இந்த கோவிட் தொற்றுப்பரவல் வந்தாலும் வந்தது. மக்களின் எண்ணங்களில் பல மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அலுவலக நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்.
"ஏண்டா, அலுவலகத்திற்கு வருகிறோம் என்றிருக்கிறது. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. பேசவே பிடிக்கவில்லை. வேறு வழியின்றி வந்து தொலைய வேண்டியிருக்கிறது" புலம்பித் தள்ளி விட்டார்.
பல வருடங்களாக எனக்கு அறிமுகம். வயதும் முப்பதுக்குள் தான் இருக்கும். வேலையின் நெளிவு சுளிவுகளை நன்கு அறிந்த அறிவாளி. அரைத்தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அரசின் புதிய கொள்கைகளை ஒப்பிக்கும் அளவுக்கு வேலையில் அத்தனை ஈடுபாடு!
"என்னாச்சு?" என கேட்டேன்.
இத்தனை வருடங்களாக உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறேன். பதவி உயர்வுக்கான அத்தனை தகுதிகள் இருந்தும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று வருத்ததுடன் சொன்னார்.
"வேறு அலுவலகத்திற்குப் போகலாமே"?
"அதையும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நேற்று வந்தவர்கள் எல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். யாரையும் பிடிக்கவில்லை."
"சீக்கிரம் உங்கள் விருப்பப்படி நடக்கட்டும். பை" சொல்லி என்னுடைய தளத்தில் இறங்கிக் கொண்டேன்.
நேர்மையாக தானுண்டு தன் வேலையுண்டு என்று கர்மசிரத்தையாக வேலை செய்பவர்களை விட உயர் அதிகரிகளுடன் வலிந்து பேசி சோப்பு போடுபவர்கள் விரைவில் அதிகாரப்பதவிகள் பெற்று முன்னேறுகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. அதில் வந்த எரிச்சல் தான் நண்பரை இப்படி புலம்ப வைத்திருக்கிறது என்று தெரிந்தது. இப்படி புலம்புவர்களிடம் நான் சொல்வது "நீங்கள் உங்கள் அலுவலகத்தில் அடைந்து கிடக்காமல் உயர் அதிகாரிகளுடன் பேசுங்கள், நட்பு பாராட்டுங்கள். அப்பொழுது தானே அவர்களுக்கும் உங்களைப் பற்றித் தெரிய வரும்."
"அந்த மாதிரி அவர்கள் காலை நக்க வேண்டிய அவசியம் இல்லை. பழக்கமுமில்லை." என்று இயலாமையுடன் கூறுவார்கள். பணியிடத்தில் நன்கு வேலை செய்வது மட்டும் முக்கியம் அல்ல. மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதும் முக்கியம்.
அடிக்கடி நண்பரைச் சந்திக்கும் போதெல்லாம் அய்யோயோ இன்னிக்கு என்னத்த சொல்லிப் புலம்ப போகிறாரோ என்றிருக்கும்.
இன்று மீண்டும் சந்திக்கையில் சிரித்துக் கொண்டே "எனக்குப் பதவி உயர்வு கிடைத்து விட்டது. என்ன, காலையிலிருந்து மாலை வரை ஒரே மீட்டிங். அப்புறம் வழக்கமான வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது."
ம்ம்ம்ம்...அடுத்த புலம்பலா?
"நீ கேட்டது உனக்கு கிடைச்சிருக்கு." என்றேன்.
"ஆமாம். நானே வலிய போய் வம்ப வாங்கிக்கிட்டேன்." சிரித்துக் கொண்டே சொன்னவர், "இன்னும் சில வாரங்களில் என்னுடைய வேலைகளைப் பங்குகொள்ள இருவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன். கொடுமை என்னவென்றால் ஆட்களே கிடைக்க மாட்றாங்க!"
"ரியலி?"
"ஆமா. ஒருத்தன் வீட்ல இருந்து வேலை பார்க்க அனுமதிப்பீங்களான்னு கேட்டான். இன்னொருத்தன் குறைந்தது 50% வீட்ல இருந்து வேலை பார்க்க அனுமதி கொடுத்தா வர்றேன்ன்னு சொல்லிட்டான்."
அடப்பாவிங்களா! வேலை இல்லைன்னு நாயா பேயா அலைய வேண்டியது. வேலை இருந்தா இப்படி வெட்டி நாயம் பேசிட்டுத் திரியறது. ஆனாலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் பெருகி விட்டதும் இவர்கள் இப்படியெல்லாம் கேட்பதற்கு ஒரு காரணம்.
"சீக்கிரம் ஆட்கள் கிடைக்கட்டும்.பை" சொல்லிவிட்டு வந்தேன்.
அடேய் கொரோனா ! எப்படி மக்களை மாற்றி வைத்திருக்கிறாய் ?
இனி ஆட்கள் கிடைக்கும் வரை சின்னத்தம்பி புலம்பிட்டு இருப்பானேன்னு நினைச்சாத்தான்...
Subscribe to:
Post Comments (Atom)
'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?
இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தால...
No comments:
Post a Comment