சோலில் (Seoul) இருந்த முதல் இரு நாட்களுமே இனிமையான அனுபவத்தைக் கொடுத்திருந்தாலும் மூன்றாவது நாளன்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அதிபர் மீதான தீர்ப்பிற்காக நாங்களும் காத்திருந்தோம். சப்வே-க்களை மாலை வரை மூடி விட்டிருந்தார்கள். மெதுவாக வெளியில் கிளம்பலாம் என்று காலை உணவை முடித்து விட்டு பத்துமணிவாக்கில் நடையை ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த தெருப்பகுதியில் கடைகள் மூடி ‘வெறிச்சென்று’ இருந்தது. மேகமூட்டம் வேறு.

“எனக்கென்ன மனக்கவலை” என்று சுற்றுலாவினர் கூட்டம் கைகளில் குடைகளோடு கிளம்பிவிட்டிருந்தார்கள். உணவுக்கடைகள் சில திறந்து வியாபாரமும் கனஜோராக நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள இரு கட்சியினரும் கொடிகளுடன் இறங்கிக் கொண்டிருக்க, கலவரங்களை எதிர்பார்த்து காவல்படையினர் கூட்டம் வேறு. காட்சிகள் எல்லாம் மிரட்டலாகத்தான் இருந்தது! அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து என்ன தான் நடக்கிறது? பார்த்து விட்டு வரலாம் என்று கவனமாக மூன்று தெருக்களைக் கடந்தால் பெரிய மேடையில் கட்சித்தலைவர்கள் போலிருந்தவர்கள் வீராவேசமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தென்கொரிய கொடியுடன் அமெரிக்க கொடியும் இருக்கவே அவர்கள் எந்தக் கட்சியினர் என்று புரிந்து விட்டது.
தெருமுனை கட்சிக்கூட்டம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டிருந்தாலும் நீதிமன்றத்திற்கு அருகில் இருந்ததால் தீர்ப்பு வந்தவுடன் எந்நேரமும் கலவரம் நடக்கலாம் போன்றதொரு பதட்டம் நிலவியதை உணர முடிந்தது. எதற்கு வம்பு என்று உடனே எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தோம். வானளாவி நிற்கும் நகரின் அழகிய கட்டடங்களை வேடிக்கை பார்த்தபடி அமைதியான தெருக்களைக் கடந்து ‘யோங்டோங்’ பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகள், கே-ஃபேஷன் பொட்டிக்குகள், யூனிக்லோ, ஜாரா, எச் & எம்,கே-பியூட்டி & ஸ்கின்கேர், கே-பாப் பொருட்கள், பாரம்பரிய சிற்றுண்டிகள், பாத்திரங்கள் விற்கும் பிரபலமான கடைகள் நிரம்பிய தெருக்கள் என அது ஒரு மாய உலகமாக இருக்கிறது! ஷாப்பிங் செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற பகுதி அது. அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. நகரின் மறுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் கட்சிக்கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாத புது உலகமாக ‘துறுதுறு’ வென்று இருந்தது.
அந்நாட்டுப் பெண்கள் சருமத்தைப் பராமரிக்க நிறைய மெனக்கெடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் விதவிதமான க்ரீம்கள்(தூங்குவதற்கு முன், பின், காலை, மாலை, வெளியில் செல்லும் பொழுது, இளம்பெண்களுக்கு, வயதான பெண்களுக்கு என்று டிசைன் டிசைனாக) விற்கும் கடைகள், முகத்திருத்தம் செய்யும் கிளினிக்குகள் என்று வரிசையாக இருந்தன. யாருக்குத்தான் தன்னை அழகுபடுத்திக்கொள்ள ஆசை இருக்காது? ஆனால், கொரியர்களுக்கு அதிகம் போல! சுற்றுலாவினரைக் குறிவைத்து அழைக்கிறார்கள். வெளிநாட்டினருக்குச் சிறப்பு சலுகைகளும் இருக்கின்றன. கடைகளில் கூட பெண்கள் தான் அதிகம் வேலை செய்கிறார்கள். எப்படித்தான் இந்தப் பெண்களின் முகங்கள் இப்படி ‘பளிச்சென்று’ சுருக்கங்களே இல்லாமல் ‘மொழுமொழுவென்று’ இருக்கிறதோ! ஏங்க வைத்து எப்படியோ பைகள் நிறைய வாங்க வைத்துவிடுகிறார்கள் அம்மணிகள்
அதுபோலவே, நிறைய வகை தின்பண்டங்களை வண்ண வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். பெரிய கடைகளை விரித்து சகட்டுமேனிக்கு விற்பதை வாங்குவதும் சுற்றுலாவினரே! அம்மாடி!எதை வாங்குவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தோம். இதற்காகவே இரண்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும் போல!

