சொல்வனம் இதழ் 361ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை அமைதி நடந்த அகண்ட நிலம் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026
உலகின் மிகச் சக்திவாய்ந்த ஜனநாயக நாடு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான அரசியல் பிளவுகள், குடியேற்ற அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார அச்சங்கள், சந்தை ஏற்றத் தாழ்வுகள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் ஆவணங்கள் தொடர்பான கேள்விகள், முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களின் நடத்தைகள் குறித்த சர்ச்சைகள் போன்ற பல கலக்கங்களின் மையமாக இருந்து வருகிறது.
செய்தித் தலைப்புகள் பெரும்பாலும் மோதல், குற்றச்சாட்டு, விசாரணை, எதிர்ப்பு, எதிர்வினைகளால் நிரம்ப, மக்கள் சமூக ஊடகங்களில் கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்ததாகக் கூறினர். சிலர் மாற்றத்திற்கான ஆவலை வெளிப்படுத்தினர். அத்தகைய சூழலில் கோஷங்களும் கடும் விவாதங்களும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்த தருணத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிக்காமல், எந்த எதிர்ப்புக் கோஷமும் எழுப்பாமல், சில புத்த பிக்குகள் மெதுவாக, மௌனமாக நடக்க ஆரம்பித்தனர்.
அவர்களின் நடை வேகமானது அல்ல. அவர்களின் செய்தி கூச்சலானது அல்ல. ஆனால் அவர்கள் எடுத்த ஒவ்வொரு அடியும் ஒரு கேள்வியை எழுப்பியது.
“கலக்கத்தின் மத்தியில் அமைதி எங்கு தொடங்க வேண்டும்?”
அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சிதான் “Walk for Peace” எனும் 108 நாள் ஆன்மீகப் பயணம்.
2025 அக்டோபர் மாத இறுதியில் டெக்சாஸ் மாநிலம் ஃபோர்ட் வர்த் அருகிலுள்ள ‘Hương Đạo Vipassana Bhavana Center’ தியான மையத்திலிருந்து இந்தப் பயணம் தொடங்கியது. பயணத்தை வழிநடத்தியவர் மதிப்பிற்குரிய பிக்கு ‘பன்னகரா’. அவருடன் பிற நாடுகளில் இருந்தும் சுமார் 18 புத்த பிக்குகள் இணைந்தனர். புத்த மதத்தின் இரண்டு முக்கிய கிளைகளில் ஒன்றான “தேரவத பௌத்த”ப் பிரிவைச் சார்ந்தவர்கள். இலங்கை, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது. “தேரவத” என்ற சொல்லுக்கு “மூத்தவர்களின் போதனை” என்று பொருள். சித்தார்த்த கௌதம புத்தரின் ஆரம்பக்கால போதனைகளைப் பாதுகாத்து வழிநடத்திச் செல்கிறது இந்தப் பிரிவு. ‘மகாயானம்’ மற்றொரு பிரிவாகும்.
பயணத்தை வழிநடத்திய மதிப்பிற்குரிய பிக்கு ‘பன்னகரா’அவர்கள் கூறியபடி, “உலகளவில் அதிகரித்து வரும் கோபம், பதட்டம், பிரிவு உணர்வு, அமைதியின்மை போன்ற சூழலில் மனிதர்கள் தங்கள் உள்ளார்ந்த அமைதியை மறந்து வருகிறார்கள் என்ற கவலை புரிந்தது. அமைதியை வெளியிலிருந்து திணிக்க முடியாது. அது உள்ளத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்” என்ற புத்த மதக் கருத்தைச் செயலால் காட்ட வேண்டும் என்ற எண்ணமே அடிப்படை ஊக்கமாக, ஒரு மௌனப்பயணம் மேற்கொண்டதாக கூறினார். 108 நாட்கள். 2,300 மைல்கள். பல மாநிலங்கள் வழியாக (டெக்சாஸ் → லூசியானா → மிசிசிப்பி → அலபாமா → ஜார்ஜியா → கரோலினாக்கள் → விர்ஜினியா → வாஷிங்டன் டி.சி) 2026 பிப்ரவரி 10ஆம்தேதி தலைநகரை அடைந்தனர்.
தினமும் 15 முதல் 20 மைல்கள் வரை நடந்து ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே உணவருந்தினர். பலர் காலணியின்றி நடந்தனர்!
