வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு – சொல்வனம் | இதழ் 359 | 25 ஜன 2026
எண்ணெய் வளம், இயற்கை எழில், எதிர்கால நம்பிக்கை நிறைந்திருந்தும் பொருளாதார முடக்கத்தாலும் அரசியல் குழப்பங்களாலும் உழலும் ஒரு தேசமாக வெனிசுவேலா இன்று பேசுபொருளாகியிருக்கிறது. பல ஆண்டுகளாக நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு நாடு இப்போது திடீரென்று புவிசார் அரசியல் மோதல்களில் ஒன்றின் மையத்தில் வந்து நிற்கிறது. அங்கு என்ன நடக்கின்றது உலகளவில் ஏன் முக்கியமானது போன்ற கேள்விகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் பலருக்கும் எழுவது இயல்பானதே.
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலா, வடக்கே கரீபியன் கடல், மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானா நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகில் உள்ளது மட்டுமல்லாமல் அமெரிக்காவிலிருந்து சில மணிநேர விமானப் பயணத்தில் இந்நாட்டை அடைய முடியும் என்பதும் சவுதி அரேபியாவை விட உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை இந்த நாடு கொண்டுள்ளதும் இதன் சிறப்பம்சங்களாகும்.
எண்ணெய் இருப்புகளால் வெனிசுவேலா ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது. பல தசாப்தங்களாக எண்ணெய் வருவாய் ஒன்றே நாட்டின் பல்வேறு சமூக திட்டங்கள், உள்கட்டமைப்பு, அரசு அதிகாரத்திற்கு நிதியளித்தது. அதுவே நாட்டின் பொருளாதாரம் முழுவதையும் ஒரு வளத்தையே ஆபத்தான முறையில் சார்ந்திருக்கவும் செய்தது. ஆனால் அதன் எண்ணெய் தொழில்துறையின் நீண்டகால தவறான மேலாண்மை, அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு, மிகை பணவீக்கத்தால்(hyper inflation) பொருளாதாரம் அதலபாதாள வீழ்ச்சி அடைந்தது. அதனால் உற்பத்தி சரிந்தது. அடிப்படை உணவு, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. மில்லியன் கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல, அப்பிராந்தியம் முழுவதும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கியது.
வெனிசுவேலாவின் தற்போதைய பிரச்சினைகள் ஒரே இரவில் தோன்றவில்லை.
அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவிற்கு நிலையான எண்ணெய் சப்ளையராக, லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது வெனிசுவேலா. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அங்கே வலுவான முதலீடுகளைக் கொண்டிருந்தன. வெனிசுவேலா அரசாங்கங்களும் சந்தை சார்பு, அமெரிக்க சார்பு கொள்கைகளைப் பின்பற்றின. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா அரசு ஒரு ‘மாடல்’ ஜனநாயகமாகக் கருதப்பட்டது.
அதுவே 1999க்குப் பிறகு வியத்தகு முறையில் மாறியது.
1998ம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹ்யூகோ சாவேஸ் 1999ம் ஆண்டு பதவியேற்றார். கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவால் சோஷியலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டவர் ஏகாதிபத்தியத்தை, குறிப்பாக அமெரிக்காவை எதிர்த்தார். நாட்டின் எண்ணெய் மற்றும் முக்கிய தொழில்கள் மீது அமெரிக்காவின் அதிகாரத்தை எதிர்த்து தன்னுடைய அரசின் வலுவான கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆரம்பத்திலிருந்தே சாவேஸ் அமெரிக்காவை ஒரு கூட்டாளியாகப் பார்க்காமல் அரசியல் எதிரியாகவே வரையறுத்தார். எண்ணெய் வளங்கள் நாட்டின் சமூக நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார். அதைச் செயல்படுத்தும் விதமாக எண்ணெய் வளங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள் உட்பட) சிறுபான்மை உரிமையை ஏற்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. எண்ணெய் வருவாய் கொண்டு மக்களுக்கு இலவச சுகாதாரம், உணவு மானியங்கள், வீட்டுவசதி திட்டங்களைக் கொண்டு வந்தார். நாடும் செழிப்பாக இருந்தது. நட்பு நாடுகளுக்கு(கியூபா, கரீபியன்) மலிவான எண்ணெய் வழங்கப்பட்டது.
பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா அமெரிக்கா?

