்கிறார்கள். உதவி என்றால் ஓடோடி வந்து கைகொடுக்கிறார்கள். ‘நீ நம் இனம்’ என்று ஒரு பாசம் இழையோடுகிறது!

அவர்களுக்கு ‘பை, பை’ சொல்லிவிட்டு, மெக்டொனால்ட்ஸில் காலை உணவை முடித்துக் கொண்டோம். அருகிலிருந்த கடையில் பழங்கள், ரொட்டிகள், நொறுக்குத்தீனிகளையும் வாங்கிக்கொண்டோம். கருமேகங்களும் பச்சைப்பசேல் மலைகளும் துணை வர, குறுகிய சாலைகளில் அன்றைய பயணம் தொடர்ந்தது. மழைக்கால மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்க, ‘வெல்ஷ்'(Welsh) கிராமப்புறப்பகுதிகள் இயற்கை அழகுடன் வசீகரிக்கிறது. அந்த மலர்களைப் பார்த்தவுடன் தன் ஆஸ்தான கவிஞனின் கவிதையை மீண்டும் கூறினார்.

வழியில் ஒரு சிறிய ஊர் தெரிய, யோசிக்காமல் ‘சடக்’கென்று ஈஷ்வர் வண்டியை உள்ளே ஓட்டிச் சென்று விட்டார்.

“நேரமானாலும் பரவாயில்லை. மெதுவாக நடந்து சுற்றிப்பார்த்து விட்டு வருவோம்.”

அவருக்கு தான் படித்த ஆங்கில நாவல்களில் வரும் கிராமங்களையும் தெருக்களையும் வீடுகளையும் பார்க்க வேண்டும் என்று ஆசை. வீடுகளில் ஆட்கள் இருக்கிறார்களா என்று சந்தேகப்படும்படியாக தெருக்கள் அமைதியாக இருந்தது! ஒரே ஒரு உணவகம். அங்கே மட்டுமே ஒரு சில மனிதர்களைப் பார்த்தோம். எத்தனை அமைதியாக, அழகாக, சுற்றிலும் மலையும் அருகே குளமும் மரங்கள், செடி, கொடிகளுடனும் அடடா! “இப்படிப்பட்ட ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” ஈஷ்வர் ஏக்கத்துடன்.

நன்றாகத் தான் இருக்கும். ஆனால், நமக்கு ‘பேசும் படம்’ போல. சரிப்பட்டு வராது😜


வழியில் ‘Stokesay Castle’ வழிகாட்டி கண்ணில்பட்டது. அழகிய மலைப்பகுதியில் அமைந்துள்ள 13ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த கோட்டையை மிக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். உள்ளே சென்று பார்க்க இலவசம்! கசக்குமா? நுழைவாயிலில் கல்லறை! என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை! ஐயோ யார் மீது நடந்து செல்கிறோமோ என்று பயந்து கொண்டே உள்ளே சென்றால் மஞ்சள் வண்ணத்தில் மரவேலைப்பாடுகளுடன் சிறிய கோட்டை! ‘Ludlow’வில் இருந்த செல்வந்தர் ஒருவரால் கட்டப்பட்டு பல போர்களில் இருந்து தப்பித்த கோட்டையின் கட்டடக்கலை ‘மெடீவல்’ காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. அங்கிருக்கும் ‘பிரதான மண்டபம்’ ஓடுகள் பதித்த மர கூரையுடன் உயர்ந்த ஜன்னல்களுடன் பிரம்மாண்டமாக இருந்தது. பிரபுக்களின் பெரிய விருந்துகள், கூட்டங்கள் அங்கு நடந்ததாகக் குறிப்பெழுதி வைத்திருக்கிறார்கள். உட்புறம் முழுவதும் உள்ள அறைகள், குறுகிய மாடிப்படிகள், இரும்புக்கதவுகளில் கைவினைத்திறனைப் பார்க்க வியப்பாக இருந்தது. கீழ்தளத்தில் மதுவைச் சேமித்து வைக்க தனியறை! பெண்கள் மாடியிலிருந்து பிரதான மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காண தனி இடம், தேவாலயம் என்று அந்தக் காலத்தில் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்! எங்களுடன் சேர்ந்து மொத்தமே ஆறேழு பேர் தான் அங்கே இருந்திருப்பார்கள்! வளைந்து வளைந்து கீழே குனிந்து நிமிர்ந்து என்று சென்று வர வேண்டியிருக்கிறது.

