Tuesday, March 19, 2024

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம். ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

லண்டனில் ஆரம்பித்த எங்களது பயணம் இங்கிலாந்தைக் கடந்து ஸ்காட்லாந்தின் கிழக்குப் பகுதியை வலம் வந்து ஐந்தாவது நாளில் வடக்கே ‘இன்வெர்னஸ்’லிருந்து தெற்கு நோக்கி ‘கிளாஸ்கோ’ நகருக்குச் செல்ல, ஆவலுடன் துவங்கியது அன்றைய விடியல். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் விடுமுறையைக் கொண்டாட வந்திருந்த பலரும் இந்தியர்களாகத் தெரிந்தார்கள். சீனர்களும் இந்தியர்களும் தான் அதிகளவில் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது போல எனக்குத் தான் தோன்றுகிறதோ?அமெரிக்காவைப் போல அதிகமான சீனர்களை இங்குக் காணவில்லை. எடின்புரஃஹ் நகரில் தாய்லாந்து மக்களின் உணவகங்கள் தான் அதிகமாகத் தென்பட்டது. இப்படி பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டே அருமையான காலை உணவை உண்டு முடித்தோம். அங்கிருந்து அரைமணி நேரத்தொலைவில் இருக்கும் ‘லாக் நெஸ்’ (‘Loch Ness’)க்குப் புறப்பட்டோம். அங்கு தான் ‘Loch Monster’ மறைந்திருக்கிறது என்ற மர்மம் உலவுகிறது!

செல்லும் வழியெங்கும் துளிர் விடும் மரங்கள் அணிவகுத்து நிற்க, போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம் அழகு. உள்ளூர் மக்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள்! ஏற்ற இறக்கத்துடன் செல்லும் மலைவழிப்பயணத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் பலரும் 50 வயதிற்கு மேல் இருப்பார்கள்! உடலை நன்றாகப் பேணியிருந்தால் மட்டுமே இத்தகைய கடினமான பயணங்களை எளிதாக அவர்களால் செய்ய முடியும். ஏக்கப் பெருமூச்சுடன் அவர்களைக் கடந்தோம்! சிறிது நேரத்தில் நாங்கள் ஆவலுடன் காத்திருந்த ‘லாக் நெஸ்’ வந்தடைந்தோம். ‘loch’ என்பதை ஸ்காட்டிஷ் மொழியில் உச்சரிப்பதைக் கேட்கப் பயிற்சி செய்ய வேண்டும்😕

இருபுறமும் மலைகள் சூழ்ந்திருக்க, இன்வெர்னஸ்ன் தென்மேற்கே 37 கிலோமீட்டருக்கு விரிந்திருக்கும் அழகான நன்னீர் ஏரி ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸின் வசீகரமான ஏரியும் கூட. ‘நெஸ்’ ஆற்றின் பெயரைச் சுமந்த ‘Loch’ பார்வையாளர்களைக் கவருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வண்டியை நிறுத்தி சிறு மலை மீதிருந்து அழகான, அமைதியான ஏரியைப் பார்க்க கொள்ளை அழகு! எவ்வளவு நேரம் அங்கு அமர்ந்திருந்தோம் என்று தெரியவில்லை. அங்குச் சுற்றிக்கொண்டிருந்த பறவைகளைப் படம் பிடித்துக் கொண்டு மனமேயில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். எங்கும் இயற்கை. எதிலும் இயற்கை என்றிருந்தால் மிகவும் புகழ் பெற்ற ஸ்காட்டிஷ் கவிஞர் ‘ராபர்ட் பர்ன்ஸ்’ இயற்கையைப் பற்றி எழுதாமல் இருந்திருப்பாரா? ஆங்கிலக்கவிஞர்கள் அதுவும் ஈஷ்வருக்குப் பிடித்தவர்கள் என்றால் நேரம் செல்வது தெரியாமல் அவர்களுடைய கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்வது எங்கள் வாடிக்கை. ஈஷ்வர் கல்லூரி விரிவுரையாளராகி விடுவார். நான் மாணவியாகி விடுவேன்😎

