Wednesday, June 20, 2018

திரும்பிப் பார்க்கிறேன் -மலர்களே மலர்களே

பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தான் இலைகளைப் பற்றி படிக்க ஆரம்பித்ததாக நினைவு. இலைகளின் வெவ்வேறு வடிவங்கள், அதன் பெயர்கள், படங்கள் என்று நோட்டில் வரையும் பொழுதே மனமும் மரங்களில் பார்த்த இலைகளை நினைத்துக் கொள்ளும். பள்ளி வளாகத்திலிருக்கும் மரத்து இலைகளைப் பறித்து நோட்டின் இரு பக்கங்களுக்கு இடையில் வைத்து அது காய்ந்தவுடன் வேறொரு நோட்டில் ஒட்டி அந்த இலைகளைப் பற்றின சிறு குறிப்புகளுடன் ஒரு சிறிய தொகுப்பே என்னிடம் இருந்தது. அந்த வருடம் முழுவதும் புது மரங்களைக் கண்டால் இலையைப் பறித்து அதனைப் பற்றின விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகமிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் வகுப்பெடுத்தவர் ஆசிரியை திருமதி மீனாட்சி. குட்டையாக குட்டியாக 'துறுதுறு'வென்று இருப்பார். வகுப்பிற்கு ஒரு துள்ளலுடனே வருவார். அவருடைய வகுப்பில் தான் மலர்கள், மகரந்தச்சேர்க்கை, மலர்களின் பாகங்கள் என்று ஆர்வத்துடன் அவர் சொல்லிக் கொடுக்க நாங்களும் நன்கு கேட்டுக் கொண்டோம். அவருக்குத் தான் கற்ற கல்வியின் மேல் இருந்த காதல் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கும் வர வேண்டுமென்ற ஆசையில் உருகி உருகி எடுத்த பாடம் என்னைப் போன்ற பலருக்கும் அவர் வகுப்பின் மேல் அலாதிப் பிரியமே வந்து அவர் வழியில் மலர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வெறியும் கூடி... பள்ளியின் பின்னால் சென்று தெப்பக்குளம் வரை நடந்து சாலையோர மரம், செடி, கொடிகளில் பூத்திருக்கும் மலர்களைக் கொய்து வகுப்பில் அதைப் பற்றி கேள்வி கேட்டு... டீச்சருக்கும் எங்கள் ஆர்வம் கண்டு ஒரே ஆனந்தம்! மலர்களை ஆராய்வது இதழ்களின் எண்ணைக்கையில் தொடங்கி அதன் வடிவங்கள், நிறங்கள் என்று அது சார்ந்த குடும்ப பெயர் தெரிந்து கொள்வது வரை நீளும். அழகர்கோவில் ட்ரிப் சென்று அங்கிருக்கும் மரங்களைப் பற்றி நடந்து கொண்டே பாட்டனி டீச்சர் விவரித்துக் கொண்டே வர, அந்தப் பயணம் தான் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது!ரெக்கார்ட் நோட்டில் அழகாக படங்கள் வரைந்து அதிக மதிப்பெண்கள் பெற்று விட வேண்டும் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். பொறுமையாக அழகாக வரைவது என்றால் அவ்வளவு பிடிக்கும். ஹ்ம்ம்... எங்கு தொலைத்தேன்?


இன்று ஒவ்வொரு மரங்களையும், இலைகளையும், மலர்களையும் காணும் பொழுது மீனாட்சி டீச்சரின் 'துறுதுறு' முகமும் எத்தனை இதழ்கள், என்ன வண்ணம், இலைகள் எந்த வடிவில் இருக்கின்றன, இதன் பெயர் என்ன, எந்த குடும்பத்தைச் சார்ந்திருக்கும் என்ற கேள்விகளும் ஞாபகங்களும் வரத் தவறுவதில்லை. ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அவர் எடுத்த வகுப்புகளும் பாடத்தின் மேல் ஆர்வத்தை தூண்டிய விதமும் இன்றும் என்னுள் இருப்பதை உணரும் போது இத்தகைய ஆசிரியர்கள் தான் வரமாய் வந்தவர்கள். வாழ்க்கை முழுவதும் நம்மோடு வாழ்பவர்கள் என்று எண்ணிக் கொள்வேன்.


காலம் கடந்தாலும் சிறு வயது ஆர்வங்கள் மட்டும் குறைவதே இல்லை.


நான் க்ளிக்கிய சில பல wildflowers படங்கள்...

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...