ஏப்ரல் 2002ல், ராணுவ ஆதரவுடன் இரண்டு நாட்கள் நீடித்த ஆட்சிக் கவிழ்ப்பில் சாவேஸ் சிறிது காலம் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக் கவிழ்ப்பை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்களை அமெரிக்கா ஆதரிப்பதாகவும் சாவேஸ் குற்றம் சாட்டினார். நேரடி ஈடுபாட்டை மறுத்தாலும் வெனிசுவேலா சிவில் சமூகத்திற்கும் எதிர்க்கட்சி குழுக்களுக்கும் நிதியளித்து குறுகிய கால இடைக்கால அரசாங்கத்தை விரைவாக வரவேற்றது அமெரிக்கா. ஆனால் சாவேஸ் முன்பை விட வலுவாக மீண்டும் ஆட்சிக்குத் திரும்பினார். அமெரிக்கா மீது அவருக்கு ஆழ்ந்த அவநம்பிக்கை ஏற்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் தீவிரமடைந்தது. இந்த கட்டத்திலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெளிப்படையாக விரோதமாக மாறியது.
உலகளவில் அமெரிக்க செல்வாக்கை எதிர்க்க சாவேஸ் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். கியூபாவுடன் ஒரு இறுக்கமான கூட்டணியை உருவாக்கினார். ரஷ்யா (ஆயுதங்கள், ராணுவ ஒத்துழைப்பு), சீனா (எண்ணெய்-கடன் ஒப்பந்தங்கள்), ஈரான், அமெரிக்கா தலைமையிலான நிறுவனங்களுக்குச் சவாலாக 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ALBA(Bolivarian Alliance for the Peoples of Our America ) போன்ற பிராந்திய முகாம்களை உருவாக்கினார். 2006ல் ஐ.நா.வில், சாவேஸ் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷை “the devil” என்று குறிப்பிட்டார். இது இரு நாட்டின் உறவுகள் எவ்வளவு வெளிப்படையாக விரோதமாக மாறிவிட்டன என்பதற்கான அடையாளமாகும்.
அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவில் ஒரு ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் சக்தியாக, சர்வாதிகார ஜனரஞ்சகத்தை ஊக்குவிப்பவராக, ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் ஒரு தலைவராக சாவேஸை சித்தரித்தது. ஆனாலும் சாவேஸின் பெரும்பாலான ஆட்சியின் போது முழுமையான பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ராஜதந்திர உறவுகள் பதட்டமாக இருந்த போதிலும் எண்ணெய் இறக்குமதியை மட்டும் அமெரிக்கா குறைக்கவில்லை.
உச்சக்கட்ட விரோத நிலையிலும் கூட வெனிசுவேலா அமெரிக்காவிற்கு எண்ணெயை விற்க, அமெரிக்காவும் அதை வாங்கிக் கொண்டே இருந்தது. இரு பொருளாதாரங்களும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன. அரசியல் ரீதியாக விரோதமான ஆனால் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட விசித்திர உறவு அப்பொழுது இருந்தது.
2000களின் முற்பகுதியில், அதிபர் ஹ்யூகோ சாவேஸின் கீழ் நாடு ஒரு சோஷியலிசப் பொருளாதார ‘மாதிரி’யை ஏற்றுக்கொண்டது. எண்ணெய் வருவாய்கள் நலத்திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டன. இது ஆரம்பத்தில் வறுமையைக் குறைத்தாலும், பொருளாதாரம் பெரிதும் மையப்படுத்தப்பட்டதில் தனியார் தொழில்துறைகள் பலவீனமடைந்தன. எண்ணெய் வருமான லாபங்கள் திறமையாக மற்ற துறைகளில் முதலீடும் செய்யப்படவில்லை.
2013ல் சாவேஸின் மரணத்திற்குப் பிறகு அவரின் கீழ் துணை அதிபராகவும் அமைச்சராகவும் இருந்த ‘நிக்கோலஸ் மதுரோ’ அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். சாவேஸின் ஐக்கிய சோஷியலிசக் கட்சி (PSUV) ஆதிக்க சக்தியாகத் தொடர்ந்தது. மதுரோ முதலில் ஏப்ரல் 2013ல் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸை எதிர்த்துப் போட்டியிட்ட தேர்தலில் சாவேஸின் வெற்றிகளை விட மிகக் குறைவான வித்தியாசத்தில் வென்று வெனிசுவேலா அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய சகாப்தத்தின் ஆட்டநாயகன் ஆனார்.