அங்கிருந்து சிறிது தொலைவில் ‘The South Loch Ness Trail’ என்ற பிரபலமான இடத்தை வந்தடைந்தோம். வழியெங்கும் இயற்கைக்காட்சிகள் கண்களை நிறைக்க, காபிக்கடையைப் பார்த்ததும் சிறிது இளைப்பாறல். எதிரே மலைகள் சூழ ‘லாக் நெஸ்’. சிறிய காபிக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்கள் சிநேகப்புன்னகையுடன் பம்பரமாய்ச் சுழன்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சைக்கிளில் வந்திருந்த மகளிர் கூட்டம் சிரித்துப் பேசிக்கொண்டே சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்களுக்குப் பிடித்த உணவுகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு ரம்மியமான சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தோம். உள்ளூர் மக்கள் தங்களுடைய சைக்கிள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அமெரிக்காவில் ‘Appalachian Trail’ என்ற 2,190 மைல்களுக்கு நீண்ட மலைப்பயணம் வடகிழக்கே ‘மெயின்’ மாநிலத்தில் ஆரம்பித்து 14 மாநிலங்கள் வழியாக தெற்கே ‘ஜார்ஜியா’வில் முடிவடையும். என் நண்பர்கள் பலரும் அவர்களுடைய உறவினர்களும் வருடத்தில் சில நாட்கள் சில பகுதிகளுக்குச் சென்று மலையேறி வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் எப்படியாவது இந்த நீண்ட கடினமான மலைப்பயணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதைப் போலவே இங்குள்ள உள்ளூர் மக்களும் ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ல் சைக்கிளில் பயணிக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். சாகச மனிதர்கள்!

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த குழு ஒன்று லண்டனிலிருந்து வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்திருப்பதாகக் கூறினார்கள். இதுவும் நல்ல யோசனை தான். வேன் நிறைய மக்கள். செலவும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் தனியாக வண்டி ஒட்டி வருவதில் கிடைக்கும் சில பல வசதிகள் கூட்டமாக வேனில் வரும் பொழுது கிடைக்காது. அவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே ‘Fall of Foyers’ என்ற அருவியைக் காண விரைந்தோம். அவர்கள் பார்க்கத்தான் வயதானவர்களாகத் தெரிந்தார்கள். வேகமாக நடக்க ஆரம்பிக்க, நான் மூச்சிரைக்க, ஐயோடா என்றிருந்தது. சுற்றுலா நிறுவனத்தினருடன் வந்தால் இப்படித்தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப வேண்டும் என்று கெடு வைப்பார்கள். நல்ல வேளை! எனக்கு அப்படியான நெருக்கடி ஏதுமில்லை என்று நிம்மதியாக இருந்தது.

140அடி ஆழ அருவியைக் காண கீழிறங்க, உயர்ந்த மரங்களூடே பயணம். வேர்களும் கற்களும் பரவியிருந்த இடத்தில் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. வேகமாக இறங்கும் பொழுதே ஏறும் பொழுது கடினமாக இருக்கப் போகிறது என்ற கவலை. அருவி தரும் உற்சாகம் மனதையும் தொற்றிக்கொள்ள விரைந்து சென்று பார்த்தால், தண்ணீர் அதிகமில்லாத அருவி கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது. அருகில் கூட செல்ல முடியாது. இதற்கா இவ்வளவு மெனக்கெட்டோம்😌 செங்குத்தான பாதையில் மூச்சிரைக்க மேலேறி வந்த பிறகு தான் அப்பாடா! என்றிருந்தது. அங்கிருந்து கிளம்பி வழியில் பல இடங்களில் வண்டியை நிறுத்தி நாங்கள் இருவர் மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். மனிதர்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் அமைதி தவழ்கிறது.
ஸ்காட்லாந்தின் வடக்கில் மட்டுமல்ல மேற்குப்பகுதியிலும் தொடருகிறது ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’. இருபுறமும் மலைகள். நடுவே சீரான சாலையில் வண்டியில் செல்வதே அத்தனை சுகம்! ஆங்காங்கே பயணிகள் நின்று கொண்டு காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சேர்ந்து கொண்டோம். எதிரில் தெரிந்த மலையில் சிறிது தூரம் ஏறிச்செல்ல, பானோரோமிக் காட்சியின் அழகு, சொல்ல வார்த்தைகளே இல்லை. ஸ்காட்லாந்தின் மற்றுமொரு அழகு ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ என்பதை அந்தச் சாலைகளில் பயணித்த ஒவ்வொரு நொடியும் உணர்ந்தோம்.