நவம்பர் 19, 2025ல் ஹூஸ்டன் அருகே நடந்த விபத்தில், ஒரு வாகனம் மோதியதில் சில பிக்குகள் காயமடைந்தனர். குறிப்பாக Maha Dam Phommasan அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டதால் கீழ்கால் பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பழிவாங்கும் பேச்சோ குற்றச்சாட்டோ இல்லாமல், “கருணை, மன்னிப்பு” என்ற தங்கள் ஆன்மிகக் கோட்பாட்டை பிக்குகள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், பின்னர் அவர் மீண்டும் நடைக்குழுவில் இணைந்தது மக்கள் மத்தியில் புத்த பிக்குகளுக்கு ஆழமான மரியாதையையும் ஆதரவையும் உருவாக்கியது. பல நகரங்களில் வரவேற்புக்கூட்டமும் அதிகரிக்கத் துவங்கியது.
இந்தப் பயணம் ‘விபஷ்யனா’ தியானத்தின் ஒரு நீண்ட வடிவமாகக் கருதப்பட்டு ஒவ்வொரு அடியும் விழிப்புணர்வுடன் வைக்கப்பட்டது. கருணையையும் பொறுமையையும் வெளிப்படுத்தி உடல் கஷ்டத்தை ஏற்றுக்கொள்வது மன பயிற்சியின் ஒரு பகுதியே என்று தங்களின் நடைப்பயணத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். விபஷ்யனா தியானத்தின் அடிப்படை கொள்கைகளான விழிப்புணர்வு, கருணை, அன்பு இவை சமூகத்தில் பரவ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நடந்தார்கள். தங்கள் நடைப்பயணம் அரசியல் எதிர்ப்பல்ல என்று அவர்கள் வழியெங்கும் தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தனர்.
சமூக ஊடகங்களில் இந்தப் பயணம் பரவலாகப் பகிரப்பட்டு பல இடங்களில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. சிறிய நகரங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். பூங்கொத்துகள், பழங்கள், தண்ணீர், கம்பளிகள், வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து வணங்கி நின்றனர். தினமும் பல படங்களை சமூக வலைதளங்களில் போட்டு கண்ணீர் உருகினர். மிசிசிப்பி, அலபாமா, கரோலினா பகுதிகளில் குளிர்கால மழை, காற்று, பனி என்றிருந்தாலும் வழக்கமான தியான ஒழுங்கைத் தளர்த்தாமல் அவர்கள் நடையை மேற்கொண்ட மனஉறுதியைக் கண்டு விக்கித்து நின்றது அமெரிக்கா! லூசியானா, ஜார்ஜியா, தென் கரோலினா கிராமப்புறங்களில் குழந்தைகள் கேள்விகள் கேட்டபோது தியானத்தைப் பற்றிய எளிதான விளக்கத்தைச் சிரித்தபடி கூறியதும் கனிவுடன் தியான அமர்வில் பங்கேற்றவர்களுடன் உரையாடியதையும் பார்த்தவர்கள் உருகி உருகி பதிவுகளைப் போட, அவர்களைப் பின்தொடரும் கூட்டமும் பெருமளவில் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் “இவர்கள் யார்? எந்த இயக்கம்? அரசியல் தொடர்பா” என்று கேள்விகளை எழுப்பிய மக்களும் பிக்குகளின் அமைதி நடைப்பயண உரையைக் கேட்ட பின்பு மனம் மாறினர். எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்காமல், எந்த நிர்வாகத்தையும் குறிவைக்காமல், எந்த சட்டத்தையும் மாற்றக்கோரி கோஷமிடாமல், எந்த மதத்தையும் இழிவுபடுத்தாமல் மக்களின் அமைதியைத் தேடும் வழியை போதிப்பதை ஒன்றே நோக்கமாகக் கொண்டு தொடர்ந்தாலும் ஜியார்ஜியா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் தீவிர கிறிஸ்தவ கும்பல் எங்கள் இறைவன் ஏசப்பா பதாகைகளை ஏந்திக் கொண்டு கூச்சலிட்டதும் ஒருவர் தொடர்ந்து வந்து அவர்களை இடைமறிக்க, “உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள். எங்கள் பாதையில் நாங்கள் அமைதியாகச் செல்கிறோம்” என்று தொடர்ந்து பன்னகரா கூறிக்கொண்டே சென்றதைப் பார்த்த ஊடகவாசிகள் பலரும் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவதாகப் பதிவிட்டனர். கண்டனங்களையும் தெரிவித்தனர். இது தான் அமெரிக்கா.
இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவைத்தொடர்ந்து மாநில காவல்துறையினரின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருந்தது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதுவும் குடியேற்ற அமலாக்கத்துறையின் அராஜகத்தைக் கண்டு மனம் கொந்தளித்துப் போயிருந்தவர்களுக்கு இது மிகவும் ஆறுதலைத் தந்தது என்று கூட சொல்லலாம்.
இப்படியாக இந்த நடைப்பயணம் பெரும் ஆதரவுடனும் ஆச்சரியத்துடனும் கடும் பனியிலும் தொடர, பிப்ரவரி 10,2026ஆம் தேதி தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை புத்த பிக்குகள் அடைந்தனர். அவர்கள் நகருக்குள் நுழைந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து வரவேற்றனர். பலரும் அமைதியாகப் பின்தொடர்ந்து சென்றனர். அந்தக் காட்சியே அத்தனை அழகாக இருந்தது.

Washington National Cathedral-ல் நடைபெற்ற இடைமத நிகழ்வில் பல மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். பிற மதத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவந்த Interfaith நிகழ்வுகள் குறித்து உள்ளூர் அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டியதாகச் செய்திக் குறிப்புகள் தெரிவித்தன. அமைதி, கருணை, பொறுமை குறித்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இது மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் அடையாளமாகப் பலராலும் பார்க்கப்பட்டது.
American University-ல் பெரிய அளவிலான தியான உரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். “அமைதி உள்ளத்தில் இருந்து தொடங்க வேண்டும்” என்ற மையச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அரசியல் கேள்விகளுக்கு நேரடி கருத்து வழங்காமல் ஆன்மீக விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. இங்கு நடந்த Mindfulness, தியான நிகழ்வு மாணவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
பிக்குகள் சில காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து ‘Vesak’ தினத்தை கூட்டாட்சி விடுமுறை நாளாக அங்கீகரிக்க வேண்டுகோளையும் வைத்தனர்.
பெரும்பாலான தேசிய ஊடகங்கள் அவர்கள் வாஷிங்டனை அடைந்தபின் தான் செய்திகளை வெளியிட்டன. ஆனால் ஆரம்ப கட்டத்தில் பரவலான நேரடி ஒளிபரப்பு குறைவாக இருந்தது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். பயணம் தொடங்கிய டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளூர் செய்திச் சேனல் ‘WFAA-TV’ (டாலஸ்-இல் உள்ள ABC இணைப்பு சேனல்) பயணம் தொடங்கிய செய்தியை ஆரம்பத்தில் “local human-interest story” வகையில் வெளியிட்டுள்ளது.

இது மோதலோ, அரசியல் போராட்டமோ அல்ல. ஊடகங்கள் பெரும்பாலும் மோதல் மையப்படுத்தப்பட்ட செய்திகளுக்குத் தான் முன்னுரிமை அளிக்கும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக ஒரு பிரபலமானவரின் அம்மா தொலைந்து போனதைப் பற்றி பேசிய ‘ப்ரைம் டைம் abcnews உலகச் செய்திகள்’ மறந்தும் கூட அமைதிப்பயணத்தைப் பற்றியோ புத்த பிக்குகளைப் பற்றியோ வாய் திறக்கவில்லையே?! மக்களும் தங்கள் அதிருப்தியை ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
பயணம் வாஷிங்டன் டி.சி.யை அணுகியபோது தேசிய, பிராந்திய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ‘FOX 5 DC’ வாஷிங்டன் பகுதியில் அவர்கள் வருகையை நேரடியாக ஒளிபரப்பியது. அதே சமயம், ‘AP News’ அவர்கள் வாஷிங்டனை அடைந்தபின் விரிவான செய்தி வெளியிட்டது. AP செய்தி வெளியானதும், பல தேசிய, சர்வதேச ஊடகங்கள் அதனை மேற்கோள் காட்டின. ஆனால் சமூக ஊடகங்களில் முதலில் ‘Huong Dao Vipassana Bhavana Center’ன் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலமாக மட்டுமே செய்திகள் வெளியானது.
