Saturday, October 14, 2023

தெற்கு கிருஷ்ணன் கோவில்

இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை.


பெருமாளைத் தரிசிக்க கோவில்களில் கூடும் கூட்டத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்? எம் சமூகத்து மக்கள் வீடுகளில் 'தசல்' விருந்துகள் களை கட்டும். என்ன தான் எம் முன்னோர்கள் குஜராத்தில் சோம்நாத் கோவில் இருக்கும் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்திருந்தாலும் ஆந்திராவில் பல வருடங்கள் தங்கியிருந்து தமிழ்நாடு வந்ததாலோ என்னவோ பெருமாள் கோவில்களைத் தான் தமிழகத்தில் கட்டி வழிபட்டு வருகிறோம். மதுரையில் தெற்கு கிருஷ்ணன் கோவில், ஆஞ்சநேயர், திரௌபதி, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் என்று வைணவ கோவில்கள் தான் அதிகம் நாங்கள் சென்று வரும் கோவிலாக இருக்கிறது. சிவன் கோவில்கள் கட்டாவிட்டாலும் மதுரையிலும் சுற்றி இருக்கும் சிவன் கோவில்களிலும் நிறைய கைங்கர்யங்கள் செய்திருக்கிறார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

மதுரையில் அரசமரம் பகுதியில் பிறந்து வளர்ந்ததால் முனிச்சாலை அருகில் இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி குடும்பத்தோடு செல்வது வழக்கம். அதுவும் தாத்தாவின் நினைவு நாளில் அவர் பெயரில் கட்டளை பூஜை நடைபெறும். தவறாமல் கலந்து கொள்வோம். அப்பாவிற்கு மரியாதை செய்வார்கள். தம்பிகளுக்கும் பரிவட்டம் கட்டுவார்கள்! ஆணாதிக்க உலகமடா! சிறிய கோவில் தான் என்றாலும் அலங்காரத்திற்கும் பூஜைகளுக்கும் குறைவிருக்காது. அன்றைய நாட்களில் அங்கு தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பூஜை செய்ய பெண்கள் கூடுவார்கள். அருகில் நெசவாளர்கள் குடும்பங்கள் அதிகம். அதனால் ஆர்ப்பாட்டமில்லாத கோவிலாக எளிமையாக இருந்தது. தற்பொழுது கோவில் முன்னை விடச் சிறப்பாக இருக்கிறது. மகள் முதல் முறை சென்று விட்டு இந்தக் கோவிலுக்கு இதற்கு முன்பு நாம் சென்றதில்லையே என்று கேட்டாள்😑 நானும் சென்று பலவருடங்களாகி விட்டது. அடுத்த முறை கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

பாட்டி(அம்மாவின் அம்மா) இருந்த வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் “வெட தெளரோ” என்று சௌராஷ்டிரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் 'தெற்கு கிருஷ்ணன் கோவில்' இருக்கிறது. பாட்டி வீட்டிற்கு அருகிலிருந்ததால் காலையில் சுப்ரபாதம் பாடி பெருமாளை எழுப்புவதிலிருந்து இரவு பள்ளி கொள்ளும் பூஜை வரை பார்த்திருக்கிறேன். சென்ற வருடம் நாங்கள் சென்றிருந்த பொழுது கணவரின் குடும்பத்தினர் (ஒப்ளா) சார்பாகச் சிறப்புப் பூஜை என்று அங்குச் சென்ற பிறகு தான் தெரிந்தது. அதற்குப் பிறகு அவருக்குப் பரிவட்டம் கட்டி மாலையிட்டு பெருமாளுக்குப் பூஜை செய்வதைக் கண்குளிர தரிசித்தோம். மூலவர் பிரசன்ன வேங்கடேச பெருமாளுக்கு என்றும் திவ்ய அலங்காரம். என் சிறுவயதில் பார்த்த பட்டர். இப்பொழுது அவருக்கும் வயதாகி அடுத்த தலைமுறை பட்டர்களும் வந்து விட்டார்கள். அந்தக் கோவிலின் ஆஞ்சநேயர் அத்தனை அழகு. சிறுவயதில் "மொட்ட்ட்ட்ட ஹன்மந்து" என்று வியந்து பார்ப்போம். இன்றும் அப்படியே! நான் அகலத்தில் வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் அந்த இடுக்குச் சுற்றில் நுழையமுடிகிறதே என்ற ஆறுதல்😜 கோவிலில் நுழைந்தவுடன் வைணவ பிள்ளையார்! கம்பீரமாக நாமம் போட்டுக்கொண்டு. எதிரில் இருக்கும் மண்டபத்தில் தான் 'பொஸ்கன்னோ' என்ற பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கோலாட்டம் கோலாகலமாக நடைபெறும். அதனால் தான் எங்களவர் திருமணங்களில் பெண்ணிற்குப் புகுந்த வீட்டிலிருந்து கொடுக்கும் சீரில் கோலாட்ட குச்சிகள் இருக்கும். முன்பு கண்ணாடிக் குடுவைகளுக்குள் விளக்குகள் அழகாக கவரும் விதத்தில் இருந்ததை மாற்றியிருக்கிறார்கள். அதை எடுக்காமலே விட்டிருக்கலாம். அத்தனை அழகாக இருக்கும்!

தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ராமர், லட்சுமணர், சீதாதேவி, பள்ளி கொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதாகிருஷ்ணன், லட்டு கோபால், லட்சுமி, ஹயக்ரீவர், நரசிம்மர், கருடன், நவக்கிரக சன்னதிகளும் இக்கோயிலில் உள்ளன.

மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு நேரத்தில் நல்ல கூட்டம் இருக்கும். கோவிலுக்கென்று அழகான யானை இருந்தது. யானை மறைந்த பிறகு அதன் இடமும் இப்பொழுது மாறிவிட்டிருக்கிறது. கருப்பண்ணசாமியை வணங்கி கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் கூட்டம் மட்டும் மாறவில்லை. சித்திரைத்திருவிழா போன்றே பத்து நாட்கள் நடக்கும் பங்குனி மாதத்தில் நடக்கும் "வெட தௌரா தின்னாள்" சுவாமி புறப்பாட்டுடன் கோலாகலமாக தெற்கு மாசி வீதி, தெற்குவாசல் பகுதிகளில் சிறப்பாக நடக்கிறது.

இன்றும் கோவிலில் தினமும் குடும்பங்கள் பலரும் கட்டளை பூஜைகள், சிறப்பு தின பூஜைகள் என்று களை கட்டுகிறது. தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பெருமாள் வலம் வந்து கொண்டிருக்கிறார். எத்தனை தொலைவிலிருந்தாலும் ஊருக்குச் சென்றால் பலரும் தவறாமல் சென்று வரும் கோவில். எதிரே இருக்கும் மண்டபத்தில் வருடாவருடம் மும்மூர்த்திகளின் இசை விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். சிறப்பான விருந்து. அதற்காகவே மக்கள் கூடுகிறார்கள்! இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு சுவையான பொங்கல், வடை பிரசாதங்கள்! ம்ம்ம்ம்ம்😇

மதுரையில் நாயக்கர் மகாலைச் சுற்றி இருந்த எம் சமூக மக்கள் இப்பொழுது மதுரையைச் சுற்றிப் பரவலாக வில்லாபுரம், அவனியாபுரம், திருநகர், கிருஷ்ணாபுரம் காலனி, விரகனூர் என்று புறநகர் பகுதிகளுக்கு குடி பெயர்ந்துள்ளார்கள். சென்ற இடங்களில் எல்லாம் விநாயகர், பெருமாள் கோவில்கள் கட்டி பூஜைகள், அன்னதானங்கள், உபன்யாசங்கள் என்று குறைவில்லாமல் மனதிருப்தியுடன் வாழ்கிறார்கள். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று வில்லாபுரத்தில் இருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உற்சவர் கருட வாகனத்தில் மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்கு உலா வந்திருக்கிறார். குட்டித் திருவிழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இது மெல்ல மெல்ல இனி பெருந்திருவிழாவாக மாறும். எங்கு சென்றாலும் குடும்பங்களை அழைத்து உற்றார், உறவினர்களுடன் திருவிழா கொண்டாட மக்கள் தவறுவதில்லை. எதையோ நோக்கி நித்தம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் இத்தகைய திருவிழாக்களும் குடும்ப சந்திப்புகளும் எத்தகைய பலம் என்பது தொலைவில் இருப்பவர்களுக்கு நன்கு புரியும்.

எல்லோரும் கொண்டாடுவோம்!

ஓம் நமோ நாராயணய🙏

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...