மலைகள், நீர்நிலைகள் சூழ்ந்த இடங்கள் அமெரிக்காவின் ‘மொண்டானா’ மாநிலத்தில் நாங்கள் பயணித்த இடங்களை நினைவூட்டியது. நியூயார்க்கின் ‘Lake Placid’ செல்லும் வழியைப் போலவே சாலை நெடுக ஒருபுறம் மலைகள் அரணாக, மறுபுறம் ஏரியும் மலைகளும் துணைக்கு வந்தது பேரழகு. கருமேகங்களும் மூடுபனியும் இயற்கையை இன்னும் செழுமையாக்க, பாவம் ஈஷ்வர்! முழுமையாக வேடிக்கைப் பார்க்க முடியாமல் ஓட்டுவதில் கவனமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அவருக்கும் சேர்த்து நானே லைவ் கமெண்ட்ரி சொல்லிக் கொண்டு வந்தேன்😎 வழியில் செம்மறியாடுகளும் மாடுகளும் ‘ஹாயாக’ மேய்ந்து கொண்டிருந்த பண்ணைகள். நின்று படங்களை எடுத்துக் கொண்டோம். ‘கிளாஸ்கோ’ செல்லும் பயணம் இத்தனை சுகமான பயணமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

அடுத்து நாங்கள் நிறுத்திய இடம் ‘World War II Commando Memorial’. இரண்டாம் உலகப்போரின் பொழுது அந்தப் பகுதிகளில் தங்கி பயிற்சி அளித்த நேச நாட்டுப் படைவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அருகே போரில் இறந்த வீரர்களின் நினைவிடமும் இருந்தது. அங்கிருந்து பிரிட்டனின் உயரமான மலையான ‘Ben Nevis’ காட்சி தருகிறது. உச்சியில் பனிக்காலத்தின் அடையாளமாகச் சிறிது பனி. அந்த மலையில் ஏற குறைந்தது ஒன்பது மணிநேரங்கள் ஆகலாம். வேண்டாம். தூரத்திலிருந்து பார்க்க அழகாக இருக்கிறது. என்ன? ஒருகாலத்தில் எரிமலையாக இருந்த மலை. உச்சியில் அதன் அடையாளங்களைக் காண மக்கள் செல்வார்கள் என்று அங்கிருந்த பயணிகள் கூறினார்கள்.
இங்கிலாந்து இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நடந்த உலகப்போரில் எண்ணற்ற இந்திய வீரர்கள் பங்கேற்று உயிரை இழந்துள்ளனர். அவர்களைப் பற்றின தகவல்களோ நினைவுச்சின்னங்களோ நம் நாட்டில் இல்லாததை நினைத்து வருத்தமாக இருந்தது. நம்மை ஆண்டவர்களுக்கு நம் உயிரின் மதிப்பு அவ்வளவுதான்! சசிதரூரின் புத்தகம் நினைவிற்கு வந்தது. மீண்டும் விட்ட இடத்திலிருந்து வாசிக்க வேண்டும். ம்ம்ம்ம்ம் ….

