ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான ‘கிளாஸ்கோ’, வரலாறு, கலாச்சாரம், கலை ஆகியவற்றின் கலவையுடன் அதன் பரபரப்பான தெருக்களுக்குச் செல்லும் அனைவரையும் கவர்கிறது.
நகருக்குள் நுழைந்தவுடன் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது அங்கிருக்கும் பிரம்மாண்ட கட்டடங்கள் தான்! வரிசையாக இருக்கும் விக்டோரியன் மற்றும் எட்வர்டியன் கட்டிடங்கள் அந்நகரின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. பார்ப்பதற்கு நிறைய அருங்காட்சியகங்கள் இருந்தாலும் ஜார்ஜ் சதுக்கத்திற்கும் பழமையான தேவாலயத்திற்கும் மட்டுமே செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். சிணுங்கலுடன் மழைத்தூறல் அன்றைய விடியலைத் துவக்க, காலை உணவை முடித்துக் கொண்டோம். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெண்கள் குழுவினர் தத்தம் சைக்கிளில் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுச் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே வண்டியில் எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம்.
கிளம்பிய ஐந்தாறு நிமிடத்தில் ஒரு முச்சந்திப்பில் ‘படா’ரென்று சத்தம். வண்டிக்குள் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த எனக்கு என்ன நடந்ததென்று புரிய சில நிமிடங்கள் ஆனது😢 ஈஷ்வர் வலப்பக்கம் வண்டியைத் திருப்ப, இடப்பக்கத்திலிருந்து வந்த ஒரு வண்டி நான் அமர்ந்திருந்த பக்கம் மோதியிருக்கிறது. நல்ல வேளை! யாருக்கும் அடிபடவில்லை. வண்டியின் இடப்பக்கம் நல்ல அடி வாங்கியிருந்தது. வந்து இடித்த வண்டியும் பலத்த அடிக்கு உள்ளாகியிருந்தது! வண்டியை ஓரங்கட்டி காவல்துறையினர் வரும் வரை காத்திருந்தோம். ஈஷ்வருக்குத் தான் ஒரே சங்கடமாகி விட்டது. யார் ஓட்டினாலும் விபத்து நடக்க வேண்டும் என்றால் நடந்து தான் தீரும் என்று அவரைச் சமாதானப்படுத்துவதே பெரும்பாடாயிற்று எனக்கு😨
வெளிநாட்டில் முதன்முறையாக நடந்த விபத்து. பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றம் கொண்ட ஆண், பெண் காவலர்கள் வந்து எப்படி நடந்தது என்று விசாரித்தனர். அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் ‘யுனைடெட் கிங்டம்’ல் வண்டி ஓட்டும் பொழுது வரும் சில குழப்பங்கள் தவிர்க்க முடியாதவை. ஏற்கெனவே அயர்லாந்தில் ஒட்டிய அனுபவம் இருந்தாலும் மழை, முச்சந்திப்பு என்று ஈஷ்வர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டார் போலிருக்கிறது. “பயப்படாதீர்கள்! இந்த மாதிரி விபத்துகள் இங்கே நடப்பது சாதாரணமான ஒன்று. உங்கள் மீது தவறில்லை.” என்று காவல்துறையினர் எங்களைச் சமாதானப்படுத்தினர். மிகவும் அன்புடன் நடந்து கொண்டார்கள். வெளிநாடு என்பதால் ஃபைன் போடவில்லை. ஊர், காப்பீடு விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டனர். இடித்த வாடகைக்கார் வண்டிக்காரரோ தன் மீது எந்த தவறுமில்லை என்று சொன்னாலும் முச்சந்திப்பில் வேகமாக வந்ததால் தான் அத்தனை பெரிய அடி வண்டிக்கு ஏற்பட்டது. உடனே அவருடைய சங்கத்து ஆட்களைக் கூப்பிட்டு தன் மீது தவறில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருந்தார். பாவம்! அவருடைய வண்டி இடிபட்டு விட்டதே என்று வருத்தமாக இருந்தது. நாங்களும் அவருடைய தகவல்களை வாங்கிக் கொண்டு வண்டிகளைப் படமெடுத்து லண்டனில் இருக்கும் ‘ஈரோப்கார்’ அலுவலகத்திற்குத் தெரிவித்தோம்.
