Friday, October 13, 2023

அழகர் கோவில் -பழமுதிர்சோலை-ராக்காயி அம்மன் கோவில்


அழகர்மலையில் அழகர் மட்டுமல்ல, அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்ச்சோலையும் நூபுரகங்கை தீர்த்த மண்டபமும் ராக்காயி அம்மன் கோவிலும் இருக்கிறது. கீழே பெருமாள் கோவிலில் இருந்து நூபுரகங்கைக்குச் செல்ல சாலை அமைப்பதற்கு முன்பு கோவிலின் பக்கவாட்டிலிருக்கும் மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும். வழியில் பாசி படர்ந்த குளம் ஒன்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை வியப்போடு பார்த்துக் கொண்டே செல்வோம். மலையிலிருந்து தண்ணீர் வழிந்தோடும் பாதைகளில் நடந்து செல்ல வழியில் பாம்புத்தோல்களைப் பார்த்தவுடன் பயம் வருமே பார்க்க வேண்டும்! பாம்பு அருகில் தெரிகிறதா என்று கவனமாக அடியெடுத்து வைத்து சாலையை அடைந்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அங்கிருந்து மந்திகளின் ராஜ்ஜியம் தான். கூட்டம்கூட்டமாக உட்கார்ந்து கொண்டு வருவோரைப் போவோரைப் பார்த்துக் கொண்டு இருக்கும். நம் மக்கள் பாவமே என்று எதையாவது உண்ணக் கொடுப்பார்கள். 'கீச்கீச்' என்று கத்திக் கொண்டே பங்கு போட்டுக்கொள்வார்கள். பழமுதிர்சோலை வருவதற்கு முன் கொடுக்காப்புளி, நெல்லிக்காய், மாங்காய் இத்யாதிகளை சாக்குப்பையில் விரித்து விற்பனை செய்துகொண்டிருப்பார் ஒரு பெண்மணி. நாங்களும் அவரவர்க்குப் பிடித்ததை வாங்கிக் கொண்டு சட்டைப்பையில் மறைத்து வைத்துக் கொள்வோம். இல்லையென்றால் பிடுங்கிக் கொண்டு போய்விடுவானே? குரங்குகள் வேறு நம்மையே பார்ப்பது போல இருக்கும்.

பக்தர்களின் வசதிக்காகச் சாலைகள் போட்டு முதலில் தேவஸ்தான பேருந்து, வேன்களை விட்டார்கள். இப்பொழுது எல்லா தனியார் வண்டிகளையும் அனுமதிக்கிறார்கள். அதனால் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பிசியாக இருக்கிறது அந்தப்பாதை. வழியெங்கும் குரங்குகள் சாலையில் அமருவதும் வண்டிகளைக் கண்டவுடன் ஒதுங்குவதுமாய் பாவம்! அவர்களுடைய இடங்களை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறோம்.

சிறிது நேரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை வந்து விடும். "இரு முருகா! குளித்து விட்டு வந்து கும்பிடறோம்" என்று மேட்டுப்பகுதியில் ஏற, 'ஏத்தமய்யா ஏத்தம்' என்று மூச்சு வாங்கும். வண்டிகள் இல்லாது நடந்து மட்டுமே செல்ல முடிந்த காலகட்டத்தில் இரைச்சல், புகைச்சல் எல்லாம் இல்லை. நிறைய மரங்கள் இருக்கும். இன்றும் இருக்கிறது. ஆனால் அடர்த்தி குறைந்து விட்டது. ஒரு மழைக்காலத்தில் அன்றைய அழகர்மலை போல் தெரிந்தது. மழை குறைந்த வருடங்களில் வறண்ட மணலும் மரங்களும் பார்ப்பதற்கே கொடுமையாக இருக்கும். சென்ற வருடம் இதே மாதத்தில் நாங்கள் சென்றிருந்த வேளையில் நல்ல மழை! 'குளுகுளு'வென்று அழகர்மலை அழகாகப் பசுமையைப் போர்த்தியபடி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இருசக்கர மோட்டார் வாகனங்கள், கார்கள் பெருகி விட்டிருக்கிறது. நூபுர கங்கைத் தொட்டிக்குச் செல்ல படியேறுவதற்கு முன் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தார்கள். கண்ணாடியில் முக அழகை ரசித்தபடி மந்திகள் கூட்டம். அழகோ அழகு! அந்த' காட்டுப்பகுதியில் விளையும் மூலிகைகளைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருமுறை காலை 6.30மணிக்குச் சென்றிருந்த பொழுது 'ஜேஜே' என்று மரங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு வௌவால்கள் கூட்டம்! பொறுமையாகக் காத்திருந்தால் பறவைகள் சிலவற்றையும் பார்த்திருந்திருக்கலாம்.