நல்ல பசி நேரம். ‘Glencoe’ ஊரை வந்தடைந்திருந்தோம். ஸ்காட்லாந்து மக்களின் புரட்சிப்படை இங்கிலாந்துடன் மோதியதில் பலரும் இங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஊர் என்று அறிந்து கொண்டோம். வரலாறு தான் எத்தனை கொடியது! போர்கள் எத்தனை எத்தனை உயிர்களைப் பலிகொண்டுள்ளது! இந்தியாவில் மட்டும் முறையாக ஆவணப்படுத்தியிருந்தால் அத்தனை அத்தனை மனதை உருக்கும் கதைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்திருக்கும்! இப்படி வரலாறு என்னவென்றே அறியாத தலைமுறை. எது உண்மை எது உருட்டு என்று குழம்பிப் போயிருக்காது!ஹ்ம்ம்ம்….

நிறையவும் யோசித்ததில் பசிக்க ஆரம்பித்து விட்டது. அருகிலிருந்த உணவகத்தில் சென்று ‘சிக்கன் சாண்ட்விச்’ சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். உணவகத்தின் பெண் உரிமையாளர் எங்களைப் பற்றி விசாரித்து விட்டு அவரே பரிமாறினார். அழகாக அலங்கரிக்கப்பட்ட மேஜைகள். இனி தான் மதிய உணவிற்கு கூட்டம் வரும் போலிருக்கிறது. மணி 12 அடிப்பதற்குள் நாங்கள் சென்று விட்டிருந்தோம். வெளியே சுற்றிப் பார்க்கையில் ‘ஸ்பைஸ் தந்தூரி’ என்று ஒரு உணவகம். அட! இந்த ஊரிலும் ஒரு இந்திய உணவகமா! ஆச்சரியத்துடன் கடந்தோம்.
‘பச்சைப்பசேல்’ மலைகள் தொடர்ந்து வர , ‘க்ளென்க்கோ’ ஊரின் இயற்கைக்காட்சிகளைக் கண்களிலும் காமெராவிலும் படமெடுத்துக் கொண்டே வர, ஆறுகளில் உல்லாசப்படகுகளில் சவாரி செய்து கொண்டிருந்தார்கள் உள்ளூர் மக்கள். பைக்குகளில் செல்பவர்களைக் கண்டவுடன் ஈஷ்வர் கொஞ்சம் பொறாமையுடன் ‘இங்கு பைக்கில் தான் செல்ல வேண்டும்’ என்று ஏக்கப் பெருமூச்சு விட, ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்ன் பிரபலமான ‘தி த்ரீ சிஸ்டர்ஸ்’ மலைகள் இருக்குமிடமும் வந்துசேர்ந்தது. பரந்த இடம். வண்டிகள் நிறுத்த அவ்வளவாக வசதி இல்லை. நாங்களும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டுச் சுற்றிப்பார்த்தோம். ‘breathtaking view’ என்பார்களே அப்படி இருந்தது அந்த மூன்று மலைகளும் அதன் அருகே இருந்த நிலப்பரப்பும்! சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். அங்கு அந்த மலைகளைப் பற்றின தகவல்களை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

சாலையோரம் சலசலக்கும் ஓடையில் இளைப்பாறிக்கொண்டிருந்த பைக்கர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஈஷ்வர். வண்டி ஒட்டி வந்த களைப்பு தீர, சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். ‘ஜூம் ஜூம் ஜூம்’என்று பைக்கர்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்றது அழகு! மீண்டும் தொடர்ந்த எங்கள் பயணத்தில் பார்ப்பதற்கு அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரு இடம் தெரிந்தால் போதும். வண்டியை நிறுத்தி இறங்கி சிறிது தூரம் நடந்து என்று இறுதியில் ‘Loch Lomond’ என்ற அழகிய நன்னீர் ஏரியை அடைந்தோம். ஒரு சில வண்டிகளே அங்கு இருந்தது.

