Thursday, May 28, 2026

அவ்வளவு தானா இந்த வாழ்க்கை?

மேல்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். வகுப்பிற்குத் திடீரென வேறு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த பெண்ணை அறிமுகப்படுத்தினார்கள். இடைவேளையின் போது அவள் பெயர், முன்பு படித்த  பள்ளி, அவளுடைய மதிப்பெண்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம் உள்ளூர் தாதாவான நாங்கள். நமக்குப் போட்டியாக வர மாட்டாள் என்ற அற்ப சந்தோஷம். வகுப்பறையில் மாணவிகளின் உயரத்தை வைத்துதான்  முதல், இரண்டாம் வரிசை என்று அமர வைப்பார்கள். அவளோ குட்டியாக இருந்தாள். அவள் உயரத்தில் இருந்த மாலதியுடன் அமர்ந்து கொண்டாள். 

இரண்டாம் நாள் "அவளும் சௌராஷ்டிரா பொண்ணு தான்" என்றாள் மாலதி. "அப்படியா? ஒரு இனிஷியல் தானே வச்சிருக்கா?"

வீட்டுக்குச் சென்றவுடன் அம்மாவிடம், "எப்படிம்மா சௌராஷ்ட்ரா பொண்ணு ஒரு இன்ஷியலோட இருக்க முடியும்?"

எங்கள் சமூகத்தில் அனைவரும் இனிஷியலில் குடும்பப் பெயரின் முதல் எழுத்தையும் அப்பாவின் முதல் எழுத்தையும் வைத்திருப்போம் என்று நினைத்திருந்தேன். இவள் மதுரைக்காரி இல்லையோ?

"நாளைக்கு விவரமா கேட்டுட்டு வா" முடித்துக் கொண்டாள் அம்மா.

அடுத்த நாள் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே அவளிடம் "அது என்ன உனக்கு மட்டும் ஒரு இனிஷியல் தான் இருக்கு?"

"அது எங்க அப்பா பேரோட முதல் எழுத்து" என்றாள்.

"ஏன் வீட்டுப் பேர் வச்சுக்கல?"

"தெரியல."

"உங்க வீட்டுப் பேர் என்ன? வீடு எங்க இருக்கு?"

அவளும் கூற, அதை நானும் அப்படியே அம்மாவிடம் ஒப்பிக்க, "ஓ! விளக்குதூண்ல இருக்குற தொப்பே (வீட்டுப்பெயர்) ராமலிங்கு தா (ராமலிங்கம் அண்ணன்) பெடி(மகள்) யா?"

அவ்வளவு தான். அவள் வீட்டுப் பெயரைச் சொன்னவுடன் முழு ஜாதகமும் தெரிந்து விட்டது. எங்கள் சமூகத்தில் அப்படி, இப்படி என்று சுற்றி வளைத்துத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். பாட்டி வீட்டிற்குத் தெரிந்த குடும்பம். அவளின் அப்பாவிற்கு மாமாக்கள் வயது. அவளின் அம்மா, என் அம்மாவுடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர். தம்பி, என் தம்பிகளின் வயது. நண்பனும் கூட! எல்லாம் தெரிந்த பிறகு அவளுடன் பழகுவதில் சிரமம் இருக்கவில்லை.

வகுப்பில் கமல், ரஜினி ரசிகைகள் என இரண்டு கோஷ்டி. இவள் ரஜினி ரசிகை என்றவுடன் நாங்கள் கொஞ்சம் விலகிக்கொண்டோம். ஆனால் படத்தை கதையாகச் சொல்வதில் கில்லாடி. 

முதல் தேர்வு முடிந்தது. ஒவ்வொரு ஆசிரியரும் தாள்களை நீட்ட எதிர்பார்த்த மதிப்பெண்கள் தான். அதனால் ஏமாற்றமில்லை. வேதியியல் பாடம் எடுத்த கமலா டீச்சர் தாளை நீட்டும் பொழுது வகுப்பு முடிந்தவுடன் வந்து பார் என்று சொல்லவும் தான் எங்கேயோ இடித்தது. அவரைப் பார்க்கச் சென்றால், "நேற்று வந்த பொண்ணு உன்னைய விட மார்க் கூட வாங்கியிருக்கா. வேற ஸ்கூல்ல இருந்து வந்த பொண்ணுட்ட இப்படி தோத்து போயிருக்க. அவ்வளவு தானா?"