அவர்களும் மாற்று வண்டி தேவைப்படுமா என்று கேட்டார்கள். இல்லையென்றவுடன் லண்டனில் வரும் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று விபத்துகளைக் கவனித்துக் கொள்ளும் அலுவலக தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேசுமாறு கூறிவிட்டார்கள். நல்ல வேளை! நாங்கள் வைத்திருந்த கிரெடிட் கார்டில் காப்பீடு இருந்ததால் தப்பித்தோம். வெளிநாட்டில் வண்டி ஒட்டிப் பயணம் செல்லும் பொழுது இந்த காப்பீடு தகவல்களை அறிந்து கொண்டு செல்லுதல் நல்லது. ஈஷ்வரை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியிலேயே இருந்தார். என்ன? எனக்குத் தான் அருகே வண்டிகள் வரும்போதெல்லாம் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. இன்னும் கூட அந்த பயம் இருக்கிறது😓. நான் ஓட்டினால் மட்டுமே பயம் வருவதில்லை😔 ம்ம்ம்ம்ம்…
அங்கிருந்து கிளாஸ்கோவின் பரபரப்பான தெருக்களுக்கு மத்தியில் பெருமையுடன் நிற்கும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கிளாஸ்கோ கதீட்ரல்’க்கு வந்து சேர்ந்தோம். ‘ஹை கிர்க் ஆஃப் கிளாஸ்கோ’ அல்லது ‘செயின்ட் முங்கோஸ் கதீட்ரல்’ என்றும் இந்த தேவாலயம் அழைக்கப்படுகிறது. கிளாஸ்கோவின் துறவியான செயின்ட் முங்கோ 6ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை இப்பகுதிக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவர். அதனால் இந்த தேவாலயம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அடுத்து நாங்கள் பார்க்க விரும்பிய இடம் ‘ஜார்ஜ் சதுக்கம்’. கம்பீரமான விக்டோரியா கால கட்டிடங்களால் சூழப்பட்ட ஜார்ஜ் சதுக்கம் பல்வேறு சின்னங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தின் பக்கவாட்டில், கிளாஸ்கோவின் கடந்த காலத்தைச் சேர்ந்த ‘சர் வால்டர் ஸ்காட்’, ‘ராபர்ட் பர்ன்ஸ்’ மற்றும் ‘ஜேம்ஸ் வாட்’ உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள், நகரத்தின் வளமான இலக்கிய, கலை மற்றும் அறிவியல் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இருந்தது. அப்படித்தான் நாட்டிற்குப் பெருமை சேர்த்த மனிதர்களைக் கொண்டாட வேண்டும். இதெல்லாம் திராவிட மாடலில் வராதோ😠 அந்த மழையிலும் கணிசமான பார்வையாளர்கள் அங்கு குவிந்திருந்தார்கள். காற்றோட்டமான இடத்தில் புல்தரையில் அமர்ந்து சூழலை ஏகாந்தமாக அனுபவிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். கோடைகாலத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்!
கருமேகங்கள் துணை வர மீண்டும் தொடர்ந்தது சாலைப் பயணம். மழைத்தூறலில் பசுமை போர்த்திய மலைகள் நெஞ்சை அள்ள, ஒருமணி நேரத்தில் மழை நின்று நீல வானம் பளிச்சிட்டது. நாங்கள் செல்ல வேண்டிய ‘Gretna Green ‘ என்னும் காதல் கோட்டைக்கு வந்து சேர்ந்தோம். பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியங்களில் மூழ்கியிருக்கும் ஒரு வினோதமான கிராமம் இது. சமூக விதிமுறைகளை மீறி எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகத் திருமணத்தில் ஒன்றுபட விரும்பிய காதலர்களுக்கு நீண்ட காலமாக ஒரு சரணாலயமாக இருந்திருக்கிறது.
‘கிரெட்னா கிரீன்’ என்பது ஸ்காட்டிஷ் எல்லையில் உள்ள ஒரு கிராமமாகும். 1754ல் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான திருமணச் சட்டத்தைத் தொடர்ந்து இது இளம் காதலர்களுக்கான புகலிடமாக மாறியது. காதலர்கள் 21 வயதிற்குட்பட்டவராக இருந்தால், பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எல்லைக்கு அப்பால், ஸ்காட்லாந்து அதிக தாராளவாத திருமணச் சட்டங்களைக் கொண்டிருந்தது அவர்களுக்கு வசதியாயிற்று. பெற்றோரின் அனுமதி கிடைக்காதவர்கள் இந்த சட்ட முரண்பாட்டை மீற , ஸ்காட்லாந்தின் ‘கிரெட்னா க்ரீனில்’ அடைக்கலம் தேடி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இங்கிலாந்து காதலர்களை இணைத்த ஊர் என்பதால் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.