அந்தத் தெருவைக் கடந்து மூன்று மாடிக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றாள் என் செல்லம். கொரியன் தொடர்களில் எனக்குப் பிடித்தது பெண்கள் அணியும் காதணிகள். சிறிதாக இருந்தாலும் அத்தனை அழகாக இருக்கும். பார்க்கும் பொழுதெல்லாம் இதற்காகவே கொரியா செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அவளும் அதை நினைவில் வைத்திருந்து அழைத்துச் சென்ற இடம் தான் ‘NYUNYU’. மலிவுவிலை ஃபேஷன் அணிகலன்கள் விற்கும் கடை! அவ்வளவு தான் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு எதை வாங்குவது எதை விடுப்பது என்று தெரியாமல் பிடித்ததை கூடைகளில் போட்டுக் கொண்டே வந்தோம். ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றியவுடன் அமர்ந்து என்னென்ன வாங்கியிருக்கிறோம் என்று இருவரும் பார்த்துக் கொண்ட பொழுது, “அம்மா, எனக்கு இது பிடிச்சிருக்கு என்று என் கூடையில் இருந்த சில காதணிகளை அவள் கூடையில் மாற்றிக்கொண்டாள் இருவரும் ஒரே மாதிரியான காதணிகளை நிறைய வாங்கியிருந்தோம்
அடுத்த தளத்தில் கைப்பைகள், க்ளிப்புகள், தொப்பிகள், கழுத்து செயின்கள், ஆடைகள் என்று எனக்கு அத்தனை ஆர்வமில்லாத பகுதி. அதற்கும் மேல் தளத்தில் தான் பில் போடும் கவுண்டர் இருந்தது. காத்திருந்த நீண்ட வரிசையில் நாங்களும் ஐக்கியமானோம்.

அங்கிருந்து நடந்து நடந்து பல தெருக்களில் இருந்த கடைகளைப் பார்ப்பதும் உள்ளே நுழைவதும் வாங்குவதுமாய் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரங்கள் போனதே தெரியவில்லை. கால்கள் கெஞ்ச, பசிக்க வேறு ஆரம்பித்து விட்டது. என் முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டவளாக, அருகில் இருந்த மசாஜ் நிலையத்திற்குச் சென்று ஒரு மணிநேரத்திற்கு நன்றாகக் கால் மசாஜ் செய்து கொண்டோம். சுகமாக இருந்தது. விட்டால் அங்கேயே தூங்கியிருப்பேன். டிப்ஸ் கலாச்சாரம் இல்லை. ஆனால் கொடுத்தால் வாங்கிக் கொண்டு சிரித்துக்கொண்டே தலைகுனிந்து “கம்சாமிதா” சொல்கிறார்கள்.
கடைகளில் ஈரக் குடைகளை உலர்த்த, கொண்டு செல்லும் தேநீர்க் கப்புகளை வைக்க என்று தனித்தனி இடங்கள் இருக்கிறது. நல்ல ஐடியா! அமெரிக்காவில் கூட இப்படியெல்லாம் கிடையாது.