மழைத்தூறல் ஆரம்பிக்க, பறவைகள் கோட்டைக்குள் பதுங்க ஓடிவருவதைப் பார்க்க அழகு. ‘சிலுசிலு’ தென்றல், மழையில் நனையும் மலை, மரங்கள், கருமேகங்களை விலக்கி வெளிவர எத்தனிக்கும் சூரியன், மங்கிய மஞ்சள் வெயிலில் அசைந்தாடும் புற்கள் என்று கோட்டையிலிருந்து கண்ட காட்சிகள் அருமையாக இருந்தது! ‘Catherine Called Birdy’ என்ற ஆங்கிலப்படத்தை அங்கே எடுத்திருக்கிறார்கள் என்று அங்கே இருந்தவர்கள் கூறினார்கள். பிரபலமான கோட்டை என்றும் அறிந்து கொண்டோம்.

மழை நின்ற பிறகு அழகிய ஊரின் வழியே வீடுகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குறுகிய தெருக்கள்! ஆங்கிலப் புத்தகங்களில் வருவது போன்ற நெருக்கமான கல் வீடுகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு! பெரும்பாலும் செங்கல் பதித்த முகப்புடன் அபார்ட்மெண்ட்கள். நடுநடுவே சிறிய கடைகள். ஏதோ ஒருவித நேர்த்தி! குப்பைகளே இல்லாத உலகம்! முகத்திலறைவது போல வண்ணங்கள் அடிக்காத வீடுகள்! வார்த்தைகளில் விவரிக்க இயலாத பேரழகு கொட்டிக்கிடக்கிறது! தெருக்களில் மனித நடமாட்டம் மிகவும் குறைவு. ‘Ludlow’ ஊர் கொள்ளை அழகு. மழைக்கால கொண்டாட்டத்திற்காக மக்கள் ஓரிடத்தில் குழுமியிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இளைப்பாறினோம். Ludlow Castle’ மாலை வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை. பார்வையாளர் நேரம் முடிந்து விட்டிருந்தது. மிஸ் பண்ணிட்டோமே😞

ஷ்ராப்க்ஷயரில் 15ம் நூற்றாண்டு ‘Ludford Bridge’ மூன்று வளைவுகளுடன் அழகாக இருந்தது. வழியில் ‘சார்ல்ஸ் டார்வின்’ பிறந்த ‘ஷ்ரூஸ்பரி ‘ ஊரைப் பார்த்தவுடன் அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று ஆசையாக இருந்தாலும் முன் திட்டமிடல் இல்லாததால் சாத்தியப்படவில்லை. இருட்டுவதற்குள் ‘Clifton Suspension Bridge’ பார்த்து விட வேண்டும் என்று பிரிஸ்டல் நகரை நோக்கி விரைந்தோம்.

வழியெங்கும் பண்ணைகளில் ஹாயாக புற்களை மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகள். நன்றாக ‘கொழுகொழு’வென்று இருந்தது! இரட்டை வானவில் கண்முன்னே பவனி வர, ‘Hampton Castle’ஐ ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது வானம். இதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய கோட்டை தான். மன்னராட்சியில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவற்றைச் சீராகப் பராமரித்து வருவது தான் சிறப்பு. இங்கும் பார்வையாளர் நேரம் முடிந்து விட்டிருந்தது. இத்தனை சீக்கிரமாகவா மூடுவார்கள்? ஒருவேளை கோடையில் நீண்ட நேரத்திற்குப் பார்வையாளர்களை அனுமதிப்பார்களோ என்னவோ? உள்ளே முடிந்தவரை நடந்து சுற்றிப்பார்த்தோம். திருமண நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது போல. வண்டிகள் வரிசையாக வர, பெட்டிகளுடன் பெரும்கூட்டம் உள்ளே சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்குத் தமிழ் மக்கள் போல தெரிந்தாலும் ஒருவேளை இலங்கைத்தமிழர்களாக இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டோம். வெள்ளையர்கள் சிலரும் சென்று கொண்டிருந்தார்கள். அரண்மனையில் திருமணம்! பெரிய ஆளுங்க தான் போல! ம்ம்ம்ம்ம்…