அந்த அமைதியில் 'ஜென்' நிலைக்குச் சென்று விட்டார் ஈஷ்வர். நான் மெதுவாக கரையோரம் நடந்தபடி ஏரியைச் சுற்றிக் கொண்டிருந்தேன். நீலவானின் பிரதிபலிப்பில் ஏரி மின்னிக் கொண்டிருந்தது. எதிரே இளைஞ கோட்டை ஒன்றும் தெரிந்தது. பயணி செல்லும் படகுகள் மிதந்தபடி நின்று கொண்டிருந்தது அழகு. இரண்டு ஏரிகள் அவ்வழியே செல்கிறது. உள்ளூர் மக்கள் வந்து செல்லும் அழகிய இடம் என்று அறிந்து கொண்டோம். இப்படி நாடு முழுவதும் ஏரிகள், குளங்கள், ஆறுகள், சுற்றிலும் கடல் என்று இயற்கையோடு ஸ்காட்லாந்து மனதை கொள்ளை கொள்கிறது. இங்கிருந்து சில மணிநேர பயணத்தில் தான் 'கிளாஸ்கோ' நகரம். 



நாங்கள் இரவு தங்க முன்பதிவு செய்திருந்த விடுதி என்று போன இடத்தில், “நீங்கள் டௌன்டவுனில் இருக்கும் விடுதியில் பதிவு செய்திருக்கிறீர்கள். அங்கு தான் செல்ல வேண்டும்” என்று கூற, நல்லவேளையாக அங்கே வண்டி நிறுத்தும் வசதிகள் இருக்கிறது என்று தெரிந்ததும் பெரும் நிம்மதி.

அறைக்குச் சென்றவுடன் பெட்டிகளைப் போட்டுவிட்டு அந்தி சாய்வதற்குள் ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினோம். பிரம்மாண்ட கல் கட்டடங்கள்! பழமையான தேவாலயங்கள். மற்ற ஸ்காட்லாந்து ஊர்களைப் போலன்றி மிகப்பெரிய நவநாகரீக நகரமாக இருந்தது. நாங்கள் மட்டுமே வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல துண்டாகத் தெரிந்தோம். மக்கள் சிநேகமாக இருந்தார்கள். வழி கேட்டால் பொறுமையாகப் பதிலளித்தார்கள். பயமில்லாமல் நடமாடலாம் என்று கூறினாலும் மதுரையின் வளர்ப்பும் அமெரிக்காவின் இருப்பும் இருட்டுவதற்குள் அறைக்குத் திரும்பிட வேண்டுமென்று ஆவல் கொண்டது மனம். வரலாற்றைப் பறைசாற்றும் அருங்காட்சியகங்கள் நிறைந்த ஊர். நீண்ட நாளின் களைப்பு ஆட்கொள்ள, விடியலில் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து தூங்கச் சென்றோம்.

இனி ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ‘ராபர்ட் பர்ன்ஸ்’ எழுதிய கவிதை தான் நினைவிற்கு வரும்.

My Heart’s In The Highlands

Robert Burns

Farewell to the Highlands, farewell to the North,
The birth-place of Valour, the country of Worth;
Wherever I wander, wherever I rove,
The hills of the Highlands for ever I love.

My heart’s in the Highlands, my heart is not here;
My heart’s in the Highlands a-chasing the deer;
A-chasing the wild-deer, and following the roe,
My heart’s in the Highlands wherever I go.

Farewell to the mountains high covered with snow;
Farewell to the straths and green valleys below;
Farewell to the forests and wild-hanging woods;
Farewell to the torrents and loud-pouring floods.

My heart’s in the Highlands, my heart is not here;
My heart’s in the Highlands a-chasing the deer;
A-chasing the wild-deer, and following the roe,
My heart’s in the Highlands wherever I go.


No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...