சியோலின் நவீன வாழ்க்கை முறை, ஷாப்பிங் மோகம், அழகு கலாச்சாரம், உணவு என அனைத்தும் ஒன்றிணைந்த இடம் மியோங்டாங். மாலையில் உணவுச் சந்தையாக அவதாரமெடுக்கிறது. ஆக, கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. இது ஒரு சந்தைத் தெரு மட்டுமல்ல, கொரியாவிற்குச் செல்லும் ஒவ்வொரு பயணியும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய இடமும் கூட!
அங்கிருந்து எனக்குப் பிடித்த ‘Bibimbap’ உணவைச் சுவைக்க மிஷெலின் ஸ்டார் வாங்கிய ‘Mokmyeoksanbang’ உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள் மகளரசி. மணி நான்கு என்பதால் கூட்டம் இல்லை. உள்ளே நுழையுமுன் கியோஸ்க்கில் ஆர்டர் செய்து விட்டால் போதும். உள்ளே சென்றதும் அமர வைத்து விட்டு டீ எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார் சர்வர்

முதன்முதலில் Bibimbap சாப்பிடப் போகிறேன். ஏழு வகையான சமைத்த கீரை, காளான்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் சோறு. எல்லாவற்றையும் கலந்து gochujang மிளகாய் சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால் ‘ஜிவ்வ்வ்’வென்று இருக்கிறது. எளிமையான சுவையான உணவு. இறைச்சி வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். பாதி வெந்த முட்டை வேண்டுமென்றால் அதுவும் சேர்த்துச் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் யம்மி யம்மி யம்மி உணவை அழகாக சிறுசிறு கிண்ணங்களில் வைத்துப் பரிமாறி ஒரு கலையாக கொண்டாடி உண்பது எத்தனை அழகு! இப்படி உட்கார வைத்துச் சமைத்துப் போட்டால் சைஸ் 0 ஆகிவிடலாம். எனக்கில்ல எனக்கில்ல…
‘Bon Appetit,YourMajesty’, ‘Tastefully Yours’ தொடர்களில் கூட இந்த உணவைக் காண்பித்தார்கள்
ஷாப்பிங் செய்தாயிற்று. வயிறும் நிறைந்து விட்டது. இனி விடுதிக்குத் திரும்பி பைகளை வைத்து விட்டு ‘Songpa District’ல் மக்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்று பார்க்க ஆசை. சியோலின் தென்பகுதி இது. விடுதியிலிருந்து பொடிநடையாக சப்வே சென்று அங்கிருந்து ஒரு மணி நேர ரயில் பயணம். அப்பொழுதே மாலை 5 ஆகிவிட்டிருந்தது. களைத்த முகத்துடன் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் கூட்டம். மனம் மீண்டும் நியூயார்க் நகர சப்வே காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்தது.
ஆண்கள் அனைவருக்கும் தலைநிறைய முடி. இங்கு தலைக்கு மை அடிக்காமல் சால்ட் அன்ட் பெப்பர் ‘தல’ ரசிகர்கள் அதிகம் போல! பற்களுக்கு கிளிப் மாட்டும் அமெரிக்க கலாச்சாரம் கூட அதிகம் காணவில்லை. ஒருவகையில் இயற்கையாகவே தெரிந்தார்கள். பெண்கள் மட்டும் தோல் மினுமினுக்க கிரீம்கள் போட்டிருப்பது தெரிந்தது. வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் காலியாக இருந்தாலும் யாரும் அமரவில்லை.

