Thursday, November 5, 2026

பத்தா

கடந்த வாரம், "பத்தா படம் நல்லா இருக்கு. நெட்ஃப்ளிக்ஸ்ல வந்துடுச்சு" என்று என் தங்கை சொல்வதற்கு முன்பே, நாளைக்குப் பார்க்கலாம் என்று நினைத்து, டோரதி படத்தைப் பார்த்துவிட்டு காத்திருந்தேன்.

பீரியட் ஃபிலிம் என்று விஜய் சேதுபதியின் தலை அலங்காரத்தைப் பார்த்தவுடன், "அய்யய்யோ, ரவுடிப் படமா?" என்றொரு சிறிய பீதியும் ஏற்பட்டது. சரி, பார்த்துவிடலாம் என்று ஆரம்பித்தால், முதல் காட்சியிலேயே அடிதடி, அரிவாள், ரத்தம் என்று அமர்க்களம். அதுவும் சிறுவர்களுக்கு முன்னால்! ஆக, ஊரே நடுங்கும் ஒரு ரவுடி. ஓகே!

எதிரிகள் பயந்து ஓடினாலும், வீட்டில் மகள் மீது பாச மழை பொழியும் அப்பா. மனைவியிடமோ கடுமையான அணுகுமுறை. அடிவாங்கினாலும் கணவன் மீது ஓவராக அன்பைப் பொழியும் மனைவிகள் மட்டும் தமிழ் சினிமாவில் மாறுவதே இல்லையோ என்ற எண்ணமும் தோன்றியது!

ஊரையும் வீட்டையும் நடுங்க வைக்கும் ஒரு ரவுடியை, தம்மாத்துண்டு குண்டுப் பையன் ஒருவன் சந்திக்கிறான். தன் அறியாமையால் ஒரு இடத்தில் அந்த ரவுடியைச் சிக்க வைத்து, அவரால் வெளியே வர முடியாமல் நாட்களைக் கழிக்க நேர்ந்தால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான ஒற்றைச் சம்பவத்தை வைத்துக்கொண்டு மனித உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையும் சுவாரசியமாகப் பேசுகிறது இயக்குநர் பாலாஜி தரணீதரனின் 'பத்தா'.

பரவாயில்லையே! இப்படியெல்லாம்கூட கதை எழுதத் தோன்றியிருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது! வழக்கமான மசாலாக் கதைகளுக்கும் அதே பழைய ஃபார்முலாக்களுக்கும் மத்தியில், தமிழ்த் திரையுலகம் சற்று வறட்சியில் இருந்ததோ, அல்லது சிவப்பு அரக்கர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவித்ததோ என்ற எண்ணம் கூட வந்தது!

1980களின் மெட்ராஸ் நகரத்தைப் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. அன்றைய வட்டார வழக்கு, கடைத்தெருக்கள், உடைகள், சிகை அலங்காரங்கள், சுற்றுப்புறம் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து உருவாக்கியிருப்பது சிறப்பு. அந்தக் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது படத்தின் காட்சியமைப்பு.

ஊரையே மிரட்டும் பத்தா ஒரு பள்ளியின் கழிவறைக்குள் எப்படிச் சிக்கிக்கொள்கிறார்? அவரை அந்த நிலைக்குக் கொண்டு சென்றது யார்? என்ற கேள்விகளுடன் தொடங்கும் கதை, அங்கிருந்து ஒரு சிறுவனுக்கும் முரட்டுத்தனமான மனிதனுக்கும் இடையே உருவாகும் விசித்திரமான உறவை நோக்கி நகர்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதைக்களம். ஒரு சிறிய சம்பவத்தை வைத்துக்கொண்டு முழுத் திரைப்படத்தையும் சுவாரசியமாக நகர்த்துவது எளிதான காரியமல்ல. அதுவும் ஒரே சூழலுக்குள் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு பார்வையாளர்களின் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்வது இயக்குநருக்குச் சவாலான ஒன்று. மிக நன்றாகக் கையாண்டிருக்கிறார் பாலாஜி தரணீதரன்.

