சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மிகவும் கவனத்தை ஈர்த்த படம் என்றால் அது தற்பொழுது நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகியிருக்கும் 'Haq' இந்தி திரைப்படம் தான்! ஒரு படம் பிடித்துப் போக ஒரு சில காரணங்கள் இருக்கலாம். இந்தப் படம் உண்மையில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் எளிதில் ஒன்றிவிடும் பாணியில் மிக அழகாக, எதார்த்தமான வசனங்களுடன், கதைக்கேற்ற இசையுடன் ரம்மியமாக எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
படம் முடியும் பொழுது தோன்றியதெல்லாம் தன்னுடைய உரிமைக்காக ஒரு பெண் எப்படியெல்லாம் போராடியிருக்கிறாள்? இன்றும் கூட எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது? பெரும்பாலானவர்களுக்குத் தத்தம் உரிமைகள் என்பது என்னவென்பதே தெரிவதில்லை. பெண்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் அவர்களை எப்படியெல்லாம் தரக்குறைவாக நடத்துமோ அப்படித்தான் காலம்காலமாக ஆணாதிக்க உலகம் நடந்து வருவது கண்கூடு. அதிலும், ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து கொண்டால்? பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை? ஐயோ பாவம் தான். ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு ஒரு பெண் போராடுகிறாள் என்றால் எத்தனை மனத்துயர் இருக்க வேண்டும்? கூடவே, தைரியமும் போராட்டக்குணமும் இருந்தால் ஒழிய, ஆணாதிக்க வர்க்கத்தினரை எதிர்கொள்வது சாத்தியமல்லவே? அதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. அவளின் போராட்டத்திற்கு துணையாக நிற்கும் அவளின் அப்பா போன்ற ஆண்கள் தான் இத்தகைய போராடும் பெண்களின் பலம்.
இந்தப் படம் பார்ப்போரை சில கேள்விகள் கேட்கத்தான் செய்கிறது. மதத்தை காரணமாகக் காட்டி ஒரு ஆண் என்ன வேண்டுமானால் செய்யலாம் என்ற அதிகாரத்தை உண்மையில் யார் கொடுத்தது? மதக் காவலர்களின் போர்வையில் நடமாடும் காட்டுமிராண்டிகளா? ஆண் செய்தால் ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்ணிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் ஏன் விதிக்க வேண்டும்? மதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்பவர்களை அவர்கள் துணைக்கு அழைக்கும் புத்தகத்தில் சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டி நன்றாகவே கேள்வி கேட்கிறாள் பாதிக்கப்பட்ட கதாநாயகி. உடனே வழக்கை ஷரியா நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அடுத்த அக்கப்போர். இப்படி பெண்களை வஞ்சிக்கும் சட்டங்களை எதிர்த்துப் போராடி எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை மிக நேர்த்தியாக அனாவசியமான கூச்சல்கள் இல்லாமல் அவள் படும் மனவதைகளையும் குழந்தைகள், குடும்பம் என்று அவளைச் சார்ந்தவர்கள் படும் அவதிகளையும் கணவன், மாமியாரின் அடாவடித்தனத்தையும் மிக இயல்பாக கடத்துகிறது இப்படம்.
அழுகையும் மௌனமும் வசனங்களை விட ஆழமாக சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறது. ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதோ அல்லது அமைப்பால் அவர் கண்ணுக்குத் தெரியாதவராக நடத்தப்படும்போதோ, அது ஒரு தனிப்பட்டவரின் துயரம் மட்டுமல்ல அரசியலமைப்புச் சிக்கலுமாகும்.
"வாழ்வு" என்பது வெறும் உயிர் வாழ்வது மட்டுமல்ல. மனித கண்ணியம், வாழ்வாதாரம், உறைவிடம், உணவு, நீதி பெறுவதற்கான அணுகல் என அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை இந்தியச் சட்டம் வலியுறுத்துவதை இப்பெண்ணிற்கான நீதி தெளிவுபடுத்தியுள்ளது. பாலினம், சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பு அளித்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் காட்டுகிறது.
ஷாஜியா பானோவாக மிக அருமையாக தன்னுடைய கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருந்தார் யாமி கவுதம். அவளது கணவனாக இம்ரான் ஹாஷ்மியின் நடிப்பும் அருமை.
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும். திருந்த வேண்டியவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். திருந்துவார்களா?
இப்படி ஒரு கதையை, அதுவும் உண்மையில் நடந்த கதையை அப்படியே படமாக்க தமிழில் யாரும் இல்லாதது துரதிர்ஷ்டமே!
நமக்கு வாய்த்ததெல்லாம் திருட்டு, புரட்டு, உருட்டுகள் தான்😏😏😏
No comments:
Post a Comment