கிரெட்னா க்ரீனில் உள்ள புகழ்பெற்ற ‘பிளாக்ஸ்மித் ஷாப்’ ரகசிய திருமணங்களின் மையப் புள்ளியாக விளங்கியது என்ற கதை உலவுகிறது. அங்கிருந்த கொல்லன், மதகுருவாக, ஸ்காட்டிஷ் சட்டத்தின் கீழ் திருமணங்களை நடத்தி உலோகத்தை மட்டுமல்ல, சமூகக் கட்டுப்பாடுகளை மீறிய அன்பின் பிணைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இன்றும் உருவாக்குகிறார்.
பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் ‘கிரெட்னா கிரீன்’ ஒரு தனித்துவமான, மறக்கமுடியாத திருமண அனுபவத்தை விரும்பும் காதலர்களுக்கான முதன்மையான இடமாகத் தொடர்கிறது. நாங்கள் சென்றிருந்த பொழுது பல காதலர்கள் தங்கள் திருமண வைபவத்தைத் தனியாகவும் குடும்பங்களுடனும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். காதலுக்கு வயது ஏது😍
கிரெட்னா க்ரீனுக்கு ஓடிப்போகும் பாரம்பரியம் எப்போதும் போல் வசீகரமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள தம்பதிகள் அதன் காதல் வசீகரத்திற்கு ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு இன்றும் அங்கு நடைபெறும் திருமணங்களே சாட்சி. இருவரின் அந்தரங்க விழாவாக இருந்தாலும் சரி அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடனான பிரமாண்டமான கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, கிரெட்னா கிரீன் ஒவ்வொரு ஜோடியின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு திருமண ‘பேக்கேஜ்களை’ வழங்குகிறது. பாரம்பரியமான ஸ்காட்டிஷ் திருமணங்கள் முதல் நவீன கொண்டாட்டங்கள் வரை அங்கு நடத்தப்படுகிறது. எல்லாம் காசு…பணம்…துட்டு…மணி…மணி. காதலுக்கு அத்தனை ஈர்ப்பு!
கண்டிப்பான சட்டங்கள், சமூக விதிமுறைகளைக் காதலர்கள் மீறிய வரலாற்றுச் சான்றாக ‘கிரெட்னா கிரீன்’ இன்றளவும் பார்வையாளர்களைக் கவருகிறது. காதலைப் ‘பூட்டி பூட்டி’ வைத்து விட்டுச் சென்றிருந்தார்கள்! வேடிக்கை மனிதர்கள்!
இதைத்தவிர, அதன் சுற்றுச்சூழலின் அழகு வசீகரிக்கிறது. அழகிய வினோதமான குடிசை வீடுகள் உள்ள கிராமத்துத் தெருக்கள், 12 ஆம் நூற்றாண்டின் பழைய பாரிஷ் தேவாலயத்தின் இடிபாடுகளை அழகாகப் பராமரித்து வருகிறார்கள்.
ஆங்கில இலக்கியத்திலும் ‘கிரெட்னா கிரீன்’ இடம் பிடித்துள்ளது.பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டனின் “ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ்” நாவலில் வரும் லிடியா பென்னட் கதாபாத்திரம் விக்ஹாமுடன் ஓடிப்போய் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்வது இங்கு தான். ஜேன் ஆஸ்டன் நாவலில் வரும் காதல் வசனங்களை அங்கே மேற்கோள் காட்டியிருந்தது சிறப்பு.
நாங்களும் ‘காதல் கோட்டை’யில் விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டோம்😇 ‘Courtship Maze’ என்ற இடத்தில் உள்ளே சென்று சிறிது நேரம் தொலைந்து போகலாம். தொலைந்தும் போனோம். ஆசை தீர ஸ்காட்லாந்தைப் பார்த்து விட்டோம்.