மீண்டும் நீண்ட அழகான சாலைகளில் பயணம். மழை துரத்த ஆரம்பித்து விட்டது. கருமேகங்கள் கூடுவதும் கலைவதுமாய் வானில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, நாங்களும் இப்பொழுது இங்கிலாந்தின் ‘திடீர்’ மழைக்குப் பழகியிருந்தோம். மழை நின்றவுடன் இந்த உலகமே புத்துணர்ச்சி பெற்றது போன்ற அழகுடன் சொக்கி நிற்பதைப் பார்க்க அதுவும் ஈர சாலைகள், நீர் சொட்டும் மரங்கள் மனதிற்கு இதமாக இருக்க, ‘மாலையில் யாரோ மனதோடு பேசினார் …’ ஸ்வர்ணலதா😍

ஏழரை மணிபோல ‘ஏவான்’ ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பிரிஸ்டல் நகரதிற்கு வந்து சேர்ந்து விட்டோம். கலாச்சார பன்முகத்தன்மை, வரலாற்று முக்கியத்துவம், வளமான கடல்சார் பாரம்பரியத்திலிருந்து பரபரப்பான நகர வாழ்க்கை என்று பிரபலமாக இருக்கிறது இந்நகரம். இதன் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான ‘கிளிஃப்டன் தொங்கு பாலம்’, நகரின் பொறியியல் திறமைக்குச் சான்றாக நிற்கிறது. ‘இஸம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்’ வடிவமைத்து 1864ல் கட்டி முடிக்கப்பட்ட கம்பீரமான பாலம் இரண்டு கற்கோபுரங்களுக்கு இடையே தடிமனான இரும்புச் சங்கிலிகளால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ளது. ஏவான் ஆற்றின் குறுக்கே பாலத்தின் மீது கடந்து செல்லும் பொழுது பயம் வரத்தானே செய்யும்? உண்மையாகவே ‘Engineering marvel’ தான்.

கடந்து செல்லும் வண்டிகள் கப்பம் கட்டிவிட்டுத் தான் நகர முடியும். வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு ஆற்றையும் கரையோரத்தில் இருந்த கோட்டை, மதுபானவிடுதிகளையும் அங்கிருந்து வந்த ஜாஸ் இசையையும் கேட்டுக் கொண்டிருந்தோம். மாலைச்சூரியன் இரவுப்போர்வைக்குள் நுழைய காத்திருந்தான். அதற்குப் பிறகு தான் பாலம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும் என்றார்கள். பாலத்தைச் சுற்றி நடந்து செல்ல பாதை இருக்கிறது. நடந்து அருகிலிருந்த பூங்காவிற்கும் சென்றோம். சூரியன் அஸ்தமனமாக, பாலத்தில் விளக்குகள் போடப்பட்டு ஜொலித்தது. பிரிஸ்டல் நகரின் சிறிய தெருக்களையும் அழகிய கட்டடங்களையும் வரிசையாக நிறுத்த வைக்கப்பட்டிருந்த சிறிய வண்டிகளையும் அமைதியான தெருக்களையும் கடந்து,

நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து பெட்டிகளை எடுத்துச் சென்றார்கள். நுழையும் பொழுது ஒரு குட்டி ‘ஸ்னாக்’ என்ன? வரவேற்பு எல்லாம் பலமாக…ம்ம்ம்ம்ம். கொடுக்கிற பணத்துக்கு நல்ல மரியாதை தான். வெளியே திருமண நிகழ்ச்சி பார்ட்டி ஒன்று படுஜோராக நடந்து கொண்டிருந்தது. அருமையான இடத்தில் இருந்த விடுதியில் காலை உணவின் விலையைக் கேட்டால்😮

சௌத்போர்ட்டிலிருந்து பிரிஸ்டல் வந்து சேர மூன்றரை மணிநேரம் தான் என்றாலும் வழியில் ஏகப்பட்ட மண்டகப்படிகள் ஏறி இறங்கியதில் ஒருநாள் சென்றதே தெரியவில்லை! நாளைய பயணம் முற்றிலும் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆவலுடன் உறங்கச் சென்றோம்.

