பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் சமூக அவலத்தையும் பேசும் சில படங்களில் 'டோரதி'யும் ஒன்று. சமூகத்தின் பார்வைக்கு அப்பால் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை, நம் கண்முன்னே நடக்கும் அவலங்களை, கண்டும் காணாமல் கடந்து செல்லும் விஷயங்களைப் பேசும் பொழுது சற்றே சிந்திக்க வைக்கும். அப்படித்தான் இந்தப் படமும் செய்கிறது.
நாம் பிறந்து வளர்ந்த சமூகமும் நம்மைச் சுற்றியுள்ள சமூகமும் வெவ்வேறு. நம்மிடையே வாழும் மனிதர்கள் வாழ்க்கையில் சாதியப் பாகுபாடு, ஆணாதிக்கம், குடும்ப கௌரவம் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன. அதைத்தான் இந்தப் படத்தின் கதைக்களமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திறம்பட கையாண்டுள்ளார்.
சிறுவயது நண்பர்களான கார்த்தி, சுப்பு ஆகியோரின் வாழ்க்கை வழியாக, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஆண்மை பற்றிய எதிர்பார்ப்புகளையும், அவற்றிலிருந்து விலகிச் செல்லும் ஒருவரைச் சமூகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதையும் இப்படம் பேசுகிறது. ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அழக்கூடாது, குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும், சமூகத்தின் விதிகளுக்கு அடங்கியே வாழ வேண்டும், பெண் என்பவளைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாம், கொலை கூட செய்யலாம், பெண்ணை அடிமையாக வைத்திருப்பதில் இருக்கிறது ஆணுக்கு அழகு போன்ற கட்டமைப்புகளும் எதிர்பார்ப்புகளும் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளையும் அடையாளத்தையும் ஒடுக்கும்போது ஏற்படும் முரண்பாடுகளைப் படம் வெளிப்படுத்துகிறது.
'டோரதி' போன்ற திரைப்படங்கள் சமூகத்தில் பேசத் தயங்கும் விஷயங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவரும்போது, அவை விவாதங்களை உருவாக்குகின்றன. ஆனால், ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அதன் திரைக்கதையுடன் முடிந்துவிடக் கூடாது. திரையில் காட்டப்படும் மனிதர்களைப் பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். அவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும். கயிற்றின் மேல் நடப்பது போன்ற கதைக்களத்தை மிகத் திறமையாக கையாண்ட விதத்தில் இயக்குநரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
தாய்மொழியில் பேசி நடித்ததாலோ என்னவோ கீர்த்தி சுரேஷ் மிக இயல்பாக நடித்திருந்தார். சனந்த், ரிஷிகாந்த் இருவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. அதிலும் பெண்மையை வெளிப்படுத்தும் இடத்தில் சனந்த் நன்கு நடித்திருக்கிறார். மதுரையைச் சுற்றி படமாக்கிய இடங்கள் அழகர்கோவில், அரிட்டாபட்டி கிராமத்தையும் அதுவும் கீழக்குயில்குடி சமணர் மலை, அரசமரங்கள் அங்கு சென்று வந்த நினைவுகளைக் கிளறிவிட்டது.
இசைஞானி இசையமைத்ததாலோ என்னவோ நடுநடுவே வரும் அவருடைய பழைய திரையிசைப் பாடல்களைக் கேட்க சுகம். கல்யாண விருந்து பாடலை "ஆகா, ஓகோ" என்றார்கள்???!!!
துள்ளி எழுந்தது பாட்டு சின்னகுயிலிசைக் கேட்டு... எங்கோ கேட்கிறது எனக்கு😍😍😍
