Thursday, October 17, 2013

வட அமெரிக்காவில் இலையுதிர் காலம்

பள்ளி நாட்களில் புத்தகத்தில் படித்த, கேள்விப்பட்ட இயற்கையின் பருவசுழற்சி மாற்றங்களை இங்கே வந்த பின்னர்தான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது.கனடா, அமெரிக்காவின் வட மாநிலங்களிலும்,மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் முழுமையான பருவசுழற்சியைக் கண்டு களிக்கலாம்.

அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியிலிருந்து அக்டோபர் மாதம் வரை திரும்பிய திசை எல்லாம் இயற்கை அன்னை வாரி இறைத்த வண்ணக் கலவைகள் தீட்டிய ஓவியங்கள் மரங்கள், செடிகள், கொடிகள் என்று வஞ்சனையில்லாமல் வியாபித்திருக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

இந்தக் காலத்தில் குளிருமில்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் பருவநிலை 'குளுகுளு'வென்றிருக்கும். பல்வேறு ஜீவராசிகளும் பனிக்காலம் வருவதற்கு முன் தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடித்தேடிச் சேகரிக்கும் காலமிது என்பதால் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும். அதிலும் சுறுசுறுப்பாய் பறந்து திரியும் பறவைகளின் இன்னிசைக் கீதமும் ஒர் இனிய கச்சேரிக்கு நிகரானது.

வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தவுடன், மரங்களும் தங்களைப் பனிக்காலத்திற்குத் தயார் செய்து கொள்ளும் முயற்சியாக இலைகளை உதிர்க்க ஆரம்பித்து விடும்.பச்சை நிற இலைகள் எல்லாம் மெல்ல மெல்ல இளம் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று மாறும் போது வண்ணக்கலவைகளாகப் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ள ஆரம்பிக்கும்.

வீடுகளைச் சுற்றியும், தெருக்களின் ஓரங்களிலும், சாலைகளின் அடர்ந்த மரங்களிலும், நீர் நிலைகளின் பின்புலத்திலும், மலைகளிலும் என்று ஓரிரு மாதங்கள் எங்குப் பார்த்தாலும் இயற்கை அன்னையின்  இத்தகைய வண்ண ஓவியங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

இந்த வர்ண ஜாலங்களைக் கண்டுகளிக்க ஏதுவாகப் பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது.

ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள், அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு!

இந்தப்  பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் மரங்களையும், மனிதர்களையும்  பார்த்து சொல்வது போல் இருக்கும்.
காலையில் கண் விழித்துப் பார்த்தால் மூடுபனியினால் போர்த்தப்பட்ட புல்வெளிகள், நீர்த்தெளித்து விட்டதைப் போல் சாலைகள், 'சில்'லென்ற அதிகாலைத் தென்றல், புகைமூட்டம் போல் இருக்கும் அடர்ந்த மூடுபனியில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மஞ்சள் நிறத்தில் 'தகதக'வென்று ஜொலிக்கும் தங்கச் சூரியன், சமயங்களில் காய்ந்த இலைகளை வாரி அணைத்து 'உய்உய்' என்று விசிலடிக்கும் காற்று, நான் மட்டும் உங்களுக்கு இளைத்தவனா என்று கருமேகங்கள் புடை சூழ, இடி மின்னலுடன் மழை, அதன் பின்னே தோன்றும் அழகிய வானவில், அந்நேரத்து வானத்தின் வர்ண ஜாலங்கள், அதன் பின்னணியில் வண்ண மரங்கள் என்று இந்த அழகு இன்னும் கொஞ்ச நாட்கள் நீடிக்காதோ என்று ஏங்க வைக்கும்.

பல தோட்டங்களில் கொத்துகொத்தாகக் காய்த்துத் தொங்கும் ஆப்பிள் பழங்களை நாமே பறித்து ருசி பார்த்து விலைக்கு வாங்கலாம். பெரிது பெரிதாக உருண்டோடி காய்த்திருக்கும் பூசணியை குடும்பம் குடும்பமாய் குழந்தைகளோடு பறித்து மகிழும் நிறைவான தருணங்கள், சாப்பிடும் அனைவரையுமே அடிமை ஆக்கி விடும் ஆப்பிள் சைடர் டோனட்ஸின் சுவை என்று இனிமையான காலம் !

வீடுகளின் முன் சேர்ந்திருக்கும் இலைகளின் மேல் புரண்டு விளையாடியும், ஒருவர் மேல் ஒருவர் இலைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆடும் குழந்தைகளுக்கு இந்தக் காலம் இன்னும் ஒரு பொற்காலம்!


'தளதள'வென்று பச்சை இலைகளுடன் இருந்த மரங்கள் வண்ணங்கள் மாறி இலைகள் உதிர்ந்து காட்சியளிக்கும் இலையுதிர்காலம் இயற்கையின் திருவிளையாடல்களில் ஒன்றே!

ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறி மாறி வந்தாலும் அதன் அழகு வெவ்வேறாக இருப்பது போல் பிரமிக்க வைக்கிறது!


இலையுதிர்காலம் என்பது ஒரு பருவ சுழற்சியின் முடிவு என்பதைக் காட்டிலும், அடுத்து வரப் போகும் புதிய துவக்கத்தின் அடி உரமாகவும், அதற்கான தியாகமாகவும் அமைகிறது....இயற்கை நமக்கு உணர்த்தும் இந்தச் சின்ன உண்மையைப் புரிந்து கொண்டால் மனிதம் தழைக்கும். புதிய தலைமுறைகள் புகழோடு வாழ முடியும்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...