இந்த நீண்ட நடைப்பயணத்தின் மத்தியில், மனிதர்களின் மனங்களை வென்ற இன்னொரு “சின்னப் பாத்திரம்” கூடவே பயணித்தது. அது தான் ‘அலோகா’ என்ற பைரவர். இந்தியாவில் பிக்குகள் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது அவர்களுடன் கூடவே பயணித்திருக்கிறது. இப்பொழுது அமெரிக்கப்பிரஜையாகி இங்கும் இவர்களுடன் கம்பீரமாக நடந்தது. அது ஒரு சாதாரண செல்லப்பிராணி மட்டும் அல்ல. அமைதியின் சின்னம் போல மாறியது. அதற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. சும்மாவே செல்லப்பிராணிகள் என்றால் இங்கே உயிரை விடுவார்கள். இப்பொழுது கேட்கவா வேண்டும்? சில நேரங்களில் அது முன்னால் ஓடி வழிகாட்டுவது போல இருந்தது. சில நேரங்களில் சந்நியாசிகளின் அருகில் நடந்து அவர்களின் வேகத்தைப் பின்பற்றியது. வெயில், மழை, குளிர், கூட்டம் என எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்ததைப் பார்த்து பேசாமல் இதற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்கலாம் என்று ஊடகங்களில் கொண்டாடினார்கள். குழந்தைகள் அதனைத் தொட்டு மகிழ, “Peace Dog”, “Dharma Dog”, “Walking Monk’s Companion” போன்ற பெயர்களில் அது வைரலானது. வாஷிங்டன் டிசி சென்றபோது, பல புகைப்படங்களில் அந்த நாய் முன்புறம் அல்லது பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது. அலோகா இந்த இயக்கத்திற்கு ஓர் உயிர்த்தன்மையை சேர்த்தது என்றே கூறலாம். அரசியல், கருத்தியல் வாதங்களை விட, இந்தச் சிறிய, எளியகாட்சியால் பெரும்பாலான மக்கள் ஈர்க்கப்பட்டனர்.
அது எந்த அரசியல் வாசகமும் பேசவில்லை. எந்த பேனரும் தூக்கவில்லை. ஆனால் ஒரு செய்தியை மட்டும் சொல்லாமல் சொன்னது. “அமைதி பேச வேண்டியதில்லை. அதன் இருப்பே போதுமானது.”
அதுவே இந்த நடைப்பயணத்தின் ஆழமான தத்துவம்.
இதனால் அரசியல் மாற்றங்கள் நிகழுமா?
அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் சட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தும். ஆன்மீக இயக்கங்கள் நெறி,மனச்சாட்சி, கருணை போன்ற சொற்களை உரையாடலுக்குள் கொண்டு வரும். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் மனநிலையை உணர வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த 108 நாள் நடைப்பயணம் நமக்கு உணர்த்தியதெல்லாம் அமைதி எப்பொழுதும் வெளிப்படாது. அது ஒரு செயல். ஒரு நிலை. ஒரு நடையைப் போல மெதுவாகப் பரவி மனங்களைக் கனிவாகச் சேர்க்கிறது. கருணை என்பது செயலில் தெரியும். காயமடைந்த பிக்குகளை வழியனுப்புதல், நாயைப் பாதுகாப்பு வாகனத்தில் கொண்டு செல்லுதல், மக்களுக்கு நேரில் அன்பு காட்டுதல் போன்றவற்றின் மூலமாக பிக்குகள் அதை உணர்த்திக் கொண்டே இருந்தனர். பொறுமை வெறும் வார்த்தை அல்ல. அது 2,300 மைல்கள் நடந்து உரைத்த ஒரு நிகழ்வு.
“உள்ளார்ந்த அமைதி இல்லாத இடத்தில் எந்த சட்டமும், அதிகாரமும் உலகத்தை மாற்ற முடியாது. மாற்றம் ஆரம்பமாகும் இடம் உங்கள் மனம்.”
அதுவே இந்த நடைப்பயணத்தின் மெய்நிகர் செய்தி.

கோபம், குழப்பம், வெறுப்பு, பிரிவுகளால் நிரம்பிய உலகில் ஒரு மென்மையான நடையோடு, ஒரு மௌனமான பார்வையோடு, ஒரு சின்ன அன்புத் துளியோடு மனங்களை மாற்ற முடியுமென்று அவர்கள் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் உணர வேண்டியதும் அதுவே. உள்ளார்ந்த அமைதியை முதலில் வளர்த்தால் உலகெங்கும் அது பரவும்.
Shāntiḥ paramo dharmaḥ.
அமைதியே மிகச் சிறந்த தர்மம்.
No comments:
Post a Comment