Sunday, May 1, 2022

பறந்தாலும் விட மாட்டேன் - 3

கார்லோஸ் அவருடைய கொலம்பிய நண்பர்களுக்கு நியூயார்க் நகரத்தைச் சுற்றிக் காண்பித்து வந்தவுடன் மதிய உணவிற்கு அருகிலிருக்கும் உணவகத்திற்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். அதிவேகமான காற்று தள்ளி விட கலைந்த முடியுடன் 'ஸ்ஸ்ஸ்ஸ்' என்றபடி அவர்களும் நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு குளிருக்குப் பயந்து அரக்க பரக்க உள்ளே ஓடி வந்தார்கள். கார்லோஸின் நண்பர் ஓர்கேயும் அவர் மனைவி ஏஞ்சலாவும் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். "தோடா தோடா ஹிந்தி மாலும் ஹே" என்பது போல் இருவரும் கொஞ்சும் கொஞ்சும் ஆங்கிலம் பேசினார்கள்😎. நான் காசிக்குப் போனால் இப்படித்தான் ஹிந்தியில் பேசுவேன் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

ஓர்கே 'பளபள' வென்று உயர்ந்த மனிதர். ஹிந்திப்படங்களில் வரும் பணக்கார அப்பா போலிருந்தார். பெரிய கண்கள், அடர்த்தியான முடி, ஒல்லி பெல்லியாக அவருடைய மனைவி! கொலம்பியா நாட்டுப் பெண்கள் அழகிகள் தான்! கார்லோஸின் மனைவியும் அழகாக இருப்பார். அவர்கள் பேசும் ஆங்கிலமும் கொஞ்சல் தான்😍 ஓர்கேயின் வண்டியில் ஏறி அருகிலுள்ள மெக்சிகன் உணவகத்திற்குச் சென்று வேண்டியதைச் சொல்லி விட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். மும்பை நகரத்தில் ஆட்டோ ரிக்க்ஷாவில் போக்குவரத்து நெரிசலில் சென்று வந்த திகிலூட்டும் அனுபவத்தை கார்லோஸ் பகிர்ந்து கொள்ள, தாஜ்மஹால் சென்று வந்ததைப் பற்றி பேசினார் ஓர்கே.
"ஹாலிவுட் படங்களை நெட்ஃபிளிக்ஸ்ல் பார்ப்பேன். எனக்குப் பிடிக்கும்" என்று ஏஞ்சலா கூறி விட்டு, என்னுடைய நெற்றிப் பொட்டைப் பற்றிக் கேட்டார்.

பிறகு பேச்சு அப்படியே ஸ்விட்சர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி என்று உலகநாடுகள் பற்றி அவரவர் அனுபவங்களைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். கார்லோஸ் தனது வேலை நிமித்தம் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர். கொலம்பியாவில் மருத்துவராக பணிபுரியும் ஓர்கேயும் நாடுகள் பல சென்று வந்திருக்கிறார். நான்கு குழந்தைகள் என்றவுடன்

"அப்படியா?" ஆச்சரியமாக இருந்தது எனக்கு! இரண்டு குழந்தைகள வளர்த்து ஆளாக்குறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளுது😅

அம்மணி 'சிக்'கென்று வேறு இருக்கிறார். இருவரும் இன்றும் இளங்காதலர்கள் போல கொஞ்சிக் குலாவுகிறார்கள். வாழ்க வளமுடன்!

இந்தியாவில் தான் ஒரு வயதிற்குப் பிறகு பொறுப்புகள் கூடி காதல் தூர சென்று விடுகிறதோ? "பார்றா! இந்த வயசுலயும் டூயட் பாடுறாங்க. இதெல்லாம் இந்த வயசுல தேவை தானா" என்று கேலி செய்யும் சமுதாயத்தில் வாழ்கிறோம். இவர்கள் எல்லாம் அப்படி இல்லை. குழந்தைகள் இருந்தாலும் வயதானாலும் கணவன் மனைவி உறவை நன்றாகவே பேணி கொண்டாடுகிறார்கள்😘