மறுநாள் காலையில் ‘சாவகாசமாக எழுந்திருந்து பாத்’ நகருக்கு கிளம்பினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து முக்கால் மணி நேரப்பயணம் மட்டுமே. சிறு ஊர்களின் வழியே சென்றதால் பல இடங்களில் எதிரே வரும் வண்டிகளுக்காக காத்திருந்து வழி விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அத்தனை குறுகிய சாலைகள். வீடுகளின் வெளிசுற்றுச்சுவருக்குப் பதிலாக நெருக்கமாகச் செடிகளை வளர்த்து அழகாக வெட்டியிருந்தார்கள். சில வீடுகளில் அயர்லாந்தைப் போல கற்களாலேயே சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார்கள்.எங்கே கார் அவற்றை உரசிக்கொண்டு சென்று விடுமோ என்ற அளவுக்குப் பக்கத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் கண்களை இறுக மூடிக்கொண்டேன். ‘பாத்’ நகரை நெருங்கும் பொழுது தெரிந்த வீடுகள் எல்லாம் குட்டியாக அழகாக இருந்தது. நெருக்கமாக பெரிய அடுக்குமாடி வீடுகள். கட்டணம் கட்டி வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி பார்க்க வேண்டிய இடங்களுக்கு கால்நடையாகச் சென்று விடலாம் என்று திட்டம். பார்க்கிங் கிடைப்பது தான் கடினமாக இருந்தது. கோடைகாலத்தில், விடுமுறை நாட்களில் இதுதான் பிரச்சினையாக இருக்கும் போல! ரயில், பேருந்து வசதிகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள் அதில் பயணிக்கின்றனர்.

சரியாக மதிய நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். அது ஒரு தனி உலகம் போல மாறுபட்ட கட்டடங்களுடன் மிக மிக அழகாக இருந்தது. உள்ளே பல இடங்களில் வண்டிகள் செல்ல முடியாது. எங்குப் பார்த்தாலும் உணவு, உடை, விதவிதமான பொருட்களை விற்கும் கடைகள்.ஏதோ கோட்டைக்குள் நுழைந்தது போன்ற உணர்வு.

ரோமானியர்களின் நகரமாக இருந்து பல வருடங்கள் புறக்கணிக்கப்பட்ட நகரம் இன்று இங்கிலாந்தின் அழகிய நகரங்களில் ஒன்றாகி உலகெங்கிலும் இருந்து பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. அதன் அழகான ஹனிஸ்டோன் ஜார்ஜிய கட்டிடக்கலையும் புகழ்பெற்ற ரோமானிய குளியலும் இங்கு மிகவும் பிரபலம். இயற்கையான வெப்ப நீரூற்றுகளின் மருத்துவ குணங்களை அறிந்த ரோமானியர்கள் கிபி 70ல் இங்கே பல குளியல் இல்லங்களை நிறுவி ‘ஸ்பா'(Spa) நகரமாக உருவாக்கியுள்ளனர். செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் வந்து சென்று கொண்டிருந்த இடம், 18 ஆம் நூற்றாண்டில் ‘ஜான் வூட் தி எல்டர்’, ‘ஜான் வூட் தி யங்கர்’ கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பல நேர்த்தியான கட்டிடங்கள், தெருக்கள், பொது இடங்களால் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையையும் அங்கீகரித்து உலக பாரம்பரிய தளமாக ‘யுனெஸ்கோ’ பட்டியலிட்டுள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும் ரோமன் குளியல், ராயல் கிரசண்ட், பாத் ஆபி, ஜேன் ஆஸ்டன் மையம் குறிப்பிடத்தக்கதாகும். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோமானிய குளியல் மூலம் ‘பாத்’ நகரம் அதன் பெயரைப் பெற்றுள்ளது. நகரத்தின் அசல் பெயர் “அக்வே சுலிஸ்”.லத்தீன் மொழியில் “சுலிஸின் நீர்”. சுலிஸ் என்பது வெப்ப நீரூற்றுகளின் செல்டிக் தெய்வத்தின் பெயர். கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் பாத்திற்கு வந்த ரோமானிய குடியேற்றவாசிகள் அவளைத் தங்கள் சொந்த தெய்வமான மினெர்வாவுடன் அடையாளப்படுத்திக் கொண்டனர். இரு பெண் தெய்வங்களையும் போற்றும் வகையில் இந்த நகரத்திற்கு “அக்வே சுலிஸ் மினெர்வா” என்று பெயரிட்டுள்ளனர்.