வடக்கு தெற்காக சியோலில் ‘ஹான்’ ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அதைச்சுற்றி குடியிருப்புகள், பூங்காக்கள் என்று சுற்றிப்பார்க்க நல்ல இடமாகத் தெரிந்தது. பல கொரியன் தொடர்களிலும் பார்த்த ஞாபகம். வழியில் இரண்டு பல்கலைக்கழக நிறுத்தங்களில் காளையர், கன்னியர் கூட்டம்! அமெரிக்கன் பிராண்ட் ஷூக்கள், நார்த்ஃபேஸ் ஜாக்கெட்கள், ஐபோன் பிரபலமாக இருக்கிறது. இங்கு நாங்கள் கொரியன் தொடர்களை ஆங்கில சப்டைட்டிலோடு பார்ப்பது போல, அமெரிக்கன் தொடர்களை சிலர் கொரியன் சப்டைட்டிலில் பார்த்துக் கொண்டு அவரவர் உலகத்தில் பயணிகள். அதிக உயரம் இல்லாத மக்கள். கலர்கலராக தலைக்கு வண்ணம் அடிக்காத, இடுப்புக்கு கீழே பேன்ட் சரிந்து போகாத, உரக்க பேசி, ஆடிக்கொண்டிராமல் அமைதியோ அமைதியாக பயணிக்கிறார்கள். கே-பாப் பாதிப்பை சில ரசிகர்களிடம் காண முடிந்தது. என்ன? இறுக்கமாக உடை அணிவது அங்கு நாகரிகம் இல்லை போல. லூசாக அவர்கள் அளவுக்கு மீறிய சைசில் அணிந்திருந்தாலும் கண்ணியமாக மிக நேர்த்தியாக உடையணிந்த பெண்களைக் காண முடிந்தது.
நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் மொத்த மக்களும் அங்கே இறங்குவது போல பெருங்கூட்டம் இறங்கியது. சாலை முழுவதும் மக்கள் கூட்டம். உயரமான வெள்ளை நிற அடுக்குமாடி குடியிருப்புகள்! அங்குமிங்குமாய் குழந்தைகளுடன் சில குடும்பங்கள். இப்பொழுதுதான் குடும்பங்களைக் காண முடிந்தது!

இங்குதான் பிரபலமான ‘Seokchon Lake’, ‘Lotte World Tower’, புராதன இடங்களும் உள்ளன. முதலில் ஏரியைச் சுற்றி இருக்கும் ‘cherry blossoms’ பார்த்து விட்டு வரலாம் என்று அங்கே கிளம்பினோம். சில வாரங்கள் மட்டுமே இந்த மலர்கள் பூத்துக்குலுங்கும் அழகைக் காண முடியும் என்பதால் வார நாள் என்றாலும் நல்ல கூட்டம். பாதுகாப்பிற்கு காவலர்களும் அங்கிருந்தனர். கைகளைக் கோர்த்துக் கொண்டு இளமையான கூட்டம்! வெள்ளை, பிங்க் செர்ரி மரங்களுக்கு கீழே நின்று கொண்டு கன்னத்தை கைகளால் தாங்கியபடி, அன்பைச் சொல்லும் விதமாக இருவிரல்களை நீட்டிக் கொண்டு படங்கள் எடுக்கும் பெருங்கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி ரம்மியமான ஏரியைச் சுற்றி வந்தோம்.
கலைநிகழ்ச்சிகளும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள். இசைக்கு மொழியேது? தொடர்களின் பின்னணியில் வரும் இசையைக் கேட்பது போல இனிமையாக இருந்தது. சிறிது நேரம் அதையும் ரசித்து விட்டு வெளியேறினோம். மெல்ல இருள் கவிழ, விளக்குகள் மின்ன வானளாவிய ‘Lotte World Tower’கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டே மீண்டும் ரயிலேறி ‘Hongdae’ பகுதிக்கு வந்தால் தள்ளுவண்டிகளில் மணக்கமணக்க உணவுகள். இப்பொழுது தான் கொரியன் உணவுகள் சாப்பிட தெரிந்து விட்டதே! நொறுக்கிக் கொண்டே தெரு வலம் சென்றோம்.