விஜய் சேதுபதியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், பத்தா கதாபாத்திரத்தில் அவர் காட்டும் மாற்றங்கள் ரசிக்க வைக்கின்றன. 'ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது' என்பதுபோல, தேவையான இடங்களில் மட்டும் அளவாக நடித்து நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார் பிக்பாஸ்! ஆரம்பத்தில் எதிரில் இருப்பவர்களை அச்சுறுத்தும் உடல்மொழி, குரல், பார்வை என ஒரு ரவுடிக்கான அத்தனை அம்சங்களையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஆனால் சூழ்நிலை அவரை வேறொரு நிலைக்குக் கொண்டு செல்லும்போது, அந்தப் பந்தாவெல்லாம் மெல்லக் கரைந்து, பயமும் இயலாமையும் வெளிப்படும் தருணங்களில் அவரது நடிப்பு இன்னும் அழுத்தமாகிறது. ஒரே மனிதனுக்குள் இருக்கும் அதிகார உணர்வு, பலவீனம், பாசம் என வெவ்வேறு பரிமாணங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஆனால், படத்தின் உண்மையான கதாநாயகன் என்றால் அது குண்டு பையன் சாய் பிருத்விராஜ்தான்! எத்தனை இயல்பான நடிப்பு! விஜய் சேதுபதி போன்ற அனுபவமிக்க நடிகருக்கு இணையாகக் காட்சிகளைத் தாங்கிச் செல்வது சாதாரண விஷயமல்ல. சிறுவனுக்கே உரிய குறும்புத்தனம், பயம், தயக்கம், புத்திசாலித்தனம் என ஒவ்வொரு உணர்வையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, பத்தாவுடன் அவர் பழகும் காட்சிகள் பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் நெகிழவும் வைக்கின்றன. இருவருக்கும் இடையே உருவாகும் இந்த நடிப்புப் போட்டிதான் படத்தின் கூடுதல் பலம். துணிக்கடை காட்சிகள் எல்லாம் அழகு.

லிஜோமோல் ஜோஸ், பத்தாவின் மனைவியாகத் தன் கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். குடும்பத்துக்குள் இருக்கும் அன்பு, கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்துகிறார். மற்ற துணைக் கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றன.

சாய் அப்யங்கரின் காட்சிகளின் மனநிலைக்கு ஏற்ற இசை படத்தின் ஓட்டத்திற்குத் துணையாக இருக்கிறது.

குறைகள் இல்லாமல் இல்லை. சில காட்சிகள் இன்னும் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருக்கலாம். சில திருப்பங்களையும் முன்கூட்டியே கணிக்க முடிகிறது. இருப்பினும், கதையின் அடிப்படையான சுவாரசியமும் நடிகர்களின் பங்களிப்பும் இந்தக் குறைகளை ஓரளவு மறக்கச் செய்கின்றன.

படம் முடிந்த பிறகும் மனதில் நிற்பது ஒரு சின்ன விஷயம். ஒருவரைப் பற்றிய நமது மதிப்பீடு பெரும்பாலும் அவருடைய வெளித்தோற்றத்தையும் நடத்தையையும் வைத்துத்தான் அமைகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நாம் அறியாத ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஊரையே பயமுறுத்தும் ஒருவனுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவனுக்கும் பாசம், ஏக்கம், பயம், இழப்பு எனப் பல உணர்வுகள் இருக்கின்றன. அதிகாரத்தையும் பலத்தையும் மட்டுமே நம்பி வாழும் ஒருவனை, எதிர்பாராத ஒரு சூழல் அவனுக்கே அவனைப் புதிதாக அறிமுகப்படுத்துகிறது.

மொத்தத்தில், 'பத்தா' வழக்கமான ரவுடிப் படங்களின் வரிசையில் இன்னொன்றாக நின்றுவிடாமல், சிரிக்கவும், ரசிக்கவும், சில இடங்களில் மனம் நெகிழவும் வைக்கும் ஒரு வித்தியாசமான திரைப்படம். விஜய் சேதுபதியின் அளவான நடிப்பும், சிறுவன் சாய் பிருத்விராஜின் அற்புதமான பங்களிப்பும் படத்தைத் தாங்கி நிற்கின்றன. பெரிய கதையோ, பிரம்மாண்டமான களமோ இல்லாமல், ஒரு சின்ன முடிச்சை வைத்துக்கொண்டு அழகான மனிதக் கதையைச் சொல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது 'பத்தா'.

சில படங்களைப் பார்த்துவிட்டு மறந்துவிடுவோம். சில படங்களைப் பார்த்த பிறகு, 'அட, இப்படியும்கூட யோசிக்கலாமே!' என்று நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த இரண்டாவது வகையில் எனக்கு 'பத்தா' இடம்பிடித்துவிட்டது!



பத்தா

கடந்த வாரம், "பத்தா படம் நல்லா இருக்கு. நெட்ஃப்ளிக்ஸ்ல வந்துடுச்சு" என்று என் தங்கை சொல்வதற்கு முன்பே, நாளைக்குப் பார்க்கலாம் என்ற...