இங்கிருக்கும் இயற்கை வெந்நீர் ஊற்றுகளை ஆங்கிலேயர்கள் “பாதன்” என்று அழைத்து காலப்போக்கில், ‘பாத்’ என்று பெயர் உருமாறியிருக்கிறது. ரோமானியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு ஆங்கிலோ-சாக்ஸன்ஸ் வசம் சென்ற நகரம், பின் வைகிங்ஸ் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேய மன்னர்கள் வசம் வந்துள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இழந்தது போக, எஞ்சியவற்றை மீட்டெடுத்து வைத்திருக்கிறார்கள். இன்றும், ‘பாத்’துக்கு வருபவர்கள், ரோமானிய குளியல் பகுதிகளையும், ரோமானிய கோவில், கோட்டை, நகரச் சுவர்களைக் காண முடிகிறது. முறையாக ஆவணப்படுத்தி பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒலி,ஒளிக்காட்சிகளாக வழங்கிவருவது சிறப்பு.

விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு அத்தனை கூட்டம். விடுமுறையில் கேட்கவா வேண்டும்? பல நாடுகளில் இருந்து பழமொழி பேசும் பலவிதமான மனிதர்கள்! பெண்கள் அழகாக உடைகளை அணிந்து ஹாலிவுட் தோற்றுப் போகும் அளவிற்கு மேக்கப் போட்டுக் கொண்டு… அப்படியே எதையாவது வாங்கி கொறித்துக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்க்கலாம் போல. சிறிது நேரம் அதையும் செய்து கொண்டிருந்தோம். அது வேறுலகம் தான்!

‘ரோமன் பாத்ஸ் ஆர்ச்வே’ என்று அழைக்கப்படும் ‘ஆர்ச்வே’, ‘பாத்’தின் மையத்தில் உள்ள யார்க் தெரு முழுவதும் பரவியுள்ளது. ஆர்ச்வேயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக அருகிலுள்ள ஸ்பாவிற்கு சூடான நீரை எடுத்துச் செல்ல 1889 இல் கட்டியுள்ளார்கள்! ‘ரோமன் பாத்’ கட்டடத்தைப் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லும் படங்களும் ஆடியோக்களும் இருப்பதால் அறிந்து கொள்ள எளிதாக இருந்தது. அந்தக்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதமாக ரோமானிய உடையணிந்தவர்கள் நாடகமாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே ரோமானிய அரசர்கள், தளபதிகளின் சிலைகளை வரிசையாக வைத்திருந்தார்கள். அங்கே நின்று விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டு படங்கள் எடுக்க கூட்டம்!பார்ப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ‘ரோமன் பாத்’ கட்டத்தைச் சுற்றிப் பார்க்க கட்டணம் வசூலிக்கிறார்கள். பணம் கட்டி செயற்கை ‘ரோமன் பாத்’தில் ஆனந்தக் குளியல் போடலாம். நம் நாட்டில் மூலிகைக்குளியல் போல 🙂

