Friday, October 3, 2025

பருவமே புதிய பாடல் பாடு

கோடை முடிந்து குளிர் வலம் வரும் நேரம் விநாயகர் பூஜையுடன் திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். ஆல்பனி இந்துக்கோவிலில் பத்துநாட்கள் விமரிசையாக விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடைபெறும். பத்துநாட்கள் இரவும் கோவிலில் பிரசாதம் என்ற பெயரில் சிறப்பு விருந்துகளும் உண்டு. பத்தாவது நாளில் அவரை கோலாகலமாக வழியனுப்பிய பிறகு புரட்டாசியும் பிறக்க, சனிக்கிழமைகளில் பெருமாள் பூஜைகளும் பிரசாதங்களும் என்று இனிமையாகக் கழியும். நண்பர் வீட்டில் மதுரையில் 'தசல்' கொண்டாடுவது போலவே அவர்கள் 'பிக்ஷை' கேட்க, நாங்கள் அரிசி வழங்கி அதில் சமைத்த உணவைப் பெருமாளுக்குப் படைத்து வணங்குவோம். 

நிமிர்ந்து பார்ப்பதற்குள் கொலு வாசல் கதவைத் தட்டும்.

ஒவ்வொரு வருடமும் கொலு வைக்கும் நண்பர்கள் அன்போடு அழைக்க நாங்களும் விரும்பிச் சென்று பார்த்து விட்டு வருவோம். கண்ணுக்கும் மனதிற்கும் மட்டுமில்லாமல் வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான் எங்களுக்கு. வேலைக்குச் சென்று வருவதோடு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு வருடங்கள்தோறும் படிகள், கொலுப்பொம்மைகளைப் பாதுகாத்து, கொலு நேரத்தில் அவற்றை அழகுபடுத்தி, வீட்டிற்கு மக்களை அழைத்து, உணவும் அளிப்பது எத்தனை சிரமமான விஷயம்? ஆனாலும் பாரம்பரியமாகக் கொண்டாடும் விழாவைத் தொடர்ந்து அயல்நாடுகளில் சிறப்புறச் செய்து வருபவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். பெண்கள் அனைவரும் பட்டுச்சேலை, நகைகள் சகிதம் உலா வரும் அழகே அழகு!

இந்த வருடம் கோவிலிலும் மிகச்சிறப்பாக நவராத்திரி கொண்டாடப்பட்டது. தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்க, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். இந்த வருடம் கூடவே பக்தர்களுக்குத் தினமும் பிரசாதம் வழங்கி அசத்தி விட்டார்கள்! தன்னார்வலர்கள் உதவியுடன் தான் அனைத்தும் சாத்தியமாயிற்று.

மதுரையில் கொலுவைப் பார்க்க கோவில் கோவிலாகச் சென்றது எப்பொழுதும் நினைவிற்கு வரும். அத்தகைய ஏக்கங்களைப் போக்குவதே கோவில், நண்பர்கள் வீட்டுக் கொலுக்கள் தான். அபிராமி! அபிராமி!

இப்பொழுது இலையுதிர்காலம் ஆரம்பித்து நியூயார்க், அருகிலுள்ள நியூஇங்கிலாந்து மாநிலங்கள் வண்ண ஓவியமாகக் காட்சி தருவதைக் கொண்டாடும் பருவம்.

கோடையில் தகித்தவன் இப்பொழுது சுகமாய், அழகாய், குளிர்ச்சியாய் வசீகரிக்கிறான். இனி வெயில் குறைந்து இலைகள் மலர்களாக வண்ணங்களைச் சுமந்து மரங்களை அலங்கரிக்கும். வீசும் காற்றில் அலையாடி மண்சேரும். வாழ்க்கையைப் போலவே!

குளிர் சாமரம் வீச, பகல் குறைய மாற்றத்திற்குத் தயாராகும் உடலும் மனதும்!

புதிய பாடல் இசைக்கும் இனிய பருவம்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

வாழ்க வளமுடன்!


No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...