அப்பொழுது அமெரிக்க-வெனிசுவேலா உறவுகள் மோசமாக சேதமடைந்திருந்தன. விரைவில், உலகளாவிய எண்ணெய் விலைகள் சரிந்தன. அரசாங்கத்தின் வருமானத்தின் பெரும்பகுதி எண்ணெய் விற்பனையின் லாபத்தைச் சார்ந்திருந்ததால், வெனிசுவேலா கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பதிலாக, செலவுகளை ஈடுகட்ட பணத்தை அச்சிட்டது அரசாங்கம். இது மிகை பணவீக்கத்தைத் தூண்டி ஊதியங்களை கிட்டத்தட்ட பயனற்றதாக மாற்றியது. உணவு, மருந்து, அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுச் சேவைகள் மோசமடைந்தன. காலப்போக்கில் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இது நவீன வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெயர்வு நெருக்கடிகளில் ஒன்றை உருவாக்கியது. உண்மையான சரிவும் கடுமையான அமெரிக்கத் தடைகளும் சாவேஸுக்குப் பிறகு தான் வந்தன.

2018 தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முக்கிய எதிர்க்கட்சி நபர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டதாக இந்தத் தேர்தல் பல வெளிநாட்டு பார்வையாளர்களாலும் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் நம்பகத்தன்மை இல்லாததாக கருதப்பட்டு “மதுரோ பதவி விலக வேண்டும். ஒரு இடைக்கால அரசாங்கம் அமைத்து சர்வதேச அளவில் மேற்பார்வையிடப்பட்ட தேர்தல் மூலம் புதிய அரசாங்கம் அமைய வேண்டும்” என எதிர்க்கட்சிகள் போராடின. அரசாங்கம் இந்தக் கூற்றுக்களை மறுத்து வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதாக வாதிட்டது. ராணுவம், நீதிமன்றங்கள், காவல்துறை, தேர்தல் அமைப்புகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொண்டார் மதுரோ. சர்வதேச அழுத்தம் அங்கே ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் தோல்வியடைந்ததால் மக்கள் சோர்வடைந்தனர். எதிர்க்கட்சி ஒற்றுமையும் பலவீனமடைந்தது.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணித்தது. மதுரோவின் கூட்டாளிகள் வென்றனர். வெனிசுவேலா விற்குள் எதிர்க்கட்சித் தலைவர் குவைடோவின் அரசியலைத் திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்தனர். எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய சட்டமன்றம் மதுரோவின் ஜனாதிபதி பதவி சட்டவிரோதமானது என்று அறிவித்தபோது, நாடு ஒரு அரசியலமைப்பு நெருக்கடியில் சிக்கியது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் மதுரோவுக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைமையை அங்கீகரித்தன. அந்த தருணத்திலிருந்து வெனிசுவேலா அதிகாரப் போட்டியின் மையமாக உருவெடுத்தது.
ஜூலை 28, 2024 அன்று நடந்த தேர்தல் நவீன வெனிசுவேலா வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தல்களில் ஒன்றாக அமைந்தது.

2025ல் நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ(ட்ரம்ப்பிற்கு அமைதிக்கான தன்னுடைய நோபல் பரிசை கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறியவர்!) தலைமையிலான எதிர்க்கட்சி மக்களின் பேராதரவில் வெகுவாக வளர்ந்து வந்தது. ராணுவத்தின் துணையோடு எதிர்ப்புகளை அடக்கி கட்டுப்பாட்டைப் பராமரித்த மதுரோவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி போராடியது. மரியா முன்னணி எதிர்க்கட்சித் தலைவராக முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் மாநில அதிகாரிகளால் பொதுப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரால் முறையாக தேர்தலில் போட்டியிட முடியாததால் Democratic Unitary Platform Party வேட்பாளர் கோன்சாலஸை ஆதரித்தார்.