பேச்சு அப்படியே நெட்ஃபிளிக்ஸ்ல் வெற்றிகரமாக வலம் வந்த "நார்கோஸ்" தொடரில் வந்து நிற்க, கார்லோஸ்,

"இதுவரை நான் யாரிடமும் இத்தொடரைப் பற்றிப் பேசியதில்லை. அத்தொடரைப் பார்க்கவுமில்லை. அது தந்த கசப்பான அனுபவம் அப்படி. இன்றும் நினைவில் இருக்கிறது. நான் கல்லூரிக்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு அன்று 15 நிமிடங்கள் தாமதமாகச் சென்றேன். வழியெங்கும் போலீஸ் வண்டிகள். கூச்சலும் குழப்பமாய் இருந்தது. பிறகு தான் தெரிந்தது அங்கு குண்டு வெடித்ததில் பலர் இறந்ததும் நான் அன்று தப்பித்ததும். இன்று நினைத்தாலும் அந்த பயங்கரத்தை மறக்க முடியவில்லை. எங்கு எப்பொழுது பார்த்தாலும் போலீஸ் எஸ்கோபாரைத் தேடுகிறேன் பேர்வழி என்று அவனும் இவர்களுக்குப் போக்கு காட்டியது என்று கொலம்பியாவின் கொடுமையான காலங்கள். இப்பொழுது மெக்ஸிகோவில் அப்படி நடந்து கொண்டிருக்கிறது." என்று வருத்ததுடன் பேசினார்.

அந்தக் காட்சி கூட தொடரில் இருக்கிறது. குடியிருப்புப் பகுதியில் போலீஸ் வேட்டையின் போது நடக்கும் அசம்பாவிதம். கார்லோஸ் அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.

மதுரை ரயில்வே தண்டவாளத்தில் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு ஒன்று அன்று வெடிக்காமல் நாங்கள் உயிர் தப்பிய நாள் நிழலாடிச் சென்றது😔

பிறகு கொலம்பியாவில் கொரோனா பற்றிப் பேசியதில் மீண்டும் கலகலப்புடன் பேச்சுக்கள் தொடர, ஏஞ்சலா, "எங்கள் ஊரில் பலரும் முருங்கைகீரைப் பவுடரை தினமும் எடுத்துக் கொண்டதால் கொரோனா வரவில்லை என்று நம்புகிறார்கள். நானும் எடுத்துக் கொள்வேன்" என்றார். தமிழகத்தில் முருங்கையின் பிரபலத்தைப் பற்றிப் பேசி நேரம் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தோம்.

கிளம்பும் முன் கொலம்பியா வந்தால் தங்களுடன் வந்து தங்கி இருக்குமாறு ஏஞ்சலாவும் ஓர்கேயும் அழைப்பு விடுக்க, நாங்களும் அவர்களை ஆல்பனிக்கு வருமாறு கேட்டுக் கொண்டோம். பழகிய சில மணிநேரங்களில் நெருங்கி வரும் அபூர்வ மனிதர்கள் பட்டியலில் இவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

ரிப்பப்ளிக் விமான நிலையத்தில் எங்களை இறக்கி விட்டு கைகுலுக்கி அரவணைத்து விடைபெற, நாங்கள் மீண்டுமொரு குலுக்கல் பயணத்திற்குத் தயாரானோம். காற்றின் வேகம் அதிகரித்து ஈரப்பதமும் கூடியிருந்ததில் குளிரவும் ஆரம்பித்திருந்தது.

"இப்ப நீ முன்னாடி உட்கார்ந்து வா. அந்த அனுபவமும் உனக்கு வேண்டும்."

"அய்யோயோ. எனக்குப் பயமா இருக்குப்பா."

"அதெல்லாம் ஒன்னுமிருக்காது. உனக்குப் பிடிக்கும்."

"இப்படித்தான் விமானத்தை நிறுத்த பிரேக் போட வேண்டும்."

மெதுவாக விமானம் நகர, "எங்க பிரேக் போடு பார்க்கலாம்." கார்லோஸ் சொல்ல,

நானும் காலை நீட்டி அமுக்கிப் பார்க்கிறேன். ம்ஹூம்!