நகரின் நடுவே இருந்த காஃபி கடையில் வேண்டியதைச் சொல்லிவிட்டு நடைபாதையில் போட்டு வைத்திருந்த இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். நடந்து நடந்து கால்கள் சோர்வுற்றிருந்தன. அருகிலிருந்த ஸ்டைலிஷ் உள்ளூர்வாசி அம்மணி பேச்சுக்கொடுத்தார். அப்பொழுது தான் ‘ராயல் கிரசண்ட்’, ‘ஜேன் ஆஸ்டன் மையம்’, ஜேன் ஆஸ்டன் வாழ்ந்த வீடு மூன்றும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பக்கம் என்று தெரிந்து கொண்டோம். ஓய்வுபெற்ற பெண்மணி. ‘பாத்’ நகரில் பொழுதுபோக்க எங்காவது உட்கார்ந்து வேடிக்கை பார்த்தாலே போதும். வாசிப்பு பழக்கம் உள்ளவர் போல. ஆங்கில இலக்கியங்களைப் பற்றிப் பேசினார். எங்களை பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார். அந்த வயதில் உற்சாகமாக இருப்பவர்களைப் பார்த்தால் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது!

ஜேன் ஆஸ்டனின் பரம விசிறியான ஈஷ்வருக்கு ஒரே குஷி. அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க வேண்டும், மையத்திற்கும் செல்ல வேண்டும் என்று பரபரத்தார். இந்த ‘ஜேன் ஆஸ்டன்’ படுத்துற பாடு இருக்கே! ஐடியா கொடுத்த பெண்மணிக்கு நன்றி கூறி விட்டு ஏற்றமாக இருந்த தெருவில் ஜேன் ஆஸ்டன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து விட்டோம். தற்பொழுது பல் மருத்துவர் ஒருவர் அங்குத் தங்கி இருக்கிறார். ‘ஜேன் ஆஸ்டன்’ மைய நுழைவாயிலில் அவரைப் போன்ற ஒரு உருவச்சிலையை வைத்திருந்தார்கள். நின்று படமெடுத்துக் கொண்டார் ஈஷ்வர்! உள்ளே அவர் எழுதிய புத்தகங்கள், பரிசுப்பொருட்கள், அவரைப் பற்றின குறிப்புகள் என்று ஏராளமான விஷயங்கள். கடையில் வேலை செய்யும் பெண்களும் அவருடைய கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து கொண்டிருந்தார்கள். அழகிகள்!

இனிமையாகப் பேசுகிறார்கள். ‘Persuasion’ and ‘Northanger Abbey’ இரண்டிலும் பாத் நகரைத் தொடர்புபடுத்தியிருப்பார் என்று ஈஷ்வருக்கு அப்பொழுது தான் காரணம் புரிந்தது. வருடம் ஒரு முறை நடக்கும் ‘ஜேன் ஆஸ்டன் திருவிழா’வில் அவருடைய நாவலில் வரும் காதாப்பாத்திரங்களைப் போல உடையணிந்து ‘பாத்’ தெருக்களில் உலாவருவதைப் பார்க்க அவருடைய விசிறிகள் உலகெங்கிலும் இருந்து இந்நகரத்திற்கு வருகிறார்கள்! ஆகா! நினைத்தாலே இனிக்கிறதே!

அவருடைய மையத்திலிருந்து ஏற்றத்தில் நடந்து போனால் பிரபலமான ‘ராயல் கிரசண்ட்’ பிரமிக்க வைக்கிறது! ஒரே மாதிரி 30 மாடி வீடுகளை நெருக்கமாகக் கட்டி பிறை வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். இதில் 114 தூண்கள் இருமாடி உயரத்தில் இருப்பது கவர்கிறது. ஜார்ஜிய கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதால் இதைக்காண மக்கள் வருகிறார்கள். நடுவே உயர்ந்த மரங்களை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஆசை தீர, படங்கள், காணொளிகளை எடுத்துக் கொண்டோம்.