இங்கும் வாங்குவதற்கு ஏகப்பட்ட தரமான ஆடைகள், பொருட்கள் இருக்கிறது. நல்ல கூட்டம். ‘ஜிகுஜிகு’வென ஜொலிக்கும் கட்டிடங்கள். சாலைகளில் போக்குவரத்து என்று ‘ஜேஜே’ என்றிருக்கிறது. சில மணிநேரங்கள் போனதே தெரியவில்லை. ரயிலைப் பிடிக்க நுழைந்தால் அத்தனை உயரமான 60 டிகிரி கோணத்தில் subway escalator பார்த்ததே இல்லை!
நாங்கள் தங்கியிருந்த விடுதிஅருகே இரவு உணவுக்கடைகளில் ஜோராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. எங்களுக்குப் பிடித்த ஷ்ரிம்ப் டம்ப்ளிங்ஸ் வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றோம். அன்றைய இனிமையான நாளை அசைபோட்டபடி வாங்கிய பொருட்களை பெட்டிகளில் எடுத்து வைத்தாயிற்று. நாளை ஓரிரு பகுதிகளுக்குச் சென்று விட்டால் சியோல் பயணம் முடிந்து விடும். என்ன? மழை நாள். சரி! சியோல் தெருக்களை மழையில் பார்த்தமாதிரியும் ஆச்சு என்று மறுநாள் எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு 10 மணிக்கு எங்கள் பயணம் ஆரம்பித்து விட்டது. விடுதியிலேயே இரு பெரிய குடைகளைக் கொடுத்து விட்டார்கள். அப்புறமென்ன?

முதலில் நாங்கள் சென்றது ‘ஹனோக் வில்லேஜ்’ல் இருக்கும் பிரபலமான ‘சால்ட் பிரட்’ கடைக்கு. “ரொம்ப ஃபேமஸ் இங்கே” என்று மகள் அழைத்துச் சென்ற கடையின் முன் குடைகளைப் பிடித்துக் கொண்டு நீண்ட வரிசை காத்திருந்தது. நாங்களும் ஐக்கியமானோம். ஒரு பாக்கெட்டில் நான்கு fluffy சால்ட் பிரட் கொடுக்கிறார்கள். ஜப்பானியர் உணவு போல. எனக்கென்னவோ croissantன் கொரியன் உடன்பிறப்பு போல தெரிந்தது. வெண்ணெயில் செய்த பதார்த்தம். மேலே உப்பு வேற தூவி, கமகம வாசனையுடன் வாயிலே வைத்தவுடன் கரைந்து போகிறது. யம் யம் யம். அங்கு செல்கிறவர்கள் தவறவிடக்கூடாது.
அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தோம். விடுவானேன்? உள்ளே சென்று பார்த்தோம். நன்றாகத்தான் இருந்தது. விலை அதிகமோ?? இது, அது என்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் எதையாவது வாங்கத் தோன்றிவிடும். கம்சாமிதா சொல்லி விடு ஜுட்.

அங்கிருந்து பல குறுகிய, சுத்தமான தெருக்களைச் சுற்றி வெவ்வேறு கடைகளில் ஏறி இறங்கி கடைசியில் ஒரு சந்தைக்குள் நுழைந்தால் ஆஹா! அது ஒரு தனி உலகமாக அல்லவா இருக்கிறது? அழகாக சாம்பிள்கள் கொடுத்து வாங்க வைத்து விட்டார்கள். நம் ஊரில் கிடைப்பது போலவே கடலை, பொரி, வெல்லம்/சர்க்கரை, எள் சேர்த்த பதார்த்தங்கள். அதிக இனிப்பு இல்லை ஆனால் சுவையாக இருந்தது.