பை,பை ஸ்காட்லாண்ட்😍
இரண்டு மைல் தொலைவில் இங்கிலாந்து எல்லைக்குள் நுழைந்து விட்டோம். இருவழிச்சாலையின் இருபுறமும் மரங்கள் வேலிகளாக நிற்க, மேடும் பள்ளமுமாய் நீண்ட சாலைகள்! திடீர் திடீரென்று மஞ்சள் நிறப்பூக்களுடன் மலைப்பகுதிகள், பண்ணைகள் காட்சி தந்தது அழகு! திருத்தமாக வெட்டிய நெருக்கமான செடிகளைக் கொண்டு வேலிகள் அமைத்திருந்தார்கள். சமவெளியிலும் மலையிலுமாய் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். தொலைவில் பச்சை ஆடை உடுத்திய மலைராணி! வேல்ஸ்ன் அழகு ராணி! 45 நிமிடத்தில் ஆவலுடன் காத்திருந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம். ஈஷ்வரின் கனவுகளில் மற்றொன்றும் நனவாகும் நேரம் வந்துவிட்டது. ஆம்! அவருடைய ஆஸ்தான ஆங்கிலக்கவிஞர் ‘வேர்ட்ஸ்வொர்த்’ பிறந்து வளர்ந்து நடந்து வாழ்ந்த இடங்களைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு. வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு பரவசமாக நடந்து சென்ற ஈஷ்வருடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
இங்கிலாந்தின் ‘கம்ப்ரியா’வில் உள்ள ‘காக்கர்மவுத்’ என்ற அழகான நகரத்தில் அமைந்துள்ள ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ் & கார்டன்’, ஆங்கில இலக்கிய உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்திற்கு அஞ்சலி செலுத்துகிறது. வேர்ட்ஸ்வொர்த் பிறந்து தனது ஆரம்பக் காலங்களை கழித்த இந்த வரலாற்று இல்லம், 18ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று புகழ்பெற்ற காதல் கவிஞரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு அருங்காட்சியகம் மட்டுமல்ல. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் உண்மையான பிறந்த இடமும் வளர்ந்த வீடும் கூட. அதன் பிரம்மாண்டம் அவருடைய செல்வச்சிறப்பையும் பறைசாற்றுகிறது.
வேர்ட்ஸ்வொர்த்தின் இயற்கை மீதான கவிதைகள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களைக் கவர்ந்துள்ளது. காக்கர்மவுத் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகள் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைக்கு முடிவில்லாத உத்வேகத்தை அளித்துள்ளன. இயற்கையுடனே வாழ்ந்திருக்கிறார் மனிதர் என்பதை அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நொடியிலும் உணர்ந்தோம். ‘வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தவிர, அவரது சகோதரி ‘டோரதி’யும் ஒரு திறமையான எழுத்தாளரும் நாட்குறிப்பாளரும் ஆவார். வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸில் டோரதியின் ‘கிராஸ்மியர் ஜர்னல்’ உள்ளது. இது ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ல் அவர்களின் தினசரி வாழ்க்கையை, உடன்பிறப்புகளின் நெருங்கிய உறவை விவரிக்கிறது. ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ்’ சுற்றிலும் சுவர் எழுப்பிய அழகிய தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தோட்டத்தின் பாதைகளின் தளம் வழியாக அலைந்து திரிந்து, மலர்க்காட்சிகள், வேர்ட்ஸ்வொர்த் குடும்பத்திற்கு நன்கு தெரிந்த மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கண்டறியலாம். விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு வேண்டிய தகவல்களை மிக அழகாகத் தொகுத்து வழங்குகிறார்கள்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் கூட!
அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ வந்து சேர்ந்தோம். இங்கிலாந்தின் வடமேற்கு மூலையில் நிகரற்ற அழகுடன் இருக்கும் ஏரி மாவட்டம். அதன் பசுமையான மலைகள், அமைதியான ஏரிகள் மற்றும் அழகிய பள்ளத்தாக்குகள், வளமான, கலாச்சார பாரம்பரிய நிலப்பரப்புகள் பார்வையாளர்களைக் கவர்கிறது. 2017 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்ட ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ அதன் அற்புதமான இயற்கை அழகு மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் புகழ்பெற்றது. இப்பகுதியின் மையத்தில் வின்டர்மியர், டெர்வென்ட்வாட்டர் மற்றும் உல்ஸ்வாட்டர் போன்ற நீர்நிலைகள் உட்பட அதன் பெயரிடப்பட்ட ஏரிகள் பலவும் உள்ளன. இங்கிலாந்தின் மிக உயரமான சிகரமான ‘ஸ்காஃபெல் பைக்’ உட்பட ஏரி மாவட்டத்தின் மலைகளின் கரடுமுரடான சிகரங்கள் ஏரிகளுக்கு மேலே கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. மலையேறுபவர்களுக்கும் நடைப்பயணம் செல்பவர்களுக்கும் இயற்கையை அனுபவிப்பதற்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது.