இந்தத் தேர்தலிலும் மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். கோன்சாலஸ் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவர்களின் சொந்த எண்ணிக்கைத் தாள்கள் காட்டுகின்றன என்று கூறி எதிர்க்கட்சிகள் அதிகாரப்பூர்வ முடிவை நிராகரித்தது. அதைத் தொடர்ந்து பல மாதங்களாக எதிர்ப்புகள் நீடித்தன. எதிர்க்கட்சியின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்காவும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளும் எட்முண்டோ கோன்சாலஸை சட்டப்பூர்வமான அதிபராக அங்கீகரித்தன. மதுரோவின் விசுவாசிகளால் தேர்தல் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையும், கட்டுப்பாடு இல்லாமையும் விமர்சிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் வெனிசுவேலாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பை பயங்கரவாதிகள் எனவும் ‘கார்டெல் ஆஃப் தி சன்ஸ்’ உட்பட போதைப்பொருள் வலையமைப்புகளை போதைப்பொருள் பயங்கரவாதிகள் என பறைசாற்ற, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் கடுமையாக மோசமடைந்தன. ஜனநாயகம், மனித உரிமைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக எண்ணெய் மற்றும் நிதி தடை விதித்தது மட்டுமில்லாமல், அரசின் கட்டமைப்புகள் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு உதவுவதாகவும், அமெரிக்க பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
பாதுகாப்புப் படைகளையும் குற்றவியல் குழுக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் வாஷிங்டன் அவர்களுக்கு எதிராக ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறியது. மதுரோவின் அரசாங்கத்திற்கு ஜனநாயக சட்டபூர்வமான தன்மை இல்லை என்றும் புதிய மாற்றம் ஜனநாயக நிர்வாகத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் வாதிட்டு மதுரோவையும் அவரது மனைவியையும் ஜனவரி 3, 2026 அன்று நாடு கடத்தி அமெரிக்காவிற்குச் சிறைக்கைதிகளாக அழைத்து வந்தது ட்ரம்ப் அரசு.
வெனிசுவேலாவின் மகத்தான எண்ணெய் இருப்பு, சீனா, ரஷ்யா, ஈரான், கியூபா போன்ற நாடுகளுடனான அதன் கூட்டணி, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு முரணாக இருப்பதாலேயே அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச அளவில் விமர்சித்தாலும் அமெரிக்க பாதுகாப்பும் வெனிசுவேலா அரசின் முறையற்ற நிர்வாகத்தையும் கவனத்தில் கொண்டே மதுரோ நாடு கடத்தப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறி வருகிறது.
எந்தவொரு தீர்வும் வெனிசுவேலாவின் விருப்பத்தையும் சர்வதேச சட்டத்தையும் மதிக்க வேண்டும் என்று பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கைகளையும் ஒருதலைபட்ச தலையீட்டையும் கண்டித்து அமைதியான அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி வருகின்றன. லத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.
கொலம்பியா, பிரேசில் போன்ற அண்டை நாடுகள் மதுரோவின் ஆட்சியை விமர்சித்தாலும், பிராந்திய ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு சர்வதேச விதிமுறைகளின்படி நடந்து கொள்ளுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளன. ராணுவத் தலையீடும் பலத்தைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களும் மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சர்வதேச கடமைகளை மீறுவதாக ஐ.நா. கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
மதுரோவை வெனிசுவேலாவின் சட்டப்பூர்வமான அதிபதியாக சீனா அங்கீகரித்து, தடைகள், அரசியல் அழுத்தம் மூலம் அவரை நீக்குவதற்கான வெளிப்புற முயற்சிகளை நிராகரிக்கிறது. மற்றொரு நாட்டின் உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு ஈடுபாட்டை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமெரிக்கத் தடைகள், எதிர்க்கட்சித் தலைவர்களை அங்கீகரிப்பது போன்றவை வெனிசுவேலாவின் தேசிய இறையாண்மையை மீறுவதாகக் கருதுகிறது. 2000களின் நடுப்பகுதியிலிருந்து சீனா வெனிசுவேலாவிற்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களைக் கடனாகக் கொடுத்துள்ளது. அது பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதி மூலம் திருப்பிச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி மாற்ற முயற்சிகளுக்குப் பின்னர் தைவான், ஹாங்காங், ஷின்ஜாங் மீதான சீனாவின் அழுத்தத்தை எதிர்க்க இதை அமெரிக்கா பயன்படுத்தப்படலாம் என்பதில் சீனா எச்சரிக்கையாக உள்ளது. மதுரோ அரசாங்கம் சீனாவின் நீண்டகால முதலீடுகளைப் பாதுகாத்து வருவதாலும் அமெரிக்காவின் அரசியலை சீனா எதிர்க்கிறது. தலைமை மாற்றங்கள், உள் அரசியலமைப்பு செயல்முறை மூலம் மட்டுமே நிகழ வேண்டும் என்று வாதிடுகிறது.