இன்னும் நல்லா பலமா பெடலை அழுத்தணும்.

இப்பொழுது விமானம் நின்றது. "குட். எல்லாம் ஒரு அவசரத்துக்குத் தான்."

ஆரம்பமே கிலியா இருக்கே😨 "முருகா உசுரோட பத்திரமா என்னைய ஊருக்கு கொண்டு போய் சேர்த்திடுப்பா" வேண்டிக் கொண்டு சீட்பெல்ட் போட்டுக் கொண்டேன். கதவை மூடி லாக் பண்ணும் இடத்தில் நான் கை வைத்திருந்தேன். பறந்து கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக இதை அசைத்து கதவு திறந்து கொண்டால்...😱😱😱

ஈஷ்வர் ஜாலியாக பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இது வசதியாக இருக்கிறது. முன்னாடி இடம் குறுகலாக கஷ்டமாக இருந்தது என்றார்.

"ஓ! இதுக்குத்தான் என்னைய இங்க உட்கார சொன்னீங்களா?😈"

"முன்னாடி உட்கார்ந்து வந்தா வேறு அனுபவமா இருக்கும். அதனால தான் சொன்னேன். என்ஜாய்"

கார்லோஸ் தகவல் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு பறக்க அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு அங்கிருந்த விதவிதமான கண்ட்ரோல்களைத் திருகி விளையாட வேண்டும் போல ஆசையாக இருந்தது. எங்கே நான் திருகி விமானம் நின்று விடுமோன்னு நினைக்கையில் பயம் வந்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

செக்லிஸ்ட் வரிசைப்படி ஒவ்வொன்றையும் சரிபார்த்து முடிக்க, "நீங்கள் கிளம்பலாம்." உத்தரவு கிடைத்தவுடன் 'டடடடடடட' என்று காற்றாடி சுழல, விமானம் சிறிது தூரம் நடக்க, வீடியோ கேம் கன்சோல் போல் இருந்த திசைமாற்றியை அசைத்து சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே வேகத்தைக் கூட்டினார் கார்லோஸ். 3000 அடியில் ஆல்பனி நோக்கிப் பறக்கப் போவதாக தகவல் தர, கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவர் எந்த திசையில் எத்தனை அதிர்வெண்ணில் கிளம்பலாம் என்று கூற, இவர் எழுதிக் கொண்டார். தானியங்கி விமானத்தை விட இது போன்ற சிறு விமானங்களை ஓட்டுவது சிரமம் தான் போலும்! என் இருக்கையின் முன்னே கூட திசைமாற்றி இருந்தது. மறந்தும் கூட தொடவில்லையே நான்😝 நல்ல பிள்ளையாக கொஞ்சமே கொஞ்ஞ்ஞ்சம் பயத்துடன் உட்கார்ந்திருந்தேன்.

'ம்ம்ம்ம்ம்ம்ம்' என்ஜின் உறுமலுடன் மெல்ல மெல்ல வேகமெடுத்து 'சடக்'கென்று சக்கரம் தரையில் படாமல் விமானம் மேலெழும்பியது அழகு! சில நொடிகளில் மேலே பறக்க ஆரம்பித்திருந்தோம். உண்மையிலேயே முன்னாடி அமர்ந்திருந்தது கூடுதல் பயத்தைத் தந்தாலும் கண்ணெதிரே நீல வானில் தவழும் மேகக்கூட்டங்களைப் பார்க்க, "என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்..." மனம் பாட,

இத்தனை கண்ட்ரோல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்! "எங்கு விமானம் ஓட்ட கற்றுக் கொண்டீர்கள்?" நான் கேட்க,

இல்லினாய் மாநிலத்தில் பல்கலையில் படிக்கும் பொழுது கொலம்பிய நாட்டைச் சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவருடன் விமானப்பயணம் சென்று அங்கேயே கற்று ஆல்பனியில் ஓட்டுநர் உரிமம் வாங்கியதாக கூறினார்.

