Friday, March 29, 2024

Tell me that you love me


பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கொரியன் நாடகத்தொடர் பார்த்து முடித்தேன். துவக்கப் பாடலே கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்க, காட்சிகளும் கவிதையாக இருக்கவே எப்படியும் இந்தத் தொடர் பிடித்து விடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

பொறுமை அதிகம் இருப்பவர்களுக்குத் தான் கொரியன் தொடர்களைப் பார்க்க முடியும். நடுநடுவே நல்ல தூக்கமும் வரும் என்பதால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இத்தொடர்களைப் பார்க்க முயற்சிக்கலாம்😂 மொழி புரியாததால் சப்டைட்டிலை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் வேலைகளை முடித்து விட்டுப் பார்த்தால் சுகம்😎 

என்ன அழகானஉரையாடல்கள்! நடுநடுவே வரும் பாடல்கள்! கதாநாயகி அழகி. அவர் அணிந்து வரும் ஒவ்வொரு உடையும் கண்களை உறுத்தாமல் 'சிக்'கென்று கவருகிறது. கவிதைகளாக ரசித்து ரசித்துக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவில் இவர்கள் கரைகண்டவர்கள் போல! ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து எடுத்திருக்கிறார்கள்!

“I always thought I was the one who should make an effort to live in harmony with others. Because in this world, there are a lot more people who can hear than those who can’t. But out of all those people, someone came to me and said hi first.” – Cha Jinwoo

கதாநாயகன், பேசாமலே பேசும் கதாபாத்திரம். அனாயாச நடிப்பால் அவரும் கவருகிறார். தொடரில் வரும் வீடுகளும் அத்தனை அருமையாக! ஒரு தொடர் முழுவதிலும் எந்தவித எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் எடுக்க முடியும் என்று ஒவ்வொரு தொடரிலும் நிரூபிக்கும் இந்த கே-டிராமா இயக்குநர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ் அழுவாச்சி சீரியல் இயக்குநர்களுக்கு என்று இந்த ஞானம் பிறக்குமோ அன்று தமிழகம் கையேந்தி காசு வாங்கி ஒட்டுப் போடாது.

நடுநடுவே வரும் கிளைக்கதைகளைக் கூட அருமையாக கோர்த்திருக்கிறார்கள். கதாநாயகி, நாயகனின் குழந்தைப்பருவம், குடும்பங்கள் இணையும் காட்சிகள், முக்கோண காதல், நண்பர்கள்... சொல்லிக்கொண்டே போகலாம்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் காது கேளாத கதாநாயகன் வாழ்வில் வசந்தமாக வரும் கதாநாயகி. அவனுக்காக, அவளையும் அறியாமல் அத்தனை மெனக்கெடுகிறாள். உருகி உருகி காதலிக்கும் பொழுது காதலனின் இளவயது காதலியின் வருகை அவளுடைய காதலை ஆட்டம் காண வைக்கிறது. எத்தனை சமாதானம் செய்தாலும் செய்து கொண்டாலும் அவளால் முன்பு போல் அவனை காதலிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். காலம் அவர்களைச் சேர்க்கிறதா? சேர்கிறார்களா? இல்லை ஒருவரின் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா என்பது தான் கதை. 

கல்லூரி ஆசிரியர் என்பதால் மாணவர்கள் வாழ்க்கையையும் அழகாக கதையில் கோர்த்திருக்கிறார்கள். என்ன தான் இத்தனை மென்மையாக ஆண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் உண்மையில் பெண்களை அடக்கியாள நினைக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள் தான் கொரியன் ஆண்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபலமான 'ஜெஜூ' தீவில் தொடங்கும் சந்திப்பு சியோலில் தொடர்கிறது. தொடர் முழுவதும் பயணிக்கும் இசை மென்மையோ மென்மை.

என்ன தான் முழுமையாக காதலிக்கிறேன் என்று 'ஜின் வூ' கெஞ்சி கதறினாலும் அவனிடத்திலிருந்து 'மோயூன்' விலகும் பொழுது பார்ப்பவர்களுக்கும் கஷ்டமாகத் தான் இருக்கும். இனி இருவரும் விலகி இருப்பதே நல்லது என்று ஜின் வூ சொல்லும் காட்சியும் அழுகையுடன் பிரிந்து செல்வதும் உண்மையான காதலின் வலி பிரிவதில் தான் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடைசிக்காட்சியிலும் மீண்டும் அதே இடம்!

“Can the fact that we’re so different can be the reason? I mean, no two people in the world are completely the same.”

– Jung Moeun

'பரபர'வென்று தொடர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. கதைக்கேற்றவாறு காட்சிகளும் மெதுவாக ஆனால் பார்க்கும்படி ரசிக்க வைத்திருக்கிறார்கள். காதல் என்ற ஒரு உணர்வை எப்படியெல்லாம் அழகாகக் கூறமுடியுமா அதில் பிஹெச்டி வாங்கிவிட்டிருக்கிறார்கள் கொரியன் இயக்குநர்கள். சபாஷ்! கதாபாத்திரங்கள் கத்திப் பேசி நடித்துப் பார்த்த நமக்கு தொடர் முழுவதும் சைகை மொழியிலேயே பேசும் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும்?

தொடர் முடியும் பொழுது நானே சில சொற்களுக்கு சைகை மொழியில் பேச கற்றுக்கொண்டேன் என்றால் பாருங்கள்! 16 பாகங்கள்! இந்தப் பெண்ணைப் பெற்ற கொரியன் பெற்றோர்கள் இந்திய பெற்றோர்களைப் போலவே இருப்பதும் பேசுவதும் கூட தொடர்களைப் பார்க்கத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன்.

வீட்டில் தலைக்கு மேல் வேலைகள் இருக்கும் பொழுது தான் இந்த மாதிரி தொடர்கள் கண்ணில் பட்டுத் தொலைக்கும். 'கிடுகிடு'வென்று வேலையை முடிப்பதற்கு முன், நடுவில், பின் என்று பார்ப்பதும் சுகம் தான்😋

“Only when you take a pause and gaze there’s a voice you can hear.”
– Cha Jinwoo😍😍😍

No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...