Thursday, March 28, 2024

அடடா மழைடா ஐஸ் மழைடா!


எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்பிவந்தோம். பளீரென்று நீல நிற வானம் வரவேற்க, பனிக்கால ஜாக்கெட் கூட தேவையில்லாமல் இருந்தது நாங்கள் நியூயார்க்கில் வந்திறங்கிய பொழுது. பரவாயில்லையே! இனி மழைக்காலம் தான் என்று சந்தோசப்பட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் குளிர ஆரம்பித்து அதற்கு மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தில், என்னடா, மழை! அதுவும்... 'அடடா மழைடா ஐஸ் மழைடா'! என்று ஆச்சரியமாகி விட்டது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 'ஊமைக்கோட்டான்' போல இருந்து விட்டு மழைக்காலம் தொடங்கிய பிறகு இப்படி வந்து கொட்டிக் கொண்டிருக்கிறதே என்று கவலையாகிவிட்டது எனக்கு.

'சொட்சொட்சொட்சொட்' என்று அன்று முழுவதும் ஐஸ் தரையில் விழ, மரங்கள், செடி, கொடிகள் எல்லாம் முழுவதுமாக ஐஸால் மூடப்பட்டு இரவு பனிமழையும் சேர்ந்து கொண்டு, தட்பவெப்பம் மைனஸ் நோக்கிச் செல்ல, நல்லவேளை! காலையில் அதிரடியாக எழுந்து வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நினைவே ஆசுவாசமாக இருந்தது.

மறுநாள் காலையில் நீலவானம் பஞ்சுப்பொதி மேகங்களுடன் வலம் வர, நேற்று பெய்த மழைக்கும் இன்றிருக்கும் வானத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போல இயற்கை தான் எத்தனை மகத்தானது! மரங்களில் படிந்த ஐஸ்மழை இப்பொழுது 'குச்சி குச்சி ராக்கம்மா'வாக கிறிஸ்துமஸ் அலங்கார வெள்ளை விளக்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. பல வருடங்களுக்குப் பிறகு இத்தனை அழகான மழையும் பனியும் செய்த மாயம்!

"வீட்டில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கக் கூடாது. வழக்கமாகச் செல்லும் பூங்காவிற்குச் சென்று வருவோம்" என்று ஈஷ்வர் அழைக்க, கிளம்பினால்...

வழியெங்கும் வெண்ணிற ஆடை உடுத்தி கண்களைக் கூசச் செய்தாள் இயற்கை அன்னை! பூங்காவில் பத்து வண்டிகளாவது இருந்திருக்கும்! குழந்தைகளை அழைத்துக் கொண்டு குளத்தில் சுற்றும் வாத்துக்களைப்

பார்க்க வந்திருந்த குடும்பம், பெண் நண்பருடன் வந்திருந்தவர், மனைவியுடன் என்று சிலரை கடந்து சென்றோம். 'கனடா கீஸ்' என்றழைக்கப்படும் வாத்துகளும், 'மல்லார்ட்' வாத்துகளும் கத்திக்கொண்டு குளத்தை வலம் வந்து கொண்டிருந்தன.


 

முடிந்த அளவு படங்களை 'கிளிக்' செய்து கொண்டோம். ஓரிரு நாட்களில் கரைந்து விடும் அழகு தான். ஆனால் ஊரே இயற்கை சாண்ட்லியர் விளக்கில் அல்லவா ஜொலித்துக் கொண்டிருந்தது!




காணொளிக்கு இங்கே சொடுக்கவும் 👇

  அடடா மழைடா ஐஸ் மழைடா!


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...