1996ல் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப்படம் "பட". துவக்கத்தில் வெவ்வேறு இடங்களில் போராளிகளைக் காட்டினாலும் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றாக கூடும் பொழுது தான் ஏதோ நடக்கப் போகிறது என்று புரியும். படமும் அங்கிருந்து தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆதிவாசிகளின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் "அய்யன்காளி படை"ப் போராளிகள் நான்கு பேர் இணைந்து அரசின் திட்டத்தை முறியடிக்க கலெக்டரை சிறைபிடிக்க, அவர்களுக்கும் அரசு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை தான் கதை. அரசின் சட்டங்களை மதித்து நடக்கும் கலெக்டர் அவகாசம் கேட்க, முடிவை அப்பொழுதே சொல்ல வேண்டுமென நிர்பந்திக்கும் போராளிகள். அவர்களின் நிபந்தனையை ஏற்று அரசு அதிகாரியை மீட்கவும் எதிர் வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டும் கோரிக்கைகளுக்கு இசைகிறது அரசு.
உண்மையில் நில மீட்பு கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று படித்தறிந்து கொண்டேன். அதுவும் கல்வியறிவு மிக்க கம்யூனிசம் பேசித்திரியும் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் நிலையில் எந்த வித மாற்றமுமில்லை. சொந்த ஊரில் நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இடத்தைக் கைப்பற்றி செல்வாக்கு மிக்கவர்களிடம் அரசு ஒப்படைத்தது ஒப்படைத்தது தான். அதற்கான மாற்றுத்தீர்வு இல்லாத நிலை இன்று வரையில் தொடருவது தான் வேதனை.
உண்மைக்கதையை படமாக்கிய விதமும் நடித்தவர்களும் தான் இப்படத்தின் சிறப்பே. எவ்வித ஹீரோத்தனமும் இல்லாமல் நான் பெரிய நடிகன் என்ற வெற்றுகூச்சல் இல்லாமல் வேட்டியை மடித்துக் கொண்டு நடிக்க கிளப்பிவிடுகிறார்கள் இந்த சேட்டன்கள். மலையாளப்படம் என்பதாலோ என்னவோ பிரகாஷ்ராஜ் கூட அதிகம் சிலம்பாமல் அடக்கியே வாசித்திருந்தார். தீப்பொறி பறக்க கதாநாயகன் எண்ட்ரி, இரைச்சலான இசை, 'ஜோ'வென்று கூட்டத்தோடு கும்மாளம் போடும் நடனம், "பஞ்ச்" வசனங்கள், குடி, கூத்து என்று இல்லாமல் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல படம்.
ஆளும் கட்சிக்கு ஜால்ராவாக மத்திய அரசை எதிர்த்து கோஷம் போட்டால் தான் படத்தைத் திரையிட முடியும் என்றிருக்கும் தமிழ் சினிமா உலகம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. தமிழக மக்களும் தான்.
No comments:
Post a Comment