Sunday, May 1, 2022

தொழிலாளர் தினம்

 "தொழிலாளர் தினம்" என்றவுடன் ஒரு சில முகங்கள் நினைவில் வர தவறுவதில்லை. அப்படித்தான் கருப்பு என்ற கருப்பசாமி அண்ணன் முகமும். அரசமரத்தில் அப்பொழுது வரிசையாக ரிக்க்ஷா,மாட்டு வண்டிகள், கைவண்டிகள் நின்று கொண்டிருக்கும். அருகில் ஒரு செக்கு கூட இருந்தது. வீட்டில் சாயம் போட்ட நூல்களை முனிச்சாலையில் இருந்த அப்பாவின் நண்பரின் வீட்டில் காயப்போட  கைவண்டியில் எடுத்துச் சென்றவர் தான் "கருப்பு அண்ணே". 

"போய் கருப்ப வரச்சொல்லு." அப்பா சமயங்களில் கூறிய பொழுது  அரசமரத்திற்குச் சென்று கைவண்டி இருக்கிறதா என்று பார்த்து அருகில் அமர்ந்திருப்பவரிடம் 

"அண்ணே அப்பா வரச்சொன்னாங்க"  என்றவுடன் 

"நீ போடா நான் வர்றேன்" என்று உடனே கிளம்பி வருவார். சாப்பிட்டுக் கொண்டிருந்தால் "சாப்பிட்டு வர்றேம்மா." என்பார். இல்லையென்றால் வேறு யார் வீட்டு வேலைக்கோ சென்றிருப்பார்.

ஆள் நல்ல உயரமாக கருகருவென்று வெய்யிலில் வேலை செய்து கறுத்துப்போன ஆனால் திடமான உடல்வாகு. முட்டி கொஞ்சம் வளைந்து மெதுவாக நடப்பார். வயது அதிகம் இருந்திருக்கும்! 

கைவண்டியிலிருந்து மாட்டு வண்டியாக மாறியவுடன் அதில் ஏறிச்செல்ல ஆசையாக இருக்கும். நல்ல உயரமான காளை. கண்கள் பெரிதாக பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதனால் சேட்டை செய்யாமல் தூர நின்று நூல்களை ஏற்றுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். வண்டி நகராமல் இருக்க சக்கரங்களுக்கு இடையில் செங்கற்களை வைத்து விட்டு  படியேறி வீட்டிற்குள் சென்று தோள்களில் நூல்களை எடுத்துக் கொண்டு வரிசையாக அடுக்கி வைத்து முடித்தவுடன்  வண்டியில் ஏறி அமர்ந்து கொள்ள, நாங்கள் செங்கல்களை எடுத்து வைப்போம். கூடவே சாயப்பட்டறையில் வேலை செய்த ஒருவரும் கிளம்பிப்போவார்.

திரும்பி வரும் பொழுது  காய்ந்த நூல்களை கொண்டு வந்து பணத்தை வாங்கிச் செல்வார். தலையைச் சொரிந்து கொண்டே "கொஞ்சம் கூட கொடுங்க ஐயா" என்று அப்பாவிடம் கேட்பதை இன்று நினைத்தால் அவருடைய உடல் உழைப்பிற்கான ஊதியத்தை அளித்தோமோ என்று சந்தேகமாகவே இருக்கிறது.

மதுரையில் வெயிலுக்கா பஞ்சம்? வரும் பொழுதெல்லாம் தண்ணீர் வாங்கி குடிப்பார். சமயங்களில் அம்மா மீந்திருக்கும் சாப்பாட்டைக் கொடுத்தால் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுப் போவார். இல்லையென்றால் அவருடைய வீட்டிலிருந்து பித்தளைப்பாத்திரத்தில் கொண்டு வந்திருக்கும் பழைய சோறும், ஊறுகாயும் தான். அவ்வப்போது தண்ணியும் அடித்து அப்பாவிடம் திட்டு வாங்கும் பொழுது பாவமாக இருக்கும். ஆனால் ஏன் இப்படி குடித்து விட்டு காசை வீணாக்குகிறார்கள் என்றும் தோன்றும். உடல் வலிக்கு மருந்தாக குடிக்கு இப்படித்தான் அடிமையாகிப் போகிறார்கள் தொழிலாளிகள்😞

எப்போதுகூப்பிட்டாலும் வீட்டில் உதவிக்கு கூப்பிட்டால் உடனே வந்து விடுவார். எப்போதும் அன்பாக பேசும் அந்த முகம் மட்டும் இன்னும் மறக்கவில்லை.

கடை நிலைத்தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம்இன்று வரையிலும் கிடைப்பதில்லை என்பது தான் துயரமே. அதைத்தான் இந்த நாட்கள் நமக்கு நினைவுறுத்துகிறது. அவர்களுக்காக உழைக்கிறேன் பேர்வழி என்று கட்சிகளும் சங்கங்களும் அவர்களை மேலும் சுரண்டிக் கொண்டிருப்பது தான் நிதர்சனம்.

தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள்.

 





 



No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...