நீண்ட காலமாக எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறது ஏரி மாவட்டம். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் மற்றும் பீட்ரிக்ஸ் பாட்டர் உள்ளிட்ட காதல் கவிஞர்கள், இப்பகுதியின் இயற்கை அழகில் மயங்கி அதன் நிலப்பரப்புகளையும் புனைவுகளையும் தங்கள் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளில் இழைத்துள்ளனர். லேக் மாவட்டத்திற்கு வருபவர்கள், வேர்ட்ஸ்வொர்த்தின் ‘டவ் காட்டேஜ்’ முதல் பீட்ரிக்ஸ் பாட்டரின் ‘ஹில் டாப் ஃபார்ம்’ வரையிலான இலக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் கண்டு ரசிக்கலாம். மிக அழகான அமைதியான கிராமம்! சுத்தமாக இருந்தது!
‘டவ் காட்டேஜ்’ முன் நின்ற பொழுது ஈஷ்வரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்! சுவற்றின் ஒவ்வொரு கற்களையும் தொட்டு வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் நின்று தனது ஆதர்ச கவிஞரை முழுமையாக தன்னுள் உணர்ந்து கொண்டிருந்தார். அங்கு வந்திருந்த பார்வையாளர்களும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர் அமர்ந்து எழுதிய மேஜை, உண்டு உறங்கிய இடம் என்று வீட்டைச் சுற்றிக் காண்பித்து ஒளிப்படம் வாயிலாக கவிஞரின் வாழ்க்கையை விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தக்காலத்தில் கழிவறை என்பது வீட்டில் இல்லை. ஆற்றுப்பக்கம் தான் ஒதுங்கியிருக்கிறார்கள்! வீட்டைச் சுற்றிலும் அழகிய பசுந்தோட்டம்! ஆங்காங்கே மேற்கோள்கள் எழுதப்பட்ட பலகைகள்!
I wandered lonely as a cloud
That floats on high o’er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
-‘I wandered lonely as a cloud’
ஆசை தீர வீட்டைச்சுற்றி வந்தோம். அருகிலிருந்த ஏரிக்குச் சென்று படகில் பயணித்தோம். அங்கிருந்து தெரிந்த மலைகள், இயற்கைக்காட்சிகள் மனதை கொள்ளை கொள்ள, கவிஞரின் வரிகளை ஈஷ்வர் நினைவூட்ட,
And the round ocean and the living air,
And the blue sky, and in the mind of man;
A motion and a spirit, that impels
All thinking things, all objects of all thought,
And rolls through all things. Therefore am I still
A lover of the meadows and the woods,
And mountains; and of all that we behold
From this green earth; of all the mighty world
Of eye, and ear,—both what they half create,
And what perceive; well pleased to recognise
In nature and the language of the sense,
The anchor of my purest thoughts, the nurse,
The guide, the guardian of my heart, and soul
Of all my moral being.
-Tintern Abbey
அந்த அற்புத மனிதரின் இயற்கையுடனான இனிமையான வாழ்க்கை கண்முன்னே வந்து சென்றது, கவிதைகளாக! வாழ்க்கையின் மறக்க முடியாத நாள். அங்கேயே ஓரிரவு தங்கி விடலாமா என்று கூட பயணத்திட்டத்தை மாற்ற நினைத்தோம்.முடிந்தால், மீண்டும் வர வேண்டிய இடம் என்று தோன்றியதால் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் அழகிய வெல்ஷ் மலைகளைக் கடந்தவாறே பயணத்தைத் தொடர்ந்தோம். லிவர்பூலில் இரவு தங்குவதற்கு முன் ‘சாய் சுரபி’ என்ற இந்தியன் உணவகத்தில் சுவையான உணவை உண்டோம். அப்பளத்தை ‘appetizer’ ஆக நொறுக்குகிறார்கள். என்னவோ போடா மாதவா! அங்கே தான் ‘மட்டன் கராஹி’ முதன்முதலாகச் சுவைத்தேன். அருமையாக இருந்தது.
மனமும் வயிறும் நிறைய அற்புதமான நாள் இனிதே நிறைவடைந்தது. நாளைய நீண்ட பயணத்தை எண்ணி ஆவலுடன் உறங்கச் சென்றோம்.
No comments:
Post a Comment