சும்மாவே ஆடுவேன். இப்ப சலங்கைய வேற கட்டி விட்டுட்டாங்களா? அவ்வளவு தான். இனிமே தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்க போறன்னு மனசுல வரிஞ்சு கட்டிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் முதல் மூன்று ரேங்க்குக்குள் வர விடக்கூடாது. இன்னொன்று கெமிஸ்ட்ரி பாடத்தில் முதலாவதாக நான் மட்டுமே இருக்க வேண்டும். கங்கணம் கட்டிக் கொண்டு படித்தேன். எனக்கும் அவளுக்கும் கடுமையான போட்டி. அவளுக்கும் வேதியியல் பாடம் ரொம்ப இஷ்டம் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் கடைசி வரை முதலிடத்தை விட்டுக் கொடுக்கவேயில்லை. என்னுடைய நெருங்கிய வட்டத்திற்குள்ளும் அவள் வரவில்லை. 

பின், வெவ்வேறு கல்லூரிகளுக்குச் சென்று விட்டோம். பாட்டி, பெரியம்மா வீடுகளுக்குச் செல்லும் பொழுது பார்த்து ஒரு ஹாய். எப்படி இருக்க? என்று குசலம் விசாரிப்பதோடு சரி.

காலங்கள் உருண்டோட, ஈஷ்வருடன் நிச்சயம் ஆனபிறகு, தன்னுடைய நண்பனும் மாமா மகனுமான குட்டி என்ற வெங்கடேஷை அறிமுகம் செய்து வைக்கப் போவதாக கூறினார். அவரும் அவருக்கு நிச்சயித்த பெண்ணை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க அழைத்து வந்தார். பார்றா! R.ஆஷா! எனக்கு நல்லா தெரியுமே! ஆம்! அது தான் அவளது பெயர். 

விதி மீண்டும் உறவாக எங்களை இணைத்தது. எங்களுடைய திருமணம் நடந்து முடிந்த இரு மாதங்களில் அவர்களுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் சென்னையில். நாங்கள் மதுரையில்.

ஒரு முறை சென்னைக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது தான் மாமா, மாமி, ஆஷா, குட்டி dha, அவருடைய அண்ணன், அண்ணி எல்லோரையும் சந்தித்தேன். மாமா நன்றாகப் பேசினார். மாமியாரின் மேல் பாசமாக இருந்திருப்பார் போல. பழைய நினைவுகள், நிறைய விஷயங்கள் என்று ஈஷ்வருடன் பேசினார். மாமி மிக கட்டுக்கோப்பான பழங்காலத்துப் பெண்மணி. ஈஷ்வருக்கு அம்மாவின் உடன்பிறந்தவரின் மனைவி உறவு மட்டுமல்ல அப்பா வழியில்உடன்பிறந்த அக்காவின் பெண் என்பதால் இரு பக்க உறவுகள். மிகவும் பாசமாக இருந்தார். 

நாங்கள் இருவரும் இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பில் இல்லாது தனித்திருந்ததால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆச்சர்யமாக இருந்தது! அங்கே மருமகள்கள் சமைக்க, பூஜைக்குப் பிறகு ஆண்கள் முதலில் சாப்பிட, பிறகு தான் பெண்கள் சாப்பிடவேண்டும். எனக்கும் ஈஷ்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மாமி சொன்னது தான் அங்கு சட்டம் என்று மட்டும் புரிந்தது. 

அவர்களுக்கும் புரிந்திருக்காது. எப்ப பாரு லதா, இங்க வா. உட்காரு. சாப்பிடு என்று ஈஷ்வர் அழைக்கும்போது அங்கே நிலவிய மெளனத்தைப் புரிந்து கொண்டு நான் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.

"இங்க இப்படித்தான்" என்றாள் ஆஷா, மிகவும் செல்லமாக வளர்ந்த பெண். 

நிறைய பேசினோம் அன்று.

வருடங்கள் உருண்டோட,

ஒவ்வொருமுறை  மதுரைக்குச் செல்லும் பொழுது மாமியைப் பார்த்துப் பேசி ஆசீர்வாதம் பெற்று வருவதுண்டு. 90 வயது என்று சொல்ல முடியாதபடி நன்றாகத்தான் இருந்தார், ஒரே நாளில் ஐந்து பேரை காலன் அழைத்துச் செல்லும் வரை. மதுரை அருகே அவர்கள் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகும் வரை. இறந்தவர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். ஒரே நேரத்தில் மூன்று குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து நிற்பது என்பது கொடுமை.

இன்று ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்து வழியனுப்பும் நாள் என்று ஊரிலிருந்து அழைத்தார்கள். எத்தனையெத்தனை கனவுகளுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது? அவ்வளவு தானா இந்த வாழ்க்கை? யோசிக்க, யோசிக்க துன்பமே மிஞ்சுகிறது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அந்த வேலன் தான் துணையாக இருக்க வேண்டும். 

ஓம் ஷாந்தி.



No comments:

Post a Comment

அவ்வளவு தானா இந்த வாழ்க்கை?

மேல்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். வகுப்பிற்குத் திடீரென வேறு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த பெண்ணை அறிமுகப்படுத்த...