சந்தையில் விதவிதமான மீன்களை வைத்திருந்தார்கள். நாம் கேட்கும் மீனை சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் தாய்லாந்தைப் போல உணவில் fish sauce சேர்த்து குமட்டும் வாசனை எல்லாம் இங்கில்லை. இவர்களுடைய உணவு பெரும்பாலும் நிறைய கீரை வகைகளுடன் பொரித்த இறைச்சி, மீன் வகைகள் இல்லையென்றால் சூப்பில் கொதிக்க கொதிக்க டம்ப்ளிங்ஸ் தான். கருவாடும் விற்கிறார்கள்! பாத்திரங்கள், கார்ன் ஹஸ்க்கில் செய்த மிருதுவான பெட்ஷீட்கள் விற்கும் கடைகளுக்குள் நுழைந்தால் வாங்காமல் வரமுடியாது. பெட்டியில் எடுத்துச் செல்வதற்குத் தோதாக பிரத்தியேகமாக சுருட்டி கொடுக்கிறார்கள். நாங்களும் வாங்கிக் கொண்டோம். வியாபாரிகள் அனைவரும் சினேகமாக இருக்கிறார்கள்.

அப்படியே சந்தையின் மறுபக்கத்தில் இருக்கும் உணவுச் சந்தைக்குள் நுழைந்தால் ஒவ்வொரு கடையைச் சுற்றிலும் இருக்கைகள் போடப்பட்டு சுடச்சுட அங்கேயே அமர்ந்து சாப்பிட முடிகிறது. வெறும் இரண்டு குச்சிகளை வைத்து சாப்பிட்டு முடித்து விடுவதால் ஈரமோ, குப்பைகளோ இல்லை. வெறும் கோப்பைகள், தட்டுகள், சிறு கரண்டிகள், குச்சிகள், வாய் துடைத்துக் கொள்ள டிஸ்ஸு பேப்பர்கள். அவ்வளவு தான். பெரிய பெரிய அண்டாக்களில் சூப் கொதித்துக் கொண்டிருக்க, அரிசி மாவில் செய்த நூடுல்ஸ் நம் கண் முன்னே செய்யும் நெட்ஃபிளிக்ஸ் பிரபலமான பாட்டியின் கடைமுன் அத்தனை நீண்ட வரிசை! கைகளில் கேமராக்களுடன் காத்திருந்த கூட்டத்தில் சேர்ந்து நின்று கொண்டோம். 10 நிமிடங்களில் இருக்கைகள் கிடைக்க, சாப்பிட்டு முடித்தோம். நல்ல கூட்டம்!
பல கடைகளைக் கடந்து வாசலுக்கு வர, அங்கே கொரியன் டோனட்ஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதுவும் சுடச்சுட. விடுவோமா? ஆறு மணிக்கு விடுதியை அடைந்து வாங்கிய பொருட்களை பெட்டிகளில் நிரப்பிக் கொண்டோம். பேசாமல் இன்னொரு பெட்டியை வாங்கி நிறைய ஷாப்பிங் செய்திருக்கலாம் தான். ஆசைக்கு அளவேது?
இரவு 8.30வாக்கில் கடைசியாக ஒருமுறை தெரு உணவுகளை சுவைக்க ஆசைப்பட்டு ஹான் அறிமுகப்படுத்திய அத்தனை இனிப்பு பண்டங்களையும் வாங்கிச் சாப்பிட்டோம். கூடவே ஷ்ரிம்ப் டம்ப்ளிங்ஸ்ம். நன்றாக சாப்பிட்டு விட்டு நாட்கள் சென்றதே தெரியாமல் ஊர்களைச் சுற்றியதை எண்ணி கனவை நனவாக்கிய மகளுக்கு நன்றி கூறிவிட்டு, மறுநாள் விமானநிலையம் செல்ல காலை 5.30மணிக்கு வண்டியை விடுதியின் மூலம் புக் செய்து கொண்டோம்.

மதுரையைப் போலல்லாது சியோல் சாலைகள் ஐந்து மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டு விடுகிறது. மெல்ல மெல்ல இருள் விலக, போக்குவரத்தும் கூடியது. பை,பை சியோல் என்று அடுக்குமாடி கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டே இன்சியான் பன்னாட்டு விமானநிலையம் நோக்கிய பயணம் ஆரம்பித்தது. சியோலில் இருந்து 30மைல் தொலைவில் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் நன்றாகவே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்தில் வழியில் அழகான காடுகளும் காட்சிகளும் இனிமையான நினைவுகளும் கூடவே பயணித்தது.