சூடாக வடை, பஜ்ஜி, காபி விற்கும் கடையில் ஜோராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்திலிருந்து இருக்கிறது! எதையும் விட்டு வைப்பதில்லை. சாப்பிட்டு விட்டுப் படியேறினால் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும் மந்திகளைப் பார்த்து கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது. பைகளை எடுத்துச் சென்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலே சென்றால் பொரிகடலை, பூஜைப்பொருட்கள், தீர்த்தம் எடுத்துச்செல்ல பிளாஸ்டிக் கேன்களை விற்கும் கடைகள் இருக்கும். அங்கிருக்கும் குரங்குகள் கடைக்காரர்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறது! அவர்களும், "வந்து வாங்கிக்கோடா!" என்று நண்பனை அழைப்பது போல் அழைக்கிறார்கள். நம்மூரில் நாய்களும், குரங்குகளும் மனிதனின் செல்லப்பிராணிகளாகவே மாறிவிட்டிருக்கிறது!

சிறுவயதில் 'கிடுகிடு'வென்று ஏறிய படிகள் தான். 100 படிகள் இருக்குமா? இப்பொழுதெல்லாம் பாதி தூரம் வரை ஏறி விட்டு நிமிர்ந்தால் இன்னும்ம்ம்ம்ம்ம் இத்தனை படிகளா! என்று மலைப்பாக இருக்கிறது. மாறாத படிகள்! மாறிய மனிதர்கள்! ம்ம்ம்ம்ம்! கூட்டமில்லாத நேரத்தில் தீர்த்தத்தொட்டிக்குச் சென்றால் குளித்துக் கொண்டே இருக்கலாம். இனிப்புச்சுவையுடன் தீர்த்தம் குடித்தாலே நகரத்தில் கிடைக்கும் தண்ணீர் எத்தனை வித்தியாசமாக இருக்கிறது என்றுதெரியும். வருடம் முழுவதும் கிடைக்கும் சுனைநீர் அல்லவா? 'லா...லாலா லா... லலலலா லா..லா...லா...' என்று குளியல் போட்ட நாட்கள் எல்லாம்... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே! அருகிலேயே கிணற்றிலிருந்து வாளியில் நீரை இறைத்துத் தலையில் ஊற்றுவார்கள். இப்பொழுது குழாய் வசதிகள் வந்து விட்டிருக்கிறது. மேலே உடைமாற்றும் இடங்களில் சிறிது மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் சுத்தம் இல்லாதது போலவே இருக்கிறது😓 பூக்கடைகளைத் தாண்டிச் சென்றால் ஏக அலங்காரத்துடன் 'ராக்காயி அம்மன்'. கிராமத்து தெய்வம். முன்பு மிகச்சிறிய கோவிலாக இருந்தது. இப்பொழுது பெரியதாகி வசூல்மன்னர்களும் அதிகமாகி...ஹ்ம்ம்ம் !