ரஷ்யாவும் மதுரோவை உறுதியாக ஆதரிக்கிறது. அமெரிக்கத் தடைகள், ராஜதந்திர அழுத்தத்தை சட்டவிரோதமானது. ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்கிறது என்று கண்டிக்கிறது. உலக அரசியலில் குறிப்பாக, லத்தீன் அமெரிக்காவில், வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் செல்வாக்கை எதிர்க்கும் நோக்கில் வெனிசுவேலாவை ரஷ்யா ஆதரிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களையும் பாதுகாப்பு உபகரணங்களையும் வெனிசுவேலா வாங்கியுள்ளது. வரையறுக்கப்பட்ட ராணுவ ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப ஆதரவையும் ரஷ்யா வழங்கியுள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் அங்கே எண்ணெய் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. மேலும், ஈராக், லிபியா, யுகோஸ்லாவியாவில் அமெரிக்கா தலைமையிலான தலையீடு நீண்டகால உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்தது போல வெனிசுவேலாவும் அதே விதியை எதிர்கொள்ளக்கூடும் என்று வாதிடுகிறது. இந்த நெருக்கடியை “பொருளாதாரப் போர்” என்றும் வெனிசுவேலாவின் வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரத் தடைகள்தாம் காரணம் என்றும் வலியுறுத்துகிறது.
மதுரோவின் வலிமையான கூட்டாளிகளில் ஒன்றான கியூபா வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை அந்நிய நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கண்டித்து, “அரசு பயங்கரவாதம்” என்று கூறியிருக்கிறது. வெனிசுவேலா பல ஆண்டுகளாக கியூபாவிற்கு மானிய விலையில் எண்ணெய் வழங்கி வருகிறது. அதற்குப் பிரதிபலனாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு ஆலோசகர்களை கியூபாவும் அனுப்பியுள்ளது. பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மூலம் தங்களை அழித்தது போல் சோஷியலிச அரசாங்கங்களை அழிக்கும் முயற்சியாக இதை வகைப்படுத்துகிறது. வெனிசுவேலா எண்ணெயை கியூபாவின் எரிசக்தி சார்ந்திருப்பதால் கியூபாவிற்கும் கொடுமையான காலமாகத் தான் இனி இருக்கப்போகிறது.
நிகரகுவா, பொலிவியா,வட கொரியா, ஈரான், சிரியா நாடுகளும் இதை முன்னோடியாக வைத்துக் கொண்டு நாளை தங்கள் நாடுகளும் தாக்கப்படுமோ என்று அஞ்சி தடைகளை கண்டித்து கூட்டு அறிக்கைகளை வெளியிடுகின்றன.
இதற்கெல்லாம் பயப்படுபவரா பெரியண்ணன்? எதிரி நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் அருகாமையில் கூடாரம் போட்டு தங்கியிருப்பது தன் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானது என்பதாலும் வெனிசுவேலாவை கட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறார் அங்கிள் சாம்.
இதுநாள் வரையில் சர்வாதிகார ஆட்சியினால் 7 மில்லியன் மக்கள் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் உணவு, மருந்து, மருத்துவம், கல்வி குறைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு குறைந்து அடுத்த தலைமுறைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் அதிரிபுதிரி நடவடிக்கைகளால் வெனிசுவேலா மக்களுக்கு என்ன பயன்?
பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் விரைவான அரசியல் தீர்வோ உடனடி பொருளாதார முன்னேற்றமோ அல்ல. சட்டபூர்வமான தேர்தலும், ஆட்சியாளர் தேர்வும், பொருளாதரத் தடைகள் நீங்கி வர்த்தகம், பயணத்தை அனுமதிக்கும் அமெரிக்க கொள்கைகள் தான். மிகச்சிலரே அமெரிக்கா தலைமையிலான தீர்வுகளையும், ராணுவ தலையீடு, விரைவான ஜனநாயக மாற்றத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க நடவடிக்கைகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை மோசமாக்கினால் எதிர்ப்புகள் வளரும். நிலைத்தன்மையை மேம்படுத்தினால் ஆதரவு அதிகரிக்கும்.
வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, மையக் கேள்வி இனி “அமெரிக்காவின் செயல்பாடுகள் சரியா, தவறா?” என்பதல்ல.
“இனி அவர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழ அமெரிக்காவும் மற்ற நாடுகளும் உதவுமா?” என்பதுதான்!







No comments:
Post a Comment