திடீரென "உனக்கு நேர் எதிரே 12 மணி திசையில் இன்னொரு குட்டி விமானம் வந்து கொண்டிருக்கிறது" என்ற தகவல் வர,

நேர்கோட்டில் ஒரு குட்டி விமானம் பறந்து வந்து கொண்டிருந்தது. எனக்குத் தெளிவாக தெரிய, கார்லோஸிற்கு அவ்வளவாகத் தெரியவில்லை. உனக்குத் தெரிகிறதா என்று கேட்க, நான் ஆமாம். அது வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்ட, கார்லோஸ் தாழ பறக்க ஆயத்தமாவதற்குள் அந்த விமானம் கீழே பறந்து இடப்புறம் 'விர்'ரென எங்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் விமானம் ஆட்டம் கண்டது. இதெல்லாம் அரசியல்ல்ல சாதாரணமப்பா என்று கார்லோஸ் கூலாக இருந்தார். எனக்குத்தான்...😓😓😓

ஆகாயத்தில் தூரத்தில் இருப்பது போல தோன்றினாலும் சிறிது நிமிடங்களில் அருகே வந்து விடுகிறது விமானங்கள். அலட்சியமாக இருக்காமல் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு சில நொடிகளில் எதுவும் நடக்கும் சாத்தியம் அதிகமிருப்பதை உணர்ந்த போது முதுகெலும்பில் "சில்ல்ல்ல்ல்" உணர்வு 😓 திடீர் திடீரென அந்தரங்கத்தில் மிதப்பது போல் இருந்தது. 

"ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ! ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ" வானில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள்! தொலைவில் மழை பொழிகிறது. கருமேகக்கூட்டங்களைச் சுட்டிக் காட்டினார் கார்லோஸ். எதிரே பெரிய பஞ்சுப்பொதி மேகம். விமானம் மெதுவாக கொஞ்சம் கீழே இறங்கியது.

"இது பனிமேகம். இதற்குள் போனால் ஆட்டம் கண்டிடும்." அதான் கீழே இறக்கினேன்." இந்தியா செல்லும் பொழுது விமானி "சீட் பெல்ட் போடுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குலுங்கும் விமான காட்சி கண் முன்னால் வந்து சென்றது.

கனெக்டிகட் மாநிலத்தின் மூன்று துறைமுகங்கள், சவுத்போர்ட், பிரிட்ஜ்போர்ட், வெஸ்ட்போர்ட் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மேலிருந்து பார்க்க கொள்ளை அழகாக இருந்தது! அட்லான்டிக் கடலை விட்டு நிலப்பரப்பின் மீது விமானம் தற்போது பறக்க,  இடப்புறம் ஹட்சன் ஆறு எங்களைத் தொடர்ந்தது. கேட்ஸ்கில்ஸ் மலைகளில் மழை பொழிந்து கொண்டிருந்தது. வரும் வழியெங்கும் மலைகள், ஆறுகள், குளங்கள், சிறுசிறு நகரங்கள், விளைநிலங்களுடன் பண்ணை வீடுகள், கால்நடைகள் மேய்ந்து கொண்டிருப்பதுமாய் அப்ஸ்டேட் நியூயார்க் தான் எத்தனை அழகாய் இயற்கை எழிலுடன் இருக்கிறது! கோடைக்காலத்தில் இந்தப் பயணம் பச்சைப்பசேலென மரங்களுடன் கண்ணுக்கும் விருந்தாக இருந்திருக்கும்.

"அதோ அங்கே இருப்பது ஒரு சிறிய விமான நிலையம். இப்பொழுது என்ஜின் பழுதானால் அங்கே தான் நிறுத்தியிருப்பேன்." சிரித்துக் கொண்டே கார்லோஸ்.

"அட ராமா! எல்லாம் நல்லா தானா போய்க்கிட்டு இருக்கு. ஏன்?" மொமெண்ட் 😔

பள்ளிக்கூடங்களில் வரிசையாக மஞ்சள் வண்ணப் பேருந்துகள். கால்பந்து, டென்னிஸ், ஓடுவதற்கு மைதானங்கள் என்று கனகச்சிதமாக. நீச்சல் குளங்களுடன் பெரிய பெரிய வீடுகளைக் கடந்து வந்தே விட்டது ஆல்பனி.