விடுமுறையில் ஒருநாள் மட்டும் வரும் நாட்களில் பாட்டி, பெரியம்மாக்கள் குடும்பத்துடன் வந்தால் நேராக இங்கே வந்துவிடுவோம். பெரிய பெரிய தூக்குச்சட்டிகளில் சாப்பாடு. பெரியம்மாக்கள் கொண்டு வரும் மெத்துமெத்து மல்லிகைப்பூ இட்லி, மணமணக்கும் தக்காளி குழம்பு, நெய் வழிய இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காய வாசனையுடன் 'சௌராஷ்ட்ரா ஸ்பெஷல்' வெண்பொங்கல், 'புடித்' (கத்திரிக்காய் சட்னி) தொட்டுச் சாப்பிட காலை உணவு. ஆகா! தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே! என்று பாடலாம். அத்தனை ருசியாக இருக்கும். கூடவே ரவா கேசரியும் வடையும்ம்ம். வாழை இலையில் தான் சாப்பாடு! இருவர் குரங்குகளை விரட்டி விட, மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்போம். எவ்வளவு சாப்பிட்டும் எடை ஏறாமல் கலோரி பார்க்காமல் சாப்பிட்ட காலங்கள் தான் எத்தனை ஆனந்தமானவை! ஹ்ம்ம்... பார்த்தாலே தன்னாலே பத்து பவுண்டு ஏர்றதெல்லாம் கொடுமையிலும் கொடுமை😔 என்னவோ போடா மாதவா!

அதன் பின் கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு ஆனந்த குளியல். கொஞ்சம் அரட்டை, வம்பு தும்பு. விளையாட்டு. அதற்குள் பசிக்க ஆரம்பித்து விடும். அடுத்தவேளைச் சாப்பாட்டிற்குத் தயாராகி விடுவோம். அம்மா 'அம்பட்பாத்' (புளியோதரை) அருமையாகச் செய்வார். சுண்டல், முறுக்கு, பட்டர்சேவு, 'கொழிஞ்சி' , தயிர்சாதம் என்று கழுத்து வரை சாப்பிட்டு விட்டுப் பெரியவர்கள் மெதுவாகச் சயனிக்க, நாங்கள் ஓடியாடி விளையாட... மாலை நெருங்கும் வேளையில் அதிரசம், முறுக்குத் தீனிகளை நொறுக்கி விட்டு அங்கிருந்து புறப்படுவோம். வரும்பொழுது அதிக எடையுடன் இருந்த பாத்திரங்கள் எடை குறைந்திருக்கும். கீழே இறங்கி வந்தவுடன் காபி குடித்து விட்டு "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று ஒளவைக்குச் சுட்டிக்காட்டிய முருகனைத் தரிசிக்க கிளம்பிவிடுவோம். வள்ளி தெய்வயானையுடன் 'அழகென்ற சொல்லுக்கு முருகா'. திவ்யமாக காட்சி தந்து கொண்டிருப்பார். முன்பு சிறிய கோவிலாக இருந்தது. இப்பொழுது பெரிய மண்டபங்கள் கட்டி தங்கத்தேர் வரை வளர்ந்திருக்கிறது இத்தலம். மாலை மங்கி இருள் கவிழ்வதற்குள் வந்த வழியே இறங்கிவிடுவோம். மந்திகளும் அவர்கள் இடத்திற்குச் சென்று கொண்டிருப்பார்கள். பெருமாளைத் தரிசித்து விட்டு அழகர் கோவில் தோசையை வாங்கி கொண்டு மீதமிருக்கும் உணவை உண்டு முடிப்போம். பாத்திரங்கள் காலியாக அத்தனை தூக்குச் சட்டிகளிலும் தீர்த்தம் நிரம்பி வழிய ஊர் திரும்ப பேருந்திற்காக காத்திருப்போம். பொதுவாக கடைசிப் பேருந்தில் தான் செல்வோம்.

அங்கேயே தங்குவதாக இருந்தால் சத்திரத்திற்குள் சென்று நிம்மதியான நித்திரை தான்!

ஒவ்வொரு முறை அழகர்கோவிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் இந்த இனிய நினைவுகள் வந்து செல்லும். மனிதர்கள் மறைந்தாலும் அவர்களுடன் வாழ்ந்த இன்பமான நாட்கள் தான் நம்மை உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

பள்ளியிலிருந்து தாவரவியல் ஆசிரியையுடன் சென்று பல மரங்களிலிருந்து இலைகளைச் சேகரித்து அவற்றைப் பற்றி அவர் ஆர்வம் பொங்க கற்றுக்கொடுத்ததும்... எத்தனை நல்ல ஆசிரியர்களைத் தந்தாய் இறைவா!

கல்லூரி இறுதி ஆண்டில் எங்கள் வகுப்பில் இருந்து எல்லோரும் சென்று வந்த இனிய நினைவுகள் 'ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!'

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...