மீண்டும் வந்த வழியே இறங்கி தெருக்களில் சுற்றி ‘ரோமன் பாத்’ அருகே மீண்டும் வந்தோம்.

அப்பொழுது தான் ‘மதிய தேநீர் சடங்கை’ தவற விட்டுவிட்டோமே என்று ஈஷ்வருக்கு சின்ன வருத்தம். ஆங்கில நாவலில் வரும் காட்சியைப் போல ஒரு மாயத்தை ஏற்படுத்துவதற்கு மெனக்கெடுகிறார்கள். அதற்கு கொள்ளை காசு கொடுத்து வாயில் வைக்க முடியாத டீயை அலங்கரிக்கப்பட்ட மேஜைகள், இருக்கைகள், டீ தீர தீர கோப்பையை நிரப்பும் பணியாட்கள், தேநீருடன் சுவைக்க வகைவகையான இங்கிலிஷ் பிஸ்க்கோத்துகள், கூடவே இசை என்று பார்க்க, கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் வரிசையில் நிற்க வேண்டும். கட்டணம் வேறு! கேட்டால் வருடம் முழுவதும் தேநீர் குடிக்க பாக்கெட்டுகள் வாங்கி விடலாம் அவ்வளவு விலை! ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும் முயற்சி செய்து இருக்கலாம் என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார் மனுஷன்! மகளோ, லண்டனில் உயர்தர விடுதியில் தோழிகளுடன் அதே மாதிரி ‘டீ சடங்கு’ என்று பணம் கட்டி சென்று வந்த படத்தை அனுப்பி இருந்தாள். முடிந்தால் அங்கே போகலாம் என்று சமாதானம் கூறி அங்கிருந்து நகர்ந்தோம்.

வெளியில் ‘கிடார்’ வாசித்துக் கொண்டிருந்த இளைஞன் கடந்து சென்று கொண்டிருந்தவர்களை நிறுத்திக் கேட்க வைத்தான். குழந்தை ஒன்று அழகாக நடனம் ஆடி இளைஞனை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள். பியரும் திராட்சை ரசமும் அருந்திக் கொண்டே மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ரசித்துக்கேட்டு இளைஞனுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தோம். அந்த இடத்திலிருந்த கடைகளில் சில பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டேன்.

தெருக்களில் மேலும் கீழும் நடந்து கிங்ஸ் சர்க்கஸ், புல்ட்னி பாலம் பார்த்து முடித்து வண்டி நிற்கும் இடத்திற்கு வருவதற்குள் களைத்துப் போயிருந்தோம். இந்திய இளைஞர்கள் வைத்திருந்த கடைக்குச் சென்று மசாலா டீ, ‘சாட்’ ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம் காத்திருந்தோம் அத்தனை நேரம். சர்வீஸ் படுமோசம். வாடிக்கையாளர்களிடம் பேசக்கூடத் தெரியவில்லை. இதே மற்ற கடைகள் என்றால் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பார்கள். இது வேண்டுமா அது வேண்டுமா என்று இனிக்க இனிக்க பேசி சரிக்கட்டுவார்கள். இந்த முசுடர்கள் எப்படித்தான் வியாபாரம் செய்கிறார்களோ என்றிருந்தது. சாட் நன்றாகவே இல்லை. டீ ஓகே ராகம் தான். இன்றைய நல்ல அனுபவத்தை இவர்களை நினைத்துக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கிளம்பி வந்தோம்.

நாள் முழுவதும் நடக்கிறோம் பேர்வழி என்று வழியில் கண்டதையெல்லாம் தின்று கொண்டிருந்தோம். சந்தையில் பழங்கள் அத்தனை பிரெஷ்ஷாக இருந்தது. அதையும் விடவில்லை. வழியில் பசித்தால் எங்காவது நிறுத்திக் கொள்ளலாம். இரண்டரை மணிநேர பயணத்தில் லண்டன் போய் சேர்ந்து விடுவோம். அங்குச் சென்று கூட சாப்பிடலாம்” என்று மீண்டும் ஒரு நீண்ட சாலைப் பயணத்திற்குத் தயாரானோம்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...