மீண்டும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானம் வருவதைத் தெரிவித்தவுடன் அவர்களும் இறங்குவதில் எந்தச் சிரமுமில்லை என்று பாதையைத் தெளிவாக குறிப்பிட, வீடு தெரிகிறதா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது. எங்கே என்று தேடுவேன்.

அதற்குள் அம்புக்குறியிட்ட ஓடுபாதை தெரிய கண்மூடி திறப்பதற்குள் 'ஜல்'லென்று அலுங்கல் குலுங்கல் இல்லாமல் தரையிறக்கிய விதம் சபாஷ் போட வைத்தது. கார்லோஸ் அனுபவமுள்ள விமானி தான்!

காரை நிறுத்துவது போல் விமானத்தை இலகுவாக நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் சென்று நாங்கள் திரும்பி வந்து விட்டதைச் சொல்லி விட்டு விமானத்தில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார் கார்லோஸ். நாங்களும் அவருடன் சேர்ந்து விமானத்தைத் துடைத்துக் கொடுத்து விட்டு வந்தோம்😦

காலையில் 9.45க்கு கிளம்பி மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவிற்கு வீட்டிற்கு வரலாமே என்றவுடன் யோசிக்காமல் வருகிறேன் என்று கார்லோஸ் சொன்னவுடன் எங்கள் காரில் நாங்கள் கிளம்பினோம். அங்கிருந்து ஆறேழு நிமிடங்களுக்குள் வீட்டிற்குச் சென்று விடலாம்.

அவருடைய பெண்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். மனைவி கொலம்பியாவில் தன்னுடைய பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள சென்றிருக்கிறார். கார்லோஸ் உள்ளூர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக கணினியியல் துறையில் பணி செய்கிறார். அவருடைய இரு பெண்களும் தனியாக விமானத்தை ஒட்டும் பயிற்சியைப் பெற்றவர்கள். அடிக்கடி குடும்பத்துடன் சிறு விமானப் பயணம் செல்வது தனக்குப் பிடித்த ஒன்று என்றார். சமயங்களில் புற்றுநோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தில் நியூயார்க் நகரத்திலிருந்து அழைத்து வருவது, இங்கிருந்து அழைத்துச் செல்வது என்று சமூக உதவியும் செய்வதாக கூறியதைக் கேட்க, அவர் மீதான மதிப்பு இன்னும் கூடியது. நன்றாக செஸ் விளையாடுவார். மாலை நேரங்களில் நாங்கள் செல்லும் பூங்காவில் மாணவர்களுடன் கால்பந்து ஆடிக் கொண்டிருப்பார். இவரும் இவர் மனைவியும் அருமையாக சல்சா நடனம் ஆடுவார்கள். திறமையான குடும்பம். 

வீட்டில் என்ன இருக்கிறது? என்ன சமைக்கலாம் ? யோசித்துக்கொண்டே சப்பாத்தி,தோசை, இட்லி, சிக்கன் குருமா...சமாளித்து விடலாம்.

வந்தவுடன் 'கடகட' வென்று ஈஷ்வர் சப்பாத்தி போட, வீட்டைச் சுத்தம் செய்து வேலைகளை முடிப்பதற்குள் கார்லோஸும் வந்து சேர்ந்தார். நான் தோசை சுடுவதைப் படம் எடுத்து மனைவிக்கும் அனுப்பி விட்டார். எல்லாவற்றையும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு வெகு நேரம் பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். புலம் பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் அதே கவலைகள் அவருக்கும் இருந்தது. ஏற்கெனவே துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  கொலம்பியா செல்லவிருப்பதாகவும் தென் அமெரிக்க நாடுகளில் தங்கி அடுத்த புத்தககம் எழுதும் வேலையை முடிக்க ஒரு வருடம் விடுமுறையில் செல்பவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தோம்.

எதிர்பாராத குட்டி விமான அனுபவம் அன்றைய நாளை மேலும் இனிமையாக்கி கரைந்தது.

நியூயார்க்-ஆல்பனி பயணம்


























No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...