காலை 9.30க்கு விமானத்தில் ஏறியாயிற்று. அணிவதற்கு காலணிகள் கொடுத்தார்கள்! அருகில் அமர்ந்திருந்த ஃபிலிப்பினோ தம்பதிகளில் கணவர் மனைவியைவிட இளமையானவராகத் தெரிந்தார். புறப்பட்ட ஒருமணிநேரத்தில் சூப்பர் சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு எப்படித் தூங்கிப்போனேன் என்றே தெரியவில்லை. ஏதோ வாசம் வருவது போல இருந்தது. பனினி என்று ஒரு ஸ்னாக்ஸ். ப்ரெட்டில் சீஸ், காய்கறிகள் வைத்து சிற்றுணவு. ஐந்து மணிநேரங்கள் கழித்து காலைஉணவு. அதுவும் சுவையாக இருந்தது.
நியூயார்க்கிலிருந்து செல்லும் பொழுது 14 மணிநேரங்கள் என்றால் திரும்பி வரும்பொழுது எதிர்திசையில் காற்றை எதிர்த்து வர, கூடுதல் ஒரு மணிநேரம். கனடா மீது பறக்கும் பொழுது மழைமேகங்கள் முட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தது. இத்தனை குலுக்கலான விமான பயணத்தை இதுவரை நான் பார்த்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில்விமானம் மேலேறுவதும் தடாலென்று கீழிறங்குவதும், இருக்கைகள் இடமும் வலமுமாய் ஆடிச் சறுக்குவதுமாய் குலுங்கி குலுங்கி எந்நேரம் என்னாகுமோ என்ற பீதியைக் கிளப்பிவிட்டது. இதுவரையில் இப்படியான வான்பயண அனுபவம் இல்லாததால் கவலையும் பயமும் வந்து விட்டது. என் அருகில் அமர்ந்திருந்த பெண் வேறு வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள். விமானம் ‘சடக்’கென்று மேலெழும்ப, வயிற்றை பிரட்டி எடுக்க, மொத்த பயணிகளும் ‘ஆஆஆ’வென்று அலற, ஒருகட்டத்தில் அவ்வளவுதான் என்று சொல்லுமளவிற்கு ஆட்டம். மேகத்திற்குள் மாட்டிக்கொண்டு விட்டோம் போலிருக்கு. முதலில் அழுகை. பின் வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் என்று சமாதானப்படுத்திக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ம்ருத்யுஞ்சய மந்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டே வந்தேன். சில பல நிமிடங்களுக்குப் பிறகு கண்டத்திலிருந்து தப்பியது போல விமானம் இயல்பு நிலைக்குத் திரும்ப, அனைவரும் கைதட்டினார்கள். ‘கண்ல மரண பயத்தைக் காமிச்சிட்டியே பரமா’. பத்திரமாக நியூயார்க் விமானநிலையத்தில் இறங்க, மகனைப் பார்த்ததும் நிம்மதியாக இருந்தது.
சியோல் தந்த இனிமையான அனுபவத்துடன் ‘அந்த சில நொடிகள்’ விமான ஆட்டம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாகி விட்டது.
பல விஷயங்களை இந்தப்பயணத்தில் கற்றுக் கொண்டாலும், முக்கியமாக ‘சியோல்’ என்பதை ‘சோல்’ என்று தான் உச்சரிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். மொத்தத்தில் ‘சோல்’ பயணம் மனதிற்கு இனிமையான, மிக நெருக்கமான வாழ்நாள் அனுபவம்.
***

பொறுமையாக பயணக்கட்டுரைகளை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் ‘கம்சாமிதா’
No comments:
Post a Comment